Monday, October 24, 2011

என்கௌண்டர்


ஒரு பிரபல ஆங்கிலப்பத்திரிக்கை கருத்துகணிப்பு ஒன்று நடத்தியது. சமூக விரேதிகளை அறுவை சிகிச்சை செய்வது போல நீக்க வேண்டுமா அல்லது சாத்வீக முறையை கையாள வேண்டுமா என்பதற்கு 67 சதவிகிதம் மக்கள் சமூக விரோதிகளை காவல்துறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். இதை இரண்டு விதமாக பார்க்கலாம். அராஜகம் அந்த அளவிற்கு வளர்ந்து விட்டதால் மக்கள் மனம் வெதும்பி பொருமை இழந்து இவ்வாறு ஒரு நிலைப்பாட்டினை தெரிவிக்கின்றனர் என்று கொள்ளலாம். காவல்துறையினர் சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கையை சரியான நேரத்தில் எடுக்காததால் இத்தகைய சமூக விரோதிகளின் அட்டகாசம் கட்டுக்கடங்காமல் போனதால் அளவுக்கு அதிகமான பலத்தை உபயோகிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்றும் அனுமானிக்கலாம். இவ்விரண்டு நிலைப்பாடுகளுமே காவல் துறையின் செய்ல்பாட்டிற்குப் பெருமை சேர்க்காது.

குற்றம் புரிந்தவர்களை Encounter செய்வது சட்ட விரோதமான செயல். நிராயுதமாக நிற்கும் ஒருவனை துப்பாக்கியால் சுடுவது எந்த விதத்தில் வீர தீர செயல்? ஜம்மு காஷ்மிர், நாகாலாந்து, மணிப்பூர் போன்ற மாநிலங்களிலும் இப்போது சட்டீஸ்கர் மாநிலத்திலும் தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிக்க காவல்துறை துப்பாக்கி சண்டையில் இறங்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது. இந்த சூழலில் நிஜமான Encounter நடக்கும். துப்பாக்கிச் சண்டை ஒய்ந்த பிறகு இருதரப்பிலும் உயிரிழப்பு இருக்கும். இத்ததைய காவல்துறை Encounter –ஐ தவிர்க்க முடியாதது. சமூதாய அமைதியை நிலை நட்டுவதற்கு அவர்கள் எடுக்கும் நடவடிக்கை தமது உயிரையும் துச்சமாக நினைத்து போராடுவது மெச்சத்தக்கது.

அதைவிட்டு அமைதியான இடத்தில் சில அதிகாரிகள் தங்களை Encounter Specialist என்று விளம்பரப்படுத்தி சொல்வதற்காக நாடகம் நடத்துவது கண்டிக்கத்தக்கது. இதை நியாயம் படுத்துவதும் மிக தவறு. உச்ச நீதிமன்றம். இந்தகைய காவல்துறை வன்முறையை வெகுவாக கண்டித்துள்ளது நீதியரசர் திரு மார்க்கண்டே காட்ஜீ அவர்கள் இத்தகைய Encounter-ரில் ஈடுபடும் காவல்துறையினருக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும என்று எச்சரித்துள்ளார். எக்காரணத்திற்காகவும் அதிகார வரம்பை மீறக்கூடாது. தனிப்பட்டவருக்கு ஆதாயம் கிடைக்கலாம் ஆனால் அது நிரந்தர தீர்வைக் கொடுக்காது. சட்டப்படி எடுக்கும் நடவடிக்கைத்தான் நிலைத்து நிற்கும் நிறைவு தரும். மனிதநேயம் மேவியபணிகள் தான் காவலனை உற்ற நண்பனாக பிரதிபலிக்கும்.

No comments: