Friday, October 16, 2009

உல்லாசம் பொங்கும் தீபாவளி


தீபாவளி நமது கலாச்சாரத்தோடு ஒன்றி தொன்று தொட்டு வரும் பண்டிகை. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே நமது நாட்டின் ஆத்ம பலம். எந்த சமயத்தவரது பண்டிகை எனினும் அந்நாளில் மற்றவரும் வாழ்த்துக்கள் தெரிவித்து சமுதாயத்தில் ஒருமைப்பாட்டை நிலைநாட்டுவதற்கு ஒரு சந்தர்ப்பமாகவே கொள்ளவேண்டும்.

தீபாவளிப் பண்டிகை என்றாலே புத்தாடை, இனிப்பு, பரஸ்பரம் சுற்றமும் நட்பும் கூடிமகிழ்தல். விருந்து, கேளிக்கை விளையாட்டு என்று இன்பமாக கழியும் நாட்கள். வாணவேடிக்கை, பட்டாசு வகைகள் இல்லாமல் தீபாவளி நிறைவு பெறுவது இல்லை. பெயரியவர்களும் குழந்தைகளோடு பட்டாசு வெடிப்பதில் கலந்து கொள்வதை காணலாம். தொலைக்காட்சி மற்றும் நவீன கேளிக்கைகள் தோன்றாத காலத்தில் தீபாவளி மிக விமர்சையான கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகையாக இருந்தது. பெற்றோரோடு சென்று துணி எடுப்பது, நாட்கணக்காக தையல்காரரிடம் அலைவது, கூட்டுசேர்ந்து இனிப்பு, காரம் செய்வது, தந்தையோடு சென்று பட்டியல்படி பட்டாசு வாங்குவது, மழையிலிருந்து அதை காப்பாற்றி வெதுவெதுப்பாக பாதுகாப்பது, விடியற்காலை குளித்து முதலில் யார் பட்டாசு விடுவது என்று போட்டி போடுவது, சூடாக சிற்றுண்டி அருந்தி தீபாவளி மருந்து மயக்கத்தில் சந்தோஷத்தில் திளைப்பது. இவையெல்லாம் - 30 வருடங்களுக்கு முன்னால். இப்போது தொலைக்காட்சி பெட்டி முன் சிறப்பு தீபாவளி நிகழ்ச்சிகள் பார்ப்பதில் கழிகிறது. இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே என்று ஏங்கத் தோன்றும்.

தீபாவளியோடு சேர்ந்து வருவது பட்டாசு வெடிகளால் ஏற்படும் விபத்துக்கள். மாறிவரும் சமுதாய சூழலில் முன்பு இருந்தது போல் இல்லாமல் பெரியவர்களுடைய கவனம் பல திசைகளில் ஈர்க்கப்படுகிறது. குழந்தைகள் மீது செலுத்த வேண்டிய மேற்பார்வையின் அளவும் தேய்ந்துவிட்ட நிலையில் இத்தகைய பட்டாசு சம்மந்தப்பட்ட தீ விபத்துக்கள் குறைவில்லாமல் தொடர்கின்றன.

தமிழகத்தில் சராசரி வருடத்திற்கு 20,000 தீ விபத்து சம்மந்தப்பட்ட அழைப்புகள் தீயணைப்புத் துறைக்கு வருகின்றன. 2008 ஆம் வருடம் 17,433 தீ அழைப்புகள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் பட்டாசு சம்மந்தப்பட்ட தீ விபத்துகள் 393 ஆகும். சென்னையில் மட்டும் 102 பட்டாசு தீ விபத்து அழைப்புகள் பெறப்பட்டன.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காயம் பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்புப் பிரிவு இயங்குகிறது. இந்தப் பிரிவில் 2008 ம் வருடம் பட்டாசுவெடி தீ விபத்தினால் 56 நபர்கள் காயமுற்று அனுமதிக்கப்பட்டனர். இவற்றில் 19 பேர் உள்நோயாளிகள். ஸ்டான்லி மருத்துவமனையில் 12 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர். சந்தோஷமாக கழிக்க வேண்டிய நாளில் வேதனையோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியநிலை. இது நாமே வரவழைத்துக் கொண்டதைத் தவிர வேறில்லை.விபத்துக்கள் தவிர்க்கப்பட வேண்டியது. முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் விதிகளை மீறாமல் மதித்து நடந்தால் அசம்பாவிதங்களை தவிர்க்கலாம். தீயணைப்புத் துறை பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு தீ பாதுகாப்பு தணிக்கை செய்து தடையின்மைச் சான்றிதழ் வழங்குகிறது. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உரிமங்கள் வழங்குகின்றனர். மாவட்டங்களில் வருவாய்த்துறையும், 15 கிலோவிலிருந்து 200 கிலோ வரை பட்டாசு உற்பத்தி செய்யும் இடத்திற்கு வெடிபொருள் சட்டப்படி மத்திய அரசின் வெடிமருந்து கட்டுப்பாட்டு அலுவலரிடமிருந்து உரிமம் பெறவேண்டும். 200 கிலோவிற்கு மேற்பட்டு மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள முதன்மை வெடிமருந்து கட்டுப்பாட்டு அலுவலரால் இந்திய வெடிமருந்துச் சட்டம் மற்றும் வெடிமருந்து விதிகள் அடிப்படையில் இத்தகைய உரிமங்கள் வழங்கப்படுகின்றன. விதிமீறல்களுக்கும் சட்டத்திற்கு புறம்பாக பட்டாசு பொருட்கள் தயாரித்தால் 5000 ரூபாய் அபராதம் மற்றும் 3 வருடம் வரை சிறை தண்டனை விதிக்கலாம்.

அதிக அளவில் பட்டாசு தயாரிப்பதற்கு உரிமம் பெற்ற 590 நிறுவனங்கள் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் உள்ளன. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வெடிமருந்து மற்றும் பட்டாசு வைத்துக்கொள்வதற்கென 29 உரிமதாரர்கள் உள்ளனர்.

பட்டாசு தொழிற்சாலையிலும், வெடிமருந்துகள் தயாரிப்பதற்கு உபயோகப்படுதப்படும் இராசாயனப் பொருட்களை பயன்படுத்துவதில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.அங்கீகரிக்கப்படாத இரசாயனப் பொருட்கள் உபயோகிக்கக் கூடாது.
இரசாயனக் கலவைகள் தேவையான அளவு தயார் செய்யவேண்டும். மிதக்கலவைகளை ஒருமணி நேரத்திற்கு அதிகமாக வைத்தல் கூடாது.
ஒவ்வொரு இரசாயனப் பொருளையும் தனித்தனி அறையில் வைத்து தேவைக்கு ஏற்ப எடுத்துக் கொள்ள வேண்டும்.வேலை துவங்குவதற்கு முன் மேற்பார்வையாளர் சேமிப்பு கிடங்கு, தயாரிக்கும் அறைகளை பார்வையிட வேண்டும். வேண்டாத பொருட்களோ, விநோதமான வாசமும் இருந்தால் பரிசோதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.வெப்பநிலை 40 டிகிரி சென்டிகிரேடுக்கு அதிகமாக இருந்தாலோ, காற்றின் ஈரப்பதம் குறைவாக இருந்தாலோ வேலை துவங்கக்கூடாது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களையே வேலையில் அமர்த்த வேண்டும். எக்காரணத்தை கொண்டும் தொழிற்சாலைகளுக்குள் குழந்தைகளை அனுமதிக்கக்கூடாது
ஒரு அறையில் நிர்யணிக்கப்பட்ட பணியாள்ர்களுக்கு அதிகமாக இருக்கக் கூடாது.பட்டாசு பொருட்களை அனுமதிக்கப்பட்ட உலர்மேடையில் மட்டுமே உலரவைக்க வேண்டும். இரும்பு பட்டைகள் பொருத்திய பெட்டிகள், முக்காலிகள், இருப்பு ஆணிகள் கொண்ட பொருட்களை பயன்படுத்தக் கூடாது.
இடி, மின்னல் ஏற்படும் சூழலில் வேலையை நிறுத்தி பாதுகாப்பு இடங்களுக்கு வரவேண்டும். பட்டாசு வெடி சோதனையை திறந்த வெளியில் செய்ய வேண்டும்.

2004 ம் வருடத்திலிருந்து செப்டம்பர் 2009ம் வருடம் வரை பட்டாசு தொழிற்சாலைகளில் 28 பெரிய விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 106 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் 225 நபர்கள் காயமடைந்துள்ளனர். சேதாரம் ரூ. 68.60 இலட்சம். இந்த எல்லா விபத்துகளும் கவனக்குறைவாலும், விதிகளை பின்பற்றாததாலும் ஏற்பட்டவை.பட்டாசு வைக்கும் இடங்களிலும் பாதுகாப்பு அவசியம். குறைந்த பட்ச தீயணைப்பு சாதனங்களான வாளி தண்ணீர், மண் தீயணைப்பான்கள் வைத்தல் வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் 24.09.09 அன்று பாதுகாப்பு உணர்வில்லாமல் மற்றவர்களுடைய நலனையும் பாராமல் குடியிருப்பு பகுதியில் பட்டாசுகளை விற்பனைக்கு முடக்கி வைத்ததால் அவை வெடித்து கட்டிடமும் நிலைகுலைந்து 10 பேர் உயிரிழந்தனர்.சென்னை உயர்நீரிமன்றம் ரிட் மனு எண். 38180/2005 ராமசாமி எதிர் தீயணைப்பு, காவல் மற்றும் சம்மந்தப்பட்ட ஏனைய துறைகள், பட்டாசு கிடங்குகள், விற்பனை மையங்கள் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகளை கொடுத்துள்ளது. கடைகளுக்கு இடையில் குறைந்தபட்சம் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். ஆயிரம் கிலோவிற்கு மிகாமல் கடையில் பட்டாசு வைக்கவேண்டும். தற்காலிக கடைகள் தீக்கிறையாகாத பொருட்களால் மூடப்பட்டிருக்க வேண்டும்.

மேலும் உச்சநீதிமன்ற ரிட்மனு 72/1998 மஉறாராஷ்டிர அரசு தாக்கல் செய்த மனுவில் அதிக ஓசையால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பைக் கருத்தில் கொண்டு ஒலி அலை 125 டெசிபலுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறது. மேலும் இத்தகைய ஒலி மருத்துவமனை, கல்விமையங்கள், நீதிமன்றங்களுக்கு அருகில் எழுப்பக்கூடாது. இந்த விதிப்படி ஆட்டம்பாம், அதிக ஒலி எழுப்பும் சரவெடி மேலே குறிப்பிட்ட மையங்களுக்கு அருகிலோ வேறு எங்குமோ வெடிக்கக்கூடாது.

பட்டாசு வெடிக்கும் பொழுது பெரியவர்கள் மேற்பார்வை தேவை. கையில் வைத்து வெடித்து சூரத்தனத்தைக் காட்டக் கூடாது. ஒரு வாளி தண்ணீர் வைத்து வெடித்த கம்பிகள், குச்சிகளை போட வேண்டும். அடுக்கு மாடி கட்டிடத்தில் ராக்கெட் போன்றவைகளை கொளுத்தக்கூடாது. குடிசைப் பகுதி அருகில் பட்டாசு கொளுத்தக்கூடாது. காலணி மற்றும் பருத்தி ஆடைகளை அணிந்தால் நலம்.பட்டாசு விபத்துகளில் பாதிக்கப்படுவது குழந்தைகள். தீக்காயங்களைவிட கொடியது வேறொன்றுமில்லை. காயம் ஆறுவதற்கு நாளாகும், பட்ட இடம் விகாரம் அடையும். சமீபத்தில் விருதுநகரில் நடந்த விபத்தில் கொடியமுறையில் ஒரு குழந்தை உயிரிழந்தது. பெற்றோர் தீபாவளிக்கு வாங்கிய பட்டாசுகளை ஒரு அறையில் வைத்திருந்தனர். அவர்கள் வேலைக்கு சென்றிருந்தனர் குழந்தை பள்ளியிலிருந்து திரும்பி பட்டாசை மறைத்துவைத்த அறையினுள் நுழைந்து கிடைத்த பட்டாசை வெடிக்க முயன்றிருக்கிறது. விபத்து ஏற்படுகிறது. புகைமண்டலத்தில் சிக்கி குழந்தை இறந்து விடுகிறது. வேலையிலிருந்து திரும்பிய பெற்றோர் குழந்தை பள்ளியிலிருந்து திரும்பவில்லை என்று பள்ளிக்குச் சென்று தேடுகின்றனர். பின்புதான் வீட்டிலேயே குழந்தை உயிர்விட்டது தெரியவருகிறது. இதைவிடக் கொடுமை இருக்க முடியாது.

பாதுகாப்பு நமது கையில் தான் இருக்கிறது. பாதுகாப்பு உணர்வு ஒவ்வொரு நிமிடமும் வேண்டும். சாலை விதிகளை மதிப்பது, தலைக்கவசம் அணிவது, வாகன இருக்கை பெல்ட் போடுவது, வீட்டை பாதுகாப்பாக வைப்பது, சுற்றுப்புற சூழல் பாதுகாப்பது, தீ விபத்துகள் தவிர்ப்பது இவற்றில் கவனமாக இருக்க வேண்டும். உல்லாசமான தீபாவளி துன்பமில்லா இன்பம் பொங்கும் தீபாவளியாக அமைய வேண்டும்.
This Article Published in Dinamani Newspaper on 16.10.2009

Friday, October 9, 2009

கவர்ச்சித் திட்டங்கள் ஜக்கிரதை

“கொடி அசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததால் கொடி அசைந்ததா”
என்று கரணம் காரணம் மையமாக கவிநயம் மிக்க கண்ணதாசன் பாடல் மறக்க முடியாதது. மோசடி வலையில் திரும்ப திரும்ப விழும் முதலீட்டார்களின் நிலைமையைப் பார்க்கும் போது
“ஏமாளிகளால் ஏமாற்றுபவர்களா
ஏமாற்றுபவர்களால் ஏமாளிகளா” என்று கேட்கக் தோன்றுகிறது.
“சிட்டி லிமோசின்ஸ்” என்ற நிறுவனத்தில் அப்பாவி மக்கள் முதலீடு செய்து பணத்தை பறிகொடுத்துள்ளர்கள். இழப்பு நூறு கோடி ரூபாய்க்கு மேலிருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது இந்த நிறுவனம் இந்தியாவில் முக்கிய நகரங்களான மும்பை, தில்லியில் இயங்கி வருகிறது.
. “டைம் ஷேர்” என்று சுற்றுலா தலங்களில் உள்ள தங்கும் விடுதிகளில் வருடத்திற்கு சில நாட்கள் பங்கு வாங்கும் வர்த்தக முறை பல வருடங்களாக இயங்குகிறது. வாங்கிய குறிப்பிட்ட நாட்கள் அடிப்படையில் அந்த விடுதியிலோ அதோடு இணைந்த மற்ற விடுதிகளிலோ தங்கலாம், அதை வாடகைக்கு விடலாம் போன்ற பல வகையில் உபயோகிக்கலாம். இதன் அடிப்படையில் தான் வாகன உரிமை என்று வாகனங்களின் மீது ஒரு தொகை முதலீடு செய்து அந்த வாகனம் வாடகைக்கு விடப்பட்டு ஈட்டும் லாபத்தில் பங்கு முதலீட்டை பொருத்து கொடுக்கப்படுகிறது. இந்த வகையில் உருவானதுதான் லிமோசின் நிறுவனம்.
கவர்ச்சிகரமான பல திட்டங்கள் மக்களை ஈர்ப்பதற்கு அறிவிக்கப்படுகின்றன. நாம்தான் முதலீடு செய்வதற்கு முன் திட்டங்களை ஆராய்ந்து வியாபார நோக்கத்தை அறிந்துகொண்டு வியாபாரம் துவங்குபவரின் நாணயத்தையும், தகுதியினையும் தெரிந்து கொண்டு முதலீடு செய்யவேண்டும்.
1990ல் இருந்து கவர்ச்சிகரமான அறிவிப்புகள் நிறைந்த பத்தாண்டுகள் என்று கூறலாம். முதலீடு செய்பவர்களுக்கு 24 சதவிகிதம் வட்டி, முதலீடு செய்த உடனே முன்வட்டி, தங்க நாணயம், குளிர்சாதனப்பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி போன்ற பல பரிசுகள் என பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. முதலீடு செய்த பணம் விவசாயப் பண்ணை பராமரிப்புதற்கு செலவிடப்பட்டு முதலீட்டார்களுக்கு அரிசியும், தானிய வகைகளும், காய்கறியும் வழங்கப்படும், பால்பண்ணை மூலம் பால் விநியோகிக்கப்படும் என்றும் இத்திட்டங்களின் பரிமாணங்கள் பல. அப்பாவி மக்களும் கவர்ச்சியில் மயங்கி தாம் கொடுத்த பணத்திலிருந்துதான் ஒரு பங்கு முன்வட்டி, பரிசு என்று கொடுக்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளாமல் முதலீடு செய்தனர். இத்தகைய வங்கிசாரா நிதிநிறுவனங்கள் முதலீட்டார்களின் நம்பிக்கையை வளர்ப்பதற்கு முதல் சில ஆண்டுகளுக்கு கூறியபடி வட்டி மற்றும் சலுகைகளை கொடுத்து அதன் மூலம் மேலும் பல சந்தாதாரர்களை வலையில் சிக்கவைப்பார்கள். நீர்குமிழி போல் வெடித்து சிதறும் நிலையில் நிறுவனம் மூடப்படும். பணம் இழந்தவர்கள் காவல் துறையினரிடம் தஞ்சமடைவார்கள்.
இம்மாதிரியான வழக்குகள் அதிகரிக்கவே குற்றப் புலனாய்வுப் பிரிவில் பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குநர் தலைமையில் விரிவாக்கப்பட்டது. 1997-ம் வருடம் தமிழ்நாடு முதலீட்டார்கள் பாதுகாப்பு சட்டம் (TANPID ACT) இயற்றப்பட்டது. மோசடி நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துக்களை முடக்கி பொது ஏலம் மூலம் இழந்த பணத்தை ஓரளவு ஈடுகட்ட வழிவகை செய்யும் அதிகாரம் இந்த சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் பொருளாதார குற்றப் புலனாய்வுத் துறை முதலீட்டாளர்களுக்கு அவர்கள் செலுத்திய தொகையில் ஒரு பகுதியாவது நீதிமன்றம் மூலம் பெற்றுத்தர முடிகிறது.
நூதன மோசடிகளுக்கு தந்தை என்று அழைக்கப்படுபவர் ‘சார்லஸ் பான்ஸி’ என்ற இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்தவர். 1949ம் ஆண்டு வரை அமெரிக்காவில் வாழ்ந்து மறைந்தவர் மிக அதிகமான பயன் மிகக் குறுகிய காலத்தில் கிடைக்கும் என்று ஒரு திட்டத்தை விளம்பரப்படுத்துவார். முதலில் வரும் முதலீட்டார்களுக்கு தடங்கலின்றி சொல்லியபடி முதலீட்டின் லாபம் என்று ஒரு தொகை திரும்பி கொடுக்கப்படும். இதில் பயனடைந்தவர்கள் மூலமாக மற்றவர்களும் புற்றீசல் போல பணம் போடுவார்கள். இவ்வாறு புதிதாக வரும் முதலீட்டார்களின் பணத்தை வைத்து திட்டத்தின் லாபம் என்று முதலீட்டார்களுக்கு திருப்பிக் கொடுப்பதால் திட்டம் வெற்றிகரமாக செயல்படுவதாக ஒரு மாயை உண்டாகும். இத்தகைய தொடர் அடுக்கு மோசடி திட்டங்கள் ‘பான்சி திட்டம்’ என்று பிரபலமாகியுள்ளது.
‘பான்ஸி திட்டம்’ தொடர புதிய முதலீட்டாளர்கள் வரவேண்டும். அவர்கள் வரத்து குறைந்தால் இந்த திட்டம் குறுகிய காலத்தில் அதனுடைய பளுவாலேயே தொய்ந்து விடும். திட்டத்தை துவக்கியவர் சுருட்டியவரைக்கும் லாபம் என்று மறைந்து விடுவார். அல்லது சட்டப்படி திட்டம் தூய்மையானதா என்று சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்கையில் சாயம் வெளுத்துவிடும்.
சமீபத்தில் ‘பெர்னி மெய்டாஃப்’ என்பவர் பல வருடங்களாக அமெரிக்க வால் ஸ்ட்ரீட் பங்கு மார்க்கெட்டில் சுமார் 65 பில்லியன் டாலர் மோசடி செய்தது வெளிவந்துள்ளது. இவர் செய்தது பல உறர்ஷத் மேத்தாக்களை உள்ளடக்கிய மோசடி. அமெரிக்க புலனாய்வுப் பிரிவு துரிதமாக நடவடிக்கை எடுத்ததால் இவருக்கு அதிகபட்சமாக 150 வருட சிறைதண்டனை இந்த வ்ருடம் ஜுன் மாதம் நீதிமன்றம் விதித்துள்ளது.
பரிசுச்சீட்டு மற்றும் பணம் பட்டுவாடா திட்டங்கள் தடுக்கும் சட்டம் மத்திய அரசால் 1978-ல் இயற்றப்பட்டது. இந்த சட்டப்படி பல அடுக்கு வியாபார திட்டங்கள் மூலம் தொடர்ந்து பலரை திட்டத்தில் இணைத்து லாபம் ஈட்டுவது குற்றமாகும். சமீபத்தில் தமிழகத்தில் தொடரப்பட்ட ‘தங்கப் புதையல்’ வழக்கு இதில் அடங்கும். உச்சநீதிமன்றம் மேற்கு வங்காளம் எதிர் ஸ்வபன் குமார் என்ற வழக்கில் (AIR 1982 SC 949) இம்மாதிரியான பணப்பட்டுவாடா திட்டம் என்ன என்று விவரித்துள்ளது. எளிதிலும் விரைவிலும் பணம் ஈட்டக்கூடிய திட்டம் என்ற அறிவிப்பும், பணமோ, பொருளோ ஒரு இலக்கை அடைந்தாலோ அல்லது புதிய அங்கத்தினர்களை சேர்த்தாலோ கொடுக்கப்படும் என்ற உத்திரவாதம் அடங்கிய திட்டம், இந்த பரிசுச் சீட்டு ஒழிக்கும் சட்டத்தின் பார்வையில் வரும் என்று கூறியுள்ளது. மேலும் இந்த சட்டம் அரசியல்சாசன சட்டம் 19(1)(ஜி) அடிப்படை உரிமைக்கு புறம்பானது அல்ல என்றும் உச்சநீதிமன்றம் சீனிவாசா தொழிலகம் எதிர் மத்திய அரசு (AIR 1981, 504 SC) என்ற வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது. ஜஸ்டிஸ் கிருஷ்ண ஐயர் அவர்கள் இந்த தீர்ப்பில் தனக்கே உரித்த நடையில் “ஒளியில் மாயும் விட்டில் பூச்சியை காப்பாற்ற ஒரே வழி அழிக்கும் ஒளியை ஒழிப்பது ஒன்றுதான்” என்று கூறியுள்ளார் !
தமிழ்நாட்டில் அமலில் உள்ள முதலீட்டார்கள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இப்போது உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த சட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது.
இந்தியாவில் எல்லா மாநிலங்கள் சேர்த்து ஆண்டொன்றிற்கு சராசரி 90,000 மோசடி வழக்குகள் பதிவாகின்றன. இதில் 72 சதவிகித வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகின்றன. ஆனால் 2007ம் ஆண்டில் 25.6 சதவிகித வழங்குகள் தான் தண்டனையில் முடிந்துள்ளது. இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் 42 சதவிகித மற்ற வழக்குகள் வெற்றிகரமாக முடிக்கப்படும் நிலையில் மோசடி வழக்குகள் சரியாக புலனாய்வு செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை மறுக்க முடியாது. மேலும் பணம் படைத்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் திறமையான வழக்காடுதல் மூலம் தப்பித்து விடுகின்றனர் என்பதும் உண்மை. காவல் துறைக்கு புலனாய்வுத் திறனோடு பணம் இழந்த ஏழை முதலீட்டாளர்களின் நம்பிக்கை, ஆதரவு, ஒன்றே பக்கபலம்.
பொருளாதார குற்றங்களில் புலன் விசாரணை கடினமானது. தமிழக பொருளாதார குற்றப் புலனாய்வுப் பிரிவு சிறப்பாக செயல்பட்டு 2007, 2008-09 ஆண்டுகளில் சுமார் 170 கோடி ரூபாய் மீட்டு சாதனை படைத்துள்ளது. இம்மாதிரியான வழக்குகளில் ஒப்பந்த மீறலும் இருப்பதால் இவை சிவில் வழக்குகள் என்றும் குற்றவியல் வழக்குகள் முறையில் விசாரிக்க முடியாது என்ற வாதமும் இருக்கிறது. ஒரு சிறிய திரைதான் கிரிமினல் வழக்குகளை மறைத்து சிவில் வழங்குகளாக காண்பிக்கும். தீர்க்கமாக விசாரித்து அப்பாவி மக்களுக்கு உதவி செய்வது காவல்துறையின் பொறுப்பு. மோசடி நிறுவனகள் பற்றி தகவல் சேகரித்து தடுப்பு நடவடிக்கை முலம் முதலீட்டளர்களை பாதுகாப்பதும் காவல்துறையில் கடமை.
சமுதாயத்திற்கு விரோதமாக தனிமனிதன் பணம் சம்பாதித்து தழைக்கமுடியாது. சமுதாயம் நன்றாக இருந்தால் தான் ஈட்டிய பொருள் நிலைக்கும். மனம் ஆழமானது என்றாலும் சஞ்சலம் மிகுந்தது. பாதாளம் பாயும் பணம் மனதை எளிதாக ஆட்கொண்டுவிடும். மனிதன் நோக மனிதன் பார்க்கும் பார்வையால் தான் இத்தகைய மோசடிகள் நீகழ்கின்றன. உழைக்காமல் பணம் சம்பதிக்க முடியும் என்ற மக்களின் பேராசைதான் ஏமாற்றுபவர்களுக்கு மூலதனமாக அமைகிறது. உழைத்து சம்பாதித்தால் உடம்பில் ஒட்டும் இலவசமாக சுலபத்தில் கிடைக்கும் என்பது மாயை. அந்த சபலத்திற்க்கு இடம் கொடுப்பது அழிவுக்கு வழி. அத்தகைய பொருள் பாதாளம் பாய்ந்து மறைந்து விடும்.


This Article published in Dinamani Newspaper on 03.10.2009

Thursday, October 8, 2009

ஆல் இந்திய ரேடியோ - தமிழ்சுவை

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதானது” எங்கும் காணோம் என்றார் பன்மொழி புலமைப் பெற்ற மகாகவி பாரதி. தொன்மையான உயர்ந்த கோட்பாடுகள் மற்றும் கவின்மிகு காலாச்சாரத்தின் வெளிப்பாடு தமிழ்மொழி. “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்ற பரந்த மனப்பான்மை தமிழருக்கு உண்டு. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பல மேடைகளில் முழங்க கேட்டிடுக்கிறோம். கணியன் பூங்குன்றனாரின் முழுப்பாடல் தமிழரின் உயர்ந்த சிந்தனையும், வாழ்க்கை தத்துவத்தையும் விளக்குகின்றது.
யாதும் ஊரே; யாவரும் கேளீர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியப்பதும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் ஓர் குலம் என்று உலகம் ஒன்றே அது நன்றே என்ற உயர்ந்த சிந்தனையை 2000 ஆண்டுகளுக்கு முன்பே கொண்டிருந்தவர்கள் தமிழர்கள்.
தீயது தீயவை பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப்படும் என்றார் வள்ளுவர். அந்த தீயது நமது செயலின் வினையே.
நன்மை உண்டாவதும் நமது நற்செயலின் விளைவே என்பதை ‘தீதும் நன்றும் பிறர்தரவாரா’ என்று உணர்த்துகிறார்.
அத்தகைய தீயவை கண்டு வருந்துதலும் நன்மையில் மகிழ்ச்சியடைவது அர்த்தமற்றது. இவ்வுலகில் உண்டாகும் ஒவ்வொரு உயிரும் முடிவில் அழியப்போகிறது. பிறப்பும் இறப்பும் சுழன்று வருகிறது. வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிப்பதோடு பற்றற்று வாழ்தலும் சாவைக் கண்டு அஞ்சாது அதை ஏற்கும் பக்குவமும் வேண்டும். ஏனெனில் எவ்வாறு ஆறு, மலை, காடு மேடு பள்ளம் பாய்ந்து முடிவில் கடலை அடைகிறதோ அவ்வாறு உயிர்நிலையும் ஒருநிலைப்படும் ஆன்மாவிற்கு அழிவில்லை.
இதனை நன்கு உணர்ந்து ஆற்றல் படைத்தவரைப்பார்த்து வியப்பதும் தாழ்ந்த நிலையில் உள்ளோரை இகழ்வதும் முறையன்று. மாட்சியில் பெரியவரை வியந்தாலும் ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் நம்மில் தாழ்ந்தவரை இகழ்வது பெருங்குற்றம் என்பதை இடித்துரைக்கின்றார். வாழ்க்கை கோட்பாட்டினையும் வாழ்வியல் தத்துவத்தையும் இதைவிட சிறப்பாக விவரிக்க முடியாது.
புறநூற்றின் இந்த ஒரு பாடல் ஒன்றே போதும் தமிழின் இனிமையை உணர.
தமிழோடு ஒன்றியது பக்தி இலக்கியம். தமிழ் மொழி அண்ட உலகங்களையும் ஆட்டிப்படைக்கும் சக்தியின் வடிவமாகவும் உணரப்படுகிறது.
"பின்னே நின்றென்னை பிறவிபெறுவது
முன்னே நன்றாக முயல்தவம் செய்திலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறே”

தமிழை வளர்ப்பது தமிழ் தொண்டாற்றுவது இறைவனுக்கு பணி செய்வதாகும் என்று மிக அழகாக திருமூலர் திருமந்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

மூன்று பெரும் புலவர்கள் தோன்றியதால் தமிழ்நாடு பெருமையும் புகழும் பெறுகிறது என்கிறார் பாரதியார்

கல்வி சிறந்த தமிழ்நாடு – புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு – நெஞ்சை
அள்ளும் சிலப்பதிகாரமென்றோர்- மணி
யாரம் படைத்த தமிழ்நாடு
திருக்குறளுக்கு ஒப்பான நூல் உலகில் வேறெங்கும் இல்லை. 1330 அருங்குறள்களைக் கொண்ட திருக்குறளில் சமூக நோய்களுக்கு அருமருந்தாகவும், வாழ்வியலுக்கு வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது. உள்ளக்கிடக்கையில் எழும் கேள்விகளுக்கு விடைகள் விரவிய அரிய நூல் திருக்குறள்.
கல்வி கண்ணெனத்தகும் என்று தனிமனிதனுக்கு மட்டுமல்ல உலகத்திற்கு கல்விதான் கண்.
“கற்க கசடற” என்ற வள்ளுவர் “கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்று கல்வியின் நோக்கத்தை தெளிவுபடுத்தியுள்ளார்.

கல்வி அகக்கண்ணால் கற்பது. கல்வி ஊற்று போன்றது.
மழலைச்சொல் கேட்டு மகிழ்ந்த பெற்றோர் தம்மகனை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிகின்றனர். தாய் உணவூட்டி உடல்சார்ந்த போட்டிகளில் முந்தி இருக்க செய்கிறாள். தந்தை உணர்வூட்டி அறிவு சார்ந்த போட்டிகளில் வெற்றிபெறச் செய்கிறான்.
‘தம்மில் தம்மக்கள் அறிவுடமை’ கண்டு ‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தாய்’ ‘இவன் தந்தை என்னோற்றான் கொல்’ என்றும் உலகம் வியக்கிறது. இத்தனை உவகையும் பெருமையும் ‘உலகத்தோடு ஒட்டு ஒழுகல்’ எனும் உயர்பண்பு அவனிடம் உள்ளவரை தான். அது தான் கல்வி கற்றதின் பயன்.
‘உலகத்தோடு ஒட்ட ஒழுகார் கல்லார்’
மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும். உரிமைகள் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்ச்சி உலகெங்கும் இப்போது ஏற்பட்டுள்ளது. மனித நேயத்தின் அடிப்படை சித்தாந்தம் நாம் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகின்றோமோ அவ்வாறு மற்றவர்களையும் மதிக்கவேண்டும். இந்தக் கருத்து சிறப்பாக குறளில் கூறப்பட்டுள்ளது. “சிறப்புஈனும் செல்வம் பெரினும் பிறர்க்கு
இன்னா செய்யாமை மாசற்றார் கோள்”
புகழும் பொருளும் பொருட்டல்ல பிறருக்கு தீங்கு இழைக்காமல் வாழ்வதே மாசற்றவர்களின் கொள்கை. இதனையே ஔவை
ஈதல் அறம் தீவினைவிட்டேல் பொருள் என்று தீயவை அற்று பணி செய்து ஈட்டும் பொருளே தூய்மையானது என்பதை எளிமையாக விளக்குகிறார்.
வலிமையான பொருளை சுருங்கச் செர்ல்லி விளங்க வைப்பதற்கு தமிழ் மொழியின் வளமையை எவ்வளவு அழகாக கையாண்டிருக்கிறார்கள் சான்றோர்கள் என்று வியக்காமல் இருக்க முடியாது.
இன்றைய உலகில் மனித குலத்திற்கு பெரும் பிரச்சனையாக உருவெடுத்திருப்பது பயங்கரவாதம். மதவெறி எனும் மமதையும், இனவெறி, மொழிவெறி மற்றும் உலகத்தோடு ஒட்டு ஒழுகல் எனும் ஒப்புரவு கண்ணோட்டத்துக்கு எதிரான குறுகிய மனப்பாங்கும்தான் காரணம்.
கல்வி இல்லா நிலம் களர் நிலம், மனம் களர் மனம்.
களர் நிலம் கூட உப்பை விளைவிக்கிறது.
களர் மனம் வெறும் உப்பைக்கூட விளைவிப்பதில்லை – வெறுப்பைதான் விளைவிக்கிறது.
பழக்கம் வழக்கமாகி, வழக்கம் ஒழுக்கமாகி, ஒழுக்கம் கலாச்சாரமாக பரிமளிக்க செய்வது கல்வி.
பயிற்றுவிப்பது ஒவ்வொரு கல்வி பயின்றவரின் கடமை என்கிறார் பாவேந்தர் பாரதிதாசன்.
கல்வி இந்நாட்டில் கணக்காயர்களை, கவிஞரை, புலவரை, விஞ்ஞானிகளை வினளத்தது – ஆயினும் கற்றவர் கல்லாரிடத்தும், கல்வியைப் பரப்ப முயலவில்லை.
பாழிருள் விட்டு மீண்டவர் பிறரை மீட்கிலர்
கற்றவர் சிலர் கல்லாதவர் பலர்
என்னும் இழிவு நாட்டில் இருக்கலாம் என்பது கற்றவர் எண்ணம் போலும் எல்லாரும் இந்த நாட்டில் கற்றவர் எனும் நிலை இயற்றுதல் கற்றவர் பொறுப்பே.
கல்வி இருட்டிற்கு கலங்கரை விளக்கு.
யாவர்க்கும் வாக்குரிமை இருக்கும்.
இந்நாட்டில்
“யாவர்க்கும் கல்வி இருக்க வேண்டும்
கண்ணுளார் எண்ணிலார் என்பது கண்டும்
கண்ணுளார் கண்ணிலார் போல இருப்பதா?
கல்லாவறியர்க்கு கைப்பொருள் கல்வியே
இல்லை என்பது கல்வி இல்லாமையே
உடையவர் என்பவர் கல்வி உடையவரே”
என்னே பாவேந்தரின் சீரிய சிந்தனை- சமுதாய உணர்வு !
கல்வி கற்க வேண்டும் கற்பிக்க வேண்டும்
தமிழ் கல்வி வேண்டும் என்று போராடியவர் பாவேந்தர்.
தமிழக்கு மெருகூட்டும் உயிருட்டும் வடிவங்கள் ழ,ண,ன, ள
இதனை சரியாக உச்சரிக்காவிட்டால் பிழை கேட்க சகிக்காது.
இதையேதான் செந்தமிழும் நாப் பழக்கம் என்று கூறினாள் ஔவை.
ஒரு நாட்டுப்பாடலிலும் தமிழ் தேனாக வடிகிறது.
“மூங்கில் இலை மேலே
தூங்கும் பனி நீரே
தூங்கும் பனி நீரை
வாங்கும் கதிரோனே”
“துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து
இசை நீ தரமாட்டாயா” என்று யாழின் பெருமையை கூறுகிறார் பாரதிதாசன்.
தமிழ் கற்போம்.
தமிழை பிழையின்றி கற்போம்.
தேன்மதுரத் தமிழோசையை உலகெங்கும் பரப்பிடச் செய்வோம்.
இலக்கியம் என்பது ஒரு இலட்சியத்தை இலக்காக வைத்து புனையப்பட்ட காவியம். இராமனின் பெருமை பேச இராமாயணம் ‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்பதை விளக்கும் இலக்கியமே சிலப்பதிகாரம். ஒவ்வொரு படைப்பாளியும் தனது படைப்பின் நோக்கத்தை வெளிப்படுத்த முயல்வான். நோக்கம் என்பது சாதாரண பார்வையைத் தாண்டியது. நங்கையும் நோக்கினாள் அண்ணலும் நோக்கினார் இது சாதாரண பார்வை அல்ல. ஆத்மார்த்தமான தீர்க்கமான பார்வை. ஒரு கவிஞனின் நோக்குதல் பார்வையைத்தாண்டி கவியுமை காண்பது. அந்த நோக்கத்திற்கு இலக்கு உண்டு. அது தான் இலட்சியம். அத்தகைய படைப்புதான் இலக்கியம்.
உலகக் காப்பியங்களில் ஒன்றாக கருதப்படுவது வால்மீகியின் இராமாயணம். அதனை தனது அறிவாற்றலாலும் கற்பனை வளத்தாலும் கம்பன் இராம சரிதத்தை தமிழில் அளித்தான். கோசல நாட்டின் மன்னன் தரசதனின் ஆட்சியை வர்ணிக்கிறான்.
வயிர வான் பூணணி மடங்கல் மொய்ம்பினான்
உயிரெலாம் தன்னுயிர் ஒப்ப ஓம்பலால்
செயிரிலா உலகினில், சென்று நின்று வாழ்
உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்.
எல்லா உயிர்களையும் தன் உயிர்போல்
கருதிக்காப்பவன் என்றும் குற்றமில்லாத
உயிர்களுக்கெல்லாம் பாதுகாவலன்
என்று தசரதனை புகழ்கிறான்.
இராமனின் எழில் தோற்றத்தை பார்ப்பவர் எவராலும் முழுமையாக கொள்ளமுடியாது. அத்தகைய கண்கொளா தோற்றம் என்பதை
தோள் கொண்டார் தோளே கண்டார்,
தாள் கண்டார் தாளே கண்டார், என்றும்
வாள் கொண்ட கண்ணார் யாரே
வடிவினை முடியில் கண்டார் என்று நம்மை வியக்க வைக்கிறார்.
நம்பியைக்காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும் என்று
சீதைப்பிராட்டின் நிலையை நயம்பட கூறுகின்றார்.
தமிழ் தந்தை கி.ஆ.பெ அவர்கள் இதற்கு சீதையைக் கண்ட இராமனுக்கு அதே நிலை - இதனை

நம்பியைக்காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும்
நம்பிக்கும் நங்கையைக்காணுந்தோறும் அந்ததேயாம் என்று இராமனுக்கு ஏற்றவள் சீதை என்று உறுதிபடுத்துகிறார்.
ஒரு நாட்டில் பாதுகாப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை கம்பர் அழகாக விளக்குகின்றார்.
வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
தீண்மை இல்லை ஓர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லை பொய் உரை இலாமையால்
வெண்மை இல்லை, பல் கேள்வி ஓங்கலால்
கோசல நாட்டில் வறுமைஇல்லை. படைவீரர்களின் ஆற்றலுக்கும் வீரத்திற்கும் அஞ்சி எதிர்கொள்ள பகைவர் இல்லை. பொய்யுரை இல்லை மக்களின் எவ்வுரையும் மெய்யுரையே என்று வர்ணிக்கிறார். காவலர் திறம்பட பணிகள் செய்தால் குற்றம் புரிவதற்கு அஞ்சுவர் என்பது எவ்வளவு உண்மை ! அத்தகைய திண்மையை போற்றுகிறார் கம்பர்.
மெய்வருத்தம் பாரார் பசி நோக்கார்.
கண்துஞ்சார்
எவ்வவர் தீமையும் மேற்கொள்ளார்
- செவ்வி
அருமையும் பாரார்
அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயினார்.
என்ற பதினென்கீழ் கணக்குப் பாடல்
காவல்துறைக்கு பொருத்தமான பாடல்
தமிழ் இலக்கியம் ஊற்று போன்றது. படிக்க படிக்க தெவிட்டாதது.

தமிழர்க்கு புத்துணர்வு ஊட்டியவர் பாரதி. அவரது சொல்லாட்சியும் கவிநயமும் விவரிக்க முடியாதது. முழமையாக அனுபவிக்க வேண்டியது. பாரதி வங்காளத்தில் பிறந்திருந்தால் நோபல் பரிசு அவருக்குத் தான் கிடைத்திருக்கும் என்பார் கவிஞர் கண்ணதாசன். பாப்பா பாட்டு, குயில் பாட்டு தேசபக்திப் பாடல்கள் மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும் உறக்கத்தில் இருந்த சமுதாயத்தை தட்டி எழுப்பவும் முனைந்தார்.
அச்சம் தவிர் ஆண்மை தவறேல் ரௌத்திரம் பழகு வல்லமை தாராயோ என்று இளைஞர்களுக்கு உத்வேகத்தை ஊட்டினார். நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் என்று உறைந்துள் ஆற்றல் வெளிவர வேண்டும் என்று முழுங்கினார்.
நெட்டை மரங்களாக நின்று புலம்பினர் பெட்டைப் புலம்பல் பிறர்க்கு துணையாகுமோ என்று மடமையில் மூழ்கிய மாந்தரை நொந்து வெதும்பினார்.
அச்சமில்லா வாழ்க்கைக்கு வழிகாட்டியவர் பாரதி அச்சம் ஒன்றுதான் முன்னேற்றத்திற்கு தடை.
அச்சம் இல்லை அமுங்குதல் இல்லை
நடுங்குதல் இல்லை நாணுதல் இல்லை
பாவம் இல்லை பதுங்குதல் இல்லை
எது நேரினும் இடர்படமாட்டோம்
அண்டம் சிறிதானாலும் அஞ்சமாட்டோம்
கடல் பொங்கி எழுந்தால் கலங்க மாட்டோம்
யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்
எங்கும் அங்சோம் எப்போதும் அஞ்சோம்
இதைப்படித்து உணர்ந்து துணிவு பெறாதவர் இருக்க முடியாது.
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல்
வீரத்தில் குஞ்சொன்று மூப்பென்று முண்டோ
எவ்வளவு அழகாக வீரத்திற்கு வயதில்லை என்று Moral Courage என்ற மனவலிமையை எவ்வளவு அழகாக சொல்லுகிறார்.
வாடியப் பயிரைக் கண்டு வாடினேன் என்பது சமய சன்மார்க்க தந்தை வள்ளலார் வாக்கு. இதற்கு ஆழமான அர்த்தங்கள் பல உண்டு. பயிர் வாடியதால் மக்களுக்கு பயனில்லாமல் போகுமே, பயிர் வாடியதால் மக்கள் பசியில் வாடவேண்டும் என்ற வருத்தம். பயிர் வாடுவதும் நம்மை பாதிக்க வேண்டும். அத்தகைய மனித நேயம் வளர்க்க வேண்டும் என்ற உயர்ந்த கருத்து வெளிப்படுகிறது. பாரதியாரைப் போல எளிய நடையில் மக்களுக்கு தமிழை எடுத்து சென்றவர் வள்ளலார். எவ்வாறு வாழ்க்கையில் நற்பண்புகள் வளர்க்க வேண்டும் என்பதை சாமானியனுக்கும் புரியும் வகையில் நமக்கு அளித்துள்ளார்.
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவுகல வாமை வேண்டும்
பெருமைபெறு நினது புகழ் பேசவேண்டும்
பொய்மைபேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்
பிடியாதிருக்க வேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை
மறவா திருக்க வேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வுதான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட்டத் துள்வளர்
தலம் ஓங்கும் கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே !
இதனை தினமும் படித்தால் நிச்சயம் தெளிவு பிறக்கும் பிழையில்லா வாழ்க்கையால் நிம்மதி கிடைக்கும்.
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்று ஒவ்வொரு நாளையும் பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால் என்று போற்றி வாழ்ந்தார் பாரதி.
சென்றதை சிந்திக்காதே வருவதை எதிர்க்கொள் சந்தோஷமாக வாழ கற்றுக் கொள் என்பதை
சென்றதினி மீளாது மூடரே நீவிர்
எப்போதும் சென்றதையே
சிந்தை செய்து கொன்றழிக்கும்
கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்
சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.


இன்று புதிதாய் பிறந்தோம் என்ற
எண்ணமதை திண்ணமுற இசைத்து
தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்.
தீமையெல்லாம் அழிந்து போய் திரும்புவாரா
என்று யதார்த்தத்தை தமிழில் குழைத்து கொடுத்துள்ளார்.
தமிழை ஆராதித்த பாரதியும், பாரதிதாசனும்
தமிழுக்கு அமுதென்று பேர்,
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
என்று போற்றினர்.
வாழிய செந்தமிழ்
வாழ்க நற்றமிழ்
வாழிய பாரதி மணித் திருநாடு
ஆல் இந்திய ரேடியோ - தமிழ்சுவை 12.10.2009 முதல் 16.10.2009, காலை 07.30 மணிக்கு.

Saturday, September 19, 2009

தூக்கு மேடை


சராசரி மனிதன் சட்டங்களை மதித்து நடப்பதற்கு முக்கிய காரணம் சட்டத்தினை மீறினால் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற பயம் ஒன்று தான். “நாம் அனைவரும் நமது மனதில் தூக்குமேடையை சுமந்து கொண்டிருக்கிறோம்” என்பது உண்மையே. தூக்கிலிடும் தண்டனையை நினைத்தாலே எல்லோருக்கும் ஒரு பயம் வருவது இயற்கை. ‘அரிது அரிது மானிடனாய் பிறப்பது அரிது’ என்றார் ஔவை பிராட்டி. அத்தகைய உகந்த பிறப்பினை மாய்ப்பதோ மாய்த்துக்கொள்ள துணிவதோ கொடுமையிலும் கொடுமை. ஆனால் சட்டப்படி நிறைவேற்றப்படும் இந்த தண்டனை சமுதாய நலன் கருதி வைக்க வேண்டுமா, நீக்க வேண்டுமா என்பது சர்ச்சைக்குரிய விஷயம்.

சமீபத்தில் உச்சநீதிமன்றம் இளம் திருமணமான பெண் கொடுமைப்படுத்தி கொலையுண்ட வழக்கில் இத்தகைய கொடுமைக்காரர்களை தூக்கிலிடவேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தது செய்தியாக வந்தது. மரணதண்டனை சட்ட ஏடுகளில் உள்ள சிலநாடுகளில் இந்தியாவும் ஒன்று. பல மேலைநாடுகளில் மரணதண்டனை சட்டத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டது. வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவது, உடம்பை நாலுபாகமாக கிழிப்பது போன்ற கோரமான முறையில் குற்றம் புரிந்தவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது பற்றி சரித்திர ஏடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய தண்டனையின் அடிப்படை நோக்கம் மற்றவர்களுக்கு இது படிப்பினையாகவும், குற்றவாளி புரிந்த குற்றத்திற்கு பிராயசித்தமாக வேதனையுற்று மடிய வேண்டும் என்பதே ஆகும்.

மைக்கேல் போக்கால்ட் என்ற பிரஞ்சு எழுத்தாளர் ஒழுக்கமும் தண்டனையும் என்ற பிரசித்திபெற்ற புத்தகத்தில் பிரான்ஸ் நாட்டில் ‘குவார்டரிங்’ என்ற கொடூரமுறையில் தண்டிக்கப்பட்டவரின் கை, கால்களை நான்கு குதிரைகளில் கட்டி நான்கு திசைகளில் அந்த குதிரைகள் இழுக்க துடிதுடித்து அங்கம் அங்கமாக சிதையுறுவதை வர்ணித்துள்ளார். வதையுறுபவர் அருகில் சென்று பாதிரியார் ‘என்ன சொல்லுகிறாய்’ என்று வினவ, ‘கடவுளே என்னை அழைத்துக்கொள் பாவியாகிய என்னை ரட்சிப்பாய்’ என்று கூக்குரலிடுவார் என்று பொது இடத்தில், மக்கள் பார்வையில் 1757-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஒரு தண்டனை விவரிக்கப்பட்டுள்ளது. தலையை ஒரே வெட்டில் துண்டிக்கும் ‘கில்லட்டின்’ முறையும் பிரான்ஸ் நாட்டில் மக்கள் புரட்சியின்போது கையாளப்பட்டது. மரணதண்டனை கோரத்தின் எல்லைத் தாண்டியதால் அம்முறை முற்போக்கு சிந்தனையாளர்களால் வெறுக்கப்பட்டு மரண தண்டனை சட்ட ஏடுகளிலிருந்து நீக்கப்பட்டுவிட்டது.

இந்திய தண்டனைச் சட்டப்படி கொலை குற்றத்திற்கு மரணதண்டனை அல்லது ஆயுள்தண்டனை விதிக்கப்படுகிறது. நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்ட கொடூரமான கொலைகளுக்கு மட்டும் மரணதண்டனை விதிக்க வேண்டும். மிக அரிதான வழக்குகளில் மட்டும் இந்த அதிகபட்ச தண்டனை விதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் பல தீர்ப்புகளில் சொல்லப்பட்டிருப்பதால் இது ஒரு விதியாகவே கடைபிடிக்கப்படுகிறது. இதுவரை சுதந்திர இந்தியாவில் சுமார் 1500 கொடுங்குற்றம் புரிந்தவர்கள் தூக்கிலிடப்பட்டுள்ளார்கள். இதுபற்றிய ஆதாரமான புள்ளிவிவரம் இல்லாததால் மனித உரிமை அமைப்புகள் தூக்கிலிடப்பட்டவர்களின் எண்ணிக்கை 4500-க்கு மேல் இருக்கும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் இதுவரை 292 குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர். வேலூர் பெண்கள் சிறையில் 1947-ல் இருந்து 71 பெண் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிகப்பட்டு 68 பெண்களுக்கு மேல்முறையீட்டு மனுவில் தண்டனை குறைக்கப்பட்டது.மூன்றுபெண்கள் மட்டும் தூக்கிலடப்பட்டுள்ளனர்.
சேலம் மத்திய சிறையில் கடைசியாக 1995-ம் வருடம் ஆட்டோ சங்கர் தூக்கிலிடப்பட்டான். சேலம் மத்திய சிறையில்தான் அதிகபட்சமாக 102 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சென்னை, மதுரை, கோயமுத்தூர் சிறைகளில் தலா சுமார் 60 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இப்போது 18 மரண தண்டனை பெற்ற குற்றவாளிகள் தமிழக சிறைகளில் உள்ளனர். அவர்களது மேல்முறையீட்டு மனு தவக்கத்தில் உள்ளது.

இந்தியாவில் கடைசி மரணதண்டனை 2004-ம் வருடம் மேற்குவங்கத்தில் ஒரு சிறுமியை கற்பழித்துக் கொன்ற குற்றத்திற்காக தனஞ்சய சாட்டர்ஜி என்பவன் கொல்கத்தா சிறையில் தூக்கிலிடப்பட்டான். இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 366(1) பிரிவின்படி மரணதண்டனை விதித்த விசாரணை நீதிமன்றம் தனது தீர்ப்பினை உயர்நீதிமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பவேண்டும். உயர்நீதிமன்றம் மரணதண்டனையை உறுதி செய்யலாம் அல்லது சட்டத்தில் உள்ளபடி வேறு குறைந்த தண்டனை விதிக்கலாம், அல்லது தண்டனையை ரத்து செய்யலாம். மரணதண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில் விசாரணை நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்து தண்டனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மரணதண்டனையை எதிர்த்து தண்டிக்கப்பட்டவர் மேல்முறையீடு செய்யலாம். அதற்கு மேல் கருணை மனு அனுப்பலாம். கருணைமனு பரிசீலிக்கப்பட்டு முடிவாக நிராகரிக்கப்பட்டால் மரணதண்டனை நிறைவேற்றப்படும். இந்த இடைப்பட்ட காலத்தில் தண்டிக்கப்பட்டவர் நிலை விநோதமானது. அவர் தண்டனை அனுபவிக்கும் இல்லவாசி அல்ல. அவரை பாதுகாப்பாக ஆரோக்கியமாக உயிரோடு சிறையில் வைக்கும் நோக்கம் அவரது தண்டனை முடிவாக உறுதி செய்யப்பட்ட பிறகு சட்டப்படி மரணதண்டனை நிறைவேற்ற அவர் தயார் நிலையில் இருக்க வேண்டும். அவரை உயிரோடு பாதுகாப்பதே சட்டப்படி உயிரை மாய்ப்பதற்காக !

ஒவ்வொரு நாட்டிலும் மரணதண்டனை நிறைவேற்றும் முறை மாறுபடுகிறது. அமெரிக்காவில் முதலில் மின்சார நாற்காலியில் தண்டனையுற்றவரை உட்காரவைத்து உயிர் எடுக்கப்பட்டது. இப்போது அம்முறை இல்லை. விஷஊசி மூலம் நினைவிழக்கச் செய்து வலியில்லாமல் உயிரை எடுக்கும் முறை. சில நாடுகளில் துப்பாக்கியால் சுடும் முறை. நமது நாட்டில் உயிர் போகும்வரை தூக்கிலிடும் முறை அமலில் உள்ளது. இந்த முறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் 1983-ம் வருடம் தூக்கிலிட்டு மரணதண்டனை நிறைவேற்றும் வழி கொடுமைப்படுத்தும் முறையல்ல என்று தீர்ப்பு கூறியிருக்கிறது.

மரணதண்டனையுற்றவர்கள் சிறைவிதிகள்படி சிறையில் தனியாக ஒரு அறையில் வைக்கப்படவேண்டும். முழுநேர பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும். அவரது உயரம், எடை எவ்வளவு என்று பார்த்து அதற்கு ஏற்றவாறு தூக்குமேடைக் கயிறு அளவோடு கட்டப்படும். நெம்புகோலால் நகர்த்தக்கூடிய இரும்புத் தடத்தில் தண்டனையுற்றவரை நிற்கவைத்து கழுத்தில் கயிறு சரியான அளவில் இறுக்கப்படும் கருப்புத்துணியால் முகம் மூடப்படும். நெம்புகோலை இயக்குவதற்கு பணிக்கப்பட்டிருக்கும் சிறை அலுவலர் மனதிடத்தோடு சட்டென்று நெம்புகோலை இழுக்கவேண்டும். தண்டனையாளி நின்று கொண்டிருக்கும் இரும்புத்தளம் திடீர் இயக்கத்தால் விலகி தண்டனையாளி முழுமையாக உடம்பு பளுவில் தொங்கி உயிர்விடுவார். பணியில் இருக்கும் மருத்துவர் உயிர் பிரிந்துவிட்டது என்று உறுதி செய்த பிறகு உடல் வெளியே எடுத்துச் செல்லப்படும். பூதஉடலை வெளியே எடுத்துச் செல்வதற்கு பிரத்யேக வழி.

ஐக்கிய நாடுகள் சபை பலமுறை தனது தீர்மானங்கள் மூலம் மரணதண்டனை சட்ட ஏடுகளிலிருந்து நீக்கப்படவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்படுகிறது. ஒன்று மரணதண்டனை மனிதகுலத்தின் கண்ணியத்தை குலைப்பதாகும். மற்றொன்று மனிதாபமின்றி கொடூரமான தண்டனைக்கு எவரையும் உட்படுத்தக் கூடாது என்ற மனித உரிமை மரண தண்டனை விதிப்பதால் மீறப்படுகிறது என்ற காரணமும் உண்டு மேலும் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் பிரிவு 6-ல் மரணதண்டனை பொதுவாக விதிக்கக்கூடாது, அப்படி விதித்தாலும் உரிய நிதிமன்ற விசாரணையின் முடிவில் குற்றவாளிக்கு தகுந்த வாய்ப்பு அளித்தப்பிறகுதான் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், 18 வயதிற்கு உட்பட்டவர்க்கு மரணதண்டனை விதிக்கக்கூடாது, கர்பமுற்ற பெண்களை தூக்கிலிடக்கூடாது என்று பலமுக்கிய விதிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. நமது நாட்டிலும் கர்பமுற்ற நிலையில் பெண்கள் மீது மரணதண்டனை நிறைவேற்றப்பட மாட்டாது.

1945-ல் ஐக்கிய நாடுகள் சபை துவக்கப்பட்டபோது ஏழு நாடுகள் தான் மரணதண்டனை இல்லாத நாடுகள். ஆனால் இன்று பலநாடுகளில் இந்த தண்டனை நீக்கப்பட்டுவிட்டன. ஐக்கிய நாடுகள் சபையில் 192 நாடுகள் உள்ளன. அதில் 142 நாடுகளில் மரணதண்டனை நீக்கப்பட்டுவிட்டது. இந்த வருடம் ஜுன் மாதம் டோகோ என்ற நாடு மரணதண்டனை நீக்கப்பட்டதாக அறிவித்துள்ளது.

‘ரெஜிஸைட்’ என்ற இந்த அரசுக் கொலை தொடரவேண்டுமா நீக்கப்படவேண்டுமா என்ற கேள்விக்கு பல மனித உரிமை அமைப்புகள் இந்தக் கொடூரமான அரசே செய்யும் மனித உரிமை மீறல் ஒழிக்கப்படவேண்டும் என்று போராடி வருகின்றன. ஆனால் கொடுங்குற்றங்கள் பயங்கரவாத நிகழ்வுகளுக்கு எத்தகைய தண்டனை கொடுக்கவேண்டும் என்ற கேள்வி எழுகிறது. பலவருடங்களுக்கு முன்னர் தில்லியில் சோப்ரா குழந்தைகளை கொன்ற பில்லா ரங்கா இருவரும் தூக்கிலிடப்பட்டபோது எல்லோரும் ஒருமித்து ஆமோதித்தனர். வேறு விதமான தண்டனை திருப்தி அளித்திருக்காது.

ஆனால் மரணதண்டனை எதிர்ப்பாளர்கள் அரசே கொலையாளியாகக் கூடாது, இத்தகைய உச்சகட்ட தண்டனைகள் குற்றங்கள் குறைவதற்கு மாறாக சமுதாயத்தில் எதிர்மறை உணர்வுகள், பழிக்குப்பழி வாங்கவேண்டும் போன்ற வன்முறை தூண்டக்கூடிய மனநிலை உருவாக வழிவகுக்கின்றன என்ற வாதங்களை முன்வைக்கின்றனர். காலம் தான் இந்த சர்ச்சைக்கு முடிவு கொடுக்கும்.
This Ariticle published in Dinamani on 17.09.2009Rehabilitation of Women Prisoners


Crime itself is not a disease though it may due to disease. This is perfectly true in respect of women in conflict with law. Tamil Nadu is one of the few states where women inmates are housed in separate prison exclusively built for women keeping in view their special requirement. The prison establishment is also supervised fully by women prison officials. The total strength of women inmates’ population in the country is 14,657 and the average in Tamil Nadu is about 1000 which is about 6% of total prison population in the State. The All India male to female prison population is around 94% to 6%. In Tamil Nadu separate prison complex are available in Puzhal, Trichy, Vellore, Cuddalore and 10 other Sub-jails while in many states the women prisoners are kept in portion of the main prison complex.

There are several issues relating to women inmates. They can be categorized as (i) Admission (ii) Classification (iii) Reformation Programme (iv) Vocational Training (v) Health and Hygine (vi) Psychological emotional issues (vii) Vision and emergency leave (viii) Rehabilitation on release (ix) Resociliation and acceptance. Women prisoners on admission are in a mentally disturbed condition. Mental Health is an issue in respect of all prisoners but more so for women prisoners. A study has revealed that nearly 60% of inmates suffer from various issues of mental health like psychosis, major depressions and personality disorder. General health problem in custodial care are detection of communicable diseases, mental health and substances abuse.
On the basis of their health, social background, educational standard, classification has to be made to house them in the prison.

Reformation programmes for the women inmates has to be tailored to their requirement. Most of the women inmates like their male counterpart are illiterate but generally their response to educational programmes is quite good. Vocational training for women are important which will help their rehabilitation on release. Specific marketable skills have to be imparted. Computer courses have been started in women prison complex and it is gratifying to note that women inmates have enthusiastically taken to computer literacy.

Women inmates undergo intensive emotional stress due to separation of from their families. Study of the age profile of the inmates in Tamil Nadu prisons reveals that of the total 1000 inmates about 200 are in the age group of 20 to 30 years, which is the child bearing age for women. Almost 350 inmates are in the age group of 30 to 40 years where they have young growing children who are deprived of emotional support of the mother. In a land mark judgment in Upadhyay Vs. State of Andhra Pradesh gender specific issues of women have been dealt in detail and minimum standards have been laid for care of mother and child. In pursuance of this, woman inmates are allowed to keep their children up to six years of age. Pregnant women in prisons have to be given proper Pre natal and Post-natal care. Children born during incarceration shall be registered in local birth Registration office to avoid stigma of child birth in prison. Creche facilities for taking care of children in prison complex has been provided with sufficient play materials including cradle for the small children. Play school facility to impart rudimentary instruction to children through play way method is available with qualified teachers from District administration. Special diet for pregnant women, lactating mothers and special diet for children are being provided on the basis of recommendation of Sudha Ramalingam Advocate Commission. Hygiene is yet another problem and care is being taken to ensure that inmates are inculcated healthy habits particularly during menstrual cycle. The inmates are also counselled and tested for prevalence of AIDS.

Women undergo enormous emotional stress due to separation from the family. A survey has revealed that women inmates have a fatalistic attitude towards their imprisonment which they feel that they suffer as they have not obeyed the advice of elders. They blame their husbands or male companions who have forced them to criminal life. They are concerned about their children’s future and are on guilt trip that they are not able to take care of their children. They fear that their children may succumb to wayward habits leading to inter generational crime. However in the case of male inmates they blame their parents for the plight. They also repent for their bad association and addiction to liquor and drugs. They rarely worry about future of their children.

Incarceration of women leads to the problem of intergenerational crime due to lack of parental control. Most of the inmates are from the poor strata of society and are subject to personality and physical abuse right from their childhood. Once they give birth to children their husbands begin to neglect them and look elsewhere for their sexual needs. This adds to neglect, feeling of loneliness, insecurity and emotional trauma. When they are incarcerated the trauma only gets aggravated.

The social stigma attached to a women prisoner is much worse compared to male. Visit by families is als few and far between. They are rarely consulted on important family decisions. Children are mostly neglected or in some instances taken care of by blood relatives who are reluctant to meet them due to societal stigma.

Analysis of crime profile of women prisoners in Tamil Nadu Prisons reveals that of the 172 convicted inmates 127 are involved in murder cases which is mostly crime of passion and not pre meditated. Sixteen are involved in dowry related cases, 10 in property offences and 10 involved in petty quarrel. Of the 800 inmates who are under trials, nearly 50% are involved in illicit liquor and drug offences. In the dowry cases women in the age group of 50 and above are concerned. There are 51 senior citizens above the age of 60 and one 85 year old involved in a dowry death case undergoing imprisonment in Puzhal prison. Most of the women concerned in prohibition and drug offence have been forced into the trade by their male companions. In dowry related cases it is always their son who through his mother instigates demand of dowry and the parents willy nilly get into the vortex of this social malaise.

As on date there are 9 pregnant women in the Tamil Nadu prison and 48 children with their mothers. In the last three years Tamilnadu prisons have been home to 22 children who have had the privilege of having been born in Prison. After all was not lord Krishna born in Prison? Highest was last year (2008) when 8 children were born. All children have survived and are healthy mainly due to the excellent health care in women prisons.

It is a sad commentary on the state of the society that women are increasingly forced into crime. In general there is change in the pattern of crime and increasing trend in certain offences. Arrest in the last 30 year has increased by 95% in all India level. 26.53 lakhs of arrest have been made in 2006 in IPC cases as against 13.80 lakhs in 1973. Tamilnadu is one of the states where arrest rate is high. On an average 7.33 lakhs are arrested every year including 65,000 women. Arrest of women is mostly in social offences under Special and Local Laws. Police have to look into the Policy of arrest as regards women. Arrest should be resorted to only in heinous offences or where there is immediate threat to public order.

In Thailand a system of deferred Sentence has been introduced by suitably amending Criminal Procedure Code where pregnant women coming in conflict with law are not sent to prison immediately. Their sentence is suspended for 3 years enabling them to take care of the child in the initial infancy stage.

Rehabilitation and social integration are two other crucial imperatives which should receive focused attention of correctional administration and also the civil society. It has to be ensued that the woman on release is not placed in vulnerable position with high risk of reverting to crime. Substance abuse is not such a significant problem as in western countries or in most of the Asian Countries. Social acceptance and domination by spouse forcing a hapless woman to deviance are two major challenges to Correctional Administration.

This Article Published in The Hindu on 13.09.2009
Monday, August 24, 2009

கண்ணி வெடி

கண்ணி வெடி
1993 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் பர்கூர் மலைப்பகுதியில் கொடூரன் விரப்பனின் அட்டகாசம் உச்சகட்டத்தில் இருந்த நேரம். மேட்டூரிலிருந்து மலை மாதேஸ்வரன் மலைக்குச் செல்லும் பாதை கொளத்தூரைத் தாண்டி பரந்து விரியும் கவின்மிகு காவிரி மற்றும் பசுமையான மலைப்பகுதியைப் படம் பிடித்து காட்டும் பாலாறு செக்போஸ்ட், கர்நாடக மாநிலம் எல்லை துவக்கத்தில் அமைந்துள்ளது. அதைத்தாண்டி வனப்பகுதிக்குச் செல்லும் பாதையில் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள், வனத்துறை அலுவலர்களை தாங்கிய வண்டி பாலாறு படுகையில் சொரக்காய்மடுவு என்ற இடத்தில் கண்ணி வெடித் தாக்குதலில் சிக்கி 22 உயிர்களை பலிகொண்டது. வீரப்பன் அந்த காட்டுப்பாதையில் 14 இடங்களில் வரிசையாக கண்ணிவெடி வைத்திருந்தான். அவ்வளவும் வெடித்தன. திட்டமிட்டு பட்டப்பகலில் தனது வெறிச்செயலை நிறைவேற்றினான்.
இதே போன்று சட்டீஸ்கர் மாநிலத்தில் இந்த வருடம் ஜுன் 26ம் தேதி நெஞ்சை உலுக்கும் கொடூரம் நிகழ்ந்தது. காங்கர் மாவட்டம் ராஜநத்த கிராமப் பகுதிகளில் திட்டமிட்ட மாவோயிஸ்ட் தாக்குதலில் காவல் கண்காணிப்பாளர் வினோத்குமார் சௌபே உட்பட 30 கமாண்டோ படையினர் கண்ணி வெடிக்கு பலியாயினர். கண்ணிவெடிக்கு பாதுகாப்பு படையினர் உயிர் பலியாவது புதிதல்ல. அதுவும் மாவோயிஸ்டுகள் தொடர்ந்து பலமாநிலங்களில் காவல் துறையினரையும், பாதுகாப்பு படையினரையும் எதிர்கொண்டு நடத்திவரும் தாக்குதல் இந்திய இறையாண்மைக்கே ஒரு சவாலாகவும் பெரும் பிரச்சனையாகவும் உருவெடுத்துள்ளது.

ராய்பூரை தலைநகராகக் கொண்ட சட்டீஸ்கர் மாநிலம் மத்தியபிரதேச மாநிலத்திலிருந்து நவம்பர் மாதம் 2000 வருடம் பிரிக்கப்பட்டு தனி மாநிலமாக இயங்கி வருகிறது. பஸ்டார் போன்ற மலைவாழ் மக்கள், பழங்குடியினர் அதிகமாக உள்ள பகுதிகளைக் கொண்டது. இத்தகைய பின்தங்கிய பகுதிகளில் முன்னேற்றத்தின் பலன் விரைவில் கிடைக்கவேண்டும் என்ற ஒரு நோக்கத்தில் தான் சட்டீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது. மக்களோடு தொடர்பு கொண்டு பணியாற்ற வேண்டிய அரசு ஊழியர்களின் மெத்தனப்போக்கும் ஊழலும் தான் சிலப் பகுதிகளின் பின்தங்கிய நிலைக்குக் காரணம் என்பதை மறுக்க முடியாது. இத்தகைய சூழ்நிலையில் அவர்களது ஏழ்மையை பயன்படுத்தி நியாயமான தேவைகள் பூர்த்தி அடையாது என்றும் அபகரித்தல் தான் ஒரே வழி என்று நிர்வாகத்திற்கு எதிராக தூண்டுவது பயங்கரவாதிகளுக்கு எளிதாகிவிடுகிறது. சில்லரை ஆதாயத்துக்காக உள்ளூர் அரசியல்வாதிகள் இவர்களை ஆதரிப்பது பிரச்சனையை மேலும் வளர்க்கிறது.

1971 ம் வருடம் நக்சல்பாரி என்ற மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரி அருகில் அமைந்துள்ள கிராமத்தில் இருந்து சிவப்பு பயங்கரவாத பி.டபிள்யூ,ஜி இயக்கம் நமது நாட்டின் பல மாநிலங்களில் ஊடுருவியது. கிராமப்புறங்களில் விவசாயத்தை நம்பி இருக்கும் மக்களுக்கு உரிய நேரத்தில் பணஉதவி என்பது பெரிய பிரச்சனை. இந்த நிலையை வைத்து மக்களை சுரண்டி பிழைப்பு நடத்தும் ஈட்டி வட்டிக்காரர்கள், மந்தமான நிர்வாகம், ஊழலில் தழைக்கும் அரசு ஊழியர்கள் இவை பயங்கரவாத காளான்களை வளர்க்கும் உரங்கள். இத்தகைய சூழலில் இளைஞர்களை தம்வசப்படுத்துவது பயங்கரவாதிகளுக்கு எளிதாகிறது. 1970, 80ல் தலைதூக்கி பரவிய இந்த சிவப்பு ஆதிக்கம் பல மாநிலங்களில் முக்கியமாக மேற்குவங்காளம், பிஉறார், ஜார்க்கன்ட், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ஒரிசா, ஆந்திரா, மஉறாராஷ்டிராவின் சில இடங்களில் வேறூன்றியது. வேறூன்றிய இடங்கள் வன்முறையே நடைமுறை என்ற அளவில் வன்முறை களங்களாக மாறின. பல மாநிலங்களை ஊடுருவிய இந்த வன்கள இடவெளி முன்னேற்றப் பாதையை தடுத்து நிறுத்தும் சிவப்பு விளக்குகளாக அமைந்துள்ளது. இந்த வருடம் முதல் ஐந்து மாதங்களில் பீஉறார், ஒரிசா, ஜார்க்கண்ட், சட்டீஸ்கள் மாநிலங்களைச் சேர்ந்த 162 பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் வட ஆற்காடு, தர்மபுரி மாவட்டங்களில் பயங்கரவாதம் தலைதுக்கியபோது எடுத்த கடுமையான பல்முனை நடவடிக்கையால் நக்சலைட்டுகள் முறியடிக்கப்பட்டனர். தமிழகத்திலும் ஆந்திரமாநிலத்திலும் எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கை மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக வைக்கப்படுகிறது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் கொடைக்கானலில் நவீன் என்ற பிரஷாந்த் மற்றும் இந்த வருடம் வெகுநாட்களாக தலைமறைவாக இருந்த சுந்தரமூர்த்தி, தமிழ்வாணன், நொண்டி பழநி போன்றவர்கள் தமிழக போலிஸின் க்யூ பிராஞ்ச் பிரிவினரது தீர்க்கமான நடவடிக்கையால் பிடிபட்டனர்.

மக்களுடைய பிரச்சனைகளை முன்வைத்து அவர்களுக்கு நியாயம் கிடைக்க போராட்டம் என்ற போர்வையில் தாக்குதலில் ஈடுபடும் இத்தகைய கொடுமைக்காரர்களை எதிர்கொள்வதில் பல பிரச்சனைகள் உள்ளன. பெண்களையும், குழந்தைகளையும் பலிக்கடாக்களாக முன்வைத்து ஒளிந்து தாக்குதல் நடத்தும் கயவர்களை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் நடத்தும் எதிர்தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியாக வாய்ப்புள்ளது. அதையே தமக்கு சாதகமாக வைத்து மேலும் நிர்வாகத்தின் மீது பிரச்சாரம் செய்வதற்கு கணைத்துளிகள் கிடைத்து விடுகிறது. மனித உரிமைகள் பாதுகாப்பு என்று பறைசாற்றிக் கொண்டு அமைக்கப்பட்ட தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக களத்தில் இறங்கி போராடுவது முடிவில் மறைமுகமாக பயங்கரவாதிகளுக்கு சாதகமாக அமைவது கண்கூடு. இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு கவனமாக மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாப்புப் பணியினரின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

கண்ணிவெடி வைத்து மறைமுகமாக தாக்குதல் நடத்துவது கொரில்லா போர் முறையின் முக்கிய அம்சமாகும். போர் தொடுப்பதில் சில விதிமுறைகள் இருக்கின்றன. சம்பரதயாத்திற்கும் போர்விதிகளுக்கும் கட்டுப்படாத முறையற்ற யுத்தம் கொரில்லா முறைப்போர் எனலாம். இத்தகைய தாக்குதலை முறியடிப்பதற்கு கொரில்லாவினர் தொடுக்கும் அதே முறையை பின்பற்றினால்தான் வெற்றியடைய முடியும். பயங்கரவாதிகள் தங்களது பல முயற்சிகளில் ஒருமுறை வெற்றிபெற்றாலும் காவல்துறைக்கு பெரிய பின்னடைவு. காவல்துறை ஒவ்வொரு முறையும் தாக்குதலைத் தவிர்ப்பதில் வெற்றியடைய வேண்டும். இது சராசரி கணக்கை விஞ்சி சாதிக்கவேண்டிய குறியீடு.
எங்கு சம்பவம் நிகழ்ந்தாலும் உடனடியாக சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர் என்று தான் செய்திவரும். அதுதான் மக்களின் எதிர்பார்ப்பும் கூட. ஆனால் கொரில்லா முறையில் போர்த்தொடுக்கும் பயங்கரவாதிகளை எதிர்கொள்ள சாதாரண நடைமுறைகள் பயன்படாது. அதிலும் வனப்பகுதியிலும், மலைப்பகுதியிலும் ஒளிந்து தாக்குபவர்களை திட்டமிட்டு சமயோஜிதத்தோடு எதிர்தாக்குதல் நடத்தவேண்டும்.

வனப்பகுதியில் வீரப்பன் நடத்திய தாக்குதலுக்கும், சட்டீஸ்கர் காங்கர் மாவட்ட தாக்குதலுக்கும் நிறைய ஒற்றுமை காணமுடிகிறது. முதலில் பாதுகாப்புப் படையினரை உசுப்பும் விதத்தில் ஒரு சிறிய தாக்குதல் நடத்தி அவர்களை ஈர்ப்பதற்கு பயங்கரவாதிகள் தமது நடமாட்டத்தை ஒரு பகுதியில் வெளிப்படையாக காட்டிக் கொள்வார்கள். இவர்களது நடமாட்டம் பற்றிய தகவல் காவல்துறைக்கு வரும். அவர்களும் அரிய சந்தர்ப்பம் கிடைத்தது என்று எதிர்தாக்குதலுக்கு விரைந்து செல்வார்கள். காவல்துறையின் இந்த அணுகுமுறைக்கு இரண்டு காரணங்கள் உண்டு. கிடைத்த தகவலை செயலாக்க வேண்டும் என்ற ஆர்வம், உரிய நேரத்தில் செல்லவில்லை என்றால் ஏன் உடனடியாக செயல்படவில்லை என்ற கேள்வி எழும்.

வீரப்பன் பர்கூர் காட்டுப்பகுதியில் அதிடிப்படை நுழையமுடியாத வகையிலும் பன்முனைத் தாக்குதலுக்கு உட்படுத்தவும் பல இடங்களில் வெடிப் பொருட்களை புதைத்து பேட்டரி மூலம் இயக்குவதற்கு தயார் நிலையில் வைத்திருந்தான். 1993ம் ஆண்டு ஏப்ரல் மாத சம்பவத்தில் வீரப்பன் அதிரடிப்படையினரை கிளரும் வகையில் அவர்களைப்பற்றி தரக்குறைவாக செய்தியை பரப்பினான். அவனுக்குத் தெரியும் அதிரடிப்படைக்கு உளவு சொல்பவர்கள் மூலம் இச்செய்தி அவர்களுக்கு சென்றடையும் என்று. அவன் எதிர்பார்த்தது போல் அதிரடிப்படை கண்காணிப்பாளர் தலைமையில் தேடுதல் வேட்டையில் இறங்கினர். வீரப்பன் விரித்த வலையில் சிக்கினர்.

ஜுன் 26ஆம் தேதி சட்டீஸ்கரில் நடந்த மாவோயிஸ்ட் தாக்குதலும் இவ்வாறே நிகழ்ந்தது. அவர்களது கை ஓங்கி உள்ள இடம் தாண்டேவாடே என்ற பகுதி. சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் மதன்வாடா என்ற கிராமத்தில் பாதுகாப்புப் படையினர் புதிய கண்காணிப்பு செக்போஸ்ட் அமைத்திருந்தனர். அந்த செக்போஸ்டிலிருந்து காலைக் கடனுக்குச் சென்ற இரு காவலர்களை கடத்திச் சென்றனர். இது தொடர்பாக பாதுகாப்புப் படையினர் பெரிய அளவில் எதிர் தாக்குதல் நடத்துவார்கள் என்று மாவோயிட்டுகள் காத்திருந்தனர். அவர்களது எதிர்பார்ப்பு வீணாகவில்லை. எஸ்.பி தலைமையில் பாதுகாப்புப் படையினர் வனப்பகுதிக்கு விரைந்து சென்றனர். கண்ணி வெடித் தாக்குதலில் மாண்டனர்.

பயங்கரவாத எதிர்முனை தாக்குதல் மற்றும் வனப்பகுதியில் கொரில்லா தாக்குதல் ஆகியவற்றிற்கு பயிற்சி அளிக்கும் ராணுவப்பள்ளியில் போதகராக இருக்கும் ஓய்வு பெற்ற ராணுவ தளவாய் போன்வார் என்பவர் இந்த தாக்குதல் நிகழாமல் தடுத்திருக்கலாம் என்றும் காட்டுப்பகுதியில் எதிர் தாக்குதல் நடத்தும்பொழுது வாகனங்களை உபயோகப்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளார். மேலும் ‘ வி‘ வடிவில் பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கையாக முன்னேற வேண்டும் என்ற அடிப்படை விதிகள் கடைப்பிடிக்கர்ததை குறை கூறுகிறார். எவ்வாறு போக்குவரத்து விதிகள் அனுசரிக்கப்படாவிட்டால் விபத்து நிகழுமோ அவ்வாறு கொரில்லா போர்முறைகள் கடைபிடிக்காவிட்டால் இம்மாதிரி உயிரிழப்பு ஏற்படும் என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் வன்கள இடவெளியில் இயங்கும் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள், எல்லைக்கடந்த பயங்கரவாத இயக்கமான லக்ஷர்-இ-தோய்பாவோடு தொடர்பு ஏற்படுத்தியுள்ளனர் என்பது கவலைக்குரிய விஷயம். பயங்கரவாதம் முளையிலேயே கிள்ளி எரியப்படவேண்டும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் பிரச்னைகள் வளர்ந்துவிடுகிறது. முதலில் நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம் காட்டுகிறது. பல உயிர்கள் பலியான பிறகுதான் விழித்துக்கொண்டு செயல்படுகிறது. மேற்கு வங்காளம், மிதினிபூர் மாவட்டம் லால்காரில் பாதுகாப்புப் படையினர் எடுத்த வலிமையான நடவடிக்கை இதற்கு எடுத்துக்காட்டு. நிர்வாகத்தை உள்ளே நுழையவிடாமல் அப்பாவிப் பொதுமக்களை முந்நிறுத்தி முதலில் போராடிய மாவேயிஸ்டுகள் முழுமையான அதிரடிப்படையினரின் பதிலடியில் சுருண்டுவிட்டனர்.
பொதுமக்களும் எங்கு பலம் இருக்கிறதோ அங்குதான் சாய்வார்கள். பயங்கரவாதிகள் ஆதிக்கம் அதிகமாக இருந்தால் பயத்தில் காவல்துறையோடு ஒத்துழைக்க அஞ்சுவார்கள். வலிமையான நிர்வாகம் பாதுகாப்புப் படையின் மூலம் பயங்கரவாதிகளை எதிர்த்தால் பொதுமக்கள் நிர்வாகத்தோடு இணைந்து அமைதி ஏற்பட ஒத்துழைப்பார்கள். பஞ்சாப், அஸ்ஸாம், மேற்கு வங்காளம் போன்ற பல மாநிலங்களில் இந்நிலையை காணமுடியும்.
பலநூதன முறைகளில் வெடிமருந்து பயங்கரவாதிகளால் கையாளப்பட்டு பெருத்த சேதம் விளைவிக்கப்படுகிறது. கடிகாரமுள் மூலம் மின்இணைப்பை குறித்த நேரத்தில் ஏற்படுத்தி அதனால் உண்டாகும் பொறிமூலம் வெடிக்கவைப்பது, அழுத்தம் மூலமாகவும் தொலைவில் இருந்து கதிர் அலைகள் மூலமாகவும், செல்போன் மூலமாகவும் கண்ணிவெடிகளை இயக்க முடியும். 1867ஆம் வருடம் வெடிமருந்தைக் கண்டுபிடித்த ஸ்வீடன் நாட்டைச் சார்ந்த ஆல்பிரட் நோபல் இந்த அளவிற்கு உலகிற்கும் மனித சமுதாயத்திற்கும் அவரது கண்டுபிடிப்பு கேடுவிளைவிக்கும் என்று எண்ணியிருக்கமாட்டார். அதனால் தானோ என்னவோ அவரது பெயரில் பலதுறைகளில் கண்டுபிடிப்புகளுக்கு கொடுக்கப்படும் நோபல் பரிசு உலக அமைதிக்காகவும் அளிக்கப்படுகிறது.

சுதந்திரத்திற்கும் ஒற்றுமைக்கும் ஊறுவிளைவிக்கும் பயங்கரவாதத்தை முறியடிக்க ஒருங்கிணைந்த முயற்சி எடுக்க வேண்டும். நிரந்தர விழிப்புணர்வே நமது சுதந்திரம் நிலைப்பதற்கும் நாட்டின் பாதுகாப்பிற்கும் நாம் அளிக்கக்கூடிய அர்ப்பணிப்பு.

This Article is published in Dinamani Newspaper on 22.08.2009

Tuesday, August 4, 2009

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் . . . . .


குற்றம் புரிபவர்களை சமுதாயம் ஒரு சுமையாகவே பார்க்கிறது. குற்ற நிகழ்வுக்கு சமுதயாத்தில் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவிதத்தில் காரணமாகிறோம் என்பதை மறந்து விடுகிறோம். குற்றவாளிகளை சிறை என்ற கூண்டில் அடைப்பதோடு நாம் திருப்தி அடைந்து விடமுடியுமா? குற்றம் புரிபவர்களை நல்வழிப்படுத்தி மாற்றுப்பாதை வகுப்பது சிறை நிர்வாகத்திற்கு மட்டுமின்றி சமுதாயத்திற்கும் முக்கிய பங்கு இருக்கிறது.

சிறைவாசம் அது ஒரு அலாதியான வாசம். அங்கு அடிக்கக்கூடிய காற்று, க்ரோதம், துவேஷம், விரோதம் இவற்றின் கலவை. அங்கு பணியில் இருக்கும் காவலர்களுக்கும், அவர்கள் பாதுகாக்கும் இல்லவாசிகளுக்கும் வித்தியாசம் பெரிதாக ஒன்றுமில்லை. நிர்வாகத்தால் ஒருசாரார் பராமரிக்கப்படுகின்றனர் மற்றொருவர் சம்பளம் பெறுகின்றனர். உண்மை, நேர்மை என்பதற்கு இடமில்லை. சிறைக்கு வருபவர்களை கொடுமைப்படுத்துவதில் அலாதி இன்பம், தவறு செய்தவரை பிரம்பால் அடித்து கை வலிக்கிறது என்று சலிப்போடு தற்பெருமை அடித்துக் கொள்ளும் வீரர்கள் இத்தகைய நிர்வாகத்தை சீர்செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு 1832 முதல் பல சிறை சீர்திருத்த கமிஷன்கள் ஏற்படுத்தப்பட்டு சிறை நிர்வாகம் குற்றவாளிகளை திருத்த வேண்டும் ‘தவறு செய்தவன் வருந்தியாகணும், தப்பு செய்தவன் திருந்தியாகணும்’ என்ற அடிப்படையில் அவர்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டுள்ளது.

ஒரு நிர்வாகத்தை மேம்படுத்த முயற்சிகள் எடுப்பது பொறுப்புள்ளவர்களின் கடமை. எந்த ஒரு மாறுதலுக்கும் தட்ங்கல் இருக்கத்தான் செய்யும். பொதுவாக மாறுதலை விரும்பாது இருந்த இடம் பள்ளம் என்று பழகிப்போனதில் சுகமும், பாதுகாப்பும் நாடுவது மனித இயல்பு. மாற்றுப்பாதையில் என்னென்ன சவால்களை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சம், புதிய நுட்பங்களை அறிவதில் எடுக்கவேண்டிய முயற்சிகளை எண்ணி சோம்பிக்கொண்டு தவிர்க்கும் மனப்பான்மை, என்று மேம்படுத்துதலுக்கு தடைக்கற்கள் பட்டியல் கண்க்கில் அடங்காதது. பல சிறை சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருத்தலுக்கும், எடுக்க எத்தனித்தாலும் முடிக்காமல் போவதற்கும் காரணமாக அமைந்துவிடுகின்றன.

குற்றம்புரிபவர்களை திருத்தமுடியாது, நாய் வாலை நிமிர்த்த முடியாது என்று அசையாத நம்பிக்கை கொண்டவர்கள் பலர், குற்றம் புரிந்தவர்கள் வருத்தத்தை அனுபவிக்க வேண்டும் என விரும்புபவர்கள் சிலர். குற்றவாளிகள் கொடுமைக்கு உட்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்போர் சிலர். குற்றவாளிகளுக்கு ஏன் சலுகைகளும் அடிப்படை வசதிகளும் கொடுக்க வேண்டும் என கேள்வி எழுப்புபவர்கள் ஒரு சாரர். தாம் முயற்சி எடுத்து குற்றம் புரிந்தவர்களுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனைப் பெற்றவர் முழுமையாக அனுபவிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் காவல்துறை. அவர்களும் மனிதர்கள், அவர்களது மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்கு மாற்றுப் பாதை அமைத்து சமுதாயத்தோடு இணைவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நல்லுணர்வோடு உள்ளவர்கள் வெகு சிலரே.

குற்றங்கள் நிகழ்வதற்கான காரணம், குற்றங்களில் ஏன் சிலர் ஈடுபடுகிறார்கள் என்பதற்கு உளவியல் பொருளாதார ரீதியாக பல அனுமானங்களை முன்வைக்கலாம். மேலை நாடுகளில் வசதி இருந்தும் குற்றங்களில் ஈடுபடுவதையே தொழிலாகக் கொண்டுள்ளவர்கள் பலர். ஆனால் நமது நாட்டில் போதாமையினால் தான் பலர் குற்றங்களில் உழல்கின்றனர். படிப்பறிவில்லாததினால் நல்லது கெட்டது தெரிய வாய்ப்பின்றி சுலபமாக குற்றப்பாதையில் ஈர்க்கப்படுகின்றனர். ஏழை மக்கள், சமுதாயத்தில் நலிந்த பிரிவினர் குற்றவலையில் சிக்கி சிறையிலடப்படுகின்றனர். சட்டம் தனது கடமையை இத்தகைய மக்கள் மீது மட்டும் எவ்வாறு குறைவில்லாமல் செய்கிறது?

இந்திய சிறைச்சாலைகளில் உள்ள சீர்குலைந்த நிலையைப் பார்த்து முன்னாள் தலைமை நீதிபதி திரு வெங்கடாசலய்யா அவர்கள் சிறைச்சாலைகள் குற்றவாளிகளை சீர்திருத்தும் மையம் என்ற உயர்ந்த நிலைப்பாடு சிதைந்து விட்டது, சிறைச்சாலைக்கு வரும் புதுமுக குற்றவாளி தேர்ந்த முதுகலை பட்டதாரியாக வெளிவருகிறார் என்று மனம் வெதும்பி கூறியிருக்கிறார். எவ்வளவோ சீர்திருத்த நடவடிக்கைகள் தனிப்பட்டமுறையில் அதிகாரிகளால் சில மாநிலங்களில் எடுக்கப்பட்டிருந்தாலும் இது முழுமையாக நடைமுறையில் வரவில்லை. “ஜாண் ஏறுதல் முழம் சறுக்கல்” என்ற நிலையில் உள்ளது. அரசு நிர்வாகம், குற்றவியல் நிர்வாகம், சிறைத்துறை, காவல்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமுதாய நலம் விரும்புவோர் என்று பலதரப்பட்டவரின் ஒத்துழைப்பின்றி சிறை தீர்திருத்த நடவடிக்கைகள் முழுமையடையாது.

சுதந்திர போராட்ட வீரர் திரு குமரப்பா பலமுறை ஆங்கிலேயர் ஆட்சியில் சிறையிடப்பட்டிருக்கிறார். அவர் தனது சிறை அனுபவங்களைப் பற்றி கூறுகையில் சிறை அமைப்பு, சிறைப்பணியாளர்களின் அணுகுமுறை, நிர்ணயிக்கப்பட்ட பணிகள், நடைமுறைகள், இவையாவும் ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்கப்பட்டால்தான் சிறைச்சாலை என்ற அமைப்பு முழுமையடையும் சமுதாயத்திற்கு வலிமை சேர்க்கும் என்று விவரித்துள்ளார்.

சுதந்திர இந்தியாவில் ஜெயில் நிர்வாக நிபுணர் டாக்டர் ரெக்லஸ் 1951ஆம் வருடம் அமெரிக்காவிலிருந்து வ்ந்து சிறை நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும், குற்றவாளிகளை திருத்துவதற்குமான வழிமுறைகள் பற்றியும் கொடுத்த பரிந்துரைகளின் அடிப்படையில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. 1956 ஆம் வருடம் அகில இந்திய ஜெயில் விதிகள் குழுமம் அமைக்கப்பட்டு இந்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் பல நிலையாணைகள் மாற்றப்பட்டு சிறை நிர்வாகம் சீரமைக்க வழிவகுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தான் சிறைகள் விரிவாக்கம், சுகாதார சூழல், காற்று, தண்ணீர் வசதி, நிலையான உணவு, மருத்துவவசதி மேம்படுத்தப்பட்டது.

1978 ஆம் வருடம் தமிழகத்தில் முன்னாள் ஐசிஎஸ் அதிகாரியும், ஓய்வுபெற்ற பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு நரசிம்மன், அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன் தீர்க்கமான பரிந்தரைகளை வழங்கியது. இந்த கமிஷனில் உறுப்பினராக முக்கிய பங்கு வகித்தார் காவல்துறை ஐஜி திரு டயஸ், குற்றவியல் மற்றும் சமூகவியல் நாட்டம் கொண்டவரும் பின்னர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியாகப் பணியாற்றிய திரு டயஸ் அவர்கள் பல முற்போக்கு சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். அதில் முக்கியமானது இல்லவாசிகளை சீர்திருத்தவது, மாற்று வாழ்க்கை அமைத்தல், தொழில் கல்வி கற்பித்தல் போன்றவை அடங்கும். சிறைகளில் பஞ்சாயத்து முறை கொண்டுவர வேண்டும், இல்லவாசிகளுக்கு ஜனநாயக உணர்வு புகட்ட வேண்டும் என்ற பரிந்துரையும் முக்கியமானது.

தமிழகத்தில் மத்திய சிறைகள் உட்பட 134 சிறை இல்லங்களில் 20,000 இல்லவாசிகளை வைப்பதற்கு இடம் இருக்கிறது. குற்றவாளிகள் நல்வழிப்படுத்துவதற்கும், புனர்வாழ்வு அளிப்பதற்கும் கல்வி, அவர்களுக்கு உகந்த வேலைக்கான பயிற்சி ஆகிய இரண்டு ஏற்பாடுகள் தான் முக்கியமானது. கல்வி ஒன்று தான் அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் உண்மையான சுயமரியாதையையும் அளிக்கவல்லது. இதைக் கருத்தில் கொண்டு கடந்த ஒரு வருடம் தமிழக சிறைகளில் கல்வியை பிரதானமாகக் கொண்டு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

காவல்துறையினரே சமூக சீர்திருத்தவாதிகளாக பணிபுரியவேண்டும் என்று விரும்பிய காந்தியடிகள் சிறைச்சாலைகள் நலம் பேணும் மருத்துவமனைகளாக உள்ளிருக்கும் இல்லவாசிகளை அன்போடும் பரிவோடும் பராமரிக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார். இல்லவாசிகளது மனநோய்க்கு கல்வியைத் தவிர வேறென்ன சிறந்த மருந்து இருக்க முடியும்? தமிழகத்தில் உள்ள ஒன்பது மத்திய சிறைகளிலும், மூன்று விசேஷ பெண்கள் சிறைகளிலும் ஆரம்பப் பள்ளியும், இடைநிலைப் பள்ளியும் இயங்குகின்றன. இந்திராகாந்தி திறந்த வெளிப் பல்கலைக்கழகத்தின் முலம் பல பாடங்களில் டிப்ளமோ பயிற்சியும், பட்டப்படிப்பு, முதுகலைப்பட்டம் வரை பயில்வதற்கு வசதி செய்யப்பட்டள்ளது. திருநெல்வேலி மனோன்மணி சுந்தரனார் பல்கலைக் கழகம் பட்டப்படிப்புகளுக்கும், முதுகலைப்பட்டம் பெறுவதற்கும் பாளையங்கோட்டை சிறையில் பயிற்சி அளிக்கிறது. நூதன முறையில் 2008-ம் வருடம் ஜுலை மாதம் பாளையங்கோட்டை சிறையிலுள்ள 17 இல்லவாசிகளுக்கு சிறப்பு பட்டமளிப்பு விழா பல்கலைக் கழக துணைவேந்தர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு பட்டம் வழங்கப்பட்டது. இந்த முதன்மை நிகழ்ச்சி மற்ற இல்லவாசிகளுக்கு உந்துதலாக அமைந்து சுமார் 600-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு பட்டப்படிப்பு, பட்டய பயிற்சிக்கு பதிவு செய்தனர். அவர்களது மேல்படிப்பு பயிற்சிக்காக சுமார் ரூ.7 லட்சம் சிறைத்துறை மூலம் செலவிடப்பட்டது.

கல்வி பயிற்றுவிக்கும் திட்டம் மேலும் விரிவாக்கப்பட்டு அனைத்து இல்லவாசிகளும் பயில்வதற்கு ஏதுவாக நூற்றுக்கு நூறு கல்வித்திட்டம் இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று கிளைச்சிறைகள் உட்பட 134 சிறை இல்லங்களிலும், கிளைச்சிறைகளில் 1500 இல்லாவாசிகள், மத்திய சிறைகளில் 4500 என மொத்தம் சுமார் 6000 இல்லவாசிகள் இந்தக் கல்வி இயக்கத்தில் பயனடைகின்றனர்.

எண்ணும் எழுத்தும் இரு கண்கள் போன்றவை என்றார் திருவள்ளுவர். கைநாட்டு ஒன்றே போட்ட பலர் எண்ணையும் எழுத்தையும் படிக்க முடிகிறது என்று ஆனந்தம் கொண்டனர். விடுமுறையில் செல்லும் போது மற்றவர் உதவியை நாடாமல் பஸ் ஏறி செல்லமுடிகிறது என்பதே தனது வாழ்வில் ஒரு பெரிய திருப்புமுனை என்றார் ஒரு இல்லவாசி. சிறை அலுவலர்கள் அரட்டல் மிரட்டலை விட்டு ஆசிரியர்களாக இல்ல வாசிகளுக்கு கல்வி புகட்டுகின்றனர். கல்வித் துறையினரோடு தொடர்பு கொண்டு மத்திய சிறை தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டு எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வும் நட்த்தப்பட்டது. எட்டாம் வகுப்பு தேர்வில் 76 இல்லவாசிகளும், பத்தாம் வகுப்பு தேர்வில் 100 இல்லவாசிகளும் பங்குகொண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 84 சதவிகிதம் தேர்வு பெற்று சாதனை படைத்தனர். தினகரன் என்ற பாளையங்கோட்டை சிறை ஆயுள் தண்டனை இல்லவாசி 66 சதவிகிதம் மதிப்பெண் பெற்றது, எடுத்த முயற்சிகளுக்கு முத்தாய்ப்பாக அமைந்தது. கோவில்பட்டி கிளை சிறை உதவி ஜெயிலர் திரு சித்திரைவேல் தனிப்பட்ட முறையில் கல்வி பயிற்றுவிக்க சிறப்புபடிவங்கள் அமைத்து எல்லோருடைய பாராட்டையும் பெற்றார். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையைச் சேர்ந்த தமிழக மைய அதிகாரி முனைவர் ராஜன் தலைமையில் மிக சிறப்பாக சர்வசிக்ஷா அபய்யன் மூலம் உதவி அளிக்கின்றனர். இதுதான் முழுமையான உண்மையான சிறை சீர்திருத்தம் என்று பலரது பாராட்டையும் சிறைத்துறை பெற்றது.

சிறைச்சாலை ஒரு சிந்தனைக் கூடம் என்றார் அறிஞர் அண்ணா. அவர்கள் தனது சிறை அனுபவங்கள் அடங்கிய புத்தக்த்தில் சிறையிலிருந்து வெளியே செல்பவர்களை ‘நல்லவர்களாக‘ மாற்றவேண்டும் என்பது எவ்வளவோ முக்கியமானதோ, அவ்வளவு முக்கியம் வெளியே உள்ளவர்கள் சிறைக்கு வரத்தேவையில்லாத நிலையை ஏற்படுத்துவது. குற்றம் செய்யவேண்டிய நிலையையும் மனப்போக்கையும் மாற்றி அமைக்க சமூகத்தில் பெரியதோர் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் தனக்கே உரிய நயத்துடன் சிறைப்பணியாளர்களின் மனப்போக்கையும், அவர்கள் பணிகள் செய்யும் விதத்தில் உள்ள முரண்பாடுகளையும் விவரிக்கின்றார். இந்த முரண்பாடுகள் களையப்படவும், அவர்கள் தலைநிமிர்ந்து பணிபுரிய தொடர்ந்து அவர்களை செம்மையான சிறை சீர்திருத்த நடவடிக்கையில் ஈடுபடுத்த வேண்டும்.

குற்றவாளியை திருத்துதல் அவர்களுக்கு சமுதாய நற்பண்புகள் பயிற்றுவித்தல், புனர்வாழ்வு அமைத்தல், சமுதாயத்தோடு இணைத்தல் இவையே குற்றங்களை களையவல்ல நான்குமுனை கணைகள். அவையே தான் சிறை சீர்திருத்த கட்டமைப்பை தாங்கவல்ல தூண்கள்.


This Article Published in Dinamani Newspaper on 03.08.2009

Saturday, July 25, 2009

உள்ளொளி


சிறையிலுள்ள இல்லவாசிகளுக்காக உள்ளொளி என்ற இதழ் ஒன்றை தொடங்கியிருந்தோம்.
அந்த இதழில் எழுதிய தலையங்கத்தை இங்கு பிரசுரிக்கிறேன்.

தலையங்கம்

மனிதன் ஒரு நாணல். இயற்கையில் உள்ளவற்றில் மிகவும் பலகீனமானவன் அவனே. ஆனால், அவன் ஒரு சிந்திக்கும் நாணல். சிந்தனையில்தான் மனிதனின் பெருமை பொதிந்துள்ளது. மனிதனின் மீட்சிக்கு நாம் நமது கற்பனை, சிந்தனை தவிர வேறொன்றையும் சார்ந்திருக்க முடியாது’ - பாஸ்கல்.
பாஸ்கலின் உலகப் புகழ்பெற்ற இந்த மேற்கோள், நமது வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புள்ளது. சிந்தனைக்கு நாம் அறிஞர்களையும் படைப்பாளிகளையும் புத்தகங்களையும் தான் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. பொரும்பாலானோருக்கு வாசிப்பு என்பது எளிதில் அல்லது மந்த கதியில் நிகழும்; முயற்சி தேவைப்படாத ஒரு பழக்கமாக இருந்துவருகிறது. வாசகனின் முயற்சியை வேண்டும், அதன் மூலம் வாசகனின் அகவிஸ்தரிப்பைச் சாத்தியமாக்கும், வாழ்க்கைக்கும் இலக்கியத்திற்கும் தத்துவத்திற்கும் சமூகத்திற்குமான உறவை எடுத்துகாட்டும் படைப்புகள் நமக்கு அவசியம் என்பதால் தமிழின் சிறந்த பக்கங்கள் இனி உள்ளொளி அலங்கரிக்கும்.

வாசிப்பு என்பது இயந்திரகதியில் நிகழும் செயல் அல்ல; மாறாக மன ஒழுங்கை வலியுறுத்தும், படைப்புச் செயலில் பங்கும் கொள்ளும் ஒரு செயல்பாடு. எண்ணங்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன.

இதழைப் படிக்க கீழ் காணும் சுட்டியை தொடரவும்..

Tuesday, July 7, 2009

அம்மா பரதேவதே! சுஜாதா எங்கே இருக்கார்?


சமீபத்தில் நண்பர் பாரதி மணி எனது உறவினரான திரு.பூர்ணம் விசுவநாதனைப் பற்றி உயிர்மை இதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்ததோடு அதை என் பார்வைக்கும் அனுப்பி வைத்தார். ஏதெதோ நினைவுகளை கிளர்த்தக்கூடிய இக்கட்டுரையை வாசகர்களின் பார்வைக்கு பிரசுரிக்கிறேன்.

-----------------------------

ஐம்பது வருடங்களுக்கும் மேலாக பூர்ணம் விசுவநாதனுடனான நட்பு நீடித்தது. நட்பு என்றால் தினமும் ஒருதடவை நேரிலோ அல்லது போனிலோ ‘என்னையா, செளக்கியமா?’ என்று குசலம் விசாரிக்கும் சினேகிதமல்ல. வருடத்திற்கொரு முறை சந்தித்துக்கொண்டாலும், முகமும் கண்களும் மலர, அவருக்கே சொந்தமான அந்தச்சிரிப்புடன், ‘என்ன மணி, எப்படியிருக்கேள்?’ என்று இருகைகளையும் பிடித்துக்கொண்டு கேட்கும்போது, அவரை நேற்றுத்தான் சந்தித்தது போலிருக்கும். இடைவெளியைக்கடந்த நட்பு அது. காம்பஸ் வைத்து வரைந்ததுபோல் வட்ட முகம். கண்ணாடிக்குப்பின்னாலிருந்து சிரிக்கும் கண்கள். அவருடன் நெருங்கிப்பழகியவர்களுக்கெல்லாம் இதே அநுபவம் இருந்திருக்கும். போனமாதம் மறைந்த திரு.பூர்ணம் விசுவநாதனைபற்றி சில நினைவுகளை உயிர்மை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளலாமென்று நினைக்கிறேன்.

தில்லி ஆல் இந்தியா ரேடியோ செய்திப்பிரிவில் தமிழ்ச்செய்தி வாசிப்பாளராக பலவருடம் பணிபுரிந்தார். நமக்கெல்லாம் தெரிந்த விஷயம் இந்தியா சுதந்திரமடைந்ததை தமிழில் உலகுக்குச்சொன்னவர். இவருடன் பணியாற்றிய ராமநாதன் (நடிகர் சரத்குமாரின் தந்தை), தர்மாம்பாள், வெங்கட்ராமன், நாகரத்தினம் இவர்களது குரல்கள் -- தினமும் காலை ஏழேகால் மணிக்கு ‘ஆல் இண்டியா ரேடியோ... செய்திகள்... வாசிப்பது பூர்ணம் விஸ்வநாதன்’... செய்தியை பாதியிலிருந்து கேட்கத்தொடங்கும் நம்ம ஊர் பெரிசுகள் குரலை வைத்தே, ‘ஓ இன்னிக்கு பூர்ணமா?’ என்று கேட்குமளவிற்கு, டி.வி. வராத அந்தக்காலத்தில் தமிழ்நாட்டில் பரிச்சயமான குரலாக இருந்தது. கையில் ரிமோட்டுடன் 150 சானல்கள் கொண்ட இடியட் பாக்ஸ் இல்லாத காலத்தில் தமிழ்ச் செய்திகளுக்கு, காலையில் 5,30 மணிக்கு (தென்கிழக்காசிய சேவை), காலை 7,15, மதியம் 1.30, மாலை 7.15 மணிக்கு இவர்களை விட்டால் வேறு மார்க்கமில்லை! ஜனாதிபதியோ முக்கியமான மத்திய அமைச்சரோ இறந்தாலும், அந்தச்செய்திக்காக நாம் காத்திருக்கவேண்டும். இப்போதைய சானல்களில் Breaking News என்ற சாக்கில் அரைத்த மாவையே அரைப்பதுபோல் 24 மணிநேரமும் ‘செய்திகளை உடைப்பது’ போன்ற வியாபார உத்திகள் அப்போதைய அப்பாவி ஆல் இந்தியா ரேடியோவுக்கு தெரிந்திருக்கவில்லை. தமிழ்ச்செய்தி வாசிப்பாளர் தர்மாம்பாள் இலங்கைத்தமிழ் ரசிகர்கள் அழைப்பில், தில்லியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கே போய்வந்தவர்! போய்விட்டு வந்து ஆறுமாதத்துக்குப்பிறகும், நேரில் பார்ப்பவர்களிடம், தன் சிலோன் விஜயத்தைப்பற்றி அரைமணி நேரம் அறுக்காமல் விடமாட்டார்! யாரும் அவர் எதிரே மாட்ட பயப்படுவார்கள்.

நெல்லை மாவட்டத்தில் பிறந்த இவருக்கு பூர்ணம் என்பது அவர் தந்தையின் பெயரான பூர்ண கிருபேசுவரன் என்பதன் சுருக்கம். பூர்ணம் விசுவநாதனின் மூத்த சகோதரர், பூர்ணம் சோமசுந்தரம் ரேடியோ மாஸ்கோ தமிழ்ப்பிரிவின் தலைவராக இருந்தார். அங்கேயே ஒரு ரஷ்யப்பெண்மணியை மணம் புரிந்துகொண்டு மாஸ்கோவிலேயே செட்டிலாகிவிட்டார். ஐம்பதுகளில் ஒரு தமிழர் சேலையுடுத்திய வெளிநாட்டு மனைவியிடம் ரஷ்யமொழியில் பேசுவது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இன்னொரு சகோதரர் ஐம்பதுகளில் எழுத்தாளராகப் புகழ் பெற்றிருந்த உமாசந்திரன் (சென்னை டி.ஜி.பி.யாக இருந்த நடராஜ், ஐ.பி.எஸ். அவர்களின் தந்தை). இவரது கதையைத்தான் டைரக்டர் மகேந்திரன் ‘முள்ளும் மலரும்’ திரைப்படமாக எடுத்தார். விசுவநாதனின் தங்கை பூர்ணம் லட்சுமி தில்லி ஆல் இந்தியா ரேடியோ External Services Division தினமும் காலை 5.30 - 6.30 மணிக்கு ஒலிபரப்பும் தென் கிழக்காசிய நேயர்களுக்கான தமிழ்ப்பிரிவில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்தார். தில்லியில் அவர் மறையும்வரை எனக்கு குடும்ப நண்பர். திருமண வாழ்க்கையில் விருப்பமில்லாமல் பெண்ணியத்தின் இலக்கணமாக இருந்தவர். என் வயதுள்ள யாழ்ப்பாண, மலேஷிய, சிங்கப்பூர் தமிழ் ரசிகர்களுக்கு பூர்ணம் லட்சுமியின் குரலும் பரிச்சயமாக இருந்தது. ‘....அடுத்ததாக வெள்ளவத்தை கார்த்திகேசு, கோலாலம்பூர் சிவசாமி, யாழ்ப்பாணம் சங்கரலிங்கம்......பினாங்கு பீர் முகம்மது.......ரங்கூன் ரமாதேவி ஆகியோர் விரும்பிக்கேட்ட பாடல் ’தூக்கு தூக்கி’ படத்திலிருந்து டி.எம். செளந்தரராஜன் பாடியது’........ என்று அவரது கணீரென்ற குரல் ஐம்பதைத்தாண்டிய அ. முத்துலிங்கம் போன்றோருக்கும் நினைவிருக்கலாம்.

1955-ல் நான் தில்லி போன இரு வாரங்களில், செளத் இந்தியா கிளப் ஆண்டுவிழா கலைநிகழ்ச்சியில் பூர்ணம் எழுதி நடித்த ஓரங்க நாடகம் இடம் பெற்றிருந்தது. நாடகத்திற்குப்பிறகு ’விலாசமில்லாத’ என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். பிறகு ஒரு நாள் ரேடியோ ஸ்டேஷனில் சந்தித்தபோது, ‘மணி, அடுத்த நாடகத்தில் உங்களுக்கும் ஒரு ரோல் இருக்கு. ரிகர்ஸலுக்கு வந்துடுங்க’ என்றார். நானும் அவர் நடிக்கும் ஓரங்க நாடகங்களில் பங்குபெற ஆரம்பித்தேன். தில்லியில் தமிழ் நாடகத்திற்கென்றே தனி அமைப்புகளாக எனது தட்சிண பாரத நாடக சபாவும், பூர்ணம் பங்குபெற்ற செளத் இந்தியன் தியேட்டர்ஸும் பின்னால் தான் தொடங்கப்பட்டன.

நான் தில்லி போன மறுமாதமே AIR External Services Division தமிழ்ப்பிரிவு தினமும் காலை 5.30 முதல் 6.30 வரை ஒலிபரப்பும் நிகழ்ச்சியில் இடம்பெறும் ரேடியோ நாடகங்களில் பங்குபெற கான்ட்ராக்ட் வர ஆரம்பித்தது. மாதத்தில் ஐந்தாறு நாடகங்களில் கலந்துகொள்வேன். தில்லி போகுமுன்னரே திருவனந்தபுரம் திருச்சி ரேடியோ நிலையங்களில் ஆடிஷனில் தேர்ந்து நடித்து வந்தவன். அப்போதெல்லாம் ரிக்கார்டிங் வசதி கிடையாது. செய்தி வாசிப்பதுபோல நாடகங்களும் லைவ் தான். அந்த நாடகங்களை பூர்ணம் லட்சுமி, தர்மாம்பாள், என். ஆர். ராஜகோபாலன் போன்றவர்கள் இயக்குவார்கள். தில்லி குளிர்காலத்தில் அதிகாலை மூன்றுமணிக்கு அலாரம் வைத்து எழுந்து, வெடவெட குளிரில் குளித்து தயாராகி, வாசலில் அழைத்துப்போக வரும் AIR Van அடிக்கும் ஹாரனுக்காக காத்திருக்கவேண்டும். உலகமே நிச்சிந்தையாகத் தூங்கும் நேரமது. போகும் வழியில், பூர்ணம் லட்சுமியையும், வினே நகரிலிருந்த பூர்ணத்தையும் மற்ற நடிகர்களையும் ஏற்றிக்கொள்ளும். வழியில் அண்ணன்-தங்கை பேசிக்கொள்வதைக் கேட்டால், அவர்கள் பாசம் இழையோடும். ரேடியோ ஸ்டேஷன் போகும்வரை லட்சுமியின் ’கொல்’லென்ற சிரிப்பு (ஆமாம், இதென்ன சிரிப்பு?!) தொடரும். இந்த ஒருமணிநேர நிகழ்ச்சி 10 நிமிட தமிழ்ச்செய்தியுடன் தொடங்கும். அதனால் தன் மேசையில் தயாராக வைத்திருக்கும் ஆங்கிலப்பிரதியை தமிழில் மொழிபெயர்த்து தயாராக்க தமிழ் யூனிட்டை நோக்கி ஓடுவார் பூர்ணம்.

முன்பே ஒருதடவை வந்து ஒத்திகை பார்த்திருப்பதால், நாங்கள் அவசரமில்லாமல் ஸ்டுடியோவுக்கு போவோம். சரியாக ஐந்தரை மணிக்கு முகப்பு அறிவிப்பு முடிந்ததும் அடுத்த ஸ்டுடியோவிலிருந்து, விசு ‘ஆல் இண்டியா ரேடியோ.. செய்திகள்... வாசிப்பது பூர்ணம் விஸ்வநாதன்..’ என்று தன் கணீரென்ற குரலில் ஆரம்பிப்பார். அதற்குமுன் நாங்கள் இடையிலுள்ள கண்ணாடிச்சுவர் வழி கட்டைவிரலை உயர்த்தி ‘Best of Luck!’ சொல்லுவோம். நாடகத்துக்கு தேவையான பிரதிகளை காப்பி எடுத்து Copywriter பஞ்சாபகேசன் தயாராக வைத்திருப்பார். இவரை தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் பஞ்சாபகேசன் என்ற பெயரிலல்ல. இவர் தான் நடிகர் அர்விந்த் ஸ்வாமியின் தந்தையும், மெட்டி ஒலி போன்ற பல சீரியல்களில் அப்பா வேஷத்தில் நடிப்பவருமான டில்லி குமார் அவர்கள். தில்லி மேடையில் பூர்ணத்துடன் நிறைய நாடகங்களில் நடித்திருக்கிறார். ஸ்டுடியோ கடிகாரத்தின் மேல் இருக்கும் ON AIR என்ற சிவப்பு விளக்கு எரியும்போது, உலகத்தில் அனைவருமே தூக்கத்தை மறந்து, என் நாடகத்தைக்கேட்க ரேடியோ பெட்டிகள் முன் உட்கார்ந்திருப்பதாக கற்பனை செய்துகொள்வேன். ரேடியோ நாடகத்தில் பார்த்துப்படிப்பதால், வசனங்களை மனப்பாடம் செய்யவேண்டிய தேவையில்லை. ஒரு பக்கத்திலிருந்து அடுத்தபக்கத்துக்குப் போகும்போது, குனியாமல் பேசிக்கொண்டே மைக்கில் பேப்பர் சலசலப்பு சத்தமில்லாமல் கீழே நழுவவிடுவது ஒரு கலை. வாழ்க்கை வசதிகளை பெருக்கிக்கொள்ள, என் நேரத்தை வேலை செய்யும் கம்பெனிகளுக்கும், அது சம்பந்தமான பிரயாணங்களுக்கும் தாரை வார்த்துக்கொடுக்கும் வரை, தில்லியில் ஆயிரம் ரேடியோ நாடகங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். அவைகள் என் தில்லி வாழ்க்கையில் ரம்மியமான நாட்கள்.

நாடகம் முடிந்து, Duty Officer Room-க்கு வந்து தயாராக வைத்திருக்கும் நமது காசோலைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அவர் ரூமில் வைத்திருக்கும் நாலைந்து ஸ்பீக்கர்களிலிருந்து அப்போது ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஆங்கிலம், ஹிந்தி, மராட்டி, ஒரியா, பெங்காலி நிகழ்ச்சிகள் மொழி புரியாத ஓர் ஒலிக்கலவையாக எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும். அதை நாம் ஒருமணி நேரம் கேட்டுக்கொண்டிருந்தால், உத்தரவாதமாக பைத்தியம் பிடித்துவிடும். ஆனால் அதையெல்லாம் அவர் நாள் பூராவும் கேட்டாகவேண்டும். அவர் Duty! டூட்டி ஆபீசரல்லவா? மற்றவர்களுக்கெல்லாம் ரூ. 15 எனக்குமட்டும் ரூ. 20. ஏனென்றால் நான் 1948-லேயே திருவனந்தபுரம் ரேடியோ ஸ்டேஷனில் ஆடிஷன் ஆன ‘ஏ’ கிரேடு ஆர்ட்டிஸ்ட். மற்றவர்கள் வெறும் கையெழுத்து போட்டு காசோலையை வாங்கிக்கொள்வார்கள். எனக்குமட்டும் ரூ. 20 என்பதால் ரசீதில் ஒரு அணா ரெவென்யூ ஸ்டாம்ப் ஒட்டி கையெழுத்துப்போடவேண்டும். ஒரு அணா (ஆறு பைசா) இல்லையென்றால், உன் சொத்தை விற்றாவது ஒரணா கொண்டுவா, பிறகுதான் செக் தருவேன் என்பார்கள். சிலசமயம் பாக்கெட்டில் சில்லறையில்லாமல், நியூஸ் ரூமுக்கு ஓடிப்போய் பூர்ணம் விசுவநாதனிடம் ஒரு அணா கடன் வாங்குவேன். (இந்தக்கடனை கான்டீனில் காபி வாங்கிக்கொடுத்து கழித்துவிடுவேன்.) இந்த ரூ. 20-க்கான Government of India காசோலைக்கு ராஷ்டிரபதி பவனில் அதிகாலையில் தூங்கிக் கொண்டிருக்கும் குடியரசுத் தலைவரை துணைக்கு கூப்பிட்டு For and on behalf of President of India சார்பில் Accounts Officer கையெழுத்து போட்டிருப்பார். இந்த இருபது ரூபாயை பணமாகக்கொடுக்க நம் அரசாங்கத்தின் ரூல்ஸ் இடம் தராது. இன்னும் நாம் மாறவில்லை. Nobody can beat our Indian Bureaucracy! அமெரிக்கா போய்விட்டு வந்த இந்திரா பார்த்தசாரதி தன் பென்ஷன் அரியர்ஸுக்கு விண்ணப்பித்தபோது, ‘ஆறுமாதத்துக்கு முன்னால் உயிரோடு இருந்தீர்கள்’ என்பதற்கான சான்றிதழுடன் நேரில் வரவும்’ என்றது தில்லி பல்கலைக்கழகம்!

ஏழுமணி அளவில் AIR Canteen-ல் காத்திருப்பேன். செய்தி வாசிப்பு தடங்கலின்றி நிறைவேறியதாக ஒரு ரிப்போர்ட் எழுதி டூட்டி ஆபீசரிடம் கொடுத்துவிட்டு பூர்ணமும் வருவார். அந்தவேளையில் கான்டீன் காலியாகவே இருக்கும். அங்கே காலைவேளையில் சுடச்சுட மெதுவடை கிடைக்கும். ஆனால் தொட்டுக்கொள்ள சட்னிக்குப்பதிலாக, வெள்ளைப் பூசணிக்காயுடன் புளி காரம் உப்பு கலந்து அரைத்த ஒரு வகை ஸாஸ் தான் பாட்டிலில் வைத்திருப்பார்கள். ஒருநாள் காலை இருவரும் காபி சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, இருபது வயதுள்ள ஒடிசலான ஓர் இளம் பெண்மணி கையில் காபி கப்புடன், ‘Can I join you?’ என்று கேட்டுவிட்டு பதிலுக்கு காத்திராமல் எங்கள் எதிரில் உட்கார்ந்தார். சரளமான ஆங்கிலத்தில் பூர்ணத்தை தெரியுமென்றும், அடிக்கடி பார்த்திருப்பதாகவும் சொன்னார். தன் பெயர் ஆங் ஸான் ஸூ சி என்றும் தில்லியில் தங்கிப் படிப்பதாகவும், காலை நேரங்களில் வெளிநாட்டுச்சேவை ஒலிபரப்பில் பர்மியமொழிச் செய்தி வாசிப்பாளராக இருப்பதாகவும் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். ரேடியோ ஸ்டேஷனில் பர்மீஸ் யூனிட்டை தாண்டித்தான் தமிழ் யூனிட்டுக்குப் போகவேண்டும். பிறகு அதே கான்டீனில் எப்போதாவது பார்க்க நேர்ந்தால் முகமன் சொல்லிக்கொள்வோம். ஒருமுறை, பர்மியரான அவர் இந்தியாவில் தங்குவதில் சில சிக்கல்கள் இருப்பதாகச் சொன்னார். வெளியுறவுத்துறையின் கீழ் இயங்கும் Foreigners’ Registration Office-ல் என் நெருங்கிய நண்பன் உயர் பதவியில் இருந்ததால், என் விசிட்டிங் கார்டைக்கொடுத்து, அவனைப்போய் பார்க்கச்சொன்னேன். அடுத்தவாரம் பார்க்க நேர்ந்தபோது, ஓடி பக்கத்தில் வந்து, என் நண்பன் உதவியால் இந்தியாவில் இன்னும் இரண்டு ஆண்டுகள் தங்க அனுமதி ஒரு நொடியில் கிடைத்துவிட்டதாக நன்றி சொன்னார். அதன்பிறகு அவரை நான் சந்திக்கவில்லை. அவர் தான் 1991-ம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்ற பர்மியப்போராளி Aung San Suu Kyi. 1990-ல் மிலிட்டரி சர்வாதிகாரத்தை எதிர்த்து, சமாதானப்போர் நடத்தி, வீட்டுச்சிறையிலிருந்தபடியே, பிரசாரத்துக்குக்கூட போகாமல், தன் கட்சியான National League of Democracy-க்கு 80% இடங்களைத்தேடிக்கொடுத்தவர். ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாத பர்மிய மிலிட்டரி சர்வாதிகாரம் தேர்தலை, null and void என்றுகூறி ஆட்சியிலிருந்து விலக மறுத்தது. உலக வல்லரசுகளும் பத்திரிகைகளும் வற்புறுத்தியும்கூட, அவரை ஸ்வீடனுக்கு நேரில் போய் நோபல் பரிசை பெற்றுக்கொள்ள அனுமதிக்கவில்லை. 1989-லிருந்து இன்று வரை – சில மாதங்கள் தவிர – பர்மிய சர்வாதிகாரம் இவரை வீட்டுக்காவலிலேயே வைத்திருக்கிறது. இந்த நூற்றாண்டிலும் சர்வாதிகாரத்தால் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது. உலகத்தின் இரண்டாவது பெரிய ஜனநாயக வல்லரசான நாம், மெளனமாக பார்த்தும் பார்க்காமலிருக்கிறோம்! இல்லை....ஆரம்பத்தில் 1969-ல் Ghungi Gudiya (பேசாத பொம்மை) என்று கேலியாகவும் பிறகு எண்பதுகளில் The only Man in her entire Cabinet என்றும் அரசியல் விமர்சகர்களால் பாராட்டப்பட்ட இந்திரா காந்தி போல் இன்னொருவர் வர காத்திருக்கிறோமா? அது சரி, கிழக்கு பாகிஸ்தானை பங்களா தேஷாக மாற்றி என்னத்தெ வாழ்ந்தது? நன்றியுணர்ச்சியில்லாத இன்னொரு அண்டைநாடு உருவாயிற்று!

நான் சென்னை வந்தபிறகு, 2002-ல் ஸூ சி அம்மையாரை காவலிலிருநது விடுவிக்கவேண்டுமென்று போராட்டம் வலுத்துவந்தது. தினமும் அவர் பெயர் தினசரிகளில் தென்பட்டது. செய்திச்சானல்களில் அடிக்கடி வருவார். அப்போது ஒரு நாள் திரு. பூர்ணத்தைப் பார்க்கப்போயிருந்தேன். பேசிக்கொண்டிருக்கும்போது, ‘இந்த அம்மையாரை நாம் சந்தித்திருக்கிறோம். ஞாபகம் இருக்கிறதா?’ என்று கேட்டேன். அவருக்கு நினைவில்லை. விளக்கிச்சொன்னவுடன் மகிழ்ச்சியோடு, ‘அப்போ நாம ஒரு நோபல் ப்ரைஸ் வின்னருடன் கைகுலுக்கியிருக்கிறோம்!’ என்றார். நான், ‘இல்லை. In anticipation of her getting Nobel Prize, நாம 25 வருஷம் முன்னாடியே அட்வான்ஸா கைகுலுக்கி விட்டோம்’ என்று சொன்னதும் கண்ணை மூடிக்கொண்டு சிரித்தார்.

தில்லி செளத் இந்தியன் தியேட்டர்ஸ் சார்பில், பிரஸிடென்ட் பஞ்சாட்சரம், நாலுவேலி நிலம், போலீஸ்காரன் மகள், தேவனின் கோமதியின் காதலன், ரமேஷ் மேத்தாவின் அண்டர் செக்ரட்டரி போன்ற நாடகங்களில் முக்கியமான பாத்திரங்களில் நடித்தார். கோமதியின் காதலனில், கோவிலுக்குப் போய்விட்டு அர்ச்சனைத்தட்டுடன் வீட்டுக்குத்திரும்பும் பூர்ணம், தெருவில் நண்பருடன் பேசிக்கொண்டிருப்பார். அவ்வப்போது அர்ச்சனைத் தட்டிலிருக்கும் அட்சதைகளை ஒவ்வொன்றாக எடுத்து வாயில் போட்டுக்கொள்வார். உடைத்த தேங்காய்மூடியை நகத்தால் கிள்ளுவார். This is the spontaneous use of Set Properties by a Performer! யதார்த்த நடிப்பில் ஊறியவருக்குத்தான் இது கைவரும். தேர்ந்த நடிகருக்கான உத்தி. இதை ஒரு பத்திரிகையில் பதிவு செய்திருக்கிறேன்.

தில்லியில் அடிக்கடி நடக்கும் ‘யாத்ரிக்’ குழுவின் ஆங்கில நாடகங்கள், சம்புமித்ரா, ஷ்யாமானந்த் ஜலான், சத்யதேவ் தூபே, உத்பல் தத் போன்றவர் நாடகங்களுக்கோ, இப்ராஹிம் அல்காஸியின் என்.எஸ்.டி நாடகங்களுக்கோ அவர் வந்ததேயில்லை. கூப்பிட்டால், ‘டூட்டி இருக்கு, மணி’யென்று தப்பித்துக்கொள்வார். அவைகளைப்பார்த்து புதிதாகத் தெரிந்துகொள்ள அவருக்கு அவசியம் இருந்ததில்லை.

எனக்கும் இவருக்கும் ஒரு ஒற்றுமையுண்டு. சுஜாதா எழுதிய நாடகங்களில், சென்னையில் இவர் நடித்த பாத்திரங்களை தில்லியில் நான் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என் பேறு! அவர் “பூர்ணம் தியேட்டர்ஸ்” தொடங்கியபின், தில்லிக்கு நாடகம் போட வந்திருந்தார். முதல் நாடகம் ‘தனிக்குடித்தனம்’. சென்னையிலிருந்து செட் சாமான்கள் ஏற்றிவந்த லாரி நாக்பூர் அருகே ரிப்பேராகிவிட்டதால், அவசர அவசரமாக எங்கள் D.B.N.S. குழுவின் செட் உபகரணங்களைக் கொண்டுபோய் மேடையமைப்பு செய்துகொடுத்தது ஞாபகம் வருகிறது.

எங்கள் நட்பு இறுக்கமானது அவரது சகோதரி லட்சுமி இறந்தபோது. திருமணத்தில் நாட்டமில்லாத அவர் தனியாக மோதி பாக்கில் ஓர் அரசாங்கவீட்டில் குடியிருந்தார். சென்னையிலிருந்த பூர்ணத்துக்கு தங்கையின் மரணச்செய்தியை அறிவித்ததே நான் தான். அவர் தில்லி வரும்வரை காத்திருந்து, நிகம்போத் சுடுகாட்டுக்கு சடலத்துடன் போய், கடைசிவரை கூட இருந்தேன். கிட்டத்தட்ட நவம்பர் 2007 உயிர்மை யில் நான் பதிவு செய்த ‘தில்லி நிகம்போத் சுடுகாடு’ கட்டுரையில் எழுதியிருந்ததையெல்லாம் அவர் நேரில் பார்த்திருக்கிறார். காரில் திரும்ப வரும்போது, ’மணி, நீங்க இவ்வளவு உதவியா இருப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கலே. லட்சுமியின் ஆத்மா உங்களை வாழ்த்தும். உங்களுக்கு சுடுகாட்டிலேயும் நெறைய நண்பர்கள் இருக்காங்களே’ என்றார். ‘நான் கடைசியா இங்கே தானே வந்தாகணும். அப்போ என்னை ஸ்பெஷலா கவனிச்சுப்பாங்களே” என்ற பதிலுக்கு, அவர் உரக்க ‘No silly Jokes’ என்று சொல்லி என் வாயைப்பொத்தினார். பிறகு அவர் குடியிருந்த வீட்டை காலிசெய்து சாமான்களை ஒரு லாரியில் ஏற்றி, சென்னையில் பூர்ணம் வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். போனவருடம் நவம்பரில் உயிர்மையில் நான் தில்லி நிகம்போத் சுடுகாட்டைப்பற்றி எழுதியிருந்த கட்டுரையைப் பாராட்டி நீண்ட நேரம் பேசினார். ‘நான் தான் நேரிலேயே பாத்திருக்கேனே! You are a great person’ என்று ஒரு சர்ட்டிபிகேட்டையும் கூடவே தந்தார்!

என்னைப்போன்ற இவரது தில்லி நண்பர்களுக்கு வருத்தமளிக்கும் விஷயம் இவருக்கும் இசை விமர்சகர் சுப்புடுவுக்குமிடையே இருந்த தீராப்பகை. அதன் காரண காரியங்களை இப்போது ஆராய வேண்டாம். தில்லியில் நடந்த சில சம்பவங்கள் இவரை அளவுக்கதிகமாக காயப்படுத்திவிட்டன. பூர்ணம் சென்னைக்கு மாற்றலாகி வந்ததற்கு அவையும் முக்கியமான காரணங்கள். எங்கள் சமரச முயற்சிகள் கடைசிவரை பலனளிக்கவேயில்லை.

தொண்ணூறுகளில் மத்திய சங்கீத நாடக அகாடெமி இவருக்கு சிறந்த நாடக நடிகருக்கான விருதையளித்து தன்னையும் கெளரவப்படுத்திக்கொண்டது.

பலருக்குத்தெரியாத விஷயம் பூர்ணம் ஒரு தேர்ந்த நகைச்சுவை எழுத்தாளர் என்பது. ஐம்பது அறுபதுகளில் தில்லி தமிழ்ச்சங்கம் வெளியிட்டுவந்த ‘சுடர்’ ஆண்டுமலரில் இவரது ஓரங்க நாடகங்கள் தவறாமல் இடம்பெறும். சென்னை பத்திரிகைகளிலும் அடிக்கடி எழுதிக்கொண்டிருந்தார். பிரபல பத்திரிகைகளின் தீபாவளி மலரில் எழுதுவார். இவரது ஓரங்க நாடகங்களில் தான் என் தில்லி நாடக வாழ்க்கை தொடங்கியது. சென்னைக்கு வந்தபின் ஏனோ எழுதுவதை குறைத்துக் கொண்டு விட்டார். அதனால் தமிழுக்குத்தான் நட்டம்.

என் நண்பர் மரபின் மைந்தன் சொன்னது:

தமிழிலக்கிய மேடைகளிலும் பூர்ணம் விசுவநாதன் பலமுறை பேசுபொருளாகியிருக்கிறார்.
ஒரு விழாவில் பார்வையாளர் வரிசையில் அவர் வந்து அமர்ந்தபோது, பேச்சாளர் ஒருவர் சொன்னார்: "கொழுக்கட்டை மாதிரி இருக்காரே இவர் யார்னு விசாரிச்சேன்.....பூர்ணம்னு சொன்னாங்க! அதுசரி, பூர்ணம் இருந்தாத்தானே கொழுக்கட்டை!". தமிழக அரசின் சுற்றுலா சம்பந்தப்பட்ட குழு ஒன்றில் பூர்ணம் விசுவநாதன் ஆலோசகராக இருந்தார். அதன் விழா ஒன்று நிகழ்ந்தபோது பார்வையாளர்கள் மத்தியில் வந்து அமர்ந்தார். வீடியோ வெளிச்சத்தில் மேடையில் இருப்பவர்களுக்குக் கண்கூசிற்று. பேச்சாளர் கண. சிற்சபேசன் கூறினார்: "இங்கிருந்து பார்த்தா பூர்ணம் மாதிரித் தெரியுது, ஆனா பூரணமாத் தெரியலை".

’பாரதி’ படப்பிடிப்பின்போது, நடிகர்கள் தேர்வு எனக்களிக்கப்பட்ட பணிகளில் ஒன்று. டைரக்டர் ஞான. ராஜசேகரன் பூர்ணத்தை பார்த்துவரச்சொன்னார். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த பூர்ணம், கண் ஆபரேஷனுக்குப்பிறகு அதிக வெளிச்சம் பார்த்தால் கண் கூசுகிறது என்பதால் பாரதியில் நடிக்க இயலாதென்று வருத்தம் தெரிவித்தார். He has acted in some good, bad and indifferent Movies! ‘மஹாநதி’ இவரது மாஸ்டர்பீஸ்! ‘மூன்றாம் பிறை’ படத்தில் சில்க் ஸ்மிதாவுடன் நெருங்கி நடிக்கும்போது கொஞ்சம் நெளிந்தார்! இவரது நடிப்பை Stereo-typed Acting என்று இப்போது இவர் மறைவுக்குப்பின் பல வலைப்பூவினர் விமர்சனம் செய்கின்றனர். இது இவரது குறையல்ல. கமல் போன்ற வெகுசிலரைத்தவிர, மற்றவர்கள் இவரை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. இவருடைய திரைப்பட வாழ்க்கையைப் பற்றி, என்னைவிட உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். பல நடிகர்-குரலில் பேசும் இன்றைய மிமிக்ரி கலைஞர்களுக்கு வாரி வழங்கும் ஒரு அட்சயபாத்திரமாக பூர்ணம் திகழ்கிறார்.

தில்லியில் சுஜாதாவுக்கு பூர்ணம் விசுவநாதனை அறிமுகப்படுத்தி வைத்த பெருமை அடியேனையே சாரும். அப்போது அவர்கள் நட்பு சென்னை வந்தபிறகு ஒரு நாடகக்கூட்டணியாக மாறி இந்த அளவு விகசிக்குமென்று மூவருமே நினைத்ததில்லை.

கையில் லக்கேஜ் எதுவும் இல்லாமல் மேலுலகம் போன பூர்ணம், ஊர்தியை விட்டு இறங்கியதுமே, வழியில் தென்பட்ட தேவதையிடம், ‘அம்மா பரதேவதே! சுஜாதா எங்கே இருக்கார்?’ என்றுதான் கேட்டிருப்பார். ஆமாம், ஏழு மாதங்களுக்கு முன் மேலே போன சுஜாதா எழுதி தயாராக வைத்திருக்கும் புது நாடகத்தில் நடிக்கத்தான் போயிருக்கிறார்!

Saturday, June 6, 2009

வற்றுமா குற்றம்?

தினெட்டாம் நூற்றாண்டின் ஆங்கில எழுத்தாளர் ஹென்றி ஃபீல்டிங் ‘குற்ற நிகழவுகளுக்கான காரணங்களை களையெடு’ என்ற அறைகூவல் விடுத்தார்.

சமீபத்தில் நிதின் குமாரி என்ற விமானப்பணிப் பெண் சென்னை நொளம்பூர் குடியிருப்புக் பகுதியில் கோரமான முறையில் கொல்லபட்டது எல்வோருடைய கவனத்தையும் ஈர்த்திருக்கும். பீஹாரிலிருந்து வேலை நிமித்தமாக சென்னையில் தங்கி தன்னம்பிக்கையோடு வாழ்ந்த இப்பெண்ணுக்கு ஏன் இந்த முடிவு? தனியாக நிர்பந்தத்தின் பேரில் வாழும் பெண்கள் அதுவும் பார்வையாக இருக்கக்கூடிய பெண்கள் என்றாலே அவதூறு சொல்வதற்கு கூசாத நபர்கள் சமுதாயத்தில் இருக்கிறார்கள். முதலில் சந்தேக மரணம் என்ற செய்தியில் பல ஆண்களோடு சகவாசம் இருந்தது, போதைப் பொருட்கள் உட்கொள்ளும் பழக்கம் உடையவர் என்று அவளைப் பற்றி அபாண்டமாக கூறப்பட்டது. புலன் விசாரணையில் அதே பகுதியில் வாழும் ஒரு வாலிபன் அந்த பெண்ணின் செல்போன் திருடுவதற்காக இந்த கோரக் கொலையை செய்தான் என்பது பல வியாக்கியானங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. திறம்பட விசாரணை செய்து குற்றவாளியை துரிதமாகக் கண்டு பிடித்ததற்கு சென்னை காவல்துறைக்கு சபாஷ் போடலாம்.

நிதின் குமாரியின் கொலை பல பாடங்களை நமக்குப் புகட்டுகிறது. வீட்டுக்கு கட்டுப்படாத இளைஞர்கள், அவர்களை கட்டுப்படுத்தத் தவறிய பெரியவர்களால் சமுதாயத்திற்கு எத்தனை பாதிப்பு என்பது முக்கியமான பாடம். அந்த குற்றவாளி பல சில்லறைத் திருடுகளில் ஈடுபட்டுள்ளான் என்பதைப் பற்றிய தகவல் சரக காவல் நிலையம் சேகரித்திருக்க வேண்டும். தனியாக வாழும் பெண்கள் அடிப்படை பாதுகாப்பு நெறிகளை கடைபிடிக்க வேண்டும் என்பது மற்றொரு பாடம். தெருவில் நடக்கும் பொழுதோ, வாகனம் ஓட்டும் பொழுதோ செல்போன் உபயோகிக்க கூடாது என்று காவல் துறை பல முறை எச்சரித்து வருகிறது. நடந்து கொண்டே செல்போன் பேசுபவர்களிடமிருந்து பலமுறை சமுக விரோதிகள் செல்போன்களை பறித்துக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அப்படி போன் பேச அவசியம் ஏற்பட்டாலும் நின்று இரண்டு வார்த்தை பேசிவிட்டு இருப்பிடம் சென்று பேசுவது பாதுகாப்பானது. எல்லோருடைய கண்படும்படி விலையுயர்ந்த செல்போனை அந்தப் பெண் உபயோகித்தது கயவன் கண்களிலும் பட்டு விபரீத முடிவு ஏற்பட்டது. அசிரத்தையாலும் அசட்டையாலும் ஒரு இளம்பெண்ணின் உயிர் பறிபோனது.

குற்றங்கள் ஏன் நிகழ்கின்றன, சரியான தடுப்பு முறைகள் என்ன, தனிமனிதனையும் திட்டமிட்டுக் குற்றப் புரிபவர்களையும் எவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என்பது சமுதாய வல்லுனர்களால் பல நூற்றாண்டுகளாக ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. காலப்போக்கிற்கேற்ப சமுதாய வளர்ச்சியைப் பொறுத்து குற்றப்பரிமாணங்களும் மாறிக்கொண்டு வருகின்றனவே ஒழிய குற்றம் ஏன் நடக்கிறது என்பதற்கு விடை கிடைக்காமல் இருக்கிறது.

டேவிட் ஆபிராஹம்ஸன் என்ற சமூகவியல் மேதை குற்ற நடப்பிற்கு காரணங்களை விகிதாச்சார முறையில் துல்லியமாக கணக்கிட முற்பட்டார். தனிமனிதனின் உள்ளக்குமுறல்கள், மன அழுத்தம் மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலை இதனை சேர்த்து, சமுதாயக் கட்டுப்பாடு, தனிமனிதனின் நல்லியல்புகளின் எதிர்ப்பு சக்தியால் வகுத்தால் குற்றத்தின் பரிமாணம் புலப்படும் என்கிறார். அதாவது சமுதாயக் கட்டுப்பாடும், தனிமனித நற்பண்புகள் மேலோங்குதலும், குற்ற நிகழ்வுகளை குறையச் செய்யும். அதே சமயம் சமுதாயத்தில் ரம்யமான சூழல் உருவானால் தனி மனித மன அழுத்தம் குறையும். சுயக் கட்டுப்பாடு வளரும் நிலையில் சந்தர்ப்ப சூழ்நிலையும் எதிர்மறை விளைவுகளுக்கு வித்திடாது. இத்தகைய அடித்தளம்தான் சீர்மிகு குற்றமற்ற சமுதாயம் உருவாக வழிவகை செய்யும்.

தனிப்பட்ட அபிப்பிராயங்கள் ஒத்து இருந்தாலும், பொதுநலன் மேலோங்கினால்தான் சமுதாயத்தில் அமைதியான சூழல் உருவாகும். குடும்ப வாழ்க்கை, பள்ளிகள், கல்லூரிகள், தனியார் தொண்டு நிறுவனங்கள், கேளிக்கை மற்றும் விளையாட்டு மையங்கள் போன்ற சமுதாயத்தின் நிலையான ஆதாரங்களின் கூட்டமைப்பின் மூலம் மனிதனிடையே நல்லிணக்கத்தைத் பரவச் செய்ய வேண்டும். தனி மனிதன் சுய கட்டுப்பாடு, நற்பண்புகள் பயிற்றுவித்தல் போன்றவை சமுதாய கூட்டமைப்பில் நடைபெற்றதால் தான் நிலைத்து நிற்கும்.

சமுதாயத்தில் அமைதி நிலை நாட்டுதலுக்கு மூன்று கட்ட நடவடிக்கை அவசியம் ஆகிறது. முதல் கட்ட நடவடிக்கையில் எத்தகைய மக்கள் குற்றவலையில் சிக்கக்கூடும் என்பதை கணித்து அவர்களுக்கு உதவிக்கரம் கொடுத்து சீரான பாதையில் எடுத்துச் செல்லுதல். இந்த நடவடிக்கையின் போது குற்றம் இன்னும் தலைதூக்கவில்லை, இந்த தருணத்தில் குற்றப்பாதையை தவிர்த்து நல்வழிகளில் இட்டுச் செல்லும் முயற்சி முக்கியமானது.

இரண்டாவது கட்டம் தண்டனையுற்றவர்களை சிறை இல்லங்களில் நல்வழிப்படுத்தும் முயற்சி. இதில் சிறைத்துறைக் களப்பணியாளர்கள், நன்னடத்தை பிரிவினர் மற்றும் தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் இணைந்து குற்றம் புரிந்தவர்களுக்கு மனமாற்றம் ஏற்படுத்தி அவர்களுக்குள் உள்ள அசூயயை நீக்கி நற்பாதையை தெரிவு செய்ய உதவி நல்க வேண்டும்.

மூன்றாவது கட்டம் தண்டிக்கப்பட்டவர்கள் சிறையிலிருந்து வெளி வரும்பொழுது அவர்களுக்கு மறுவாழ்வு கொடுப்பது, சமுதாயத்தோடு இணைவதற்கு ஏற்பாடு செய்வது. ஆக இந்த மூன்று நிலைகளிலும் தீர்க்கமான அணுகுமுறையோடு செயல்படவேண்டியது இன்றியமையாதது.

சமுதாயக்கட்டுப்பாட்டுக்குள் குற்றத் தடுப்பு முயற்சிகள் பிரதானமாகக் கருதப்படுகிறது. அந்தந்தப்பகுதி மக்கள் ஆரோக்கியத்துடன் மன உளைச்சலின்றி வாழ்க்கையை நடத்துவதற்க்கு ஏற்ற வகையில் நன்மை பயக்கக் கூடிய சூழல் உருவாக்கிட வேண்டும். குடியிருப்பு பகுதி அருகில் பள்ளிகள், எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் உடல் ஆரோக்கியத்திற்கான விளையாட்டு மையங்கள், சந்தோஷத்திற்கு மக்கள் கூடி உறவாடுவதற்கான கேளிக்கை மையங்கள் ஆனந்தமான சூழலை உருவாக்குவதற்கு அத்தியாவசியமானவை. 1884-ம் வருடம் இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகரக் கிழக்குப்பகுதியில் முதலில் இத்தகைய திட்டம் விவாதிக்கப்பட்டு செயல் முறைக்கு வந்தது. அமெரிக்காவில் சிக்காகோ நகரில் மேலே கூறிய அடிப்படைக் கருத்தினை விரிவாக சமுதாயப் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. ஜப்பான் நாட்டில் சுமார் 40,000 தன்னார்வு தொண்டர்கள் இலவசமாக நன்னடதையாளர்களாக பணி புரிகிறார்கள். தாம் வசிக்கும் பகுதியில் குற்றத்தடுப்பு முறைகளை செயல்படுத்துகின்றனர்

தமிழ்நாட்டிலும் பாய்ஸ் க்ளப் என்று சிறார் மன்றங்கள் 1960-ல் இருந்து பல முக்கிய நகரங்களில் தோற்றுவிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பொது மக்கள் நலனுக்காக சமீபத்தில் சென்னையில் அதுவும் வடசென்னையில் நிறுவப்பட்ட விளையாட்டு மையங்கள், கண்ணுக்கினிய பூங்காக்கள் வரவேற்கத்தக்கது.
மும்பாய், தில்லி, கொல்கத்தா, சென்னை போன்ற மாநகரங்களில் வேலைத் தேடி நகரத்திற்கு குடிபெயரும் மக்கள் அதிகரிக்கும்பொழுது புதிதாக குடிசைப் பகுதிகள் உருவாகுகின்றன. மும்பாயில் தாராவி, கொல்கத்தாவில் துறைமுகப் பகுதி என்று லட்சக்கணக்கான குடியிருப்புக்களைக் கொண்ட குடிசைப்பகுதிகள் உள்ளன. ஆனால் சென்னையில் ஒரே இடம் என்றில்லாமல் சுமார் 900 குடிசைப் பகுதிகள் நகரில் பரவலாக அமைந்துள்ளன. இது தவிர கடற்கரையொட்டி சுமார் 50 மீனவர் குடியிருப்பு பகுதிகள். இந்தப் பகுதிகளில் இயங்கும் “சிறார் மன்றங்கள்” அங்கு வாழும் இளைஞர்களுக்கு விளையாட்டு மையமாகவும் நல்லியல்புகளைப் புகட்டும் இடமாக காவல் துறையால் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது, தமழகத்தில் 125 சிறார் மையங்கள் அரசு நிதி உதவியோடு இயங்குகிறது. இந்த மன்றங்கள் சிறப்பாக அமைந்திட தன்னார்வு தொண்டு நிறுவானங்களும் உதவுகின்றன. சென்னை மாநகரில் மட்டும் சுமார் 7 வயதில்ருந்து 17 வயதிற்குப்பட்ட சுமார் 7000 சிறார்கள் பயனடைந்து வருகிறார்கள்.

ஆந்திர மாநிலத்திலும் குற்றங்களில் ஈடுப்படக்கூடியவர்களை தெரிவு செய்து அவர்களுக்கு மாற்று வழி அமைக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்தகைய நலன் பேணும் திட்டங்களில் தனிமனிதன் குற்றங்களில் ஈடுபடாமல் தடுப்பதற்கும் கெடுதலை எதிர்க்கும் சக்தி வளர்வதற்கும் உதவும்.

குற்றவாளிகள் தண்டனைப் பெற்ற பிறகு அவர்களை திருத்தும் பணி சிறை இல்லங்களில் நன்னடத்தைப் பிரிவு அலுவலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடு இணைந்து சிறைக் களப்பணியாளர்கள் நிறைவு செய்ய வேண்டும். சிறை என்றாலே எல்லோருக்கும் ஒரு அச்சம் விளைவதற்குக் காரணம் சிறை கொடுமைப் படுத்தும் இடம் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பது தான். சிறையிலிடப்படுவதுதான் தண்டனையே தவிர அதற்கு மேல் பிராயச்சித்தமாக தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் தவறானது. அதற்கு மாறாக சிறை இல்லவாசிகளின் உயிர், கண்ணியம், சமத்துவம் ஆகிய ஆதார மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

சிறையிலுள்ளவர்களை கண்ணியமாக நடத்துவது சமுதாயத்தின் உயரிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது. நான்கு சுவர்களுக்குள் அடைப்பட்டிருக்கும் நிலையில் இல்லவாசிகளை நல்வழிப்படுத்தும் பணி மிகக் கடினமானது. ஆதலால் தான் மேலைநாடுகளில் சிறை அடைப்பு என்றில்லாமல் கட்டாய சமுதாயப்பணி மாற்று தண்டனையாக கொடுக்கப்படுகிறது. சிறு குற்றங்களுக்காக சிறைவாசம் கூடாது என்ற அடிப்படையில் இங்கிலாந்து நாட்டில் மூன்று மாதங்களுக்கு குறைவாக சிறை தண்டனை 12,000-மாக 1960 வருடத்தில் இருந்தது, படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது ஆயிரத்துக்குக் கீழ்தான் சிறு குற்றங்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படுகின்றன. இது நீதிமன்ற அதிகாரத்திற்குட்பட்டது. இத்தகைய சமுதாயமேவிய பணிகளை மாற்று தண்டனையாக வழங்குதல் நடைமுறைப்படுத்த வேண்டும்.

சிறைக்கதவு அடைக்கும் பொழுது ஏற்படும் விரக்தியைவிட சிறைக்கதவு திறக்கும்பொழுது வெளிவரும் நபருக்கு மனவேதனை அதிகமாகிறது என்பது உண்மை. சிறைக்கு செல்வதே வாடிக்கையாகக் கொண்டவர்களுக்கு இது பொருந்தாது. அவர்களுக்கு சிறைவாசம் பழகிவிடுகிறது, உணர்ச்சிகளும் மரத்து விடுகின்றன. ஆனால் சிறைக்கு வரும் பெரும்பாலானவர்கள் சந்தர்ப்ப வசத்தால் சிக்கியவர்கள். அவர்கள் சமுதாயத்தோடு இணைவதற்கும், மாற்று வாழ்க்கை அமைத்துக் கொடுப்பதற்கும் மிக கவனமான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

விடுதலை பெற்று வருபவருக்கு முதல் பிரச்சனை பொருளாதாரமின்றி எவ்வாறு வாழ்வை துவங்குவது என்பதுதான். மற்றது சமுதாயம் தன்னை புறக்கணித்து விடும் என்ற பயம். குற்றம் புரிந்தவர்கள் சமுதாயக் கட்டுப்பாட்டிலிருந்து விலகியதால் ஊனமுற்றவர்கள் என்று கருதி, ஆனால் இப்போது நல்வழியில் வந்துள்ளார்கள் என்று அவர்களை சகஜ நிலைக்கு கொண்டுவர சமுதாயம் முன்வர வேண்டும். அவர்கள் மீண்டும் குற்றவழிப்பாதையில் செல்லாமல் இருப்பதற்கு உதவிக்கரம் கொடுக்கப்பட வேண்டும்.

சிறையிலிருந்து வெளி வருபவர்களுக்கு மாற்றுவழி கொடுப்பதற்கு சென்னை உட்பட 16 மாவட்டங்களில் உதவி மையங்கள் உள்ளன. பல தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் இந்த கூட்டுறவு மையங்களோடு இணைந்து செயல்படுகின்றன.

குற்றங்கள் நடவாமல் தடுப்பதில்தான் விவேகம் இருக்கிறது. சுய உந்துதலோடு காவல்துறையினர் செயல்பட்டால் குற்றங்கள் நடவாமல் தடுக்க முடியும். நிதின் குமாரியின் கொலையிலும் குற்றவாளி பராரியாக திரிந்து கொண்டிருந்தவன், சிறு குற்றங்களில் ஈடுபட்டவன். தக்க தருணத்தில் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் பெரிய குற்றம் நிகழாமல் தடுத்திருக்கலாம். செய்ததைவிட செய்யாமல் ஏன் சந்தர்ப்பத்தை நழுவ விட்டோம் என்ற ஏக்கம் தான் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் கண்கூடாகத் தெரிகிறது.

வற்றுமா குற்றம் என்ற கேள்விக்கு விடை நமது கையில் இருக்கிறது. ஒருங்கிணைந்து செயல்பட்டால் குற்றம் பற்றில்லாமல் வற்றுவது உறுதி.

இந்த கட்டுரை தினமணி நாளிதழில் 06.06.2009 அன்று பிரசுரிக்கப்பட்டது.

Monday, May 25, 2009

சிலிர்க்க வைக்கும் சிக்கிம்இந்திய துணை கண்டம் என்று நமது நாட்டைப் பற்றி குறிப்பிடுவது பொருத்தமானதொன்று. ஏனெனில் பலதரப்பட்ட மக்கள், மாறுபட்ட சீதோஷ்ணநிலை, விதவிதமான தாவர வகைகள், விலங்கினங்கள், கலாச்சாரப் பரிமாணங்கள் ஒவ்வொரு மாநிலங்களிலும் காணமுடிகிறது. இந்தியா எவ்வளவு மாநிலங்கள் உள்ளடங்கியது என்று கேட்டால் பலருக்கு உடனடியாக பதில் சொல்ல முடியாது. அதிலும் வடகிழக்கு மாநிலங்கள் பற்றிய தகவல்கள் பலருக்குத் தெரிவதில்லை. சிக்கிம் நமது நாட்டின் எல்லைக்குட்பட்டதா என்று ஐயமுறுபுவர்கள் உள்ளனர் என்பது ஆச்சிரியத்திற்குரியது.
1975-ம் ஆண்டு சிக்கிம் நமது நாட்டின் இருபத்திரண்டாவது மாநிலமாக இணைக்கப்பட்டது. 7110 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுடைய இம்மாநிலம் கோவாவிற்கு அடுத்து சிறிய மாநிலம். ஜனத்தொகை 5 லட்சத்து நாற்பதாயிரம். வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், திரிபுரா, மணிப்பூர், நாகாலாந்து, மிசோராம், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிமும் வடகிழக்கு மாநிலமாக மத்திய அரசு எடுத்துக் கொண்டு சலுகைகள் வழங்கப்படுகின்றன. மத்திய அரசு அலுவலர்களுக்கு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு விடுமுறை பயணச் சலுகை இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை அளிக்கிறது. மத்திய அரசு ஊழியர்கள் சொந்த ஊர் செல்வதற்கு பதிலாக வடகிழக்கு மாநிலம் ஏதாவது ஒன்றிற்கு செல்லலாம் என்று மத்திய அரசு சமீபத்தில் ஒரு ஆணை வெளியிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த ஆணை அடுத்த இரண்டு வருடங்களுக்கு அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆணையில் மத்திய அரசு ஊழியர்கள் வடகிழக்கு மாநிலங்கள் பற்றி தெரிந்து கொள்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பு. அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் மூலம் உள்ளூர் மக்களுக்கு வருமானத்திற்கு வழிவகை.
கொல்கத்தா நகரம் வடகிழக்கு மாநிலங்களுக்கு ஒரு சந்திப்பு மையம். சிக்கிம் மேற்கு வங்காளத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது. சிலிகுரி, புதிய ஜல்பாய்குரி பிரதான ரயில் சந்திப்புகள். சிலிகுரி டவுனிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாக்டோக்ரா கடைசி விமானதளம். இது இந்திய விமானப் படையின் முக்கியமான தளம். சிலிகுரியிலிருந்து சுமார் நாலரை மணி சாலைப் பயணத்திற்குப் பிறகு சிக்கிம் தலைநகரான கேங்டாக்கை அடையலாம்.
மலைப்பாதை டீஸ்ட் நதியின் கரையோரமாக செல்கிறது. பசுமையான அடர்ந்த காடுகள் கண்ணுக்கினிய காட்சிகள். பிரம்மாண்டமான மலைப்பகுதி, மலையிலிருந்து வேகமாக உருண்டோடிவரும் டீஸ்ட் நதி மனதுக்கு ஆனந்தத்தை அளிக்கும்.
சிக்கிம் மாநிலம் நான்கு மாவட்டங்களைக் கொண்டது. மாநிலம் மேற்கு, கிழக்கு, தெற்கு, வடக்கு என்று நான்கு திசைகள் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. எல்லா மாநிலங்களுக்கு உண்டான அரசு அமைப்புகள் உள்ளன. சிக்கிம் சட்டசபையில் 32 உறுப்பினர்கள். தலைமைச் செயலகம், காவல், பொதுப்பணி, கல்வி முதலிய எல்லாத் துறைகளும் இயங்குகின்றன. சிக்கிமின் பெருவாரியான பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக பராமரிக்கப்படுகிறது. மக்கள் ஜனத்தொகை சதுர கிலோ மீட்டர் கணக்கில் மிகக் குறைவு. விதிக்கப்பட்ட சில இடங்களில்தான் கட்டிடங்கள் கட்டலாம். வெளிமாநிலத்தவர் இங்கு இடங்கள் வாங்க இயலாது.
சிக்கிம் மாநிலம் நேபாளம், சைனா, பூட்டான் ஆகிய நாடுகளின் எல்லையைக் கொண்டது. இது தவிர மேற்கு வங்காளத்தில் உள்ள டார்ஜிலிங் மலைப்பிரதேசம், அருணாசலப் பிரதேசம் ஆகிய மாநில எல்லையும் சிக்கிம் எல்லையில் அடங்கும். நமது நாட்டின் பாதுகாப்பு என்ற நிலையில் பார்த்தால் சிக்கிம் ஒரு முக்கியமான பகுதி என்பது தெளிவு.
சிக்கிம் மாநிலத்தில் பழங்குடி மக்கள் “லெப்சா” இனத்தைச் சேர்ந்தவர். ரம்யமான தமது பிரதேசத்தை “ நயி மேயில்” புதுக்கருக்கு அழியாத இடம் என்று வர்ணிக்கின்றனர். வானத்தைக் கிழித்துக் கொண்டு கம்பீரமாக நிற்கும் வெண்பனி சூழ்ந்த ‘கஞ்சன்சங்கா’ மலைத்தொடர் கண்கொள்ளாக் காட்சி. சுமார் 8596 மீட்டர் உயரத்தில் நிற்கும் இந்த மலைத்தொடர் உலகத்தில் மூன்றாவது உயரமான மலை என்ற பெருமை கொண்டது. புனிதமான மலை என்று சிக்கிம் மக்களால் கருதப்படுவதாலோ என்னவோ இதன் உச்சியை எவரும் முழுமையாக அடைய முடியவில்லை. 5000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கோச்சாலா கணவாய் மலைத்தொடரை நடை பயணமாய் காண விரும்புபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். எங்கும் கண்டிராத தாவர வகைகளையும், அழகிய நீர்வீழ்ச்சிகளயும் காணமுடியும்.
சரித்திரப் புகழ் வாய்ந்த 14,200 அடி உயரத்தில் அமைந்துள்ள “நாதுலா கணவாய்” கேங்டாக்கிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. போய் சேர்வதற்கு மூன்று மணி நேரம் பிடிக்கும். இப்போது சைனா கட்டுப்பாட்டில் உள்ள திபேத்திய நாடு அதற்கப்பால் அமைந்துள்ளது. நமது நாதுலா எல்லைப் பகுதிக்குச் செல்ல சிக்கிம் காவல்துறை அனுமதிச் சீட்டு பெற வேண்டும். இந்திய ராணுவ வீரர்களும், சைனா நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினரும் எதிரும் புதிருமாக நிற்கும் இடம். சைனா ராணுவ வீரர்கள் சிரித்துக் கொண்டு சகஜமாக இந்திய யாத்ரிகர்களை புகைப்படம் எடுத்தனர். ஆனால் நமது எல்லையில் கட்டுப்பாடும் கெடுபிடியும் அதிகம். பீஹார் ரெஜிமெண்ட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் அங்கு எல்லை பாதுகாப்பு பணியில் இருந்தனர். நமது மக்களை ஏன் கனிவோடு நடத்தக்கூடாது ஏன் இந்தக்கடுகடுப்பு என்று தோன்றியது. சீருடை அணிந்தால், விறைப்பாக நடந்து கொண்டால் தான் தமது அதிகாரம் மதிக்கப்படும் என்ற பாதுகாப்புப் பணியில் உள்ளவர்களின் நினைப்பு எப்போது மாறுமோ? புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. சில நாட்களில் நமது ராணுவத்தினர் அனுமதிப்பார்கள் என்றார்கள்.
1958-ம் வருடம் பாரதப் பிரதமர் ஜஹர்லால் நேரு அவர்கள் நாதுலா எல்லைக்கு வந்ததற்க்கு அடையாளமாக ஒரு நினைவுச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. அப்போது சிக்கிம் இந்திய பாதுகாப்புக்கு உட்பட்ட நாடாக இருந்தது. சைனா எல்லைப்பகுதியில் ராணுவ வீரர்கள் தங்குவதற்க்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. உயர்வான பகுதியில் கண்காணிப்பு பெட்டகங்கள் அமைக்கப்பட்டுள்ளான. புதிதாக செப்பனிடப்பட்டுள்ள அகல சாலைகள் போடப்பட்டிருந்தது. சாலை நடுவே பளிச்சென்று மஞ்சள் கோடு, போக்குவரத்தே இல்லாத இப்பகுதியில் எதற்கு என்ற கேள்விக்குறி எழாமல் இல்லை. ஆனால் இந்திய எல்லைப்பகுதியில் கரடு முரடான மண்பாதை வழியே சிரமப்பட்டுத்தான் உச்சியை அடைய முடியும். இதுவும் பாதுகாப்புக் கருதி தடைகள் தடைகளாகவே இருக்கட்டும் என்று விடப்பட்டிருக்க வேண்டும் என்று தான் நினைக்கத் தோன்றுகிறது! நமது பக்கத்தில் சுற்றுலா பயணிகளுக்கான சிற்றுண்டி விடுதியில் கன ஜோரான வியாபாரம். அருகில் இன்டெர்னட் இணைப்புடன் கணினிகள் வைக்கப்பட்டிருந்தன. உலகின் மிக உயரமான இன்டெர்னட் மையம் இதுதான் என்ற அறிவிப்புப் பலகை பெருமையோடு பறைசாற்றியது.
“சிப்சு” என்ற பகுதியில் சாலை ஒட்டி மதராஸ் ரெஜிமெண்ட் அணி அமைந்துள்ளது. ‘பத்தொன்பதே வெற்றி நமதே’ என்ற வீர வரிகள் முகப்பில் எழுதப்பட்டிருந்தது கவனத்தை ஈர்த்தது. தூய்மையாகவும், நேர்த்தியாகவும் ராணுவத்திற்கே உண்டான ஒழுக்கமுடன் பராமரிக்கப்பட்டிருந்தது. முகப்பில் நின்ற வீரர் சகஜமாக அணியின் பொறுப்புகளை விவரித்தார். அவரது பொறுப்புணர்ச்சியும் ஈடுபாடும் மெச்சத்தக்கது. சிப்சு கிராமவழி சாலையில் ஒரு அறிவிப்புப் பலகை இந்தியிலும் ஆங்கிலத்திலும் போடப்பட்டிருந்தது. அதில் ராணுவ விரர்கள் கிராமத்திற்க்கு முகாந்திரம் இன்றி செல்லக் கூடாது என்று அறிவுறுத்தும் வாசகங்கள், எந்த ஒரு உள்ளுர் பிரச்சனையிலும் ராணுவத்தினர் ஈடுபடுக்கூடாது என்பதற்காக ராணுவ தலைமையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை.
இந்தியாவின் பொக்கிஷம் என்று உணரப்படுவது பல நூற்றாண்டுகளாக சமுதாயாதோடு இழைந்த கலாச்சாரம், எல்லா நாட்டவரையும் வரவேற்கும் மனப்பாங்கு, வேறுபாடுகளை அனுசரித்துப் பழகும் பக்குவம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம், கேங்டாக் நகரில் உள்ள நாம்கியால் திபேத்திய ஆராய்ச்சி மையம் தொன்மையான இந்திய கலாச்சாரத்தின் அடிச்சுவடுகளை தாங்கிய தங்கப் பெட்டகம் என்றால் மிகையில்லை. ஐம்பது வருடங்களாக இயங்கிவரும் இந்த ஆராய்ச்சி மையத்தின் முக்கியக் குறிக்கோள் புத்த மதத்தின் மஹாயானா பிரிவின் சித்தாந்தங்களை பண்டை நூல்களிலிருந்து தொகுத்து ஆராய்ந்து மக்களிடையே பகிர்ந்து கொண்டு சமுதாயத்தை மேன்மையடையச் செய்வது, அரிய பல சமஸ்கிருத நூல்களும் அதன் மொழி பெயர்ப்பும் பல நூற்றாண்டுகளுக்கு முன் இந்தப் பகுதியில் விஜயம் செய்த புகழ் பெற்ற சர்வதேச யாத்திரிகர்களின் குறிப்புகள், விமர்சனங்கள், வியாக்கியானங்கள், அந்த காலத்திய சமூகநிலையை நன்கு விளக்குகிறது. சிக்கிம் அரசப் பரம்பரையை சேர்ந்த சோக்யால் தோஷி நாம்கியால் அவர்களின் அரசாட்சியின் போது துவங்கப்பட்ட இந்த ஆராய்ச்சி மையம் வளர்ச்சியடைய நல்ல பல முயற்சிகள் எடுக்கப்பட்டு சிறந்த பராமரிப்பில் உள்ளது, சிக்கிம் விஜயம் இந்த மையத்தை பாராமல் பூர்த்தியடையாது.
டார்ஜிலிங் மிக அழகான குளிர் பிரதேசம். ஹிமாலய மலைத்தொடரை “டைகர் டாப்” என்ற உச்சி இடத்திலிருந்து கண்டு களிக்கலாம். கூர்க்கா இனத்தை சேர்ந்தவர் அதிகம். அண்டை நாடான நேபாளத்திலிருந்து குடிபெயர்ந்தவர்களின் வரத்து, அவர்களின் சொந்த பந்தங்கள், நேபாளத்தில் உள்நாட்டு பிரச்சினையின் தாக்கம் என்று டார்ஜிலிங் கொதுவை நிலையில் உள்ளது. செப்பனிடப்படாத சாலைகள், நெரிசல் மிகுந்த மையப்பகுதி, அகற்றப்படாத குப்பைகள் ஒரு முக்கிய சுற்றுலா மையத்திற்கு அழகு சேர்ப்பதாக இல்லை. அரசு அலுவலகங்களில் கோர்க்கா மாநிலம் என்று தன்னிச்சையாக வைக்கப்பட்ட பெயர் பலகை வாகனங்களில் மேற்கு வங்காளம் என்பதற்கு பதிலாக கோர்க்கா மாநிலம் என்பதற்கு அடையாளமாக ஜி.எல்.என்ற பதிவுக் குறியீடு அங்குள்ள பிரச்சனையை பிரதிபலிக்கிறது. நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மையை கருத்தில் கொண்டு தீர்வு ஏற்படுவதற்கு பலதரப்பட்ட பங்கேற்பாளர்களின் ஒத்துழைப்பு தேவை.பழங்குடி மக்கள் வாழும் இடங்களில் அவர்களுடைய பழக்க வழக்கங்கள், உணர்வுகள், காலம் காலமாக வாழ்க்கையில் இழைந்த நம்பிக்கைகள் இவைகளை மனதில் கொண்டு அரசுப் பணிகள் நிறைவேற்றப்பட வேண்டும். எந்த இடமானாலும் மக்களின் தேவைகளை உணர்ந்து அரசு ஊழியர்கள் செயல்பட வேண்டும். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நாட்டில் ஆட்சி நடத்துவது போன்ற முறையில் நடந்து கொள்ளக்கூடாது. இத்தகைய மனநிலையுடன் அதிகார தோரணையோடு நடந்து கொள்ளும் சில அரசு அதிகாரிகளால் மக்களுக்கு வெறுப்பு உண்டாகிறது. நாட்டின் வளர்ச்சியில் தமக்குரிய பங்கு மறுக்கப்படுகிறது என்ற நிலைக்குத் மக்கள் தள்ளப்படுகிறார்கள். பிரிவினைவாதத்திற்கு இடப்படும் முதல் வித்து இதுதான். டார்ஜிலிங் கூர்க்கா தனிமாநிலம் வேண்டும் என்ற போராட்டமும் இதன் காரணமாக ஏற்பட்டதுதான். சிக்கிம் போர்த்திற முக்கியத்துவம் வாய்ந்த எல்லைப் பகுதியில் உள்ளது. பழங்குடி மக்களுக்கே உரித்தான எளிமை காண முடியும். ஆனால் கூருணர்வுடையவர்கள். “செப்பு மொழி பல உடையாள் ஆனால் சிந்தனை ஒன்றுடையாள்” என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கேற்ப பாரத தேசத்தோடு ஒன்றிய சிக்கிம் மாநில மக்கள் போற்றுதலுக்குரியவர்கள்.

இந்த கட்டுரை தினமணி நாளிதழில் கதிர் இணைப்பில் 24.05.2009 அன்று பிரசுரிக்கப்பட்டது.