Friday, December 26, 2008

இரண்டாவது சுதந்திரப் போர்


டி மேல் இடி என்று இந்த வருடம் தொடர்ந்து இந்தியாவின் பல இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பல அப்பாவிகள் உயிர் இழந்தனர். உத்திரபிரதேசம், பெங்களூரூ, குஜராத், ராஜஸ்தான், ஐதராபாத், தில்லி இப்போது மும்பாய் ஆகிய முக்கிய நகரங்களையும் சேர்த்து 59 இடங்களில் நடந்த தாக்குதலில் 441 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
தாக்குதலில் ஈடுபடும் திவிரவாதிகளின் நோக்கம் சகஜ வாழ்க்கையை நிலைகுலைய செய்து சமுதாயத்தில் பிளவு ஏற்படுத்துவது, விரோதத்தை வளர்ப்பது, முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் தடுப்பது, பாதிப்பு அடைய செய்வது, கலகம் விளைவித்து ஆதாயம் தேடுவது. நடந்த நிகழ்வுகளில் சமுதாயத்தில் வேறு விதமான மதம் சார்புடைய கலகங்கள் நடவாமல் தடுக்கப்பட்டதில் ஒரளவு திருப்தி அடையலாம். இது சாதாரண மக்களின் முதிர்ச்சியான அணுகுமுறையையே பிரதிபலிக்கிறது. மக்கள் அமைதியையே விரும்புகிறார்கள். நவம்பர் 26-ம் நாள் மும்பாயில் நடந்த கொடூரமான தாக்குல் மக்களை சிந்திக்க வைத்துள்ளது. மக்களை பிளவுபடுத்த நினைத்த கலகக்காரர்களின் குறிக்கோள் வெற்றியடையவில்லை மாறாக தீவிரவாதத்தை ஒடுக்கவேண்டும், ஒன்று சேர்ந்து தகர்த்தெறிய வேண்டும் என்ற ஒருமித்த எண்ணம் வளர்ந்துள்ளது வரவேற்கத்தக்கது.
பலவிதங்களில் மும்பாய் தாக்குதல் வித்தியசமானது எல்லாவிதத்திலும் அரசு அமைப்புகளின் செயல்பாடுகளில் இருக்கக்கூடிய குறைகளையும், தவறுகளையும் படம் பிடித்து காட்டியுள்ளது.
தீவிரவாதிகள் புகுந்த இடம் பிரசித்தி பெற்ற தாஜ், ட்ரைடண்ட் நட்சத்திர ஹோட்டல்கள். தாக்குதலுக்குள்ளானவர்கள் அமெரிக்க, ஐரோப்பா, இங்கிலாந்து நாட்டினர். வசதியானவர்கள் தாக்கப்பட்டனர். சத்ரபதி சிவாஜி இரயில் நிலையம் நெரிசல் மிகுந்த பகுதி. சரமாரியாக மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மத நல்லிணக்கதை போற்றும் பல மதத்தினரும் மகிழ்ச்சியாக நேரம் கழிக்கும் இடம் லியோபால்ட் சிற்றுண்டி விடுதி, அதுவும் தாக்கப்பட்டது. அவர்களது மற்றோர் இலக்கு யூத மதத்தை சேர்ந்த இஸ்ரேல் நாட்டு தம்பதிகளின் இருப்பிடம். அந்த தம்பதிகள் செய்த ஒரே குற்றம் எல்லாதரப்பட்ட மக்களையும் நேசித்தது. நல்லவர்கள் தாக்கப்பட்டனர். வல்லவர்கள் உயிரிழந்தனர். நலிந்தவர்கள் இரத்த வெள்ளத்தில் மாண்டனர். ஒரே நேரத்தில் பல இடங்களில் தாக்குதல். துரிதமான, வக்கிரமான, கோரமான தாக்குதல் நிர்வாகத்தை நிலைகுலைய செய்தது. இவை உள்ளூரில் உள்ளவர்களின் உதவியின்றி சாத்தியமில்லை. தெரிந்தோ, தெரியாமலோ அவர்கள் உடந்தையாக இருந்திருக்கின்றனர்.
இதற்கு முடிவு தான் என்ன? நாடு கடந்த தீவிரவாத நிகழ்வுகளை சமாளிப்பது உள்ளூர் காவல்துறையால் முடியாது. அவர்கள் அன்றாட சாதாரண சட்டமீறல்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மட்டும் பயிற்சி பெற்றவர்கள். பல்வேறு தீவிரவாத அமைப்புகளை கண்காணித்தல், தீவிரவாத அமைப்புகள் பற்றிய செய்திகள் சேகரித்தல், தகவல் சேகரித்தல் போன்றவை சிறப்புப் பயிற்சிப் பெற்ற போலீஸசாரால்தான் கையாள முடியும். மும்பாய் தாக்குதல் போன்ற சம்பவங்களை கமாண்டோ பயிற்சிப் பெற்ற பாதுகாப்பு பிரிவினரால்தான் எதிர்கொள்ள முடியும். ஆனால் உள்ளூர் காவல்துறையினர் சங்தேக நபர்களைப் பற்றி தகவல் சேகரிக்க வேண்டும். அதன் மூலம் தீவிரவாத அமைப்புகளுக்கு உதவும் உள்ளூர்வாசிகள் பற்றிய தகவல்கள் சேகரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது முக்கியமான பொறுப்பாகும். மும்பாய் நகரம் பல தீவிரவாத தாக்குதல்களுக்கு உள்ளாகியும் முக்கியமாக 1993-ல் தொடர் குண்டுவெடிப்பில் 252 உயிரிழப்புக்குப் பிறகும் மும்பையில் ஒரு கமாண்டோ படை உருவாக்காமல் விட்டது மிகப் பெரிய தவறு. துப்பாக்கி சண்டை துவங்கி 12 மணி நேரம் டில்லியிலிருந்து தேசிய கமாண்டோ பிரிவினர் வருவதற்கு காத்திருக்க வேண்டியிருந்தது.
மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழக காவல் துறையின் தயார் நிலை பன்மடங்கு உயர்ந்தது என்பது உண்மை. 1991-ம் ஆண்டு திருப்பெரும்புதூர் குண்டுவெடிப்பிற்குப்பின் கடலோர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.ஒவ்வொரு காலகட்டத்திலும் நவீன கருவிகள், வாகனங்கள், தொலை தொடர்பு சாதனங்கள் மூலம் மேம்படுத்தப்பட்டது.எல்லா மாவட்டங்களிலும் முக்கியமான இடங்களில் செக் போஸ்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 1992-ல் கமாண்டோ பிரிவு துவக்கப்பட்டு, 1996-ம் ஆண்டு இது மேலும் பலப்படுத்தப்பட்டது. பல பீமன்களையும், அர்ஜுனர்களையும் கொண்ட செயல் திறன்மிக்க அணி என்பதில் ஐயமில்லை.
தமிழக காவலர் போர்க்கால நிலையில் தன்னார்வத்தோடு பணிகளை செய்பவர். திறமைசாலி அதைவிட பொறுமைசாலி. சென்னை நகரத்தையும் மற்ற கடலோரப் பகுதிகளையும் சுனாமி தாக்கியபோது திறம்பட மக்களுக்கு பணிபுரிந்துள்ளனர். 2005-ம் ஆண்டு எல்லா மாநகரங்களுக்கும் தீவிரவாத அபாயம் உண்டு என்ற தகவல் இருந்தது. பெங்களூரில் இந்திய விஞ்ஞான வளாகத்தில் தாக்குதலும் நடந்தது. ஆனால் சென்னை போலீஸார் திறம்பட செயல்பட்டு இரவு பகல் பாராமல் தொடர் நடவடிக்கை எடுத்து நகரத்தை பாதுகாத்தனர். தீவரவாதிகளை அண்டவிடாமல் செய்தனர். இந்த சிறந்த அமைப்பின் ஒழுங்குணர்வை பாதுகாத்து வழிநடத்தி செல்வது மேலதிகாரிகளின் கையில் உள்ளது.பொது மக்கள் காவல்துறையின் பணிகளில் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அந்த ஒத்துழைப்பை பெற காவல்துறையினரும் தமது பணிகளை திறம்பட செய்திட வேண்டும். பொது இடங்களில் சந்தேகிக்கும் பொருள்கள் இருந்தாலோ, சந்தேக நபர்கள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
சந்தேகிக்கக்கூடிய நபர்களை பற்றியும், கேட்பாரின்றி கிடக்கும் அனாமதேய பொருட்கள் பற்றிய தகவல்கள் கொடுப்பதற்கென்றே 1090 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி எண் மூலம் இந்தியாவில் எங்கிருந்தாலும் தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எல்லோரும் விழிப்புடன் செயல்பட வேண்டிய நேரம் இது. இது இந்திய ஆளுமைக்கே சவால். மக்கள் சக்தி மகத்தானது. மும்பையில் பிடிபட்ட தீவிரவாதி லத்தி மட்டும் ஏந்திய துணிச்சலான காவலர்களால் சாதிக்க முடிந்தது என்பது நெஞ்சுறுதியும் வீரமும்தான் உண்மையான ஆயுதங்கள் என்று தெளிவுபடுத்துகிறது. மக்களிடையே விரோதத்தை வளர்க்கும் பிரிவினை சக்திகளுக்கு இடம் கொடாது தீவிரவாதத்தை ஒடுக்குவோம், பயங்கரவாதத்தின் மீது போர் தொடுப்போம். மனித நேயத்தை வளர்த்து பாரதி கனவு கண்ட சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவோம்.


இந்த கட்டுரை தினமலர் நாளிதழில் 21.12.2008 அன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.

Monday, December 15, 2008

காவல்துறை செயல்பட வேண்டும்; செயல்படவிடப்படவேண்டும்.

“உன்னைச் சொல்லி குற்றமில்லை
என்னைச் சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி”

மும்பையில் நடந்த கொடூரத் தாக்குதல் தொடர்பாக ஒருவருக்கொருவர் பழிசுமத்தி தங்களைப் பொறுத்தவரையில் தவறொன்றுமில்லை என்று பொறுப்பில் உள்ளவர்கள் கூறியது மேற்சொன்ன பாடலைத் தான் நினைவுபடுத்தியது. ஒவ்வொரு அரசு அமைப்பும் தான் செய்ய வேண்டிய கடமையை செய்துவிட்டதாக தற்காப்பு தன்னிலை விளக்கங்கள் மக்களை சலிப்படையச் செய்கின்றன. ஒவ்வொருவரும் தமது பெறுப்பை சரிவர செய்திருந்தால் ஏன் இந்த கொடூர தாக்குதல் நிகழ்ந்தது? இந்த தாக்குதல் நம் எல்லோருக்கும் பல பாடங்களை கற்பித்திருக்கிறது.

· விரல் விட்டு எண்ணக்கூடிய தற்கொலைப் படையினர் ஒரு கொடிய போரினால் ஏற்படக்கூடிய விளைவுகளை விட பயங்கரமான மனநிலை பாதிப்புகள் மக்களின் மத்தியில் ஏற்படுத்த முடியும் என்பது நிதர்சன உண்மை.

· டில்லி தொடர் குண்டு வெடிப்புகளுக்குப் பின் மும்பை நகர தாக்குதலுக்குள்ளாகும் என்ற தகவல் கொடுக்கப்பட்டும் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது. நடவடிக்கை எடுக்கக்கூடிய குறிப்பிட்ட தகவல் இல்லை என்று சால்ஜாப்பு காரணம் காட்டியது.

· தீவிரவாதிகள் தாக்குதல் துவங்கிய பிறகு மும்பாய் போலீஸின் திட்டமிடாத முதல்கட்ட அணுகுமுறை.

· சம்பவ இடத்தை பாதுகாக்க வேண்டும், பொதுமக்களின் இடையூறின்றி பணிகள் செய்ய இடைவெளி ஏற்படுத்தத் தவறியதால் சுற்றுப்புறச் சாலை ஏதோ திருவிழாக்கூட்டம் போல் காட்சியளித்தது.

· உபயோகமாக ஒரு உதவியும் செய்யாமல் வேடிக்கைப் பார்க்கும் மக்களின் மனப்போக்கு.

· தீவிரவாதிகள் போலீஸ் வாகனத்தையே கடத்திச் செல்லும் அளவிற்கு போலீஸ் கவனக் குறைவாக இருந்தது.

· மீன் பிடிக்கும் துறைமுகத்தில் சந்தேகப்படும் வகையில் மூட்டைகளை சுமந்து சிலர் இறங்கியுள்ளனர் என்ற தகவல் கிடைத்தும் நடவடிக்கை எடுக்கத் தவறியது.

· அசாதாரணமான நிலைமையை சமாளிப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட முக்கியத்துறைகள் கூடிய அவசரநிலைகுழு செயல்படாதது.

· தேசிய பாதுகாப்பு கமாண்டோக்கள் பணிகளை மேற்கொள்ள பல மணி நேரத்திற்கும் மேற்பட்ட கால தாமதம்.

· தனியார் தொலைக்காட்சிகளின் பொறுப்பற்ற விமர்சனங்கள். பாதுகாப்பு படையினரின் பணிகளில் இடஞ்சல் ஏற்படுத்தும் வகையில் குறுக்கீடு.

· அசம்பாவிதம் நிகழக்கூடிய இடங்களில் உயர் அதிகாரிகள் ஒரே வாகனத்தில் பயணிக்கக்கூடாது என்ற விதிகள் இருந்தும் மூன்று அதிகாரிகள் ஒரே வாகனத்தில் சென்று தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பலியானது.

இவ்வாறு பல தவறுகள் நமக்கு பாடம் புகட்ட வேண்டும்.

1990-ல் இருந்து மும்பாய் நகரில் பல தீவிரவாத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழ்நாடு 1980-ல் இருந்தே இலங்கை உள்நாட்டு கலகத்தினால் இம்மாதிரி பிரச்சனைகளை சந்தித்துவிட்டது. 1984-ம் வருடம் சென்னை விமான நிலைய குண்டுவெடிப்பில் 33 பயணிகள் உயிரிழந்ததை மறந்துவிடமுடியாது. இந்தியாவில் இந்த வருடம் 59 தீவிரவாத நிகழ்வுகளில் 441 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

நவம்பர் 26 மும்பை தாக்குதல் பலவகையில் வித்தியாசமானது. அமெரிக்காவின் 9/11-க்கு ஒப்பிட்டு கூறலாம் என்பது நிபுணர்களின் கணிப்பு. தீவிரவாதிகள் புகுந்த இடம் பிரசித்தி பெற்ற தாஜ், ட்ரைடண்ட் நட்சத்திர ஹோட்டல்கள். தாக்குதலுக்குள்ளானவர்கள் அமெரிக்க, ஐரோப்பா, இங்கிலாந்து நாட்டினர். வசதியானவர்கள் தாக்கப்பட்டனர். சத்ரபதி சிவாஜி இரயில் நிலையம் நெரிசல் மிகுந்த பகுதி. சரமாரியாக மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மத நல்லிணக்கதை போற்றும் பல மதத்தினரும் மகிழ்ச்சியாக நேரம் கழிக்கும் இடம் லியோபால்ட் சிற்றுண்டி விடுதி, அதுவும் தாக்கப்பட்டது. அவர்களது மற்றோர் இலக்கு யூத மதத்தை சேர்ந்த இஸ்ரேல் நாட்டு தம்பதிகளின் இருப்பிடம். அந்த தம்பதிகள் செய்த ஒரே குற்றம் எல்லாதரப்பட்ட மக்களையும் நேசித்தது. நல்லவர்கள் தாக்கப்பட்டனர். வல்லவர்கள் உயிரிழந்தனர். நலிந்தவர்கள் இரத்த வெள்ளத்தில் மாண்டனர். ஒரே நேரத்தில் பல இடங்களில் தாக்குதல். துரிதமான, வக்கிரமான, கோரமான தாக்குதல் நிர்வாகத்தை நிலைகுலைய செய்தது. இவை உள்ளூரில் உள்ளவர்களின் உதவியின்றி சாத்தியமில்லை. தெரிந்தோ, தெரியாமலோ அவர்கள் உடந்தையாக இருந்திருக்கின்றனர்.

இதற்கு முடிவு தான் என்ன? நாடு கடந்த தீவிரவாத நிகழ்வுகளை சமாளிப்பது உள்ளூர் காவல்துறையால் முடியாது. அவர்கள் அன்றாட சாதாரண சட்டமீறல்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மட்டும் பயிற்சி பெற்றவர்கள். பல்வேறு தீவிரவாத அமைப்புகளை கண்காணித்தல், தீவிரவாத அமைப்புகள் பற்றிய செய்திகள் சேகரித்தல், தகவல் சேகரித்தல் போன்றவை சிறப்புப் பயிற்சிப் பெற்ற போலீஸசாரால்தான் கையாள முடியும். மும்பாய் தாக்குதல் போன்ற சம்பவங்களை கமாண்டோ பயிற்சிப் பெற்ற பாதுகாப்பு பிரிவினரால்தான் எதிர்கொள்ள முடியும். ஆனால் உள்ளூர் காவல்துறையினர் சங்தேக நபர்களைப் பற்றி தகவல் சேகரிக்க வேண்டும். அதன் மூலம் தீவிரவாத அமைப்புகளுக்கு உதவும் உள்ளூர்வாசிகள் பற்றிய தகவல்கள் சேகரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது முக்கியமான பொறுப்பாகும். மும்பாய் நகரம் பல தீவிரவாத தாக்குதல்களுக்கு உள்ளாகியும் முக்கியமாக 1993-ல் தொடர் குண்டுவெடிப்பில் 252 உயிரிழப்புக்குப் பிறகும் மும்பையில் ஒரு கமாண்டோ படை உருவாக்காமல் விட்டது மிகப் பெரிய தவறு. துப்பாக்கி சண்டை துவங்கி 12 மணி நேரம் டில்லியிலிருந்து தேசிய கமாண்டோ பிரிவினர் வருவதற்கு காத்திருக்க வேண்டியிருந்தது.

தற்போது சென்னையிலும், மும்பை தாக்குதலுக்குப்பின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழக காவல் துறையின் தயார் நிலை பன்மடங்கு உயர்ந்தது என்பது உண்மை. 1991-ம் ஆண்டு திருப்பெரும்புதூர் குண்டுவெடிப்பிற்குப்பின் கடலோர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தமிழ்நாடு சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் கடற்பகுதியியைப் கொண்டது. 1993-ம் வருடம் கடலோர பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டு ஒவ்வொரு காலகட்டத்திலும் நவீன கருவிகள், வாகனங்கள், தொலை தொடர்பு சாதனங்கள் மூலம் மேம்படுத்தப்பட்டது. சென்னை கடலோர ஆழமில்லா பகுதியில் ரோந்து செய்ய மிதக்கும் காவல்நிலையம் சென்னை மாநகர காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. எல்லா மாவட்டங்களிலும் முக்கியமான இடங்களில் செக் போஸ்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 1992-ல் கமாண்டோ பிரிவு துவக்கப்பட்டு, 1996-ம் ஆண்டு இது மேலும் பலப்படுத்தப்பட்டது. பல பீமன்களையும், அர்ஜுனர்களையும் கொண்ட செயல் திறன்மிக்க அணி என்பதில் ஐயமில்லை. கமாண்டோ பயிற்சிப் பள்ளியும் துவக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதி நவீன துப்பாக்கிகள், இரவில் உபயோகிக்கக்கூடிய பைனாகுலர்கள், துண்டு துளைக்காத கவசங்கள் வாங்கப்பட்டுள்ளன. எல்லாவற்றிற்க்கும் மேலாக கமாண்டோக்களுக்கு விசேஷ பயிற்சி தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டங்களிலும் தனி கமாண்டோ குழுக்கள் பயிற்சி பெற்ற மாவட்ட ரிசர்வ் படையில் உள்ளனர்.

1998-ம் வருடம் கோயம்புத்தூர் தொடர் குண்டு வெடிப்பு சம்பந்தப்பட்ட வழக்குகள் சிறப்பு விசாரணைக்குழு மூலம் விசாரணை செய்யப்பட்டு மனித உரிமை மீறல்களுக்கு இடம் கொடாது கையாளப்பட்டன. அதே சமயம் சிறுபான்மையினரின் குறைகளை களையும் விதத்தில் சிறப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

தமிழக காவலர் போர்க்கால நிலையில் தன்னார்வத்தோடு பணிகளை செய்பவர். திறமைசாலி அதைவிட பொறுமைசாலி. சென்னை நகரத்தையும் மற்ற கடலோரப் பகுதிகளையும் சுனாமி தாக்கியபோது திறம்பட மக்களுக்கு பணிபுரிந்துள்ளனர். 2005-ம் ஆண்டு எல்லா மாநகரங்களுக்கும் தீவிரவாத அபாயம் உண்டு என்ற தகவல் இருந்தது. பெங்களூரில் இந்திய விஞ்ஞான வளாகத்தில் தாக்குதலும் நடந்தது. ஆனால் சென்னை போலீஸார் திறம்பட செயல்பட்டு இரவு பகல் பாராமல் தொடர் நடவடிக்கை எடுத்து நகரத்தை பாதுகாத்தனர். தீவரவாதிகளை அண்டவிடாமல் செய்தனர். இந்த சிறந்த அமைப்பின் ஒழுங்குணர்வை பாதுகாத்து வழிநடத்தி செல்வது மேலதிகாரிகளின் கையில் உள்ளது.

கோர சம்பவங்கள் 26-ம் தேதியில் நிகழ்வது வினோத ஒற்றுமை.
டிசம்பர் 26 சுனாமி தாக்குதல்
ஜனவரி 26 எல்லைப் பகுதி கட்ச் நிலநடுக்கம்
பிப்ரவரி 26 குஜராத் ‘கோத்ரா’ நிகழ்வு
ஜுன் 26 குஜராத்தில் வெள்ளம்
ஜூலை 26 மும்பை ரயில் குண்டு வெடிப்பு
செப்டம்பர் 26 அகமதாபாத் குண்டு வெடிப்பு
நவம்பர் 26 மும்பை படையெடுப்பு
26-ம் தேதியில் துரதிருஷ்டம் இந்தியாவை துரத்துகிறதா?

போதுமடா சாமி இனியாவது தீவிரவாதத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்று சமுதாயத்தில் உணர்வு மேலோங்குவது வரவேற்கத்தக்கது. என்னதான் நவீன கருவிகள் பாதுகாப்புப் பிரிவினருக்கு கொடுத்தாலும் ஜனரஞ்சக தகவல் சேகரிப்பு முறை கைவிட முடியாது. மும்பாய் நிகழ்வில் மீன்பிடித்துறையில் மூட்டைகளுடன் இறங்கிய தீவிரவாதிகளை சந்தேகப்பட்டு காவல்துறைக்கு மீனவப் பெண் கொடுத்த தகவலை உள்ளூர் காவல்துறையினர் சரியாக விசாரிக்கவில்லை. உத்திரப்பிரதேசத்தில் மத்திய ரிசர்வ் படையின் முகாமில் பிதாயின் தாக்குதல் நடந்த சம்பவத்தில் உத்திரப்பிரதேச போலீஸார் பாஹிம் என்பவனை இந்த வருடம் பிப்ரவரி மாதம் கைது செய்தனர். அவனிடமிருந்து தெற்கு மும்பையின் பல முக்கிய பொது இடங்களின் வரைபடங்கள் கைப்பற்றப்பட்டன. அவனும் பாகிஸ்தானில் உள்ள முர்ஷிதாபாத்தில் பயிற்சி பெற்றவன். தீவிரவாதிகள் ஊடுருவல் நடக்கக்கூடும் என்ற தகவல் சிவில் போலீஸாருக்கு பரிமாற்றம் செய்து சரிவர அவர்கள் உணர்த்தப்படாதது மற்றுமொரு தவறு. இதற்கு மேற்பார்வையிடும் அதிகாரிகளே பொறுப்பு. இந்த அசம்பாவிதத்திற்குப் பிறகும் ஒரு பத்திரிக்கையாளர் பாதுகாப்பை சோதிக்கும் வகையில் சந்தேகப்படும் பொருட்களோடு படகில் அதே மீன்பிடி துறையில் இறங்கியுள்ளார். எவரும் அவரை சந்தேகிக்கவில்லை. இரயில் நிலைய சோதனையையும் மீறி கையில் துப்பாக்கியோடு கடந்திருக்கிறார். இது நமது கடைநிலை பாதுகாப்பில் உள்ள ஓட்டைகளை உணர்த்துகிறது. இப்போது போலீஸின் பிடியில் உள்ள தீவிரவாதி அசல் அமீர் காசப் என்பவன், லத்தி மட்டும் ஏந்திய சில சமயோஜித காவலர்களால் பிடிக்கப்பட்டான் என்பது செய்தி. நெஞ்சுறுதியும், கடமையுணர்வும் தான் நவீன துப்பாக்கிகளைவிட பலமான ஆயுதம் என்பதற்கு வேறென்ன உதாரணம் வேண்டும்!

சந்தேகிக்கக்கூடிய நபர்களை பற்றியும், கேட்பாரின்றி கிடக்கும் அனாமதேய பொருட்கள் பற்றிய தகவல்கள் கொடுப்பதற்கென்றே 1090 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி எண் மூலம் இந்தியாவில் எங்கிருந்தாலும் தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மும்பைக்கு ஆபத்து உள்ளது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதை எவ்வாறு தவிர்ப்பது, எதிர்கொள்வது என்பதில் தவறவிட்டுவிட்டோம். எல்லா நிலையிலும் காவல்துறை, அரசாளுமை, சமுதாயம், ஊடகங்கள் என ஒன்று சேர்ந்து செயலிழந்தன. தமது உயிரை பணயம் வைத்து தீவிரவாதிகளை எதிர்த்து பல உயிர்களைப் காப்பாற்றி இரத்தம் சிந்திய இரத்தின திலகங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாகுபாடின்றி தீவிரவாதத்தை முறியடிப்போம். இனியாவது விழித்துக் கொண்டு செயல்பட வேண்டும். அதற்கு முதல் கட்டமாக காவல்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும் - செயல்படவிடப்படவேண்டும்.

இந்த கட்டுரை தினமலர் நாளிதழில் 14.12.2008 அன்று உரத்த சிந்தனை பகுதியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது

Wednesday, December 10, 2008

சிறைகளையும் ஊடுருவும் உரிமைகள்

1948-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் நாள் உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனப்படுத்தப்பட்டது. 1914-18 -ல் நடந்த முதல் உலகப் போர், தொடர்ந்து 1939-45-ல் நடந்த இரண்டாம் உலகப் போர் எண்ணில்லா மனித உயிர்களை பலி கொண்டது. இனவெறித் தாக்குதல் நடைபெற்றது. இம்மாதிரி கொடுமை மீண்டும் நிகழக் கூடாது என்ற அடிப்படையிலும், நாடுகளுக்கிடையில் பரஸ்பர நல்லுறவு மனித நேய அடிப்டையில் வளர்க்கவும், 1945-ம் வருடம் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி மனைவி எலினா ரூஸ்வல்ட் தலைமையில் அடிப்படை மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளோடு மனித உரிமைகள் சாசனம் வரையறுக்க பல நாடுகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் பரிந்துரையின் பேரில் 30 பிரிவுகள் கொண்ட அடிப்படை மனித உரிமைகள் தெரிவு செய்யப்பட்டு ஐக்கிய நாடுகள் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. டிசம்பர் 10, 1948-ம் வருடம் ஐக்கிய நாடுகளின் பொதுக்கழு பாரீஸ் மாநகரத்தில் மனித உரிமைகள் பிரகடனத்திற்கு அங்கீகாரம் அளித்தது. அங்கீகாரம் அளித்த 58 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த புனித நாளை மனித உரிமைகள் தினமாக 1950-ம் வருடத்திலிருந்து அனுசரிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வருடமும் முக்கியமான மனித உரிமைகள் பிரச்சினை முன்னிறுத்தப்பட்டு அதற்காக விழிப்புணர்ச்சி மக்களிடையே ஏற்படுத்தப்படும். கடந்த வருடங்களில் வறுமை ஒழிப்பு, மனித உரிமைக் கல்வி, குழந்தைகளின் உரிமைகள், பெண்ணுரிமை, அகதிகளின் உரிமைகள், விசாரணை கைதிகளின் உரிமைகள் என்று பல உரிமை பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டுள்ளன. 60 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் சமநீதி, கண்ணியம் எல்லோருக்கும் சென்றடைய வேண்டுமென்ற உயரிய குறிக்கோளை செயலாக்க வேண்டும் என்ற இலக்கை வைத்துள்ளது. பல நிகழ்ச்சிகளும், கருத்தரங்குகளும் நடத்தப்பட்டன. பிப்ரவரி 2008-ல் மனித இழி தொடர் வாணிபம் மூலம் மனிதர்கள் நாடு கடத்தப்பட்டு வியாபார பொருளாக ஈடுபடுத்தப்படும் கொடிய செயல் பற்றிய கருத்தரங்கு நடத்தப்பட்டது.

இந்த வருடம் அக்டோபர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் சிறைவாசிகள் மற்றும் காவலில் உள்ளவர்களின் உரிமைகளை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டது. சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளவர்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தியும், சிறைவாசிகளுக்குரிய உரிமைகள் பற்றியும் கருத்தரங்கு நடத்தியது. சிறையில் உள்ளவர்களை மனித நேயத்தோடு நடத்துவதில்லை என்பது சிறை நிர்வாகத்தின் மிது பொதுவாக தொடுக்கப்படும் குற்றச்சாட்டு. இதை மனதில் கொண்டுதான் மகாத்மா காந்தி அவர்கள் மிக அழகாகச் சொன்னர்கள் “சிறைவாசிகள் அடிமைகள் அல்ல, அவர்கள் நாட்டின் உடமைகள்”.

உயிர், சுதந்திரம், சமத்துவம், கண்ணியம் மனித உரிமைகளின் தூண்கள் எனலாம். இந்திய அரசியல் சட்டம் பாகம் மூன்றில் இந்த அடிப்படை உரிமைகளுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இவ்வுரிமைகளுக்கு சட்டப்படி சில வரைமுறைகள் வகுக்கலாமே தவிர எக்காரணம் கொண்டும் மறுக்கப்பட முடியாது. காலில் ஜிப்ரான் பலம் படைத்தவர்களின் அடக்குமுறை போக்கை “கல் உடைத்தோம் அதை வைத்து சிறை கட்டினாய், நூல் நூற்றோம் அதை சாட்டையாக்கி பிரயோகித்தாய்” என்று விவரிக்கின்றார். தொன்றுதொட்டு வரும் இம்மாதிரியான அடக்கு முறைகளால் சிறைச்சாலைகள் கொடூர மையங்கள் என்ற கணிப்புதான் மேலோங்கியுள்ளது.
எந்த ஒரு குற்ற நிகழ்வும் ஒருவருடைய உரிமை மீறல் சம்பந்தப்பட்டது. இதை விசாரிக்க வேண்டிய பொறுப்பு காவல்துறையினுடையது. அந்த விசாரணை நியாயமானதாகவும், நேர்மையாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும். முறையற்ற விசாரணையால் காவல்துறையின் மீதே மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எழுவது வேதனைக்குரிய விஷயம். ஒரு வழக்கு விசாரணையின்பொழுது குற்றம் புரிந்தவரை கண்டுபிடித்து ஆதாரத்தின் அடிப்படையில் கைது செய்து புலனாய்வு மேற்கொள்வது ஒரு முக்கிய கட்ட நடவடிக்கை. ஆனால் இத்தகைய கைது சட்டத்திற்கும், விதிகளுக்கும் உட்பட்டு இருக்க வேண்டும். முறையற்ற கைதினால் காவல்துறைக்கு அவப்பெயர் ஏற்படுகிறது.

மத்திய ஆவண காப்பகத்தின் அறிக்கையின்படி 2006-ம் வருடம் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 26.53 லட்சம் குற்றவாளிகளும், சமூக நல சட்டங்களின் கீழ் 35.54 லட்சம் குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த முப்பது வருடங்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை 92.20% உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 2007-ம் வருடம் 2.01 லட்சம் குற்றவாளிகள் இந்திய தண்டனை சட்ட வழக்குகளிலும், 5.31 லட்சம் குற்றவாளிகள் சமூக நல சட்ட வழக்குகளிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 65,091 பெண் குற்றவாளிகள் அடங்குவர். கைது நடவடிக்கையின் பொழுது டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் வரைமுறைப்படுத்தியுள்ள விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். முக்கியமாக கைது செய்த 24 மணி நேரத்திற்குள் பிரயாண நேரம் நீங்கலாக நீதிமன்றம் முன் ஆஜர்படுத்தப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் விளைவிக்கக்கூடிய வழக்குகள் தவிர்த்து மற்ற சாதாரண வழக்குகளில் கைது செய்தவரை காவல்துறையே ஜாமீனில் விடுவித்து மனித உரிமை மீறல் குற்றங்களைக் குறைக்கலாம். இங்குதான் காவல்துறையின் மேலதிகாரிகள் முதிர்ச்சியான வழிகாட்டுதல் அளிக்க வேண்டும். மேலும் எதிர்மறைத் தாக்குதல் (என்கௌண்ட்ர்) மிக அபாயகரமான நேர்வுகளில் மட்டும் மேற்கொள்ள வேண்டும். சாதாரண நிகழ்வுகளில் இத்தகைய அணுகுமுறை தவறானது.

சிறைவாசிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது அந்த நாட்டின் சமுதாய கலாச்சாரத்தின் பிரதிபலப்பு என்பது உண்மை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் காவலில் உள்ளவர்களின் அடிப்படை உரிமைகளை எடுத்துரைக்கிறது.

சுதந்திரம் என்பது எல்லோருக்கும் பொதுவானது. கைது நடவடிக்கை, காவலில் வைப்பது (சட்டத்தின் அடிப்படையில்) தவிர்க்க முடியாத நிலையில் மட்டும் எடுக்கப்பட வேண்டும்.

மனிதாபிமானம், கண்ணியம் பாதிக்கும் வகையில் ஒருவரும் நடத்தப்படக்கூடாது. காவலில் உள்ளவர்களை கொடுமைப்படுத்துதல் அறவே ஒழிக்கப்பட வேண்டும்.

காவலில் உள்ளவர்கள் கண்ணியமான முறையில், மனிதாபிமான முறையில் நடத்தப்படவேண்டும்.

காவலில் வைக்கபடுவர்கள், காவலுக்குள்ளான உரிமைகளைத்தவிர மற்ற சிவில், பொருளதார, கலாச்சார, சமுதாய உரிமைகள் அளிக்கப்பட வேண்டும்.

அவர்களுக்குண்டான உரிமைகளை பாகுபாடின்றி அனுபவிக்க உரிய சூழல் உருவாக்க வேண்டும்.

உரிமைகள் பறிக்கப்படும் பட்சத்தில் அதைப் பற்றி புகார் கொடுக்க அவர்களுக்கு உரிமை உண்டு.

தேசிய மனித உரிமைகள் ஆணையமும், காவலில் உள்ளவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டியதை முக்கியமான மனித உரிமையாக அறிவித்துள்ளது (Custodial Justice). எல்லா மாநிலங்களிலும் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள இல்லவாசிகளின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றதா என்பது கண்காணிக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 9 மத்திய சிறைகள் உட்பட 134 சிறை வளாகங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 20,000 இல்லவாசிகள் தங்க வசதி உள்ளது. இல்லவாசிகளின் மனித உரிமைகள் காக்கப்படவேண்டும் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இன்றி பணிகள் நிறைவு செய்யப்படுகின்றன.
சிறைச்சாலை நிர்வாகத்தை மேம்படுத்தும் விதத்தில் புதிய முயற்சிகள் பல எடுக்கப்பட்டுள்ளன.

· சிறைச்சாலை வளாகங்களில் அடைப்பில் உள்ள சிறைவாசிகளை ‘இல்லவாசிகள்’ என்று சுயமரியாதை பேணும் வகையில் அழைக்கும் முறை அமல்படுத்தல்.

· உணவுப் பண்டங்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடுகளை தவிர்க்க தரமான, அத்தியாவசியமான அரிசி, பருப்பு, சக்கரை வகைகளை அரசு சிவில் சப்ளை நிறுவனம் மூலம் கொள்முதல் செய்ய பரிந்துரையின் பேரில் அரசு ஆணையிடல்.

· எய்ட்ஸ் நோய் தடுப்பதற்கு விசேஷ ஆலோசனை மற்றும் பரிசோதனை மையம் எல்லா மத்திய சிறை வளாகங்களிலும் அமைத்தல். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட இல்லவாசிகளுக்கு சிறப்பு சிகிச்சை உணவு வழங்கல்.

· 60 வயதுக்கு மேற்பட்ட இல்லவாசிகளுக்கு அவர்கள் விருப்பத்தின் பேரில் தனி பராமரிப்பு ஏற்பாடு.

· உடல் ஊனமுற்ற இல்லவாசிகளுக்கு சிறப்பு மருத்துவ வசதி மற்றும் உணவு.

· இல்லவாசிகள் கல்வி பயில்வதற்கு முன்னுரிமை. வளர்கல்வி, ஆரம்பக் கல்வி, இடைநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் திறந்தவெளி பல்கலை கழகங்கள் மூலம் இளங்கலை கல்வி முறைகளுக்கு ஏற்பாடு.

· செயல் வழிக் கல்வித்திட்டம் அமல்படுத்தல்

· தொழில்நுட்ப கல்வி பயிற்சி அளித்தல்

· சிறைச்சாலைகளில் உள்ள தொழிற்சாலைகளை மேம்படுத்தி இல்லவாசிகளுக்கு சிறையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தல்.

· தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு இணைந்து உழைப்பதற்கு வாய்ப்பளித்து இல்லவாசிகள் பணம் ஈட்ட வழிவகுத்தல்.
· விடுதலையாகும் இல்லவாசிகளுக்கு புனர்வாழ்வு மற்றும் சமுதாயத்தோடு இணைந்து வாழ்வதற்கான ஏற்பாடு.

· யோகா, தியானம், வாழும்கலை பயிற்சிகள் மூலம் இல்லவாசிகளுக்கிடையே மன அமைதி ஏற்படுத்தல்.

· தேச பக்தி பாடல்கள் தினமும் சிறைச்சாலைகளில் ஒலிக்க ஏற்பாடு. இதன்மூலம் அவர்களின் நாட்டுப்பற்றை வளர்த்தல்.

· எல்லா மத பண்டிகைகளையும் இல்லவாசிகளோடு கொண்டாடுதல்.

· சிறைச்சாலை நிர்வாகப் பணியாளர்கள் பணிகள் பரிமளிக்க விசேஷ பயிற்சி துவக்கம்.

மனித உரிமைகள் புனிதமானவை அவை மனிதனின் இதயத்தில் இயற்கை அன்னையின் விரல்களால் எழுதப்பட்டவை. மனித நேயம் பேணுவோம் மனித உரிமைகள் காப்போம்.

உலக மனித உரிமை நாள் 10.12.2008 அன்று தினமணி நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது.

Wednesday, November 26, 2008

நெஞ்சு பொறுக்குதில்லையே...

ல்லூரி படிப்பு என்பது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. ஆரம்பப் பள்ளி படிப்பு, உயர்நிலைப் படிப்பு, பட்டப்படிப்பு, முதுகலைப்பட்டம் என்று ஒவ்வொரு கட்டத்திலும் கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்து முடிவில் உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கை பட்டம் பெற்றவர்களில் ஏழு சதவிகிதம் தான் என்பது புள்ளி விவரம். இதைப்பார்க்கும் பொழுது கல்லூரி படிப்பு ஒரு வரப் பிரசாதம் என்றே கொள்ள வேண்டும். கல்லூரி வளாகத்தைத் தாண்டும் பொழுது நன்றி கலந்த நிறைவுடன் சென்று முழுமையாக தம்மை ஈடுபடுத்தி அறிவை வளர்த்துக் கொள்வதுதான் சரியான அணுகுமுறை.

நவம்பர் 12-ம் நாள் சென்னை சட்டக் கல்லூரி வாயிலில் நிகழ்ந்த கொடூர சம்பவம் கல்லூரி வாசலின் புனிதத் தன்மையையே அழித்து விட்டது. ‘கல்லூரி வாசல்’ என்றாலே அன்று நடந்த அந்த கோர சம்பவம் தான் எல்லோருடையை நினைவுக்கும் வரும். தொலைக் காட்சியில் பார்த்தவர்கள் கதறாமல் இருந்திருக்க முடியாது. நம்மை அறியாமலேயே ‘ஐயோ அடிக்காதீங்ய்யா’ என்று காப்பாற்ற டிவியை நோக்கி ஓடத் தூண்டியது. கையில் தடியை வைத்திருந்தவர்கள் கண்களில்தான் எத்தனை கொடூரம், வெறுப்பு, வன்மை. கீழே விழுந்து கிடக்கும் சக மாணவனை ‘டேர்ன்’ போட்டுக் கொண்டு அடித்தார்கள். வேட்டையாடும் மிருகம் கூட தனது இரை கீழே விழுந்த பிறகு மீண்டும் தாக்காது.

அஹிம்சைவழியில் சுதந்திரம் பெற்றுத் தந்த காந்தி பிறந்த நாட்டிலா இந்த கொடுமை? சாதிக்கப் பிறந்த இளைஞர்கள் ஜாதி என்ற வட்டத்துக்குள் அடைபட்டு தாக்குதலில் ஈடுபடுவது ஏன்? எல்லாவற்றிற்கும் மேலாக சட்டத்தை அமல்படுத்த வேண்டியவர்கள், மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியவர்கள், அவர்களது உரிமைகளை நிலைநாட்டிட வேண்டியவர்கள் ஒரு சலனமில்லாது பார்த்துக் கொண்டிருந்தது நெஞ்சில் ஈரமுள்ள எந்த காவலைரையும் தலைகுனிய வைத்திருக்கும்.

சில வருடங்களுக்கு முன் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த டில்லி போலீஸார், தீவிரவாதிகள் ஒரு வாகனத்தில் டில்லிக்கு வருகிறார்கள் என்ற தகவலின் பேரில் காரில் வந்து கொண்டிருந்த இரு சந்தேக நபர்களை ஒரு முகாந்திரமும் இல்லாமல் சுட்டனர். பிறகுதான் தெரிந்தது அவர்கள் இருவரும் டில்லி கரோல் பாகில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் என்று. கடமை தவறிய காவல்துறையினருக்கு நீதிமன்றம் கடுங்காவல் தண்டனை வழங்கியது. ஆனால் போன உயிர் மீளுமா?

சென்னையில் ஒரு பிரபல ரௌடியை அடையாறில் ‘என்கெளன்ட்டர்' செய்த போது சைக்கிளில் சென்ற ஒரு நபர் உயிர் இழந்தது ஒரு கோர நிகழ்வு. சில மாதங்களுக்கு முன் பீஹார் மாநிலத்தில் திருட முயன்றான் என்று மக்களால் பிடித்துக் கொடுக்கப்பட்ட ஒருவரை உதவி ஆய்வாளர் தனது மோட்டார் சைக்கிளில் இழுத்துச் சென்ற காட்சியை மறந்திருக்க முடியாது. அரியானா மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை கொடுமையாக தாக்கிய காட்சி பத்திரிக்கையில் வந்தது. அதே மாநிலத்தில் இந்த வருடம் செப்டம்பர் மாதம் ஆசிரியர்கள் மறியலின் போது ராஜ்ராணி என்ற பெண் ஆசிரியை சுடப்பட்டு உயிரிழந்தார். அரியானா, பிவானி மாவட்டத்தில் நவம்பர் 2-ம் தேதி குல்தீப் என்ற கல்லூரி மாணவர் மீது தவறுதலாக துப்பாக்கி பிரயோகம் செய்ததில் அந்த மாணவர் உயிர் இழந்தார். வேறு ஒரு நபர் என்று நினைத்து சுட்டோம் என்றது காவல்துறை.
இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது காவல்துறையின் செயல்முறையில் சீர்திருத்தம் அவசியம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஒன்று அவசர நடவடிக்கை, இல்லாவிட்டால் ஏதோ ஒரு காரணத்திற்காக நடவடிக்கை எடுக்கத் தயக்கம் என்ற நிலை. காவல்துறைக்கு வெளியிலிருந்து வரும் தாக்குதலைவிட அதன் உள் ஆளுமையின் பலவீனம் தான் பேராபத்தானது என்ற முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் திரு.சர்மா அவர்களின் கணிப்பு எவ்வளவு உண்மையானது!

சென்னை மாநகர காவல் சட்டம் பிரிவு 23 போலீஸாரின் கடமைகளை வரையறுக்கிறது. அவரது முதல் கடமை குற்றங்களை தடுப்பது, பொது அமைதி காப்பது. குற்றம்புரிபவர்கள், சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தல் மற்றுமொரு முக்கிய பணி. மேலும் காவல் சட்டம் பிரிவு 15-ல் கடமை தவறுபவர்கள், பணிகளை செய்யாமல் தட்டிக்கழிக்கும் காவல் பணியாளர்கள் பணியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும், தண்டனையாக சிறைவாசமும், அபராதமும் விதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. சட்டம் எல்லோருக்கும் பொதுவானது, அது எல்லோருக்கும் பொருந்தும், ஒரு சாராரும் அதற்கு விதிவிலக்கு கிடையாது என்பது சட்டம் சார்ந்த ஆளுமையின் அடிப்படை சித்தாந்தம். சட்ட அமலாக்கத்தின் போது சில முக்கிய அத்தியவாசிய பணிகளில் உள்ளவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன் அந்த துறையின் மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பது விதி. இது அந்த அத்தியாவசிய பணி தடைபடாமல் இயங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது. உதாரணமாக பொதுப்பணியில் இருப்பவர்கள், ரயில் வாகன ஓட்டுநர்கள், ரயில் நிலையப்பணியில் இருப்பவர்கள், மின்சாரத்துறை போன்றவர்களுக்கு பொருந்தும்.

கல்வி வளாகங்களுக்குள் காவல்துறை அனுமதியின்றி செல்லக்கூடாது என்பது ஒரு சம்பிரதாயம். கல்விக்கூடங்களின் புனிதத்தன்மையை காப்பதற்கும், அநாவசிய சர்ச்சைகள் எழும் என்பதற்காகவும் கல்விக் கூடங்களில் உள்ள பிரச்சனைகளில் கல்வி நிர்வாகம் உதவிக்காக அழைத்தால் மட்டுமே காவல்துறை செல்ல வேண்டும் என்ற அறிவுரை இருக்கிறது. ஆனால், எப்பொழுது சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக உருவெடுக்கிறதோ, அப்போது காவல்துறை நிச்சியமாக அமைதி ஏற்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றங்கள் நடக்காமல் தடுப்பதும், கண்முன் நடக்கும் குற்றங்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதும் காவல்துறையின் முக்கிய கடமை. கல்வி நிர்வாகத்தின் அனுமதிக்காக காத்திருக்க முடியாது. இதில் விவாதத்திற்கோ, குழப்பத்திற்கோ இடமில்லை. எந்த உயர் அதிகாரியும் கண்முன் நடக்கும் அசம்பாவிதங்களை தடுக்காதே என்று சொல்ல மாட்டார்கள். அப்படி ஒரு அறிவுரை வந்தாலும் அது சட்டத்திற்கு புறம்பானது. சட்டத்திற்கு மாறான நடவடிக்கை நிச்சயமாக எடுக்கக் கூடாது.

ஊடகங்களின் தாக்கம் எல்லா இடங்களிலும் காண முடிகிறது. எந்த ஒரு நிகழ்வும் சூடான செய்தியாக வெளி வந்து விடுகிறது. இது ஒருவிதத்தில் நல்லது. எதையும் மறைக்க முடியாது. உள்ளதை உள்ளபடி சொல்ல வேண்டும், செய்ய வேண்டும். கடமை தவறுதல், ஊழல், நேர்மையின்மையை படம் பிடித்து காண்பிக்கப்படுகிறது. அவ்வாறு இருக்கையில் ஏன் சம்பவத்தன்று குறைந்தபட்ச நடவடிக்கையும் எடுக்காமல் நின்றது காக்கிச்சட்டைக்கே இழுக்கு. கொலை வெறி தாக்குதலை ஆயத்த நிலையிலேயே தடுத்திருக்கலாம். ஒன்றுமில்லை, கேட்டில் சுருண்டு விழுந்த ஆதரவற்ற மாணவனை அடுத்தடுத்த தாக்குதலிலிருந்து காப்பாற்றி இருக்கலாம். இவற்றையெல்லாம் காவல்துறை உள்நிர்வாகம் தெளிவாக விவாதித்து, ஆரம்ப பயிற்சியிலிருந்து தொடர் பயிற்சியில் எவ்வாறு இம்மாதிரியான தவறுகள் நேராமல் தடுப்பது பற்றி ஆராய்ந்து பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்பதில் ஐயமில்லை.

தடி எடுத்தவன் தண்டல்காரன் என்று அடி உதையில் இறங்கும் மனப்போக்கு சமுதாயத்திற்கு நல்லதல்ல. தேசிய உணர்வு வளர்க்கப்பட வேண்டும். மனித நேயம் வளர்க்கப்பட வேண்டும். அதற்கு பெரியோர்கள், பெற்றோர்கள் முன் மாதிரியாக இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும். வழிகாட்டுதல் சரியில்லை என்றால், இம்மாதிரி நிகழ்வுகளுக்குத் தான் வழி வகுக்கும். தொலைகாட்சி, இளைஞர்களை வசீகரிக்கும் சினிமா, இவைகளில் வன்முறையும், ஜாதி சண்டையும், விரசமும் தான் பிரதானமாக இடம் பெறுகிறது. சமுதாயத்தில் உள்ளதைத்தான் காண்பிக்கிறாம் என்ற ஒரு வாதம், சமுதாயத்தில் அவலங்களை இக்காட்சிகள் மேலும் வளர்க்கின்றன என்ற மற்றொரு வாதத்திற்கும் முடிவில்லை. முட்டையிலிருந்து கோழி வந்ததா, கோழியிலிருந்து முட்டை வந்ததா என்ற கதை. ஆனால் இம்மாதிரியான வன்முறையைத் தூண்டும் காட்சிகள் துண்டிக்கப்பட்டால்தான் சமுதாயத்திற்கு நல்லது.

நாட்டின் பாதுகாப்பில் காவல்துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு அசம்பாவிதத்தை வைத்து ஒட்டுமொத்த காவல்துறையை சாடுவது விவேகமாகாது. இதே காவல்துறை தான் வருங்காலத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் தான் நமது தெருக்களில் ரோந்து சென்று பாதுகாப்பு கொடுக்க வேண்டும். காவல்துறை மனபலத்தை இழந்தால் சமூக விரோதிகள் தான் பயனடைவார்கள். நடந்தது மோசமான நிகழ்வு. அதனை ஆராய்ந்து அதிலிருந்து என்ன பாடம் கற்க வேண்டும், எவ்வாறு மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள், பல துறை வல்லுனர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் அணுகுமுறை சீரிய முறையில் இருக்க வேண்டும் என்பது பற்றியும் விவாதித்து நல்ல முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். காவல்துறையினர் மனச்சோர்வடையாமல் தலை நிமிர்ந்து பணிகளை திறம்பட மனித நேயத்தோடு செய்து மக்களின் மதிப்பை பெற முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும்.

தினமணி நாளிதழில் 23.11.2008 அன்று பிரசுரிக்கப்பட்டது

Saturday, November 15, 2008

சேவை மனப்பான்மை ஓங்கினால் ஊழல் குறையும்

தீயது விட்டீட்டல் பொருள்” என்பது சான்றோர் வாக்கு. பொருள் ஈட்டுவதில் நேர்மை கடைபிடித்தால்தான் சமுதாயம் நல்ல முறையில் இயங்கும் என்பதை உலகளவில் தற்போதுள்ள பொருளாதார பின்னடைவின் விளைவுகள் உணர்த்துகின்றன. கதை ஒன்று சொல்வார்கள். ஊர் கோவிலில் படையலுக்காக எல்லோரும் ஒரு பிடி அரிசி கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டார்கள். ஒரு சிலர் நேர்மையாக அரிசி கொடுத்தார்கள். சிலர் கல், உமி சேர்த்து போட்டனர். ஆனால் பலர் மொத்தத்தில் நாம் போட்டது எப்படித் தெரியும் என்று பொடி பொடியான கற்களை போட்டார்களாம். கடைசியில் உமியும், கல்லும் தான் மிஞ்சியது. பொங்கலிட முடியவில்லை!

நாட்டின் முன்னேற்றதிற்கு ஊறு விளைவிக்கக்கூடிய தடைக்கற்களில் ஊழல் ஒன்று. அது நிர்வாகத்தின் அடித்தளத்தையே நிலைகுலைய செய்கிறது. சமீபத்தில் எல்லா அரசு அலுவலகங்களிலும் ஊழலைப் பற்றி தகவல் கொடுக்க வேண்டும் என்றும், பொது மக்கள் நேரிலோ, தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம் என்ற அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஊழலைப் பற்றி மக்களிடம் இரட்டை நிலைப்பாடு காணலாம். தமக்கு சாதகமாக இருக்கும் வரை அதைப் பற்றி கண்டு கொள்வதில்லை. மற்றவருக்கு ஆதாயம் ஏற்பட்டால் ஆதங்கப்படுகிறோம். போக்குவரத்து விதி மீறியதால் பிடிபடும் வாகனஒட்டி காவலரின் கையை மொழுகி தப்பிக்கப் பார்க்கிறாரே ஒழிய தனது தவறுக்கு வருந்துவதும் இல்லை, திருந்துவதும் இல்லை.

1964-ம் வருடம் சந்தானம் கமிட்டி பரிந்துரையின் பேரில் மத்திய அரசு சென்ட்ரல் விஜிலென்ஸ் கமிஷன் என்ற அமைப்பை நிறுவியது. அரசு துறைகளிலும், மத்திய நிறுவனங்களிலும் ஊழல் தடுப்பு முறைகள் பற்றிய ஆலோசனை வழங்கவும், ஊழல் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும் மொத்ததில் அக்கறையுடன் நாணயத்தை காக்கும் ஆணையமாக அமைய வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட தொடங்கியது. இந்த அமைப்புக்கான சட்டம் 2003-அன்று நாடாளுமான்றத்தில் நிறைவேற்றப்பட்டு மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கப்பட்டது.

பொதுத் துறைகளில் நடக்கும் முறைகேடுகளைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு தக்க பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் மத்திய அரசு இவ்வாறு பொது நலன் கருதி தகவல் கொடுப்பவருக்கு பாதுகாப்பு நல்கும் அறிக்கையை ஏப்ரல் 2004-ம் ஆண்டு வெளியிட்டது. இதன்படி ஒரு பொது நிறுவனத்தில் பணிபுரிபவர் ஊழல் பற்றி தகவல் கொடுத்தால் அவருக்கு நிர்வாக ரீதியில் பாதிப்பு இருக்கக்கூடாது என்றும், சம்பந்தப்பட்ட நிறுவனம் கொடுக்கப்பட்ட தகவலை பூரணமாக விசாரணை செய்ய வேண்டும் என்றும், இதை கண்காணிக்கும் பொறுப்பு அந்த பொது நிறுவனத்தின் விழிப்புத்துறை உயர் அதிகாரி உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்த அறிக்கையில் பணிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஊழல் தடுப்பு முறைகள் பற்றிய விழிப்புணர்ச்சி வாரம் மத்திய ஆணையம் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்டோபர் 31-ல் இருந்து ஊழல் தடுப்பு விழிப்புணர்ச்சி வாரமாக அனுசரிக்கப்படும் என்று 2000- ம் ஆண்டு முதன்முதலாக அமல்படுத்தப்பட்டு, தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கௌடில்யாவின் அர்த்தசாஸ்த்திரத்தில், எவ்வாறு தண்ணீரில் நீஞ்சும் மீன் எப்போது தண்ணீர் குடிக்கிறது என்று தெரியாதோ, அதே போல் பொதுப் பணியாளர்கள் எப்போது ஊழல் புரிகிறார்கள் என்பது கணிப்பது கடினம் என்று மிக அழகாக உவமையோடு விவரிக்கப்பட்டுள்ளது. பொது நிறுவனங்கள், அரசு துறை தனியார் துறை என்று எந்த ஒரு அமைப்பிலும் ஊழலின் விளைவுகள் சரி செய்ய முடியாதவை. அவை மீள முடியாத பாதையில் கொண்டு சேர்க்கும். அதுவும் சட்ட அமலாக்கத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் காவல் துறையில் இம்மாதிரியான நெறியின்மை குற்றங்கள் வளர்ந்திட வழி செய்யும். சட்டம் சார்ந்த நிர்வாகத்திற்கு கேடு விளைவிக்கும்.

காவல் துறையின் மீது சொல்லப்படும் முக்கிய குற்றச்சாட்டுகள் - நிகழ்வுகளை உண்மையாக பதிவு செய்வதில்லை.
• முறையற்ற கைது
• பண பலம், முக பலத்திற்கு அடிபணிதல்.
• ஒரு தலைபட்ச நடவடிக்கை.
• குற்றவாளிகளுக்கு துணைபுரிதல்.
• கையூட்டு பெறுதல்.
இவ்வாறு சிலர் செய்யும் தவறுகளால் பலர் செய்யும் நற்பணிகள் சோபிக்காமல் போகின்றன.

உயிர், சுதந்திரம், கண்ணியம், சமத்துவம் என்பவை மனித உரிமைகளின் முக்கிய அங்கங்களாக கருதப்படுகின்றன. எந்த ஒரு நேர்மையற்ற பணியும் இந்த மனித உரிமைகளை பாதிக்கும் என்பது மறுக்க முடியாது. ஊழல் ஒரு முக்கிய மனித உரிமை மீறலாகவே கொள்ள வேண்டும்.

சர்வதேச காவல் கூட்டமைப்பு – ‘இண்டர்போல்’ போலீஸ்துறையில் இருக்கும் ஊழலைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உலகளவில் போலீஸ் தரம் உயர்த்துவதற்கான இலக்குகள் நிர்ணயித்தது. 2002-ம் ஆண்டு காமீருன் நாட்டில் 181 நாடுகள் பங்கேற்ற இண்டர்போல் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அன்றைய சி.பி.ஐ.இயக்குநர் திரு.ஷர்மா அவர்கள் போலீஸ் துறையில் ஊழலின் ஊடுருவலை விவரிக்கையில் காவல்துறைக்கு வெளியில் இருந்து வரும் தாக்குதல்களைவிட போலீஸ்துறையின் ஆளுமையின் பலவீனம்தான் கொடுமையானது என்று கூறியுள்ளார். குற்றங்களைக் களைய மேற்கொள்ளப்படும் எந்த போலீஸ் திட்டமும் ‘குற்றவாளிகள் -காவல்துறை’ பரஸ்பர மறைமுக தொடர்பால் வெற்றியடைவதில்லை என்று இண்டர்போல் கவலை தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் இழிதொழில் வாணிப முறையில் மனிதர்களை கடத்துவது, பாலியல் கொடுமைகள், போதை பொருட்கள் கடத்தல் போன்ற குற்ற சின்டிகேட்டுகள் தழைத்து வருவது உலக அமைதிக்கு பெரும் அபாயம் என்பது கண்கூடு. இதை எதிர்கொள்வதற்கு ஒரே வழி போலீஸ்துறையில் உயர்ந்த செயல்திறனை வளர்க்கும் கோட்பாடுகளை பின்பற்றுவதில் தான் உள்ளது. இந்த கோட்பாடுகள் எல்லா காவல்துறை அமைப்புகளுக்கும் பொருந்தும். இதற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் முன்னோடியாக இருந்து அப்பழுக்கற்ற நேர்மையான வழிகாட்டுதலைக் கொடுக்க வேண்டும். ஒரு நேர்மையான அதிகாரி அபரிமிதமான அளவிற்கு நன்மை பயக்கும் மாறுதலைக் கொண்டு வரமுடியும். அதே சமயத்தில் கோட்பாடற்ற உயர் அதிகாரி மற்றும் அவர் கீழ் பணிபுரியும் நேர்மைற்ற ஊழியர்களின் கூட்டணி நிர்வாகத்தின் முதல் எதிரி என்பதில் ஐயமில்லை.

தமிழக காவல்துறை தோன்றி வளர்ந்த சரித்திரத்தை எடுத்துக்கொண்டால் முதலில் ‘கொத்வால் போலீஸ்’ என்ற முறையில் வணிக சந்தைகளுக்கு பாதுகாப்பு, அத்தியாவசிய பொருட்கள் அதிக விலையில் விற்காமல் பார்த்துக் கொள்வது, பொது இடங்களில் சுகாதாரம் தரம் குறையாது கவனித்தல் போன்ற பொறுப்புகள் இருந்தன, பணம் புரளும் இடங்களில் பணி செய்வதால் மனம் தடம் புரண்டு மாமுல் வாங்கும் பழக்கம் காவல்துறையை தொற்றிக் கொண்ட நோய் இன்றும் தொடர்கிறது. ஆங்கீலேய ஆட்சியில் அரசுப் பணியாளர்களுக்கு சம்பளம் குறைவு. சுய சாமர்த்தியத்தில் குறைவை நிறைவு செய்ய வேண்டும். அலுவலகம் வருவதற்கு சம்பளம், வேலை செய்ய ‘கிம்பளம்’ என்ற நிலை இருந்தது. ஆனால் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளாகியும் பல வசதிகள் பெருகியும் ஊழல் என்ற நோய் தொடர்வது நம்மை விழிப்படையச் செய்ய வேண்டும்.

ஊழலால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் ஏழை மக்கள் தான். சட்ட அமலாக்கமும் ஏழை மக்கள் மீது தெளிவாகப்பாயும். சிறைச்சாலைகளில் சட்டத்தின் பிடியில் சிக்கி இருக்கக்கூடிய இல்லவாசிகளின் பொருளாதார தரத்தைப்பார்த்தாலே வெட்ட வெளிச்சமாகும். தப்பித்தவறி வசதி படைத்த குற்றவாளி சிறைக்கு வர நேரிட்டால் வசதி செய்து கொடுக்க முனைபவர்களும் இருக்கிறார்கள்.

‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன்’ என்பது அறிஞர் அண்ணா அவர்களின் அமர வாக்கு. தன்பணிகளை செவ்வனே செய்து ஏழை மக்களின் மகிழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் பரம் பொருளைக் உணரக்கூடிய வாய்ப்பு அரசுப்பணியில் தான் உள்ளது. அதுவும் உயிர் உடமைகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் காவல்துறையில் நற்பணிகளின் பிரதி பலன் உடனே காணக்கூடியது. அதில் வரக்கூடிய ஆத்மதிருப்தி அலாதியானது. வீரப்பன் வேட்டைப் பணியில் பல நேரங்களில் கிராம மக்களின் தன்னலமற்ற போக்கையும் நேர்மையையும் உணர முடிந்தது. விடிவதற்கு பல மணிநேரம் முன்னால் இருட்டிலேயே 10 நாளுக்கு வேண்டிய ஏற்பாடுகளுடன் காட்டிற்குள் சென்றுவிடவேண்டும். வனப்பகுதியில் பரிச்சியமான அங்குள்ள ஆதிவாசிகள் உதவியை நாடவேண்டிவரும். அவர்களுக்கு உண்ண உணவு கொடுத்தால் தேவைக்கு மேல் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் பணம் கொடுத்தாலும் வாங்க மாட்டார்கள் தனக்கு தெரிந்ததை சொல்லி உதவியதற்கு எதற்கு வெகுமதி என்று மறுத்துவிடும் வெகுளியான ஏழை மக்களின் நடத்தை எங்களுக்கு ஒருபாடமாக அமைந்தது. அவர்களது கிராமங்களுக்கு சென்று மருத்துவ வசதியும் மற்ற அத்தியாவசிய வசதிகளும் செய்து கொடுக்கவேண்டும் என்ற திட்டம் வகுக்கப்பட்டு பல மக்கள் நல நற்பணிகள் அதிரடிப்படையால் மேற்கொள்ளப்பட்டது. இந்த மனித நேய அணுகுமுறை முடிவில் வீரப்ப வதத்திற்கு அடித்தளம் அமைத்தது என்றால் மிகையல்ல.

அரசுப்பணி என்பது மக்களுக்கு சேவை செய்ய அரிய வாய்ப்பை அளிக்ககூடியது. அரசுப்பணியாளார்கள் கையாளும் கோப்புகள் முகமற்றதல்ல. அதனுள் பலரின் எதிர்காலம் புதைந்திருக்கிறது. சாதி ஜனம் என்ற பாகுபாடின்றி ஒவ்வொருவரும் நம்மை சேர்ந்தவர்கள், அவர்களுக்கு முன்னேற்றத்தின் பயன் சென்றடைந்தால்தான் சமுதாயத்தில் அமைதி நிலவும் என்ற உணர்வு வளர வேண்டும். இல்லையேல் ஏழையின் சிரிப்பில் இறைவனுக்கு பதில் ஏழையின் வெறுப்பில் சாத்தானைத்தான் காணமுடியும். “தம்மில் மெலியவரை நோக்கி நமதுடமை அம்மா பெரிதென்ற” அகமகிழ்வோடு மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை மேலோங்கினால் தான் ஊழல் குறையும் பணிகள் பரிமளிக்கும்.

தினமணி நாளிதழில் 14.11.2008 தேதி அன்று பிரசுரிக்கப்பட்டது

Wednesday, November 5, 2008

CORRUPTION – THE SCOURGE WITHIN

Quality of mercy is twice blessed, it blesses the giver and the one who takes is the Shakespearian dictum. Ironically corruption also benefits the bribe giver and the one who takes, which explains the efficiency of this well oiled machine. Next only to the oldest profession malaise of corruption has held its tentacles from time immemorial. Corruption in administration is fatal to economic growth and its spread in enforcement agencies particularly Police promotes crime and erodes rule of law. Kautilya in his famous treaty Arthasastra has very succinctly stated that “just as it is difficult to say when the fish moving in water is drinking it in the same way it is impossible to find out when the government servant entrusted with responsibility is misusing it and misappropriating government money”.

The Central Vigilance Commission is the apex vigilance institution established by the government in February 1964 on the recommendation of the Santhanam Committee on Prevention of Corruption. The Central Vigilance Commission Act was passed by the Parliament in 2003 giving CVC a legal status. Every year Central Vigilance Commission gives direction for observance of Vigilance Week and since 2000 this is observed from 31st October to coincide with the birthday of Iron Man of India Sardar Vallbabhai Patel.

Police plays an important role in maintaining order in society. Impartiality and strict adherence to law, established laid down procedures should guide its action. Corruption in Police service can well be considered a violation of Human rights as it definitely impinges on the four pillars of Human rights namely Life, Liberty, Equality and Dignity.

In any corrupt dealing there is the bribe giver and the bribe taker. The bribe giver who wants to get round the system with his money power is equally responsible for the corrupt conduct of the public servant.
There are three categories of public servants. The first consists of the honest officers, the second those who are inclined to corruption but restrain themselves for fear of consequences and the third rashly corrupt. Unfortunately the second and third categories are getting amalgamated into one category.

When there is transgression from accepted and expected norms of conduct on the part of public servant the system gets irreversibly damaged. Policing has become complex given the present socio economic scenario where every powerful group in society is vying with each other to get a foothold. In view of this it is all the more necessary that policemen perform their duties with impeccable honesty. Government has given direction that prominent board should be displayed in government offices encouraging public to give information about corruption. It is important that such ‘whistle blowers’, persons who furnish information are duly protected and their identity is not divulged. This is exactly what is envisaged in Government of India ‘Resolution on public interest disclosure and protection of informer’ issued in April 2004.

People who lament about corruption are only too happy to jump the system for their own personal gain. Civil Society should play an important role in weeding out corruption. The Hong Kong model of fighting corruption where a partnership approach was adopted to mobilise all sectors in society namely Government departments, Business community, Professional bodies, Educational institutions, Mass media, and community organization, is worthy of adoption for a unified fight against corruption.

In the fight against Corruption it is important that senior officials conduct themselves beyond reproach as otherwise they will have no moral courage to deal with deviant subordinates. There is unhealthy nexus between corrupt subordinates and unscrupulous seniors and this has to be broken. This can be achieved only if officers of unimpeachable integrity are posted in sensitive positions. There are innumerable instances where one honest officer has made all the difference and the message goes right across.
“For evil to triumph it is enough if good people do nothing”. The magnitude of the problem should not lead to helplessness. We cannot resign ourselves that the phenomenon is inevitable. The inevitable becomes intolerable the moment it is perceived as no longer inevitable. Ethics in the conduct of day to day dealings should be given high priority.

(R. NATARAJ, IPS)
DIRECTOR GENERAL OF PRISONS.
CHENNAI-8
(Email – natarajaips@hotmail.com)

நிதானம் இழப்பு - விபத்தில் முடிவு

வேலூரிலிருந்து சுமார் 80 கிலோ மீட்டர் சாலை இருபுறமும் மரங்கள், குன்றுகள், மலைகள் காட்சியுடன் அண்ணாமலையாரை தரிசிக்க செல்பவருக்கும், ஏனையோருக்கும் மனநிறைவைத் தரும். சில இடங்களில் சாலையோரமாக அதனோடு அமைந்துள்ள ரயில் தண்டவாளம் அதில் செல்லும் ரயில் பயணிப்பவர்களுக்கு மேலும் புது அநுபவத்தைத் தரும். ஓரிரு இடங்களில் சாலை ரயில் தண்டவாளக்தை கடக்கும் லெவல் க்ராஸிங் உண்டு. 1991-ம் வருடம் டிசம்பர் ஒன்பதாம் நாள் போளுரிலிருந்து திருவண்ணாமலை சென்று கொண்டிருந்த பேருந்து ஆளில்லா லெவல் க்ராஸிங்கை கடக்கும் பொழுது ரயில் வருவதை கவனிக்காதால் விபத்து ஏற்பட்டு எட்டு பயணிகள் உயிரிழந்தனர், 41 பேர் காயமுற்றனர். பேருந்து ஒட்டுனர் ரயில் வருவற்குள் தண்டவாளத்தைக் கடந்து விடலாம் என்று தவறாக கணித்ததால் விபத்து ஏற்பட்டது. இன்னொரு நிகழ்வு , அக்டோபர் 31, 2006-ல் ஷேர் ஆட்டோ ஓன்று காஞ்சீபுரம் அருகில் புதுப்பாக்கம் கிராம கண்காணிப்பில்லாத தண்டவாளத்தை கடக்கும் பொழுது ரயிலில் அடிபட்டு ஆட்டோவில் பயணம் செய்த 14 பெண்கள் உட்பட 17 அப்பாவி மக்கள் இறந்தனர். அதே அரக்கோணம் ரயில் பாதையில் கோவிந்தவாடி அகரம் என்ற இடத்தில் போனவருடம் ஏப்ரம் மாதம் சென்னையில் பேரணியில் கலந்து கொள்வதற்காக கிராம அதிகாரிகளை ஏற்றிச் சென்ற வேன் கண்காணிப்பில்லாத தண்டவாளத்தை கடக்கும் பொழுது விபத்துக்குள்ளாகி பதினோரு கிராம அதிகாரிகள் உயிரிழந்த பரிதாப சம்பவம் நாம் மறந்திருக்க முடியாது.

பெருகி வரும் ஜனத்தொகை, வளர்ந்து வரும் நகரங்கள், அதிகரித்து வரும் வாகனங்கள், ஒய்வில்லாது பயணம் செய்யும் மக்கள் என்று நாட்டின் முன்னேற்றத்தின் பரிமாணங்களைக் காண்கிறோம். இவற்றினூடே சாலை விபத்துகளும், ரயில் சாலை சந்திப்பு விபத்துகளும் அதிகரித்து வருகிறது. அதிக வாகன விபத்துகள் நிகழும் மாநிலம் தமிழகம், மத்திய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கைப்படி 2006-ல் 55.145 வாகன விபத்துகளுடன் தமிழ்நாடு முதலிடம் வகித்தது. 2007-ம் வருடம் நிகழ்ந்த 59,140 வாகன விபத்துகள் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,000-த்தை தாண்டியுள்ளது.

ரயில் சம்பந்தப்பட்ட விபத்துகள் எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும். இந்த விபத்துகளில் உயிர் சேதமும், பொருள் சேதமும் அதிகம். தண்டவாளத்தை, சாலை கடக்கும் சந்திப்பில் நிகழும் விபத்துகள் தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது என்பது நம்மை விழிப்படையச் செய்ய வேண்டும். இந்தியாவில் 38,000 லெவல் க்ராஸிங்குகள் உள்ளன. அவற்றில் கண்காணிப்புக்கு உட்பட்டவை 21,792, கண்காணிப்பில்லாதவை 16,549. இரயில்வே கேட் இல்லாத, கண்காணிப்பிற்கு உட்படாத சந்திப்பில் அதிக விபத்துகள் நிகழ்கின்றன. இதில் உயிர் இழப்பவர்கள் அப்பாவி கிராமங்களில் வாழும் ஏழை மக்கள்.

தமிழ்நாட்டில் தானியங்கி ரெயில்வே கேட்டுக்ள் 1282 உள்ளன. ஆளில்லா லெவல் க்ராஸிங்களின் எண்ணிகை 1170. 2006-2007-ல் கண்காணிப்பில்லா லெவல் க்ராஸிங்கில் 72 விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இது முந்தைய வருடத்தை விட 37 விழுக்காடு அதிகரித்துள்ளது கவலை தரும் விஷயம். தமிழ்நாட்டில் கடந்த மூன்று வருடங்களில் தண்டவாளம் தாண்டுதளங்களில் 785 விபத்துக்ள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80.

இந்திய ரயில்வே சட்டம் பிரிவு 161 படி கவனக் குறைவாகவும், உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் ஆளில்லாத லெவல் க்ராஸிங்கில் கடக்க முயன்றால் ஒரு ஆண்டு வரை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டம் 1988, பிரிவு 131-ல் தெளிவாக எவ்வாறு வாகனங்கள் லெவல் கிராஸிங்கை கடக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கனரக வாகனமோ, பேருந்துகளோ கடக்கும் போது வாகனத்தை நிறுத்தி வாகன நடத்துனர் அல்லது உதவியாளர் இருபுறமும் ரயில் வருகிறதா என்று பார்வையிட்டு, வாகனம் தண்டவாளத்தை கடக்கும் பொழுது மேற்பார்வையிட வேண்டும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த நடைமுறைகளும், விதிகளும் அவசர உலகத்தில் மீறப்படுகின்றன என்பது உண்மை நிலை. இரு சக்கர ஓட்டுனர்கள் கேட் அடைத்திருந்தாலும் இடைவெளி மூலம் வண்டியை சாய்த்து குனிந்து கடப்பதை அன்றாடம் பார்க்கிறோம். ரயில்வே தண்டவாளத்தில் நடைபயிலும் சிறுசுகள், தண்டவாளத்தை மையமாக வைத்து ஓட்டப்படும் ட்ராக்டர்கள் என்று ரயில்வே தண்டவாளம் பொது வழியாக பயன்படுத்தப்படுவது கொடுமையிலும் கொடுமை.

தண்டவாளத்தின் அகலம் 1.676 மீட்டர். அதாவது சுமார் 6 அடி. இருபுறமும் தாங்கும் தளம் 4 அடி. மொத்தம் பத்து அடி. இந்த பாதையை தவிர்த்து செல்ல முடியாதா நமது பாதுகாப்பிற்காக? சாலையில் செல்லும் வாகனங்கள் விதிகளை மதித்து செலகின்றனவா என்பதை கண்காணிப்பதும், சாலை விபத்துகள் தவிர்ப்பு நடவடிக்கையாக சீறிய சட்ட அமலாக்கமும் காவல்துறையின் முக்கிய பணிகள். இரயில்வே கேட்டை கடக்கும் பொழுது மட்டும் பொறுப்பு ரயில் துறையினருடையது அல்லது ரயில்வே போலீஸாருடையது என்று உள்ளூர் காவல்துறையினர் ஒதுங்கி விடுகின்றனர். இந்த குறுகிய அணுகுமுறையால் தான் லெவல் க்ராஸிங் விபத்துகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. பட்ட காலிலே படும் என்பார்கள். அதற்கேற்ப சில விபத்துகள் குறுகிய கால இடைவெளியில் அதே இடத்திலோ, சுற்று அருகிலோ நிகழ்வது விபத்து தடுப்பு முயற்சியின் தொய்வினை உணர்த்துகிறது. அதிகபட்ச விபத்துகள் பகலில் நடந்துள்ளன. இருட்டில் ரயில் வருவது தெரியவில்லை என்று கூறுமுடியாது.

ரயில்வே நிர்வாகம் லெவல் க்ராஸிங் விபத்துகளை தடுக்க பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. அபாயக் குறியீடுகள், தானியிங்கி சமிக்ஞைகள் பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. ரெயில்வே கேட் பார்வையில் படும்படி மேம்படுத்தப்பட்டுள்ளது. தண்டவாளத்தை கடக்கும் தளம் 20 அடி சம அளவில் வாகனங்கள் எளிதாக கடக்க அமைக்கப்பட்டுள்ளன. பயன்பாடு குறைவான லெவல் க்ராஸிங்குகள் தெரிவு செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளன. ரயில் மற்றும் போக்குவரத்து வாகன குறியீடு சராசரி ஒரு நாளுக்கு 1 லட்சத்தை தாண்டும் இடங்களில் பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜுலை 2007-ல் லெவல் க்ராஸிங் விபத்துகள் பற்றிய பொது நல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ரயில்வே நிர்வாகம் தண்டவாளம் தாண்டும் பாதைகளில் பணியாளர் அமைத்து கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்றும், தேவைக்கேற்ப பாலங்கள் அமைக்க வேண்டும், பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு நிதி பற்றாக்குறை தடையாக இருக்கக்கூடாது என்று கூறியுள்ளது. எல்லா ஆளில்லா தண்டவாள தாண்டு தடங்களில் பாலம் அமைக்க சுமார் ரூபாய் 1 லட்சம் கோடி தேவைப்படும். போர்க்கால அடிப்படையில் இப்பணியை எடுத்துக் கொண்டாலும் நிறைவேற்ற பல வருடங்களாகும்.

விபத்துகள் ஏற்படுவதின் முக்கிய காரணங்கள் மது அருந்தி வாகனம் ஓட்டுதல், செல்போனில் பேசிக் கொண்டு ஓட்டுதல் மற்றும் எஃப் எம் சேனல் இசையில் லயித்து பாதையை தவற விடுதல். ஆள் உடைய மற்றும் ஆளில்லாத தண்டவாள தாண்டு தடங்கள் தமிழ்நாட்டில் 2452 உள்ளன. காவல் நிலையங்களின் எண்ணிக்கை 1256. சராசரி ஒரு காவல் நிலையத்திற்கு இரண்டு லெவல் க்ராஸிங். ஆளில்லா தண்டவாளத் தாண்டு தடங்கள் மட்டும் எடுத்துக் கொண்டால் சராசரி ஒரு காவல் நிலையத்திற்கு ஒன்று என்ற கணக்கு. இந்த இடங்களில் வாகனங்களை வழி நடத்துவது எளிது. சொல்லப் போனால் மக்கள் நலனைக் கருதி அதை முக்கிய பொறுப்புகளில் ஒன்றாக காவல்துறை கொள்ள வேண்டும். காவல்துறை கண்காணிப்பு இருக்கிறது என்றாலே விதிகள் மீறப்படாது என்று நம்பலாம். இதோடு உள்ளுர் மக்களிடம் ஊடகங்கள் மூலமாக விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி விதிகள் மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் நிச்சயமாக இந்த ரயில் ரோடு விபத்துகளை தடுக்கலாம். காவல்துறை, ரயில்வேதுறை, வருவாய்துறை, உள்ளுர் நிர்வாகம் ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொண்டால்தான் இந்த விபத்துகளை தவிர்க்க முடியும்.

தினமணி நாளிதழில் 02.11.2008 அன்று பிரசுரிக்கப்பட்டது.

Saturday, August 16, 2008

க்ரியா ஊக்கி


செல்வேன் ஒருமுறை இவ்வழி
செய்வேன் பலருக்கு நல்வழி
செல்வேனோ மீண்டும் இவ்வழி....

Friday, June 20, 2008

MILE STONES IN TAMILNADU POLICE

நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் தமிழக காவல்துறையின் பரிமாணத்தை நினைவூட்ட இச்சிறு வலைப்பதிவை பயன்படுத்திக்கொள்கிறேன்.

16th Century – Pedda Naik with a posse of Talliars or watchmen was the earliest Police Officer in City. This was a hereditary post. The original strength was 20 in 1640, increased to 50 in 1650 and to 100 in 1701.

1770 – Board of Police Constituted by the then Governor Josios Du. Pre. The board was mainly concerned with removal of public nuisance, maintenance of public health and order.

1777 – Governor Straton appointed `Kotwal’ or overseer of markets to control prices of commodities in the market and to make the tradesmen `behave’.

1780 - Post of Supdt. of Police was created to supervise the markets and to reduce the prices of provisions.

1782 – Comprehensive plan for the police prepared by S.Topham who stated in his plan that the objects of general police are to promote health and to prevent impositions and frauds.

May 1791 – Institution of Kothwal Police abolished as there were complaints of extracting more money than was due from the merchants. The office of ``Poligar’ (Synonymous with `Pedda Naik’) restored. In view of legal difficulties in raising taxes to meet the expenditure on the police, citizens raised fund by voluntary contribution.

8th August, 1806: The City Police Committee suggested various reforms for the reorganization of the police. The recommendation of the police committee were accepted by the Governor Lord William Bentinck, Mr. Walter Grant became the first regularly appointed Supdt. of Police of the City with three Police Magistrates.

1815 – Mr. Thomas Harris, Supdt. of Police, Madras formulate in his report to the Government, the city pattern of policing, dividing the area into eight divisions for effective control.

1829 – 32 – Mr. George Norton, Advocate General submits his recommendation for reforming the police as per which the city was divided into four districts namely Black Town District, Triplicane district, Vepery District and St. Thomas District. (Santhome)

1834 – Mr. Francis Kelly and Vambaukkam Raghavachariar became the first Indian to be inducted as Police Magistrate and Dy. Supdt. of Police.

1856 - Police Act XIII was passed by the Legislative council of the Governor General. The Act designated the head of the Town Police as Commissioner of Police. Lt. Col. J.C. Boudlerson became the first Commissioner of Police under the new Act. He was to be assisted by the two Deputy Commissioners of Police.

1858 - Mr. W. Robinson covenated Civil servant appointed as Chief Commissioner of Police (IGP). The proposal submitted by Robinson forms the basis of the present day district Police. Police is primarily responsible for preservation of peace and prevention of crime.

1859 – Act XXIV passed on 6th September 1859 which formed the beginning of the Modern Madras Police. This act was also the forerunner for the police Commission set up by the Government of India in 1960, in which Mr. W. Robinson, Inspector. General of Police served as a member.

22.08.1895 – Finger Print Bureau established in Madras

1902 – The Madras City with an area of 29 sq. miles and a population of 5,09,346 had the following police set up. The city was divided into two police ranges, the Northern range in the immediate charge of Dy. Commissioner of Police and the southern Range under the direct control of the Commissioner of Police himself assisted by a Chief Superintendent. The Northern range had 4 divisions including the Harbour and the southern Range 5 divisions including Reserve. The total strength was Cop-1, DCP-1, ACP-1, Chief Supdt. –1, Inspectors-12, Sub-Inspectors-12, Europeans and 9 Indian, Head constables-14 Europeans and 140 Indians, Constables - 12 to 14. An intelligence Department called the “Harcarrhs” consisting of 1 Inspector, 2 SIs and 4 HCs was formed to perform butlees of confidential nature under the immediate order of the Commissioner of Police.

1902 – All India Police Commission set up. Mr. H.A. Stuart, Inspector-General of Police, Madras Presidency was appointed Secretary of the Commission.

1905 - The Police Training School was strengthened and equipped to train the new cadre of Sub-Inspectors who were to replace the old Station House Officers (Who were of the rank of Head-Constables).

1906 – The Criminal Investigation Department – was started on 18th August, 1906, Mr. F. Fawcett was appointed the Dy. Inspector-General of Police with a staff of 6 Inspectors, 6 SIs, 12 HCs and 12 Police Constables.

1909 – King’s Police Medal instituted for Gallantry and Distinguished Service.

1912 – Presidency Police Sports came into existence

1919 - Diwan Bahadur P.Parankusam Naidu was appointed as Commissioner of Police the first Indian to occupy the post.

1919 - Mr. P.B. Thomas, I.P., became the first Police Officer to be appointed as Inspector-General of Police to head the Police Department.

1921 – Malabar Special Armed Police was formed in the wake of Maplah rebellion and the first recruitment was undertaken by Mr. Hitchtcock, District Supdt. of Police, South Malabar.

1923 – Mr. H.G.Stakes appointed as special officer for re-organization of Armed Reserves and special police parties.

1928 – The CID was divided into Special Branch and Crime Branch with separate staff for each.

1929 - Madras City Police re-organised and functional division of crime, Law and Order and traffic introduced.

1931 - The statutory Rules for the Madras Police Subordinate Service came into force.

1935 - In order to enlist public co-operation ‘Village Vigilance Committees’ were constituted.

1946 – Police Wireless commissioned.

1947 – Mr. T.G. Sanjeevi, became the first Indian to occupy the post of Director of the Intelligence Bureau, New Delhi.

1951 – Madras Police Dogs Squad was formed and Tamilnadu became the pioneers in India after Independence to use Dogs in the prevention and detection of crime.

1956 – Police Radio Office opened.

1971 – Tamilnadu Police Commission set up. The commission suggested various schemes for modernization of force which were implemented.

1979 – Post of Director-General of Police created to head the Police Department.

1989 - Police Commission appointed under Chairmanship of Thiru Sabanayagam former Chief Secretary.

1991 – Uniformed Services Recruitment Board constituted for the recruitment of personnel in the non-gazetted category for the uniformed departments – Police, Prison and Fire Services

1992 – First all Women Police station, opened at Thousand lights, Chennai headed by Inspector. Subsequently similar all women police stations were opened in all districts


1994 – Coastal security Group first of its kind in the Country constituted to strengthen security of 1000 kms long Tamilnadu coast line.

1995 – Police headquarters shifted to Admiralty House, govt. Estate, Chennai to facilitate renovation of the antique mosaic building.

1996 – Tamil Nadu Commando force, Tamilnadu Commando School, elite forces to combat terrorism/organised crime constituted.

1997 - Swift Action Force formed to deal with communal riots. The personnel constituting the force would be imparted specialised training to use less lethal weapons in riot control, fire fighting, rescue operation and awareness on Human rights.

1998 - The renovated DGP’s office complex the pride of Tamilnadu Police was inaugurated by Hon’ble Chief Minister on 28.08.98.


2000 - Dawn of Millennium. As on 10.03.2000 the Police Department has a strength of 90,963 spread over 29 Police districts, 6 Commissionerates, 2 Railway Police Districts, 11 Police Ranges and two zones.

பிறிதொரு கவிதை

என் அன்பு சிப்பியை
திறக்க யாரும் முன்வரவில்லை
அவை
கடலுக்கு அடியில்
ஓடோடி நடந்துகொண்டிருக்கின்றன
- தேவதச்சன்

எனக்கு பிடித்த ஒரு கவிதை

எனது சுதந்திரம் தனிநபராலோ
அரசாங்கத்தாலோ
பறிக்கப்படும் எனில் -அது
எனது சுதந்திரம் அல்ல
அவர்களது சுதந்திரம்.
- ஆத்மநாம்.