கல்லூரி படிப்பு என்பது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. ஆரம்பப் பள்ளி படிப்பு, உயர்நிலைப் படிப்பு, பட்டப்படிப்பு, முதுகலைப்பட்டம் என்று ஒவ்வொரு கட்டத்திலும் கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்து முடிவில் உயர்கல்வி பயில்வோர் எண்ணிக்கை பட்டம் பெற்றவர்களில் ஏழு சதவிகிதம் தான் என்பது புள்ளி விவரம். இதைப்பார்க்கும் பொழுது கல்லூரி படிப்பு ஒரு வரப் பிரசாதம் என்றே கொள்ள வேண்டும். கல்லூரி வளாகத்தைத் தாண்டும் பொழுது நன்றி கலந்த நிறைவுடன் சென்று முழுமையாக தம்மை ஈடுபடுத்தி அறிவை வளர்த்துக் கொள்வதுதான் சரியான அணுகுமுறை.
நவம்பர் 12-ம் நாள் சென்னை சட்டக் கல்லூரி வாயிலில் நிகழ்ந்த கொடூர சம்பவம் கல்லூரி வாசலின் புனிதத் தன்மையையே அழித்து விட்டது. ‘கல்லூரி வாசல்’ என்றாலே அன்று நடந்த அந்த கோர சம்பவம் தான் எல்லோருடையை நினைவுக்கும் வரும். தொலைக் காட்சியில் பார்த்தவர்கள் கதறாமல் இருந்திருக்க முடியாது. நம்மை அறியாமலேயே ‘ஐயோ அடிக்காதீங்ய்யா’ என்று காப்பாற்ற டிவியை நோக்கி ஓடத் தூண்டியது. கையில் தடியை வைத்திருந்தவர்கள் கண்களில்தான் எத்தனை கொடூரம், வெறுப்பு, வன்மை. கீழே விழுந்து கிடக்கும் சக மாணவனை ‘டேர்ன்’ போட்டுக் கொண்டு அடித்தார்கள். வேட்டையாடும் மிருகம் கூட தனது இரை கீழே விழுந்த பிறகு மீண்டும் தாக்காது.
அஹிம்சைவழியில் சுதந்திரம் பெற்றுத் தந்த காந்தி பிறந்த நாட்டிலா இந்த கொடுமை? சாதிக்கப் பிறந்த இளைஞர்கள் ஜாதி என்ற வட்டத்துக்குள் அடைபட்டு தாக்குதலில் ஈடுபடுவது ஏன்? எல்லாவற்றிற்கும் மேலாக சட்டத்தை அமல்படுத்த வேண்டியவர்கள், மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியவர்கள், அவர்களது உரிமைகளை நிலைநாட்டிட வேண்டியவர்கள் ஒரு சலனமில்லாது பார்த்துக் கொண்டிருந்தது நெஞ்சில் ஈரமுள்ள எந்த காவலைரையும் தலைகுனிய வைத்திருக்கும்.
சில வருடங்களுக்கு முன் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த டில்லி போலீஸார், தீவிரவாதிகள் ஒரு வாகனத்தில் டில்லிக்கு வருகிறார்கள் என்ற தகவலின் பேரில் காரில் வந்து கொண்டிருந்த இரு சந்தேக நபர்களை ஒரு முகாந்திரமும் இல்லாமல் சுட்டனர். பிறகுதான் தெரிந்தது அவர்கள் இருவரும் டில்லி கரோல் பாகில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் என்று. கடமை தவறிய காவல்துறையினருக்கு நீதிமன்றம் கடுங்காவல் தண்டனை வழங்கியது. ஆனால் போன உயிர் மீளுமா?
சென்னையில் ஒரு பிரபல ரௌடியை அடையாறில் ‘என்கெளன்ட்டர்' செய்த போது சைக்கிளில் சென்ற ஒரு நபர் உயிர் இழந்தது ஒரு கோர நிகழ்வு. சில மாதங்களுக்கு முன் பீஹார் மாநிலத்தில் திருட முயன்றான் என்று மக்களால் பிடித்துக் கொடுக்கப்பட்ட ஒருவரை உதவி ஆய்வாளர் தனது மோட்டார் சைக்கிளில் இழுத்துச் சென்ற காட்சியை மறந்திருக்க முடியாது. அரியானா மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை கொடுமையாக தாக்கிய காட்சி பத்திரிக்கையில் வந்தது. அதே மாநிலத்தில் இந்த வருடம் செப்டம்பர் மாதம் ஆசிரியர்கள் மறியலின் போது ராஜ்ராணி என்ற பெண் ஆசிரியை சுடப்பட்டு உயிரிழந்தார். அரியானா, பிவானி மாவட்டத்தில் நவம்பர் 2-ம் தேதி குல்தீப் என்ற கல்லூரி மாணவர் மீது தவறுதலாக துப்பாக்கி பிரயோகம் செய்ததில் அந்த மாணவர் உயிர் இழந்தார். வேறு ஒரு நபர் என்று நினைத்து சுட்டோம் என்றது காவல்துறை.
இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது காவல்துறையின் செயல்முறையில் சீர்திருத்தம் அவசியம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஒன்று அவசர நடவடிக்கை, இல்லாவிட்டால் ஏதோ ஒரு காரணத்திற்காக நடவடிக்கை எடுக்கத் தயக்கம் என்ற நிலை. காவல்துறைக்கு வெளியிலிருந்து வரும் தாக்குதலைவிட அதன் உள் ஆளுமையின் பலவீனம் தான் பேராபத்தானது என்ற முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் திரு.சர்மா அவர்களின் கணிப்பு எவ்வளவு உண்மையானது!
சென்னை மாநகர காவல் சட்டம் பிரிவு 23 போலீஸாரின் கடமைகளை வரையறுக்கிறது. அவரது முதல் கடமை குற்றங்களை தடுப்பது, பொது அமைதி காப்பது. குற்றம்புரிபவர்கள், சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தல் மற்றுமொரு முக்கிய பணி. மேலும் காவல் சட்டம் பிரிவு 15-ல் கடமை தவறுபவர்கள், பணிகளை செய்யாமல் தட்டிக்கழிக்கும் காவல் பணியாளர்கள் பணியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும், தண்டனையாக சிறைவாசமும், அபராதமும் விதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. சட்டம் எல்லோருக்கும் பொதுவானது, அது எல்லோருக்கும் பொருந்தும், ஒரு சாராரும் அதற்கு விதிவிலக்கு கிடையாது என்பது சட்டம் சார்ந்த ஆளுமையின் அடிப்படை சித்தாந்தம். சட்ட அமலாக்கத்தின் போது சில முக்கிய அத்தியவாசிய பணிகளில் உள்ளவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன் அந்த துறையின் மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பது விதி. இது அந்த அத்தியாவசிய பணி தடைபடாமல் இயங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது. உதாரணமாக பொதுப்பணியில் இருப்பவர்கள், ரயில் வாகன ஓட்டுநர்கள், ரயில் நிலையப்பணியில் இருப்பவர்கள், மின்சாரத்துறை போன்றவர்களுக்கு பொருந்தும்.
கல்வி வளாகங்களுக்குள் காவல்துறை அனுமதியின்றி செல்லக்கூடாது என்பது ஒரு சம்பிரதாயம். கல்விக்கூடங்களின் புனிதத்தன்மையை காப்பதற்கும், அநாவசிய சர்ச்சைகள் எழும் என்பதற்காகவும் கல்விக் கூடங்களில் உள்ள பிரச்சனைகளில் கல்வி நிர்வாகம் உதவிக்காக அழைத்தால் மட்டுமே காவல்துறை செல்ல வேண்டும் என்ற அறிவுரை இருக்கிறது. ஆனால், எப்பொழுது சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக உருவெடுக்கிறதோ, அப்போது காவல்துறை நிச்சியமாக அமைதி ஏற்படுத்துவதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றங்கள் நடக்காமல் தடுப்பதும், கண்முன் நடக்கும் குற்றங்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதும் காவல்துறையின் முக்கிய கடமை. கல்வி நிர்வாகத்தின் அனுமதிக்காக காத்திருக்க முடியாது. இதில் விவாதத்திற்கோ, குழப்பத்திற்கோ இடமில்லை. எந்த உயர் அதிகாரியும் கண்முன் நடக்கும் அசம்பாவிதங்களை தடுக்காதே என்று சொல்ல மாட்டார்கள். அப்படி ஒரு அறிவுரை வந்தாலும் அது சட்டத்திற்கு புறம்பானது. சட்டத்திற்கு மாறான நடவடிக்கை நிச்சயமாக எடுக்கக் கூடாது.
ஊடகங்களின் தாக்கம் எல்லா இடங்களிலும் காண முடிகிறது. எந்த ஒரு நிகழ்வும் சூடான செய்தியாக வெளி வந்து விடுகிறது. இது ஒருவிதத்தில் நல்லது. எதையும் மறைக்க முடியாது. உள்ளதை உள்ளபடி சொல்ல வேண்டும், செய்ய வேண்டும். கடமை தவறுதல், ஊழல், நேர்மையின்மையை படம் பிடித்து காண்பிக்கப்படுகிறது. அவ்வாறு இருக்கையில் ஏன் சம்பவத்தன்று குறைந்தபட்ச நடவடிக்கையும் எடுக்காமல் நின்றது காக்கிச்சட்டைக்கே இழுக்கு. கொலை வெறி தாக்குதலை ஆயத்த நிலையிலேயே தடுத்திருக்கலாம். ஒன்றுமில்லை, கேட்டில் சுருண்டு விழுந்த ஆதரவற்ற மாணவனை அடுத்தடுத்த தாக்குதலிலிருந்து காப்பாற்றி இருக்கலாம். இவற்றையெல்லாம் காவல்துறை உள்நிர்வாகம் தெளிவாக விவாதித்து, ஆரம்ப பயிற்சியிலிருந்து தொடர் பயிற்சியில் எவ்வாறு இம்மாதிரியான தவறுகள் நேராமல் தடுப்பது பற்றி ஆராய்ந்து பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்பதில் ஐயமில்லை.
தடி எடுத்தவன் தண்டல்காரன் என்று அடி உதையில் இறங்கும் மனப்போக்கு சமுதாயத்திற்கு நல்லதல்ல. தேசிய உணர்வு வளர்க்கப்பட வேண்டும். மனித நேயம் வளர்க்கப்பட வேண்டும். அதற்கு பெரியோர்கள், பெற்றோர்கள் முன் மாதிரியாக இளைஞர்களுக்கு வழிகாட்ட வேண்டும். வழிகாட்டுதல் சரியில்லை என்றால், இம்மாதிரி நிகழ்வுகளுக்குத் தான் வழி வகுக்கும். தொலைகாட்சி, இளைஞர்களை வசீகரிக்கும் சினிமா, இவைகளில் வன்முறையும், ஜாதி சண்டையும், விரசமும் தான் பிரதானமாக இடம் பெறுகிறது. சமுதாயத்தில் உள்ளதைத்தான் காண்பிக்கிறாம் என்ற ஒரு வாதம், சமுதாயத்தில் அவலங்களை இக்காட்சிகள் மேலும் வளர்க்கின்றன என்ற மற்றொரு வாதத்திற்கும் முடிவில்லை. முட்டையிலிருந்து கோழி வந்ததா, கோழியிலிருந்து முட்டை வந்ததா என்ற கதை. ஆனால் இம்மாதிரியான வன்முறையைத் தூண்டும் காட்சிகள் துண்டிக்கப்பட்டால்தான் சமுதாயத்திற்கு நல்லது.
நாட்டின் பாதுகாப்பில் காவல்துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு அசம்பாவிதத்தை வைத்து ஒட்டுமொத்த காவல்துறையை சாடுவது விவேகமாகாது. இதே காவல்துறை தான் வருங்காலத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் தான் நமது தெருக்களில் ரோந்து சென்று பாதுகாப்பு கொடுக்க வேண்டும். காவல்துறை மனபலத்தை இழந்தால் சமூக விரோதிகள் தான் பயனடைவார்கள். நடந்தது மோசமான நிகழ்வு. அதனை ஆராய்ந்து அதிலிருந்து என்ன பாடம் கற்க வேண்டும், எவ்வாறு மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள், பல துறை வல்லுனர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் அணுகுமுறை சீரிய முறையில் இருக்க வேண்டும் என்பது பற்றியும் விவாதித்து நல்ல முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். காவல்துறையினர் மனச்சோர்வடையாமல் தலை நிமிர்ந்து பணிகளை திறம்பட மனித நேயத்தோடு செய்து மக்களின் மதிப்பை பெற முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும்.
தினமணி நாளிதழில் 23.11.2008 அன்று பிரசுரிக்கப்பட்டது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment