Saturday, November 15, 2008

சேவை மனப்பான்மை ஓங்கினால் ஊழல் குறையும்

தீயது விட்டீட்டல் பொருள்” என்பது சான்றோர் வாக்கு. பொருள் ஈட்டுவதில் நேர்மை கடைபிடித்தால்தான் சமுதாயம் நல்ல முறையில் இயங்கும் என்பதை உலகளவில் தற்போதுள்ள பொருளாதார பின்னடைவின் விளைவுகள் உணர்த்துகின்றன. கதை ஒன்று சொல்வார்கள். ஊர் கோவிலில் படையலுக்காக எல்லோரும் ஒரு பிடி அரிசி கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டார்கள். ஒரு சிலர் நேர்மையாக அரிசி கொடுத்தார்கள். சிலர் கல், உமி சேர்த்து போட்டனர். ஆனால் பலர் மொத்தத்தில் நாம் போட்டது எப்படித் தெரியும் என்று பொடி பொடியான கற்களை போட்டார்களாம். கடைசியில் உமியும், கல்லும் தான் மிஞ்சியது. பொங்கலிட முடியவில்லை!

நாட்டின் முன்னேற்றதிற்கு ஊறு விளைவிக்கக்கூடிய தடைக்கற்களில் ஊழல் ஒன்று. அது நிர்வாகத்தின் அடித்தளத்தையே நிலைகுலைய செய்கிறது. சமீபத்தில் எல்லா அரசு அலுவலகங்களிலும் ஊழலைப் பற்றி தகவல் கொடுக்க வேண்டும் என்றும், பொது மக்கள் நேரிலோ, தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம் என்ற அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஊழலைப் பற்றி மக்களிடம் இரட்டை நிலைப்பாடு காணலாம். தமக்கு சாதகமாக இருக்கும் வரை அதைப் பற்றி கண்டு கொள்வதில்லை. மற்றவருக்கு ஆதாயம் ஏற்பட்டால் ஆதங்கப்படுகிறோம். போக்குவரத்து விதி மீறியதால் பிடிபடும் வாகனஒட்டி காவலரின் கையை மொழுகி தப்பிக்கப் பார்க்கிறாரே ஒழிய தனது தவறுக்கு வருந்துவதும் இல்லை, திருந்துவதும் இல்லை.

1964-ம் வருடம் சந்தானம் கமிட்டி பரிந்துரையின் பேரில் மத்திய அரசு சென்ட்ரல் விஜிலென்ஸ் கமிஷன் என்ற அமைப்பை நிறுவியது. அரசு துறைகளிலும், மத்திய நிறுவனங்களிலும் ஊழல் தடுப்பு முறைகள் பற்றிய ஆலோசனை வழங்கவும், ஊழல் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும் மொத்ததில் அக்கறையுடன் நாணயத்தை காக்கும் ஆணையமாக அமைய வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட தொடங்கியது. இந்த அமைப்புக்கான சட்டம் 2003-அன்று நாடாளுமான்றத்தில் நிறைவேற்றப்பட்டு மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கப்பட்டது.

பொதுத் துறைகளில் நடக்கும் முறைகேடுகளைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு தக்க பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் மத்திய அரசு இவ்வாறு பொது நலன் கருதி தகவல் கொடுப்பவருக்கு பாதுகாப்பு நல்கும் அறிக்கையை ஏப்ரல் 2004-ம் ஆண்டு வெளியிட்டது. இதன்படி ஒரு பொது நிறுவனத்தில் பணிபுரிபவர் ஊழல் பற்றி தகவல் கொடுத்தால் அவருக்கு நிர்வாக ரீதியில் பாதிப்பு இருக்கக்கூடாது என்றும், சம்பந்தப்பட்ட நிறுவனம் கொடுக்கப்பட்ட தகவலை பூரணமாக விசாரணை செய்ய வேண்டும் என்றும், இதை கண்காணிக்கும் பொறுப்பு அந்த பொது நிறுவனத்தின் விழிப்புத்துறை உயர் அதிகாரி உறுதி செய்ய வேண்டும் என்றும் இந்த அறிக்கையில் பணிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஊழல் தடுப்பு முறைகள் பற்றிய விழிப்புணர்ச்சி வாரம் மத்திய ஆணையம் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்டோபர் 31-ல் இருந்து ஊழல் தடுப்பு விழிப்புணர்ச்சி வாரமாக அனுசரிக்கப்படும் என்று 2000- ம் ஆண்டு முதன்முதலாக அமல்படுத்தப்பட்டு, தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கௌடில்யாவின் அர்த்தசாஸ்த்திரத்தில், எவ்வாறு தண்ணீரில் நீஞ்சும் மீன் எப்போது தண்ணீர் குடிக்கிறது என்று தெரியாதோ, அதே போல் பொதுப் பணியாளர்கள் எப்போது ஊழல் புரிகிறார்கள் என்பது கணிப்பது கடினம் என்று மிக அழகாக உவமையோடு விவரிக்கப்பட்டுள்ளது. பொது நிறுவனங்கள், அரசு துறை தனியார் துறை என்று எந்த ஒரு அமைப்பிலும் ஊழலின் விளைவுகள் சரி செய்ய முடியாதவை. அவை மீள முடியாத பாதையில் கொண்டு சேர்க்கும். அதுவும் சட்ட அமலாக்கத்தில் முக்கிய பொறுப்பு வகிக்கும் காவல் துறையில் இம்மாதிரியான நெறியின்மை குற்றங்கள் வளர்ந்திட வழி செய்யும். சட்டம் சார்ந்த நிர்வாகத்திற்கு கேடு விளைவிக்கும்.

காவல் துறையின் மீது சொல்லப்படும் முக்கிய குற்றச்சாட்டுகள் - நிகழ்வுகளை உண்மையாக பதிவு செய்வதில்லை.
• முறையற்ற கைது
• பண பலம், முக பலத்திற்கு அடிபணிதல்.
• ஒரு தலைபட்ச நடவடிக்கை.
• குற்றவாளிகளுக்கு துணைபுரிதல்.
• கையூட்டு பெறுதல்.
இவ்வாறு சிலர் செய்யும் தவறுகளால் பலர் செய்யும் நற்பணிகள் சோபிக்காமல் போகின்றன.

உயிர், சுதந்திரம், கண்ணியம், சமத்துவம் என்பவை மனித உரிமைகளின் முக்கிய அங்கங்களாக கருதப்படுகின்றன. எந்த ஒரு நேர்மையற்ற பணியும் இந்த மனித உரிமைகளை பாதிக்கும் என்பது மறுக்க முடியாது. ஊழல் ஒரு முக்கிய மனித உரிமை மீறலாகவே கொள்ள வேண்டும்.

சர்வதேச காவல் கூட்டமைப்பு – ‘இண்டர்போல்’ போலீஸ்துறையில் இருக்கும் ஊழலைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உலகளவில் போலீஸ் தரம் உயர்த்துவதற்கான இலக்குகள் நிர்ணயித்தது. 2002-ம் ஆண்டு காமீருன் நாட்டில் 181 நாடுகள் பங்கேற்ற இண்டர்போல் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அன்றைய சி.பி.ஐ.இயக்குநர் திரு.ஷர்மா அவர்கள் போலீஸ் துறையில் ஊழலின் ஊடுருவலை விவரிக்கையில் காவல்துறைக்கு வெளியில் இருந்து வரும் தாக்குதல்களைவிட போலீஸ்துறையின் ஆளுமையின் பலவீனம்தான் கொடுமையானது என்று கூறியுள்ளார். குற்றங்களைக் களைய மேற்கொள்ளப்படும் எந்த போலீஸ் திட்டமும் ‘குற்றவாளிகள் -காவல்துறை’ பரஸ்பர மறைமுக தொடர்பால் வெற்றியடைவதில்லை என்று இண்டர்போல் கவலை தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் இழிதொழில் வாணிப முறையில் மனிதர்களை கடத்துவது, பாலியல் கொடுமைகள், போதை பொருட்கள் கடத்தல் போன்ற குற்ற சின்டிகேட்டுகள் தழைத்து வருவது உலக அமைதிக்கு பெரும் அபாயம் என்பது கண்கூடு. இதை எதிர்கொள்வதற்கு ஒரே வழி போலீஸ்துறையில் உயர்ந்த செயல்திறனை வளர்க்கும் கோட்பாடுகளை பின்பற்றுவதில் தான் உள்ளது. இந்த கோட்பாடுகள் எல்லா காவல்துறை அமைப்புகளுக்கும் பொருந்தும். இதற்கு காவல்துறை உயர் அதிகாரிகள் முன்னோடியாக இருந்து அப்பழுக்கற்ற நேர்மையான வழிகாட்டுதலைக் கொடுக்க வேண்டும். ஒரு நேர்மையான அதிகாரி அபரிமிதமான அளவிற்கு நன்மை பயக்கும் மாறுதலைக் கொண்டு வரமுடியும். அதே சமயத்தில் கோட்பாடற்ற உயர் அதிகாரி மற்றும் அவர் கீழ் பணிபுரியும் நேர்மைற்ற ஊழியர்களின் கூட்டணி நிர்வாகத்தின் முதல் எதிரி என்பதில் ஐயமில்லை.

தமிழக காவல்துறை தோன்றி வளர்ந்த சரித்திரத்தை எடுத்துக்கொண்டால் முதலில் ‘கொத்வால் போலீஸ்’ என்ற முறையில் வணிக சந்தைகளுக்கு பாதுகாப்பு, அத்தியாவசிய பொருட்கள் அதிக விலையில் விற்காமல் பார்த்துக் கொள்வது, பொது இடங்களில் சுகாதாரம் தரம் குறையாது கவனித்தல் போன்ற பொறுப்புகள் இருந்தன, பணம் புரளும் இடங்களில் பணி செய்வதால் மனம் தடம் புரண்டு மாமுல் வாங்கும் பழக்கம் காவல்துறையை தொற்றிக் கொண்ட நோய் இன்றும் தொடர்கிறது. ஆங்கீலேய ஆட்சியில் அரசுப் பணியாளர்களுக்கு சம்பளம் குறைவு. சுய சாமர்த்தியத்தில் குறைவை நிறைவு செய்ய வேண்டும். அலுவலகம் வருவதற்கு சம்பளம், வேலை செய்ய ‘கிம்பளம்’ என்ற நிலை இருந்தது. ஆனால் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளாகியும் பல வசதிகள் பெருகியும் ஊழல் என்ற நோய் தொடர்வது நம்மை விழிப்படையச் செய்ய வேண்டும்.

ஊழலால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் ஏழை மக்கள் தான். சட்ட அமலாக்கமும் ஏழை மக்கள் மீது தெளிவாகப்பாயும். சிறைச்சாலைகளில் சட்டத்தின் பிடியில் சிக்கி இருக்கக்கூடிய இல்லவாசிகளின் பொருளாதார தரத்தைப்பார்த்தாலே வெட்ட வெளிச்சமாகும். தப்பித்தவறி வசதி படைத்த குற்றவாளி சிறைக்கு வர நேரிட்டால் வசதி செய்து கொடுக்க முனைபவர்களும் இருக்கிறார்கள்.

‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன்’ என்பது அறிஞர் அண்ணா அவர்களின் அமர வாக்கு. தன்பணிகளை செவ்வனே செய்து ஏழை மக்களின் மகிழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் பரம் பொருளைக் உணரக்கூடிய வாய்ப்பு அரசுப்பணியில் தான் உள்ளது. அதுவும் உயிர் உடமைகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் காவல்துறையில் நற்பணிகளின் பிரதி பலன் உடனே காணக்கூடியது. அதில் வரக்கூடிய ஆத்மதிருப்தி அலாதியானது. வீரப்பன் வேட்டைப் பணியில் பல நேரங்களில் கிராம மக்களின் தன்னலமற்ற போக்கையும் நேர்மையையும் உணர முடிந்தது. விடிவதற்கு பல மணிநேரம் முன்னால் இருட்டிலேயே 10 நாளுக்கு வேண்டிய ஏற்பாடுகளுடன் காட்டிற்குள் சென்றுவிடவேண்டும். வனப்பகுதியில் பரிச்சியமான அங்குள்ள ஆதிவாசிகள் உதவியை நாடவேண்டிவரும். அவர்களுக்கு உண்ண உணவு கொடுத்தால் தேவைக்கு மேல் எடுத்துக் கொள்ள மாட்டார்கள் பணம் கொடுத்தாலும் வாங்க மாட்டார்கள் தனக்கு தெரிந்ததை சொல்லி உதவியதற்கு எதற்கு வெகுமதி என்று மறுத்துவிடும் வெகுளியான ஏழை மக்களின் நடத்தை எங்களுக்கு ஒருபாடமாக அமைந்தது. அவர்களது கிராமங்களுக்கு சென்று மருத்துவ வசதியும் மற்ற அத்தியாவசிய வசதிகளும் செய்து கொடுக்கவேண்டும் என்ற திட்டம் வகுக்கப்பட்டு பல மக்கள் நல நற்பணிகள் அதிரடிப்படையால் மேற்கொள்ளப்பட்டது. இந்த மனித நேய அணுகுமுறை முடிவில் வீரப்ப வதத்திற்கு அடித்தளம் அமைத்தது என்றால் மிகையல்ல.

அரசுப்பணி என்பது மக்களுக்கு சேவை செய்ய அரிய வாய்ப்பை அளிக்ககூடியது. அரசுப்பணியாளார்கள் கையாளும் கோப்புகள் முகமற்றதல்ல. அதனுள் பலரின் எதிர்காலம் புதைந்திருக்கிறது. சாதி ஜனம் என்ற பாகுபாடின்றி ஒவ்வொருவரும் நம்மை சேர்ந்தவர்கள், அவர்களுக்கு முன்னேற்றத்தின் பயன் சென்றடைந்தால்தான் சமுதாயத்தில் அமைதி நிலவும் என்ற உணர்வு வளர வேண்டும். இல்லையேல் ஏழையின் சிரிப்பில் இறைவனுக்கு பதில் ஏழையின் வெறுப்பில் சாத்தானைத்தான் காணமுடியும். “தம்மில் மெலியவரை நோக்கி நமதுடமை அம்மா பெரிதென்ற” அகமகிழ்வோடு மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை மேலோங்கினால் தான் ஊழல் குறையும் பணிகள் பரிமளிக்கும்.

தினமணி நாளிதழில் 14.11.2008 தேதி அன்று பிரசுரிக்கப்பட்டது

No comments: