Monday, September 6, 2010

கதவில்லா சிறைகள்

சிறைச்சாலைகள் சட்டத்தின் பிடியில் சிக்கியவர்களை நல்வழிப்படுத்தும் இடமா அல்லது தண்டனை பெற்றவர்களை துன்புற்றவேண்டிய நரகமா என்ற சர்ச்சை அவ்வப்பொழுது சமுதாய நிலைக்கு ஏற்றாற்போல் மாறிக்கொண்டு வருவதை காண்கிறோம். குற்றம் புரிந்தவர்கள் அனுபவிக்கவேண்டும், வசதிகள் மறுக்கப்பட வேண்டும் என்று ஒரு சாராரும் குற்றம் புரிந்தவர்களை சீர்திருத்தும் நடவடிக்கையே சிறைச்சாலைகளின் முக்கியமான பணி என்ற கருத்தும் மாறி மாறி வரும்.

சாதாரண நாட்களில் சிறைச்சாலைகளில் எடுத்துவரும் சீர்திருத்த நடவடிக்கைகள் மக்கள் வரவேற்பைப் பெறுகின்றன. அதே சமயம் கொடுங்குற்றங்கள் பெருகும் பொழுது எதற்காக இத்தகைய கொடுங்குற்றவாளிகளுக்கு வசதிகள் கொடுக்க வேண்டும், புரிந்த குற்றத்திற்கு அவர்கள் இன்னலுற வேண்டும் என்பது சராசரி மக்களின் எண்ணம் என்பதை மறுக்க முடியாது.

சமுதாய சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு சிறை நிர்வாகம் தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள முடியாது. அத்தகைய அணுகுமுறை சரியானதுமல்ல. சிறைச்சாலைகளின் தலையாய பணி நீதிமன்றம் மூலம் சிறையிலிடப்படுபவர்களை பாதுகாப்பாக வைத்து சிறைவாசம் முடிவுற்றப் பிறகு விடுதலை செய்தல். சிறைவாசம் அனுபவிக்கும் பொழுது அவர்களது அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். சுதந்திரம், கண்ணியம், சமத்துவம், உயிருக்குப் பாதுகாப்பு ஆகியவை அடிப்படை உரிமைகளாகக் கருதப்படுகின்றன. சட்டத்தின் பிடியில் சிக்கியதால் அவரது சுதந்திரம் நீதிமன்ற உத்தரவுப்படி கட்டுப்படுத்தப்படுகின்றது. ஆனால் மற்ற உரிமைகள் பாதுகாக்க வேண்டியது சிறை பணியாளர்களின் பொறுப்பு மட்டுமல்ல வரையறுக்கப்பட்ட கடமையாகும்.

தேசிய உரிமைகள் ஆணையம் உணவு, வாழ்வாதாரம், சுகாதாரம் போன்ற முக்கிய உரிமை பிரச்சனைகளோடு காவலில் பாதுகாப்பும் முக்கியமாக பேணவேண்டிய உரிமை என்று கூறியுளளது. மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு மேலோங்கிய இத்தருணத்தில் சிறைவாசிகள் கண்ணியமாக நடத்தப்படவேண்டும் மக்களிடையே சிறைவாசிகளை நல்வழிப்படுத்துதல் பற்றிய விழிப்புணர்வு பரவச் செய்து சமுதாயத்தின் ஒத்துழைப்பு பெறுவதுதான் ஆரோக்கியமான அணுகுமுறை.

சிறையிலிடப்படுபவர்களை கடுமையான வேலையில் ஈடுபடுத்தவேண்டும் என்ற நிலை சிறைநிர்வாகத்தின் ஆரம்பகாலத்தில் இருந்தது. அவர்கள் சாலை செப்பனிடுதல், சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்தல் போன்ற வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். 1836-38ல் அமைக்கப்பட்ட அகில இந்திய சிறை நிர்வாக கமிட்டி இவ்வாறு கடும் பணிமுறையை ரத்து செய்யவேண்டும் என்ற பரிந்துரையின் அடிப்படையில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. ஆயினும் 1877ம் ஆண்டு நடைபெற்ற சிறைநிர்வாக கலந்தாய்வுக் கூட்டத்தில் கைதிகளை பொதுப்பணியில் ஈடுபடுத்தும் திட்டம் மீண்டும் விவாதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. 1919-1920ல் மீண்டும் கூடிய சிறை நிர்வாக கமிட்டி சிறைவாசிகள் நிலையையும் அவர்கள் செய்யக்கூடிய பணியையும் ஆராய்ந்து விவசாயம், தோட்ட வேலை சம்மந்தப்பட்ட பணிகள் அவர்களுக்கு உகந்த பணி என்றும் இவ்வாறு திறந்தவெளி பணிகளில் அவர்களது மனநிலையும் சீராகும் என்று பரிந்துரை வழங்கியது. ஆனால் நடைமுறை சிக்கல்களால் இவற்றை அமல்படுத்த முடியவில்லை.

சுதந்திர இந்தியாவில் தலைவர்கள் ஆங்கிலேயர் ஆட்சியில் சிறையிடப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் சிறை சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 1950-51ல் ஓய்வுபெற்ற நீதிபதி திரு கே.எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் தலைமையில் சீர்திருத்தக்குழு தமிழ்நாடு, கேரளா சிறைகளை பார்வையிட்டு சிறைச்சாலைகள் சிறைவாசிகளை சீர்திருத்தவே அன்றி பழிவாங்குவதற்கு அல்ல என்பதன் அடிப்படையில் பல பரிந்துரைகளை அளித்தது.

சிறைச்சாலைகள் சமுதாயத்தின் மருத்துவமனைகள் என்றார் அண்ணல் காந்தியடிகள். சிறைவாசிகள் அடிமைகள் அல்ல அவர்கள் நாட்டின் உடமைகள் என்ற அடிப்படையில் அவர்கள் சீர்திருத்தப்பட வேண்டும் என்ற உயரிய கருத்தினை வலியுறுத்தினார். இந்தியாவில் பல மாநிலங்களில் சிறை நிர்வாக சீர்திருத்த நிபுணர் என்று முத்திரைப்பதித்த திரு டபிள்யூ. ஜி. ரெக்ஸின் என்ற அமெரிக்கர் தலைமையில் 1950-ம் வருடம் ஒரு குழு அமைக்கப்பட்டு இந்தியச் சிறைகளை பார்வையிட்டு அளித்த அறிவுரைகளைத் தொடர்ந்து பல மாநிலங்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் முக்கியமான பரிந்துரைகள் சிறை அலுவலர்களுக்கு சிறப்புப் பயிற்சி, விடுதலைக்குப்பின் புனர்வாழ்வு, அவர்களின் நன்னடத்தை கவனிப்பு, சமுதாயத்தோடு இணைவதற்கான உதவி, சிறைகளில் மன அமைதிக்கான பயிற்சி என்று பல முற்போக்குத் திட்டங்கள் வகுக்கப்பட்டன.

1980ம் ஆண்டு நீதியரசர் திரு ஏ.எஸ். முல்லா தலைமையில் அமைக்கப்பட்ட சிறை சீர்திருத்தக்குழு சிறைகள் நவீனமயமாக்கல் திட்டத்தை அளித்தது. இதையேதான் 1977ம் வருடம் நீதிபதி இஸ்மாயில் குழு அவசரநிலை பிரகடனத்தின்போது சென்னை மத்திய சிறையில் நடந்த அத்துமீறல்கள் குறித்து விசாரணை செய்து சிறைகளை நவீனப்படுத்த வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தியது. ஓய்வு பெற்ற உயர் போலிஸ் அதிகாரி திரு எஸ்.எம். டயஸ், பேராசிரியர் வெங்கோபராவ் ஆகியோரை அங்கத்தினர்களாகக் கொண்டு பாட்னா உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி திரு நரசிம்மன் அவர்கள் தலைமையில் 1978-79-ல் அமைக்கப்பட்ட தமிழ்நாடு சிறைகள் சீர்திருத்தக்குழு அளித்த பரிந்துரைகள் சிறை சீர்திருத்த நடவடிக்கைகளின் மைல்கல் எனலாம். இந்தக்குழு மிக சிறப்பாக ஆய்வு மேற்கொண்டு 178 பரிந்துரைகளை அளித்தது. அதில் முக்கியமான பரிந்துரை பல மாவட்டங்களில் திறந்தவெளி விவசாயக் காலனிகள் உருவாக்க வேண்டும் என்பதுதான். மருத்துவமனை வசதி, குறைகளை நிவர்த்தி செய்ய கண்காணிப்பாளர் தலைமையில் குழு அமைத்தல் ஒருங்கிணைத்த சிறை நிர்வாக சட்டம் அமலாக்கம் என்ற பல முற்போக்குப் பரிந்துரைகள் வழங்கப்பட்டன.

1785 ம் வருடம் ஜெமிமி பென்தாம் என்ற ஆங்கில சமூக சிந்தனையாளர் பான் அப்புகான் என்ற வட்ட வடவமுள்ள சிறை கட்டிட வடிவமைப்பினை புனைந்தார். அதில் கதவுகளோ, சுவர்களோ அதிகம் இல்லாது குறைந்த பணியாளர்களை வைத்து கண்காணிக்க உதவும். சிறையிலிருந்து தப்புவதை யாராவது பார்த்துவிடக்கூடும் என்ற அச்சமே தப்பிக்க முய்ல்வதைத் தடுக்கும் என்பது இந்த வடிவமைப்பின் உள்நோக்கம்.

திறந்தவெளி சிறைகளில் கதவுகள் இல்லை காவல்காக்க காவலருக்கும் அவசியம் இல்லை. இங்கு விவசாய பணி செய்யக்கூடிய சிறைவாசிகள் நன்னடத்தை அடிப்படையில் தெரிவு செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு விதிக்கப்பட்ட சிறைதண்டனை குறைந்தபட்சம் கால்பாகம் அனுபவித்திருக்க வேண்டும். விடுதலையாவதற்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் இருப்பவர்கள் திறந்தவெளி சிறைக்கு அனுப்பப்படுகிறார்கள். நன்னடத்தை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவதால் சாதாரண சிறைகளில் இருப்பவர்கள் ஒழுக்கமாக விதிகள் மீறாமல் நடப்பதற்கு ஊக்கமளிக்கும்.

இந்தியாவில் எல்லா மாநிலங்கள் மற்றும் யூனியன்பிரதேசங்கள் உட்பட 1276 சிறைகள் உள்ளன. இதில் மத்திய சிறைகள் 113. தமிழகத்தில் 9 மத்திய சிறைகள் உட்பட 134 சிறை இல்லங்கள் உள்ளன. அதிகமான சிறைகள் உள்ள மஉறாராஷ்டிரா மாநிலத்தில் 153 சிறைகள். 13 மாநிலங்களில் தான் திறந்தவெளி சிறைகள் உள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகபட்சமாக 10 திறந்தவெளி சிறைகளும், மஉறாராஷ்டிராவில் மூன்றும், ஆந்திரா, குஜராத், கேரளா, தமிழ்நாட்டில் தலா 2 திறந்த வெளி சிறைகளும் உள்ளன.

கோயமுத்தூர் சிங்காநல்லூரில் உள்ள திறந்தவெளி சிறை 30.72 ஏக்கர் பரப்பளவு கொண்டது. வருடத்திற்கு சராசரி ரூ.8,85,360/- லட்சம் வருவாய் அறுவடைசெய்யப்படும் காய்கறிகள், பழங்கள், தானிய வகைகள் மூலம் ஈட்டப்படுகிறது. சேலத்திற்கு அருகில் இருக்கும் விவசாய தோட்டம் 10 ஏக்கர் அதிலும் பிரதானமாக காய்கறிகள் பயிரிடப்படுகின்றன.

சிவகங்கை மாவட்டம் புரசுருடைஉடைப்பு என்ற இடத்தில் திறந்தவெளி சிறை அமைப்பதற்கு 87.70 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் நகர எல்லையில் திருமலைசமுத்திரம் என்ற இடத்தில் 33.06 ஏக்கர் நிலத்தில் விவசாயத் தோட்டம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே போல் கடலூர் மத்திய சிறை வெளிப்புறத்தில் 51.03 ஏக்கர் நிலம் சிறைத்துறைக்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கும் திறந்தவெளி சிறை அமைக்க உரிய இடம். திருநெல்வேலி வாகைக்குளம் அருகில் திறந்தவெளி சிறை அமைக்க நிலம் தெரிவு செய்ய துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

மத்திய சிறை அமைந்துள்ள எல்லா முக்கிய நகரங்களிலும் ஏக்கர் கணக்கில் நிலம் உள்ளது. நகரங்கள் வளர்ந்துவிட்ட நிலையில் பிரதான இடங்களில் அமைந்துள்ள சிறைத்துறையின் நிலங்கள் பல கோடி ரூபாய் மதிப்பு பெறும். இந்த அரிய இடங்களைப் பாதுகாப்பாக பேணிய சிறைப்பணியாளர்கள் பாராட்டுக்குரியவர்கள். கோவை நகரம் மத்திய சிறை அமைந்துள்ள 45 ஏக்கர் இடம் செந்தமிழ் பூங்காவாக பராமரிக்கப்படவுள்ளது. கோவை நகரின் நுரையீரலாக மக்களுக்கு ஆரோக்கியத்தை நல்கும்.

வறுமை, சமுதாயத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் இந்த இரண்டு முக்கிமான பிரச்சனைகள்தான் குற்றநிகழ்வுகளுக்கு காரணம். மேலை நாடுகளில் உள்ளது போல் குற்றம் புரிவதை தொழிலாக செய்பவர் வெகு சிலரே. இதை மனதில் கொண்டு தான் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். நரசிம்மன் கமிஷன் மணியான பரிந்துரைகளை கொடுத்திருக்கிறது. அவற்றை நடைமுறைப்படுத்த ஆணைகளும் அரசு கொடுத்திருக்கிறது. அவைகளை முழுமையாக அமல்படுத்துவது சிறைத்துறையின் பொறுப்பு. அதை ஊக்குவிப்பது அரசு அதிகாரிகளின் கடமை. ஜாண் ஏறினால் முழம் சறுக்கல் என்றில்லாமல் ஒரு சீராக சிறை சீர்திருத்தம இயங்க வேண்டும். சிறைவாசிகளை நல்வழிப்படுத்தி சமுதாயத்தில் இணைவத்ற்கு வழிவகுத்தல் சிறை சீர்திருத்தத்தின் உயிரிய குறிக்கோள் என்பதை மறந்துவிடக்கூடாது.

சில குற்றங்களுக்கு கம்யூனிட்டி சர்வீஸ் அல்லது சமுதாய பணி மாற்று தண்டனையாக வழஙக வேண்டும் என்ற சட்டம் ஆந்திரா மாநிலத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. சிறை பொறுமை என்ற சிறந்த குணத்தை வளர்க்கும் இடம். மனது ஆறப்போட்டால் அது பதப்படும். நல்ல ஆரோக்கியமான உடற்பயிற்சியும், உள்ளத்தில் படிந்துள்ள கள்ள கபடங்களை அகற்றவல்ல மன அமைதியை தரக்கூடிய வாழும் கலை பயிற்சியும் திருந்திவாழ்வதற்கான நல்வழிப்பாதை. இயற்கை சூழ்நிலைதான் அதற்கு அரிய மருந்து. கதவில்லா சுவரில்லா திறந்தவெளி சிறைதான் இந்த அரிய காயகல்பத்தை வழங்க வல்லது.

The Article Published in Dinamani on 03.09.2010