“உன்னைச் சொல்லி குற்றமில்லை
என்னைச் சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி”
மும்பையில் நடந்த கொடூரத் தாக்குதல் தொடர்பாக ஒருவருக்கொருவர் பழிசுமத்தி தங்களைப் பொறுத்தவரையில் தவறொன்றுமில்லை என்று பொறுப்பில் உள்ளவர்கள் கூறியது மேற்சொன்ன பாடலைத் தான் நினைவுபடுத்தியது. ஒவ்வொரு அரசு அமைப்பும் தான் செய்ய வேண்டிய கடமையை செய்துவிட்டதாக தற்காப்பு தன்னிலை விளக்கங்கள் மக்களை சலிப்படையச் செய்கின்றன. ஒவ்வொருவரும் தமது பெறுப்பை சரிவர செய்திருந்தால் ஏன் இந்த கொடூர தாக்குதல் நிகழ்ந்தது? இந்த தாக்குதல் நம் எல்லோருக்கும் பல பாடங்களை கற்பித்திருக்கிறது.
· விரல் விட்டு எண்ணக்கூடிய தற்கொலைப் படையினர் ஒரு கொடிய போரினால் ஏற்படக்கூடிய விளைவுகளை விட பயங்கரமான மனநிலை பாதிப்புகள் மக்களின் மத்தியில் ஏற்படுத்த முடியும் என்பது நிதர்சன உண்மை.
· டில்லி தொடர் குண்டு வெடிப்புகளுக்குப் பின் மும்பை நகர தாக்குதலுக்குள்ளாகும் என்ற தகவல் கொடுக்கப்பட்டும் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது. நடவடிக்கை எடுக்கக்கூடிய குறிப்பிட்ட தகவல் இல்லை என்று சால்ஜாப்பு காரணம் காட்டியது.
· தீவிரவாதிகள் தாக்குதல் துவங்கிய பிறகு மும்பாய் போலீஸின் திட்டமிடாத முதல்கட்ட அணுகுமுறை.
· சம்பவ இடத்தை பாதுகாக்க வேண்டும், பொதுமக்களின் இடையூறின்றி பணிகள் செய்ய இடைவெளி ஏற்படுத்தத் தவறியதால் சுற்றுப்புறச் சாலை ஏதோ திருவிழாக்கூட்டம் போல் காட்சியளித்தது.
· உபயோகமாக ஒரு உதவியும் செய்யாமல் வேடிக்கைப் பார்க்கும் மக்களின் மனப்போக்கு.
· தீவிரவாதிகள் போலீஸ் வாகனத்தையே கடத்திச் செல்லும் அளவிற்கு போலீஸ் கவனக் குறைவாக இருந்தது.
· மீன் பிடிக்கும் துறைமுகத்தில் சந்தேகப்படும் வகையில் மூட்டைகளை சுமந்து சிலர் இறங்கியுள்ளனர் என்ற தகவல் கிடைத்தும் நடவடிக்கை எடுக்கத் தவறியது.
· அசாதாரணமான நிலைமையை சமாளிப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட முக்கியத்துறைகள் கூடிய அவசரநிலைகுழு செயல்படாதது.
· தேசிய பாதுகாப்பு கமாண்டோக்கள் பணிகளை மேற்கொள்ள பல மணி நேரத்திற்கும் மேற்பட்ட கால தாமதம்.
· தனியார் தொலைக்காட்சிகளின் பொறுப்பற்ற விமர்சனங்கள். பாதுகாப்பு படையினரின் பணிகளில் இடஞ்சல் ஏற்படுத்தும் வகையில் குறுக்கீடு.
· அசம்பாவிதம் நிகழக்கூடிய இடங்களில் உயர் அதிகாரிகள் ஒரே வாகனத்தில் பயணிக்கக்கூடாது என்ற விதிகள் இருந்தும் மூன்று அதிகாரிகள் ஒரே வாகனத்தில் சென்று தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பலியானது.
இவ்வாறு பல தவறுகள் நமக்கு பாடம் புகட்ட வேண்டும்.
1990-ல் இருந்து மும்பாய் நகரில் பல தீவிரவாத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழ்நாடு 1980-ல் இருந்தே இலங்கை உள்நாட்டு கலகத்தினால் இம்மாதிரி பிரச்சனைகளை சந்தித்துவிட்டது. 1984-ம் வருடம் சென்னை விமான நிலைய குண்டுவெடிப்பில் 33 பயணிகள் உயிரிழந்ததை மறந்துவிடமுடியாது. இந்தியாவில் இந்த வருடம் 59 தீவிரவாத நிகழ்வுகளில் 441 உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
நவம்பர் 26 மும்பை தாக்குதல் பலவகையில் வித்தியாசமானது. அமெரிக்காவின் 9/11-க்கு ஒப்பிட்டு கூறலாம் என்பது நிபுணர்களின் கணிப்பு. தீவிரவாதிகள் புகுந்த இடம் பிரசித்தி பெற்ற தாஜ், ட்ரைடண்ட் நட்சத்திர ஹோட்டல்கள். தாக்குதலுக்குள்ளானவர்கள் அமெரிக்க, ஐரோப்பா, இங்கிலாந்து நாட்டினர். வசதியானவர்கள் தாக்கப்பட்டனர். சத்ரபதி சிவாஜி இரயில் நிலையம் நெரிசல் மிகுந்த பகுதி. சரமாரியாக மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மத நல்லிணக்கதை போற்றும் பல மதத்தினரும் மகிழ்ச்சியாக நேரம் கழிக்கும் இடம் லியோபால்ட் சிற்றுண்டி விடுதி, அதுவும் தாக்கப்பட்டது. அவர்களது மற்றோர் இலக்கு யூத மதத்தை சேர்ந்த இஸ்ரேல் நாட்டு தம்பதிகளின் இருப்பிடம். அந்த தம்பதிகள் செய்த ஒரே குற்றம் எல்லாதரப்பட்ட மக்களையும் நேசித்தது. நல்லவர்கள் தாக்கப்பட்டனர். வல்லவர்கள் உயிரிழந்தனர். நலிந்தவர்கள் இரத்த வெள்ளத்தில் மாண்டனர். ஒரே நேரத்தில் பல இடங்களில் தாக்குதல். துரிதமான, வக்கிரமான, கோரமான தாக்குதல் நிர்வாகத்தை நிலைகுலைய செய்தது. இவை உள்ளூரில் உள்ளவர்களின் உதவியின்றி சாத்தியமில்லை. தெரிந்தோ, தெரியாமலோ அவர்கள் உடந்தையாக இருந்திருக்கின்றனர்.
இதற்கு முடிவு தான் என்ன? நாடு கடந்த தீவிரவாத நிகழ்வுகளை சமாளிப்பது உள்ளூர் காவல்துறையால் முடியாது. அவர்கள் அன்றாட சாதாரண சட்டமீறல்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மட்டும் பயிற்சி பெற்றவர்கள். பல்வேறு தீவிரவாத அமைப்புகளை கண்காணித்தல், தீவிரவாத அமைப்புகள் பற்றிய செய்திகள் சேகரித்தல், தகவல் சேகரித்தல் போன்றவை சிறப்புப் பயிற்சிப் பெற்ற போலீஸசாரால்தான் கையாள முடியும். மும்பாய் தாக்குதல் போன்ற சம்பவங்களை கமாண்டோ பயிற்சிப் பெற்ற பாதுகாப்பு பிரிவினரால்தான் எதிர்கொள்ள முடியும். ஆனால் உள்ளூர் காவல்துறையினர் சங்தேக நபர்களைப் பற்றி தகவல் சேகரிக்க வேண்டும். அதன் மூலம் தீவிரவாத அமைப்புகளுக்கு உதவும் உள்ளூர்வாசிகள் பற்றிய தகவல்கள் சேகரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது முக்கியமான பொறுப்பாகும். மும்பாய் நகரம் பல தீவிரவாத தாக்குதல்களுக்கு உள்ளாகியும் முக்கியமாக 1993-ல் தொடர் குண்டுவெடிப்பில் 252 உயிரிழப்புக்குப் பிறகும் மும்பையில் ஒரு கமாண்டோ படை உருவாக்காமல் விட்டது மிகப் பெரிய தவறு. துப்பாக்கி சண்டை துவங்கி 12 மணி நேரம் டில்லியிலிருந்து தேசிய கமாண்டோ பிரிவினர் வருவதற்கு காத்திருக்க வேண்டியிருந்தது.
தற்போது சென்னையிலும், மும்பை தாக்குதலுக்குப்பின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழக காவல் துறையின் தயார் நிலை பன்மடங்கு உயர்ந்தது என்பது உண்மை. 1991-ம் ஆண்டு திருப்பெரும்புதூர் குண்டுவெடிப்பிற்குப்பின் கடலோர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தமிழ்நாடு சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் கடற்பகுதியியைப் கொண்டது. 1993-ம் வருடம் கடலோர பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டு ஒவ்வொரு காலகட்டத்திலும் நவீன கருவிகள், வாகனங்கள், தொலை தொடர்பு சாதனங்கள் மூலம் மேம்படுத்தப்பட்டது. சென்னை கடலோர ஆழமில்லா பகுதியில் ரோந்து செய்ய மிதக்கும் காவல்நிலையம் சென்னை மாநகர காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. எல்லா மாவட்டங்களிலும் முக்கியமான இடங்களில் செக் போஸ்ட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 1992-ல் கமாண்டோ பிரிவு துவக்கப்பட்டு, 1996-ம் ஆண்டு இது மேலும் பலப்படுத்தப்பட்டது. பல பீமன்களையும், அர்ஜுனர்களையும் கொண்ட செயல் திறன்மிக்க அணி என்பதில் ஐயமில்லை. கமாண்டோ பயிற்சிப் பள்ளியும் துவக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதி நவீன துப்பாக்கிகள், இரவில் உபயோகிக்கக்கூடிய பைனாகுலர்கள், துண்டு துளைக்காத கவசங்கள் வாங்கப்பட்டுள்ளன. எல்லாவற்றிற்க்கும் மேலாக கமாண்டோக்களுக்கு விசேஷ பயிற்சி தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டங்களிலும் தனி கமாண்டோ குழுக்கள் பயிற்சி பெற்ற மாவட்ட ரிசர்வ் படையில் உள்ளனர்.
1998-ம் வருடம் கோயம்புத்தூர் தொடர் குண்டு வெடிப்பு சம்பந்தப்பட்ட வழக்குகள் சிறப்பு விசாரணைக்குழு மூலம் விசாரணை செய்யப்பட்டு மனித உரிமை மீறல்களுக்கு இடம் கொடாது கையாளப்பட்டன. அதே சமயம் சிறுபான்மையினரின் குறைகளை களையும் விதத்தில் சிறப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
தமிழக காவலர் போர்க்கால நிலையில் தன்னார்வத்தோடு பணிகளை செய்பவர். திறமைசாலி அதைவிட பொறுமைசாலி. சென்னை நகரத்தையும் மற்ற கடலோரப் பகுதிகளையும் சுனாமி தாக்கியபோது திறம்பட மக்களுக்கு பணிபுரிந்துள்ளனர். 2005-ம் ஆண்டு எல்லா மாநகரங்களுக்கும் தீவிரவாத அபாயம் உண்டு என்ற தகவல் இருந்தது. பெங்களூரில் இந்திய விஞ்ஞான வளாகத்தில் தாக்குதலும் நடந்தது. ஆனால் சென்னை போலீஸார் திறம்பட செயல்பட்டு இரவு பகல் பாராமல் தொடர் நடவடிக்கை எடுத்து நகரத்தை பாதுகாத்தனர். தீவரவாதிகளை அண்டவிடாமல் செய்தனர். இந்த சிறந்த அமைப்பின் ஒழுங்குணர்வை பாதுகாத்து வழிநடத்தி செல்வது மேலதிகாரிகளின் கையில் உள்ளது.
கோர சம்பவங்கள் 26-ம் தேதியில் நிகழ்வது வினோத ஒற்றுமை.
டிசம்பர் 26 சுனாமி தாக்குதல்
ஜனவரி 26 எல்லைப் பகுதி கட்ச் நிலநடுக்கம்
பிப்ரவரி 26 குஜராத் ‘கோத்ரா’ நிகழ்வு
ஜுன் 26 குஜராத்தில் வெள்ளம்
ஜூலை 26 மும்பை ரயில் குண்டு வெடிப்பு
செப்டம்பர் 26 அகமதாபாத் குண்டு வெடிப்பு
நவம்பர் 26 மும்பை படையெடுப்பு
26-ம் தேதியில் துரதிருஷ்டம் இந்தியாவை துரத்துகிறதா?
போதுமடா சாமி இனியாவது தீவிரவாதத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்று சமுதாயத்தில் உணர்வு மேலோங்குவது வரவேற்கத்தக்கது. என்னதான் நவீன கருவிகள் பாதுகாப்புப் பிரிவினருக்கு கொடுத்தாலும் ஜனரஞ்சக தகவல் சேகரிப்பு முறை கைவிட முடியாது. மும்பாய் நிகழ்வில் மீன்பிடித்துறையில் மூட்டைகளுடன் இறங்கிய தீவிரவாதிகளை சந்தேகப்பட்டு காவல்துறைக்கு மீனவப் பெண் கொடுத்த தகவலை உள்ளூர் காவல்துறையினர் சரியாக விசாரிக்கவில்லை. உத்திரப்பிரதேசத்தில் மத்திய ரிசர்வ் படையின் முகாமில் பிதாயின் தாக்குதல் நடந்த சம்பவத்தில் உத்திரப்பிரதேச போலீஸார் பாஹிம் என்பவனை இந்த வருடம் பிப்ரவரி மாதம் கைது செய்தனர். அவனிடமிருந்து தெற்கு மும்பையின் பல முக்கிய பொது இடங்களின் வரைபடங்கள் கைப்பற்றப்பட்டன. அவனும் பாகிஸ்தானில் உள்ள முர்ஷிதாபாத்தில் பயிற்சி பெற்றவன். தீவிரவாதிகள் ஊடுருவல் நடக்கக்கூடும் என்ற தகவல் சிவில் போலீஸாருக்கு பரிமாற்றம் செய்து சரிவர அவர்கள் உணர்த்தப்படாதது மற்றுமொரு தவறு. இதற்கு மேற்பார்வையிடும் அதிகாரிகளே பொறுப்பு. இந்த அசம்பாவிதத்திற்குப் பிறகும் ஒரு பத்திரிக்கையாளர் பாதுகாப்பை சோதிக்கும் வகையில் சந்தேகப்படும் பொருட்களோடு படகில் அதே மீன்பிடி துறையில் இறங்கியுள்ளார். எவரும் அவரை சந்தேகிக்கவில்லை. இரயில் நிலைய சோதனையையும் மீறி கையில் துப்பாக்கியோடு கடந்திருக்கிறார். இது நமது கடைநிலை பாதுகாப்பில் உள்ள ஓட்டைகளை உணர்த்துகிறது. இப்போது போலீஸின் பிடியில் உள்ள தீவிரவாதி அசல் அமீர் காசப் என்பவன், லத்தி மட்டும் ஏந்திய சில சமயோஜித காவலர்களால் பிடிக்கப்பட்டான் என்பது செய்தி. நெஞ்சுறுதியும், கடமையுணர்வும் தான் நவீன துப்பாக்கிகளைவிட பலமான ஆயுதம் என்பதற்கு வேறென்ன உதாரணம் வேண்டும்!
சந்தேகிக்கக்கூடிய நபர்களை பற்றியும், கேட்பாரின்றி கிடக்கும் அனாமதேய பொருட்கள் பற்றிய தகவல்கள் கொடுப்பதற்கென்றே 1090 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி எண் மூலம் இந்தியாவில் எங்கிருந்தாலும் தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மும்பைக்கு ஆபத்து உள்ளது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதை எவ்வாறு தவிர்ப்பது, எதிர்கொள்வது என்பதில் தவறவிட்டுவிட்டோம். எல்லா நிலையிலும் காவல்துறை, அரசாளுமை, சமுதாயம், ஊடகங்கள் என ஒன்று சேர்ந்து செயலிழந்தன. தமது உயிரை பணயம் வைத்து தீவிரவாதிகளை எதிர்த்து பல உயிர்களைப் காப்பாற்றி இரத்தம் சிந்திய இரத்தின திலகங்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பாகுபாடின்றி தீவிரவாதத்தை முறியடிப்போம். இனியாவது விழித்துக் கொண்டு செயல்பட வேண்டும். அதற்கு முதல் கட்டமாக காவல்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும் - செயல்படவிடப்படவேண்டும்.
இந்த கட்டுரை தினமலர் நாளிதழில் 14.12.2008 அன்று உரத்த சிந்தனை பகுதியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment