குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகிவருவது கவலை தருவதாக உள்ளது. 2008ம் ஆண்டு மொத்த குற்றங்கள் 22,500 அதில் தமிழகத்தில் 666 குற்றங்கள் பதிவாகியுள்ளன. குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்துவது, கட்டாய வேலைக்காக கடத்தப்படுவது, பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்துவது போன்றவை குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் அடங்கும். பதினான்கு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாய கல்வி அளிக்க வேண்டும் என்பது அடிப்படை உரிமை என்று சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. எல்லோருக்கும் கல்வி என்பது எந்த அளவிற்கு நடைமுறையில் உள்ளது என்று பார்க்க வேண்டும். எவ்வளவோ இல்லங்களில் குழந்தைகள் வீட்டுவேலையில் அமர்த்தப்படுகிறார்கள். கண்டும் காணாது ஏதோ நாம் அவர்களின் ஜீவனத்திற்கு உதவுகிறோம் என்று இந்த கொடுமைக்கு காரணம் காட்டுகிறோம். அந்த பச்சிளம் குழந்தைகளின் பிள்ளை பிராயம் நசுக்கப்படுகிறது என்ற உண்மையை கவனிக்க மறுக்கிறோம்.
பல்வேறு கவன ஈர்ப்புகளின் ஊடுருவலால் குழந்தைகளை கவனிக்க நேரம் ஒதுக்கப்படுவதில்லை. பல்வேறு இல்லங்களில் குழந்தைகள் வீடுதிரும்பும் பொழுது வேலையாட்களைத் தவிர மற்ற பெரியோர்கள் இருப்பதில்லை. ஏனெனில் திருமணம் முடிந்த கையோடு தனிக்குடித்தனம் சென்று விடுகின்றனர். பொருள் ஈட்டுவதற்கு கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம். வாகன ஓட்டுனர்களையும் மற்ற உதவியாளர்களையும் நம்பியிருக்க வேண்டிய நிலை. அவர்களது பொறுப்பில் குழந்தைகள் விடப்படுகின்றனர்.
பல இல்லங்களில் பெரியோர்கள் இல்லாத நேரத்தில் குழந்தைகள் வீட்டு உதவியாளர்களோடு சேர்ந்து தொலைக்காட்சி பார்க்கின்றனர். இரவு நேரங்களில் எந்தமாதிரியான நிகழ்ச்சிகள் வருகின்றன என்பது கண்கூடு. ‘மிட்நைட்’ மசாலாவாக துவங்கி விரச காட்கள் இப்போது பட்டப் பகலுக்கு வந்துவிட்டது. இளம் உதவியாளர்கள் ஓய்வு நேரங்களில் எஜமானர் வீட்டிலேயே உட்கார்ந்து இத்தகைய காட்சிகளைக் கண்டு களிப்பது சகஜமாகிவிட்டது. இப்போது சின்னஞ்சிறு குழந்தைகளை ஆடவிடுகிறார்கள். அதுவும் இரட்டை அர்த்தம் கொண்ட பாடல்களுக்கு வேண்டாத உடல் அசைவுகளோடு. திரும்ப திரும்ப விரச காட்சிகளைக் கண்ட மயக்கத்தில் வீட்டு உதவியாளர்கள் குழந்தைகளை பாதுகாக்க வேண்டியவர்கள் எந்த பார்வையில் அவர்களை பார்ப்பார்கள் என்று யூகிக்கலாம். எலக்ட்ரானிக் ஊடகங்களின் பாதிப்பு சில அசம்பாவிதங்களுக்கு மறைமுகமாக காரணமாகிவிடுகின்றன என்பது உண்மை. சின்னத்திரையைப் பொறுத்தவரை சுயகட்டுப்பாட்டோடு சமுதாய நலன் கருதி ஒளிபரப்பு மேற்கொள்ளும் நிலை வர வேண்டும்.
பல இல்லங்களில் பிற மாநிலங்களிலிருந்து தமிழ் தெரியாத இளைஞர்கள் வீட்டு வேலைக்கும் உதவிக்கும் அமர்த்தப்படுகின்றனர். என்ன காரணமோ சோம்பலில் சுகம் காணும் உள்ளூர் வாசிகள் வேலைக்கு வருவதில்லை. வெளிமாநிலத்தவரின் முகாந்திரம் என்ன என்று கூட ஆய்வு செய்வதில்லை.
சட்டம் ஒழுங்கை பாரபட்சமின்றி நிலைநாட்டுவது காவல் நிலைய அதிகாரிகளின் தலையாய கடமை. காவல்துறையின் அடிப்படை பணிகளான குற்றங்கள் நடவாமல் தடுப்பது, நடந்த குற்றங்களை கண்டு பிடித்தல், அமைதி காக்க தகவல் சேகரிப்பது, இவை சரிவர நிறைவேற்றப்படாவிட்டால் குற்றங்கள் பெருகும்.
காவல்துறை அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டால் கொடுங்குற்றங்கள் நிகழ வாய்ப்பில்லை. பிரச்சனையை வளரவிடாமல் முதலிலேயே கிள்ளி எறிய வேண்டும். வளர விட்டுவிட்டு ‘துண்டை காணோம் துணியைக் காணோம்’ என்று ஓடி என்ன பயன். சட்டங்களை அமல் படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் காவல்துறை மக்களின் ஒத்துழைப்பை பெற்றால்தான் பணியில் சிறப்பு எய்த முடியும். குற்றத்தடுப்பு நடவடிக்கையை மையமாக குறிவைத்தால் துப்பாக்கியால் எதிரிகளை குறிவைக்கும் நிலைவராது.
-------------
No comments:
Post a Comment