நகரங்கள் பெருகி வருகின்றன. வளர்ந்த நகரங்கள் எல்லைத்தாண்டி பெருத்துவிட்டன. புதிய நகரங்கள் உருவாகுகின்றன. முதலில் வேலைத் தேடல் பிறகு துணைத் தேடல். கல்யாணம் ஆன கையோடு குழந்தைகள். அவர்களை வளர்ப்பதில் போராட்டம். அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி வெளிநாட்டிற்கோ, பன்னாட்டு நிறுவனத்திலோ வேலைக்குச் சென்ற பிறகுதான் ஆடிய ஆட்டமெல்லாம் ஒய்ந்து இளைப்பாறும் நேரத்தில் முதுமை வந்து வாட்டுகிறது. நாம் நமது பெற்றோர்களை எவ்வளவு சிரத்தையோடு கவனித்தோம் அவ்வாறு இந்த காலத்து இளைஞர்கள் ஏன் கவனிப்பதில்லை என்ற ஆதங்கம்.
ஜனத்தொகை கணக்கெடுப்பில் வயோதிகர்களின் எண்ணிக்கைகூடியுள்ளது. சுதந்திரம் அடைந்ததிலிருந்து சாதாரண மனிதனின் வாழ்வின் எதிர்பார்ப்பு வயது 58-ல் இருந்து 74-ஆக உயர்ந்துள்ளது, ஒரு வகையில் திருப்தியளித்தாலும் வயது மூதிர்ந்த காலத்தில் பராமரிப்பு ஒரு பிரச்சனையாக வளர்ந்துள்ளது. குடும்பங்கள் பிரிந்து விடுகின்றன. கல்யாணம் ஆன பெண்கள் உடனே தனிக் குடித்தனம் போக விரும்புகிறார்கள். கலியுகத்தின் நியதி மனைவியை சார்ந்த உறவினர்களுக்கு மதிப்பு. கணவர் சார்ந்தவருக்கு அவமதிப்பு.
ஒரு வயோதிக தம்பதியினரின் மனு கவனத்திற்கு வந்தது. நடுத்தர வகுப்புக் குடும்பம். குழந்தைகள் பெரியவர்களாகி வெளிநாட்டில் அவர்களது குடும்பத்தோடு வசிக்கின்றனர். அவ்வப்போது பெற்றோர்ருக்குப் பணம், வருடாந்திர வருகை ஒரு முறை வெளி நாட்டுப்பயணம் மற்றப்படி தனிமை. தனிமையில் இனிமை காண முடியாதபடி தள்ளாமை. தனிக்குடிததனம் நடத்துவது ஆரம்ப காலத்தில் சுவாரசியமாகவும், புது அனுபவமாகவும் இருக்கலாம். ஆனால் வயது காலத்தில் தினசரி பொருட்களை வாங்குவது சமைப்பது மற்ற வீட்டு வேலைகள் செய்வது பெரும்பாடாகி விடுகிறது. அதனால் வரக்கூடிய மனக்கசப்பு, கருத்துவேறுபாடு தர்க்கம், விதண்டாவாதம் என்று வயது காலத்திலும் தாம்பத்திய வாழ்க்கையில் விரிசல். பிள்ளைகளும் அவரவர் பணிகளில் மூழ்கிவிடுகின்றனர் பெற்றோர்களை கவனிப்பதற்கு ஏது நேரம்? முதியோர் இல்லங்கள் பல உள்ளன. ஆனால் அதிக பணம் செலவு செய்வதற்கு மனமில்லை. அங்கு போவதற்கும் தயக்கம். நாலு பேர் என்ன செல்வார்களோ என்ற பயம். அவர்களை குறை சொல்ல முடியாது. காலத்தின் கட்டாயம் அவ்வாறு அறிந்து விடுகிறது. சென்னை கோடம்பாக்கத்தில் கூட்டுக் குடும்பமாக மகன், பேரக்குழந்தைகள், கொள்ளுத் தாத்தா, சகிதம் சதோஷமாக வாழ்கின்றனர் என்ற செய்தி படிக்கிறோம். எவ்வளவு குடும்பங்களுக்கு அந்த பாக்கியம் கிட்டுகிறது. பல குடும்பங்களில் பெற்றோர்களின் கொஞ்சநஞ்ச சொத்தையும் பிரித்துப் பெற்றுக் கொள்ள விழையும் காலம் இது.
முதியவர்களின் பிரச்சனை வளர்ந்துக்கொண்டே இருப்பதால்தான் Dignity foundation போன்ற பல தனியார் தொண்டு நிறுவனங்கள் பல நற்பணிகள் செய்து வருகின்றன. மத்திய அரசும் ‘The Maintenance and Welfare of Parents and Senior Citizens Act 2007’ என்ற சட்டம் நிறை வேற்றியுள்ளது. தமிழகத்தில் 2009-ம் ஆண்டிலிருந்த நடைமுறையில் உள்ளது. இதன்படி பெற்றோர்களை கவனிக்காத பிள்ளைகளுக்கு மூன்று மாதம் வரை தண்டனையும் வரையறுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் கட்டாணமில்லா தொலைபேசி எண்.1256 உள்ளது. அதில் தொடர்பு கொண்டு பாதுகாப்பு கோரலாம் சங்கடங்களுக்கு தீர்வு காணலாம்.
அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்பதை செயல் வடிவில் காட்டுவோம். பெரியவர்களைப் போற்றுபோம்.
----
No comments:
Post a Comment