“கொடி அசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததால் கொடி அசைந்ததா”
என்று கரணம் காரணம் மையமாக கவிநயம் மிக்க கண்ணதாசன் பாடல் மறக்க முடியாதது. மோசடி வலையில் திரும்ப திரும்ப விழும் முதலீட்டார்களின் நிலைமையைப் பார்க்கும் போது
“ஏமாளிகளால் ஏமாற்றுபவர்களா
ஏமாற்றுபவர்களால் ஏமாளிகளா” என்று கேட்கக் தோன்றுகிறது.
1990ல் இருந்து கவர்ச்சிகரமான அறிவிப்புகள் நிறைந்த பத்தாண்டுகள் என்று கூறலாம். முதலீடு செய்பவர்களுக்கு 24 சதவிகிதம் வட்டி, முதலீடு செய்த உடனே முன்வட்டி, தங்க நாணயம், குளிர்சாதனப்பெட்டி, தொலைக்காட்சிப் பெட்டி போன்ற பல பரிசுகள் என பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இத்தகைய வங்கிசாரா நிதிநிறுவனங்கள் முதலீட்டார்களின் நம்பிக்கையை வளர்ப்பதற்கு முதல் சில ஆண்டுகளுக்கு கூறியபடி வட்டி மற்றும் சலுகைகளை கொடுத்து அதன் மூலம் மேலும் பல சந்தாதாரர்களை வலையில் சிக்கவைப்பார்கள். நீர்குமிழி போல் வெடித்து சிதறும் நிலையில் நிறுவனம் மூடப்படும். பணம் இழந்தவர்கள் காவல் துறையினரிடம் தஞ்சமடைவார்கள்.
இம்மாதிரியான வழக்குகள் அதிகரிக்கவே குற்றப் புலனாய்வுப் பிரிவில் பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குநர் தலைமையில் விரிவாக்கப்பட்டது. 1997-ம் வருடம் தமிழ்நாடு முதலீட்டார்கள் பாதுகாப்பு சட்டம் (TANPID ACT) இயற்றப்பட்டது. மோசடி நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துக்களை முடக்கி பொது ஏலம் மூலம் இழந்த பணத்தை ஓரளவு ஈடுகட்ட வழிவகை செய்யும் அதிகாரம் இந்த சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் பொருளாதார குற்றப் புலனாய்வுத் துறை முதலீட்டாளர்களுக்கு அவர்கள் செலுத்திய தொகையில் ஒரு பகுதியாவது நீதிமன்றம் மூலம் பெற்றுத்தர முடிகிறது.
இந்தியாவில் எல்லா மாநிலங்கள் சேர்த்து ஆண்டொன்றிற்கு சராசரி 90,000 மோசடி வழக்குகள் பதிவாகின்றன. இதில் 72 சதவிகித வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகின்றன. ஆனால் 2007ம் ஆண்டில் 25.6 சதவிகித வழங்குகள் தான் தண்டனையில் முடிந்துள்ளது. இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் 42 சதவிகித மற்ற வழக்குகள் வெற்றிகரமாக முடிக்கப்படும் நிலையில் மோசடி வழக்குகள் சரியாக புலனாய்வு செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை மறுக்க முடியாது. மேலும் பணம் படைத்தவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் திறமையான வழக்காடுதல் மூலம் தப்பித்து விடுகின்றனர் என்பதும் உண்மை. காவல் துறைக்கு புலனாய்வுத் திறனோடு பணம் இழந்த ஏழை முதலீட்டாளர்களின் நம்பிக்கை, ஆதரவு, ஒன்றே பக்கபலம்.
ஒரு சிறிய திரைதான் கிரிமினல் வழக்குகளை மறைத்து சிவில் வழங்குகளாக காண்பிக்கும். தீர்க்கமாக விசாரித்து அப்பாவி மக்களுக்கு உதவி செய்வது காவல்துறையின் பொறுப்பு. மோசடி நிறுவனகள் பற்றி தகவல் சேகரித்து தடுப்பு நடவடிக்கை முலம் முதலீட்டளர்களை பாதுகாப்பதும் காவல்துறையில் கடமை.
சமுதாயத்திற்கு விரோதமாக தனிமனிதன் பணம் சம்பாதித்து தழைக்கமுடியாது. சமுதாயம் நன்றாக இருந்தால் தான் ஈட்டிய பொருள் நிலைக்கும். மனம் ஆழமானது என்றாலும் சஞ்சலம் மிகுந்தது. பாதாளம் பாயும் பணம் மனதை எளிதாக ஆட்கொண்டுவிடும். மனிதன் நோக மனிதன் பார்க்கும் பார்வையால் தான் இத்தகைய மோசடிகள் நீகழ்கின்றன. உழைக்காமல் பணம் சம்பதிக்க முடியும் என்ற மக்களின் பேராசைதான் ஏமாற்றுபவர்களுக்கு மூலதனமாக அமைகிறது. உழைத்து சம்பாதித்தால் உடம்பில் ஒட்டும் இலவசமாக சுலபத்தில் கிடைக்கும் என்பது மாயை. அந்த சபலத்திற்க்கு இடம் கொடுப்பது அழிவுக்கு வழி. அத்தகைய பொருள் பாதாளம் பாய்ந்து மறைந்து விடும்.
-------
No comments:
Post a Comment