Monday, October 24, 2011

விதிகள் மதிக்க மிதிக்கல்ல


சாலை விபத்துக்கள் அன்றாட நிகழ்வாகிவிட்டதால் உயிரிழப்பு செய்திகள் மரத்துவிட்டது,. யாராவது எதாவது செய்யுங்கப்பா என்று பலர் சொல்லக்கேட்டிருக்கிறோம். சாலை போக்குவரத்து அந்த வட்டார மக்களின் கலச்சாரத்தின் வெளிப்பாடு என்று சொன்னால் மிகையில்லை. வாகனம். ஓட்டும் முறை defensive driving, offensive driving என்று இரண்டு வகைபடும். வட மாநிலங்களில் இந்த offensive driving முறை பரவலாக இருக்கும். அந்த ஊரில் driver தவறு செய்துவிட்டு நம்மை முறைப்பார். ஏதோ சாலை அவருக்கு மட்டும் ஏற்பட்டது என்ற நினைப்பில்! சாதாரணமாக தென் நாட்டில் அதுவும் சென்னையில் defensive driving தான் பழக்கத்தில் இருந்தது. ஆனால் காலத்தின் கோலம்நம்ம ஊரு நல்ல ஊரு இப்போரொம்ப கேட்டுப் போச்சண்ணே! என்பதற்கேற்ப தாறுமாறாக ஓட்டுவது ஒரு கலையாகவே வளர்ந்துவிட்டது.

வாகன விதிகள் சாலைப் போக்குவரத்தின் ஒழுங்குமுறையை வரைமுறைப்படுத்துகிறது. விதிகள் புத்தகத்தை ஓட்டுநர் உரிமம் வாங்குவதற்கு முன் புரட்டிப்பாத்ததோடு சரி, விதிகளை நினைவில் வைத்துக் கொள்வதுமில்லை மதிப்பதுமில்லை விதிகள் மிதிக்கப்படுவதால்தான் சாலை விபத்துக்கள் அதிகமாகிக் கொண்டே போகிறது. கடந்த வருடம் 15,409 மக்கள் சாலை விபத்தில் தமிழ்நாட்டில் உயிரிழந்தனர். இந்த வருடம் ஆகஸ்ட் இறுதி வரை 8120 பேர் உயிரிழந்துள்ளனர். போன வருடம் சாலை விபத்துகளில் காயமுற்றோரின் எண்ணிகை 90,000 க்கும் மேல்.

விபத்தின்மையே முழுமையான சாலை பாதுகாப்பு. வேகம் குறைந்தால் விவேகம் வளரும். விபத்துக்கள் குறையும் முழுமையான சாலை பாதுகாப்பு அமைவதற்கு எல்லோருடைய ஒத்துழைப்பும் அவசியம். முக்கியமாக நகரங்களில் வாகனங்கள் ஓட்டும் பொழுது விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையோடு ஓட்டினால் மன அமைதி ஏற்படும். பாதசாரிகளுக்கு வழிவிட வேண்டும். சிவப்பு விளக்கை தாண்டக்கூடாது. இது அரசு வாகனங்களுக்கும், போலீஸ் வாகனங்களுக்கும் பொருந்தும். வேகக்கட்டுப்பாடு கடைப்பிடிக்க வேண்டும். அவசர வண்டிகளுக்கு வழிவிட வேண்டும். வாகன விபத்து எற்பட்டால் உடனடியாக காயமுற்றவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்கவேண்டும். ‘Golden Hours” என்று சொல்லப்படும் காயமுற்ற ஒரு மணி நேரத்திற்குள் சிகிச்சை அளித்தால் உயிர்ழப்பை தவிர்க்கலாம்.

பிரதான சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகளில் அவசர சிகிச்சை பிரிவு ‘Emergency Accident Relief Centre’ தேசிய நெடுஞ்சாலைப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது. அதன் மூலம் சாலை விபத்துகள் வெகுவாக குறைந்தன. சென்னையில் மட்டும் நான் காவல்துறை ஆணையாளராக இருந்தபோது சாலை விபத்தில் உயிரிழப்பு 2005-ம் வருடம் சுமார் 30 சதவிகிதம் குறைந்தது. இதன் மூலம் மக்களின் பாராட்டுதலைப் பெற்றது. போலீசாருக்கும், மீட்புப் பணியினருக்கும் முதலுதவி பயிற்சி, வட்டார மருத்துவமனையில் அவசர சிகிச்சை வசதி, உரிய நேரத்தில் சாலை செப்பனிடுதல், சமிஞைகள் சரியாக செயல்படுதல், பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்கள் என்ற பல்முனை முயற்சிகள் ஒருங்கிணைந்தால் தான் சாலைப்பாதுகாப்பு முழுமையடையும். உயிர்ழப்பை கணிசமாக குறைக்கலாம். இது சத்திய வாக்கு.

No comments: