சமீபத்தில் SI மினட்சி மதுரையில் தன்னை சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சித்தரும் நிகழ்வு. காவல்துறையில் பணி மன அழுத்தம் ‘Stress’ அதிகமாகக் கொடுக்கச்கூடிய பணி. உயர் அதிகாரிகளின் சரியான அணுகுமுறையால் இத்தகைய சம்பவங்களை தவீர்த்துருக்கலாம்.
மனோதத்துவர்கள் ஆய்வுப்படி தற்கொலை செய்து கொள்ளும் முடிவு ஒருவர் விரக்தியின் எல்லைக்குத் தள்ளப்படும் நிலையில் எடுக்கப்படுகிறது என்றும் அந்த நிலையில் எது சுலபமான வழி என்று புலப்படுகிறதோ அந்த வழியில் தற்கொலை செய்து கொள்கின்றனர். இத்தகைய மனநிலையில் அவர்களுக்கு உதவி கிடைத்தால் அவர்களை அந்த நிலையில் இருந்து மாற்றிவிடலாம். சில தனியார் தொண்டு அமைப்புகள் இத்தகைய முடிவு எடுப்பவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஆலோசனை வழங்குகிறது.
இளைஞர்கள் தற்கொலைக்கு தள்ளப்படுவதற்கு காரணம் பெரியவர்களின் தவறான அணுகுமுறை எனலாம். அவசர உலகத்தில் இத்தகைய பிரச்சினை உள்ளவர்களிடம் பேசுவதற்கு நேரமில்லை. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மனதுக்கு பட்டதை விளைவுகளைச் சிந்திக்காமல் வார்த்தைக் கணைகளால் கொட்டி விடுவது தற்கொலைக்கு மறைமுகமான காரணமாகிவிடுகிறது. கொட்டிய வார்த்தையை அள்ள முடியாது என்பார்கள். பெரும்பாலான தற்கொலைகள் விவேகமற்ற சொல் அம்புகளால் விளைகின்றன என்பது உண்மை.
தற்கொலைகளின் தலைநகரம் பெங்களூரு எனலாம். ஏனெனில் அங்கு 2008ம் ஆண்டு 2396 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. அதே ஆண்டில் மும்பையில் 1111, தில்லியில் 1107, சென்னையில் 1319 பதிவாகியுள்ளது. சென்னையைவிட அதிகமாக கோயம்புத்தூரில் 1353 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. நகரங்களுக்கே உரித்தான மனதுக்கு அழுத்தம் தரக்கூடிய அவசர உலக அன்றாட வாழ்க்கைப் போராட்டங்கள் தற்கொலைக்கு காரணமாகி விடுகின்றன.
தற்கொலைக்கான காரணங்களை ஆராய்ந்தால் குடும்பம் மற்றும் பொருளாதார பிரச்சனையால் ஆண்கள் பெருவாரியாக தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் பெண்கள் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், ஆசாபாசங்களின் பாதிப்பாலும் இத்தகைய முடிவெடுக்கின்றனர். தனிப்பட்ட காரணங்களான டௌரி பிரச்சனை, தகாத உறவால் ஏற்பட்ட கருத்தரிப்பு, மலட்டுத்தன்மை, விவாகரத்து, கற்பழிப்பு என்று பெண்களுக்கே உரித்தான பிரச்சனைகளுக்கு கணக்கில்லை.
ஒருவரது வேலை அடிப்படையில் ஆராய்ந்தால் சுயவேலையில் ஈடுபடுபவர்கள் 39.8 சதவிகிதம் மொத்த தற்கொலைகளில் அடங்குவர். வீட்டை நிர்வகிக்கும் கல்யாணமான பெண்கள் 54.8 சதவிகிதம். ஆனால் அரசு வேலையில் உள்ளவர்கள் 1.7 சதகவிகிதம் தான். மற்றப்பணிகளை ஒப்பிட்டால் அரசுப்பணியில் பணிச்சுமை குறைவு அதனால் மனச்சுமைக் குறைவு என்று கொள்ளலாம். மாணவர்கள் மற்றும் வேலையில்லாதவர்களின் அளவு 12 சதவிகிதம்.
இந்தியாவின் ஜனத்தொகையில் 55 சதவிகிதம் இளைஞர்கள். தற்கொலை என்ற சாபக்கேடு இளைஞர்களை அதிகமாக தாக்குகிறது என்பது கசப்பான உண்மை குழந்தைப் பருவத்திலிருந்து இளமை பருவத்தை அடைவதை இரண்டும்கெட்டான் வயது என்பார்கள். உடல் ரீதியாகவும், மனம், சிந்தனை, உணர்வுகள் வெளி நிகழ்வுகளின் தாக்கம் என்று பலவகைப்பட்ட மாறுதல்கள் இளமை பருவத்தில் சந்திக்க நேரிடும். இந்த இக்கட்டான பருவத்தில் உற்றார் யாருளரோ என்ற ஏக்கம் ஏற்படுவது இயல்பு. அவர்களுக்கு உற்ற நண்பனாக உறுதுணையாக நாம் இருக்கிறோம் என்ற நம்பிக்கை கொடுக்க வேண்டும். பெரியோர்களின் பக்குவமான அணுகுமுறைதான் அதை உறுதி செய்ய முடியும்.
------------
No comments:
Post a Comment