Saturday, December 11, 2010

நன்றி மறப்பது நன்றன்று


அந்தி மாலைப்பொழுது பகல் இரவோடு சங்கமிக்கும் காலம். சூரியன் அஸ்தமிக்கும் அந்தத் தருணத்தில்தான் எல்லா காவல் மற்றும் இராணுவ பாசறைகளில் ஒருவித சோகம் கலந்த குழல் இசையோடு கொடி இறக்கப்படும். படைவீரர்களை ஒருமுகப்படுத்தி அன்றைய பணிகளின் குறைநிறை பற்றி சிந்திக்கவும் ஓய்வெடுக்கும் அதே வேளையில் இன்னும் நிறைவேற்ற வேண்டிய பணிகளை ஒன்று பட்டு செயல்படுத்தி எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான நினைவூட்டல் தான் அந்த குழல் ஓசை.

எவ்வாறு அலைகள் ஓய்வதில்லையோ அதே போல் காவல் பணிகளுக்கும் ஓய்வில்லை, முடிவில்லை. நேர்மையோடு, கடமை உணர்வோடு சில காவல்துறை ஆளினர்கள் காவல் பணிபுரிவதால்தான் சமுதாயத்தில் அமைதி நிலவுகிறது. அமைதி காப்பதில்தான் எத்தனை இடைஞ்சல்கள், சாடல்கள், பழிப்புகள், காயங்கள் முடிவில் உயிரிழப்புகள்.

2008 ஆம் ஆண்டு நவம்பர் 26ல் உலகையே உலுக்கிய மும்பை நகர தாக்குதல் நிகழ்ந்து இரண்டு வருடம் பூர்த்தியாகிறது. சம்பிரதாய காவல் அணிவகுப்போடு உயிரிழந்த பாதுகாப்புப் படையினருக்கும் பொதுமக்களக்கும் புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது. மும்பை பயங்கரத்தில் உயிரோடு பிடிக்கப்பட்ட தீவிரவாதி கசாப்பிற்கு எதிரான வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டு தண்டனை நிறைவேற்றுவதில் நடைமுறை விதிகள் கடைபிடிப்பில் உள்ளன. அவை முடிந்தபின் உரிய தண்டனை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்க வேண்டும். இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் அரசியல் சாசனத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமைகள் கடைபிடிக்க வேண்டும். அதனால் ஏற்படும் தாமதம் தவிர்க்கமுடியாதது.

ஆனால் மற்ற நாடுகளில் இந்த நிலையில்லை. அன்வர் சதாத் எகிப்திய ஜனாதிபதி அக்டோபர் 6, 1981 ஆம் ஆண்டு தேசிய நாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ள மேடையில் நின்று கொண்டிருக்கும் பொழுது அணிவகுப்பில் வந்த ஒரு பிரிவினர் மேடையை நோக்கி சுட்டதில் அன்வர் சதாத்தோடு காயமுற்று 11 நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அந்த நிகழ்வில் கையெறி குண்டு வீசிய காலித் இஸ்லாம்பௌலி என்ற இராணுவ அதிகாரி கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் மரண தண்டனை தீர்ப்பாக வழங்கப்பட்டு உடனடியாக 1982 ஏப்ரல் மாதத்தில் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இஸ்ரேல் நாட்டின் பிரதம மந்திரி இத்சாக் ராபின் 1995ம் ஆண்டு நவம்பர் 4ம் நாள் இஸ்ரேல் தலைநகரான டெல்அவிவின் பிரதான சதுக்கத்தில் நடைபெற்ற பேரணியில் பங்கு கொண்டு விடைபெறும் பொழுது இகால் அமீர் என்ற 25 வயது யூத வாலிபரால் கொலைசெய்யப்பட்டார். வலது சாரி மதவாத மயக்கத்தில் ஈர்க்கப்பட்ட இந்த இளைஞர் பிரதமரின் முற்போக்கு சமாதான முடிவுகள் ஏற்புடையதல்ல என்ற காரணத்திற்காக துப்பாக்கியால் பிரதமரை கொன்றதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தான். நீதிமன்ற விசாரணை ஜனவரி 1996ல் துவங்கி மூன்று மாதங்கள் நடைபெற்றது. விசாரணை முடியில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. நாட்டின் தலைவர்களை கொன்ற குற்றத்திற்கு பொது மன்னிப்பு வழங்கலாகாது என்ற சட்டத்திருத்தமும் கொண்டுவரப்பட்டது. இன்றும் அமிர் தனி அடைப்பில் வைக்கப்பட்டுள்ளான்.

1991ம் ஆண்டு மே 21ம் தேதி இந்தியாவின் பிரபலமான இளந்தலைவர் ராஜுவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் குண்டுவெடிப்பில் கோரமான முறையில் உயிரிழந்தார். நாடே குமுறியது. பிரத்யேகமாக அமைக்கப்பட்ட விசேஷ புலன் விசாரணைக்குழு 1992 ம் ஆண்டு மே 22 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல்செய்தது. தனிநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. 6 வருடங்களுக்குப் பிறகு 1998ஆம் ஆண்டு ஜனவரி 28 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மரணதண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கும் இன்னும் தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் நமது நாட்டில் முக்கிய குற்ற நிகழ்வுகள் கண்டுபிடிக்கப்பட்டு முடிவுக்கு வருவதில் தாமதம் ஏற்படுகிறது என்பது உண்மை. ஒவ்வொரு நிலையிலும் இத்தகைய கால தாமதத்தை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமான குற்ற நிகழ்வுகளிலும் பாதுகாப்பிற்கு சவாலாக தலையெடுக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையிலும் காவல் துறைக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் முழுநிர்வாக ஒத்துழைப்பு அளிப்பது இன்றியமையாததது. அவர்களுக்கு தேவையான உபகரணங்கள், ஆளினர்கள், வாகனங்கள், தங்கும் வசதி போன்றவை அளிக்கப்பட்டால்தான் துரிதமாக செயலில் இறங்க முடியும். ஆனால் நடைமுறையில் சம்மந்தப்பட்ட பொறுப்பில் உள்ள அதிகாரி அங்கும் இங்கும் அலைந்து நியாயமாக பெற வேண்டியதற்கு முட்டி மோத வேண்டிய நிலை வருந்தத்தக்கது. பஞ்சாப் தீவிதவாதத்தின் உச்சநிலையில் பொறுப்பேற்ற உயர் போலிஸ் அதிகாரி திரு கில் அவர்களுக்கு முழு அதிகாரம் எல்லாவிதத்திலும் கொடுக்கப்பட்ட பிறகு தான் நிலைமையை சீர் செய்ய முடிந்தது. வீரப்பன் வேட்டையிலும் முழுஅதிகாரமும், விசேஷ இடர்படிகளும் சிறப்பு விரைவுப் படையினருக்கு அளிக்கப்பட்டதாலும், அதுமட்டுமின்றி அவர்களுக்கு முழு ஊக்கமும் ஆதரவும் மனமுவந்து அளித்ததால் அவர்களால் இலக்கை வெற்றிகரமாக அடையமுடிந்தது.

இராணுவ வீரர்கள் இந்தியாவின் வடமேற்கில் சியாசன் எல்லைப் பகுதியில் வருடம் முழுவதும் கொட்டும் பனியில் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு விசேஷ இடர்படிகளும் மற்றும் பனியை எதிர்கொள்வதற்கு சாதனங்களும் உடைகளும் அளிக்க வேண்டும் என்று இராணுவத் தலைமையிடத்திலிருந்து அனுப்பப்பட்ட கருத்துரு வெகுநாட்களாக பரிசீலனையில் இருந்து உத்தரவு வழங்கப்படாமல் இருந்தது. அப்போது இருந்த பாதுகாப்பு அமைச்சர் சியாசன் பகுதிக்கு சென்று சிப்பாய்களோடு தங்கி அவர்களது குறைகளைக் கேட்ட போது முடக்கப்பட்ட பயனளிப்பு கோப்புகள் விவரம் தெரிவிக்கப்பட்டது. தில்லிக்கு திரும்பியதும் தாமதத்தில் இருந்த பயனளிப்பு கோப்புகளில் உத்தரவு பிறப்பித்து தாமதத்திற்கு காரணமான சம்மந்தப்பட்ட அலுவலர்கள் சியாசன் பகுதிக்குச் சென்று பணிபுரிந்தால் தான் அவர்களுக்கு உறைக்கும் என்று கடிந்து கொண்டதாகவும் செய்தி வந்தது.

மும்பை பயங்கரத்தில் உயிரிழழுந்த ஹேமந்த் கர்கரே, விஜய் சல்ஸ்கர், அஷோக் காம்தே போன்ற உயர் போலிஸ் அதிகாரிகள் சம்பவத்தின் போது குண்டு துளைக்காத பாதுகாப்பு கவசம் போட்டிருந்தும் பயனில்லாமல் பயங்கரவாதிகளின் குண்டிற்கு இரையானார்கள் என்றும் பாதுகாப்புக் கவசம் தரமானதாக இருந்திருந்தால் உயிர் பிழைத்திருக்கலாம் என்று தனது ஆதங்கத்தை விதவைகளான திருமதி கவிதா கர்கரே மற்றும் திருமதி வினோத் காம்தே தெரிவித்திருக்கின்றனர். மும்பை தாக்குதலை ஆராய்ந்த பாதுகாப்பு வல்லுனர்களும் மும்பை நகர காவல்துறை இத்தகைய பயங்கரவாத தாக்குதல்களை சமாளிக்க தயார் நிலையில் இல்லாததை சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். அசாதாரண நிகழ்வுகளை எதிர்கொள்ள தேவையான நவீன துப்பாக்கிகள், பாதுகாப்பு கவசங்கள், தீவிர பயிற்சி, நொடிப்பொழுதில் களத்தில் இறங்க மனம், உடல் அளவில் உறுதி, இவை முக்கியம். இதை கருத்தில் கொண்டு மும்பை நகர காவல் ஃபோர்ஸ் ஒன்என்ற ஒரு அதிரடி அணியை இப்போது உருவாக்கியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக சிறந்த ஆளினர்களை தெரிவு செய்து தேவையான ஆயுதங்களோடு உயர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரை பணயம் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு எதிரிகளின் தாக்குதலை சமாளிக்க போதுமான ஆயுதங்கள் மட்டுமல்லாமல் உரிய தகவல்கள் அடிப்படையில் அணிகளை திரட்ட வேண்டும். திட்டமிடப்படாத எதிர்தாக்குதல் உயிரிழப்பில்தான் முடியும். சட்டிஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் இத்தகைய தவிர்க்கக்கூடிய உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மேலும் பாதுகாப்பு வீரர்களுக்கு விசேஷ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அசம்பாவிதம் ஏற்பட்டால் அவர்களது குடும்பங்கள் பாதுகாக்கப் படவேண்டும். ஊர்விட்டு ஊர்வந்து பாதுகாப்புப் பணியில் இருக்கும் வீரர்களுக்கு குடும்பங்கள் நலமாக இருக்கிறார்கள் அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தால் தான் பணியில் முழுமையாக கவனம் செலுத்தமுடியும்.

பாதுகாப்பு வீரர்களின் மனநிலை பக்குவமாக இருப்பதற்கு உரிய நேரத்தில் விடுப்பும் அவசியம். மத்திய ரிசர்வ் படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையில் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து வருவதாக செய்தி வந்துள்ளது. 2007ம் ஆண்டிலிருந்து கடந்த நான்கு ஆண்டுகளில் 218 பாதுகாப்புப்படை வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்று பாராளுமன்றத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதில் மத்திய ரிசர்வ் படையில் 143 தற்கொலைகள். மனஅழுத்தத்தில் உள்ள வீரர்கள் தனது உயர்அதிகாரிகள் மீதே துப்பாக்கி பிரயோகம் செய்த நிகழ்வுகளும் வருந்தத்தக்கவை. இங்குதான் நேரடி மேற்பார்வை செய்ய வேண்டிய அதிகாரிகள் சீரிய முறையில் தமது அணியில் உள்ளவர்களை திறமையாக பணியில் ஈடுபடுத்துவது மட்டுமல்லாமல் அவர்களை அரவணைத்து குறைகளை பாரபட்சமின்றி நிவர்த்தி செய்தல் அவசியம்.

செயலக நிர்வாகத்தில் இருப்பவர்கள் பாதுகாப்பு படையினரின் தேவைகளை உரிய நேரத்தில் பூர்த்தி செய்தால்தான் களத்தில் சாதனை புரிய முடியும். எதற்கெடுத்தாலும் குறுக்குக் கேள்வி கேட்பது பாதுகாப்பு வீரர்களின் ஆளுமையை சந்தேகிப்பது போன்ற மனஉளச்சல் தரக்கூடிய அணுகுமுறை தவிர்க்கப்பட வேண்டும்.

எதிரிகளின் தாக்குதலில் இரத்தம் சிந்திய, காயமுற்று உயிரிழந்த வீரர்களுக்கு சம்பிரதாய ஆறுதலோடு நின்று விடக்கூடாது. உயிர் நீத்தாருக்கு மலர் வளையம் வைத்து இரண்டு வார்த்தைக் கேட்பதோடு உயர் அதிகாரிகளின் கடமை முடிவதில்லை. வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களின் நிலை வருந்தத்தக்கது. உயிரிழப்பில் முதல் இடியின் ஆரவாரம் அடங்கிய பிறகு துக்கத்தையும், வாழ்க்கையில் தவிர்க்க முடியாத போராட்டங்களையும் தனியே நின்று சமாளிக்க வேண்டிய நிலையில் குடும்பங்கள் தள்ளப்படுகின்றன. இரண்டு வருடங்கள் ஆகியும் மும்பை தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் முழுநிவாரணம் சென்றடையவில்லை என்று குறை கூறப்பட்டுள்ளது.

2004-2005 ம் ஆண்டுகளில் காவல்துறையில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பங்களை சென்னை ஆணையரகத்தில் அழைத்து குறைகளை கேட்டு வாத்ஸல்யத்தோடு அவர்களது குடும்ப நாயகனின் தியாகத்தை பாராட்டியது பெரும் வரவேற்பை பெற்றது. இதே நிகழ்ச்சி தீயணைப்புத் துறையிலும் இவ்வருடம் நடத்தப்பட்டது. இத்தகைய அணுகுமுறை பணியில் இருப்பவர்களுக்கும் நம்மை பாதுகாக்க நமது அணி இருக்கிறது என்ற புதுத் தெம்பும் புத்துணர்வும் பிறக்கும்.

எல்லாவற்றிலும் மேலாக எங்கிருந்தோ வந்தான் காக்கும் காவலன் நான் என்றான் இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன் என்ற சமுதாயத்தின் பாராட்டுதல்தான் பாதுகாப்பு வீரருக்கு ஊக்கமருந்து அதைப் பெற்றுத் தருவது கூழைக்கும்பிடிட்டு, பதவியை தக்க வைப்பதே குறி என்றில்லாமல் தன்னலமின்றி துறையின் உயர்வுக்காக போராடக்கூடிய உயர் அதிகாரிகளின் கடமை.

Wednesday, November 24, 2010

எப்படி மாய்ந்தனரோ


பயங்கர குற்றவாளிகளை என்கவுண்டர் என்று சொல்லப்படும் எதிர்மறை தாக்குதலில் சுட்டு வீழ்த்துவது மீண்டும் மக்கள் மத்தியில் சர்ச்சைக்கு வந்துள்ளது. கோயமுத்தூரில் முஸ்கின், ரித்திக் என்ற இரு குழந்தைகளை கடத்திச்சென்று கொல்லப்பட்ட நிகழ்ச்சி எல்லோர் நெஞ்சையும் உறையவைத்தது. என்ன பாவம் செய்தார்கள் அந்த அப்பாவி குழந்தைகள் இத்தகைய கோர முடிவு ஏற்படுவதற்கு? சாதாரணமாக எடுக்கக்கூடிய முன்ஜாக்கிரதை நடவடிக்கைகளை எடுக்கத்தான் செய்தனர் குழந்தைகளது பெற்றோர்கள். தமது குழந்தைகளுக்கு எல்லா வசதிகளையும் கொடுக்க வேண்டும் என்று பெற்றவர்கள் நினைப்பதில் தவறில்லை. நல்லப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்றால் அது வீட்டின் அருகில் இருப்பதில்லை. வசதிக்கு ஏற்றவாறு சைக்கிள் ரிக்.ஷா, ஆட்டோ, தனியார் வேன் அல்லது சொந்தக் காரில் அனுப்ப வேண்டும். இவ்வாறு தான் எல்லா நகரங்களிலும் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று திரும்புவது பெரும்பாடாகி விட்டது.

தூக்கு தண்டனை மிக அரிதான வழங்குகளில் குற்றத்தின் தன்மையைப் பொறுத்தும், கிடைத்த சந்தேகமற்ற சான்றாவணங்களின் அடிப்படையிலும் அளிக்கப்படுகிறது. பல சிக்கல்களுக்கிடையில் நடந்த குற்றத்தில் வெற்றிகரமாக புலன் விசாரணை செய்து உரிய தண்டனை வழங்கப்பெற்ற பிறகும் நிறைவேற்றுவதில் தடங்கலும், சிக்கலும் இருப்பதால் குற்ற ஆளுமையில் நம்பிக்கை குறையும் நிலை ஏற்படுகிறது. சமீபத்தில் சேலத்தில் ஒரு சிறுமியை கற்பழித்து கொன்ற வழக்கில் தூக்குத் தண்டனை உச்சநீதிமன்ற முறையீட்டில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சம்பவம் நிகழ்ந்தது பிப்ரவரி 2009ம் வருடம். தண்டனை மார்ச் 2010ம் வருடத்தில் வழங்கப்பட்டது. தமிழகத்தில் 16 வழக்குகளில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.

குறைவான சக்தியைதான் காவல்துறை எதிரிமீது பிரயோகிக்க முடியும் என்பது சட்டம். இந்நிலையில் சந்தேகம் வரும் வகையில் பல நிகழ்வுகளில் என்கவுண்டர் முறையை பின்பற்றுவது அபாயகரமானது. கொடுங்குற்றங்கள் நிகழும்பொழுது சில சமயம் மக்கள் மத்தியில் என்கவுண்டர் முறைக்கு ஆதரவு இருக்கலாம். அதற்காக கொடுங்குற்றவாளிகளின் கதையை அவ்வாறு முடிப்பது சர்ச்சைக்குரியது. நடந்த சம்பவத்திற்கு தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்ட காவல்துறை ஆளினர்கள் பதில் அளிக்க நேரிடும். கேரள மாநிலத்தில் நக்சலைட் என்ற சந்தேகத்தில் விசாரிக்கப்பட்ட வர்கீஸ் என்ற இளைஞர் காவல் பிடியில் உயிரிழந்த வழக்கில் ஓய்வு பெற்ற 75 வயது நிரம்பிய காவல்துறை ஐ.ஜி திரு லஷ்மணன் குற்றவாளி என்று கேரள உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியதில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த காவல்பிடி மரணம் ஏற்பட்டது. ஆனால் என்கவுண்டரில் பங்கு பெற்ற ஒரு காவலரின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் சி.பி.ஐ புலனாய்வு செய்து குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது எல்லா காவல்துறை ஆளினர்களையும் சிந்திக்க வைக்க வேண்டும்.

குற்றங்களின் தன்மையைப் பொறுத்து குற்ற நிகழ்வுகள் மக்களால் உணரப்படுகிறது. எங்கு ஒரு குற்றம் நடந்தாலும் அந்த செய்தி தொலைக்காட்சி மூலம் பரவி விடுகிறது. ஒரு விதத்தில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியதை உணர்த்தினாலும் மற்றொரு பக்கம் இது பீதியை கிளப்பிவிடுகிறது என்பது உண்மை.

1978ம் வருடம் ஆகஸ்ட் 26ம் நாள் கோயமுத்தூர் சம்பவம் போலவே தில்லி புத்தாபார்க் அருகில் சஞ்சய், கீதா என்ற சோப்ரா தம்பதியரின் குழந்தைகள் பள்ளியிலிருந்து திரும்பும்பொழுது பில்லா, ரங்கா என்ற இரு கொடியர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டது இந்திய மக்களை உலுக்கியது. இந்த வழக்கில் புலன் விசாரணை செய்யப்பட்டு குற்றவாளிகள் இருவருக்கும் தூக்கு தண்டனை 1982-ல் நிறைவேற்றப்பட்டது. குற்றவியல் ஆளுமை சிறப்பாக செயல்பட்டதால் மக்கள் மதிப்பைப் பெற்றது.

இந்தியாவில் வருடத்திற்கு சராசரி 20,000 கற்பழிப்பு சம்பவங்கள் நிகழ்கின்றன. 2008ம் ஆண்டு 21,467 கற்பழிப்பு வழக்குகள் பதியப்பட்டன. அவற்றில் தில்லியில் 396 கற்பழிப்பு சம்பவங்கள், சென்னையில் 35, மும்பையில் 218 நிகழ்வுகள். இதில் தண்டனையில் முடிவுற்ற வழக்குகள் 26 சதவிகிதம் தான். கற்பழிப்பு குற்றத்திற்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என்று சட்டதிருத்தம் அமலில் வந்தால் தண்டனையில் முடிவுறும் வழக்குகள் மேலும் குறையும்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகிவருவது கவலை தருவதாக உள்ளது. 2008ம் ஆண்டு மொத்த குற்றங்கள் 22,500 அதில் தமிழகத்தில் 666 குற்றங்கள் பதிவாகியுள்ளன. குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்துவது, கட்டாய வேலைக்காக கடத்தப்படுவது, பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்துவது போன்றவை குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் அடங்கும். பதினான்கு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாய கல்வி அளிக்க வேண்டும் என்பது அடிப்படை உரிமை என்று சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. எல்லோருக்கும் கல்வி என்பது எந்த அளவிற்கு நடைமுறையில் உள்ளது என்று பார்க்க வேண்டும். எவ்வளவோ இல்லங்களில் குழந்தைகள் வீட்டுவேலையில் அமர்த்தப்படுகிறார்கள். கண்டும் காணாது ஏதோ நாம் அவர்களின் ஜீவனத்திற்கு உதவுகிறோம் என்று இந்த கொடுமைக்கு காரணம் காட்டுகிறோம். அந்த பச்சிளம் குழந்தைகளின் பிள்ளை பிராயம் நசுக்கப்படுகிறது என்ற உண்மையை கவனிக்க மறுக்கிறோம்.

எவ்வாறு குழந்தைகளை கடத்துவதற்கும், அதைவிட கொடுமை அவர்களை களங்கப்படுத்துவதற்கும் மனம் வருகிறது? இந்தக் கொடூர நிகழ்வுகளுக்குக் காரணம் என்ன? குழந்தைகளை பெற்றெடுத்து பராமரிப்பது மிகப்பெரிய பொறுப்பு. மேலை நாடுகளில் வருங்காலப் பெற்றோர்களுக்கு குழந்தைகள் பராமரிப்பு பற்றி வகுப்புகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அவர்கள் பொறுப்பு ஏற்க தயார் செய்யப்படுகின்றனர். அவசர உலகில் பல்வேறு கவன ஈர்ப்புகளின் ஊடுருவலால் குழந்தைகளை கவனிக்க நேரம் ஒதுக்கப்படுவதில்லை. பல்வேறு இல்லங்களில் குழந்தைகள் வீடுதிரும்பும் பொழுது வேலையாட்களைத் தவிர மற்ற பெரியோர்கள் இருப்பதில்லை. ஏனெனில் திருமணம் முடிந்த கையோடு தனிக்குடித்தனம் சென்று விடுகின்றனர். பொருள் ஈட்டுவதற்கு கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம். வாகன ஓட்டுனர்களையும் மற்ற உதவியாளர்களையும் நம்பியிருக்க வேண்டிய நிலை. அவர்களது பொறுப்பில் குழந்தைகள் விடப்படுகின்றனர்.

வேலைக்கு ஒருவரை அமர்த்துவதற்கு முன் ஓரளவாவது அவரது பின்னணி தணிக்கை செய்யப்படவேண்டும். அரசு வேலை அல்லது தனியார் நிறுவனங்களில் பணியமர்த்துவதற்கு முன்னர் அவரது நன்னடத்தை ஆராயப்பட்டு சான்றிதழ் பெறப்படுகிறது. ஆனால் நமது இல்லங்களில் வேலைக்கு வைப்பவரின் பின்னணி ஆராயப்படுவதில்லை. நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலம் அவசர அவசரமாக ஒருவரை வேலைக்கு அமர்த்திவிடுகிறோம். பின்னால் அவரது மோசமான நடவடிக்கை வெளிச்சத்திற்கு வரும்பொழுது வருத்தப்பட்டு பயனில்லை.

பல இல்லங்களில் பெரியோர்கள் இல்லாத நேரத்தில் குழந்தைகள் வீட்டு உதவியாளர்களோடு சேர்ந்து தொலைக்காட்சி பார்க்கின்றனர். இரவு நேரங்களில் எந்தமாதிரியான நிகழ்ச்சிகள் வருகின்றன என்பது கண்கூடு. மிட்நைட் மசாலாவாக துவங்கி விரச காட்கள் இப்போது பட்டப் பகலுக்கு வந்துவிட்டது. இளம் உதவியாளர்கள் ஓய்வு நேரங்களில் எஜமானர் வீட்டிலேயே உட்கார்ந்து இத்தகைய காட்சிகளைக் கண்டு களிப்பது சகஜமாகிவிட்டது. இப்போது சின்னஞ்சிறு குழந்தைகளை ஆடவிடுகிறார்கள். அதுவும் இரட்டை அர்த்தம் கொண்ட பாடல்களுக்கு வேண்டாத உடல் அசைவுகளோடு. திரும்ப திரும்ப விரச காட்சிகளைக் கண்ட மயக்கத்தில் வீட்டு உதவியாளர்கள் குழந்தைகளை பாதுகாக்க வேண்டியவர்கள் எந்த பார்வையில் அவர்களை பார்ப்பார்கள் என்று யூகிக்கலாம். எலக்ட்ரானிக் ஊடகங்களின் பாதிப்பு சில அசம்பாவிதங்களுக்கு மறைமுகமாக காரணமாகிவிடுகின்றன என்பது உண்மை. சமீபத்தில் ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சி தொடரில் பார்க்ககூடாத காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன என்பதால் அந்த தொடர் இரவு பதினோரு மணிக்கு மேல் காண்பிக்கப்படவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சின்னத்திரையைப் பொறுத்தவரை சுயகட்டுப்பாட்டோடு சமுதாய நலன் கருதி ஒளிபரப்பு மேற்கொள்ளும் நிலை வர வேண்டும்.

பல இல்லங்களில் பிற மாநிலங்களிலிருந்து தமிழ் தெரியாத இளைஞர்கள் வீட்டு வேலைக்கும் உதவிக்கும் அமர்த்தப்படுகின்றனர். என்ன காரணமோ சோம்பலில் சுகம் காணும் உள்ளூர் வாசிகள் வேலைக்கு வருவதில்லை. வெளிமாநிலத்தவரின் முகாந்திரம் என்ன என்று கூட ஆய்வு செய்வதில்லை. வேலையாட்கள் மீது நம்பிக்கை வைத்தால் தான் அவர்கள் விசுவாசமாக இருப்பார்கள் என்பது உண்மையானாலும் மேற்பார்வையே இல்லாமல் முழுமையாக நம்புவது விபரீதத்தில் முடியும்.

ஒரு குற்றம் புரிந்தால் உறுதியாக தண்டனை கிடைக்கும், சட்டம் நம்மை விடாது என்ற பயம் இருக்க வேண்டும். சட்டம் இயற்றுகையில் குற்றத்தின் விகாரம் மற்றும் மக்கள் எதிர்பார்ப்பை வைத்து கடுமையான தண்டனை நிர்ணயிக்கப்படுகிறது. கற்பழிப்பு சம்பவங்களின் கொடூரம் அதிகமாக உணரப்பட்டதால் கற்பழிப்பு குற்றத்திற்கு மரண தண்டனை என்ற மாற்றம் விவாதத்தில் உள்ளது. அதிகபட்ச தண்டனை அவசியம் தான். ஆனால் விரைவான உறுதியான தண்டனைதான் குற்றங்களை கட்டுப்படுத்தும்.

சட்டம் ஒழுங்கை பாரபட்சமின்றி நிலைநாட்டுவது காவல் நிலைய அதிகாரிகளின் தலையாய கடமை. காவல்துறையின் அடிப்படை பணிகளான குற்றங்கள் நடவாமல் தடுப்பது, நடந்த குற்றங்களை கண்டு பிடித்தல், அமைதி காக்க தகவல் சேகரிப்பது, இவை சரிவர நிறைவேற்றப்படாவிட்டால் குற்றங்கள் பெருகும். இப்பணிகளை நிறைவு செய்ய காவல் நிலையங்களை பலப்படுத்த வேண்டும். காவல்நிலைய அதிகாரிகள் தமது சரகத்தில் எந்த ஒரு போக்கிரியும் வாலாட்ட முடியாது என்று பெருமை கொள்ள வேண்டும். அத்தகைய தன்மானம் போற்றும் அதிகாரிகள் இருக்கிறார்கள். காவல்துறை அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டால் கொடுங்குற்றங்கள் நிகழ வாய்ப்பில்லை. பிரச்சனையை வளரவிடாமல் முதலிலேயே கிள்ளி எறிய வேண்டும். வளர விட்டுவிட்டு துண்டை காணோம் துணியைக் காணோம் என்று ஓடி என்ன பயன். சட்டங்களை அமல் படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் காவல்துறை மக்களின் ஒத்துழைப்பை பெற்றால்தான் பணியில் சிறப்பு எய்த முடியும். குற்றத்தடுப்பு நடவடிக்கையை மையமாக குறிவைத்தால் துப்பாக்கியால் எதிரிகளை குறிவைக்கும் நிலைவராது.

The Article published in the Newspaper Dinamani on 24.11.2010

Tuesday, November 23, 2010

EFFECTIVE COMMUNICATION – 7 STEPS


The quint essence of Effective Communication is referred in Epic Ramanayana. Rama describes the value of Effective Communication after listening to Hanuman who returns from Lanka after meeting Sita Devi. Rama praises Hanuman for the effective way he communicated and the impact of his communication had on himself and Laksmana.

Rama elaborates the important attributes of Effective Communication.

1.

அவிஸ்தா

:

Not too elaborate nor too winding nor too short.

2

. அசந்திக்த்தம்

:

Unambiguous and clear-clearity of expression.

3

சமஸ்காரக்ரம சம்பந்நம்

:

Impeccable grammar

4

ந கிஞ்சித் அப ஷப்திதம்

:

The words used were with care and not one word was out of place. Not one word could be replaced or rephrased. A perfect choice of words.

5

மத்யமேஸ்வரம்:

:

The message was delivered in even tone not too loud or too soft. Hanuman did not shout to create any vibes on the listener. The message was delivered in a pleasant and unattached tone.

6

உச்சாரயதி

கல்யாணி

:

The pronunciation was impeccable and perfect and was pleasing to the ear. Here Rama stresses the importance of pronunciation how each word should be clearly pronounced to ensure clarity. If pronunciation is clear the words will flow automatically.

7.

வாசம்

உறிருதயஉறாரிணி

Such clearly pronounced words will reach the heart of the listener. The purpose of communication is that if should reach the listener in the manner intended.

Hence these 7 principles of Effective Communication are so clearly brought out in the Epic Ramanayana.

Tuesday, November 2, 2010

விழலுக்கு நீர் பாய்ச்சமாட்டோம்



இரும்பு மனிதர் என்று போற்றப்படுபவர் சர்தார் வல்லபாய் பட்டேல், குறுநில மன்னர்களும், ஜமீந்தார்களும் ஆட்சி செலுத்தி வந்த துண்டு துண்டாக இருந்த பகுதிகளை இணைத்து இந்திய தேசத்தை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு. சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் என்ற பொறுப்பில் இந்திய காவல்துறையை ஒருங்கிணைத்தார். இந்திய காவல் பணியில் சேரும் போலிஸ் அதிகாரிகள் பயிற்சி பெறும் ஐதராபாத்தில் அமைந்துள்ள உயர் பயிற்சி மையம் சர்தார் வல்லபபாய் பட்டேல் அவர்களின் புனிதப் பெயரை தாங்கியுள்ளது.

எளிமையான வாழ்க்கை, பாரபட்சமற்ற அப்பழுக்கற்ற தூய்மையான பொதுப்பணி என்று நேர்மையான கோட்பாடுகளை பின்பற்றிய உயர்ந்த மனிதர் சர்தார் வல்லபபாய் பட்டேல். வலிமையான மத்திய அரசு உருவாக்கத்திற்கு அடிகோலினார். அக்டோபர் 31ம் நாள் அன்னாரது பிறந்தநாள். ஊழல் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு அவரது பிறந்தநாளை முன்வைத்து அனுசரிக்கப்படுவது உகந்தப் பொருத்தம் என்பதில் ஐயமில்லை.

மத்திய விழிப்பாணையம் இந்த வருடம் ஊழலால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஊழலை ஒழிப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. ஊழலில் வேரூன்றுவதற்கு இரண்டு காரணங்கள். எந்த ஒரு நடவடிக்கை என்றாலும் ஏதாவது ஒரு அரசுத் துறையை நாடவேண்டிய நிலை சுற்றிவளைத்து இடப்படும் அரசாணைகள், அரசுப் படிவங்களை படித்து புரிந்து கொள்வதற்கு தனி அறிவாற்றல் வேண்டும் என்றால் மிகையில்லை. இதைதான் ஒரு ஆளுமை நிபுணர் நடைமுறை படிப்பாற்றல் என்கிறார். சாதாரணமாக எழுத படிக்க தெரிந்தவரை படித்தவர் என்ற கணக்கில் சேர்க்கிறோம். ஆனால் நடைமுறைப் படிப்பாற்றல் பெற்றவர் இந்தியாவில் 30 சதவிகிதத்திற்கும் குறைவு என்று அளவிடலாம். இது ஒரு புறம் என்றால் நெளிவு சுளிவுகள் தெரிந்து சாதித்துக்கொள்பவர்கள் இருப்பதால் குறுக்குவழி தான் பிழைக்கும் வழி என்ற நிலை.

ஒரு நாட்டின் வெளிப்படையான நிர்வாகத் திறனை கணிக்கும் சர்வதேச நிறுவனம் 120 நாடுகளில் நடத்திய ஆய்வில் இந்திய 89-வது இடம் பெற்றுள்ளது. போன வருடத்தைவிட இந்த வருடம் இரண்டு இடம் குறைந்துள்ளது. சத்யம் நிறுவன ஊழல் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நிர்வாகம் பற்றி எழுந்துள்ள சர்ச்சைகள் இந்த பின்னடைவிற்குக் காரணமாக கூறப்படுகிறது. சீனா 77வது இடம் இந்தியாவைவிட 10 இடங்கள் முன்னிலையில் உள்ளது.

எவ்வளவோ சிறந்த நலத்திட்டங்கள் அரசால் மக்கள் நலனுக்காக வகுக்கக்படுகின்றன. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் ஊழல் ஊடுருவலால் பாதிக்கப்படுபவர்கள் ஏழைமக்கள் தான். ஊழல் மக்கள் நலனுக்கு எதிரானது.

1993ம் வருடம் மும்பையில் தொடர் குண்டு வெடிப்பில் பல உயிர்கள் பலியாயின. வெடிப்பொருட்கள் மறைத்து கொண்டு வரப்பட்ட வாகனங்களை செக் போஸ்டுகளில் சரியாக தணிக்கை செய்யாததால் அவை சுலபமாக கயவர்கள் கைகளுக்கு சென்றடைந்தன என்பது விசாரணையில் வெளிவந்த உண்மை. தணிக்கை சாவடிகளில் நிலவும் ஊழல்களால் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் பாதிப்பு பயங்கரவாதம் ஊடுருவ துணைபோகிறது என்பது நெத்தியடி உண்மை. ஊழல் தேசிய பாதுகாப்பிற்கு விரோதமானது.

சுதந்திர இந்தியாவின் முதல் 30 ஆண்டுகள் ஒட்டுமொத்த வளர்ச்சி 3 சதவிகிதம் இருந்தது. தாராளமயமாக்கல், நவீன பொருளாதார அணுகுமுறைகளால் வளர்ச்சி 8 சதவிகிதத்தை தாண்டியுள்ளது. பொருளாதார வளர்ச்சியும், வெளிநாடுகளிலிருந்து வரும் முதலீடும் வெளிப்படையான ஊழலற்ற நிர்வாகம் நிலவினால் மேலும் பெருகும் ஊழல் பொருளாதார வளர்ச்சிக்கு தடைக்கல் என்பது தெளிவு.

உறாங்காங் என்ற சிறிய நகரம் இங்கிலர்ந்து நாட்டின் ஆளுகையில் இருந்தது. இப்போது சைனாவின் கைவசம். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் முகப்பில் அமைந்துள்ளதால் முக்கிய வணிக நகரமாக வளர்ந்துள்ளது. பலவருடங்களுக்கு முன் உறாங்காங் நகரத்தில் நிர்வாகம் நிலைகுலைந்து ஊழல் எல்லா இடங்களிலும் பரவி இருந்தது. இங்கு நிலையை சரிசெய்ய ஒருங்கிணைந்த ஊழல் அழிப்பு திட்டம் வகுக்கப்பட்டது. ஊழலில் உழல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை, ஊழல் தடுப்பு முறைகள் மற்றும் மக்களிடையே ஊழலை அழிப்பதற்கான விழிப்புணர்ச்சி ஏற்படுத்துதல் என்ற மும்முனை திட்டம் பாரபட்சமின்றி நடைமுறை படுத்தப்பட்டது. மக்கள் ஒத்துழைப்பு ஒருபுறம் நிர்வாக பொறுப்பிலுள்ளவர்களின் முழுஈடுபாடும் இந்த திட்டத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள். தனியார் துறையில் உள்ள ஊழலும் சட்ட விரோதமானது என்ற சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டு தவறு செய்யும் தனியார் நிறுவனங்கள் மற்றும் பெறுப்பில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது, உறாங்காங் வெற்றியின் மற்றொரு சிறப்பு அம்சம். கடுமையான தண்டனை சட்ட ஏடுகளில் இருந்தால் மட்டும் போதாது அவை நடைமுறைக்கு வரவேண்டும். தகுந்த தண்டனை உரிய நேரத்தில் என்ற நிலைதான் குற்றங்களை கட்டுப்படுத்த உதவும்.

ஐக்கிய நாடுகள் சபை புத்தாயிரம் துவக்கத்தில் அடுத்த 15 ஆண்டுகளில் அதாவது 2015-ற்குள் நிறைவேற்றப்படவேண்டிய இலக்குகளை நிர்ணயித்துள்ளது. வறுமை ஒழிப்பு, எல்லோருக்கும் வீட்டு வசதி, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, மனிதஉரிமைகளுக்கு முக்கியத்துவம் என்ற இலக்குகளை அடைவத்ற்கான முயற்சிகளை எல்லா நாடுகளும் எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் இந்த இலக்குகள் அடைவதற்கு முட்டுக்கட்டையாக இருப்பது ஊழல் ஒன்றுதான் என்று குறிப்பிட்டு அதனைக் களைய எல்லா நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்று ஐக்கியநாடுகள் சபை அறிவுறுத்தியுள்ளது.

ஊழலில் லஞ்சம் கொடுப்பவர், லஞ்சம் வாங்குபவர் இருவருக்கும் பங்கு உண்டு. சட்டம் லஞ்சம் வாங்குபவரை குறிவைக்கிறது ஆனால் லஞ்சம் கொடுப்பவரும் ஊழல் தழைப்பதற்கு காரணம் என்பதை மறுக்கமுடியாது. இதனைக் கருத்தில் கொண்டுதான் லஞ்சம் கொடுப்பவரையும் சட்டப்பிடியில் கொண்டுவருவதற்கு திருத்தங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய விஜிலன்ஸ் கமிஷன் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

ஊழலை ஒழிப்பதற்கு அரசுத் துறையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவ்வப்போது அளவிடக்கூடிய முறைகள் பற்றியும் விஜிலன்ஸ் கமிஷன் விளக்கியுள்ளது. விழிப்புத் துறையின் பணிகள் ஒரு துறையை சிறப்பாக இயக்க உதவ வேண்டும். தண்டனை மற்றும் தடுப்பு முறைகள் லஞ்ச ஒழிப்பில் முக்கியம் என்றாலும் நேர்மைக்கும், உண்மையான உழைப்பிற்கும் உரிய கௌரவம் கொடுத்தால்தான் துறையின் மேலாண்மை உயரும். விதிமுறைகளை சுலபமாக்குதல் மற்றுமொரு முக்கிய நடவடிக்கை.

விதிகளும், அலுவலக நிபந்தனைகளும் நிர்வாகம் பாரபட்சமின்றி இயங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு பணியை செய்ய முடியாது என்பதற்கு காரண காரியங்கள் ஆராயப்படுகின்றன. விதிகளை மேற்கோள் காட்டி தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. இதற்கு முன் செய்ததுண்டா இல்லையெனில் மாற்றம் தேவையில்லை என்று ஆணையிடப்படுகிறது. முன்மாதிரியை தேடாதே முன் மாதிரியை உருவாக்கும் முன்னோடியாக இரு என்று மக்களுக்கு உதவும் வகையில் விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும். சமயத்திற்கு தகுந்தாற்போல், சம்பந்தப்பட்ட பயனாளியைப் பொறுத்து விதிகள் நடைமுறைப்படுத்தலும் நிர்வாகத்தில் தவிர்க்கப்பட வேண்டும்.

Transparency in Tenders (ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டம்) சட்டம் இயற்றப்பட்டு பொருட்கள் கொள்முதல் செய்வதில் பல வரவேற்கத்தக்க மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இணையதளம், நேர்முக விவாதங்கள் மூலம் வெகுவாக டெண்டர்களில் பங்குபெறும் நிறுவனங்களின் சந்தேகங்களை போக்கலாம். டெண்டரில் பங்குபெறும் நிறுவனங்களுக்கு, மற்றவர்கள் டெண்டரில் வெற்றி பெறுவதற்கு முறைகேடுகளில் ஈடுபடுவார்களோ என்ற சந்தேகம் இருக்கும். இந்த சந்தேக சாபக்கேட்டினைப் போக்குவதற்கு ஒரே வழி வெளிப்படையான நேர்மையான அணுகுமுறை மற்றும் நடைமுறை.

ஊழலைப் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கு உரிய ஆணைகள், மத்திய அரசின் பணியாளர்கள் மற்றும் மக்கள் குறைகள் இலாகா மூலம் 2004ல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர், முறைகேடுகள் பற்றிய தகவல் நேராகவோ, மறைமுகமாகவோ அளிக்கலாம். அதன் அடிப்படையில் மத்திய விஜிலென்ஸ் கமிஷனுக்கு விசாரணை மேற்கொள்ளும். உண்மை வெளிவரும் பட்சத்தில் நேரடியாக வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ள ஆணையிடலாம். தகவல் கொடுப்பவருக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு முழுஅதிகாரம் விஜிலென்ஸ் கமிஷனுக்கு உள்ளது. விளையாட்டுப் போட்டிகளில் தவறு நேர்ந்தாலோ விதிகள் மீறப்பட்டாலோ, நடுவர் விசில் மூலம் ஒலி எழுப்பி விளையாட்டை நிறுத்தி ஒழுங்கான முறையில் விளையாட்டு தொடர வழிசெய்வார். அதேபோல் ஊழல் பற்றி தகவல் கொடுப்பவரும் ஒரு விதத்தில் நடுவராக இருந்து முறைகேடுகளை நிவர்த்தி செய்வதில் உதவுகிறார் என்பதால் அவர் ஒலி எழுப்பி எச்சரிக்கும் நடுவராக அங்கீகரிக்கப்பட்டு அவருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாகியும் ஊழலிருந்து சமுதாயத்திற்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. மேலை நாடுகளில் முக்கியமாக ஐரோப்பிய நாடுகளில் ஊழல் ஒழிப்பில் வெற்றி கண்டுள்ளார்கள். அதற்கு முக்கிய காரணம் பொதுமக்களின் ஒத்துழைப்பும் ஊழலுக்கு இணங்காத துணைபோகாத நிலைப்பாடும் தான் என்பது நம்மை சிந்திக்க வைக்கவேண்டும். ஒரு சாதாரண போக்குவரத்து விதிமீறினால் அபராதம் கட்டாமல் யாரை அணுகி சரிசெய்யலாம் என்று யோசிக்கிறோம் அல்லது பணியில் இருக்கும் காவலருக்கு ஏதாவது கொடுத்துவிட்டு சென்றுவிடலாம் என்று முயற்சிக்கிறோம். இவ்வாறு தான் ஊழல் பரவி வளர்கிறது.

ஊழலை ஒழிப்பது நம்கையில். அனைவரும் ஒருங்கிணைந்து எதிர்த்தால் நிச்சயமாக நாம் எதிர்பார்க்கும் ஊழலற்ற சமுதாயம் உருவாகும்.

ஊழலுக்கு துணைபோவது விழலுக்கு நீர்பாய்ச்சுவதைவிட கொடியது.விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம்என்று பெருமைபாடிய மகாகவியின் கனவு மெய்ப்படவேண்டும்.

Thursday, October 21, 2010

இந்தியாவை இணைக்கும் காவல்



தேசிய பாதுகாப்பு இரண்டு வகைப்படும். வெளிநாட்டுப் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு. இராணுவமும் காவல்துறையும் தேசிய பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எது நமக்குப் பிரச்சனைக்குரியதாக இருக்கிறது உள்நாட்டுப் பாதுகாப்பா அல்லது எல்லை பாதுகாப்பா என்று ஆராய்ந்தால் உள்நாட்டுப் பாதுகாப்புதான் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் இன்றியமையாததது என்பது தெளிவாகும்.

சுதந்திர இந்தியாவில் 1960-ல் இருந்து 1971 வரை மூன்று பெரிய யுத்தங்களை சந்திக்க நேர்ந்தது. அதில் உயிரிழப்புப் பொருள் சேதமும் ஈடுசெய்ய முடியாதவை. அதற்குப் பிறகு 1999ம் வருடம் பாகிஸ்தானோடு கார்க்கில் யுத்தம். பனிபொழியும் வடமேற்குப் பகுதியான சியாசன், வடகிழக்கு இந்திய சீனா எல்லையில் தொடர் கண்காணிப்பு என்று நமது எல்லைப் பாதுகாப்பினை பெரும் பகுதிகளாக பிரிக்கலாம்.

அண்டை நாடுகள் அச்சம் கொள்ளும் வ்கையில் நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தினால்தான் அமைதி காக்கமுடியும் என்பது பாதுகாப்பில் டிடெரன்ஸ் என்று சொல்லப்படும் முக்கிய சித்தாந்தம். முப்படையான இராணுவம், வான்படை, கடற்படை இவைகளை முறையாக காலத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்துதல் வேண்டும். சமீபத்தில் பாதுகாப்புப் பிரிவுகளை நவீனப் படுத்துவதற்காக மத்திய அரசு 1 லட்சத்து 25,000 கோடி ரூபாய் திட்டம் வகுத்துள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

நவீனமயமாக்குவதில் காவல்துறைக்கு அடுத்த பத்து ஆண்டுகளில் ரூபாய் 2500 கோடி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஓராண்டிற்கு சராசரி 250 கோடி. இது 30 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசத்திற்கு பிரித்து கொடுக்கப்பட வேண்டும். உள்நாட்டு பாதுகாப்பு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் விதத்தில் காவல்துறைக்கு வலிமை சேர்க்க வேண்டும். எல்லைப் பிரச்சனைகளைப் போல எப்போதும் வருவதல்ல உள்நாட்டுப் பிரச்சனை தொடர் விழிப்புணர்வோடு கவனித்தால் தான் சட்டம் ஒழுங்கினை சீராக சமாளிக்க முடியும்.

1992ம் வருடம் அயோத்தியா பிரச்சனை தலைதூக்கிய போது நாடெங்கிலும் கலவரம் வெடித்தது. 1993ம் வருடம் மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு சமுதாயத்தைப் பிளவு படுத்தியது. 2002ல் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் அதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரம் உள்நாட்டு பாதுகாப்பிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய சவால்.

1990ல் துவங்கிய பாப்ரி மஸ்ஜித் ராமர் பிறந்த இடம் விவகாரம், மதவாத பிரச்சனைக்கு வித்துட்டுள்ளது. மிகைவதும் குறைவதுமாக இருந்தாலும் பிரச்சனை முடிந்தபாடில்லை.

புத்தாயிரத்தின் முதல் பத்து ஆண்டுகள் முந்தைய பத்து ஆண்டுகளை ஒப்பிடுகையில் மதவாத மோதல்கள் குறைவு என்றாலும் வன்முறை சம்பங்களின் கொடூரம் குறையவில்லை. அங்கொன்றும் இங்கொன்றும் நிகழும் சம்பவங்கள் என்று விட்டுவிட முடியாது. 2001 முதல் 2009 வரை 6541 வகுப்புவாத கலவரங்கள் பல்வேறு மாநிலங்களில் நிகழ்ந்துள்ளன. அதில் 2864 உயிர்கள் மடிந்தன. 21,640 மக்கள் காயமுற்றனர். இவை காவல்துறையினரால் பதியப்பட்ட வழக்குகளாகும். பதியப்படாத சிறுவழக்குகள் பன்மடங்கு இருக்கும் என்று அனுமானிக்கலாம். குஜராத் மாநிலத்தில் கோத்ரா பயங்கரம் 2002ம் ஆண்டு நிகழ்ந்தது. அந்த ஆண்டு மட்டும் ஆயிரக்கணக்கான மோதல்கள். ஒரு சிறிய பொறி போதும் பற்றி எரிய என்ற நிலையில் சில இடங்களில் மதவாத பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் புகைந்து கொண்டிருக்கின்றன. சராசரியாக ஒரு வருடத்திற்கு சுமார் 130 உயிர்கள் 600 வகுப்புவாத மோதல்களில் பலியாகின்றன.

இனக்கலவரங்களின் பயங்கரவாத தாக்குதல்கள் மூலம் தூண்டிவிடப்படுகின்றன என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். 1993ம் வருடம் நிகழ்ந்த மும்பை கலவரம் மற்றும் 2002ல் குஜராத்தில் நிகழ்ந்த தாக்குதலும் இதற்கு எடுத்துக் காட்டு. நமது நாட்டில் 2004-ல் இருந்து 28 பெரிய அளவிலான குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் உயிரிழப்பு 990 காயமுற்றவர்கள் 2791.

இனக்கலவரங்களால் ஏற்படும் பொருட்சேதம் மதிப்பிட முடியாது. 1992-93ல் நிகழ்ந்த மும்பை கலவரத்தில் மட்டும் ரூ.9000 கோடி பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஒவ்வொரு கலவரத்தின் போதும் இயல்பு வாழ்வு பாதிப்பு, எப்போதும் மக்கள் ஒரு பீதியில் வாழவேண்டிய நிலை, கல்விக் கூடங்கள் செயலிழத்தல் போன்று சமுதாயத்திற்கு ஒட்டு மொத்த பின்னடைவு ஏற்படுகிறது. அயோத்தியா பிரச்சனையில் அலகாபாத் உயர்நீதிமன்றம் செப்டம்பர் 30 தீர்ப்பு வழங்கியபோது என்ன நடக்குமோ என்ற பயம் இந்தியா முழுவதும் சூழ்ந்தது. உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம், மஉறாராஷ்டிரா, குஜராத், கர்நாடக மாநிலங்களில் அசம்பாவிதங்கள் நிகழக்கூடும் என்றும் மற்ற மாநிலங்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடப்பட்டது. மூச்சைப் பிடித்துக் கொண்டு மக்கள் செய்தி ஒளிபரப்பினை கவனித்தனர்.

எதிர்பார்த்தது போல் அசம்பாவிதங்கள் ஒன்றும் நிகழவில்லை. நடுநிலை பிறழாது தீர்ப்பு அமைந்தது ஒரு காரணம் என்றாலும் விவேகத்துடன் பொதுமக்கள் தீவிரவாரத்தை அண்டவிடாமல் அமைதி காத்தது ஒரு புறம், எல்லா மாநிலங்களிலும் காவல்துறையினர் மிகச்சிறப்பாக கடமைஉணர்வோடு பணியாற்றியது நமது நாட்டின் இறையாண்மையை தலை நிமிரச் செய்தது.

உத்திரப்பிரதேசம் மத்திய பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் மதவாத பயங்கரம் தலைதூக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் அந்த மாநில காவல்துறை சிறப்பாக செயல்பட்டதால் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டன. உயர் அதிகாரிகள் எப்போதும் போல் சம்பரதயாத்திற்காக ஆலோசனைக்கூட்டம் நடத்தாமல் சரகத்தில் இருக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் எஸ்பிக்களுக்கும் தெளிவான ஆலோசனை வழங்கியதோடில்லாமல் உட்கோட்டம், தாலுக்கா அளவில் எல்லா அதிகாரிகளுக்கும் எவ்வாறு நிலைமையை சமாளிக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தப்பட்டது. சரகத்தில் உள்ள அதிகாரிகளின் நேர்மையான செயல்பாட்டிற்கு குறுக்கீடு ஒன்றும் இருக்காது என்று உறுதியளிக்கப்பட்டது. சமூக விரோதிகள் என்று தெரிவு செய்யப்பட்டவர்களை அந்தந்த சரகத்தில் கைது செய்து அவர்களது சட்ட விரோத செயல்கள் முடக்கப்பட்டன. யாரும் அவர்களது உதவிக்கு வரவில்லை. வந்ததையும் அதிகாரிகள் செவிமடுக்கவில்லை. சுதந்திரமாக செயல்படவிட்டால் காவல்துறை சிறப்பாக செயல்படும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

சட்டம் ஒழுங்கு பராமரிப்பதில் சமுதாயத்தோடு இணைந்து செயல்பட்டால் காவல்துறையின் செயல்திறன் மேலும் சிறப்படையும். சமுதாயக் காவல்பணியை முழுமையாக செயல்படுத்தும் மாவட்டங்களிலும் காவல் நிலைய சரகங்களிலும் எந்தப் பிரச்சனை வந்தாலும் கட்டுப்பாடாக சமாளிக்கப்படுவதை காணலாம். சாதாரண நாட்களில் நேர்மையாக பணிகள் செய்தால்தான் அவசர காலத்திலும் அசாதாரண நாட்களிலும் மக்களின் ஒத்துழைப்பைப் பெற முடியும். இத்தகைய ஒத்துழைப்பு சாதாரணமாக வராது. குற்றங்கள் நிகழாமல் தடுப்பது. சட்டம் ஒழங்கு பிரச்சனைகளை முளையிலேயே தலையிட்டு களைவது. நம்பகரமான தகவல்கள் சேகரித்து அமைதி காப்பது போன்று ஒழுக்கமாக தன்னார்வத்தோடு செயல்பட்டால் மக்கள் ஒத்துழைப்பு தாராளமாக வரும்.

மிகப்பெரிய நாடான இந்தியாவில் வேற்றுமைகள் ஏராளம். இனம், ஜாதி, மொழி, வசதி படைத்தவர், வசதி குறைந்தவர், படித்தவர் படிக்காதவர் என்று வேற்றுமைகளுக்கும், ஏற்றத்தாழ்வுகளுக்கும் குறைவில்லை. இத்தகைய வேற்றுமைகளில் ஒன்றுமை உண்டு, நாம் இந்தியர் என்ற உணர்வு உண்டு என்று பெருமைப்படுகிறோம். ஆனால் இந்த ஒற்றுமையை கட்டிக்காப்பது காவல் துறை என்பதை மறுக்க முடியாது. ஒற்றுமையை குலைக்கும் வகையில் நாசவேலையில் ஈடுபடும் நயவஞ்சகர்களையும் அமைதிக்கு உலைவைக்கும் சமூக விரோதிகள் மீது அந்தந்த மாநிலங்களில் உரிய சமயத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படுவதால்தான் நாட்டின் ஒற்றுமை பாதுகாக்கப்படுகிறது.

தில்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்கள் பெற்ற விளையாட்டு வீரர்களும், சிறப்பாக பாதுகாப்புப் பணி செய்த காவல்துறையும் வேறு சர்ச்சைகள் மறையும் வகையில் இந்தியாவின் புகழை நிலை நாட்டினர். காவல்துறை விளையாட்டு வீரர்கள் இந்தியா வென்ற 101 பதக்கங்களில் 17 பதக்கங்களை வென்றனர் என்பது பெருமைக்குரிய வெற்றி.

தேசிய விரோத சக்திகளை எதிர்கொள்வதில் காவல்துறையினர் பல சவால்களை சந்திக்க நேரிடுகிறது. உலகளவில் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் பரவியுள்ள நிலையில் காவல்துறையின் பொறுப்பு அசாதாரணமனது மட்டுமல்ல, அதை நிறைவேற்ற அமானுஷ்ய சக்தி உடலளவிலும் மன அளவிலும் ஓங்குதல் வேண்டும். தீயதை ஒடுக்க நடக்கும் தர்மயுத்தத்தில் உயிரிழந்த காவல் வீரர்கள் பலர். ஒவ்வொரு வருடமும் சராசரி 1000 காவல்துறை ஆளினர்கள் உயிர்தியாகம் செய்கின்றனர். காயமுற்றவர் எண்ணிக்கை கணக்கிலடங்காது. பணிச்சுமையினால் எல்லா விதமான உடல் உபாதைகளையும் சுமந்து கடமையாற்றுவோர் ஏராளம். 1999-ல் இருந்து 2009 வரை 9310 காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர் இந்த வருடம் மட்டும் சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் உயிர் தியாகம் செய்துள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 21ம் நாள் உயிர் தியாகம் செய்த காவல் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் எல்லா மாநிலங்களிலும் காவல்துறையினரால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.

1959ம் வருடம் திரிசூல் என்ற நமது நாட்டின் வடமேற்கு லடாக் எல்லையில் காவலில் இருந்த 10 மத்திய ரிசர்வ் படையினர் சீனப்படையினரின் தாக்குதலில் போராடி உயிரிழந்தனர். அந்த சம்பவத்திற்குப் பிறகு தான் எல்லைப்பாதுகாப்பு பலப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்து பி.எஸ்.ஃப் என்ற எல்லைப் பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது. உயிரிழந்த காவலர்களின் நினைவாக அங்கு நினைவுச் சின்னம் வைக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 21ம் நாள் மறைந்த காவல்துறையினருக்கு அஞ்சலி செலுத்தும் நாளாக அனுசரிக்கப்படுகிறது.

தமிழக, கர்நாடக மாநிலங்களுக்கு சவாலாக இருந்த வீரப்பன் பிரச்சனை 18.10.2004ம் நாள் முடிவுக்கு வந்தது. வீரப்பன் வேட்டையில் உயிரிழந்த 44 வீரர்களுக்கு பர்கூர் வனப்பகுதியில் உள்ள தட்டக்கரை என்ற இடத்தில் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 18ம் நாள் அஞ்சலி செலுத்தப்படுகிறது. உயிர் தியாகம் செய்த எஸ்.பி உறரிகிருஷ்ணன், எஸ்.ஐ செந்தில் மற்றும் காவலர்கள் ரமேஷ், செல்வராஜ் போன்றவர்களை மறந்துவிடக்கூடாது.

சுயநலம் தலைவிரித்தாடும் இந்தக் காலத்தில் தான், தன் குடும்பம், ஜாதி, இனம் என்ற உணர்வுகள் தான் மேலோங்கி இருக்கின்றன. சமுதாயம் மற்றும் நாடு பற்றி சிந்திக்க நேரமில்லை. இத்தகைய சூழலில் சமுதாய நலனுக்காக நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக கடமை உணர்வோடு பணிகள் செய்யும் காவல்துறையினரை போற்றுவோம். இந்த வருடம் ஜனவரி மாதம் தவித்த வாய்க்கு தண்ணீர் இன்றி நடுரோட்டில் கயவர்களால் வெட்டப்பட்டு உயிர் துறந்த உதவி ஆய்வாளர் வெற்றிவேல், ஆய்வாளர் அந்தோணி ஆரோக்கியதாஸ், உதவி ஆய்வாளர் அப்துல் லத்திப், உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம், உதவி ஆய்வாளர் ரமேஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் பரமசிவம், தலைமை காவலர் ஜெகநாதன், முதல் நிலை காவலர் கணேசன், முதல் நிலை காவலர் நாகரத்தினம், முதல் நிலை காவலர் ஆசைக்கனி, பெண் காவலர் நாகஜோதி, காவலர் செங்காலி, போக்குவரத்துப் பணியின்போது உயிரிழந்த கூடுவாஞ்சேரி தலைமைக் காவலர் தேவன் மற்றும் நாடெங்கிலும் இந்த வருடம் அமரர்களான சுமார் 800 காவல்துறை தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.

இந்தியாவை இணைக்கும் இமயம் போல் நிமிர்ந்து நிற்கும் காவலரை வணங்குவோம்.


This Article published in Dinamani on 21.10.2010

Wednesday, October 13, 2010

ஜெயபிரகாஷ் நாராயணன் - 108-வது பிறந்த நாள்









இராமகிருஷ்ண பரமஹம்ஸர், வினோபாபாவே மஹாத்மா காந்தி இவர்கள் வாழ்க்கையில் போதித்த கொள்கையை மனதில் இருத்திய கோட்பாடுகளை வாழ்வியலில் கடைபிடித்தார்கள் ஜெயபிரகாஷ் நாராயணன் இவர்களை தனது மானசிக குருக்களாக ஏற்றுக்கெண்டு உயர்ந்த வாழ்கை வாழ்ந்தார். வினோபாவின் பூதான் என்ற நிலதானம் திட்டத்தில் நிலச்சுவான்தாரர்களிடம் இருந்து உபரி நிலத்தைப் பெற்று ஏழைகளுக்கு பிரித்து அளிக்கும் உயரிய திட்டத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கெண்டார்.

ஜெ.பி. அவர்கள் காந்திஜீயின் சபர்மதி ஆசிரமத்தில் தன்னை தொண்டனாக அர்ப்பணித்துக் கொண்டார். உயர்ந்த கொள்கை கோட்பாடுடைய பிரபாவதி என்ற பெண்னை மணமுடித்தார். பெற்றோர்களின் கட்டாயத்தினால் மணமுடித்த பிரபவதி காந்திஜீயின் பிரம்மச்சரியம் மற்றும் சமூக சேவை கெள்கையால் உந்தப்பட்டு மண வாழ்க்கையை துறந்து பொது வாழ்க்கையில் ஈடுபட தனது விருப்பத்தை தெரிவிக்க ஜெ.பி அவர்களும் சம்மதித்தார்.

ஜெ.பி. அவர்களும் பிரம்மச்சரிய விரதம் பூண்டு முழுமையாக சமூக சேவையில் ஈடுப்பட்டார்.

சுதந்திர போராட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட போது சிறைவாசிகளின் மனநிலையை உணர்ந்து அவர்களது மன அமைதிக்கு அறிவுறை வழங்கி அவர்களுக்கு நல்வழி புகட்டினார்.

ஓடும், செம்பொன்னும் ஒக்கவே நோக்கும் ஆன்றோர்கள் என்று பொருட்களின் விலை மதிப்பின் அடிப்படையில் அணுகாமல் அவற்றின் மெய் பொருளை கண்ட ஆன்றோர்கள் வாழந்த பூமி இது. பக்தி புரட்சிச் செம்மல் கபீர்தாஸிடம் ஒருபக்தர் இரண்டு தங்க நாணயங்கள் அன்பளிப்பாகக் கொடுக்க ஒன்று தவறி தண்ணிரில் விழுந்தது. பக்தர் பதறிக்போய் குளக்கரையில் தேடிப்பார்க்க கிடைக்கவில்லை கபீர்தாஸ்யிடம் எங்கு தவறி விழுந்தது என்று வினவ அதற்கு கபீர் இன்னொரு நாணயத்தையும் தண்ணிரில் போட்டு இங்கு தான் விழுந்தது என்றாராம்! நாம் தான் பொருளைக்கட்டி அழுகிறோம் கார் விபத்து என்றால் வண்டிக்கு என்ன சேதாரம் என்று வருந்துகிறோம் பிள்ளை பிழைத்துக்கொண்டனே என்று சந்தோஷ்ப்படாமல்!

காத்தியடிகள் அகிம்சை, ஒத்துழையாமை போராட்டம் வெள்ளையனே வெளி யேறு என்று ஆங்கிலேயே ஏகாதிபத்யத்தை எதிர்த்து போராடி இந்திய சுதந்திரம் அடைய வழி வகுத்தார்.

ஜெ.பி. அவர்கள் இந்திய சமூக அமைப்பில் உள்ள குறைகளை உணர்த்தி அவை சீராக இயங்குவதற்கும் மக்களின் அன்றாட இன்னல்களை களைவதற்கும் போராடியவர். சமூதாய சீர்திருத்தம் மற்றும் அரசு துறைகளும், மற்ற நடைமுறைகளும் செவ்வனே செயல்பட பாடுப்பட்டார். அவரது போராட்டம் உள்நாட்டுப் போராட்டம் நம்மிடம் உள்ள குறைகளை களைய போராட்டம் தொண்டு தான் முக்கியம் பதவி முக்கியம் அல்ல பதவிக்காக பரிதவிக்கவில்லை பதவிகள் நாடி வந்தன அவற்றை புறக்கணித்தார் மக்கள் தொண்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். காந்தியத்தை செயலாக்கிய செம்மல் ஜெ.பி அவர்கள்.

கருப்பர்களுக்காக போராடி 28 வருடங்கள் இருண்ட சிறையில் அடைக்கப்பட்டும் மனம்தளராது மக்கள் நலன் ஒன்றையே முழுமுச்சாக கொண்ட ஆப்பிரிக்க காந்தி என்று பாராட்டப்படுபவர் திரு நெல்சன் மண்டேலா அவர்கள். அவர் போரட்டத்தில் வெற்றி பெற்று தெற்கு ஆப்ரிக்கா சுதந்திரம் அடைத்த பின்னர். ஆட்சியில் பொறுபேற்ற போது காந்தியடிகள் பிறந்த மண் இந்தியாவை நோக்கி பதவிப் பிரமாணம் எடுத்துக் கெண்டார் என்பது சரித்திரம். அத்ததைகய பெருமை வாய்ந்த உலகையே வயப்படுத்திய காந்தியக் கெள்கையை தளராது பின்பற்றிய பெரும் பொது நலவாதி ஜெ.பி. அவர்கள். அரசியல் மற்றும் சமுதாயத்தை சுத்தப்படுத்த உழைத்தவர். அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்து போராடி வெற்றிக் கண்ட தியாகச் செம்மல் ஜெ.பி. அவர்களை நினைவில் கொண்டு போற்றுவோம். அவர் விட்டுச் சென்ற பாதையை மறவாமல் பின்பற்றுபோம்.

Friday, October 8, 2010

பற்றிப்படரும் ஆபத்து



ஆபத்து சொல்லி வருவதில்லை அவசர உலகில் வாழ்க்கை இயந்திரமாகிவிட்ட நிலையில் ஒவ்வொரு திருப்பத்திலும் அசம்பாவிதம் நிகழ காத்துக் கொண்டிருக்கிறது என்றால் மிகையில்லை. சில அசம்பாவிதங்கள் தவிர்க்கக்கூடியவை. நமது அஜாக்கிரதையால் நிகழும் அசம்பாவிதங்கள் பல. ஒரு புறம் மனிதனால் வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியால் தோற்றுவிக்கப்படும் வன்முறைகள். இயற்கை சீற்றங்களால் நேரிடும் இழப்புகள், விதிகளை பின்பற்றாததால் ஏற்படும் கட்டிட இடிபாடுகள், சாலைவிபத்து என்று எதிர்பாராத நிகழ்வுகளை வகைப்படுத்திச் சொல்லலாம்.

உலக நாடுகளில் அசம்பாவிதங்கள் அதிகமாக நிகழும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பேரிழப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க செயலாக்க திட்டம் வரைவது அத்தியாவசியம். சிவில் டிபென்ஸ் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைப்பு சீரமைத்து பேரிடர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அவர்களுக்கு உரிய பங்கினை அளிக்க வேண்டும். ஊர்க்காவல்படை மற்றும் இயல் பாதுகாப்புத் துறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையோடு இணைந்து ஒரு தலைமையில் செயல்படவேண்டும். இத்தகைய அமைப்பு ப்ல மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சேதாரங்களை தவிர்ப்பது மற்றும் சமாளிப்பது பற்றிய பயிற்சி அளித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைப்பினை திறம்பட அவசர காலங்களில் அரசு துறைகளுக்கு பக்கபலமாக ஈடுபடுத்தல் வேண்டும்.

2004 ம் ஆண்டு இந்திய துணைக்கண்டத்தை தாக்கிய சுனாமி பேரலை ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்டது. தமிழகத்தில் மட்டும் 7,995 நபர்கள் உயிரிழந்தனர். சென்னை நகரில் மாண்டவர் எண்ணிக்கை 206. குஜராத், மஉறாராஷ்டிரா மாநிலங்களை தாக்கிய பூகம்பங்கள் அதில் ஏற்பட்ட சேதாரங்கள், புயல் மழை வெள்ளம் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள், பல மாநிலங்களில் தீவிரவாத தாக்குதல்களால் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பங்கள் என்று பேரிடர்கள் பல மக்களை நிலைகுலைய செய்கின்றன. இம்மாதிரியான அசம்பாவிதங்கள் நிகழும் பொழுது எவ்வாறு அதை எதிர்கொள்ள வேண்டும், தனிப்பட்ட நபர் எடுக்க வேண்டிய பாதுகாப்பு முறைகள் என்ன, பணி இடங்களில் எவ்வாறு பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும், பல்வேறு அரசுத் துறைகள் இணைந்து தயாரிக்க வேண்டிய செயல்முறை திட்டங்கள் என இவையாவும் தெளிவான வகையில் எல்லோருக்கும் சென்றடைய வேண்டும். பயிற்சி முறைகள் வரையப்பட்டு அதில் எல்லோரும் பங்கு கொள்ள வேண்டும். பயிற்சியில் வியர்வை சிந்தினால் தான் களத்தில் ரத்தம் சிந்தலை தவிர்க்க முடியும்.

டைடானிக் ஆங்கிலப் படத்தில் அருமையான ஒரு காட்சி. கப்பல் பனிக்கட்டியில் இடிபட்டு முழுகப்போகிறது. கப்பலைக்கட்டியவர் டைட்டானிக் பாதுகாப்பான கப்பல் எந்த ஆபத்தையும் சமாளிக்க வல்லது என்ற தன்னம்பிக்கையில் அவசரகால தப்பிப்பதற்கான உபகரணங்கள் மற்றும் மீட்பதற்கான சிறிய படகுகள் அதிகம் வைக்கவில்லை. மீட்புப் படகுகள் குறைவான நிலையில் முதலில் பெண்களையும் குழந்தைகளையும் காப்பாற்ற முன்னுரிமை கொடுத்து சிறிய படகில் கடலில் இறக்க ஆயத்தம் செய்யப்படுகிறது. ஆனால் முண்டியடித்து காப்பாற்றிக் கொள்ள வசதிபடைத்தவர்கள் துடிப்பார்கள். அடித்தளத்தில் குறைந்த கட்டணம் கொடுத்து பிரயாணம் செய்த ஏழைகள் புறக்கணிக்கப்படுகின்றனர். கதவு அடைக்கப்படுகிறது. வசதி படைத்தவர்களும் முதலில் படகில் ஏறியவர்கள் மற்றவர்களை அனுமதிப்பதில்லை. அதிலும் வாட்டசாட்டமான ஆண்கள், வயோதிகர்களை தள்ளிவிட்டு தம்மை காப்பாற்றிக்கொள்ள முனைவார்கள். தான் பிழைத்தால் போதும் என்ற சுயநலம். ஆனால் சாதாரண மக்கள் தன்னலம் பாராது மற்றவர்களுக்கு உதவுவதும் சித்தரிக்கப்பட்டிருக்கும். பேரிடர் மற்றும் விபத்துக்கள் நிகழும் பொழுது இத்தகைய காட்சிகளைக் காணலாம். சமீபத்தில் தில்லியில் ஜம்மா மஸ்ஜித் அருகில் துப்பாக்கியால் சுட்டவரை தைரியமாக ஒரு சாதாரண ரிக்ஷாக்காரர் துரத்தியதால் பெரிய உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது, ஏழைகளின் தன்னலமற்ற செயலுக்கு உதாரணம்.

எந்த ஒரு விபத்து அல்லது பேரிடர் ஏற்பட்டால் முதல் காப்பாளராக சம்பவ இடத்திற்கு செல்வது தீயணைப்பு வீரர். ஆபத்து நேரத்தில் முந்திக் கொண்டு உதவும் மனோபாவம் படைத்த வீரர்களைக் கொண்டது தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை. மீட்புப் பணியில் முதலில் காப்பாற்றப்பட வேண்டியவர் வயோதிகர், பெண்கள், குழந்தைகள் மற்றும் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறன் படைத்தவர்கள். மக்கள் கூடும் பொது இடங்களில் அசம்பாவிதம் ஏற்படாமல் அந்த இடத்திலிருந்து மக்கள் வெளியேறுவதற்கு பாதுகாப்பான வெளியேற்ற பாதைகள் அமைப்பது கட்டிட உரிமையாளர் அல்லது பொது இடங்களை நிர்வகிக்கும் பொறுப்பாளரைச் சார்ந்தது.

ஒரு கட்டிடத்தில் ஆபத்தில் சிக்கியவர்களை ஒரு நிமிடத்தில் ஐம்பது நபர்களை வெளியேற்றுப்பாதை மூலமாக காப்பாற்றலாம் என்று சர்வதேச குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரச்சனை என்று வரும்பொழுது விதிகளைக் கடைபிடித்து வெளியேற்றுவது கடினம். இப்போது உயர்மாடிக் கட்டிடங்கள் பல வந்துவிட்டன. உதாரணத்திற்கு 10 மாடிக்கட்டிடம் கொண்ட குடியிருப்பு பகுதியில் சுமார் 1000 மக்களை விரிவான படி இறக்கத்தில் வெளியேற்றுவதற்கு குறைந்தபட்சம் 45 நிமிடம் ஆகும். அதுவே வியாபாரத்தளத்தில் அதிக மக்கள் புழங்குவதால் அவர்களை வெளியேற்றுவதற்கு மேலும் அதிக நேரம் பிடிக்கும்.

ஸ்டீபன் கோர்ட் கொல்கத்தாவில் இந்த வருடம் மார்ச் 23-ல் நடந்த தீ விபத்தில் 43 அப்பாவிகள் மாண்டனர். ஏழு மாடிகள் மட்டும் கொண்ட இந்த கட்டிடத்தில் உயிரிழப்பு அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். முதலில் உதவி அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதற்கு அரசுத் துறைகளை குறை கூறினாலும் இம்மாதிரி அசம்பாவிதங்களுக்கு முக்கிய காரணம் கட்டிட விதிமுறைகள் சரியாக பின்பற்ற தவறியதால்தான் ஏற்படுகிறது என்பது உண்மை நிலை.

நமது நகரங்களில் விதிகள் மீறிக் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள் தவிர அபாயகரமான நிலையில் பல பழைய கட்டிடங்கள் உள்ளன. இம்மாதிரி இடங்களில் ஆபத்து நிகழலாம் எந்நேரமும். எல்லாக் கட்டிடங்களிலும் அவசரகாலத்தில் மக்களை வெளியேற்றுவதற்கான திட்டம் வகுக்கப்படவேண்டும். எல்லா உயர்மாடிக் கட்டிடங்களிலும் வருடத்திற்கு இருமுறையாவது அவசரகால நடைமுறை பயிற்சி நடத்தப்பட்டு குடியிருப்போரை பாதுகாப்பாக வெறியேற்றும் முறை எல்லோருக்கும் பயிற்றுவிக்க வேண்டும். இது தவிர பேரிடர் ஆளுமை திட்டம் அந்தந்த இடத்திற்கு ஏற்றாற்போல் தயாரித்து அவசர காலத்தில் எவ்வாறு உயிர்சேதம் மற்றும் பொருள் அழிவிலிருந்து பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றி தெளிவான நடைமுறைகளை நிர்ணயித்து தொடர் பயிற்சியும் கொடுக்கப்பட வேண்டும்.

மூன்றாம் நிலை மாற்றுவழி பிரத்யேக பாதுகாப்பு திட்டம் அவசரகாலத்தில் வெகுவாக உயிர்சேதத்தையும் குறைக்கும். ஸ்கைலிப்ட் போன்ற உயரத்தில் ஏற்றக்கூடிய ஏணிகளைக் கொண்ட வாகனங்கள் ஆபத்தில் சிக்கிய மக்களை மீட்பதில் வெகுவாக உதவும். ஒரு நபரை மீட்பதற்கு சராசரி 5 நிமிட்ம் என்ற நிலையிலிருந்து மேம்பட்ட வெளியேற்ற சாதனங்கள் மூலம் ஒரு நிமிடத்தில் ஐம்பது நபர்கள் என்ற இலக்கை அடைய முடியாவிட்டாலும் வெளியேற்றும் நேரத்தை கணிசமாக குறைக்கலாம்.

தீயணைப்புத் துறையை மேம்படுத்த அமைக்கப்பட்ட கமிஷன் தனது பரிந்துரையில் பல நவீன உபகரணங்கள் கொள்முதல் செய்து தீயணைப்பு வீரர்களுக்கு காலத்திற்கு ஏற்றவாறு சவால்களை சமாளிக்க பயிற்சி அளிக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. உடல்வலிமை மனவலிமை அதனோடு தொழில்நுட்ப அறிவாற்றலும் நொடிப்பொழுதில் முடிவுஎடுக்கும் திறனும் பொருந்திய வல்லவர் தீயணைப்பு வீரர்.

ஜெய்ப்பூர் எண்ணெய் கிடங்கில் அக்டோபர் 2009-ல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது நினைவிருக்கலாம். இரண்டு பெரிய எண்ணெய் சேமிப்பு தொட்டி வெடித்து சிதறியது. பக்கத்து கிராமங்களில் உள்ள சுமார் 50,000 மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர். 15 கிலோமீட்டர் தொலைவில் அந்த தீ ஜுவாலையின் தாக்கம் உணரப்பட்டது. இந்த விபத்தில் 12 ஊழியர்கள் உயிரிழந்தனர். எரிவாயு மற்றும் எரிபொருள் நமது அன்றாட வாழ்க்கைக்கு அவசியம். அதேசமயம் அவற்றை பாதுகாப்பாக கையாளவேண்டும். தமிழகத்தில் 24 இடங்களில் பெட்ரோல், டீசல், காஸ் சேமிப்பு கிடங்குகள் உள்ளன. சேமிப்பு இடங்களில் பாதுகாப்பு, எரிபொருளை டாங்கர் லாரிகளில் எடுத்துச் செல்லும்போது கவனிக்க வேண்டியவை, வழியில் விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அசம்பாவிதத்தை தவிர்ப்பது, எண்ணெய் கசிவு ஏற்பட்டால் பாதுகாப்பது என்று பல்முனை நடவடிக்கைகளை தீயணைப்பு வீரர்கள் மேற்கொள்ள வேண்டும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தீ அபாயம் அதிகமாக ஏற்படக்கூடிய 17 இடங்கள் உள்ளன. இதில் எண்ணெய் சேமிப்பு கிடங்குகள், சென்னை பெட்ரோலியம் மற்றும் பல இரசாயன தொழிற்சாலைகளும் அடங்கும். இத்தகைய தொழிற்சாலைகளிலிருந்து நச்சுப் பொருள்கள் கசிவு ஏற்பட்டால் அதை கையாளுவதற்கு பிரத்யேக உபகரணங்கள் அடங்கிய வாகனம் வாங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கதிர்வீச்சு, நச்சுப் பொருட்களால் ஏற்படக்கூடிய பாதிப்பு இவற்றை எதிர்கொள்ள பிரத்யேக பயிற்சியும் தீயணைப்பு வீரர்களுக்கு கொடுக்கப்படுகிறது..

பேரிடர்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொருவரும் அவரது நிலையில் முயற்சி மேற்கொள்ள வேண்டும். நமது வீட்டிலோ அலுவலகத்திலோ சாதாரண நிலை என்ன என்பதை நன்கு தெரிந்து வைத்திருந்தால்தான் அசாதாரண மாற்றங்களை கவனிக்க முடியும். சிறு தீ விபத்து ஏற்பட்டாலும் அதனை புறக்கணிக்காது காரணங்களை ஆராய்ந்து இடர்களை களையவேண்டும். மின்கசிவினால்தான் எழுபது சதவிகித தீ விபத்துக்கள் ஏற்படுகின்றன. மின் இணைப்பு சந்திக்கும் இடத்தில் தீப்பொறி பரவ விடாமல் பாதுகாக்கும் கவசங்கள் பொருத்தப்படவேண்டும்.

பலதரப்பட்ட இடர்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முழுமையான விழிப்புணர்வு அவசியம்.

விதிகள் அனுசரிக்கப்பட வேண்டும். விதிகள் மிதிக்கப்பட்டால் கோபம் பத்திக் கொண்டு வரவேண்டும். விதிகள் மதிக்கப்பட்டால் ஆபத்து பற்றிவராது. விதிகளை கடைபிடித்து ஆரவாரமில்லாது வாழ்க்கையை நடத்தினால் ஆபத்தினை தவிர்க்கலாம். பேரிடர் தாக்கத்தைத் தணிக்கலாம்.

Article published in Dinamani on 07.10.2010