Friday, October 8, 2010

பற்றிப்படரும் ஆபத்து



ஆபத்து சொல்லி வருவதில்லை அவசர உலகில் வாழ்க்கை இயந்திரமாகிவிட்ட நிலையில் ஒவ்வொரு திருப்பத்திலும் அசம்பாவிதம் நிகழ காத்துக் கொண்டிருக்கிறது என்றால் மிகையில்லை. சில அசம்பாவிதங்கள் தவிர்க்கக்கூடியவை. நமது அஜாக்கிரதையால் நிகழும் அசம்பாவிதங்கள் பல. ஒரு புறம் மனிதனால் வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியால் தோற்றுவிக்கப்படும் வன்முறைகள். இயற்கை சீற்றங்களால் நேரிடும் இழப்புகள், விதிகளை பின்பற்றாததால் ஏற்படும் கட்டிட இடிபாடுகள், சாலைவிபத்து என்று எதிர்பாராத நிகழ்வுகளை வகைப்படுத்திச் சொல்லலாம்.

உலக நாடுகளில் அசம்பாவிதங்கள் அதிகமாக நிகழும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பேரிழப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க செயலாக்க திட்டம் வரைவது அத்தியாவசியம். சிவில் டிபென்ஸ் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைப்பு சீரமைத்து பேரிடர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அவர்களுக்கு உரிய பங்கினை அளிக்க வேண்டும். ஊர்க்காவல்படை மற்றும் இயல் பாதுகாப்புத் துறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையோடு இணைந்து ஒரு தலைமையில் செயல்படவேண்டும். இத்தகைய அமைப்பு ப்ல மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சேதாரங்களை தவிர்ப்பது மற்றும் சமாளிப்பது பற்றிய பயிற்சி அளித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைப்பினை திறம்பட அவசர காலங்களில் அரசு துறைகளுக்கு பக்கபலமாக ஈடுபடுத்தல் வேண்டும்.

2004 ம் ஆண்டு இந்திய துணைக்கண்டத்தை தாக்கிய சுனாமி பேரலை ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்டது. தமிழகத்தில் மட்டும் 7,995 நபர்கள் உயிரிழந்தனர். சென்னை நகரில் மாண்டவர் எண்ணிக்கை 206. குஜராத், மஉறாராஷ்டிரா மாநிலங்களை தாக்கிய பூகம்பங்கள் அதில் ஏற்பட்ட சேதாரங்கள், புயல் மழை வெள்ளம் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள், பல மாநிலங்களில் தீவிரவாத தாக்குதல்களால் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பங்கள் என்று பேரிடர்கள் பல மக்களை நிலைகுலைய செய்கின்றன. இம்மாதிரியான அசம்பாவிதங்கள் நிகழும் பொழுது எவ்வாறு அதை எதிர்கொள்ள வேண்டும், தனிப்பட்ட நபர் எடுக்க வேண்டிய பாதுகாப்பு முறைகள் என்ன, பணி இடங்களில் எவ்வாறு பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும், பல்வேறு அரசுத் துறைகள் இணைந்து தயாரிக்க வேண்டிய செயல்முறை திட்டங்கள் என இவையாவும் தெளிவான வகையில் எல்லோருக்கும் சென்றடைய வேண்டும். பயிற்சி முறைகள் வரையப்பட்டு அதில் எல்லோரும் பங்கு கொள்ள வேண்டும். பயிற்சியில் வியர்வை சிந்தினால் தான் களத்தில் ரத்தம் சிந்தலை தவிர்க்க முடியும்.

டைடானிக் ஆங்கிலப் படத்தில் அருமையான ஒரு காட்சி. கப்பல் பனிக்கட்டியில் இடிபட்டு முழுகப்போகிறது. கப்பலைக்கட்டியவர் டைட்டானிக் பாதுகாப்பான கப்பல் எந்த ஆபத்தையும் சமாளிக்க வல்லது என்ற தன்னம்பிக்கையில் அவசரகால தப்பிப்பதற்கான உபகரணங்கள் மற்றும் மீட்பதற்கான சிறிய படகுகள் அதிகம் வைக்கவில்லை. மீட்புப் படகுகள் குறைவான நிலையில் முதலில் பெண்களையும் குழந்தைகளையும் காப்பாற்ற முன்னுரிமை கொடுத்து சிறிய படகில் கடலில் இறக்க ஆயத்தம் செய்யப்படுகிறது. ஆனால் முண்டியடித்து காப்பாற்றிக் கொள்ள வசதிபடைத்தவர்கள் துடிப்பார்கள். அடித்தளத்தில் குறைந்த கட்டணம் கொடுத்து பிரயாணம் செய்த ஏழைகள் புறக்கணிக்கப்படுகின்றனர். கதவு அடைக்கப்படுகிறது. வசதி படைத்தவர்களும் முதலில் படகில் ஏறியவர்கள் மற்றவர்களை அனுமதிப்பதில்லை. அதிலும் வாட்டசாட்டமான ஆண்கள், வயோதிகர்களை தள்ளிவிட்டு தம்மை காப்பாற்றிக்கொள்ள முனைவார்கள். தான் பிழைத்தால் போதும் என்ற சுயநலம். ஆனால் சாதாரண மக்கள் தன்னலம் பாராது மற்றவர்களுக்கு உதவுவதும் சித்தரிக்கப்பட்டிருக்கும். பேரிடர் மற்றும் விபத்துக்கள் நிகழும் பொழுது இத்தகைய காட்சிகளைக் காணலாம். சமீபத்தில் தில்லியில் ஜம்மா மஸ்ஜித் அருகில் துப்பாக்கியால் சுட்டவரை தைரியமாக ஒரு சாதாரண ரிக்ஷாக்காரர் துரத்தியதால் பெரிய உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது, ஏழைகளின் தன்னலமற்ற செயலுக்கு உதாரணம்.

எந்த ஒரு விபத்து அல்லது பேரிடர் ஏற்பட்டால் முதல் காப்பாளராக சம்பவ இடத்திற்கு செல்வது தீயணைப்பு வீரர். ஆபத்து நேரத்தில் முந்திக் கொண்டு உதவும் மனோபாவம் படைத்த வீரர்களைக் கொண்டது தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை. மீட்புப் பணியில் முதலில் காப்பாற்றப்பட வேண்டியவர் வயோதிகர், பெண்கள், குழந்தைகள் மற்றும் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறன் படைத்தவர்கள். மக்கள் கூடும் பொது இடங்களில் அசம்பாவிதம் ஏற்படாமல் அந்த இடத்திலிருந்து மக்கள் வெளியேறுவதற்கு பாதுகாப்பான வெளியேற்ற பாதைகள் அமைப்பது கட்டிட உரிமையாளர் அல்லது பொது இடங்களை நிர்வகிக்கும் பொறுப்பாளரைச் சார்ந்தது.

ஒரு கட்டிடத்தில் ஆபத்தில் சிக்கியவர்களை ஒரு நிமிடத்தில் ஐம்பது நபர்களை வெளியேற்றுப்பாதை மூலமாக காப்பாற்றலாம் என்று சர்வதேச குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரச்சனை என்று வரும்பொழுது விதிகளைக் கடைபிடித்து வெளியேற்றுவது கடினம். இப்போது உயர்மாடிக் கட்டிடங்கள் பல வந்துவிட்டன. உதாரணத்திற்கு 10 மாடிக்கட்டிடம் கொண்ட குடியிருப்பு பகுதியில் சுமார் 1000 மக்களை விரிவான படி இறக்கத்தில் வெளியேற்றுவதற்கு குறைந்தபட்சம் 45 நிமிடம் ஆகும். அதுவே வியாபாரத்தளத்தில் அதிக மக்கள் புழங்குவதால் அவர்களை வெளியேற்றுவதற்கு மேலும் அதிக நேரம் பிடிக்கும்.

ஸ்டீபன் கோர்ட் கொல்கத்தாவில் இந்த வருடம் மார்ச் 23-ல் நடந்த தீ விபத்தில் 43 அப்பாவிகள் மாண்டனர். ஏழு மாடிகள் மட்டும் கொண்ட இந்த கட்டிடத்தில் உயிரிழப்பு அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். முதலில் உதவி அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதற்கு அரசுத் துறைகளை குறை கூறினாலும் இம்மாதிரி அசம்பாவிதங்களுக்கு முக்கிய காரணம் கட்டிட விதிமுறைகள் சரியாக பின்பற்ற தவறியதால்தான் ஏற்படுகிறது என்பது உண்மை நிலை.

நமது நகரங்களில் விதிகள் மீறிக் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள் தவிர அபாயகரமான நிலையில் பல பழைய கட்டிடங்கள் உள்ளன. இம்மாதிரி இடங்களில் ஆபத்து நிகழலாம் எந்நேரமும். எல்லாக் கட்டிடங்களிலும் அவசரகாலத்தில் மக்களை வெளியேற்றுவதற்கான திட்டம் வகுக்கப்படவேண்டும். எல்லா உயர்மாடிக் கட்டிடங்களிலும் வருடத்திற்கு இருமுறையாவது அவசரகால நடைமுறை பயிற்சி நடத்தப்பட்டு குடியிருப்போரை பாதுகாப்பாக வெறியேற்றும் முறை எல்லோருக்கும் பயிற்றுவிக்க வேண்டும். இது தவிர பேரிடர் ஆளுமை திட்டம் அந்தந்த இடத்திற்கு ஏற்றாற்போல் தயாரித்து அவசர காலத்தில் எவ்வாறு உயிர்சேதம் மற்றும் பொருள் அழிவிலிருந்து பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றி தெளிவான நடைமுறைகளை நிர்ணயித்து தொடர் பயிற்சியும் கொடுக்கப்பட வேண்டும்.

மூன்றாம் நிலை மாற்றுவழி பிரத்யேக பாதுகாப்பு திட்டம் அவசரகாலத்தில் வெகுவாக உயிர்சேதத்தையும் குறைக்கும். ஸ்கைலிப்ட் போன்ற உயரத்தில் ஏற்றக்கூடிய ஏணிகளைக் கொண்ட வாகனங்கள் ஆபத்தில் சிக்கிய மக்களை மீட்பதில் வெகுவாக உதவும். ஒரு நபரை மீட்பதற்கு சராசரி 5 நிமிட்ம் என்ற நிலையிலிருந்து மேம்பட்ட வெளியேற்ற சாதனங்கள் மூலம் ஒரு நிமிடத்தில் ஐம்பது நபர்கள் என்ற இலக்கை அடைய முடியாவிட்டாலும் வெளியேற்றும் நேரத்தை கணிசமாக குறைக்கலாம்.

தீயணைப்புத் துறையை மேம்படுத்த அமைக்கப்பட்ட கமிஷன் தனது பரிந்துரையில் பல நவீன உபகரணங்கள் கொள்முதல் செய்து தீயணைப்பு வீரர்களுக்கு காலத்திற்கு ஏற்றவாறு சவால்களை சமாளிக்க பயிற்சி அளிக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. உடல்வலிமை மனவலிமை அதனோடு தொழில்நுட்ப அறிவாற்றலும் நொடிப்பொழுதில் முடிவுஎடுக்கும் திறனும் பொருந்திய வல்லவர் தீயணைப்பு வீரர்.

ஜெய்ப்பூர் எண்ணெய் கிடங்கில் அக்டோபர் 2009-ல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது நினைவிருக்கலாம். இரண்டு பெரிய எண்ணெய் சேமிப்பு தொட்டி வெடித்து சிதறியது. பக்கத்து கிராமங்களில் உள்ள சுமார் 50,000 மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர். 15 கிலோமீட்டர் தொலைவில் அந்த தீ ஜுவாலையின் தாக்கம் உணரப்பட்டது. இந்த விபத்தில் 12 ஊழியர்கள் உயிரிழந்தனர். எரிவாயு மற்றும் எரிபொருள் நமது அன்றாட வாழ்க்கைக்கு அவசியம். அதேசமயம் அவற்றை பாதுகாப்பாக கையாளவேண்டும். தமிழகத்தில் 24 இடங்களில் பெட்ரோல், டீசல், காஸ் சேமிப்பு கிடங்குகள் உள்ளன. சேமிப்பு இடங்களில் பாதுகாப்பு, எரிபொருளை டாங்கர் லாரிகளில் எடுத்துச் செல்லும்போது கவனிக்க வேண்டியவை, வழியில் விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அசம்பாவிதத்தை தவிர்ப்பது, எண்ணெய் கசிவு ஏற்பட்டால் பாதுகாப்பது என்று பல்முனை நடவடிக்கைகளை தீயணைப்பு வீரர்கள் மேற்கொள்ள வேண்டும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தீ அபாயம் அதிகமாக ஏற்படக்கூடிய 17 இடங்கள் உள்ளன. இதில் எண்ணெய் சேமிப்பு கிடங்குகள், சென்னை பெட்ரோலியம் மற்றும் பல இரசாயன தொழிற்சாலைகளும் அடங்கும். இத்தகைய தொழிற்சாலைகளிலிருந்து நச்சுப் பொருள்கள் கசிவு ஏற்பட்டால் அதை கையாளுவதற்கு பிரத்யேக உபகரணங்கள் அடங்கிய வாகனம் வாங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கதிர்வீச்சு, நச்சுப் பொருட்களால் ஏற்படக்கூடிய பாதிப்பு இவற்றை எதிர்கொள்ள பிரத்யேக பயிற்சியும் தீயணைப்பு வீரர்களுக்கு கொடுக்கப்படுகிறது..

பேரிடர்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொருவரும் அவரது நிலையில் முயற்சி மேற்கொள்ள வேண்டும். நமது வீட்டிலோ அலுவலகத்திலோ சாதாரண நிலை என்ன என்பதை நன்கு தெரிந்து வைத்திருந்தால்தான் அசாதாரண மாற்றங்களை கவனிக்க முடியும். சிறு தீ விபத்து ஏற்பட்டாலும் அதனை புறக்கணிக்காது காரணங்களை ஆராய்ந்து இடர்களை களையவேண்டும். மின்கசிவினால்தான் எழுபது சதவிகித தீ விபத்துக்கள் ஏற்படுகின்றன. மின் இணைப்பு சந்திக்கும் இடத்தில் தீப்பொறி பரவ விடாமல் பாதுகாக்கும் கவசங்கள் பொருத்தப்படவேண்டும்.

பலதரப்பட்ட இடர்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முழுமையான விழிப்புணர்வு அவசியம்.

விதிகள் அனுசரிக்கப்பட வேண்டும். விதிகள் மிதிக்கப்பட்டால் கோபம் பத்திக் கொண்டு வரவேண்டும். விதிகள் மதிக்கப்பட்டால் ஆபத்து பற்றிவராது. விதிகளை கடைபிடித்து ஆரவாரமில்லாது வாழ்க்கையை நடத்தினால் ஆபத்தினை தவிர்க்கலாம். பேரிடர் தாக்கத்தைத் தணிக்கலாம்.

Article published in Dinamani on 07.10.2010

No comments: