இரும்பு மனிதர் என்று போற்றப்படுபவர் சர்தார் வல்லபாய் பட்டேல், குறுநில மன்னர்களும், ஜமீந்தார்களும் ஆட்சி செலுத்தி வந்த துண்டு துண்டாக இருந்த பகுதிகளை இணைத்து இந்திய தேசத்தை உருவாக்கிய பெருமை அவருக்கு உண்டு. சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் என்ற பொறுப்பில் இந்திய காவல்துறையை ஒருங்கிணைத்தார். இந்திய காவல் பணியில் சேரும் போலிஸ் அதிகாரிகள் பயிற்சி பெறும் ஐதராபாத்தில் அமைந்துள்ள உயர் பயிற்சி மையம் சர்தார் வல்லபபாய் பட்டேல் அவர்களின் புனிதப் பெயரை தாங்கியுள்ளது.
எளிமையான வாழ்க்கை, பாரபட்சமற்ற அப்பழுக்கற்ற தூய்மையான பொதுப்பணி என்று நேர்மையான கோட்பாடுகளை பின்பற்றிய உயர்ந்த மனிதர் சர்தார் வல்லபபாய் பட்டேல். வலிமையான மத்திய அரசு உருவாக்கத்திற்கு அடிகோலினார். அக்டோபர் 31ம் நாள் அன்னாரது பிறந்தநாள். ஊழல் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு அவரது பிறந்தநாளை முன்வைத்து அனுசரிக்கப்படுவது உகந்தப் பொருத்தம் என்பதில் ஐயமில்லை.
மத்திய விழிப்பாணையம் இந்த வருடம் ஊழலால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஊழலை ஒழிப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பைப் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. ஊழலில் வேரூன்றுவதற்கு இரண்டு காரணங்கள். எந்த ஒரு நடவடிக்கை என்றாலும் ஏதாவது ஒரு அரசுத் துறையை நாடவேண்டிய நிலை சுற்றிவளைத்து இடப்படும் அரசாணைகள், அரசுப் படிவங்களை படித்து புரிந்து கொள்வதற்கு தனி அறிவாற்றல் வேண்டும் என்றால் மிகையில்லை. இதைதான் ஒரு ஆளுமை நிபுணர் ‘நடைமுறை படிப்பாற்றல்’ என்கிறார். சாதாரணமாக எழுத படிக்க தெரிந்தவரை படித்தவர் என்ற கணக்கில் சேர்க்கிறோம். ஆனால் ‘நடைமுறைப் படிப்பாற்றல்’ பெற்றவர் இந்தியாவில் 30 சதவிகிதத்திற்கும் குறைவு என்று அளவிடலாம். இது ஒரு புறம் என்றால் நெளிவு சுளிவுகள் தெரிந்து சாதித்துக்கொள்பவர்கள் இருப்பதால் குறுக்குவழி தான் பிழைக்கும் வழி என்ற நிலை.
ஒரு நாட்டின் வெளிப்படையான நிர்வாகத் திறனை கணிக்கும் சர்வதேச நிறுவனம் 120 நாடுகளில் நடத்திய ஆய்வில் இந்திய 89-வது இடம் பெற்றுள்ளது. போன வருடத்தைவிட இந்த வருடம் இரண்டு இடம் குறைந்துள்ளது. சத்யம் நிறுவன ஊழல் மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நிர்வாகம் பற்றி எழுந்துள்ள சர்ச்சைகள் இந்த பின்னடைவிற்குக் காரணமாக கூறப்படுகிறது. சீனா 77வது இடம் இந்தியாவைவிட 10 இடங்கள் முன்னிலையில் உள்ளது.
எவ்வளவோ சிறந்த நலத்திட்டங்கள் அரசால் மக்கள் நலனுக்காக வகுக்கக்படுகின்றன. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் ஊழல் ஊடுருவலால் பாதிக்கப்படுபவர்கள் ஏழைமக்கள் தான். ஊழல் மக்கள் நலனுக்கு எதிரானது.
1993ம் வருடம் மும்பையில் தொடர் குண்டு வெடிப்பில் பல உயிர்கள் பலியாயின. வெடிப்பொருட்கள் மறைத்து கொண்டு வரப்பட்ட வாகனங்களை செக் போஸ்டுகளில் சரியாக தணிக்கை செய்யாததால் அவை சுலபமாக கயவர்கள் கைகளுக்கு சென்றடைந்தன என்பது விசாரணையில் வெளிவந்த உண்மை. தணிக்கை சாவடிகளில் நிலவும் ஊழல்களால் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் பாதிப்பு பயங்கரவாதம் ஊடுருவ துணைபோகிறது என்பது நெத்தியடி உண்மை. ஊழல் தேசிய பாதுகாப்பிற்கு விரோதமானது.
சுதந்திர இந்தியாவின் முதல் 30 ஆண்டுகள் ஒட்டுமொத்த வளர்ச்சி 3 சதவிகிதம் இருந்தது. தாராளமயமாக்கல், நவீன பொருளாதார அணுகுமுறைகளால் வளர்ச்சி 8 சதவிகிதத்தை தாண்டியுள்ளது. பொருளாதார வளர்ச்சியும், வெளிநாடுகளிலிருந்து வரும் முதலீடும் வெளிப்படையான ஊழலற்ற நிர்வாகம் நிலவினால் மேலும் பெருகும் ஊழல் பொருளாதார வளர்ச்சிக்கு தடைக்கல் என்பது தெளிவு.
உறாங்காங் என்ற சிறிய நகரம் இங்கிலர்ந்து நாட்டின் ஆளுகையில் இருந்தது. இப்போது சைனாவின் கைவசம். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் முகப்பில் அமைந்துள்ளதால் முக்கிய வணிக நகரமாக வளர்ந்துள்ளது. பலவருடங்களுக்கு முன் உறாங்காங் நகரத்தில் நிர்வாகம் நிலைகுலைந்து ஊழல் எல்லா இடங்களிலும் பரவி இருந்தது. இங்கு நிலையை சரிசெய்ய ஒருங்கிணைந்த ஊழல் அழிப்பு திட்டம் வகுக்கப்பட்டது. ஊழலில் உழல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை, ஊழல் தடுப்பு முறைகள் மற்றும் மக்களிடையே ஊழலை அழிப்பதற்கான விழிப்புணர்ச்சி ஏற்படுத்துதல் என்ற மும்முனை திட்டம் பாரபட்சமின்றி நடைமுறை படுத்தப்பட்டது. மக்கள் ஒத்துழைப்பு ஒருபுறம் நிர்வாக பொறுப்பிலுள்ளவர்களின் முழுஈடுபாடும் இந்த திட்டத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள். தனியார் துறையில் உள்ள ஊழலும் சட்ட விரோதமானது என்ற சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டு தவறு செய்யும் தனியார் நிறுவனங்கள் மற்றும் பெறுப்பில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது, உறாங்காங் வெற்றியின் மற்றொரு சிறப்பு அம்சம். கடுமையான தண்டனை சட்ட ஏடுகளில் இருந்தால் மட்டும் போதாது அவை நடைமுறைக்கு வரவேண்டும். ‘தகுந்த தண்டனை உரிய நேரத்தில்’ என்ற நிலைதான் குற்றங்களை கட்டுப்படுத்த உதவும்.
ஐக்கிய நாடுகள் சபை புத்தாயிரம் துவக்கத்தில் அடுத்த 15 ஆண்டுகளில் அதாவது 2015-ற்குள் நிறைவேற்றப்படவேண்டிய இலக்குகளை நிர்ணயித்துள்ளது. வறுமை ஒழிப்பு, எல்லோருக்கும் வீட்டு வசதி, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, மனிதஉரிமைகளுக்கு முக்கியத்துவம் என்ற இலக்குகளை அடைவத்ற்கான முயற்சிகளை எல்லா நாடுகளும் எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் இந்த இலக்குகள் அடைவதற்கு முட்டுக்கட்டையாக இருப்பது ஊழல் ஒன்றுதான் என்று குறிப்பிட்டு அதனைக் களைய எல்லா நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என்று ஐக்கியநாடுகள் சபை அறிவுறுத்தியுள்ளது.
ஊழலில் லஞ்சம் கொடுப்பவர், லஞ்சம் வாங்குபவர் இருவருக்கும் பங்கு உண்டு. சட்டம் லஞ்சம் வாங்குபவரை குறிவைக்கிறது ஆனால் லஞ்சம் கொடுப்பவரும் ஊழல் தழைப்பதற்கு காரணம் என்பதை மறுக்கமுடியாது. இதனைக் கருத்தில் கொண்டுதான் லஞ்சம் கொடுப்பவரையும் சட்டப்பிடியில் கொண்டுவருவதற்கு திருத்தங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய விஜிலன்ஸ் கமிஷன் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
ஊழலை ஒழிப்பதற்கு அரசுத் துறையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவ்வப்போது அளவிடக்கூடிய முறைகள் பற்றியும் விஜிலன்ஸ் கமிஷன் விளக்கியுள்ளது. விழிப்புத் துறையின் பணிகள் ஒரு துறையை சிறப்பாக இயக்க உதவ வேண்டும். தண்டனை மற்றும் தடுப்பு முறைகள் லஞ்ச ஒழிப்பில் முக்கியம் என்றாலும் நேர்மைக்கும், உண்மையான உழைப்பிற்கும் உரிய கௌரவம் கொடுத்தால்தான் துறையின் மேலாண்மை உயரும். விதிமுறைகளை சுலபமாக்குதல் மற்றுமொரு முக்கிய நடவடிக்கை.
விதிகளும், அலுவலக நிபந்தனைகளும் நிர்வாகம் பாரபட்சமின்றி இயங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு பணியை செய்ய முடியாது என்பதற்கு காரண காரியங்கள் ஆராயப்படுகின்றன. விதிகளை மேற்கோள் காட்டி தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. இதற்கு முன் செய்ததுண்டா இல்லையெனில் மாற்றம் தேவையில்லை என்று ஆணையிடப்படுகிறது. “முன்மாதிரியை தேடாதே முன் மாதிரியை உருவாக்கும் முன்னோடியாக இரு” என்று மக்களுக்கு உதவும் வகையில் விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டும். சமயத்திற்கு தகுந்தாற்போல், சம்பந்தப்பட்ட பயனாளியைப் பொறுத்து விதிகள் நடைமுறைப்படுத்தலும் நிர்வாகத்தில் தவிர்க்கப்பட வேண்டும்.
Transparency in Tenders (ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டம்) சட்டம் இயற்றப்பட்டு பொருட்கள் கொள்முதல் செய்வதில் பல வரவேற்கத்தக்க மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இணையதளம், நேர்முக விவாதங்கள் மூலம் வெகுவாக டெண்டர்களில் பங்குபெறும் நிறுவனங்களின் சந்தேகங்களை போக்கலாம். டெண்டரில் பங்குபெறும் நிறுவனங்களுக்கு, மற்றவர்கள் டெண்டரில் வெற்றி பெறுவதற்கு முறைகேடுகளில் ஈடுபடுவார்களோ என்ற சந்தேகம் இருக்கும். இந்த சந்தேக சாபக்கேட்டினைப் போக்குவதற்கு ஒரே வழி வெளிப்படையான நேர்மையான அணுகுமுறை மற்றும் நடைமுறை.
ஊழலைப் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கு உரிய ஆணைகள், மத்திய அரசின் பணியாளர்கள் மற்றும் மக்கள் குறைகள் இலாகா மூலம் 2004ல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர், முறைகேடுகள் பற்றிய தகவல் நேராகவோ, மறைமுகமாகவோ அளிக்கலாம். அதன் அடிப்படையில் மத்திய விஜிலென்ஸ் கமிஷனுக்கு விசாரணை மேற்கொள்ளும். உண்மை வெளிவரும் பட்சத்தில் நேரடியாக வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ள ஆணையிடலாம். தகவல் கொடுப்பவருக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு முழுஅதிகாரம் விஜிலென்ஸ் கமிஷனுக்கு உள்ளது. விளையாட்டுப் போட்டிகளில் தவறு நேர்ந்தாலோ விதிகள் மீறப்பட்டாலோ, நடுவர் விசில் மூலம் ஒலி எழுப்பி விளையாட்டை நிறுத்தி ஒழுங்கான முறையில் விளையாட்டு தொடர வழிசெய்வார். அதேபோல் ஊழல் பற்றி தகவல் கொடுப்பவரும் ஒரு விதத்தில் நடுவராக இருந்து முறைகேடுகளை நிவர்த்தி செய்வதில் உதவுகிறார் என்பதால் அவர் ஒலி எழுப்பி எச்சரிக்கும் நடுவராக அங்கீகரிக்கப்பட்டு அவருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாகியும் ஊழலிருந்து சமுதாயத்திற்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. மேலை நாடுகளில் முக்கியமாக ஐரோப்பிய நாடுகளில் ஊழல் ஒழிப்பில் வெற்றி கண்டுள்ளார்கள். அதற்கு முக்கிய காரணம் பொதுமக்களின் ஒத்துழைப்பும் ஊழலுக்கு இணங்காத துணைபோகாத நிலைப்பாடும் தான் என்பது நம்மை சிந்திக்க வைக்கவேண்டும். ஒரு சாதாரண போக்குவரத்து விதிமீறினால் அபராதம் கட்டாமல் யாரை அணுகி சரிசெய்யலாம் என்று யோசிக்கிறோம் அல்லது பணியில் இருக்கும் காவலருக்கு ஏதாவது கொடுத்துவிட்டு சென்றுவிடலாம் என்று முயற்சிக்கிறோம். இவ்வாறு தான் ஊழல் பரவி வளர்கிறது.
ஊழலை ஒழிப்பது நம்கையில். அனைவரும் ஒருங்கிணைந்து எதிர்த்தால் நிச்சயமாக நாம் எதிர்பார்க்கும் ஊழலற்ற சமுதாயம் உருவாகும்.
ஊழலுக்கு துணைபோவது விழலுக்கு நீர்பாய்ச்சுவதைவிட கொடியது. ‘விழலுக்கு நீர்பாய்ச்சி மாய மாட்டோம்’ என்று பெருமைபாடிய மகாகவியின் கனவு மெய்ப்படவேண்டும்.
No comments:
Post a Comment