Wednesday, November 24, 2010

எப்படி மாய்ந்தனரோ


பயங்கர குற்றவாளிகளை என்கவுண்டர் என்று சொல்லப்படும் எதிர்மறை தாக்குதலில் சுட்டு வீழ்த்துவது மீண்டும் மக்கள் மத்தியில் சர்ச்சைக்கு வந்துள்ளது. கோயமுத்தூரில் முஸ்கின், ரித்திக் என்ற இரு குழந்தைகளை கடத்திச்சென்று கொல்லப்பட்ட நிகழ்ச்சி எல்லோர் நெஞ்சையும் உறையவைத்தது. என்ன பாவம் செய்தார்கள் அந்த அப்பாவி குழந்தைகள் இத்தகைய கோர முடிவு ஏற்படுவதற்கு? சாதாரணமாக எடுக்கக்கூடிய முன்ஜாக்கிரதை நடவடிக்கைகளை எடுக்கத்தான் செய்தனர் குழந்தைகளது பெற்றோர்கள். தமது குழந்தைகளுக்கு எல்லா வசதிகளையும் கொடுக்க வேண்டும் என்று பெற்றவர்கள் நினைப்பதில் தவறில்லை. நல்லப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்றால் அது வீட்டின் அருகில் இருப்பதில்லை. வசதிக்கு ஏற்றவாறு சைக்கிள் ரிக்.ஷா, ஆட்டோ, தனியார் வேன் அல்லது சொந்தக் காரில் அனுப்ப வேண்டும். இவ்வாறு தான் எல்லா நகரங்களிலும் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று திரும்புவது பெரும்பாடாகி விட்டது.

தூக்கு தண்டனை மிக அரிதான வழங்குகளில் குற்றத்தின் தன்மையைப் பொறுத்தும், கிடைத்த சந்தேகமற்ற சான்றாவணங்களின் அடிப்படையிலும் அளிக்கப்படுகிறது. பல சிக்கல்களுக்கிடையில் நடந்த குற்றத்தில் வெற்றிகரமாக புலன் விசாரணை செய்து உரிய தண்டனை வழங்கப்பெற்ற பிறகும் நிறைவேற்றுவதில் தடங்கலும், சிக்கலும் இருப்பதால் குற்ற ஆளுமையில் நம்பிக்கை குறையும் நிலை ஏற்படுகிறது. சமீபத்தில் சேலத்தில் ஒரு சிறுமியை கற்பழித்து கொன்ற வழக்கில் தூக்குத் தண்டனை உச்சநீதிமன்ற முறையீட்டில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சம்பவம் நிகழ்ந்தது பிப்ரவரி 2009ம் வருடம். தண்டனை மார்ச் 2010ம் வருடத்தில் வழங்கப்பட்டது. தமிழகத்தில் 16 வழக்குகளில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.

குறைவான சக்தியைதான் காவல்துறை எதிரிமீது பிரயோகிக்க முடியும் என்பது சட்டம். இந்நிலையில் சந்தேகம் வரும் வகையில் பல நிகழ்வுகளில் என்கவுண்டர் முறையை பின்பற்றுவது அபாயகரமானது. கொடுங்குற்றங்கள் நிகழும்பொழுது சில சமயம் மக்கள் மத்தியில் என்கவுண்டர் முறைக்கு ஆதரவு இருக்கலாம். அதற்காக கொடுங்குற்றவாளிகளின் கதையை அவ்வாறு முடிப்பது சர்ச்சைக்குரியது. நடந்த சம்பவத்திற்கு தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்ட காவல்துறை ஆளினர்கள் பதில் அளிக்க நேரிடும். கேரள மாநிலத்தில் நக்சலைட் என்ற சந்தேகத்தில் விசாரிக்கப்பட்ட வர்கீஸ் என்ற இளைஞர் காவல் பிடியில் உயிரிழந்த வழக்கில் ஓய்வு பெற்ற 75 வயது நிரம்பிய காவல்துறை ஐ.ஜி திரு லஷ்மணன் குற்றவாளி என்று கேரள உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கியதில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த காவல்பிடி மரணம் ஏற்பட்டது. ஆனால் என்கவுண்டரில் பங்கு பெற்ற ஒரு காவலரின் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் சி.பி.ஐ புலனாய்வு செய்து குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது எல்லா காவல்துறை ஆளினர்களையும் சிந்திக்க வைக்க வேண்டும்.

குற்றங்களின் தன்மையைப் பொறுத்து குற்ற நிகழ்வுகள் மக்களால் உணரப்படுகிறது. எங்கு ஒரு குற்றம் நடந்தாலும் அந்த செய்தி தொலைக்காட்சி மூலம் பரவி விடுகிறது. ஒரு விதத்தில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியதை உணர்த்தினாலும் மற்றொரு பக்கம் இது பீதியை கிளப்பிவிடுகிறது என்பது உண்மை.

1978ம் வருடம் ஆகஸ்ட் 26ம் நாள் கோயமுத்தூர் சம்பவம் போலவே தில்லி புத்தாபார்க் அருகில் சஞ்சய், கீதா என்ற சோப்ரா தம்பதியரின் குழந்தைகள் பள்ளியிலிருந்து திரும்பும்பொழுது பில்லா, ரங்கா என்ற இரு கொடியர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டது இந்திய மக்களை உலுக்கியது. இந்த வழக்கில் புலன் விசாரணை செய்யப்பட்டு குற்றவாளிகள் இருவருக்கும் தூக்கு தண்டனை 1982-ல் நிறைவேற்றப்பட்டது. குற்றவியல் ஆளுமை சிறப்பாக செயல்பட்டதால் மக்கள் மதிப்பைப் பெற்றது.

இந்தியாவில் வருடத்திற்கு சராசரி 20,000 கற்பழிப்பு சம்பவங்கள் நிகழ்கின்றன. 2008ம் ஆண்டு 21,467 கற்பழிப்பு வழக்குகள் பதியப்பட்டன. அவற்றில் தில்லியில் 396 கற்பழிப்பு சம்பவங்கள், சென்னையில் 35, மும்பையில் 218 நிகழ்வுகள். இதில் தண்டனையில் முடிவுற்ற வழக்குகள் 26 சதவிகிதம் தான். கற்பழிப்பு குற்றத்திற்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என்று சட்டதிருத்தம் அமலில் வந்தால் தண்டனையில் முடிவுறும் வழக்குகள் மேலும் குறையும்.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகிவருவது கவலை தருவதாக உள்ளது. 2008ம் ஆண்டு மொத்த குற்றங்கள் 22,500 அதில் தமிழகத்தில் 666 குற்றங்கள் பதிவாகியுள்ளன. குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்துவது, கட்டாய வேலைக்காக கடத்தப்படுவது, பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்துவது போன்றவை குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் அடங்கும். பதினான்கு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாய கல்வி அளிக்க வேண்டும் என்பது அடிப்படை உரிமை என்று சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. எல்லோருக்கும் கல்வி என்பது எந்த அளவிற்கு நடைமுறையில் உள்ளது என்று பார்க்க வேண்டும். எவ்வளவோ இல்லங்களில் குழந்தைகள் வீட்டுவேலையில் அமர்த்தப்படுகிறார்கள். கண்டும் காணாது ஏதோ நாம் அவர்களின் ஜீவனத்திற்கு உதவுகிறோம் என்று இந்த கொடுமைக்கு காரணம் காட்டுகிறோம். அந்த பச்சிளம் குழந்தைகளின் பிள்ளை பிராயம் நசுக்கப்படுகிறது என்ற உண்மையை கவனிக்க மறுக்கிறோம்.

எவ்வாறு குழந்தைகளை கடத்துவதற்கும், அதைவிட கொடுமை அவர்களை களங்கப்படுத்துவதற்கும் மனம் வருகிறது? இந்தக் கொடூர நிகழ்வுகளுக்குக் காரணம் என்ன? குழந்தைகளை பெற்றெடுத்து பராமரிப்பது மிகப்பெரிய பொறுப்பு. மேலை நாடுகளில் வருங்காலப் பெற்றோர்களுக்கு குழந்தைகள் பராமரிப்பு பற்றி வகுப்புகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அவர்கள் பொறுப்பு ஏற்க தயார் செய்யப்படுகின்றனர். அவசர உலகில் பல்வேறு கவன ஈர்ப்புகளின் ஊடுருவலால் குழந்தைகளை கவனிக்க நேரம் ஒதுக்கப்படுவதில்லை. பல்வேறு இல்லங்களில் குழந்தைகள் வீடுதிரும்பும் பொழுது வேலையாட்களைத் தவிர மற்ற பெரியோர்கள் இருப்பதில்லை. ஏனெனில் திருமணம் முடிந்த கையோடு தனிக்குடித்தனம் சென்று விடுகின்றனர். பொருள் ஈட்டுவதற்கு கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம். வாகன ஓட்டுனர்களையும் மற்ற உதவியாளர்களையும் நம்பியிருக்க வேண்டிய நிலை. அவர்களது பொறுப்பில் குழந்தைகள் விடப்படுகின்றனர்.

வேலைக்கு ஒருவரை அமர்த்துவதற்கு முன் ஓரளவாவது அவரது பின்னணி தணிக்கை செய்யப்படவேண்டும். அரசு வேலை அல்லது தனியார் நிறுவனங்களில் பணியமர்த்துவதற்கு முன்னர் அவரது நன்னடத்தை ஆராயப்பட்டு சான்றிதழ் பெறப்படுகிறது. ஆனால் நமது இல்லங்களில் வேலைக்கு வைப்பவரின் பின்னணி ஆராயப்படுவதில்லை. நண்பர்கள் அல்லது உறவினர்கள் மூலம் அவசர அவசரமாக ஒருவரை வேலைக்கு அமர்த்திவிடுகிறோம். பின்னால் அவரது மோசமான நடவடிக்கை வெளிச்சத்திற்கு வரும்பொழுது வருத்தப்பட்டு பயனில்லை.

பல இல்லங்களில் பெரியோர்கள் இல்லாத நேரத்தில் குழந்தைகள் வீட்டு உதவியாளர்களோடு சேர்ந்து தொலைக்காட்சி பார்க்கின்றனர். இரவு நேரங்களில் எந்தமாதிரியான நிகழ்ச்சிகள் வருகின்றன என்பது கண்கூடு. மிட்நைட் மசாலாவாக துவங்கி விரச காட்கள் இப்போது பட்டப் பகலுக்கு வந்துவிட்டது. இளம் உதவியாளர்கள் ஓய்வு நேரங்களில் எஜமானர் வீட்டிலேயே உட்கார்ந்து இத்தகைய காட்சிகளைக் கண்டு களிப்பது சகஜமாகிவிட்டது. இப்போது சின்னஞ்சிறு குழந்தைகளை ஆடவிடுகிறார்கள். அதுவும் இரட்டை அர்த்தம் கொண்ட பாடல்களுக்கு வேண்டாத உடல் அசைவுகளோடு. திரும்ப திரும்ப விரச காட்சிகளைக் கண்ட மயக்கத்தில் வீட்டு உதவியாளர்கள் குழந்தைகளை பாதுகாக்க வேண்டியவர்கள் எந்த பார்வையில் அவர்களை பார்ப்பார்கள் என்று யூகிக்கலாம். எலக்ட்ரானிக் ஊடகங்களின் பாதிப்பு சில அசம்பாவிதங்களுக்கு மறைமுகமாக காரணமாகிவிடுகின்றன என்பது உண்மை. சமீபத்தில் ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சி தொடரில் பார்க்ககூடாத காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன என்பதால் அந்த தொடர் இரவு பதினோரு மணிக்கு மேல் காண்பிக்கப்படவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சின்னத்திரையைப் பொறுத்தவரை சுயகட்டுப்பாட்டோடு சமுதாய நலன் கருதி ஒளிபரப்பு மேற்கொள்ளும் நிலை வர வேண்டும்.

பல இல்லங்களில் பிற மாநிலங்களிலிருந்து தமிழ் தெரியாத இளைஞர்கள் வீட்டு வேலைக்கும் உதவிக்கும் அமர்த்தப்படுகின்றனர். என்ன காரணமோ சோம்பலில் சுகம் காணும் உள்ளூர் வாசிகள் வேலைக்கு வருவதில்லை. வெளிமாநிலத்தவரின் முகாந்திரம் என்ன என்று கூட ஆய்வு செய்வதில்லை. வேலையாட்கள் மீது நம்பிக்கை வைத்தால் தான் அவர்கள் விசுவாசமாக இருப்பார்கள் என்பது உண்மையானாலும் மேற்பார்வையே இல்லாமல் முழுமையாக நம்புவது விபரீதத்தில் முடியும்.

ஒரு குற்றம் புரிந்தால் உறுதியாக தண்டனை கிடைக்கும், சட்டம் நம்மை விடாது என்ற பயம் இருக்க வேண்டும். சட்டம் இயற்றுகையில் குற்றத்தின் விகாரம் மற்றும் மக்கள் எதிர்பார்ப்பை வைத்து கடுமையான தண்டனை நிர்ணயிக்கப்படுகிறது. கற்பழிப்பு சம்பவங்களின் கொடூரம் அதிகமாக உணரப்பட்டதால் கற்பழிப்பு குற்றத்திற்கு மரண தண்டனை என்ற மாற்றம் விவாதத்தில் உள்ளது. அதிகபட்ச தண்டனை அவசியம் தான். ஆனால் விரைவான உறுதியான தண்டனைதான் குற்றங்களை கட்டுப்படுத்தும்.

சட்டம் ஒழுங்கை பாரபட்சமின்றி நிலைநாட்டுவது காவல் நிலைய அதிகாரிகளின் தலையாய கடமை. காவல்துறையின் அடிப்படை பணிகளான குற்றங்கள் நடவாமல் தடுப்பது, நடந்த குற்றங்களை கண்டு பிடித்தல், அமைதி காக்க தகவல் சேகரிப்பது, இவை சரிவர நிறைவேற்றப்படாவிட்டால் குற்றங்கள் பெருகும். இப்பணிகளை நிறைவு செய்ய காவல் நிலையங்களை பலப்படுத்த வேண்டும். காவல்நிலைய அதிகாரிகள் தமது சரகத்தில் எந்த ஒரு போக்கிரியும் வாலாட்ட முடியாது என்று பெருமை கொள்ள வேண்டும். அத்தகைய தன்மானம் போற்றும் அதிகாரிகள் இருக்கிறார்கள். காவல்துறை அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டால் கொடுங்குற்றங்கள் நிகழ வாய்ப்பில்லை. பிரச்சனையை வளரவிடாமல் முதலிலேயே கிள்ளி எறிய வேண்டும். வளர விட்டுவிட்டு துண்டை காணோம் துணியைக் காணோம் என்று ஓடி என்ன பயன். சட்டங்களை அமல் படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் காவல்துறை மக்களின் ஒத்துழைப்பை பெற்றால்தான் பணியில் சிறப்பு எய்த முடியும். குற்றத்தடுப்பு நடவடிக்கையை மையமாக குறிவைத்தால் துப்பாக்கியால் எதிரிகளை குறிவைக்கும் நிலைவராது.

The Article published in the Newspaper Dinamani on 24.11.2010

No comments: