Tuesday, February 3, 2009

பலப்படுமா புலன் விசாரணை?


காவல்துறையில் முக்கியமானதும் கடினமானது என்று கருதப்படுவது குற்றப்புலனாய்வு. ஸ்காட்லேண்டு யார்ட் என்ற லண்டன் போலீஸின் புலனாய்வுப்பிரிவு பல நுணுக்கமான வழக்குகளை திறமையாக கண்டுபிடித்ததால் உலக காவல்துறை அமைப்புகளில் பிரதானமானதாகவும், முன்னோடியாகவும் விளங்குகிறது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ தேர்தல் பிரசாரத்தின்போது தீவிரவாதிகள் தாக்குதலில் உயிர் இழந்த நிகழ்வில் ஸ்காட்லாண்ட் யார்ட் நிபுணர்கள் புலன் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். பாரபட்சமின்றி ஒரு குற்ற நிகழ்வில் குற்றவாளிகள் புலப்படும் வரை ஓயமாட்டார்கள் என்று பெயர் எடுத்தவர்கள்.

வளர்ந்து வரும் சமுதாயத்தில் பொது அமைதியை குலைக்கும் விதத்தில் பல பிரச்சனைகள் உருவாகின்றன. சமுக விரோதிகளும் பல புதிய யுக்திகளை கையாண்டு காவல்துறை அமைப்புகளுக்கு சவாலாக விஸ்வரூபம் எடுத்துள்ளனர். குற்றவாளிகள் சட்ட மீறலில் ஒரு படி மேலேயும் ஒரு படி கீழே போலீஸ் என்ற நிலை இருப்பதை காண்கிறோம்.

இந்திய அரசியல் சாசனப்படி சட்டம் ஒழுங்கு மாநில அரசின் ஆளுகைக்குள் உள்ளது. மாநிலங்களில் அமைதியை காப்பதும் வழக்கு புலன் விசாரணை செய்வதும் மாநில காவல்துறையின் பொறுப்பு. மாநில அரசின் கட்டுபாட்டுக்குள் அந்தந்த காவல்துறை இயங்குகிறது. சி.பி.ஐ எனப்படும் மத்தியப் புலனாய்வுப் பிரிவு மத்திய அரசு ஊழியர்கள் மீதான ஊழல் குற்றச்சட்டுகளை விசாரிப்பதற்கும், கலாச்சாரப் பொருட்கள் திருட்டு வழக்குகளிலும், பல மாநிலங்களில் விசாரணை செய்ய வேண்டிய நிர்பந்தம் உள்ள வழக்குகளிலும் புலனாய்வை மேற் கொள்கிறது. மாநில அரசின் சம்மதத்தின் பேரில் மாநில அரசுகளால் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்ட வழக்குகள், மேலும் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் விசாரணைக்காக உத்தரவிடும் வழக்குகளிலும் சிபிஐ புலனாய்வை மேற்கொள்கிறது. ஃபெடரல் குற்றங்கள் என்று மத்திய புலனாய்வுத்துறை பிரத்யேகமாக மேற்கொள்ள வேண்டிய வழக்குகள் என்று குற்றங்கள் வரையறுக்கப்படவில்லை. அமெரிக்காவில் எஃப்.பி.ஐ எனப்படும் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொள்ள வேண்டிய வழக்குகள் என்று திட்டவட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் பல குற்ற நிகழ்வுகளில் எஃப்.பி.ஐ அமெரிக்க ஐக்கிய மாநில காவல் துறைக்கு புலனாய்வில் உதவி செய்து குற்றவாளிகளை பிடிப்பதற்கு வழி செய்கிறது. அம்மாதிரியான நிலை இந்திய அமைப்பில் இல்லை.

குற்ற நிகழ்வு எத்தன்மை உடையதாக இருந்தாலும் உள்ளூர் காவல்துறை விசாரணைக்கும், மாநில சிபிசிஐடி விசாரணைக்கும், அதற்கும் மேலாக மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவின் ஒருங்கிணைந்த புலனாய்வுக்கும் விசாரணயின் தரத்தை பொறுத்தவரையில் வித்தியாசம் இருக்கும் என்பதை எவரும் மறுக்க முடியாது. அதனால்தான் மக்கள் கவனத்தை ஈர்க்கும் பரபரப்பான வழக்குகளிலும், அரசியல் சம்பந்தப்பட்ட வழக்குகளிலும் உயர் புலன் விசாரணைக்கான கோரிக்கை எழுப்பப்படுகிறது. சமீபத்தில் உத்திர பிரதேசத்தில் பொதுப்பணித்துறை பொறியாளர் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்ற ஆர்ப்பாட்டம் நிகழ்ந்தது நினைவிருக்கலாம். ஏன் உள்ளூர் காவல்துறையினர் வழக்குகளை விசாரிக்க முடியாதா? சட்டப்படி விசாரிக்க முடியும். அவர்களுக்கு தகுதியும் இருக்கலாம். ஆனால் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்குவதால் குறுக்கீடு இருக்கும் என்ற ஒரு காரணம். நல்லது கெட்டது எல்லாவற்றிற்கும் உள்ளூர் காவல்துறை அந்த சரக சமுதாயத்தை சார்ந்து பணிபுரிய வேண்டியுள்ளதால் முக்கிய வழக்குகளில் பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்படுமா என்ற சந்தேகம், மற்ற சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளையும் உள்ளூர் போலீஸார் சமாளிக்க வேண்டியுள்ள நிலையில் முக்கிய வழக்குகளில் தங்கு தடையின்றி முழுக் கவனம் செலுத்த முடியுமா என்ற கேள்விக்குறி, போன்ற பல காரணங்கள் உள்ளன.

பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் பிரத்யேக விசாரணைக் குழுவால்தான் நேர்மையான, துரிதமான புலன் விசாரண மேற்கொள்ள முடியும். வளர்ந்துவரும் பயங்கரவாத தாக்குதல்களினால் ஒவ்வொரு மாநிலமும் எஸ்.ஐ.டி என்ற பிரத்யேக விசாரணை குழுவினை அமைத்து இத்தகைய வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. இந்த விசாரணைக் குழுக்கள் ஓரளவுதான் பயங்கரவாதத்தை ஒடுக்க வெற்றி கண்டுள்ளனர் என்பது தொடர்ந்து வரும் பயங்கரவாத நிகழ்வுகள் உணர்த்துகின்றன. பல மாநிலங்களில் ஊடுருவி திட்டமிட்டு நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்களை முழுமையாக விசாரிக்க மத்திய அளவில் அமெரிக்க ஃபெடரல் குற்றப்பிரிவு போல் ஒரு புலனாய்வு குழுமம் அமைக்க வேண்டும் என்ற கட்டாயம் 26/11 மும்பாய் தாக்குதலுக்குப் பிறகு எழுந்துள்ளது.


பயங்கரவாத சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை விசாரிக்க நடைமுறையில் உள்ள சட்டங்களும், குற்றவியல் முறையும் போதுமானதல்ல. ஆனால் பிரத்யேகமாக இயற்றப்பட்ட சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டன என்ற சர்ச்சை 1980-ல் பஞ்சாப் மாநில தீவிரவாதத்திலிருந்து தொடர்ந்து முடிவில்லாமல் விவாதிக்கப்பபடுகிறது. ஸ்ரீபெரும்புதூர் குண்டுவெடிப்பு, பாபர் மஸ்ஜித் நிகழ்வுக்குப் பிறகு நடந்த வன்முறைகள், தொடர்ந்து முக்கிய நகரங்களில் நிகழ்ந்துள்ள குண்டுவெடிப்புகள், அதனால் ஏற்பட்ட உயிர்சேதங்கள் நம்மை விழிப்படையச் செய்யவில்லை. தடா, பொடா போன்ற சட்டங்கள் இத்தகைய சர்ச்சைகளுக்குள்ளாகி காலாவதியாக்கப்பட்டது. இத்தகைய சர்ச்சைக்கு காவல்துறையும் ஒரு விதத்தில் பொறுப்பு. குற்றவாளிகள் காவல்துறையினரிடம் கொடுக்கும் ஒப்புதல் வாக்குமூலம் இந்திய சாட்சிய சட்டப்படி ஏற்கப்படமாட்டாது. ஆனால் தடா, பொடா சட்டங்களில் இதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்ட நிலையில் அவை தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றும், உண்மைக்கு புறம்பான ஒப்புதல் வாக்குமூலம் வரையப்பட்டது போன்ற குற்றச்சாட்டுக்கள் பரவலாக எழுந்தது. ஆனால் இதற்கு விதிவிலக்காக, தமிழக காவல்துறை, திறமையாகவும், நேர்மையாகவும் புலனாய்வு மேற்கொள்ள முடியும் என்பதை கோயம்புத்தூர் தொடர் குண்டு வெடிப்பு வழக்குகள் போன்ற வழக்குகளில் நிரூபித்தது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பின்னணியில் தேசிய புலனாய்வு குழுமம் - நேஷனல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி (என்.ஐ.ஏ) உருவாக்கும் சட்டம் சமீபத்தில் முடிவடைந்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. பயங்கரவாத குற்றங்களை வரையறுக்கும் முகமாகவும், குற்ற விசாரணையை வழிவகுக்கும் சட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. தடா, பொடாவில் உள்ள பல ஷரத்துக்கள் இந்த சட்டத்தோடு ஒன்றியிருந்தாலும், காவல்துறையினரிடம் கொடுக்கும் ஒப்புதல் வாக்குமூலத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்படாதவிதத்தில் இந்த சட்டம் மாறுபட்டுள்ளது. மதசார்பின்மைவாதிகளுக்கு இது ஓரளவு திருப்தி அளிக்கலாம். மற்றபடி விசாரணையினை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கலுக்கான அவகாசம் தொண்ணூறு நாட்களிலிருந்து 180 நாட்களாக உயர்த்தப்பட்டு அதுவரை குற்றம் சாட்டப்பட்டவர் காவலில் வைக்க சட்டத்தில் இடமுண்டு. காவல்துறை வசம், குற்றவாளிகள் விசாரணைக்கு ஒப்படைக்கும் நாட்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையாக “சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் சட்டமும்” அமலுக்கு வந்துள்ளது.
பயங்கரவாத தாக்குதல் நாட்டில் எந்தப் பகுதியில் நடந்தாலும் மத்திய அரசு என்.ஐ.ஏ மூலமாக வழக்குகளை விசாரணை செய்ய அதிகாரம் உண்டு. நாட்டின் இறையாண்மைக்கு எதிரான நடவடிக்கைகள், குண்டுவெடிப்பு சம்பவங்கள், விமானம், கப்பல் கடத்தல், அணுமின் நிலையங்களில் தாக்குதல் போன்ற நிகழ்வுகளிலும் என்.ஐ.ஏ. விசாரணை மேற்கொள்ளும்.

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையாக எல்லா மாநில தலைநகரங்களிலும் தகவல் பரிமாற்ற மையங்கள் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது. அமெரிக்காவில் 9/11 தாக்குதலுக்கு பிறகு ‘ஹோம்லாண்ட் செக்யூரிட்டி’ அமைப்பு ஏற்படுத்தப்பட்டு தகவல் பரிமாற்ற மையங்கள் நிறுவப்பட்டது போல், ‘மாக்’ எனப்படும் மல்டி ஏஜென்ஸி சென்டர்ஸ் (பல்வகை குழுமங்களின் மையம்) மூலம் இந்தியாவிலும் எல்லா மாநிலங்களிலும் பெறப்படும் தகவல்களை ஆராய வழி வகை செய்யப்பட்டுள்ளது. மும்பாய், பெங்களூரூ, சென்னை, ஹைதராபாத், ஸ்ரீநகர், கொல்கத்தா, அகமாதபாத் நகரங்களில் ஏற்கனவே இம்மாதிரியான துணை மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் பயங்கரவாத அமைப்புகள், நக்சலைட் அமைப்புகள் பற்றிய தகவல்களை சேகரித்து தகவல் வங்கிகளாக செயல்படும். இத்தகைய தகவல் பரிமாற்றத்திற்கு சட்டரீதியான ஆதாரம் கொடுத்தது நடைமுறை சிக்கல்களை தவிர்ப்பதற்கும், நுண்ணறிவு பிரிவுகள் கொண்ட எல்லா அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படவும் உறுதி செய்துள்ளது.

திரு. ராதா வினோத்ராஜு என்ற டி.ஜி.பி. அந்தஸ்த்தில் உள்ள திறமையான அதிகாரி என்.ஐ.ஏ-விற்கு தலைமை பொறுப்பு ஏற்றுள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரணை செய்த குழுவின் முதன்மை அதிகாரியாக பணியாற்றியவர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பணிபுரிந்த தென்னிந்திய அதிகாரி. மலையாளம், தமிழ், கன்னடம், இந்தி, உருது, சரளமாக பேசக்கூடியவர். பயங்கரவாத நிகழ்வுகளை நேரில் கையாண்ட அனுபவம் உள்ளவர். முக்கிய நகரங்களில் சிறப்புப் புலனாய்வு குழுக்களை அமைத்து, சிறந்த புலனாய்வு அதிகாரிகளை தேர்வு செய்வது அவரது முதல் கட்ட நடவடிக்கையாக அமையும். புலனாய்வு மையங்களுக்கான ஆதார நிலைகள் நிறுவுவதற்கு முழுமையான அதிகாரம் கொடுப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. நிலுவையில் உள்ள வழக்குகளில் மேல்விசாரணையையும் இந்த அமைப்பு மேற்கொள்ளுமா அல்லது எதிர்காலத்தில் வரக்கூடிய வழக்குகள் மட்டும் விசாரணைக்கு எடுக்கப்படுமா என்பது முடிவு செய்யவேண்டிய ஒன்று. பயங்கரவாத வழக்குகளை விசாரிக்க விசேஷ நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். திறமையான சட்டவல்லுநர்கள் விசாரணைக்கு உதவவும், நீதிமன்றத்தில் வாதாடவும் நியமிக்கப்பட வேண்டும். இவை வெகு விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்பலாம்.


“மும்பாய் தாக்குதல் கற்பிக்கும் பாடங்கள்” என்ற அறிக்கையை சர்வதேச பாதுகாப்பு சட்ட வல்லுநர்கள், வெளியுறவு விவகார வல்லுநர்களைக் கொண்டு ராண்ட் கார்பரேஷன் என்ற லாபநோக்கமில்லாத ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த அறிக்கையில் இந்தியாவில் மேலும் இத்தகைய தீவிரவாத தாக்குதல்கள் நடக்க வாய்ப்பு உள்ளது என்று எச்சரித்துள்ளது.

மும்பை தாக்குதலில் நடந்த முதல்கட்ட புலனாய்வில் நிகழ்வுகளை நேரில் பார்த்தவர்கள் ஆனால் அதிர்ஷ்டவசமாக தாக்குதலில் இருந்து தப்பிய வெளிநாட்டவர்களை உடனடியாக விசாரிக்கத் தவறியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு தீவிரவாதி அதுவும் பாகிஸ்தானைச் சேர்ந்தவன் உயிருடன் சிக்கினான் என்ற உவப்பில் விசாரணை அதிகாரிகள் தவற விட்டார்கள் என்ற குற்றச்சாட்டை மறுக்க முடியாது. தாக்குதலில் இருந்து தப்பிய வெளிநாட்டவரின் வாக்குமூலம் வழக்கு விசாரணைக்கு மட்டுமல்ல சர்வதேச அளவில் தாக்குதலின் பயங்கர பரிமாணங்களை நமது நாடு எடுத்துரைப்பதற்கு முக்கிய ஆதாரமாக இருந்திருக்கும் என்பது வல்லுனர்களின் கருத்து. என்.ஐ.ஏ இத்தகைய விசாரணை சறுக்கல்களை தவிர்த்து நேர்த்தியான புலன்விசாரணை மேற்கொள்ளவேண்டும்.
பயங்கரவாத எதிர்ப்பில் சோடை போன நாடு என்ற கணிப்பை தனது சிறப்பான செயல்பாடுகளால் மாற்றி அமைக்க வேண்டிய பொறுப்பு இந்த புதிய புலனாய்வுப் பிரிவுக்கு உண்டு. குற்றம் புலப்படும் வரை முனைப்போடு செயல்பட முதலில் இந்த அமைப்பை சர்வதேச தர வரிசை அளவில் பலப்படுத்த வேண்டும். புதிய சட்டங்களின் தீவிரமான, விரைவான அமலாக்கம் மூலம் தான் எதிர்கால நிகழ்வுகளைத் தடுக்க முடியும். குற்றம் புரிந்தவர் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பதை தரமான குற்றவியல் ஆளுமை உறுதி செய்ய வேண்டும்.

இந்த கட்டுரை தினமணி நாளிதழில் 03.02.2009 அன்று பிரசுரிக்கப்பட்டது.

No comments: