Monday, February 23, 2009

பழக இனிமை – பணியில் நேர்மை

அரசுப் பணிகளிலேயே மக்களுடன் அதிக தொடர்புடைய துறைகள் சுகாதாரம், மருத்துவம், கல்வி, வருவாய், உள்ளாட்சி மற்றும் காவல்துறை.

பொதுப்பணித்துறை. சாலை சீரமைப்புப் பணிகள் மக்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் முக்கிய துறைகள் என்றாலும், பொது மக்களோடு மேற்கூறிய துறைகள் போல் தொடர்பு இருப்பதில்லை. மக்களிடம் அன்றாடம் அதிக தொடர்புடைய துறைகளின் திறன்மிக்க செயல்பாடுகள் ஒரு அரசாங்கத்தின் சிறப்பான ஆளுமையை நிர்ணயிக்கிறது என்றால் அது மிகையாகாது.

இத்துறைகளில் உள்ள அலுவலர்களின் பணிகள் மக்களின் இயல்பு வாழ்க்கையில் மகிழ்ச்சியையோ அல்லது மன உளைச்சலையோ ஏற்படுத்துகிறது. அவர்களது பணிகளை மேன்மையுறச் செய்து, ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட துறைகளின் மேலதிகாரிகளையே சாரும்.

இந்திய காவல்துறையின் மீது பொதுவாக கூறப்படும் குற்றச்சாட்டு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கத் தவறுதல். குற்றம் புரிபவர்களோடு உடந்தை, வழக்குப் பதிவு செய்யாமல் தட்டிக்கழித்தல், முதல் தகவல் அறிக்கை நகல் கொடுக்க மறுப்பது, புலன் விசாரணையில் சுணக்கம் மற்றும் தயக்கம், முறையற்ற கைது, நேர்மை தவறுதல், பொதுமக்களிடம் கடுமையாக நடத்தல், பிடியில் உள்ளவரை துன்புறுத்துதல், கையூட்டு பெறுதல் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

சமுதாயப் பாதுகாப்பிற்கும், சமுதாய ஒட்டுமொத்த நலனுக்கும் இன்றியமையாதது நேர்மையான காவல் பணி. சமீபத்தில் மும்பையில் ஷாஜி மோஹன் என்ற 1995-ம் வருடம் பணியில் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரியிடமிருந்து 2 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது என்பது எல்லோரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. மும்பை போலீசார் 26.11.2008 பயங்கர தாக்குதலுக்கு பிறகு பயங்கரவாதிகளின் போதைப்பொருளுக்கு ஆயுதங்கள் கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளை கண்காணிக்கும் தருணத்தில் ஒரு உயர் ஐ.பி.எஸ் அதிகாரியின் கீழ்த்தரமான நடவடிக்கை தலைகுனிய வைத்துள்ளது. இவர் சண்டிகர் நகரில் போதை தடுப்புப் பிரிவின் மத்திய அரசுப்பணியில் இருந்த பொழுது அதிக அளவில் போதைப் பொருட்களை கைப்பற்றி சாதனைப் புரிந்துள்ளார் என்ற செய்தியும் வந்துள்ளது. அவ்வளவு சிறப்பாக செயல்பட்ட அதிகாரி ஏன் இந்த நிலைக்கு வர வேண்டும்? அவரது சொந்த மாநிலமான கேரளா மாநிலத்திற்கு மாறுதலுக்கு முன் ஊழலில் ஈடுபட்டுள்ளார். தன்னோடு பணிபுரிந்த அலுவலர்களையும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியுள்ளார் என்பது வருத்தம் தரக்கூடியது.

இந்திய காவல் பணிக்கு பயிற்சி அளிக்கும் களம் ஐதராபாத்தில் அமைந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் மலைப் பிரதேசமான மவுண்ட் அபுவில் இருந்து 1974ம் வருடம் தமிழ்நாட்டின் உயர் போலீஸ் அதிகாரி எஸ்.எம். டயாஸ் தலைமையில் ஐதராபாத் புறநகர் பகுதியில் சிவராமப்பள்ளி என்ற அழகான இடத்தில் பயிற்சிக்கு தேவையான எல்லா வசதிகளுடனும் நிறுவப்பட்டது. இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் திருநாமத்தை கொண்ட போலீஸ் அகாடமி ஆசியாவிலேயே சிறந்த பயிற்சி மையம். மற்ற வளரும் நாடுகளிலிருந்தும் அதிகளவில் பயிற்சிக்கு வருகிறார்கள் என்பது மேலும் ஒரு சிறப்பு. பயிற்சியின் போது இளம் அதிகாரிகளுக்கு தீங்கில்லாத நன்மை பயக்கக்கூடிய வகையில் காவல்பணி அமையவேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. குறிப்பாக மிக உயரிய நேர்மையை கடைபிடிக்க வேண்டும் என்றும் மக்கள் சேவையில் உணர்ச்சிபூர்வமாக தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. தன்னம்பிகையுடனும், சுயமரியாதையுடனும் ஆற்றப்போகும் இன்றியமையாத பணியின் மீது ஒரு கர்வத்துடன் வெளிவரும் இளம் அதிகாரிகள் பல மாநிலங்களில் தமது முத்திரையை பதித்து சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர். ஆயினும் ஷாஜி மோஹன் போன்ற சில அதிகாரிகளின் நடவடிக்கைகள் பெருமை சேர்ப்பதாக அமையவில்லை.

போன மாதம் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் புறநகர் காவல் கண்காணிப்பாளர் ஊழல் குற்றச்சாட்டில் ஊழல் தடுப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து பல லட்சம் பெருமானமுள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. பீகார் மாநிலத்தில் ஒரு பொது நல வழக்கில் சுமார் 715 காவல் அதிகாரிகள் காவலர் முதல் உயர் அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் 70-க்கும் மேற்பட்ட ஐ.பி.எஸ் அதிகாரிகள் கிரிமினல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ளனர் என்றும் இந்த பொது நல வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008-ம் வருடம் அக்டோபர் மாதம் உத்திரபிரதேச மாநில அரசு 12 காவல்துறை அதிகாரிகள் மீது ஊழல் வழக்கு விசாரணைக்கு உத்திரவிட்டுள்ளது. இந்த விசாரணை காவல் பணியாளர்கள் தேர்வு முறை கேடு சம்பந்தப்பட்டது. இதில் அரசியல் பின்னணி இருப்பதாக குற்றச்சாட்டு இருந்தாலும் இத்தகைய முறைகேடுகள் பாதுகாப்பு ஆளுமைக்கு பின்னடைவு என்பதை மறுக்க முடியாது.

மும்பாய் நகரில் ஒரு நட்சத்திர ஓட்டலில் அரசுப் பணியில் சேர்ந்து சில வருடங்களே ஆகிய இளம் அதிகாரி தனது நண்பர்களுக்கும், தம்மை சேர்ந்தவர்க்கும் விருந்து அளித்துள்ளார். தனது ‘அந்த’ வருமானம் 100 லகரத்தை தாண்டிய வைபவத்தை முன்னிட்டு இந்த விருந்து நடைபெற்றது பற்றி வருத்தத்தோடு விவரித்தார் ஒரு நேர்மையான அதிகாரி.

அரசுப் பணியில் பிரச்சனைகளை ஆராயும் பொழுது அதில் எடுக்கக்கூடிய முடிவு பாராபட்சமின்றி நடுவுநிலை பிறழாமல் அமைய வேண்டும் என்பதுதான் மரபு. அதனால்தான் நிர்வாகம் முகமற்றதாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் முகத்திற்கேற்றாற் போல் முடிவு என்ற நிலை நாளடைவில் மேலோங்கிவிட்டது. கஞ்சிபோட்டாற் போல் விறைப்பாக எதற்கும் வளைந்து கொடுக்காது பணியாளர்கள் நேர்மையாக இருந்த நிலை மாறிவிட்டது என்று முதிர்ச்சி பெற்ற அந்த காலத்து அதிகாரிகள் அங்கலாய்ப்பதைக் கேட்டிருக்கிறோம். ஏன் இந்த மாற்றம்?
லஷ்மண ரேகையை தாண்டாது பாதுகாத்தவர்கள் அதைத் தாண்ட துணிந்தது வருந்தத்தக்கது. மகாத்மா காந்தி அவர்கள் ஏழை மக்களின் முகத்தை நினைவு கூர்ந்து அரசு அலுவலர் ஒவ்வொரு முடிவையும் எடுக்க வேண்டும் என்ற சுதந்திர இந்தியாவின் நிர்வாக அமைப்பைப் பற்றி எழுதியுள்ளார்.
காவல்துறையைப் பற்றி விவரிக்கையில் “நான் பேணும் காவல்துறை சீர்திருத்தவாதிகளாகவே இருப்பார்கள்” என்று உறுதிபட கூறியுள்ளார். இந்த உயர்ந்த கோட்பாடுகளை பேணுவதும்,, வீணாக்குவதும் நிர்வகிப்பவர்கள் கையில் உள்ளது.
காவல்துறையினர் சமுதாயத்தின் ஒரு அங்கம். அதில் பணிபுரிபவர்களும் சமுதாயத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்களது நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் சமுதாய சூழலில் உள்ள நடப்புகளின் பிரதிபலிப்பே என்று ஊழலுக்கு வியாக்கியானம் கொடுத்துவிட்டு மௌனமாக இருந்துவிட வேண்டுமா? காவல்துறையின் பணிகள் மக்களின் உயிர் அவர்களது பாதுகாப்பு, உடமைகளின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது. நேர்மையற்ற பணிகளினால் ஏற்படும் பாதிப்பை எந்தவிதத்திலும் ஈடு செய்ய முடியாது. ஒரு முறையற்ற கைதினால் தனி மனிதனின் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. ஒரு நிகழ்வில் கண்பார்வையற்றவர் பஸ் மீது கல்லடித்து சேதப்படுத்தியதாக கைது செய்யப்பட்டிருக்கிறார். பார்வையற்றவர் எவ்வாறு குறிபார்த்து பேருந்தை சேதப்படுத்த முடியும் என்று தெரியவில்லை. “போலீஸ் அடிபடுவது, ஜெயிலுக்கு போவது” என்று விதித்திருக்கிறது என்று நடைபெறும் தவறுகளை சாதாரணமாக விவரிப்பது இந்த தவறுகள் தொடர்ந்து நடப்பதற்கு வித்திடுகிறது.
இத்தகைய தவறுகள் நடைபெறுவதற்கு பணிச்சுமையும் ஒரு காரணம். அவசர உலகில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அடைய வேண்டும் என்ற துடிப்பில் இலக்குகள் தான் குறிக்கோளாக இருக்கின்றனவே தவிர அதை அடைவதற்கான நடைமுறைகளில் தொய்வு ஏற்படுகிறது. நடைமுறை சிக்கல்களை கவனிப்பதற்கு நேரமில்லை. அவசரப்பட்டு எடுக்கப்படும் இத்தகைய முடிவுகள் பின்பற்றக்கூடாத முன் உதாரணமாக அமைந்துவிடுகிறது. தவறுகளும் தொடர்கின்றன. அதிக நேரம் பணிகளிலேயே ஈடுபடுவதால் வேறு வகையில் ஆதாயம் தேடுவதில் தவறில்லை என்ற எண்ணமும் அந்தத் தவறையே நியாயப்படுத்தும் வகையில் மேலும் ஊழலில் உழல்வதும் முடிவில்லா மீளமுடியாத வலையாக அமைந்து விடுகிறது. காவல்துறையின் எந்த நடவடிக்கையிலும் இருசாராருடைய பிரச்சனை என்பதால் நன்மையடைந்தவர் புகழ்வார், எதிராளி இகழ்வார். இருவரையும் திருப்திபடுத்த முடியாது. இதனால் எளிதாக காவல்துறை மீது சரியான நடவடிக்கை எடுத்தாலும் புகார் வந்துவிடுகிறது.
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் புதிதாக காவல்துறையில் சேர்ந்த பணியாளர்களிடம் பணிகளின் தன்மை, குறைகள், தாம் செய்யும் வேலை எந்த அளவுக்கு தமக்கு திருப்தி அளிக்கிறது என்பது பற்றி ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பணிச்சுமையைப் பற்றி கருத்து தெரிவிக்கையில் போதிய வசதி, ஓய்வில்லாததால் மனஅழுத்தத்தோடு பணிபுரிய வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார்கள். காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதில்லை என்று பெருவாரியான மக்கள் காவல்துறையினரை குறை கூறுகிறார்கள் என்பதும், ஊழல், கடுமையாக நடத்தப்படுவது போன்ற முறையற்ற செயல்கள் துறையின் மதிப்பை பாதிக்கின்றன என்பதும் கருத்துக் கணிப்பில் வெளி வந்துள்ளன. இத்தகைய உள் ஆய்வு வரவேற்கத்தக்கது. கூறப்பட்டுள்ள குறைகள் புதிதல்ல. ஆனால் களப்பணியாளர்களே குறைகளை உணர்ந்தால் அதுவே நிவர்த்தி செய்வதற்கு முதல் வழி.

மும்பை வன்முறையில் வீரமரணம் எய்தி அசோக சக்கர விருதால் அலங்கரிக்கப்பட்ட உன்னத ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஹேமந்த கர்கரே, அசோக் காம்தே, விஜய் சாலுஸ்கர். தில்லியில் திரு.சர்மா பயங்கரவாதிகளோடு போராடி உயிர் துறந்தார். இவர்களது தியாகம் வீணாகக் கூடாது. பயங்கரவாதம் உள்நாட்டு பாதுகாப்பிற்கு மிகப் பெரிய சவலாக தலைதூக்கியுள்ளது. உணர்ச்சிபூர்வமாக ஒவ்வொரு களப்பணியாளரும் தம்மை மக்கள் பணியில் அர்ப்பணித்து நேர்மையுடன் செயலாற்றினால்தான் பயங்கரவாதத்தை முறியடிக்க முடியும்.
பழக இனிமை பணியில் நேர்மை இதுவே நமக்கு பெருமை என்பது தாரக மந்திரமாக அமைய வேண்டும்.

இந்த கட்டுரை தினமணி நாளிதழில் 21.02.2009 அன்று பிரசுரிக்கப்பட்டது.

No comments: