எந்த ஒரு சிறிய பிரச்சனை என்றாலும் போராட்டத்தில் ஈடுபடுதல் என்பது கலாச்சாரமாக வளர்ந்துள்ளது. ஏன் ஒரு கொண்டாட்டம் என்றாலும் போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்தால்தான் ஏற்பாடு செய்தவர்களுக்கு ஒரு அலாதியான திருப்தி. ஆனால் இத்தகைய போராட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும், அல்லது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வகையில் போராட்டங்கள் அமைய வேண்டும் என்பதை பெருவாரியான மக்கள் விரும்புவார்கள்.
காந்தியடிகளின் சத்தியாகிரகப் போராட்டம் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிர்த்து நடத்தப்பட்ட அறப் போராட்டம். தனது அறப்போராட்டத்தின் சித்தாந்தத்தைப் பற்றி பல இடங்களில் காந்தியடிகள் விவரிக்கிறார். பிரிட்டிஷ் அரசு இந்தியாவை அடிமைப்படுத்தி ஆட்சி செய்தது. அந்த அடிமை நிலை மாறுவதற்க்கு இத்தகைய அறப்போராட்டம் மூலம் அஹிம்சை வழியில்தான் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று திடமாக நம்பினார். ஆனால் சுதந்திர இந்தியாவில் இத்தகைய போராட்டம் தேவையில்லை என்பதை தெளிவு படுத்தியதாக அவருடன் காரியதரிசியாக பணியாற்றிய திரு கல்யாணம் அவர்கள் கூறியுள்ளார். ஏனெனில் மக்களாட்சியில் தேர்தல் மூலமாக மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்கு வழி செய்வதால் இத்தகைய போராட்டங்கள் தேவையற்றது என்பது காந்தியடிகளின் அறிவுரை. ஆனால் காந்தியடிகள் அவர்களின் அறப்போராட்டம் எந்த அளவுக்கு தவறான வழியில் பிரயோகப்படுத்தப்படுகிறது என்பதை இப்போதுள்ள சமுதாய சூழலில் காண்கிறோம். மறியல், பந்த், உள்ளிருப்பு போராட்டம், ஒத்துழையாமை, ‘ரோட் ரோக்கோ’ என்று பல வகை போராட்டங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கின்றன. அதற்கும் மேலாக, காவல்துறை, குற்றத்தடுப்புப் பொறுப்புகளில் கவனம் செலுத்த முடியாத அளவில் அவர்களது களப்பணி விரயமாகிறது.
அரசியல் சாசனத்தில் பாகம் மூன்றில் அடிப்படை உரிமைகள் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. சுதந்திரம், சமத்துவம், கண்ணியம், பேச்சுரிமை, கூட்டமைப்பு ஏற்படுத்திக் கொள்ள உரிமை, போன்ற பல அடிப்படை உரிமைகள் நமது அரசியல் சட்டத்தில் விரிவாக வழங்கப்பட்டுள்ளன. 21-ம் பிரிவுப்படி சட்டத்தின் அடிப்படையில் அல்லாது ஏவரது தனி சுதந்திரமும் பறிக்க முடியாது. வெளிநாட்டவர் உட்பட எல்லோருக்கும் இப்பிரிவில் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அடிப்படை உரிமைகள் பற்றியும், மனித உரிமைகள் பற்றியும் தற்போது ஒரளவு புரிதலும் விழிப்புணர்ச்சியும் ஏற்பட்டுள்ளது எனலாம். ஆனால் கிராமப்புறங்களிலும், பின்தங்கிய மாவட்டங்களிலும் உரிமைகள் பற்றிய அறியாமை இன்றும் நிலவுகிறது என்பது உண்மை.
நகர்புறங்களிலும், பல இடங்களில் சில அமைப்புகளின் தூண்டுதல் பேரிலும், போராட்டம் என்ற பெயரில் உரிமைகள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்பதை மறுக்க முடியாது. தனி மனிதன் சுதந்திரத்தைப் பற்றி அரிய பல கருத்துக்களை சமுதாயத்திற்கு அளித்து விழிப்புணர்வுக்கு வழி செய்தவர் ஆங்கில மேதை ஜான் ஸ்டுவர்ட் மில் ஆவார். இத்தகைய சுதந்திரத்திற்கு கட்டுப்பாடு உண்டு என்றும் மற்றவர்கள் சுதந்திரத்திற்கு இடையூறு இல்லாத வகையில் அனுபவிக்கப்பட வேண்டும் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார். இதையே இன்னொரு 19-ம் நூற்றாண்டு சிந்தனையாளன், ‘தோரூ’ அவர்கள் ‘கை நீட்டத்தின் அளவுதான்’ தனி மனிதன் சுதந்திரம் என்ற நிதர்சன உண்மையை விளக்குகிறார். சமுதாய சட்டதிட்டங்கள் என்ற எல்லைக்குட்பட்டுதான் சுதந்திரத்தின் சுவாசத்தை நுகர வேண்டும்.
நமது சமுதாயத்தில் சுதந்திரம் தவறாகத்தான் பொறுப்பில்லாது அனுஷ்டிக்கப்படுகிறது. சுதந்திர நாட்டின் பிரஜை என்ற மமதையில் நடுரோட்டில் நடக்க முடியுமா? பறக்கும் வாகனங்களால் அடிபடுவது நிச்சயம். மற்றவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து பொறுப்போடு நடந்து கொள்வது ஒவ்வொருவரின் கடமையாகும், விவேகமும்கூட.
அரசியல் அமைப்பு சட்டத்தில் உரிமைகள் எவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளதோ அதே அளவில் அடிப்படைக் கடமைகள்பற்றி பிரிவு 51(A)-ல் விரிவாக கூறப்பட்டிருக்கின்றது. இதை ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் நன்கு அறிந்திருக்க வேண்டும். அதில் கூறப்பட்டுள்ள முக்கிய கடமைகளாவன:
- நாட்டு விடுதலைப் போராட்டத்தின் அடிப்படைக் குறிக்கோள்களைப் போற்றியும், இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் முழுமையாகப் பாதுகாத்தல்.
- நாட்டைப் பாதுகாத்து நாட்டுப்பணியாற்றுவதற்குத் தம்மை அர்ப்பணித்தல்.
- மத நல்லிணக்கம், இன மொழி வேறுபாடுகள் கடந்து பரஸ்பர சகோதரத்துவத்தை வளர்த்தல்.
- பெண்களின் கண்ணியத்தைக் காப்பாற்றுதல்.
- பன்முக இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்தல்.
- இயற்கைச் சூழல், காடுகள், வன உயிர்களைப் பாதுகாத்து மேம்படுத்துதல்.
- அரசியல் சார்ந்த ஆராய்ச்சிகள், சமுதாய சீர்திருத்தங்கள், மனித நேயம் ஆகியவற்றைப் போற்றி வளர்த்தல்.
- பொதுச் சொத்தைப் பாதுகாத்து, வன்முறையை அறவே தவிர்த்தல்.
-இந்தியா உன்னத நிலைமையை அடைய ஒருங்கிணைந்து, ஓயாது பாடுபடுதல்.
இந்தப் பிரிவு 1976-ம் வருடம் 42 சட்டத்திருத்தப்படி அரசியல் சாசனத்தில் இணைக்கப்பட்டது. எந்த அளவுக்கு உரிமைகள் முக்கியமோ அந்த அளவுக்கு கடமைகளும் முக்கியம். இத்தகைய அடிப்படைக் கடமைகள் மற்ற நாடுகளிலும் அரசியல் சாசனத்தில் இடம் பெற்றுள்ளன. சோவியத் யூனியன் அரசியலமைப்பிலும் சீனா, ஜப்பான், ஸ்ரீலங்கா போன்ற நாடுகளின் அரசியலமைப்புகளிலும் இடம் பெற்றுள்ளன. சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்திலும் மக்களின் கடமைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
உரிமைகளும் கடமைகளும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை உணரவேண்டும். உரிமைகளுக்காக போராட்டம் என்ற பெயரில் கடமைகளை காற்றில் பறக்க விடுகிறோம்.
மத நல்லிணக்கத்தை பலப்படுத்தவும், மொழி, இனம் போன்ற வேறுபாடுகளை கடந்து அனைவரிடமும் சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும் என்பது ஒரு முக்கியமான கடமையாக கூறப்பட்டுள்ளது. இதை கடைபிடித்தால் இத்தகைய தீவிரவாதமும் பயங்கரவாதமும் தலைதூக்காமல் மக்கள் திருப்தியான வாழ்க்கையை அனுபவிக்கலாம். இதற்கு மாறாக வேற்றுமையைத்தான் முனைப்பாக வளர்ப்பதற்கு சிலர் முற்படுகின்றனர்.
பெண்களின் கண்ணியத்தை தாழ்த்தச் செய்யும் செய்கையை விட்டொழிக்க வேண்டும் என்ற கடமை சிரத்தையோடு மீறப்படுவதைத்தான் சமுதாயத்தில் காணமுடிகிறது. வரதட்சணை கொடுமைகள் ஓய்ந்தபாடில்லை. 2008-ம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது என்று குற்றப் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. அதில் ஒரு வழக்கில் தான் நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது. பெண்களை விரசமாக சித்தரிப்பதில் சினிமாவிற்கு போட்டியாக இப்போது சின்னத்திரையும் வந்துவிட்டது. பெண் ஒரு கொடுமைக்காரியாகவும், குடும்பத்தில் சதித்திட்டம் தீட்டுபவளாகவும் காட்டுவது இன்னும் கொடுமை.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது ஆறுகள், காடுகள், வன உயிர்களைப் பாதுகாப்பது மற்றுமொரு முக்கிய கடமையாகும். “வன மஹோத்சவம்” என்று ஆண்டுக்கு ஒருமுறை மரம் நடும் விழா அனுசரிக்கப்படுகிறது. ஆனால், ஊரில் ஏதோ ஒரு பிரச்சனைக்காக போராட்டம் என்றால், அருகிலுள்ள மரத்தை வெட்டி ரோட்டின் குறுக்கே போட்டு, அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் வழி, பொதுமக்களை அவதிக்குள்ளாக்குகிறது. காடுகளை அழிப்பது தனது பிறப்புரிமை போல் சிலர் சட்டத்தின் பிடியில் சிக்காது செயல்படுவது நமது அமைப்பில் உள்ள தளர்ச்சியைக் காட்டுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள ரெவின்யூ கிராமங்களின் எண்ணிக்கை 17292. எல்லா இடங்களுக்கும் தார் ரோடு வசதி உள்ளது என்ற முன்னேற்றக் குறியீட்டினைக் கொண்ட மாநிலம் தமிழகம். ஆனால், அதுவே கலகக்காரர்களுக்கு சாதகமாக அமைந்துவிடுகிறது. முதலில் அங்குமிங்கும் முறையிட்டு, கிராமங்களுக்கு பஸ் வசதி ஏற்பட அப்பகுதி சமூக நல்லுள்ளம் படைத்தவர்கள் பாடுபடுகின்றனர். கஷ்டப்பட்டு வரவழைக்கப்பட்ட பேருந்தை, போராட்டங்களின்போது நொடிப்பொழுதில் தீக்கிரையாக்குவதில் போராளிகள் தயங்குவதில்லை.
கப்பல், விமானம், பேருந்துகள் மற்றும் மோட்டார் வாகனங்கள் நம்மை தாங்கிச் செல்வதால், அவை தாய்க்கு ஈடாக இலக்கணத்தில் பெண்ணினமாகக் கருதப்படுகின்றன. இத்தகைய புனிதமான பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துவது நமது தாயை இழிவுபடுத்துவது போன்றது என்று ஏன் உணர்வதில்லை? சமீபத்தில் இத்தகைய போராட்டத்தில் ஒன்பது பேரூந்துகள் தமிழகத்தில் கொளுத்தப்பட்டன. பல பேருந்துகள் கல் வீச்சில் சேதமடைந்தன. பல இடங்களில் முன்னெச்சரிக்கையாக பஸ்கள் நிறுத்தப்பட்டன.
சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் வட இந்தியர்களுக்கு எதிராக ராஜ்தாக்கரே என்பவரின் அமைப்பு நடத்தும் போராட்டம், நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் எதிரானது அன்றி, வேறென்ன? பீஹாரிகள் மும்பையில் தாக்கப்பட்டதை எதிர்த்து பீஹாரில் நடந்த ‘பந்த்தில்’ பல பஸ்கள் கொளுத்தப்பட்டன. தமது மாநில மக்கள் தாக்கப்பட்டதற்கு எதிராக நடந்த போரட்டத்தில் தமது மாநிலத்தின் பஸ்களை கொளுத்தியது விநோதமான கொடுமை. நாட்டின் வடகிழக்குப் பகுதியில் ‘போடோ’ தனிமாநிலம் கோரிக்கை வைத்து நடத்திய போராட்டத்தில் போராட்டக்காரர்கள் ஒரு மரப் பாலத்தை சேதப்படுத்தி தீக்கிரையாக்கினர். பாலம் சேதமானதால் போராளிகள் தம் கிராமத்துக்கே செல்ல முடியாமல் அவதியுற்றனர் என்பது முகம் மேல் உள்ள வெறுப்பில் மூக்கை உடைத்துக் கொண்ட கதையாயிற்று!
அறப்போராட்டம் என்று பெயரளவில் துவங்கப்பட்டாலும், வன்முறை தலைதூக்காமல் இருப்பதில்லை. சில இடங்களில் நடைபெறும் அசம்பாவிதங்கள் பற்றிய செய்தியைப் பார்த்து மற்ற இடங்களில் போராட்டம் நடத்தும் அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஏதோ தாம் கடமையில் இருந்து தவறிவிட்டது போல் மேலும் வன்முறையைப் பரவச்செய்து, போராட்டம் வெற்றி அமைந்ததாக இறுமாப்புக் கொள்கின்ற மனப்போக்கு கண்டிக்கத்தக்கது. பொதுச் சொத்துக்களை அழிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கென்றே, பொதுச் சொத்து சேதம் தடுப்புச் சட்டம் 1992ல் இருந்து அமலில் உள்ளது. இதில் குறைந்தபட்சம் ஒரு வருடத்திலிருந்து ஐந்து வருடம் வரை தண்டனை விதிக்க இடமுள்ளது. ஆயினும், வன்முறை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
நல்லவர்களின் மௌனம்தான் சமுதாயத்தில் தீமைகள் தலைதூக்குவதற்கு வழி செய்கிறது. நல்லவர்கள் ஏன் மௌனம் சாதிக்க வேண்டும்! ஏன் வன்முறையைக் கண்டிக்கக்கூடாது? அண்டை வீடுகளில் பிரச்சனைகள் என்றால் அதைத் தீர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதைவிடுத்து, நமது வீட்டையே நாம் சேதப்படுத்திக் கொள்வோமா? மறற்வர்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதற்காக நமது வீட்டு மக்களைக் கொடுமைப்படுத்த வேண்டுமா? இது எந்த விதத்தில் பிரச்சனைக்குத் தீர்வு?
கடமைகளைப் பற்றி விழிப்புணர்ச்சி தேவை. கடமைகளைப்பற்றி ஒவ்வொரு நாளும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு உணர்த்தப்பட வேண்டும். அதுமட்டுமல்ல, அலுவலகங்களிலும் நாம் நாட்டுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றி பணிபுரிபவர்களுக்குத் தெரியப்படுத்துதல் வேண்டும்.
உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பது எல்லோரின் விருப்பம். ஆனால் கடமைகள் நிறைவேற்றப்படுவதில்தான் உரிமைகளின் பாதுகாப்பு உள்ளது என்பதுதான் உண்மை. தற்போது தேவை இதற்கான விழிப்புணர்ச்சி. நல்லவர்கள் மௌனம் காதைப் பிளக்கிறது மௌனம் சாதித்தது போதும். விழிப்போம், விழிப்படையச் செய்வோம்.
இந்த கட்டுரை தினமணி நாளிதழில் 13.02.2009 அன்று பிரசுரிக்கப்பட்டது
No comments:
Post a Comment