ஊழல் என்றாலே சாதாரண அரசு ஊழியர்களோடு நமக்கு நியாயமாக கிடைப்பதற்கு லஞ்சம் கொடுத்து தான் பெற வேண்டிய நிலைதான் நமது மனதில் நிற்கும். தாசில்தார் அலுவலகம், காவல் நிலையம், சாலை போக்குவரத்து, அரசு மருத்துவமனை போன்ற இடங்களில் பொதுமக்கள் அல்லல்படுவது அன்றாட நிகழ்வாகியுள்ளது.
இந்திய நாட்டு ஜனத்தொகை 120 கோடி இதில் சுமார் 45 சதவிகித மக்கள் எதாவது ஒரு முறையாவது அரசத்துறையோடு கசப்பான ஊழல் சம்மந்தப்பட்ட அநுபவம் பெற்றிருப்பார்கள் என்று கணக்கிப்பட்டுள்ளது. உலகநாடுகளின் எண்ணிக்கை 197, அதில் வெளிப்படையான ஊழலற்ற நாடுகள் வரிசையில் இந்தியாவின் இடம் 87. ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகள் முதல் 15 இடங்களில் உள்ளவை. ஊழல் நமது முன்னேற்றத்திற்கு பெரிய முட்டுக்கட்டை.
சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஊழல் என்ற பிரச்சனைக்கு தீர்வு இல்லை. 1964-ம் வருடம் ஊழலை ஓழிப்பதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்காக மத்திய அரசு சந்தானம் கமிஷனை அமைத்தது. இந்த கமிட்டி நல்ல பல பரிந்துரைகளை வழங்கியது. அதில் லோக்பால் என்ற அமைப்பு மத்தியிலும், மாநிலங்களில் லோக் ஆயுக்தா என்ற குழு அரசு இயந்திரங்களில் நிகழும் ஊழல் குற்றச்சாட்டுகளை, விசாரிக்க அமைக்கப்படவேண்டும் என்ற பரிந்துரை முக்கியமானது. இதற்கான சட்டம் இன்றும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
இந்நிலையில் 2ஜீ அலைக்கற்றை விவாகாரம், காமன்வெல்த் ஆட்ட நிர்வாகத்தில் முறைகேடுகள், மும்பையில் இராணுவ வீரர்களுக்கான ஆதர்ஷ் குடியிருப்பு கட்டுவதில் ஊழல், மத்திய விஜிலன்ஸ் கமிஷன் தலைவர் நியமனத்தில் குளறுபடி என்று அடுத்தடுத்து ஊழல் பிரச்சனைகள் தலை தூக்கியதில் மக்கள் மத்தியில் வெறுப்பு ஏற்படுத்தியுள்ளது. தாமும் ஊழலுக்கு எதிராக ஏதாவது செய்யவேண்டும் என்ற எழுச்சியை தூண்டியுள்ளது.
மராட்டிய மாநிலம் ராலேகான் சித்தி என்ற கிராமத்தில் சத்திய வழியில் பல சமூக சீர்திருத்தங்களையும் மக்கள் ஒத்துழைப்போடு கிராம தன்னிறைவுத் திட்டங்களை நிறைவேற்றிய முன்னாள் ராணுவ வீரரும் காந்தியவாதியுமான திரு. அன்னா ஹசாரே லோக்பால் சட்டம் நிறைவேற போராடிவருகின்றார். மூத்த வழக்குரைஞர் திரு சாந்தி பூஷன், பிரஷாந்த பூஷன், முன்னாள் உயர் அரசு அதிகாரிகள் கேஜரிவால், கிரன்பேடி போன்றவர்கள் அன்னா ஹசாரே குழுவில் இந்தப் போரட்டத்திற்கு வலிமை சேர்க்கின்றனர். அவர்கள் முன்மொழிந்த சட்டம் எல்லா தரப்பு அரசு அதிகாரிகளையும் பிரதம மந்திரி உட்பட எல்லா அமைச்சர்களையும் விசாரிக்க வலுவான அமைப்பு எற்படுத்த வேண்டும் என்று விவரிக்கிறது. ஆனால் அரசு தரப்பில் வைக்கப்பட்ட மாதிரி சட்டம் உப்பு சப்பில்லாத நோஞ்சான் அமைப்பு.
திருமதி அருணா ராய் அவர்கள் தலைமையிலான சமூக ஆர்வலர் குழு இவ்விரண்டிற்கும் நடுவிலான சில மாற்றங்கள் அடங்கிய ஆலோசனை கூறியுள்ளது. பாராளுமன்ற விசாரணைக் குழு, பாராளுமன்ற உறுப்பினரும் வழக்குறைஞ்ருமான திரு சிங்வி தலைமையில் எல்லா தரப்பினரிடமிருந்து பெறப்படும் குறிப்புகளை ஆராய்ந்து மனதுக்கு நிறைவான சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வைக்கப்படும் என்று எதிர்பார்கலாம்.
சட்டம் நிறைவேற்றுவது மட்டுமல்லாமல் அதை வழிமுறைப்படுத்துவதிலும் தீர்க்கமான அணுகுமுறை வேண்டும். நமது அமைப்பில் சட்டங்களையும், விதிகளையும் நடைமுறைப்படுத்திவதில்தான் சிக்கல் உள்ளது. பாரபட்சம் பார்க்கக்கூடாது.
பொதுமக்களும் அவரவர் நிலையில் ஊழலை ஒழிக்கவும் ஊழலுக்கு துணை போகமாட்டோம் என்ற உறுதி மொழி எடுக்கவேண்டும். நியாயமாக கிடைப்பதற்க்கு லஞ்சம் கொடுக்க கூடாது. கேள்வி கேட்க தயங்கக்கூடாது. உயிர், உடமைகள் பாதுகாப்பு, சுதந்திரம், சமத்துவம் கண்ணியம், இவை அடிப்படை உரிமைகள். எந்த விதத்திலும் தனிமனித அவமதிப்பை தாங்கிக்கொள்ளக்கூடாது. சுயமரியாதைப்பற்றியும், பகுத்து அறியும் முறையை மேடையில் முழுங்குபவர்கள் வாய்ச்சொல் வீரர்கள், ஆனால் உண்மையான சுயமரியாதை ஊழலுக்குத்துணை போகாத எண்ணம் சொல் செயல். லஞ்சம் பெறுவதும், லஞ்சம் கொடுப்பதும் மக்களுக்கு எதிரான சட்டவிரோத செயல் என்ற அளவில் ’தீயது விட்டீட்டல் பொருள்’ என்ற ஒழுக்கமான வாழ்க்கையே உண்மையான சுயமரியாதை.
ஊழலை வீழ்த்துவோம்.
நேர்மையைப் போற்றுவோம்.
No comments:
Post a Comment