Showing posts with label திக்குத் தெரியாது வீதியில். Show all posts
Showing posts with label திக்குத் தெரியாது வீதியில். Show all posts

Thursday, July 22, 2010

திக்குத் தெரியாது வீதியில்

ல்லறை என்றாலே நெஞ்சை உறையவைக்கும் உணர்வு வரும். கல்லறை அமைந்த தெருக்களில் செல்வதற்கும் மக்கள் அஞ்சுவர். மயானத்தைச் சுற்றி பல கதைகள். சிறு புகைவந்தாலும் அது ஆவியின் வடிவம் என்று பயம் கொள்ளச் செய்வார்கள். மனதை மருளச் செய்யும் இத்தகைய இடங்களில் மக்கள் குடியிருக்கிறார்கள் என்றால் நம்புவது கடினம். இது நகரங்களில் ஏற்படும் நெரிசலின் விளைவு.

நகரங்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டு வருகிறது. பிரகாசமான எதிர்கால கனவை மனதில் தேக்கி வேலையைத்தேடி கிராமங்களிலிருந்து மக்கள் நகரங்களுக்கு குடிபெயர்வதால் 10 லட்சத்திற்கு மேல் ஜனத்தொகை உள்ள நகரங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது. 100 கோடிக்கு மேல் உள்ள இந்தியாவின் ஜனத்தொகையில் சுமார் 25 சதவிகிதம் மக்கள் நகரங்களில் வசிக்கிறார்கள். நமது நகரங்களின் ஜனத்தொகை அமெரிக்காவின் மொத்த ஜனத்தொகைக்கு சமம். இந்த அதிகரிப்போடு நகரங்களின் அடிப்படை வசதிகளின் தேவையும் பலமடங்கு உயர்ந்துள்ளது.

உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க வீடு, நல்ல சுகாதாரம் அடிப்படை உரிமைகளாகக் கருதப்படவேண்டும் என்றும் இத்தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சமுதாயத்தின் பொறுப்பும் அரசாங்கத்தின் கடமையும் உள்ளது என்று மனித உரிமைகள் ஆணையம் கூறியுள்ளது. தென்ஆப்பிரிகா நாட்டின் அரசியல் சாசனத்தில் அந்நாட்டு மக்களுக்கு வீடு அடிப்படை உரிமை என்றும் வசதி செய்து கொடுக்கவேண்டியது அரசின் கடமை என்றும் கூறப்பட்டுள்ளது. நமது நாட்டில் பேச்சு சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகள் அரசியல் சாசனத்தின் மூன்றாம் பகுதியில் நீதிமன்றம் மூலம் நிலை நிறுத்தக்கூடிய பிரிவுகளாக உள்ளன. ஆயினும் அத்தியாவசிய தேவைகளான குடியிருப்பு, வேலைவாய்ப்பு, சமூகநீதி போன்றவற்றை அரசாங்கம் தனது அடிப்படை கொள்கைளாக வைத்து நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வசிக்க வீடில்லாமல் பராரியாக அண்டியும் ஒண்டியும் வாழும் மக்களின் பிரச்சனை பெரிய சமுதாயப் பிரச்சனையாக உள்ளது. அது மேலும் வருங்காலத்தில் பூதாகரமாக உருவெடுக்கும் என்று ஐக்கியநாடுகள் கவலை தெரிவித்திருக்கிறது. உலகெங்கிலும் சுமார் 10 கோடி மக்கள் ஸ்திரமான வீடில்லாமல் நாடோடிகளாக திரிகிறார்கள் என்று ஐக்கியநாடுகள் சபை கூறியுள்ளது. அதில் கணிசமானவர்கள் ஏழை நாடுகளிலும் வளர்ந்து வரும் நாடுகளிலும் குடியிருப்பு இல்லாமல் அவதிப்படுகிறார்கள். இந்நிலைக்கு ஏழ்மை, வேலையின்மை, ஆயுததாக்குதலால் குடிபெயர்தல், குடும்ப பூசல்கள், போதைப் பொருள்களுக்கு அடிமையாதல், மனநிலை பாதிப்பு போன்ற பலகாரணங்கள் கூறலாம். நகரங்களுக்கு வேலை தேடிவருபவர்கள் வேலை கிடைக்காமல் சமுதாயத்திற்கு சுமையாக தெரு ஓரங்களிலும், வழிபாட்டுத்தலங்களுக்கு அருகிலும், குடிசைப் பகுதிகளிலும் ஒண்டியிருப்பதைப் பார்க்கலாம். முதலில் தற்காலிகமாக தங்குபவர்கள், மெல்ல அண்டுவதையும் அதில் சிலர் சுரண்டிப் பிழைப்பதையும் ஒரு கலையாகவே வளர்த்துக் கொள்கிறார்கள். இத்தகைய சமுதாய சுமைகளை “ஸ்கவாட்டர்ஸ்” என்றும் “ஸ்பான்ஜீஸ்” என்றும் மேலை நாடுகளில் வரையறுக்கின்றனர். இத்தகைய மனித உண்ணிகளை வழிநடத்தி சமுதாயத்தோடு உபயோகமானவர்களாக இணைப்பது உள்ளாட்சி அமைப்புகளின் முக்கிய பொறுப்பாகும்.

காலம் காலமாக காவல் துறைக்கு பராரியாக திரிபவர்களை கண்காணித்து அவர்கள் குற்றங்களில் ஈடுபடாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. வேலையற்று திரியும் இளைஞர்கள் அடிமைத் தொழிலாளர்களாக சிக்கி மிக மோசமான நிலையில் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் வாழ்க்கையை கழிக்கின்றனர்.

வேலையில்லாது தத்தளிக்கும் பல இளைஞர்களுக்கு பொதுவாக சமுதாயத்தின் மீது ஒரு காழ்ப்புணர்ச்சியும், வெறுப்பும் ஏற்படுவது இயற்கை. இதனை சாதகமாகப் பயன்படுத்தி தீவிரவாத இயக்கங்களில் சேர்வதற்கு இடைத்தரகர்களால் ஈர்க்கப்படுகின்றனர். 1993ம் வருடத்தில் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் பல இடங்களில் குண்டு மறைக்கப்பட்டிருந்த பெட்டிகளை வைக்க இவ்வாறு பராரியாக ஒண்டியவர்கள் பயன்படுத்தப்பட்டனர் என்பதை மறந்துவிடக் கூடாது.

சுமார் 100 கோடி ஜனத்தொகை கொண்ட நமது நாட்டில் வீடற்றவர்கள் எண்ணிக்கை குறைந்தபட்சம் ஒரு கோடிக்கு மேலாவது இருக்கும். நேபாளம், பங்களாதேஷ் நாடுகளிலிருந்து இந்தியாவின் திறந்த எல்லையைக் கடந்து குடியிரிமை இல்லாத மக்களின் நிலை மற்றொரு சிக்கலான பிரச்சனை.

மேலை நாடுகளிலோ, மற்ற இடங்களிலோ வேலை வாங்கித்தருவதாக ஆசைக்காட்டி மனிதர்களை வைத்து நேர்மையற்ற வியாபாரம் செய்யும் தரகர்கள் நகரங்களில் அண்டிப் பிழைக்கும் குடும்பங்களை குறிவைக்கின்றனர், அதில் பல பெண்கள் பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தப் படுகின்றனர். உலகில் பல நாடுகளிலிருந்தும் இவ்வாறு லட்சக்கணக்கான மக்கள் அடிமைத்தொழிலில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். அதில் 68 சதவிகிதம் பெண்களும் குழந்தைகளும் பாலியல் வணிகத்தில் சிக்குகின்றனர். நேபாளத்திலிருந்து சராசரி ஆண்டொன்றுக்கு 2 லட்சம் நேபாளி பெண்கள் கடத்தப்பட்டு இந்தியாவில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மனிதர்களை கடத்தி அடிமைத்தொழிலில் ஈடுபடுத்தும் “க்ரைம் சிண்டிகேட்” என்று கட்டுப்பாட்டோடு இயங்கும் குற்ற வணிக கூட்டமைப்பு போதைப் பொருள் கடத்தலுக்கு அடுத்தால் போல், கருப்புப்பணம் ஈட்டுகிறது என்பது சர்வதேச போலிஸ் அமைப்புகள் எதிர்கொள்ள வேண்டிய மிகப்பெரிய பிரச்சனை.

அடுத்த ஐந்து வருடங்களில் உலகில் அதிக ஜனத்தொகை கொண்ட நகரங்களில் முதல் பத்து நகரங்கள் ஆசிய நாடுகளில் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. டோக்கியோவிற்கு அடுத்து வரும் மும்பை நகரின் ஜனத்தொகை 2015ம் ஆண்டு சுமார் 2 கோடியே எண்பது லட்சத்தை எட்டிவிடும். இந்த ஜனத்தொகை பெருக்கத்தோடு வீடில்லாதவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

வருங்காலத்தில் காவல்துறை சந்திக்க வேண்டிய மிகப்பெரிய பிரச்சனை நகரங்களில் இருக்கக்கூடிய நெரிசலை சமாளிப்பது ஒன்று தான். இந்த நெரிசல் தனிமனிதனை மறைத்து விடுகிறது. நகரங்களுக்கு வந்து போகிறவர்கள் என்று மிதக்கும் மக்கள் கூட்டம் வேறு. இந்த மக்கள் கூட்ட கண்காணிப்பை மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஒன்று சந்தேகமான நபர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தல். மற்றவர்களை குற்றங்களில் ஈடுபடாத வகையில் கண்காணித்து தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் பிச்சை எடுப்பவர்கள், குழந்தைகளை திருட்டுத் தொழிலில் ஈடுபடுத்துதல் போன்ற குற்றங்களில் உறையச் செய்யும் கயவர்களை பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்ட தனிக் காவல் பிரிவுகள் மூலம் நடவடிக்கை எடுத்தல் என்று மூன்று வகையான முக்கியப் பணிகள் காவல்துறைக்கு உண்டு.

இருக்க இடமில்லாமல் அலையும் பெண்களின் நிலை மிகவும் வேதனைக்குரியது. நாற்பது வயதுக்குள் தனியாக முகாந்திரம் இல்லாத பெண் என்றாலே காவல் துறையினர் விபச்சாரத் தடுப்பு வழக்கில் கைது செய்து நீதிமன்ற காவலில் அனுப்பிவிடுவார்கள். மனித உரிமைகள் விழிப்புணர்வினாலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் முயற்சியாலும் சந்தர்பவசத்தால் பாலியல் தொழிலில் சிக்கும் பெண்கள் குற்றவாளிகளாக பாவிக்காமல் பாதிக்கப்பட்டவர்களாக கருத வேண்டும் என்ற நிலை வரவேற்கத்தக்கது. இவ்வாறு மீட்கப்படும் பெண்கள் குடும்பத்தோடு இணைக்கப்படுகின்றனர் அல்லது சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகை செய்யப்படுகிறது.

ஒண்ட இடமில்லை என்றாலே அது ஒருவரது மனநிலையை வெகுவாக பாதிக்கும். நகரங்களில் வீடும் வேலையும் இல்லாதவர்கள் முக்கால் சதவிகிதம் இத்தகைய மனநிலை அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். பெண்களை இது மேலும் பாதிக்கும். போதைப் பொருள் கடத்துபவர்கள் இவர்களை போதைப் பொருளுக்கு அடிமையாக்கி போதைப் பொருள் விற்பதற்கு பரவலாக அனுப்புகிறார்கள். இவர்கள் காவல்துறையிடம் சிக்கிக் கொண்டாலும் போதை முதலைகளுக்கு கவலையில்லை ஏனெனில் பராரியாக திரிபவர்களுக்கு குறைவில்லை. இந்த குற்றச் சூழலை முறியடிப்பது நகரக் காவல்துறையின் தலையாய பணி. தவறினால் அது சட்டம் ஒழுங்கை வெகுவாக பாதிக்கும்.

ஆதரவற்ற மனநிலை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு புனர்வாழ்வு கொடுப்பதில் செம்மையான பணிகள் செய்து வரும் நிறுவனம் “பானியன்” என்ற தன்னார்வ தொண்டு மையம். 2004ம் வருடம் பானியனோடு சென்னை புறநகர் காவல்துறை இனணந்து “டயல் 100” என்ற திட்டத்தை வகுத்து சென்னை நகரில் ஆதரவற்று வாடும் பெண்களை மீட்டு அவர்களுக்கு சிகிச்சை அளித்து அவர்களது குடும்பத்தோடு இணைப்பது அல்லது சுயமாக வேலை செய்து பிழைக்க வழிவகை செய்யப்பட்டது. ஆரம்பிக்கப்பட்ட ஒரு வருடத்திலேயே சுமார் 300 பெண்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டது. காவல்துறைக்கு நல்லவடிவம் கொடுக்கும் இத்திட்டம் இன்றும் செயலாக்கத்தில் உள்ளது.

நாடு முன்னேற்றம் அடைந்து வருவதின் பயன் எல்லோருக்கும் சென்று அடைந்தால் தான் சமுதாயம் சுமுகமான நிலையில் செயல்படும். ஏழைகளின் நிலை ஓரளவு உயர்திருந்தாலும் பணக்காரகள் பன்மடங்கு பெருகிவருவதோடில்லாமல் ஏழை பணக்காரர்களுக்கிடையே உள்ள இடைவெளி அதிகமாகிக் கொண்டுதான் வருகிறது. சமுதாயத்தில் உள்ள இத்தகைய மேடுபள்ளங்களை இட்டு நிரப்புவது நமது கடமை. சட்டீஸ்கர், ஒரிசா, பீஉறார் மாநிலங்களில் சில பின்தங்கிய மாவட்டங்களில் வளர்ந்துவரும் மாவோயிஸ்ட் பிரச்சனை இந்தியாவின் நெரிசல் மிக்க நகரங்களுக்கும் ஊடுருவும் அபாயம் உள்ளது என்று பாதுகாப்பு வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். நாட்டின் வளர்ச்சியின் பயன் நிறைவாக எல்லோருக்கும் நிரவப்பட்டால் தான் அமைதி காக்க முடியும். முதல் கட்டமாக அண்டியும் ஒண்டியும் வீதியில் இருக்கும் திக்கற்றவர்களை தேசிய நீரோட்டத்தில் சேர்த்தால் தான் சமுதாய அமைதி சாத்தியமாகும்.

Published in Dinamani Newspaper on 19.07.2010