Showing posts with label கேள்வி பிழைக்குமா இன்று ?. Show all posts
Showing posts with label கேள்வி பிழைக்குமா இன்று ?. Show all posts

Monday, January 24, 2011

கேள்வி பிழைக்குமா இன்று ?


1950ம் வருடங்களில், அமெரிக்காவின் அலபாமா நகரில் பொதுப் பேருந்தில் வெள்ளையர்களும் கருப்பர்களும் ஒதுக்கப்பட்ட இடங்களில் அமர்ந்து செல்லவேண்டும் என்பது விதி. ஆம், அந்த காலகட்டத்தில் பேருந்துகளில் கருப்பர்கள், வெள்ளையர்களோடு கலந்து செல்ல முடியாது. கருப்பர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் தான் அமரவேண்டும். இனபாகுபாடுகளின் உச்சகட்டம். ஆனால் ரோஸா பார்க்ஸ் என்ற பெண்மணி துணிந்து ஒரு முடிவுக்கு வந்தார். 1955ம் ஆண்டு டிசம்பர் 1 அன்று வெள்ளையர்களுக்கான இருக்கையில் அமர்ந்தார். பஸ்ஸில் இருந்த வெள்ளையர்கள் அதிர்ந்தனர். அதில் செல்லமாட்டோம் என்று கீழே இறங்கினர். அந்த பெண்மணியின் துணிச்சல் தொடர்ந்தது. அவளது வைராக்யம் பயந்து ஒதுங்கியிருந்த மற்ற கருப்பர்களுக்கு நாமும் குரல் கொடுக்க வேண்டும் என்ற துணிச்சல் பிறந்தது. நல்லுள்ளம் படைத்த சில வெள்ளையர்களை சிந்திக்க வைத்தது. கேள்வி கேட்க துணிந்த அந்த பெண்மணியின் செயலால் போராட்டம் வெடித்தது. கருப்பர்களது சமஉரிமைக்குரல் ஒலித்தது. “ரேஷியல் டிஸ்கிரிமினேஷன் ” என்ற இன பாகுபாடு தடுப்புச் சட்டம் ஒழிக்கப்பட்டு ஆப்பிரிகாவிலிருந்து அடிமைகளாக அமெரிக்காவிற்கு கொண்டுவரப்பட்ட கருப்பர்களுக்கு சமஉரிமைகள் சட்டப்படி வழங்கப்பட்டது.

உயிர் உடமைகளுக்கு பாதுகாப்பு சுதந்திரம் சமத்துவம் கண்ணியம் போன்ற அடிப்படை மனித உரிமைகளுக்குப் பாதுகாப்பு தருவது அரசின் பொறுப்பு. வாழ்வாதாரம், உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், சுகாதாரம், மருத்துவ வசதி, தரமான கல்வி இவையாவும் முக்கியமான உரிமைகளாகக் கருதப்பட்டு மக்களுக்கு அளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிக்கையில் கூறியுள்ளது.

உரிமைக்குக் குரல் கொடுப்போம் என்று சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு கோஷமிட்ப்படுகிறது. ஆனால் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்கள் போற்றப்படுவதில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும் அவர்களுக்கு பாதுகாப்பும் இல்லை என்பது வேதனைக்குரிய நிலமை. ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையம் இந்த வருடம் “உரிமைகளை நிலைநாட்ட போராடும் மனித உரிமை ஆர்வலர்களை போற்றும் வகையில்” அனுசரிக்கப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளது.

பாகுபாடுபடுத்துதல் பிரித்துப்பார்த்தல், பகுத்துபிரித்தல் எல்லா சமுதாயத்தையும் பீடித்திருக்கக்கூடிய கொடிய நோய். நமது நாட்டிலோ எவ்வளவுதான் ஒழிக்க முயற்சித்தாலும் கிளர்ந்தெழும் நோய். ஒருவரது தரம் பொருட்டல்ல, இனம் தான் முக்கியம்! திறமை, ஆளுமை, நேர்மை என்ற ‘மை’ களுக்கல்ல வரவேற்பு. சாதி இனம் தோலின் நிறம் மனசாட்சியற்ற வளைந்து கொடுப்பதில் திறமை போன்றவைதான் வசியவைக்கும் ‘மை’. சிந்தனை, சொல், செயல் ஒன்றி இருப்பதில்லை. இந்த முரண்பாடுகளால் தான் வண்மைகள் அழிகின்றன. வன்மைகள் முளைக்கின்றன.

2005ம் ஆண்டு தகவல் அறியும் சட்டம் நடைமுறைக்கு வந்தது. பெருவாரியாக மக்கள் வரவேற்பைப் பெற்றது. ஆனால் நடைமுறையில் தான் எவ்வளவு சிக்கல்கள். வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திலும் தகவல் பரிமாற்ற புரட்சியிலும் இரகசிய கோப்புகள் என்ற வரைமுறையை நடைமுறைப்படுத்த முடியாது என்பதை விக்கிலீக்ஸ் நிரூபித்துள்ளது. சர்வதேச அளவில் நிலவும் வெளிப்புறமான சம்பரதாய உரையாடல்களின் போலித்தனத்தையும், இலைமறைவு காய் மறைவாக பரிமாரப்படும் இரகசிய கணிப்புகளை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. விக்கிலீக்ஸ் பொறுப்பாளர் திரு ஜுலியன் அசாஞ் லண்டனில் காவல் விசாரணையில் உள்ளார். இதனுடைய தாக்கம் நாளடைவில்தான் தெளிவாகும். வெளிப்படையான நிர்வாகமின்றி தகவல்கள் மறைக்கப்பட்டு மறுக்கப்பட்டால் இத்தகைய தகவல் கசிவுகள் ஏற்படும் என்பது பொறுப்பில் உள்ளவர்கள் கற்க வேண்டிய பாடம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழகம் முன்நிறுத்தியுள்ள ஒரு முக்கிய மனித உரிமை பிரச்சனை இனம், மதம், சிறுபான்மை, குலம், ஜாதி போன்ற பிரிவுகளின் அடிப்படையில் சமுதாயத்தை பிளவுபடுத்தி இழைக்கப்படும் கொடுமைகள். ஒவ்வொரு நாட்டிலும் அங்கு காலம் காலமாக வசித்து வரும் ஆதிஇனத்தவர் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். நாட்டின் முன்னேற்றத்தின் பயனளிப்பு அவர்களுக்கு சென்றடைவதில்லை. பெரிய அளவில் திட்டமிடும் பொழுது ஆதிஇனத்தவர் பாதிக்கப்படுகின்றனர். அவர்களது வாழ்வாதாரம் குலைகிறது. அவர்களுக்கு சென்றடைய வேண்டிய ஈட்டுத்தொகை உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. அபகரிக்கப்பட்ட நிலம் அங்கு ஏற்படும் முன்னேற்றத்தால் விலை உயரும். அதன் பயன் அவர்களுக்கில்லை. வருங்கால விலைவாசி உயர்வுக்கான ஈடும் கொடுக்கப்படுவதில்லை. உலகளவில் 370 மில்லியன் அதாவது 37 கோடி மக்கள் இவ்வாறு கொடுமைக்கு ஆளாகின்றனர். வறுமைக் கோட்டின் கீழ் நிரந்தரமாக வாழ்கின்றனர்.

வேலைத்தேடி நாடுவிட்டு போகும் மக்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டு வருகிறது. உலக ஜனத்தொகையில் சுமார் 3 சதவிகிதம் அதாவது 20 கோடி மக்கள் தமது சொந்த நாட்டிலிருந்து பிரிந்து வேறுநாட்டில் பணிபுரிகின்றனர். வேலை வாங்கி கொடுப்பதாக ஏமாற்றி மனிதர்களை வைத்து இழிவணிகம் மிகப்பெரிய மனித உரிமைப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. தத்தெடுத்த நாடுகளில் அடிப்படை வசதிகூட இல்லாத வாழ்க்கை. அதிக வேலைபளு, குறைந்த ஊதியம் என்று அவர்கள் அடிமைகளாக நடத்தப்படுவது வேதனைக்குரியது. அதிலும் இந்தியாவிலிருந்து வேலைத்தேடி அரபு நாடுகளுக்கு சென்றவர்களில் தமிழர்கள் அதிகமாக அவதியுறுகிறார்கள் என்பது உண்மை. கேரளா மாநிலத்திலிருந்து சென்றவர்களிடம் காணப்படும் ஒற்றுமை, வரிந்து கட்டிக் கொண்டு விட்டுக்கொடுக்காது உதவும் உணர்வு தமிழர்களிடம் இல்லை என்று கூறப்படுகிறது. சந்தர்பவசத்தால் சட்டத்தின் பிடியில் சிக்கியவர்களுக்கு உரிய சட்ட உதவியும் மனித நேய ஆறுதலும் கிடைப்பதில்லை. இவ்வாறு வெளிநாட்டிற்கு வேலை நிமித்தமாக குடிபெயர்பவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு அரசுத் துறை உள்ளது. அதில் உள்ள சிலர் ஊழல் குற்றச்சாட்டிற்கு சமீபத்தில் ஆளாகியிருக்கின்றனர் என்பது ஊழலின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு.

எல்லா நாடுகளிலும் இனம், மொழி, மதம் அடிப்படையில் வேறுபட்ட சமூகத்தினர் உள்ளனர் என்பது உண்மை நிலை. இத்தகைய சிறுபான்மையினரின் நலன் பேணுவது அரசு மற்றும் சமுதாயத்தின் கடமை. சிறுபான்மையினரின் கலாச்சாரம் வேறுபடும். கடவுள் வழிபாட்டுமுறை தனித்திருக்கும். பேசும் மொழியில் வித்தியாசம் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு வாழ்வாதாரம், பொருளாதாரம் மற்றும் அரசியலமைப்பின்பால் வழங்கப்பட வேண்டிய உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு மேலோங்கியுள்ளது பற்றி ஐக்கியநாடுகள் சபை வருத்தம் தெரிவித்துள்ளது. 1992ம் வருடம் மொழி, இனம், மதம் அடிப்படையில் சிறுபான்மையினருக்கு அளிக்கப்படவேண்டிய உரிமைகள் அடங்கிய பிரகடனம் ஐக்கியநாடுகள் சபை நிறைவேற்றியது. முக்கியமாக சிறுபான்மையினரின் தனித்துவம் பாதுகாப்பப்பட வேண்டியது அரசின் பொறுப்பு.

நமது நாட்டிலேயே மஉறாராஷ்டிர மாநிலத்தில் பீஉறாரிலிருந்து வந்து பணி செய்யும் இந்தி பேசும் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். கொல்கத்தா நகரில் கொத்தடிமைகளாக கைவண்டி இழுத்து வயிற்றைக் கழுவும் ஒரிசா, ஜார்க்கண்ட், பீஉறார் மாநில பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவரின் வாழ்க்கை கொடுமையானது. சொந்த நாட்டிலேயே உரிமைகள் மறுக்கப்பட்டு மறைக்கப்பட்டு அதைப்பற்றிய உணர்வுமின்றி ஜீவிக்கும் இத்தகைய சிறுபான்மையினரின் நிலை எப்போது சீராகும் என்பது கேள்விக்குறி.

உலக நாடுகளில் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை சுமார் 65 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. கஷ்ட ஜீவன அடிமட்டத்திற்கும் ஒரு கீழ்நிலை உண்டு என்றால் அதில் உழல்பவர் மாற்றுத்தினாளிகள் என்றால் மிகையில்லை. உலகில் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் பலர். அவர்களில் இருபது சதவிகிதம் மாற்றுத் திளனாளிகள். வளர்ந்து வரும் நாடுகளில் 98 சதவிகித மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை. எழுதப்படிக்கத் தெரிந்த மாற்றுத் திறனாளிகள் மூன்று சதவிகிதம். அதிலும் பெண்கள் ஒரு சதவிகிதம். 2008ம் வருடம் மே மாதம் மாற்றுத்திறனாளிகளக்கு அளிக்கப்படவேண்டிய உரிமைகள் சலுகைகள் அடங்கிய பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. அவர்களது உரிமைகள் பெற்றுத் தருவதில் இந்தியா உட்பட பல நாடுகளில் முரண்பாடுகள் உள்ளன என்பது மறுப்பதற்கில்லை. பணிபுரியும் இடத்தில் சகஊழியர்களே மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி புரிவதில்லை என்பது அவசர உலகில் மனிதநேயத் தொய்வின் அடையாளம்.

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்களை களைவேன் என்ற சூளுரை பல கேட்டிருக்கிறோம். வாயுரை நடைமுறைக்கு வருவதில்தான் எவ்வளவு சிக்கல்கள். உத்திரபிரதேசம் கான்பூர் நகரில் உள்ள ஒரு பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவி திவ்யா பள்ளி நிர்வாகியின் மகனால் கற்பழிக்கப்பட்டு பின்பு உயிரிழந்தாள். உண்மையான குற்றவாளிக்குப் பதில் பக்கத்து வீட்டு நபர் கைது செய்யப்பட்ட நிலையில் பல போராட்டங்களுக்குப் பிறகு உண்மையான குற்றவாளி கைதானார். சமீபத்தில் அதே மாநிலத்தில் சீலு என்ற சிறுமி கற்பழிக்கப்பட்டாள். ஆனால் அந்த சிறுமி மீதே திருட்டு வழக்கு ஜோடிக்கப்பட்டு சிறையிலடப்பட்டாள். மனித உரிமைகள் ஆர்வலர்கள், ஊடகங்களின் விழிப்புணர்வால் சந்தேகிக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டார். நமது பின்தங்கிய நிலைமை விளக்க நெஞ்சை உறையவைக்கும் இந்த இரண்டு உதாரணங்களே போதும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஒவ்வொரு வருடமும் அதிகரித்துதான் வருகின்றன. அதிலும் பயங்கர குற்றங்கள் நகரங்களில் நிகழ்வது சகஜமாகிவிட்டது.

‘கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று’ என்பது கவிஞர் கண்ணதாசனின் மறக்க முடியாத வரிகள். நல்ல பதில் கிடைப்பதற்கு உரிய நேரத்தில் கேள்வி கேட்க வேண்டும். கேள்வி கேட்பவர்கள், தன்னலமின்றி உரிமைகளுக்காக போராடுபவர்கள் போற்றப்படவேண்டும். ஆனால் அத்தகைய சமுதாய சேவகர்கள் சந்தித்த சவால்கள், துன்புறுத்தல்கள் பல. 2009-10 இரண்டு வருடங்களில் 12 மனித உரிமை ஆர்வலர்கள் நமது நாட்டில் சமூக விரோதிகள் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். அவர்கள் செய்த ஒரே குற்றம் தகவல் ஆணையத்திடம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேள்வி கேட்டது !. அவர்கள் கேட்டது இடைஞலான கேள்வி ஆனால் நியாயமானது. ஊழலை தட்டிக்கேட்டார்கள் நியாயத்திற்கு உட்படாத ‘கனவான்களாக’ வளைய வருபவர்கள் கயவர்கள் உதவியோடு கண்ணியவான்கள் கதையை முடித்தார்கள்.

மனித உரிமைகளின் உச்சகட்ட மீறல் அல்லது உரிமை மீறல்களின் தாயகம் ஊழல் ஒன்றுதான். ஊழலினால் மற்ற அடிப்படை உரிமைகளான உயிர், உடமை, கண்ணியம், சமத்துவம் பறிபோகின்றன. இதனை கருத்தில் கொண்டுதான் மனித உரிமைகளுக்காக போராடும் உன்னத உயிர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் பிரகடனம். சமுதாய விழிப்புணர்வு தான் இதற்கு நிரந்தர தீர்வு.


This Article is published in Dinamani 20.01.2010