Monday, October 24, 2011

காவல் ஒரு இமயம்


தேசிய பாதுகாப்பு இரண்டு வகைப்படும். வெளிநாட்டுப் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு. இராணுவமும் காவல்துறையும் தேசிய பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எது நமக்குப் பிரச்சனைக்குரியதாக இருக்கிறது உள்நாட்டுப் பாதுகாப்பா அல்லது எல்லை பாதுகாப்பா என்று ஆராய்ந்தால் உள்நாட்டுப் பாதுகாப்புதான் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் இன்றியமையாததது என்பது தெளிவாகும்.

மிகப்பெரிய நாடான இந்தியாவில் வேற்றுமைகள் ஏராளம். இனம், ஜாதி, மொழி, வசதி படைத்தவர், வசதி குறைந்தவர், படித்தவர் படிக்காதவர் என்று வேற்றுமைகளுக்கும், ஏற்றத்தாழ்வுகளுக்கும் குறைவில்லை. இத்தகைய வேற்றுமைகளில் ஒன்றுமை உண்டு, நாம் இந்தியர் என்ற உணர்வு உண்டு என்று பெருமைப்படுகிறோம். ஆனால் இந்த ஒற்றுமையை கட்டிக்காப்பது காவல் துறை என்பதை மறுக்க முடியாது. ஒற்றுமையை குலைக்கும் வகையில் நாசவேலையில் ஈடுபடும் நயவஞ்சகர்களையும் அமைதிக்கு உலைவைக்கும் சமூக விரோதிகள் மீது அந்தந்த மாநிலங்களில் உரிய சமயத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படுவதால்தான் நாட்டின் ஒற்றுமை பாதுகாக்கப்படுகிறது.

தேசிய விரோத சக்திகளை எதிர்கொள்வதில் காவல்துறையினர் பல சவால்களை சந்திக்க நேரிடுகிறது. உலகளவில் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் பரவியுள்ள நிலையில் காவல்துறையின் பொறுப்பு அசாதாரணமனது மட்டுமல்ல, அதை நிறைவேற்ற அமானுஷ்ய சக்தி உடலளவிலும் மன அளவிலும் ஓங்குதல் வேண்டும். தீயதை ஒடுக்க நடக்கும் தர்மயுத்தத்தில் உயிரிழந்த காவல் வீரர்கள் பலர். ஒவ்வொரு வருடமும் சராசரி 1000 காவல்துறை ஆளினர்கள் உயிர்தியாகம் செய்கின்றனர். காயமுற்றவர் எண்ணிக்கை கணக்கிலடங்காது. பணிச்சுமையினால் எல்லா விதமான உடல் உபாதைகளையும் சுமந்து கடமையாற்றுவோர் ஏராளம். 1999-ல் இருந்து 2009 வரை 9310 காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர். சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் உயிர் தியாகம் செய்துள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 21ம் நாள் உயிர் தியாகம் செய்த காவல் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் எல்லா மாநிலங்களிலும் காவல்துறையினரால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.

1959ம் வருடம் திரிசூல் என்ற நமது நாட்டின் வடமேற்கு லடாக் எல்லையில் காவலில் இருந்த 10 மத்திய ரிசர்வ் படையினர் சீனப்படையினரின் தாக்குதலில் போராடி உயிரிழந்தனர். அந்த சம்பவத்திற்குப் பிறகு தான் எல்லைப்பாதுகாப்பு பலப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்து பி.எஸ்.ஃப் என்ற எல்லைப் பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது. உயிரிழந்த காவலர்களின் நினைவாக அங்கு நினைவுச் சின்னம் வைக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 21ம் நாள் மறைந்த காவல்துறையினருக்கு அஞ்சலி செலுத்தும் நாளாக நாடெங்கிலும் அனுசரிக்கப்படுகிறது.

சுயநலம் தலைவிரித்தாடும் இந்தக் காலத்தில் தான், தன் குடும்பம், ஜாதி, இனம் என்ற உணர்வுகள் தான் மேலோங்கி இருக்கின்றன. சமுதாயம் மற்றும் நாடு பற்றி சிந்திக்க நேரமில்லை. இத்தகைய சூழலில் சமுதாய நலனுக்காக நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக கடமை உணர்வோடு பணிகள் செய்யும் காவல்துறையினரை போற்றுவோம்.

இந்தியாவை இணைக்கும் இமயம் போல் நிமிர்ந்து நிற்கும் காவலரை வணங்குவோம்.

-----------

No comments: