சான்றோர்கள், ஆன்றோர்கள் போன்றோர்க்கு அவர்கள் நல்கிய சமூதாயப்பணியை போற்றும் வகையில் நினைவிடமும், சிலைகளும் வைக்கப்படுகிறன. சிலர் விட்டுச் சென்றதும் இட்டுசென்றதும் ஆன பாதை, வரும் சந்ததியினருக்கு உயர்ந்த வழியையும், ஊக்கத்தையும் உந்துதலையும் அளிக்கிறது. தனி ஒருவருக்கு மட்டுமின்றி காலத்தை வென்று, தொடர்ந்து பணிபுரியும் அமைப்புகளுக்கும் இத்தகைய அடையாளச் சின்னங்கள் உள்ளன.
நாட்டின் எல்லைப் பாதுகாப்பில் பணிபுரியும் இராணுவத்திற்கு இத்தகைய சின்னங்கள் பல உள்ளன. போரில் வெற்றிப் பெற்றால் அதற்கு தனியாக வெற்றிச்சின்னம். உயிர் தியாகம் செய்தவர்களுக்கு நினைவாலயம் பல இடங்களில் உள்ளன. சென்னையில் புனித தாமஸ் மலை அருகில் இரண்டாம் உலகப் போரில் உயிரிழந்த பிரிட்டிஷ் ராணுவத்தினருக்கு நினைவுச் சின்னம் உள்ளது. இது அழகான முறையில் பராமரிக்கப்பட்டும் வருகிறது.
எந்த அளவு இராணுவம் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுடிருக்கிறதோ அதே வகையில் காவல்துறை உள்நாட்டுப் பாதுகாப்பில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. இந்தியாவில் ஜாதி, மதம், இனம், மொழி என்ற வேற்றுமை இருந்தாலும் ஒற்றுமை நிலைத்திருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் காவல் துறையின் உறுதியான நடவடிக்கை என்பதில் சந்தேகமில்லை.
இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் என்பவை இந்திய மாநிலங்கள் எல்லாவற்றிக்கும் பொதுவானது. பொது அமைதி மற்றும் காவல்துறை இந்திய அரசியல் சாசனத்தில் 7-ம் உட் பிரிவில் உள்ளது. சட்டம் ஒழுங்கு பராமரிப்பதில் மாநிலங்களுக்கு முழப்பொறுப்பும் அதிகாரமும் உண்டு. பொது அமைதி காப்பதில் எழும் சவால்களை சமாளிக்க அபரிதமான சக்தியை கொடுக்க வல்ல ஏழாம் அறிவு பெற்றதாலோ என்னவோ காவல்துறை அரசியில் சாசனம் ஏழாம் ஷெட்யூலில் வைக்கப்பட்டுள்ளது! இந்திய ஜனாயகத்தை பாதுகாக்கும் காவல்துறை பல தியாகங்கள் செய்தால் தான் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட குறிக்கோளை அடைய முடியும். பணிச் சுமை ஒரு பக்கம், இருபத்திநான்கு மணி நேர தொடர்பணி, குடும்பத்தை சரிவர கவனிக்க முடியாத நிலை, வேளைக்கு சாப்பிட முடியாதலால் வரும் உடல் உபாதைகள், உடற் பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடியாதபடி அகால வேலை பணிகள், சந்திக்க கூடிய கசப்பான பிரச்சனைகளால் மேலும் மன உளச்சல் அதிகரிப்பு என்று மன அழுத்தம் நிறைந்த அன்றாட பணிகளை ஒரு காவலர் சந்திக்கிறார்
தினந்தோறும் குற்றம் புரிந்தவர்களோடு போராடுவதில் பல ஆபத்துகளை எதிர் கொள்ள வேண்டும். பல நேர்வுகளில் உயிரை பணயம் வைத்து அபாயங்களை சந்திக்க வேண்டும். இத்தகைய சூழலில் உயிரிழப்பு தவிர்க்க முடியாதது. குற்றம் புரிபவர்கள் பல முறை அவர்களது முயற்சியில் தோற்கலாம் ஆனால் ஒரு முறை வெற்றி பெற்றாலும் அது சமுதாயத்திற்கு பேரிழப்பு. ஆனால் காவலன் ஒவ்வொரு முறையும் குற்றவாளியோடு போராடுகையில் வெற்றி பெற வேண்டும். ஒரு முறை தோற்றாலும் செய்த நற்பணி எல்லாம் மறைந்து தோல்வியே மேலோங்கும். இது மேலும் மன அழுத்தத்தைக் கொடுக்கும்.
ஆண்டு தோறும் சுமார் 1000 காவல் களப்பணியாளர்கள் பாதுகாப்புப் பணியில் உயிர் துறக்கின்றனர். போன வருடம் சுமார் 900 களப்பணியாளர்கள் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் ஜனவரி 2010 ஆண்டு நடு ரோட்டில் அமைச்சர் பாதுகாப்புப்பணியில் இருந்த SI வெற்றிவேல் சமூக விரோதிகளால் வெட்டப்பட்டு துடிதுடித்து உயிர்ழந்தார். இரு அமைச்சர்கள் அப்போதை மாவட்ட ஆட்சியரும் ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பார்த்தனர். இது செய்தியாக வந்தது. இந்த வருடம் எல்லா மாநிலங்களையும் சேர்த்து 637 போலீஸர் உயிர் துறந்துள்ளர்கள்.
வருடா வருடம் எல்லா மாநிலங்களிலும் ஆக்டோபர் 21-ம் நாள் காவல் பணியில் உயிர் நீத்தவர் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. பல மாநிலங்களில் இதுவெகு விரிவாக பொதுமக்கள் ஆதரவோடு இரத்த தானம், காவலர் பொதுமக்கள் நல்லுரவு கருத்தரங்கு, விளையாட்டுப் போட்டிகள், கவிதை கட்டுரை போட்டிகள் என்று பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. சில மாநிலங்களில் மாநில உள்துறை அமைச்சர்கள் கலந்துகொண்டு காவல் நலத்திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. தமிழ் நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களிலும், தலமையிடத்திலும் போலீஸ் விசேஷ அணிவகுப்பு, மலர் அஞ்சலி, மூன்று முறை வானம் நோக்கி துப்பாக்கி வெற்று குண்டு சுடப்பட்டு வீரவணக்கம் தெரிவிக்கப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர் லடாக் எல்லைப் பகுதியில் திரிசூல் என்ற எல்லைப்பகுதி இருக்கிறது. இந்த எல்லைக்கு மேல்புறம் சைனாவின் எல்லை உள்ளது. இந்தப்பகுதிக்கு செல்வதற்கு லடாக் தலைநகர் ‘லே‘ விலிருந்து ஜீப்பில் ஃபோப்ராங்க் என்ற இடம்; அதன் பிறகு 5 நாட்கள் நடை பயணமாக, சோக்சாலு, மார்ஸ்மிக்லா, ஹாட்ஸ்பிரிங்க் போன்ற பனி சூழ்ந்த இடங்களை கடந்து செல்ல வேண்டும். ‘மார்ஸ் மிக்லா‘ சுமார் 19,000 அடி உயரே உள்ளது. இது எப்போதும் பனி சூழ்ந்த இடம், கடும் குளிர். இந்த எல்லைப்பகுதியில் மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த காவல் வீரர்கள் பணியில் இருந்தனர். 1959-ம் வருடம் ஆக்டோபர் 21-ம் நாள் சைனா தன்னிச்சையாக இந்திய செக் போஸ்ட் மீது தாக்குதல் நடத்தியது. அதில் 10 பாதுகாப்புப் படைவீரர்கள் உயிரிழந்தனர். ஆயினும் மடிவதற்கு முன் எல்லைப்பகுதியை பாதுகாத்து எதிர்தாக்குதல் நடத்தினர். அந்த நிகழ்வில் வீரமரணம் அடைந்த காவல் வீரர்களின் நினைவாக ஹார்ட்ஸ்பிரிங்கில் ஒரு நினைவிடம் நிறுவப்பட்டுள்ளது. 1960-ம் வருடம் நடந்த மாநில காவல்துறை தலைவர்களின் மாநாட்டில் ஒவ்வொரு வருடமும் பணியில் இறந்த காவல் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. எல்லைப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த எல்லைக் காவல்படை பி.எஸ்.ஃப்(BSF) உருவாக்கப்பட்டது. இப்படை நாட்டின் வடமேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் பணிகளை செவ்வனே செய்து வருகிறது.
தலைநகர் தில்லியில் இராணுவத்திற்கு நினைவாலயம் இருப்பது போல வீரமரணம் எய்திய காவல் வீரர்களுக்கும் நினைவாலயம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல வருடங்களாக நிறைவேற்றப்படாமல் இருந்தது. திரு.பிரகாஷ்சிங், ரிபைரோ போன்ற ஒய்வு பெற்ற டிஜீபி-க்களின் முயற்சியால் நினைவிடத்திற்கான வடிவமைப்பு வல்லுனர்களிடமிருந்து கோரப்பட்டு அதில் ஒன்று தேந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 64 வருடங்களில் சுமார் அறுபதாயிரம் காவல் வீரர்கள் வீர மரணம் அடைந்த பிறகாவது புது தில்லியில் இந்த நினைவிடம் அமைய முதல் முயற்சி எடுக்கபப்பட்டதில் திருப்தியடையலாம். இன்னும் ஒரு வருடத்திற்குள் கட்டுமானப்பணிகள், புல்வெளித்தடம் அமைவது முடிக்கப்பட்டுவிடும். அதில் இது வரை உயிர் நீத்த எல்லா காவல் ஆளிநர்களின் பெயர்களும் பொறிக்கப்படும். தியாகிகளின் குடும்பத்தினருக்கு இவ்விடம் புனிதமான ஒன்றாகவும் மனச்சுமையை இறக்கி வைக்க ரம்மியமான வனமாகவும் அமையும். நமது மாநில காவல் தலைமையிடத்தில் முதல் முதவில் நினைவிடம் அமைக்கப்பட்டது. ஆனால் போன வருடம் ஏதோ ஒரு நிபுணர் மூலம் மாற்றியமைக்கப்பட்டதில் பழைய நினைவுக்கல் அகற்றப்பட்டது. கருவூலத்தின் வெளிப்பகுதியை அழகுப்படுத்தலாம் ஆனால் காவல் முன்னோர்கள் நிறுவிய ஸ்தூபியை அதே இடத்தில் நிறுவ வேண்டும்.
அவசர உலகில் ஏதாவது ஒரு நாளாவது காவல் முன்னோடிகள் வழிவகுத்த பாதையை நினைவுகூற, ‘’வீர அஞ்சலி’’ ஒரு வாய்ப்பு அளிக்கிறது. துப்பாக்கி குண்டு முழங்க வீர மரியாதைக்குப் பிறகு ஒலிக்கக் கூடிய குழலோசை, நமது நெஞ்சை நிமிரச் செய்து உறுதியாக காவல் பணியில் அர்ப்பணிக்க வேண்டும் என்று ஒட்டு மொத்த காவல் துறையின் சபத ஒலியாக அமைய வேண்டும். வீர மரணம் எய்திய காவலர் ஆண்டவன் அரவணைப்போடு சொர்க்கத்தில் அமர்த்தப்படுவார் என்பதை பிரதிபலிக்கும் கவிதை.
‘மகனே சரியாக செய்தாயா கடமையை
சிறப்பித்தாயா மனிதப் பிறவியை‘
அகால சித்தியடைந்த காவலனை கேட்டார் கடவுள்,
‘தேவனே செய்தேன் கடமையை ஒரளவு
துப்பாக்கி ஏந்திய நான் தூய்மையான துறவியுமல்ல
தூய்மையாக இருக்கவில்லை நான் எப்போதும்
தூக்கமில்லா பணி சீர்தூக்க நேரமேது
தொழுகையில் குனிய பொழுதில்லை
பழுதில்லா பணிச்செய்த நிறைவுண்டு.
காவல்துறை என்றாலே கடுப்புத்துறை
கடுஞ்சொல் தொடுத்தேன் மனம் ஒவ்வாத போதும்
ஏன் பல சமயம் அளவோடு வன்முறை
சரளிவரிசையாக வசைப்பாட தவறவில்லை
கயவரை தலைதட்ட கை ஒங்க தயங்கவில்லை
நேர்மையாக பணியில் கைநீட்ட பழகவில்லை
கைக்கெட்டி வாய்க்கெட்டா கஷ்ட ஜீவனம்
சமூதாய சீர் குலைவை தினம் பார்த்து மனம் வெதும்பி அழுதென் பல நாள்
என் நிலையில் ஏழை உயிர், உடமை பாதுகாத்தேன்
பகைவர் பயம் தகர்த்தேன் திறந்த வெளியில் பணி செய்து
காலனால் வென்ற காவலனாய் ஒய்ந்து வந்துள்ளேன் ஒண்ட இடம் கேட்டு
கிடைத்தால் இருப்பேன் இல்லையென்றால் புரிந்து கொள்வேன்‘ என்றான் காவலன் கதையைக் கேட்ட தேவன்
“காவலனே வா“ என்றழைத்தார்
‘நரகத்தை நுகர்ந்துவிட்டாய் சொர்கத்தில் உலாவு அமைதியாக‘ என்றார்.“
வீர மரணம் எய்திய காவல்துறையினரை நினைவுகூரும் இந்நாளில் காவல் பணியில் வினை தீர்க்கும் வித்தகனுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்.
00000