Monday, January 26, 2009

திரும்ப வழியுண்டா?


கடந்த 2008-ம் ஆண்டு பயங்கரவாதத்தின் பல கோரமான வடிவங்கள் இந்தியாவின் பல இடங்களில் உயிர் சேதத்தையும், பொருள் சேதத்தையும் விளைவித்தன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஆனால் மக்களை பிளவு படுத்தி ஆதாயம் தேட நினைத்த பிரிவினை சக்திகளின் சதித்திட்டம் பலிக்கவில்லை. மாறாக மக்கள் தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்று ஒன்றுப்பட்டுள்ளனர். இது இந்திய இறையாண்மைக்கும், சுதந்திரத்திற்கும் கிடைத்த வெற்றி. நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் பொறுப்பில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக சிந்தித்து செயல்பட வேண்டிய நேரமிது. பாதுகாப்பு திட்டங்கள், செயல்பாடுகளை வகுக்கும் நிலையில் உள்ளவர்களையும், முக்கியமாக காவல்துறையின் பணிகளை நிர்வாகிப்பவர்களையும், சமுதாய நலம் விரும்பிகள் மற்றுமின்றி சாதாரண மக்களும் உன்னிப்பாக கவனிக்கின்றனர்.

பலர் உள்நாட்டு பாதுகாப்பு எவ்வாறு பலப்படுத்தப்பட வேண்டும் என்று தமது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். காவல் துறையை நவீனப்படுத்த வேண்டும் என்று பொது நல வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. சிலர் காவல்துறைக்கு நவீன ஆயுதங்கள் வாங்குங்கள் என்று அதற்கு நிதி உதவி செய்ய முன்வந்துள்ளனர். இத்தகைய பலதரப்பட்ட மக்களின் ஆதங்கங்கள் காவல்துறை மேலாண்மையை சிந்திக்க வைக்க வேண்டும்.

‘பழைய குருடி கதவை திறடி’ என்று மீண்டும் சலசலப்பு அடங்கிவிட்டது என்று காவல்துறை பழைய மெத்தன நிலைக்கு சென்று விடக்கூடாது. அதற்காக காவல்துறையில் உள்ள அனைத்து ஆளினர்களும் துப்பாக்கி எடுத்து கெண்டு துப்பாக்கி சுடும் பயிற்சியில் கடுமையாக இறங்குவதா? இல்லை பல விசேஷ ஆயுதப் படைகளை உருவாக்கி நமது தெருக்களை போர்க்களமாக மாற்றி மக்களை பயமுறுத்துவதா? பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் தேவையற்ற வேதனைகளுக்கு மக்களை உள்ளக்குவதா? சீரிய அணுகுமுறை இல்லை என்றால் ‘தொடை நடுங்கி’ நடவடிக்கையிலும் மருண்டவனுக்கு எல்லாம் இருட்டு என்ற நிலையில் எடுக்கப்படும் முடிவுகள் மேலும் குழப்பங்களைத்தான் விளைவிக்கும்.

காவல்துறை பணியில் இரண்டு விதமான சூழ்நிலை ஏற்படும். ஒன்று சாதாரண நாட்களில் அன்றாட பணி மற்றொன்று அவசரக் காலப்பணி. காவல்துறையின் எல்லாப் பணிகளும் அவசரக்காலப்பணி என்றாலும் ஆயுதம் ஏந்தி தாக்குதலில் ஈடுபடும் கிரிமினல்களை எதிர்கொள்ளும் காவல்துறையின் தயார்நிலை மிக உயர்ந்ததாக இருக்கவேண்டும். இந்த தயார் நிலையை எவ்வாறு ஏற்படுத்துவது அதைவிட முக்கியம் செயல்படுத்துவது பற்றி செயல்திட்டம் அமைப்பது அவசியமாகிறது.

பெரிய அளவில் சட்டம் ஓழுங்கு பிரச்சனைகள் ஏற்படும் தருணத்தில் அதிகமான காவலர்களை சம்பவ இடத்தில் ஈடுபடுத்தி நிலைமையை சமாளிப்பது எல்லா நேர்வுகளிலும் நாம் பார்க்ககூடிய நடவடிக்கை இதைத் தொடர்ந்து நிரந்தரமாக மேலும் காவலர்கள் வேண்டும் என்ற கோரிக்கை வைத்து காவல்துறையை விரிவுப்படுத்தும் அடுத்தக்கட்ட நடவடிக்கை நடைமுறையில் உள்ளது. இவ்வாறு திட்டமிடாது அசம்பாவிதங்கள் ஏற்படும் ஒவ்வொரு சமயத்திலும் காவல்துறையை விரிவுப்படுத்துவதால் பிரச்சனைகள் தீர்ந்துவிடுமா? சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் 16,000 காவல்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர் என்ற செய்தி வந்துள்ளது. இவர்களுக்கு எவ்வாறு பயிற்சியளிப்பது பயிற்சி கொடுப்பதற்கான கட்டமைப்புகளும், பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளர்களும் இருக்கின்றனவா என்பது தெரிவு செய்யாது பயிற்சி அளிப்பதா? இவற்றை செய்யாமல், ஆராயாமல் காவல்துறையின் எண்ணிக்கையைக் கூட்டிக் கொண்டு போனால் அத்தகைய ஆளினர்கள் விகிதக் கணக்கில் இருப்பார்களே தவிர அவர்களால் பயனுள்ள வகையில் வலிமை சேர்க்க முடியாது.

இராணுவத்தில் பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பதவி உயர்விற்கு பயிற்சித்துறையில் பணி செய்தது முக்கிய தகுதியாக கருதப்படுகிறது. அந்த அளவிற்கு காவல்துறையில் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பது உண்மை. இதற்கு முக்கிய காரணம் தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களை உடனடியாக களப்பணியில் அமர்த்த வேண்டும் என்ற அவசரம். பணியுடன் கூடிய பயிற்சி நடத்தப்படும் போது ஏதாவது ஒரு அவசரப் பணி சாக்கிட்டு காவலர்களை பயிற்சிக்கு அனுப்பாமல் இருப்பது காவலர்களின் செயல்திறன் குறைவதற்கு மற்றொரு காரணம்.

காவல்துறையில் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சில வருடங்களுக்கு முன்னால் ஆறு மாதங்களே இருந்த காவலர் பயிற்சி காலம் ஒன்பது மாத காலமாக உயர்த்தப்பட்டு மேலும் ஆளினர்களுக்கு களப்பணியிலும் பயிற்சி கொடுக்கப்படுகிறது. நீண்ட காலமாக விரப்பன் வேட்டையில் தமிழக காவல்துறை ஈடுபட்டிருந்ததால் வனப்பகுதியில் எவ்வாறு பாதுகாப்பு பணிசெய்யவேண்டும், கடினமான சூழ்நிலையில் கிடைத்ததை வைத்து தனது தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்ட இலக்கை அடைவதற்குரிய பயிற்சியும் முக்கிய அங்கமாக சேர்க்கப்பட்டுள்ளது. எந்த ஒரு நிலையிலும் அடிப்படைப் பயிற்சியின் தரத்தை தாழ்வடைய செய்யக் கூடாது.

சமீபத்தில் பெங்களூரில் முகமுது முகரம் என்ற இருபது வயது மாணவர் காவல்துறை சோதனையைக் கணடு பயந்து தவறாக இராணுவ குடியிருப்பு பகுதியில் நுழைந்து அங்கு பணியில் இருந்த இராணுவக் காவலரின் குண்டுக்கு பலியான பரிதாப சம்பவம் எல்லோரையும் உலுக்கியிருக்கும். இத்தகைய பாதுகாப்பு பிரிவுகளின் தேவைக்கு மீறிய செயல்கள் அபாயகரமானது. வாகனத் தணிக்கையை சரியாக செய்திருந்தால் இந்த நிகழ்வை தவிர்த்திருந்திருக்கலாம். துப்பாக்கி பிரயோகம் செய்ய வேண்டிய சூழ்நிலையிலும் குறைந்தபட்ச காயம் ஏற்படுத்தி தப்பிக்க முயன்றவரை செயலிழக்க வைப்பதுதான் முறை. கடைநிலை பணியாளர்களை குறை சொல்லி பயனில்லை. அவர்களை மேற்பார்வையிடும் அதிகாரிகள் சரியாக அறிவுறுத்த தவறியதாலும் செம்மையான பயிற்சி கொடுக்காததாலும் ஏற்பட்ட தவிர்த்திருக்க வேண்டிய சம்பவம் என்பது மறுக்க முடியாது. முக்கியமான பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் தொடர் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். துப்பாக்கி சுடும் பயிற்சிக் கூடத்தையே பார்க்காதவர்கள் கூட எப்போதோ செய்த பயிற்சியின் அனுபவத்தில் துப்பாக்கி வைத்திருப்பது ஆபத்தானது. இதை கவனிக்கவேண்டிய பொறுப்பு மேற்பார்வையிடும் அதிகாரிகளையே சாரும்.

மேலும் நகரங்களில் ஆயுதம் ஏந்திய எதிரிகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பதே விசேஷ பணியில் ஒரு வகை. இத்தகைய நகர்புற எதிரெழுச்சியை எவ்வாறு கையாள வேண்டும் என்பது பற்றி ஈராக்கில் பணிபுரியும் அமெரிக்க தளபதி டேவிட் பெட்ரியாஸ் என்பவர் வகுத்த திட்டங்கள் இதற்கு முன்னோடியாக அமைந்துள்ளது. அத்திட்டங்கள் அறிவு சார் சமூகத்தின் பாராட்டுதல்களை பெற்றுள்ளது. நகர்புற எதிரெழுச்சியை முறியடிக்க தற்போதுள்ள அணுகுமுறையை மாற்றி அமைத்து அமெரிக்க ஜெனரல் தயாரித்த பயிற்சிக் கையேடு 2008-ம் வருடத்தின் தலைசிறந்த செயல்திட்டமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய செயல்திட்டங்களின் அடிப்படையில் சிறப்பு அணிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட வேண்டும்.
காவல்துறை மேம்படுத்த தகவல் சேகரிக்கும் முறை சீரமைக்க வேண்டும் என்ற கருத்தும் சொல்லப்பட்டுள்ளது. செயலாக்கக்கூடிய தகவல்கள்தான் பயனுள்ளவையாக அமையும். பொத்தம் பொதுவாக கூறப்படும் தகவல்களால் உரிய தடுப்பு நடவடிக்கை சாத்தியமாகாது. எந்தவொரு பெரிய சதித்திட்டமானாலும் செயல்படுத்தும் பொழுது உள்ளூர்வாசிகளின் உதவி நாட வேண்டி வரும். அவர்களும் பணத்துக்கு ஆசைப்பட்டு சதி வலையில் விழக்கூடும். இத்தகைய தகவல்கள் சேகரிப்பதற்கு அந்த சரக காவல் நிலையங்கள் முயற்சி எடுக்க வேண்டும். வெற்றிகரமாக மேலைநாடுகளில் செயல்படுத்தப்படும் ‘க்ரைம் ஸ்டாப்பர்ஸ்’ முறை மூலம் பயனுள்ள தகவல் சேகரிக்கலாம். இத்தகைய காவல்துறை பொதுமக்கள் கூட்டு முயற்சி இந்தியாவிலும் துவக்கப்படவேண்டும்.

மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் காவல்துறையின் அமலாக்கம் வெற்றிகரமாக அமையும். சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் அதிகமாக உள்ள காவல் நிலையங்கள் உண்டு. அத்தகைய காவல்நிலையங்களில் சிறப்பாக செயல்படும் காவல்நிலைய அதிகாரிகளால்தான் நாட்டின் ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு நிலை கணிக்கப்படுகிறது. பணியில் கடினமான மதுரை சமயநல்லூர் போன்ற காவல்நிலைய அதிகாரி மேலதிகாரிகள் வரவின்றி நிலைமையை சமாளித்தால் அவர்தான் சிறந்த போலீஸ் அதிகாரி. இத்தகைய உதவி ஆய்வாளர் எல்லா பொதுமக்களின் நன்மதிப்பை நிச்சயம் பெற்றிருப்பார். அவரது அனுசரணையான அணுகுமுறையால் அப்பகுதி மக்கள் தாமே முன்வந்து தகவல் அளிப்பார்கள். ‘காவல்நிலையம் சென்று பழக்கமில்லை அங்கு சென்று முறையிட உதவுங்கள்’ என்று பலர் கூறக்கேட்டிருக்கிறோம். காவல்நிலையமும் ஒரு அரசு அலுவலகம். அதுவும் 24 மணிநேரம் மக்கள் பாதுகாப்பிற்காக இயங்கிக் கொண்டிருக்கும் சிறப்பு பிரிவு. அங்கு தயக்கமின்றி மக்கள் செல்லும் நிலையை ஏற்படுத்துவது அந்த நிலைய உதவி ஆய்வாளரின் முக்கிய பொறுப்பு. காவல்துறையினர் தமது பணிகளை நேர்மையாகவும் பாரபட்சமின்றி நிறைவு செய்தால்தான் மக்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாகலாம். இதற்கு லஞ்சம் என்ற கொடிய நோயை அறவே ஒழித்தால்தான் காவல் பணிகள் மெச்சப்படும். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று அன்றைய பணிகள் முடிந்தால் போதும் என்றளவில் மேலோட்டமான மேற்பார்வை நாளடைவில் காவல் துறைக்கும் சமுதாயத்திற்கும் பாதகமாக முடியும்.

திரும்ப வழியுண்டா என்றால் நிச்சம் உண்டு – திறம்பட பாதுகாப்பு உணர்வோடு சமுதாயத்தில் உள்ள எல்லா நிலைகளில் உள்ளவர்களும் செயல்பட்டால் நம்மிடையே பாதுகாப்பு உணர்வினை நிலைக்க செய்யவேண்டிய முக்கிய பொறுப்பு காவல்துறையினுடையது.
இந்த கட்டுரை தின மலர் நாளிதழில் 25.01.2009அன்று பிரசுரிக்கப்பட்டது

2 comments:

VALUE PLUS said...

Congrats. Nice to see a blog of an high official, who has some out-of-the-box thinking. While officials like you working hard to create good image for the Police Dept., it is time to weed out those who spoil that. Let us make TN Police a number one, efficient Police again.
- A.Shanmugasundaram
Soft Skills Trainer
pl. visit my blog on police:
http://chennaipolice.blogspot.com

பாரதிய நவீன இளவரசன் said...

அருமையான பதிவு ஐயா.
நீங்கள் பகிர்ந்து கொள்ளும் ஒவ்வொரு விடயமும் மக்களுக்குப் பயன் தரப்போவது உறுதி.

//காவல்நிலையமும் ஒரு அரசு அலுவலகம். அதுவும் 24 மணிநேரம் மக்கள் பாதுகாப்பிற்காக இயங்கிக் கொண்டிருக்கும் சிறப்பு பிரிவு. அங்கு தயக்கமின்றி மக்கள் செல்லும் நிலையை ஏற்படுத்துவது அந்த நிலைய உதவி ஆய்வாளரின் முக்கிய பொறுப்பு.//

பொதுவாக அரசாங்க அலுவலகங்கள் (காவல்துறை உட்பட) என்றாலே லஞ்சமும் மெத்தனப்போக்கும் கோலோச்சும் இடம் என்ற தவறான எண்ணமே மக்கள் மனதில் மேலோங்கியிருப்பதனாலோ என்னமோ, எந்தவொரு அரசாங்க ஊழியருக்கும் பொதுமக்களிடம் நன்மதிப்பு இல்லை. இதற்கு காவல்துறையும் விதிவிலக்கல்ல.

ஒவ்வொரு ஊரிலும், காவல்துறையினர் மக்கள் அமைப்புகளுடன் அவ்வப்போது சில சந்திப்புகள் நடத்தி, மக்கள் அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றி, மக்களோடு நல்லுறவை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். போலீஸ்காரரைக் கண்டு கிரிமினல்கள் பயப்படுகிறார்களோ இல்லையோ, அப்பாவி மக்கள் அஞ்சும் நிலமைதான் இன்று உள்ளது. இது மாற வேண்டும். இணைந்து பணியாற்றுவதன் மூலம் தான் பல சமூகக் கறைகளைக் (social stigma) களைய முடியும்.

நிறைய எழுதுங்கள்.
வாசிக்கக் காத்திருக்கிறோம்.