பாதுகாப்பு நடவடிக்கையை சுருக்கமாக இரண்டு வார்த்தைகளில் அடக்கிவிடலாம் “கைகளை கண்காணிப்பது” – “ஹாண்ட் வாட்சிங்”. எந்த ஊரில், யாரால் சதி திட்டம் வகுக்கப்பட்டாலும் அதை செயல்படுத்த குறிப்பிடப்பட்ட இடத்தில் தீவிரவாதிகளோ, அவர்களது உள்ளூர் கூட்டாளிகளோ களத்தில் இறங்க வேண்டும். தமது கைகளை உபயோகித்துத்தான் சேதங்கள் விளைவிக்க முடியும். ஆதலால் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீஸார் சந்தேகிக்கும் வகையில் நடமாடும் நபர்களை தெரிவு செய்யுங்கள், அவர்களது கைகளை கவனியுங்கள் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
எந்த ஒரு இடத்தில் பாதுகாப்பு எற்பாடு செய்ய வேண்டும் என்றாலும் அதை மையமாக வைத்து அந்த இடத்தை சுற்றி பாதுகாப்பு வடிகால்கள் அமைக்கப்படுகின்றன. இதன் முக்கிய நோக்கம் சம்பந்தம் இல்லாத நபர்களோ, பொருட்களோ சந்தேகிக்கக் கூடிய மனிதர்களோ பாதுகாப்பு மையத்திற்குள் வந்துவிடக் கூடாது என்பதுதான். முக்கிய நபர் பாதுகாப்பிற்க்காக கையாளப்பட்ட இம்முறை சென்னை மாநகரில் 2004-ல் இருந்து பொது இடங்களிலும் மக்கள் பாதுகாப்பிற்காக செயல்படுத்தப்பட்டது. அந்தந்த இடங்களின் முக்கியத்துவத்தை வைத்து பாதுகாப்பு வளையங்கள் அமைக்கப்படுகின்றன. ஒரு இடத்தின் சுற்றளவு பாதுகாப்பு, வாகன தணிக்கை, தனி நபர் சோதனை என்று குறைந்தபட்சம் மூன்று அடுக்கிலிருந்து முக்கியத்துவத்திற்க்கு ஏற்றாற்போல் பல அடுக்கு பாதுகாப்பு வளையங்கள் அமைத்தல் என்ற முறை அமல்படுத்தப்பட்டது. போலீஸார் பாதுகாப்பு வளையங்கள் அமைப்பது என்பது இப்போது வழக்கில் வந்துவிட்டது.
நவம்பர் 26 மும்பாய் நிகழ்வுகள் பலவிதத்தில் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சில துப்பாக்கி ஏந்திய தற்கொலை படையினர் எந்த அளவிற்கு சமுதாயத்தை நிலைகுலைய செய்யமுடியும் என்பதை உணர்த்தியுள்ளனர். இந்த வருடம் 59 தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது. அதில் எதிலும் சம்மந்தப்படாத 441 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். மத்திய உள்துறையின் இணைய தளத்தில் கொடுக்கப்பட்ட கணக்குபடி 2004-ல் இருந்து சுமார் 7000 உயிரிழப்புகள் இம்மாதிரி தீவிரவாத தாக்குதலால் நிதழ்ந்துள்ளன. இம்மாதிரியான தாக்குதல்களை சமாளிக்க முடியாத ‘கையாலாகாத நாடாக’ மாறி வருகிறதா என்று பல சிந்தனையாளர்களும், நாட்டு நலம் விரும்புவர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த வருடம் தொடர் குண்டு வெடிப்பு பெங்களூரு, உத்திரபிரதேசம், ஜெய்பூர், தில்லி, அஸ்ஸாம், மும்பாய் என்று அடுத்தடுத்து நடந்துள்ளது. பாதுகாப்பு பிரிவினர் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க தவறியதால் ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லாமல் இல்லை. உத்திரபிரேதச மாநிலத்தில் கோவில் வளாகங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் பிடிப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதல் திட்டம் பற்றிய தகவல் கொடுக்கப்பட்டது என்று உத்திரபிரதேச போலீஸார் கூறியுள்ளனர். பிடிபட்ட தீவிரவாதிகளிடமிருந்து மும்பையின் முக்கியமான வியாபார தளங்களின் வரைபடங்களும் கைபற்றப்பட்டன. மேலும் கடல் வழியாக தீவிரவாதிகள் மும்பையை ஊடுருவக் கூடும் ஆதலால் கடலோரப் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் என்ற தகவலும் கொடுக்கப்பட்டது. ஆனால் சரியான தடுப்பு நடவடிக்கை எடுக்க மாநில அரசு தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
‘எட்வர்ட் லுட்வார்க்’ என்ற பத்திரிக்கையாளர் மும்பாய் பயங்கரம் பற்றிய குறிப்பில் எவ்வாறு காவல்துறை செயலிழந்தது என்பதை கடுமையாக விமர்சித்திருக்கிறார். இதே மாதிரி நிகழ்வு லண்டனிலோ, இஸ்ரேல் நாட்டிலோ நிகழ்ந்தால் உள்ளூர் காவல்துறையினரும், மீட்பு பணியினரும் உடனடியாக களத்தில் இறங்கி பயங்கரவாதிகளை முறியடித்திருப்பார்கள். ஆனால் மும்பாய் போலீஸாருக்கு இத்தகைய தாக்குதலை சமாளிக்க ஆயுதமும், பயிற்சியும் இல்லை. ஏதோ கடனே என்று ரோந்து சுற்றிக் கொண்டு ஊழலில் உழலும் காவல்துறை பயங்கரவாத தாக்குதல் என்ன சாதாரண தாக்குதலைக்கூட சமாளிக்க பயனற்றவர்கள் என்று சாடியிருக்கின்றார். முக்கியமாக சம்பவ இடத்தை பாதுகாக்காமல் எல்லோரையும் அனுமதித்து அந்த இடம் ஏதோ திருவிழா போல காட்சி அளித்தது, காவல்துறையின் மெத்தனப் போக்கையும், செயல் திறனற்ற நிலையையும் உணர்த்தியது மறுப்பதற்கில்லை. களத்தில் இறங்கிய தீவிரவாதிகள் சுமார் 5000 மக்களை பலி கொள்ள வேண்டும் என்ற திட்டத்தோடு வந்தனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 5000-த்துக்கும் மேற்பட்டவர்கள் சம்பவம் நடந்த தெருக்களிலேயே குழுமியிருந்தனர். தீவிரவாதிகள் கவனம் வேடிக்கை பார்த்த பொதுமக்கள் மீது திரும்பியிருந்தால் விளைவுகள் எவ்வளவு பயங்கரமாக இருந்திருக்கும். தீவிரவாதிகள் தங்கள் இலக்கை அடைவது மட்டுமின்றி எளிதாக தப்பியும் இருக்கலாம் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
இந்தியாவின் முக்கியமான வணிக நகரமான மும்பையிலேயே இந்த நிலை என்றால் மற்ற மாநகரங்களிலும் காவல் துறையினர் எந்த அளவில் தயார் நிலையில் இருப்பார்கள் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அயோத்தியா பாபர் மஸ்ஜித் நிகழ்வுக்குப் பிறகு தொடர்ந்து அசம்பாவிதங்கள் இந்தியாவில் பல இடங்களில் நிகழ்ந்தும் அதை எதிர் கொள்வதற்கான முயற்சிகள் பயனளிக்கவில்லை என்பது நிதர்சன உண்மை. 1992-93-ல் மும்பாயில் நடந்த கலவரங்களுக்கு பின்பும் முதல் தாக்குதலை எதிர்கொள்ளக் கூடிய கமாண்டோ படை மும்பையில் உருவாக்கப்படவில்லை. பலதரப்பட்ட அரசுத்துறைகளை கொண்ட அவசர நிலை குழு செயல்படவில்லை.
தமிழகத்திலும் இம்மாதிரி தாக்குதல்கள் நிகழாமலில்லை. 1984-ல் சென்னை விமான நிலையத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 33 பயணிகள் உயிரிழந்தனர். ஸ்ரீபெரும்புதூர் குண்டு வெடிப்பில் தேசியத் தலைவர் உள்பட பல திறமையான காவல்துறை அதிகாரிகளும் பலியாயினர். ஆனால் இந்த தொடர் சம்பவங்களுக்குப் பிறகு கடலோரப் பாதுகாப்புப்படை அமைக்கப்பட்டது. தமிழகம் 1086 கிலோ மீட்டர் கடற்பகுதி கொண்டது. இந்தியாவின் மொத்த கடற்பகுதியின் நீளம் 7516.6 கிலோ மீட்டர். தமிழக கடற்பகுதியில் 105 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் உள்ளன. 50-க்கும் மேற்பட்ட காவல் தணிக்கை மையங்கள் எண்ணூரிலிருந்து கன்னியாகுமரி வரை கடலோர சாலைகளில் அமைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் கடலோரப் பாதுகாப்பிற்காக 12 கடலோரக் காவல் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கடலோர பாதுகாப்புப் பிரிவினருக்கு ஆழமில்லா கடற்பகுதியில் எவ்வாறு கண்காணிக்க வேண்டும் என்பதற்காக பிரத்யேக பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்திய கடற்படை, மத்திய கடலோர பாதுகாப்பு பிரிவு, டி.ஜி.பி அந்தஸ்த்தில் உள்ள அதிகாரியின் தலைமையில் தமிழக கடலோர பாதுகாப்புப் படை என்று மூன்று அடுக்கு பாதுகாப்பு தமிழகத்தில் செயல்படுகிறது. ஆழமில்லா பகுதிகளில் ரோந்து செல்வதற்கு ஏதுவாக மிதவை படகுகளும் வர உள்ளன. முழுமையான கடலோர பாதுகாப்புப் படை கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு ஒன்றுதான். மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது.
இதே போன்று அசாதாரண தாக்குதல்களை எதிர்கொள்வதற்கு சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோ பிரிவு 1996-ம் வருடம் துவக்கப்பட்டது. வெடி மருந்துகளை கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் முன்னாள் இராணுவ வீரர்களைக் கொண்ட சிறப்புப் பிரிவும், பயிற்சி அளிக்க கமாண்டோ பள்ளியும் தமிழகக் காவல்துறையில் துவக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சிறப்பு படையினருக்கு நவீன துப்பாக்கிகளும், குண்டு துளைக்காத கவசங்களும் எல்லாவற்றிற்கும் மேலாக வீரத்தோடும், துணிவோடும் எதிர்கொள்ளும் சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தொலை நோக்குப் பார்வையோடு செயல்பட்டு தமிழகக் காவல் துறை தயார் நிலையில் உள்ளது. தமிழக காவலர் போர்க்கால அடிப்படையில் பணி செய்யக்கூடிய செயல் திறமையும் நுண்ணிய அறிவும் பெற்றவர் என்பதில் பெருமை கொள்ளலாம்.
மும்பாய், தில்லி, ஜெய்ப்பூர், அகமதாபாத் நகரங்களில் நடந்த அசம்பாவிதங்களுக்குப் பிறகு பாதகமான மதம் சார்புடைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கப்பட்டன என்பதிலும், நடைபெறவில்லை என்பதிலும் ஒரளவு திருப்தி அடையலாம். இது சாதாரண மக்களின் முதிர்ச்சியான மனநிலையை காண்பிக்கின்றது. மக்கள் அமைதியையே விரும்புகிறார்கள். மக்களை பிளவுபடுத்த நினைத்த கலகக்காரர்களின் குறிக்கோள் வெற்றியடையவில்லை மாறாக தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்ற ஒருமித்த எண்ணம் பரவியுள்ளது வரவேற்புக்குரியது. பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் ஒருமித்த கருத்து நிலவ வேண்டும். பயங்கரவாதத்திற்கு காவி, பச்சை, சிவப்பு என்று சாயம் பூசுவது அபாயமான அணுகுமுறை. வெளிஉலக புலனாய்வு பிரிவாகிய “ரா” என்ற அமைப்பை உருவாக்கிய திரு.ராம்நாத்காவ் அவர்கள் பயங்கரவாதியும், பயங்கரவாதமும் தனிமைப்படுத்தி களையப்பட வேண்டியவை என்பதை தெளிவாகக் கூறியுள்ளார்.
சமுதாயத்தில் உள்ள பல பிரச்சனைகள் முக்கியமாக சாதி, மதபூசல்கள், சிறுபான்மையினரின் குறைகள், பெருவாரியான மக்களின் அடிப்படை வசதிகள், குழந்தைகளை தொழிலில் ஈடுபடுத்துதல், மலைவாழ் மக்களின் பிரச்சனைகள், கொத்தடிமை முறை, இடைத்தரகர்களின் கடன் தொல்லையில் தவிக்கும் ஏழை விவசாயிகள் போன்றவை பின்னால் பயங்கர விளைவுகளுக்கு வித்திடும் பிரச்சனைகள். எல்லா நிலையில் உள்ளவர்களும் ஒருங்கிணைந்து இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
சர்வநேர கண்காணிப்பே சுதந்திரத்திற்க்கு நாம் கொடுக்கக் கூடிய விலை. பாதுகாப்பு சோதனையால் ஏற்படும் தாமதத்தை மக்கள் பொருட்படுத்தவில்லை மாறாக ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். நமது மக்கள் எளிமையானவர்கள் மற்ற நாட்டினரைவிட நமக்கு சகிப்புத்தன்மையும் கடினங்களை தாங்கும் மனப்பக்குவமும் அதிகம். இத்தகைய நல்லுள்ளம் படைத்த மக்களின் பாதுகாப்பிற்கு முதலிடம் கொடுக்க வேண்டும். பொதுஜன பாதுகாப்பு காவல்துறையின் தலையாய கடமை என்ற அளவில் செயல்படவேண்டும்.
முக்கிய நபர் பாதுகாப்பு தவிர்க்க முடியாதது. தவிர்க்கவும் கூடாது. ஆனால் தனி நபர் பாதுகாப்பு முகாந்திரம் இன்றி கொடுப்பதும், அத்தகைய பாதுகாப்பு தனி நபரின் அந்தஸ்தின் குறியீடு என்று கருதும் நிலை மாற வேண்டும். வி.ஐ.பி. மட்டுமல்ல வி.ஓ.பி-க்களுக்கும் (வெரி ஆர்டினரி பர்ஸன்ஸ்) பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்போம்.
இந்த கட்டுரை தினமணி நாளிதழில் 02.01.2009 அன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment