Thursday, June 2, 2011

ஏற்றம் தரும் மாற்றம்


ஒரு பாரம் இறங்கியது போல் இருக்கிறது”.

மீண்டும் சுதந்திரம் அடைந்தது போன்ற புத்துயிருட்டும் சுவாசத்தை அனுபவிக்கிறோம் என்ற பல சந்தோஷ உணர்வுகள் மே மாத மாற்றங்களினால் எதிரொலித்தன. இதற்கு முக்கிய காரணம் மக்களால் உணரப்பட்ட பாதுகாப்பின்மையால் தொற்றிக் கொண்ட பயம். என்ன நடக்குமோ என்ற அச்சம் ஒருபுறம் நடந்தவைகளை பார்த்தால் எதுவும் நடக்கலாம் என்ற விரக்தி எல்லோரையும் பாதித்தது என்றால் மிகையில்லை. இந்த நிலை மிகவும் அபாயகரமானது. வேதனை என்னவென்றால் பொறுப்பில் உள்ளவர்கள் இதை போக்க முற்படவில்லை. ஆனால் உரிய நேரத்தில் மாற்றம் ஏற்பட்டது, நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் மக்கள்.

சட்டம் ஒழுங்கு சரிவர இயங்கவில்லை என்றால் எந்த ஒரு அபிவிருத்தி தரக்கூடிய செயல்கள் நடைபெற வாய்ப்பில்லை. ஏன் இயல்பு வாழ்க்கையையும் இது பாதிக்கும். காவல்துறையின் முக்கிய பெறுப்பு இத்தகைய அச்சத்தை நீக்கி நம்பிக்கையூட்டும் விதத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது ஒன்றுதான்.

சிறந்த காவல் துறைக்கு மூன்று குணாதிசயங்கள் அவசியமாகிறது. ஒன்று சட்டத்தை அமல்படுத்தும் திறன், இரண்டாவது பணியில் பரிமளிக்கும் கடமையுணர்வு, மற்றும் மூன்றாவது மனித உரிமைகள் மேவிய நடவடிக்கை, இத்தகைய காவல்துறையின் சிறந்த சட்ட அமலாக்கத்திற்கு சமூக விரோதிகள் பயப்படவேண்டும், பணித்திறனுக்கு அந்த காவல் துறை போற்றப்படவேண்டும், மனித உரிமைகளை மதிக்கும் அத்தகைய காவல்துறை வணக்கத்திற்கு உரியதாகிறது. இந்த உந்நதநிலையை அடைய காவல்துறை முற்படவேண்டும்.

கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில் எற்பட்ட பொருளாதார சரிவு உலக நாடுகளில் எதிரொலித்தது. வீடுகள் வாங்குவதற்கு வங்கிகளிலிருந்து கொடுக்கப்பட்ட கடன் திருப்பிக்கொடுக்கப்படாதாதால் ஏற்ப்பட்ட பொருள் இழப்பு, அமெரிக்கா தொடர்ந்த ஈராக் யுத்தம், ஆப்கானிஸ்த்தான் பிரச்சனை போன்றவை பொருளாதார சுமையை பன்மடங்கு அதிகபடுத்தியுள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பை வைத்துதான் உலக வர்த்தகமே நடைப்பெறுகிறது. அதன் பின்னடைவு சர்வதேச அளவில் தேக்க நிலையை ஏற்படுத்தியது. இதன் தாக்கத்தினால் வேலை வாய்ப்புகள் வெகுவாக குறைந்தன. மக்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் ஏற்படும் பொழுது குற்றங்கள் பெருகும் என்பது சமூக ஆர்வலர்களின் கணிப்பு. தென் கிழக்கு ஆசிய நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளிலும் சமூக விளைவுகளை எதிர் நோக்கி குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டன.

அமெரிக்காவில் 1933 ம் வருடம் ‘க்ரேட் டிப்ரஷன்‘ என்று சொல்லப்படும் அதீத பொருளாதார சரிவினால் ஏற்பட்ட வேலையில்லா திண்டாட்டத்தில் குற்ற நிகழ்வுகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அன்றைய சமூதாயத்தில் நிலவிய சுய கட்டுப்பாடடினால் குற்றங்கள் நிகழாமல் தடுக்கப்பட்டன.

ஆனால் 1960-ம் ஆண்டிலிருந்து ஏற்ப்பட்ட மோசமான பொருளாதார நிலை அதனைத் தொடர்ந்து 1970-ம் வருடத்தில் கச்சா எண்ணொய் உற்பத்தி செய்யும் அரபு நாடுகள் விலையை ஏற்றியதில் ஏற்பட்ட உச்சக்கட்டப் பிரச்சனை உலக நாடுகளிள் பொருளாதாரத்தை வெகுவாக பாதித்தது. இதன் விளைவாக குற்றங்கள் அதிகரித்தன. இதன் அடிப்படையில் குற்ற நிகழ்வு அந்தந்த இடங்களின் பொருளதார நிலையோடு தொடர்புடையது என்ற முடிவினை சமூகக்கண்ணோட்ட நிபுணர்கள் ஆதரித்தனர்.

கஷ்ட ஜீவனத்தோடு குற்ற நிகழ்வுகள் பின்னிப்படருமா என்ற கேள்விக்கு உரிய பதில் பெறுவதற்கு பல ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. ஜேம்ஸ்வில்சன் என்ற குற்ற ஆய்வு நிபுணர் அமெரிக்காவில் நீயூயார்க், சிகாகோ, கலிப்போனியா போன்ற முக்கிய நகரங்களில் குற்ற நிகழ்வுகள் பற்றியும், அவை குறைந்துள்ளனவா, பெருகியுள்ளதா அதற்கு உரிய காரணங்கள் என்ன என்பதைப்பற்றி முழுமையான ஆராய்ச்சி மேற்கொண்டார். பொருளாதார நிலை அடிப்படையிலும், அந்தந்த இடங்களின் சமூக பிரச்சனைகள், இனவாரியாக மக்கள் வாழும் இடங்களில் போதைப் பொருட்களின் நடமாட்டம், அதனோடு இணைந்த குற்றங்கள் என்ற அடிப்படையில் பல்முனைத் தகவல்கள் சேகரிக்கப்பட்டு அதன் விளைவுகள் ஆராயப்பட்டன.

அமெரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவு கொடுங்குற்றங்கள் 2010-ம் வருடம் வெகுவாக குறைந்துள்ளது அன்று அறிவித்தது பலருக்கும் வியப்பை அளித்துள்ளது. கடந்த 40 வருடங்களில் மிககுறைவாக வன்முறைக் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கொள்ளை நிகழ்வுகள் 8 சத விகிதம் கடந்த இரண்டு ஆண்டுகளில் குறைந்துள்ளது என்றும், வாகனத் திருட்டு 17 சதவிகிதம் குறைந்துள்ளது என்பது பதியப்பட்ட குற்றங்களிவிருந்து தெரிய வருகிறது.

நியூயார்க் நகரில் கன்னக்களவு 10 சத விகிதம் குறைந்துள்ளது இது வரவேற்க்தக்க முன்னேற்றம் என்றாலும், பொருளாதார நிலை சரியில்லாத போது எவ்வாறு குற்றங்கள் குறைந்தன என்று நிபுணர்களை சிந்திக்கவைத்தது. நியாயமான வேலையில்லாதபோது சட்ட விரோதமான வேலைகள் நடைபெறுவது இயல்பு! வறுமையும் வேலையின்மையும் தானே மனிதனை குற்றங்களில் ஈடுபடத்தத்தூண்டும்?

அமெரிக்காவில் குற்றங்கள் குறைந்ததற்கு ஒரு முக்கிய காரணம் அதிகமான அளவில் குற்றம் புரிந்தவர்கள் அதிக அளவில் தண்டனைப் பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இது இங்கிலந்து, கனடா, மற்ற மேலை நாடுகளைவிட அதிகம். குற்றம் புரியக்கூடிவர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் குற்ற நிகழ்வுகள் குறைந்துள்ளன.

இன்னொரு காரணம் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு சமுதாயத்தில் பரவியுள்ளது. வீடுகளில் பாதுகாப்பு வளையங்கள், அபாய ஒலி எழுப்பக்கூடிய உபகரணங்கள் பொருத்தப்படுதல், தனியார் பாதுகாப்பாளர்கள் நியமித்தல், போன்ற குற்ற தடுப்பு நடவடிக்கைள் அதிக அளவில் சொத்து சம்மந்தப்பட் குற்றங்கள் குறைந்ததற்கு காரணமாக அமைந்துள்ளது. இது இன்னொரு வரவேற்கத்தக்க முனனேற்றம். மூன்றாவதாக காவல் துறையின் செயல்பாடுகளும் நெறி முறைப்படுத்தப்பட்டு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் குற்றம் நிகழக்கூடிய சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவது குற்றங்கள் குறைவதற்கு வழி வகை செய்துள்ளது.

மேற் கூறியவற்றுள் மூன்றாவது காரணமான காவல்துறையின் நவீன அணுகுமுறை நமது காவனத்தை ஈர்க்க வேண்டும். இந்திய சமுதாயத்தைப் பொறுத்தவரை சமூக ஏற்றத்தாழ்வுகளினாலும், வறுமை சந்தர்ப சூழ்நிலையால் குற்றங்கள் நிகழ்கின்றன. படிப்பறிவின்மையால் நல்லது கெட்டது உணரும் தன்மையை இழக்கச்செய்கிறது. அதை மனதில் கொண்டுதான் சிறைச்சாலைகளில் உள்ள இல்லவாசிகளுக்கு கல்வி கற்க ஊக்கம் கொடுத்து வசதி செய்து கொடுக்கப்பட்டது. ஆனால் மேலை நாடுகளில் நிலை வேறு. வசதி இருந்தும் குற்ற வாழ்க்கையை மரபுக் குற்றவாளிகள் தேர்ந்தெடுக்கிறார்கள். குற்றம் நிகழும் இடங்களை ஆராயும் ‘ஹாட் ஸ்பாட் போலிஸிங்‘ என்ற அணுகுமுறை அமெரிக்காவில் பல நகரங்களில் அமல்படுத்தப்படுகிறது. நமது காவல் துறையிலும் கறும்புள்ளி இடங்கள் என்று வழக்கமாக குற்றங்கள் நிகழும் இடங்கள், பழம் குற்றவாளிகள் வாழும் இடங்கள் குறிக்கப்பட்டு அங்கு போலீஸ் ரோந்து முடுக்கிவிடப்படுகிறது. இது மிக முக்கியமான நடவடிக்கை, இதைத்தவரவிட்டால் நிச்சயமாக குற்றங்கள் பெருகும்.

மேலும் குற்றம் நிகழும் இடங்களில் காவல்துறையினர் கண்காணிப்பை அதிகப் படுத்த வேண்டும். ஏனோதானோ என்று மேலெழுந்தவாரியாக குற்றம் நடந்த இடங்களை ஆராய்ந்தால் போதாது. பாதிக்கப்பட்ட இடங்களில் சுற்றுக்காவலை தீவிரமாக்கினால் குற்றங்கள் குறையும் என்பதை அமெரிகாவில் நடத்தப்பட்ட ஆய்வு தெளிவுபடுத்தியுள்ளது.

வட்டாரக் கலாச்சாரமும் சமுக மதிப்பீடுகளும் குற்ற நிகழ்வுகளை நிர்ணயிக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். போக்கிரிகளின் ஆதிக்கத்தை வளரவிட்டால் அது வட்டாரக் கலாச்சாரத்தை பாதிக்கும். இது குற்ற நிகழ்வுகளுக்கு வித்திடும். இதைத்தான் சமீபகாலத்தில் அனுபவித்தோம். இதை மனதில் கொண்டு காவல்துறை முனைப்பாக செயல்பட்டு அமைதியை நிலை நாட்ட வேண்டும். அது நிலைத்து நிற்க தொடர் முயற்சி எடுக்க வேண்டும்.

பீஹார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் சர்வசாதாரணமாக துப்பாக்கி ஏந்திய தாதாக்கள் நடமாடுவதை தொலைக்காட்சியில் காண்கின்றோம். உரிமங்கள் இல்லாத ஆயுதங்கள் வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆயுதங்கள் கலாச்சாரம் மற்ற இடங்களிருந்து பரவும் வாய்ப்பு உள்ளது. குடும்பங்களில் நிலவும் கட்டுப்பாடு, தரமான கல்வி நிலையங்கள், நிலையான சமூக மதிப்பீடுகள் ஆகியவை ஆரோக்கியமான சமூதாய வளச்சிச்கு இன்றியமையாதவை. மற்றவர்கள் பொருளை அபகரிப்பது, அரசாங்க பணத்தை கையாடுவது ஊழல் புரிவது இழிவான செயல் என்று வெட்கித்தலைக்குனிய வேண்டும். தீயது விட்டீட்டலே நிலையான செல்வம் போன்ற நற்சிந்தனைகள் வளர வேண்டும். சமூக மதிப்பீடுகளின் மதிப்பு, அதன் மதிப்பை மதித்தால்தான் நிலைக்கும்.

எது வாழ்வதற்கு உகந்த நல்ல நகரம் என்று பார்க்கும்பொழுது, எந்த நகரத்தில் அநீதிகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பாதிக்கப்படாதவர்களும் இணைந்து அநீதி இழைத்தவர்களுக்கு தண்டனைப் பெற்றுத் தருகிறார்களோ அதுவே சிறந்த நகரம் என்று 2000 வருடங்களுக்கு முன்பு கிரேக்க சிந்தனையாளர் ஸோலான் கூறியது இன்றும் பொருந்தும். சட்டத்தை மீறுபவர்கள் மீது பாரபட்சமின்றி நேர்மையாக நடவடிக்கை எடுப்பதே இன்றைய நிலையில் காவல்துறையின் தலையாய பெறுப்பு. இதுதான் மக்களின் எதிர்பார்ப்பு. தமிழகம் மீண்டும் அமைதிப்பூங்காவாக காட்சியளிக்கும்.

Thursday, May 19, 2011

வாழ்வின் சாரம் மின்சாரம்


நீரின்றி அமையாது உலகம் என்பது சத்திய வாக்கு. மின்சாரம் இன்றி உழலாது வாழ்க்கை என்ற அளவில் நவயுகத்தில் மின்சக்தி எங்கும் வியாபித்திருக்கிறது. உணவு, உடை, வீடு எவ்வாறு அத்தியாவசியமோ அதேபோன்று மின்சாரம், குடி நீர், சாலை முக்கியமாக கருதப்படுகிறது. ‘ரோட்டி, கப்டா, மக்கான்‘ என்பதோடு ‘பிஜ்லி, சடக், பானி‘ (மின்சாரம், பாதை, தண்ணீர்) என்று வட இந்தியாவில் அரசு இதை உறுதிசெய்ய வேண்டுமாறு மக்கள் கோஷமிடுகின்றனர்.

தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறை பல சர்ச்சைகளையும், பிரச்சனைகளையும் உருவாக்கியுள்ளது. மின்சாரமின்மையால் விவசாயம், தொழில், ஏன் அன்றாட வாழ்க்கையே பாதிக்கப்படுகிறது. தேர்வு நேரத்தில் மின் விளக்கு எரியவில்லை என்றால் மாணவர்கள் எங்கு சென்று படிப்பார்கள்? இளைய தலைமுறைதான் நாட்டின் எதிர்காலம் அவர்கள் அவதிப்பட்டால் பாதிப்பு சமுதாயத்திற்குத்தான்.

தீர்கதரிசியான பிரதம மந்திரி பண்டிட் நேரு சுதந்திர இந்தியாவில் மின் சக்தியை பெருகுவதற்காக பெரிய அணைகள் கட்டி அதன்மூலம் மின் உற்பத்தி செய்து பல்வகை பயனளிப்பு அளிக்ககூடிய திட்டங்களை வகுத்து செயல்படுத்தினார். கனரக தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. இந்த அடிப்படை கட்டமைப்புகள்தான் நாட்டின் அஸ்திவாரம். மின்சார உற்பத்தி பல வகைப்பட்டது. நீர் நிலைகள், காற்றலை, சூரியவெப்பம், அனல் மின், அணுமின் என்ற ஆதாரங்களிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மின்சார உற்பத்தியில் அரசுதான் பிரதான பங்கு வகிக்கிறது. பல தனியார் நிறுவனங்கள் மின்சாரம் தயாரிப்பதற்க்கு ஊக்குவிக்கப்படுகிறன. இதற்காக அரசுடன் ஒப்பந்த பத்திரங்கள் பல மாநிலங்களில் பதிவாகியுள்ளன. ஆயினும் மின் பற்றாக்குறை தொடர் கதையாகவே உள்ளது. காரணங்கள் பல உள்ளன. தேவைகளை சரியாக கணக்கிடாதல், பயன்பாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் முறையாக பராமரிக்கப்படாதல், தடம்மாறி மின்வாரத்தை எடுத்துச் செல்லும்பொழுது ஏற்படக்கூடிய மின் நஷ்டத்தை தடுக்க/குறைக்க, நடவடிக்கை எடுக்க தவறுதல், போன்ற முக்கிய காரணங்கள் மேலும் மின்சாரம் விரயமாக்குவதை தவிர்த்தல், இதற்கு மேலாக மின் உற்பத்தி பெருக்கத்தை திட்டமிடுதல், திட்டமிடப்பட்ட மின்சார உற்பத்தி மையங்களின் கட்டுமானப்பணிகளைத் துரிதப்படுத்துதல் போன்ற பல்முனை சீரான நடவடிக்கைகள் முனைப்பாக எடுக்க வேண்டும்.

தமிழகத்தைப் பொருத்தவரை மதிப்பிடப்பட்ட வருடாந்திர மின்சாரத் தேவை 59,916 மில்லியன் யூனிட்டுகள். நமது உற்பத்தி 29,370 மில்லியன் யூனிட்டுகள்தான், 30,546 மில்லியன் யூனிட்டுகள் அண்டை மாநிலங்களிலிருந்தும் மற்றவகையிலும் வாங்கப்படுகிறது. மின்சார வாரியத்தின் 2010-11 பட்ஜெட் ரூபாய் 38,665 கோடி அதில் செலவு ரூபாய் 30,833 கோடி, வருவாய் ரூபாய் 21,307 கோடி மின்சார வாரியத்தின் பட்ஜெட் எப்போதும் பற்றாக்குறையாகத்தான் வைக்கப்படும் பட்ஜெட். 2010-11 ல் பட்ஜெட் பற்று ரூபாய் 3,701 கோடி.

மின்சாரத் தேவைக்கும் உள்நாட்டு உற்பத்திக்கும் உள்ள இடைவெளி அதிரித்தும் கொண்டே இருப்பது தெளிவு. அதிகமாக விலை கொடுத்து வெளியிலிருந்து மின்சாரம் வாங்குவதால் நிதி நிலையிலும் இந்த பற்றாக்குறை பிரதிபலிக்கிறது.

தமிழகத்தில் நிர்மாணிக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களின் உற்பத்தித்திறன் 10,214 மெகா வாட். இதில் 2,970 மொகவாட் அனல் மின் (தெர்மல்), 2,187 மெகாவாட் நீர்நிலைகளிலிருந்தும் (Hydro), காற்றலை 17 மெகாவாட்(Wind), இதரவகை வாயுகள் மூலம் 515 மெகாவாட்(Gas), தனியார் உற்பத்தி 1,180 மெகாவாட். இதில் சராசரி பயனளிப்பிற்கு எடுக்கப்படுவது சுமார் 8,500 மெகாவாட். மின் உற்பத்தி செய்யும் மையங்கள் தனது தேவைக்கு எடுத்துக்கொண்டு மீதம் உள்ளதை பயனளிப்பிற்கு கொண்டுவரப்படுகிறது (Captive power) .

மின்சாரம் உற்பத்தி மையத்திலிருந்து பல இடங்களுக்கு விநியோகிக்கும் பொழுது மின் இழப்பு ஏற்படுகிறது. இந்த ட்ரான்ஸ்மிஷன் லாஸ்ஒரு வரம்புக்குள் கட்டுப்படுத்த வேண்டும். சராசரி பதினெட்டு சதவிகிதம் தான் ஏற்படுகிறது என்று பதிவு செய்தாலும் மின் இழப்பு இதைவிட அதிகமாக இருக்கும் என்பது கணிப்பு. பல பொது நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்களுக்கு அனுமதியின்றி மின் இணைப்பு தற்காலிகமாக இழுப்பதும் இதில் அடங்கும். பலகோடி ரூபாய் பெறுமானமுள்ள ட்ரான்ஸ்ப்பார்மர்கள், மற்றும் நூதன இணைப்பு, விநியோக உபகரணங்கள் மிக உன்னிப்பாக பராமரிப்பு செய்து உரிய நேரத்தில் பழுடைத்த பொருட்களை மாற்றப்படுவதை உறுதி செய்தால் மின் இழப்பை கணிசமாக குறைக்கலாம். இதை மேற்பார்வையிடுவதில் சுணக்கம் இருப்பது பொதுவான குற்றச்சாட்டு. இதை மேலிடம் உரிய நேரத்தில் தலையிட்டு சீர் செய்ய வேண்டும்.

பொதுமக்களுக்கு வீட்டு உபயோகத்திற்காக கொடுக்கப்படும் குறைந்த அழுத்த மின்சாரம் 12,575 மில்லியன் யூனிட். இது மொத்த தேவையில் 23.8 சதவிகிதம். தொழிற்சாலைகளுக்கு கொடுக்கப்படும் உயர் அழுத்த மின்சாரம் 15,434 மில்லியன் யூனிட். மொத்த தேவையில் இதன் நிலை 29.21 சதவிகிதம். இவை இரண்டும் சீராக வழங்கப்பட எல்லா முயற்சிகளும் எடுக்கவேண்டும்.

விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கும் மாநிலங்களில் தழிகமும் ஒன்று. 12,420 மில்லியன் யூனிட் மின்சாரம், அதாவதுமொத்த தேவையில் 21.5 சதவிகிதம் விவசாயம் சார்ந்த பணிகளுக்காக உபயோகிக்கப்படுகிறது. இலவச மின்சாரம் வரையறுக்கப்பட்ட நேரத்தில் வழங்கப்படுவதில்லை என்ற குறை இருக்கிறது. எப்போது பாசனத்திற்கு தண்ணீர் இரைக்க வேண்டுமோ அந்த நேரத்தில் ‘லோட் ஷெட்டிங்‘ என்று மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிடும். இதனால் பல இடங்களில் டீசல் மோட்டார் மூலம்தான் தண்ணீர் எடுக்க முடியும். ஏழை விவசாயகளுக்கு இதுவும் முடியாது. வானம் பார்த்த பூமி என்று நிலத்தை விடவேண்டிய நிலை. குறைந்த அளவில் கட்டணம் வசூலித்தாவது உறுதியாக மின்சாரம் வழங்குவது சாலச்சிறந்தது.

சிறு குற்றம் செய்தவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்குகிறார்கள் ஆனால் பெரிய வழக்குகளில் உள்ள குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடுகிறார்கள். கீழ்நிலை அரசு ஊழியர் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டு உடனடியாக விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் கோடி கோடியாக அள்ளுபவர்கள் சுதந்திரமாக பவனி வருகின்றனர். இந்த நிலை மின்சாரக் கட்டணம் வசூலிப்பதிலும் நிரூபணமாகிறது. சிறு உபயோகிப்பாளர்கள் உரிய நேரத்தில் மின்சாரக் கட்டணம் செலுத்தவில்லை என்றால் உடனே இணைப்பு துண்டிக்கப்படுகிறது. ஆனால் பல தொழிற்சாலைகள் மற்றும் அதிக உபயோகிப்பாளர்களிடமிருந்து பெறப்படவேண்டிய கட்டணம் நிலுவைத் தொகை சுமார் ஆயிரம் கோடிக்கு குறையாமல் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதுவும் மின்சாரம் விரையமாகுவதற்க்கு காரணம். புதிய சட்டங்கள், நிலையாணைகள், விதிகள் வரையப்படுகின்றன. ஆனால் அவை செயல்படுத்துதில்தான் பிரச்சனை. வசதிக்கு ஏற்றவாறு அமல்படுத்துதல், வேண்டப்பட்டவர் என்றால் நடவடிக்கை தவிர்த்தல் என்ற அணுகுமுறை எந்த நிர்வாகத்தையும் பாதிக்கும் என்பதை நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்கள் உணரவேண்டும். அவர்களது தலையாய கடமை சட்டதிட்டங்களை பாரபட்சமின்றி ஒரு சீராக அமல் படுத்துவதுதான்.

மின்சாரக் கட்டணம் கட்டாமல் இருப்பதும் ஒருவகை மின்சாரத்திருட்டு என்று கொள்ள வேண்டும். இது தவிர வாரியத்திற்கு விண்ணப்பிக்காமல் சுயமாக இணைப்பு எடுத்து மின்சாரத்தை திருடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது, இதுவும் நிர்வாகத்தின் சீர்கேட்டின் அறிகுறி. 2006-07 ம் அண்டில் 2,910 வழக்குகள் பதிவாயின, 2008 ம் வருடம் 3,746 வழக்குகள், 2009 ஆம் அண்டு 4,425 வழக்குகள், 2010-ல் 6,236 வழக்குகள் என்று ஒரு புறம் அமலாக்கம் முடுக்கப்பட்டாலும், மின்சாரத் திருட்டு தொடர் கதையாகவே உள்ளது. கடந்த வருடம் மட்டும் மின்சாரத்திருட்டினால் ஏற்பட்ட இழப்பு சுமார் ரூபாய். 5,000 கோடி இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

எல்லா கிராமப்புறங்களுக்கும் எளிதில் செல்ல முடியாத இடங்களுக்கும் மின் வசதி அளிக்க வோண்டும் என்று திட்டமிடப்படுகிறது. இவ்வாறு பல கோடி ரூபாய் செலவில் கொடுக்கப்படும் மின் இணைப்பினை எவ்வளவு பொறுப்புடன் உபயோகிக்க வேண்டும் என்பதை உணர வேண்டும். பல இடங்களில் சர்வசாதாரணமாக கொக்கிப் போட்டு மின் திருட்டு நடைபெறுகிறது. களத்தில் உள்ள பணியாளார்கள் அதனை கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்பார்வையிடும் அதிகாரிகள் ‘கண்டதே காட்சி கொண்டதே கோலம்‘ என்றில்லாமல் களத்தில் நேரடியாக பார்வையிட்டால் அத்தகைய முறைகேடுகள் நடவாமல் கடும் நடவடிக்கை எடுக்க முடியும், எடுக்கவும் வேண்டும்.

மின் உற்பத்தி பெருக்குவதற்க்கு திட்டமிட்டு நடவடிக்கை எடுத்தல் அத்தியாவசியம். நீர் முலம் மின்சாரம் உற்பத்தி தான் குறைவான முதலீட்டில் குறைந்த விலையில் மின்சாரம் அளிக்க முடியும். நான்கு அனல் மின் நிலையங்கள், எண்ணூர், அத்திப்பட்டு, மேட்டூர், தூத்துக்குடி அகிய இடங்களில் உள்ளன. மேலும் மூன்று அனல் மின்நிலையங்கள் மேட்டூர் மற்றும் சென்னைக்கு அருகிலும் வர இருக்கின்றன இதன் மூலம் 1,800 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க முடியும். அனல் மின்நிலையம் அமைப்பதற்கு குறைந்தபட்சம் நான்கு வருடங்களாகும். அண்டை மாநிலம் ஆந்திராவில் அதிக அளவில் அனல் மின் நிலையங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு நிறை வேற்றப்பட்டுள்ளது. இத்தகைய போர்கால நடவடிக்கை நமது மாநிலத்திலும் தேவை. விசைமூலம் பாய்ச்சப்படும் நிரின் முலமே மேலும் சிறிய அளவில் மின்சாரம் தயாரிக்க முடியும். இதனை மாதிரியாக திரு.நீதிச்சாமி என்ற இளைஞர் தயாரித்துள்ளார். இது பரீட்சார்த்த நிலையில் உள்ளது. இத்தகைய யுக்திகள் மற்றும் சூரிய சக்தி முலம் மின்சாரம் தயாரிப்பு, கழிவு பொருட்கள் முலம், சர்க்கரை ஆலைகளில் பெறப்படும் தாதுக்கள் வைத்து மின்சாரம் தயாரித்தல், காற்று, பல்வகை வாயுகளின் ஆதாரம் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் முயற்சிகள் முடுக்கிவிடப்படவேண்டும்.

உடனடியாக மின்வெட்டினை சமாளிக்க மின்சார உற்பத்தி மையங்களின் மேலாண்மையை மேம்படுத்தி முழுமையான பயன்பாட்டினைப் பெற வழிவகை செய்ய வேண்டும். சர்க்கரை ஆலைகளில் பெறப்படும் கரும்புச்சக்கை, மற்றும் சர்க்கரை உற்பத்தியின் போது கிடைக்கும் உபரிப் பொருட்களை வைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டங்கள் வரையப்பட்டன, ஆனால் செயல்படுத்தவில்லை, இதன் முலம் குறைந்த காலத்தில் மின் உற்பத்தி செய்யலாம்.

மேட்டூர் மற்றும் சென்னைக்கு அருகிலும் வளர்ந்து கொண்டிருக்கும் மூன்று அனல் மின் நிலையங்களின் கட்டுமானப்பணிகளை துரிதப்படுத்தி இந்த வருட இறுதி அல்லது 2012 ஆரம்பத்தில் பயனளிப்பிற்கு கொண்டு வரவேண்டும். மின்சார வாரியத்தின் நிர்வாகத்தை சீர்செய்து பொருளாதார நஷ்டத்தை குறைக்க வேண்டும். ஊழலுக்கு இடம் கொடாமல் குறைந்த விலையில் வெளிமாநிலங்கலிருந்து மின்சாரம் வாங்கும் வெளிப்படையான நிர்வாகமுறை கொண்டு வரவேண்டும். நமது மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை நேரடியாக மின் வாரியம் இடைத்தரகர்களைத் தவிர்த்து கொள்முதல் செய்ய வேண்டும்.

கடந்த காலத்தில் நிர்வாகத்தில் திறமைசாலிகளான திரு. விஜயராகவன் போன்றவர்கள் மின் வாரியத்தின் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் திறம்பட சுயமாக, அரசு மற்றும் மக்கள் நலனுக்காக செயல்பட்டனர். ஆனால் இன்றைய நிலை வேறு ஆமாம் சாமி போடும் நிர்வாகிகள் மற்ற ‘விதத்தில் சௌகரியமாக‘ இருக்கலாம். ஆனால் சீர்மையான நிர்வாகத்திற்கு உகந்தது அல்ல. மிகச்சிறந்த திறமையான பொறியாளார்களையும், அனுபவமிக்க களப்பணியாளர்களையும் கொண்ட சிறப்புவாய்ந்த நிறவனம் தமிழக மின்வாரியம். அவர்களை ஊக்கப்படுத்தி, மின் வெட்டு வாரியம் என்ற அவப் பெயரை போக்கி மக்கள் நல மின் வாரியம் என்ற உந்நத நிலை அடைய வேண்டும். அரசின் நேர்மையான வழிகாட்டுதல் இருந்தால் நிச்சயமாக முடியும்.

This article is publised in Kumudham Reporter (22.05.2011)