“ஒரு பாரம் இறங்கியது போல் இருக்கிறது”.
“மீண்டும் சுதந்திரம் அடைந்தது போன்ற புத்துயிருட்டும் சுவாசத்தை அனுபவிக்கிறோம்” என்ற பல சந்தோஷ உணர்வுகள் மே மாத மாற்றங்களினால் எதிரொலித்தன. இதற்கு முக்கிய காரணம் மக்களால் உணரப்பட்ட பாதுகாப்பின்மையால் தொற்றிக் கொண்ட பயம். என்ன நடக்குமோ என்ற அச்சம் ஒருபுறம் நடந்தவைகளை பார்த்தால் எதுவும் நடக்கலாம் என்ற விரக்தி எல்லோரையும் பாதித்தது என்றால் மிகையில்லை. இந்த நிலை மிகவும் அபாயகரமானது. வேதனை என்னவென்றால் பொறுப்பில் உள்ளவர்கள் இதை போக்க முற்படவில்லை. ஆனால் உரிய நேரத்தில் மாற்றம் ஏற்பட்டது, நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் மக்கள்.
சட்டம் ஒழுங்கு சரிவர இயங்கவில்லை என்றால் எந்த ஒரு அபிவிருத்தி தரக்கூடிய செயல்கள் நடைபெற வாய்ப்பில்லை. ஏன் இயல்பு வாழ்க்கையையும் இது பாதிக்கும். காவல்துறையின் முக்கிய பெறுப்பு இத்தகைய அச்சத்தை நீக்கி நம்பிக்கையூட்டும் விதத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது ஒன்றுதான்.
சிறந்த காவல் துறைக்கு மூன்று குணாதிசயங்கள் அவசியமாகிறது. ஒன்று சட்டத்தை அமல்படுத்தும் திறன், இரண்டாவது பணியில் பரிமளிக்கும் கடமையுணர்வு, மற்றும் மூன்றாவது மனித உரிமைகள் மேவிய நடவடிக்கை, இத்தகைய காவல்துறையின் சிறந்த சட்ட அமலாக்கத்திற்கு சமூக விரோதிகள் பயப்படவேண்டும், பணித்திறனுக்கு அந்த காவல் துறை போற்றப்படவேண்டும், மனித உரிமைகளை மதிக்கும் அத்தகைய காவல்துறை வணக்கத்திற்கு உரியதாகிறது. இந்த உந்நதநிலையை அடைய காவல்துறை முற்படவேண்டும்.
கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில் எற்பட்ட பொருளாதார சரிவு உலக நாடுகளில் எதிரொலித்தது. வீடுகள் வாங்குவதற்கு வங்கிகளிலிருந்து கொடுக்கப்பட்ட கடன் திருப்பிக்கொடுக்கப்படாதாதால் ஏற்ப்பட்ட பொருள் இழப்பு, அமெரிக்கா தொடர்ந்த ஈராக் யுத்தம், ஆப்கானிஸ்த்தான் பிரச்சனை போன்றவை பொருளாதார சுமையை பன்மடங்கு அதிகபடுத்தியுள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பை வைத்துதான் உலக வர்த்தகமே நடைப்பெறுகிறது. அதன் பின்னடைவு சர்வதேச அளவில் தேக்க நிலையை ஏற்படுத்தியது. இதன் தாக்கத்தினால் வேலை வாய்ப்புகள் வெகுவாக குறைந்தன. மக்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் ஏற்படும் பொழுது குற்றங்கள் பெருகும் என்பது சமூக ஆர்வலர்களின் கணிப்பு. தென் கிழக்கு ஆசிய நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளிலும் சமூக விளைவுகளை எதிர் நோக்கி குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டன.
அமெரிக்காவில் 1933 –ம் வருடம் ‘க்ரேட் டிப்ரஷன்‘ என்று சொல்லப்படும் அதீத பொருளாதார சரிவினால் ஏற்பட்ட வேலையில்லா திண்டாட்டத்தில் குற்ற நிகழ்வுகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அன்றைய சமூதாயத்தில் நிலவிய சுய கட்டுப்பாடடினால் குற்றங்கள் நிகழாமல் தடுக்கப்பட்டன.
ஆனால் 1960-ம் ஆண்டிலிருந்து ஏற்ப்பட்ட மோசமான பொருளாதார நிலை அதனைத் தொடர்ந்து 1970-ம் வருடத்தில் கச்சா எண்ணொய் உற்பத்தி செய்யும் அரபு நாடுகள் விலையை ஏற்றியதில் ஏற்பட்ட உச்சக்கட்டப் பிரச்சனை உலக நாடுகளிள் பொருளாதாரத்தை வெகுவாக பாதித்தது. இதன் விளைவாக குற்றங்கள் அதிகரித்தன. இதன் அடிப்படையில் குற்ற நிகழ்வு அந்தந்த இடங்களின் பொருளதார நிலையோடு தொடர்புடையது என்ற முடிவினை சமூகக்கண்ணோட்ட நிபுணர்கள் ஆதரித்தனர்.
கஷ்ட ஜீவனத்தோடு குற்ற நிகழ்வுகள் பின்னிப்படருமா என்ற கேள்விக்கு உரிய பதில் பெறுவதற்கு பல ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. ஜேம்ஸ்வில்சன் என்ற குற்ற ஆய்வு நிபுணர் அமெரிக்காவில் நீயூயார்க், சிகாகோ, கலிப்போனியா போன்ற முக்கிய நகரங்களில் குற்ற நிகழ்வுகள் பற்றியும், அவை குறைந்துள்ளனவா, பெருகியுள்ளதா அதற்கு உரிய காரணங்கள் என்ன என்பதைப்பற்றி முழுமையான ஆராய்ச்சி மேற்கொண்டார். பொருளாதார நிலை அடிப்படையிலும், அந்தந்த இடங்களின் சமூக பிரச்சனைகள், இனவாரியாக மக்கள் வாழும் இடங்களில் போதைப் பொருட்களின் நடமாட்டம், அதனோடு இணைந்த குற்றங்கள் என்ற அடிப்படையில் பல்முனைத் தகவல்கள் சேகரிக்கப்பட்டு அதன் விளைவுகள் ஆராயப்பட்டன.
அமெரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவு கொடுங்குற்றங்கள் 2010-ம் வருடம் வெகுவாக குறைந்துள்ளது அன்று அறிவித்தது பலருக்கும் வியப்பை அளித்துள்ளது. கடந்த 40 வருடங்களில் மிககுறைவாக வன்முறைக் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கொள்ளை நிகழ்வுகள் 8 சத விகிதம் கடந்த இரண்டு ஆண்டுகளில் குறைந்துள்ளது என்றும், வாகனத் திருட்டு 17 சதவிகிதம் குறைந்துள்ளது என்பது பதியப்பட்ட குற்றங்களிவிருந்து தெரிய வருகிறது.
நியூயார்க் நகரில் கன்னக்களவு 10 சத விகிதம் குறைந்துள்ளது இது வரவேற்க்தக்க முன்னேற்றம் என்றாலும், பொருளாதார நிலை சரியில்லாத போது எவ்வாறு குற்றங்கள் குறைந்தன என்று நிபுணர்களை சிந்திக்கவைத்தது. நியாயமான வேலையில்லாதபோது சட்ட விரோதமான வேலைகள் நடைபெறுவது இயல்பு! வறுமையும் வேலையின்மையும் தானே மனிதனை குற்றங்களில் ஈடுபடத்தத்தூண்டும்?
அமெரிக்காவில் குற்றங்கள் குறைந்ததற்கு ஒரு முக்கிய காரணம் அதிகமான அளவில் குற்றம் புரிந்தவர்கள் அதிக அளவில் தண்டனைப் பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இது இங்கிலந்து, கனடா, மற்ற மேலை நாடுகளைவிட அதிகம். குற்றம் புரியக்கூடிவர்களின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் குற்ற நிகழ்வுகள் குறைந்துள்ளன.
இன்னொரு காரணம் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வு சமுதாயத்தில் பரவியுள்ளது. வீடுகளில் பாதுகாப்பு வளையங்கள், அபாய ஒலி எழுப்பக்கூடிய உபகரணங்கள் பொருத்தப்படுதல், தனியார் பாதுகாப்பாளர்கள் நியமித்தல், போன்ற குற்ற தடுப்பு நடவடிக்கைள் அதிக அளவில் சொத்து சம்மந்தப்பட் குற்றங்கள் குறைந்ததற்கு காரணமாக அமைந்துள்ளது. இது இன்னொரு வரவேற்கத்தக்க முனனேற்றம். மூன்றாவதாக காவல் துறையின் செயல்பாடுகளும் நெறி முறைப்படுத்தப்பட்டு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் குற்றம் நிகழக்கூடிய சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவது குற்றங்கள் குறைவதற்கு வழி வகை செய்துள்ளது.
மேற் கூறியவற்றுள் மூன்றாவது காரணமான காவல்துறையின் நவீன அணுகுமுறை நமது காவனத்தை ஈர்க்க வேண்டும். இந்திய சமுதாயத்தைப் பொறுத்தவரை சமூக ஏற்றத்தாழ்வுகளினாலும், வறுமை சந்தர்ப சூழ்நிலையால் குற்றங்கள் நிகழ்கின்றன. படிப்பறிவின்மையால் நல்லது கெட்டது உணரும் தன்மையை இழக்கச்செய்கிறது. அதை மனதில் கொண்டுதான் சிறைச்சாலைகளில் உள்ள இல்லவாசிகளுக்கு கல்வி கற்க ஊக்கம் கொடுத்து வசதி செய்து கொடுக்கப்பட்டது. ஆனால் மேலை நாடுகளில் நிலை வேறு. வசதி இருந்தும் குற்ற வாழ்க்கையை மரபுக் குற்றவாளிகள் தேர்ந்தெடுக்கிறார்கள். குற்றம் நிகழும் இடங்களை ஆராயும் ‘ஹாட் ஸ்பாட் போலிஸிங்‘ என்ற அணுகுமுறை அமெரிக்காவில் பல நகரங்களில் அமல்படுத்தப்படுகிறது. நமது காவல் துறையிலும் கறும்புள்ளி இடங்கள் என்று வழக்கமாக குற்றங்கள் நிகழும் இடங்கள், பழம் குற்றவாளிகள் வாழும் இடங்கள் குறிக்கப்பட்டு அங்கு போலீஸ் ரோந்து முடுக்கிவிடப்படுகிறது. இது மிக முக்கியமான நடவடிக்கை, இதைத்தவரவிட்டால் நிச்சயமாக குற்றங்கள் பெருகும்.
மேலும் குற்றம் நிகழும் இடங்களில் காவல்துறையினர் கண்காணிப்பை அதிகப் படுத்த வேண்டும். ஏனோதானோ என்று மேலெழுந்தவாரியாக குற்றம் நடந்த இடங்களை ஆராய்ந்தால் போதாது. பாதிக்கப்பட்ட இடங்களில் சுற்றுக்காவலை தீவிரமாக்கினால் குற்றங்கள் குறையும் என்பதை அமெரிகாவில் நடத்தப்பட்ட ஆய்வு தெளிவுபடுத்தியுள்ளது.
வட்டாரக் கலாச்சாரமும் சமுக மதிப்பீடுகளும் குற்ற நிகழ்வுகளை நிர்ணயிக்கின்றன என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். போக்கிரிகளின் ஆதிக்கத்தை வளரவிட்டால் அது வட்டாரக் கலாச்சாரத்தை பாதிக்கும். இது குற்ற நிகழ்வுகளுக்கு வித்திடும். இதைத்தான் சமீபகாலத்தில் அனுபவித்தோம். இதை மனதில் கொண்டு காவல்துறை முனைப்பாக செயல்பட்டு அமைதியை நிலை நாட்ட வேண்டும். அது நிலைத்து நிற்க தொடர் முயற்சி எடுக்க வேண்டும்.
பீஹார், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் சர்வசாதாரணமாக துப்பாக்கி ஏந்திய தாதாக்கள் நடமாடுவதை தொலைக்காட்சியில் காண்கின்றோம். உரிமங்கள் இல்லாத ஆயுதங்கள் வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆயுதங்கள் கலாச்சாரம் மற்ற இடங்களிருந்து பரவும் வாய்ப்பு உள்ளது. குடும்பங்களில் நிலவும் கட்டுப்பாடு, தரமான கல்வி நிலையங்கள், நிலையான சமூக மதிப்பீடுகள் ஆகியவை ஆரோக்கியமான சமூதாய வளச்சிச்கு இன்றியமையாதவை. மற்றவர்கள் பொருளை அபகரிப்பது, அரசாங்க பணத்தை கையாடுவது ஊழல் புரிவது இழிவான செயல் என்று வெட்கித்தலைக்குனிய வேண்டும். தீயது விட்டீட்டலே நிலையான செல்வம் போன்ற நற்சிந்தனைகள் வளர வேண்டும். சமூக மதிப்பீடுகளின் மதிப்பு, அதன் மதிப்பை மதித்தால்தான் நிலைக்கும்.
எது வாழ்வதற்கு உகந்த நல்ல நகரம் என்று பார்க்கும்பொழுது, எந்த நகரத்தில் அநீதிகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பாதிக்கப்படாதவர்களும் இணைந்து அநீதி இழைத்தவர்களுக்கு தண்டனைப் பெற்றுத் தருகிறார்களோ அதுவே சிறந்த நகரம் என்று 2000 வருடங்களுக்கு முன்பு கிரேக்க சிந்தனையாளர் ஸோலான் கூறியது இன்றும் பொருந்தும். சட்டத்தை மீறுபவர்கள் மீது பாரபட்சமின்றி நேர்மையாக நடவடிக்கை எடுப்பதே இன்றைய நிலையில் காவல்துறையின் தலையாய பெறுப்பு. இதுதான் மக்களின் எதிர்பார்ப்பு. தமிழகம் மீண்டும் அமைதிப்பூங்காவாக காட்சியளிக்கும்.
No comments:
Post a Comment