ஒரு நாட்டின் பரப்பளவு, உள்ளதை விட அதிகமாக முடியாது. கடல் வேறு சிறுக சிறுக உலக உஷ்ண உயர்வால் நிலத்தை
ஆக்கிரமித்துக் கொள்கிறது. ஜனத்தொகை பெருக்கம்
வளர்ச்சிப்பணிகளுக்கு தேவையான கட்டுமானங்கள், நிலத்தின் தேவையை அதிகரித்துள்ளன. இதை சரிகட்ட ஒரே வழி செங்குத்தாக அடுக்குமாடி கட்டிடங்கள்
கட்டுவதைத் தவிர வேறு வழியில்லை.
ஒப்பளிக்கப்பட்ட நிலங்களில் எந்த அளவு எத்தனை உயரம் அடுக்கு
மாடி கட்டிடங்கள் நிறுவலாம் என்பதை பெருநகர வளர்ச்சி கழகம் நிர்ணயிக்கிறது. சில இடங்களில் ஒரு சதுர அடிக்கு ஒரு மடங்கிலிருந்து
இரண்டு அல்லது இரண்டரை மடங்கு வரை கட்ட அனுமதி அளிக்கப்படுகிறது. குடியிருப்பு, தொழிற்சாலைகள்,
வணிக வளாகங்கள் என்று தேவைக் கேற்றவாறு பல்வேறு இடங்கள் பிரிக்கப்பட்டு கட்டிட உரிமங்கள்
வழங்கப்படுகின்றன. நீயூயார்க்,சிகாகோ, பாரீஸ்,துபாய்
போன்ற பெருநகரங்களில் மிக உயரக் கட்டிடங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. துபாயில் புர்ஜ் கலிஃப் என்னும் இடத்தில் சமீபத்தில்
நிறுவப்பட்ட வணிக வளாகத்தின் உயரம் 828 மீட்டர் (2,716 அடி, 160 அடுக்குகள்). சிகாகோ சீயர்ஸ் டவர்ஸ், நீயூயார்க் எம்பையர் ஸ்டேட்
பில்டிங்க் 100 மாடிகளுக்கு மேல் உயரமான கட்டிங்கள் நிலைத்து நின்று நகரத்திற்கு பெருமை
சேர்க்கிறது.
அஸ்திவாரம் வலிமையாக அமையவேண்டும் என்பது மூதுரை, வெளிப்படையான
உண்மை. அழகும் பொலிவும் புதுமையும் மேலோட்டமானது,
ஸ்திரத்தன்மைதான் கட்டிடத்துக்கு பாதுகாப்பு அளிக்கும். நேஷனல் பில்டிங் கோட் ,தேசிய
கட்டிட நிலயாணைகள் 2005ல் இயற்றப்பட்டு, அதில் பாதுக்காப்பாக கட்டிடம் அமைய தேவையான
விதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் சுமார் 1720 உயர்மாடிக்கட்டிடங்கள் உள்ளன. சென்னையில் மற்றும் புறநகர் பகுதியில் 1500க்கும்
மேற்பட்ட கட்டிடங்கள். 15 மீட்டருக்கு மிகுந்த கட்டிடங்கள் அடுக்கு மாடிக்கட்டிடங்கள்
(எம்.ஸ்.பி) என்று பிரிக்கப்பட்டு அதற்கு பெருநகர் வளர்ச்சிச் கழகம் (சிஎம்டிஏ) அனுமதி வழங்குகிறது. கட்டிடம் அமையக்கூடிய சாலையின் விஸ்தாரம், நிலத்தின
பரப்பளவு, அதன் சுற்றுப்புறம் எத்தகைய பகுதி அதாவது தொழிற்சாலை, கேளிக்கை, குடியிருப்பு
ஆகிய பாகுபாடுகளில் எதில் அந்த இடம் அடங்கும் என்பதை வைத்து அனுமதி வழங்கப்படுகிறது. சாதாரணமாக தரை அளவு குறியீடு நிலப் பரப்பளவிற்கு
தகுந்தாற்போல் இரண்டரை மடங்கு வரை வழங்கப்படுகிறது. முழுமையாக கட்டி முடித்த பிறகு அனுமதிக்கப்பட்ட
வரம்புக்குள்ளும் அக்கம்பக்கத்திற்கு பாதிப்பில்லாமல் கட்டப்பட்டிருக்கிறது என்பதை
உள்ளாட்சி கட்டுமான பிரிவால் தணிக்கை செய்யப்படுகிறது. தீயணைப்பு துறை மற்றும் காவல்துறை
தணிக்கை செய்து தீ பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து போலீஸார் தடையின்மை சான்று வழங்குகின்றனர். தீ பாதுகாப்பு குறித்து தேசிய கட்டுமான விதிகளில்
கட்டிடத்தின் தன்மை, பயன்பாட்டைப் பொறுத்து கட்டுப்பாடுகளும் செய்ய வேண்டியவை செய்யக்
கூடாதவை பட்டியல் கொடுக்கப்படுகிறது. குடியிருப்புகள்,
மருத்துவமனைகள் தெழிற்சாலைகள், வணிக வளாகங்கள் திரை அரங்குகள் கல்விக் கூடங்கள் என்ற வகையில் பயன்பாட்டின் அடிப்படையில்
கொடுக்கப்பட்ட விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை தணிக்கை செய்ய வேண்டும். கட்டிடத்தின் ஸ்திரத்தன்மை, கட்டும் போது சிமண்ட்
மண் கலவையின் அளவு, அஸ்திவாரம் கட்டிட உயரத்திற்கு
ஏற்றவாறு உபயோகிக்க வேண்டிய குறியீடுகளை கணித்து, கண்காணித்து முடிக்க வேண்டியது பொறியாளர்
மற்றும் கட்டிடம் கட்டுவதற்கு பெறுப்பேற்றுக் கொண்டவருடைய கடமை. அரசு கட்டிடங்களுக்கு பொதுப்பணித்துறை இதற்கு பொறுப்பேற்கிறது. தனியார் கட்டிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பொறியாளரும்,
கட்டிடம் கட்ட உரிமம் பெற்றவரும் பொறுப்பேற்பது தான் நடைமுறையில் எல்லா நாடுகளிலும்
உள்ளது. இதற்கு உள்ளாட்சி பொறுப்பில் உள்ளவர்களைக்
குறைகூறுவது தவறு. உதாரணமாக பல்வேறு வாகனங்கள் வெவ்வேறு தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு
சாலைகளில் செல்கின்றன. அந்த வாகனங்கள் சாலைகளில்
செல்வதற்கு போக்குவரத்து துறை உரிமம் மற்றும் சான்றிதழ் வழங்குகிறது. ஓட்டுனருக்கும்
ஓட்டுனர் உரிமம் கொடுக்கப்படுகிறது. அந்த வண்டிகளில்
மெக்கானிகல் பழுது இருந்தால் வாகனம் தயாரித்ததில், வாகனப் பராமரிப்பில் தவறு. விபத்து
ஏற்பட்டால் விதிகளை மீறிய ஓட்டுனரின் தவறு, உரிமம் வழங்கிய போக்குவரத்துத்துறையை எவ்வாறு குறைகூற
முடியும்? எந்த ஒரு நிகழ்வையும் அரசியலாக்கி
எல்லோரையும் குறை கூறுவதில் பயனில்லை. ஆக்கப்பூர்மாக வருங்காலத்தில் எவ்வாறு இம்மாதிரி
நேர்வுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பது தான் முக்கியம்.
மௌலிவாக்கம் சம்பவத்தில்
நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள முதலமைச்சரே நேரில் சென்று மீட்புப்
பணிகளை பார்வையிட்டு, நிவாரணப்பணிகளை துரிதப்படுத்தி,
காயமுற்றவறுக்கு ஆறுதல் அளித்து, உயிரிழந்த குடும்பங்களுக்கு நிதிவுதவிக்கு ஆணையிட்டு
பல் முனை நடவடிக்கை துரிதமாக எடுத்தது எல்லோருடைய பாராட்டையும் பெற்றது. மேனாள் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை
கமிஷன் ஒருபுறம், விசேஷ போலீஸ் புலன் விசாரணைக் குழு மறுபுறம், தவறு செய்தவர்கள் மீது
உடன் நடவடிக்கையும், வருங்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் தவிர்ப்பதற்கான வழிமுறைகளும்
வகுக்கப்படும் என்பது உறுதி.
2004-ம் வருடம் சுனாமி என்ற ஆழிப்பேரலை இந்திய
துணை கண்டத்தை தாக்கியபோது தமிழக கடலோரப் பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. உயிரிழப்பு ஏற்பட்டது. சென்னை நகரகடலோரப் பகுதியில் மட்டும் 242 பேரும்
மொத்தம் ஏழாயிரத்திற்கும் மேல் உயிரிழந்தனர். இதற்குப் பிறகு தான் தேசிய அளவில் பேரிடர் மேலாண்மை
மத்திய அரசு அமைத்தது. பேரிடரை எதிர்கொள்ளவும்,
சேதாரத்தை குறைக்கவும் உயிர்களை காப்பாற்றவும், நிவாரணம் வழங்கவும், என்டிஆர்ஃப் என்ற
தேதிய பேரிடர் பாதுகாப்பு படை, பத்து பட்டாலியன்கள் நாட்டின் முக்கிய இடங்களில் நிறுவப்பட்டன, தென் மாநிலங்களுக்கு அரக்கோணத்தில் ஒரு பட்டாலியன்
இயங்குகிறது. ஒவ்வொரு பட்டாலியனிலும் 18 பிரிவுகள்
உள்ளன. ஒவ்வொன்றிலும் பிரத்யேக மீட்புப் பணியில்
விசேஷ பயிற்சிப் பெற்ற காவலர்கள் உள்ளனர்.
அவர்களிடம் நவீன இயந்திரங்கள், உபகரணங்கள் உள்ளன. எந்த ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தாலும் அங்கு சென்று
உதவ வேண்டும். உள்ளூர் நிர்வாகத்திலிருந்து
அழைப்பு வரும் என்று அநாவசிய நிர்வாக சிக்கல்களுக்கு இடம் கொடாமல் தாமே முன் வந்து
செயல்பட வேண்டும் என்பது இந்த மீட்புப் படையின் சிறப்பு அணுகுமுறை.
2004 ம் வருடம் தீயணைப்பு படையை நவீனப்படுத்தவும்
மேம்படத்தவும் நீதியரசர் பக்தவச்சலம் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. கமிஷன் தனது
பரிந்துரையில் தீயணைப்புத்துறை நவீனமயமாக்கல், மீட்புப் பணிகளில் எவ்வாறு செயலாற்றுவது
என்பதை ஆராய்ந்து அதற்காக உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பதையும், தீ பாதுகாப்பு தற்காப்பு
நடவடிக்கைகள் பொது இடங்களில் மேற்கொள்ள வேண்டியது பற்றியும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளுக்கான கருவிகள்
வாங்குவதற்கும் அவற்றை பிரத்யேக வாகனங்களில் பொருத்தி அவை நடமாடும் தானியங்கி மீட்புப்
பணி மையங்களாக செயல்படுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.
பேரிடர் இருவகைப்பட்டது.
இயற்கையால் உண்டாகும் பேரிடர், மனிதனின் அஜாக்கரதையாலும் சட்ட விரோத செயல்களாலும் ஏற்படும்
சேதாரங்கள் என்று இருவகையாக பிரிக்கலாம். பூகம்பம், சுனாமி, புயல், வெள்ளம், கடும்மழை
ஆதானல் ஏற்படும் நிலச்சரிவு, இயற்கையால் விளைபவை.
அதிலும் மரங்களை அழிப்பதாலும் இயற்கைக்கு மாறாக நாம் செயல்படுவதாலும் இயற்கை
அன்னையின் சீற்றம், வெளிப்படுத்தப்படுகிறது.
மனிதனின் தீய செய்கைகளால், விதிமுறைகளை மீறுதலால், நாசவேலையில் ஈடுபடுவதால்
ஏற்படும் நிகழ்வுகள் கொரூரமானவை.
இந்த இரண்டு வகை
அபாயங்களையும் எதிர் கொள்ள தயார் நிலையில் உள்ளது தமிழ்நாடு தீயணைப்புத்துறை. இந்தியாவில்
உள்ள மாநிலங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறைகளின் நிர்வாகம், செயல்திறன், நவீன
கருவிகள் கட்டுமானங்கள் பற்றிய ஆய்வு செய்யப்பட்டது. தீயணைப்பு துறை, முதலமைச்சர் அவர்களின் சீரிய நடவடிக்கையால்
பக்தவத்சலம் கமிஷன் பரிந்துரை அடிப்படையில் நவீனமாக்கப்பட்டதால், தமிழ்நாட்டில் தீயணைப்புத்துறை
மற்ற மாநிலங்களைவிட மெச்சத்தக்க வகையில் செயல்படுகிறது.
மௌலிவாக்கம் கட்டடிடம்
இடிந்ததில் தீயணைப்புத்துறை மிக சிறப்பாக செயல்பட்டு காயமுற்ற 27 உயிர்களை காப்பாற்றியது. இத்தகைய இடிபாடுகளில் மீட்புப்பணி சிரமமானது. இடிந்தவற்றை
அகற்றும் பொழுதே சிக்குண்டவருக்கு மேலும் காயம் ஏற்பட வாய்ப்புண்டு. விரைவாக
செயல்படல், நுணுக்கமாக இடிபாடுகளில் தேடுதல், காயமுற்றுவரை காப்பாற்றுதல், உடனடி மருத்துவ
சிகிச்சை, தொழில் நுட்ப அடிப்படையில் ஆராய்ந்து செயலாக்குதல், ஆகியவை மீட்புப்பணியின்
முக்கிய அங்கங்கள். தூர திருஷ்டி காமிராக்கள்
இடிபாடுகளின் இடையே நுழைந்து காயமுற்றவர்கள் எங்கு சிக்கியிருக்கிறார்கள் என்பதை காணொலி
மூலம் பார்க்க முடியும். தீயணைப்புபிரிவில் உள்ள இக்கருவி மிகவும் உதவியாக இருந்தது.
மோப்ப நாய்கள் காவல்துறைக்கு மட்டுமல்ல தீயணைப்புத்துறையின் நண்பன். நவீனமயமாக்கம் திட்டத்தில் அமைக்கப்பட்ட மோப்ப நாய்கள்
பிரிவு இடிபாடுகளில் சிக்கியவரை மோப்பம் பிடித்து இனம் காண உதவும். மோப்ப நாய் பிரிவில் டால்மேஷியன், டாபர்மேன், லாப்ரடார்,
பெர்னார்ட் வகை மோப்ப நாய்கள் இடிபாடுகளில் காயமுற்றவரை மோப்பம் மூலம் கண்டுபிடிக்க
பயிற்சி பெற்றவை. மௌலிவாக்கத்தில் இந்த நாய்
படை காயமுற்றவர்களை காப்பாற்ற பெரிதும் உதவியது.
மீட்புப்பணியில்
ஈடுபட்ட தீயணைப்பு பிரிவு, காவல்துறை என்டிஆர்ஃப் படை வீரர்கள் மற்றும் வருவாய்துறை
அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அவர்கள் பிரத்யேகமாக
பொதுமேடையில் கௌரவித்தது, எல்லோரையும் ஊக்குவிக்கும் விதத்தில் அமைந்தது. அமெரிக்க ஜனாதிபதி ஓபாமா அவர்கள் பதவியேற்றதும்
நீயூயார்க் இரட்டை கோபுரம் தீவிரவாதிகள் தகர்க்கப்பட்ட சம்பவத்தில் பணயாற்றிய தீயணைப்பு,
காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டு விழா நடத்தியது நினைவில் வருகிறது. இதுதான் மேலாண்மை
பொருந்திய தலைவர்களின் பெருந்தன்மை.
அசம்பாவிதங்கள் நிகழாமல்
தவிர்ப்பது ஒருபுறம். அவ்வாறு நிகழ்ந்தால்
உடனடி போர்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு சேதாரத்தை குறைப்பது ஒரு முக்கிய அணுகுமுறையாக
பேரிடர் ஆளுமையில் குறிக்கப்படுகிறது. சென்னை
போன்ற பெருநகரங்களில் பேரிடர் ஆளுமை மையங்கள்,(டிஸாஸ்டர் ரிலீஃப் சென்டர்) அமைக்கப்பட
வேண்டும் என்று மத்திய அரசு நேஷனல் டிஸாஸ்டர் மேனேஜ்மண்ட் அதாரிடி(NDMA) மூலம் அறிவித்துள்ளது.
அதற்கான நிதி மாநகராட்சி மூலம் அளிக்கப்படும். சென்னையில் இந்த மையம் அமைப்பதற்கான
நடவடிக்கை விரைவில் எடுக்கப்பட வேண்டும்.
நமது நாட்டில் செயற்கை
உயரிழப்பு 2013ல் 7,08,478. இதில் கட்டிட குலைவால் 2013-ம் வருடம் 1355 உயிரிழந்தனர்,. அதிகமாக உத்திரபிரதேச மாநிலத்தில் உயிரிழப்பு 279.
தமிழ்நாட்டில் இத்தகைய விபத்துக்களால் வருடத்திற்கு சராசரி 70 உயிரிழப்பு ஏற்படுகிறது. அதனால் தான் பேரிடர் மேலாண்மை கழகம் முக்கிய நகரங்களில்
பேரிடர் தணிப்பு மையங்கள் நிறுவ வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.
விபத்துக்கள் தவிர்க்கப்பட
வேண்டியவை. அதற்கு பல்முனை நடவடிக்கை அவசியம். எந்த நீண்ட பயணத்திற்கும் துவக்கம் முதல்
அடி. கட்டிடங்களுக்கு “அடிதளம்”, “அடிக்கல்”,
கிராமங்களில் கூறுவது போல “கடக்கால்” தான் முதல் அடி. இந்த ஐந்தெழுத்து மந்திரம் தான்
கட்டிடத்தை உறுதிப்படுத்துகிறது.
No comments:
Post a Comment