Monday, October 15, 2012

அவசர உலகில்…



ஒவ்வொரு நாளும் எவ்வளவோ நிகழ்வுகளைப் பார்க்கிறோம், கேள்விப்படுகிறோம்.  ஆனால் சில செய்திகள்தான் நெஞ்சைத் தைக்கின்றன, மனம்பதபதைக்கிறது ‘என்ன கொடுமையப்பா’ என்று சீயோன் பள்ளியில் படித்த குழந்தை ஸ்ருதியின் கோர மரணம் எல்லோர் மனதையும் பாதித்தது.  இத்தகைய விபத்துகளுக்கு முடிவே இல்லையா என்ற கேள்வி எழுகின்றது. சில நாட்கள் சம்பவத்தைப்பற்றிய சர்ச்சை விவாதிக்கப்படும்.  அதற்குள் வேறு ஏதாவது சம்பவம் நிகழும்.  பழைய சம்பவம் மறக்கப்படும்.
கோயம்பத்தூரில் இரண்டு வருடங்களுக்கு முன்னால் தனியார் வேன் ஒட்டும் மோஹன்ராஜ், மிஸ்கின், ரித்திக் என்ற இரண்டு பச்சிளம் குழந்தைகளை பணத்திற்காக கடத்தி பின்பு கொன்ற சோக சம்பவம் மறந்திருக்க முடியாது.  கயவன் மோஹன்ராஜ் பின்பு போலீஸாரால் என்கௌண்டரில் சுடப்பட்டு மாய்ந்தான்.  மோஹன்ராஜ் வழக்கமாக இந்த இரண்டு குழந்தைகளையும் வேனில் பள்ளிக்கு அழைத்து செல்பவன்.  அவன் மனதில் இத்தகைய குரூர எண்ணம் எவ்வாறு வந்தது! தனிமனித ஒழுக்கச் சீரழிவு இந்த அளவுக்கு போய்விட்டதே!
“தினமும் நூற்றுக்கணக்கான பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பல ஆபத்திற்கு உள்ளாகிறார்கள்.  பள்ளி சென்று வருவதே பெரிய சவாலாக உள்ளது,” என்று சில வருடங்களுகளுக்கு முன்  சென்னையில் பள்ளிச் சிறுவன் ஹர்ஷன் விபத்தில் இறந்தபோது பலர் கூக்குரல் எழுப்பினர்.  அதுவும் அந்த சிறுவன் பள்ளியின் வேனில் வீட்டுக்கு திரும்பி வண்டியிலிருந்து இறங்கி தந்தையின் கண்முன்னாலேயே அதே பள்ளி வேன் சிறுவன் மீது ஏறி உயிரிழந்தான்.
சியோன் பள்ளி சுருதி விபத்திற்கு ஒரு வாரத்திற்குள் ஆவடியில் இன்னொரு விபத்து.  ஒன்றரை வயது சஞ்சய் தனது சகோதரர்கள் சந்தோஷ், சுதாகர் பள்ளிக்கு வேனில் செல்வதை பார்க்கையில் பள்ளி வேன் சக்கரத்தில் மாட்டிக் கொண்டு இறந்தான்.  இதுவும் பெற்றோர் கண்ணெதிரில்.
ஜீலை 27-ம் தேதி மூன்று வயது சுஜிதா ஆம்பூர் ஈச்சம்பட்டு அருகில் பள்ளி வேனில் சிக்கி உயிரிழந்தாள்.  ஆகஸ்ட் 3-ம் தேதி மதுரைக்கு அருகில் ஆறு வயது ஜெயலஷ்மி பள்ளியிலிருந்து அதிக குழந்தைகளை ஏற்றி வந்த ஷேர் ஆட்டோவிலிருந்து விழுந்து உயிரிழந்தாள்.
சுருதி, ஹர்ஷன் அவர்களது பள்ளி வேனே எமனாக வாய்த்ததுபோல காஞ்சீபுரம் படப்பை அருகில் நடந்த விபத்தில் ஐந்தரைவயது ஆகாஷ் பள்ளி வேனைவிட்டு இறங்கி சாலையைக்கடக்கும் பொழுது அதே வேன் அவன் மீது ஏறியது என்ன கொடுமை.
சில வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்த ஹர்ஷன் விபத்திற்குப் பின் எல்லா பள்ளி வாகனங்களிலும் ஒட்டுனரைத்தவிர நடத்துனரும் பணி அமர்த்தப்பட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  அப்படி இருந்தும் அகாஷ் அவனது பள்ளி ஊர்தியிலேயே சிக்கி உயிரிழந்தான்.
சில மாதங்களுக்கு முன்னால் பஞ்சாப் மாநிலம் அம்பாலா மாவட்டம் பேகதா என்ற இடத்தில் குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றிச் சென்ற மினி வேன் லாரியோடு மோதியதில் 11 குழந்தைகள் மாண்டன,  இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்தன.   இது தவிர பொது இடங்களில் அரசுத்துறையே மேற்கொள்ளும் பல்வேறு செப்பனிடும்  பணிகளில் பள்ளங்கள் நிரப்பபடாமல் விட்டுவிடுவதால் விளையாடும் குழந்தைகள் இத்தகைய குழிகளில் சிக்கி உயிரிழக்கும் விபத்துகள் அதிகமாக நிகழ்கின்றன.  இத்தகைய விபத்துகளில் உயிரைக் காப்பாற்றுவது மிக கடினம்.  அதற்குத் தேவையான உபகரணங்களும் உடனடியாக கிடைப்பதில்லை.
ஹரியானா மாநிலத்தில் மாஹி என்ற 4 வயது சிறுமி தண்ணீருக்காக ஆழமாக தோண்டப்பட்ட குழியில், கடந்த ஜுன் மாதம் தவறி விழந்து சிக்கிக் கொண்டாள்.  அதுவும் அன்று அவளது பிறந்த நாள்.  அந்த கொண்டாட்டத்தில் விளையாடும் பொழுது அதள பாதாளத்தில் விழுந்தாள்.  காவல்துறை, ராணுவவீரர்கள், தேசிய ராணுவவீரர்கள் 70 அடி குழியிலிருந்து குழந்தையை மீட்பதற்காக போராடினர். விழுந்த குழிக்குப் பக்கத்தில் இன்னொரு குழி தோண்டி அடியில் இரண்டு பள்ளங்களையும் இணைக்கும் சுரங்க பாதை அமைத்து குழந்தையை லாவகமாக மீட்கும் நுட்பமான பணி நிறைவேற்ற 48 மணி நேரம் பிடித்தது.  இறந்த குழந்தையைத்தான் எடுக்க முடிந்தது.  அதன் பிறகு அஜாக்கரதையாக குழி வெட்டியவர் மீது குற்ற நடிவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் விழிப்புணர்வு வந்ததா என்றால் அது கேள்விக்குறி.  அடுத்த விபத்து நிகழ காத்துக் கொண்டிருக்கும்.
உயர் நீதி மன்றம் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பு மேம்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அதற்கு உடனடியாக தக்க நடவடிக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்கக் வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.  குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பள்ளியின் வேன்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், பள்ளி நிர்வாகத்தின் கடமைகள்,  பெற்றோர்களின் பொறுப்பு, சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் உரிய நடவடிக்கை இவையெல்லாம் ஒருங்கிணைந்தால் தான் பள்ளிக் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு உறுதி செய்ய முடியும். 
உச்ச நீதிமன்றம் தில்லிக்கு அருகில் பல குழந்தைகள் உயிரிழந்த சாலை விபத்து சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கில் இத்ததகைய விபத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கக் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பட்டியலிட்டுள்ளது.  அதன்படி குழந்தைகள் பயணிக்கும் எல்லா பள்ளி வாகனங்களும் மஞ்சள் நிறம் பூசப்பட வேண்டும். பள்ளி வாகனம் என்ற அறிவிப்புப் பலகை வண்டியின் முன் மற்றும் பின் பகுதியில் வைக்கப்பட வேண்டும்.  அவசர சிகிச்சைப் பெட்டி இருக்க வேண்டும்.  வேகக்கட்டுப்பாடுக் கருவி பொருத்த வேண்டும்.  வண்டியின் ஜன்னலில்  பாதுகாப்பு வலை கம்பிகள் இருக்க வேண்டும்.  வண்டியில் கதவுகள் பூட்டப்பட வேண்டும். வண்டியில் குந்தைகளை கவனிக்க நடத்துனர் அமர்த்தப்படவேண்டும்.  வண்டி ஒட்டுனர் சுமார் ஐந்து வருடம் பேருந்து ஒட்டும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  போக்குவரத்து விதி மீறல்கள் குற்றங்களுக்கான தண்டனை பெற்றிருக்கக் கூடாது.  மதுபானம் அருந்தி வண்டி ஒட்டியதற்கான குற்றம் ஒருமுறை புரிந்திருந்தால் கூட அவரை நியமிக்கக் கூடாது.  பள்ளியின் ஆசிரியர் அல்லது குழந்தைகளின் பெற்றோர் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது வண்டியில் பயணம் செய்து பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டும்.
2011-ம் வருடம் 3,90,884 மக்கள் விபத்துக்களில் உயிர் இழந்தனர்.  2001-11, பத்து வருடங்களில் விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44.2 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்பது கவலைக்குரியது. ஜனத்தொகை கணக்குப்படி 14 வயதுக்குட்ப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மொத்த ஜனத்தொகையில் சுமார் 30 சதவிகிதம் விபத்தில் மடியும் குழந்தைகள் மொத்த உயிரிழப்பில் சுமார் 7 சதவிகிதம்.  மேலும் 61 சதவிகிதம் 15 வயதுலிருந்து 44 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் இம்மாதிரி விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கின்றனர் உழைக்கும் கரங்களை இழக்கிறோம், பாதிப்பு குடும்பத்திற்கு மட்டுமல்ல மொத்த சமுதாயத்திற்கும் ஏற்படுகிறது.

பள்ளி வண்டிகள் பிரத்யேகமாக நல்ல முறையில் பராமரிக்கப்பட வேண்டும்.  ஒட்டுனர்களுக்கு பள்ளி வாகனம் கவனமாக ஒட்டுவதற்கான சிறப்புப் பயிற்சி அளிக்க வேண்டும்.  குழந்தைகள் வண்டியில் ஏறி அமர்ந்த பிறகுதான் நகர வேண்டும்.  பயிற்சிக் பெற்ற நடத்துனர் ஒவ்வொரு வண்டியிலும் குழந்தைகளை மேற்பார்வையிட இருக்க வேண்டும். குழந்தைகள் பள்ளி வாகனங்களிலிருந்து இறங்கி சாலையை கடக்கும்பொழுது அதிகமான விபத்துக்கள் நிகழ்கின்றன. குழந்தைகள் வாகனத்தின் முன்னால் அல்லது பின்னால் சாலையைக்க கடக்கக் கூடாது.  எதிரும் புதிரும் வரும் வாகனங்களை பார்க்க முடியாது.  பள்ளியின் வாகனம் நகர்ந்த பிறகு முன்னும் பின்னும் பார்த்து சாலையைக் கடக்க வேண்டும்.  குழந்தைகள் பயணிக்கும் வாகனங்கள் தனியாருடையதோ அல்லது பள்ளியின் பராமரிப்பில் உள்ளதாக இருந்தாலும் விதிகள் கடைபிடிக்கப்பட்ருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் கடமை.  பள்ளியின் உயர்மட்டக் குழு மேற்பார்வையிட வேண்டும்.
மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் அரசாங்கம் வழங்குகிறது.  அவர்களுக்கென்று காலையும் மாலையும் சிறப்பு அரசு ஊர்திகள் ஏற்பாடு செய்தால் மக்களுக்கு நிம்மதியைத்தரும் குழந்தைகள் தான் நமது நாட்டின் எதிர்காலத்தை தாங்கப்போகிறார்கள்.  அவர்களைப் பேணுவது நமது கடமை.
தனது பத்திரிக்கைத்துறை அனுபவத்தில் இத்தகைய கோர சம்பவத்தை செய்தியாக அனுப்புவதில் தனக்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டது என்று அஸ்சாம் மாநிலம் குவாத்தியில் போன மாதம் அசிங்கமான முறையில் பொது இடத்தில் ஒரு இளம் பெண் மானபங்கம் செய்யப்பட்ட நிகழ்வை விவரிக்கையில் ஒரு செய்தியாளர் மனக் குமுறலுடன் தெரிவித்தார்.  இந்த தலைகுனிவு போதாது என்று ஜீலை மாதம் மங்களூரில் கடற்கரை ஓர கேளிக்கை விடுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், கலாச்சார பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொண்டு அங்கு கூடியிருந்த விருந்தினர்கள் மற்றும் பெண்களை தாக்கியதாக செய்தி வந்தது.  கேளிக்கையில் ஈடுபட்டவர்களை கண்முடித்தனமாக தாக்கியது மட்டுமின்றி தகாதவார்த்தைகளால் திட்டியுள்ளார்கள்.  காவல்துறையின் தலையிட்டு நடவடிக்கை எடுத்த பிறகு நிலமை சிரானது.
     இத்தகைய அத்துமீறல்கள் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும்.  தனி மனித சுதந்திரத்தில் தலையிடக்கூடாது.  சுதந்திரம் என்பது மற்றவர்களின் உரிமைகளை பாதிக்காத வகையில் அனுபவிக்க மட்டும் தான் சட்டத்தில் இடமுண்டு.   தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற நிலை வந்தால் குழப்பம் தான் விளையும்.
 அஸ்சாம் மாநிலத்தில் இனக்கலவரம் மலைவாழ் மக்களுக்கும் அண்டை நாடான பங்களாதேசத்திலிருந்து இடம் பெயர்ந்தவருக்கும் பிரச்சனை.  பலர் வீடுகள் உடமைகள் இழந்து தவிக்கின்றனர்.  அடி மேல் அடி ஏழைகளுக்குத்தான். இதன் எதிரொலி மும்பையில் கண்டன ஊர்வலம் ஆயிரக்கணக்கானவர் திரண்டனர்.  காவல்துறை சமயோஜிதமாக கூட்டத்தை சமாளித்து கலைத்துவிட்டனர்.  துப்பாக்கி சூடு தவிர்க்கப்பட்டது.  கர்நாடகா மாநிலத்தில் அசம்பாவிதம் நிகழ வாய்ப்பிருக்கிறது என்று விஷமிகள் வதந்தி கிளப்பி விட்டனர்.  அதன் விளைவு வேலை நிமித்தமாக பங்களூரில் தங்கி இருக்கும் பல அஸ்சாமியர்கள் தங்கள் மாநிலத்தை நோக்கி சொல்லத்துவங்கியுள்ளனர்.
நமது நாட்டின் வலிமையே வேற்றுமையில் ஒற்றுமை அவை குலையும் வகையில் இத்தகைய நெருடல்கள்.  இவை தற்காலிக இடரல்களாக மறைய வேண்டும்.  அதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம்.  நாட்டுப் பற்று, சகோதரத்துவம், பரஸ்பர ஒற்றுமை போன்ற நற்குணங்கள் நாட்டின் இறையாண்மையோடு ஒன்றியவை,  இதற்கு அரசை நாட வேண்டியதில்லை.  மக்களின் உள்ளக்கிடக்கையிலிருந்து வரவேண்டியவை.
விஷமிகளால் தூண்டப்படும் விபத்துகள் ஒரு புறம்.  அன்றாடம் கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகள் மறுபுறம்.  இரண்டு வகை நிகழ்வுகளாலும் பாதிக்கப்படுவது பொதுமக்கள், அதுவும் நடுத்தரம் மற்றும் ஏழை மக்கள்.  அவசர உலகில் இத்தகைய விபத்துகள் தவிர்க்க முடியாது என்று விட்டு விடக் கூடாது. விழிப்புணர்வும் விதிகளை மதிக்கும் கவனமும் இருந்தால் விபத்துகள் குறையும்.  தூண்டப்படும் விபத்துகளை ஒடுக்க வேண்டும்.  ஏனைய விபத்துகள் தவிர்க்க வேண்டும்.
---
தினமணி நாளிதழ்கட்டுரை 23 ஆகஸ்ட் 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது

No comments: