Thursday, November 1, 2012

நேர்மையாளர்களை ஊக்குவிக்க வேண்டும்



இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் பிறந்த தினமாகிய அக்டோபர் 31 ஊழல் மற்றும் விழிப்புணர்வு அறிதல் தினமாகவும், இது சம்மந்தமாக விழிப்புணர்வு முகாம்கள் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டிய வாரமாகவும் அனுசரிக்கப்படுகிறது.  ஜனநாயக அமைப்பில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கொள்கைகளையும்,  திட்டங்களையும் ஆராய்ந்து செயல் வடிவம் கொடுக்க வேண்டியது நிர்வாக அமைப்பின் முக்கியப் பொறுப்பாகும்.  நிர்வாக அமைப்பு திறம்பட இயங்குவதற்கும் பாரபட்சமின்றி பொதுநலன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உயரிய குறிக்கோளை வைத்து அகில இந்திய சேவைப்பணி அரசியல் சாசனத்தின் 312 பிரிவு படி அமைக்கப்பட்டது.  இதில் இந்திய ஆட்சிப்பணி மற்றும் இந்திய காவல் பணி அடங்கும்.
     அரசுப்பணியாளர்கள் ஆங்கிலத்தில் “பப்ளிக் சர்வண்ட்”  என்று சட்டத்தில் குறிப்பிடப்படுகின்றனர்.  இதன் அடிப்படைக் கருத்து அவர்கள் பொதுமக்களுக்காக சேவை செய்ய வேண்டும.  மக்களின் அடிப்படை உரிமைகளான சுதந்திரம், சமத்துவம், கண்ணியம் பாதுகாப்பதில் அரசு ஊழியர்களுக்கு முக்கியப்பங்கு உண்டு.  நிர்வாகம் முகம் அறியாது என்பதற்கேற்ப விதிகளின் அடிப்படையில் நடு நிலமை பிறழாது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
     தொழில்முறை திறமை, நேர்மை, பாரபட்சமின்மை எல்லாவற்றிற்கும் மேலாக மாறிவரும் சவால்கள் மிகுந்த உலகில் செயலாக்கத்தில் சிறப்பு ஆகிய குணாதிசயங்கள் நிரம்பியவர்தான் பொது ஊழியர்களாக பொறுப்பேற்கத் தகுதியானவர்.  இதன் அடிப்படையில்தான் அரசுப் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்று 1854-ம் வருடம் பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்ட ட்ரவிலியான் கமிட்டி பரிந்துரைத்துள்ளது.
     தூய்மையான வழிமுறைகள் பின்பற்றப்படவேண்டும்.  இதுதான் நேர்மையான நிர்வாகத்தின் அடையாளம்.  மகாத்மா காந்தி அடிகள் நிர்வாக ஊழலைப்பற்றி குறிப்பிடும் பொழுது தனிநபருக்காக நாடு இயங்கவில்லை     தனிநபர்  நாட்டுக்காகவும் நாட்டின் உயர்வுக்காகவும் உழைக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.  தன்னலம் தலைதூக்கும்பொழுது எல்லாம்     தனக்கும் தன்னைச் சேர்ந்தவர்களுக்கும் சொந்தம் என்ற வகையில் செயல்படுவதால்தான் பொது நிர்வாகத்தில் ஊழல் பெருகுகிறது.
     மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையகம் நிர்வாகத்தில் ஊழலை கட்டுப்படுத்துவதற்காக விதிகளையும், வழிகாட்டுதல்களையும், ஆலோசனையும் வழங்கி வருகிறது.  ஒவ்வொரு வருடமும் விழிப்புணர்வு வாரமாக அக்டோபர் இறுதி நவம்பர் மாத துவக்கத்தில் அனுசரிக்கப்படுகிறது.  ஒரு முக்கிய நிர்வாக சீர்திருத்த நடவடிக்கையை முன்வைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.  இந்த வருடம் அரசு திட்டங்களுக்கு கொள்முதல் செய்யப்படும் பொருட்கள், டெண்டர் முறைகள்  வெளிப்படையான ஊழலற்ற வகையில்  நடைபெற வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.
     வெளிப்படையான ஒப்பந்தம்புள்ளி விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.  இதன் மூலம் அரசுக்காக கொள்முதல் செய்யப்படும் பொருட்கள் துறைவாரியாக இனணயதளத்தில் வெளியிடப்படுகிறது.  அதற்கான படிவங்கள் எளிதாக பெற்றுக் கொள்ளலாம்.   பொருட்கள் கொள்முதல் செய்யப்படுவதின் நோக்கம், பொருட்களின் தரம், எதிர்பார்ப்பு, எவ்வாறு ஒப்பந்தப்புள்ளி பரிசிலிக்கப்படும், தெரிவு செய்யும் முறைகள், ஆகியவை ஒப்பந்ததார்களுக்கு கலந்தாய்வுக் கூட்டம் மூலம் தெளிவு படுத்த வேண்டும்.  தொழில்நுட்ப தகுதி முதலிலும் கொள் முதல் செய்யபடும் பொருட்களின் விலைப்பட்டியல் பின்பும் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.  
     இவ்வாறு பொருள்கள் கொள்முதல் செய்வது, கட்டுமானப்பணிகான ஒப்பந்தம் வழங்குதல், இதர சேவைகள் பங்கிடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஊழல் ஊடுருவ வாய்ப்புகள் அதிகம் என்பதால் இந்த வருடம் கொள்முதலில் முறைகேடுகள் தவிர்க்கும் நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது வலியிறுத்தப்பட்டுள்ளது.  கொள்முதல் நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை, பொறுப்பாளர் கடமை, எந்த ஒரு கேள்விக்கும் பதில் அளிக்கும் திறன், சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதே மத்திய ஆணையத்தின் முக்கிய குறிக்கோள்.  மெச்சத்தக்க வழிமுறைகளை பயன்படுத்தி கணக்கிடக்கூடிய முன்னேற்றம் அடைந்திட வேண்டும் என்பதும் இலக்காக வைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச வெளிப்படை நிர்வாக அமைப்பு பொது நிறுவனங்களில் ஊழலை தடுப்பதற்கு ”நேர்மை ஒப்பந்தம்” என்னும் முறையை பரிந்துரைத்துள்ளது.  அரசுப்பணிகளில் பங்கெடுக்க விண்ணப்பிக்கும் தனியார் ஒப்பந்ததாரர்கள் பங்கெடுப்பதற்கு முன் நேர்மை கடைபிடிக்க வலியுறுத்தல் ஒப்பந்தத்தில் பரஸ்பரம் கையெழுத்திட வேண்டும் ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம்  டெண்டர் பரிசீலிக்கும் சமயம் மற்றும் முடிவு எடுக்கும் வரையில் எந்தவிதமான ஊழலில் ஈடுபட மாட்டோம் என்ற உறுதியினை அவர்கள் அளிக்கவேண்டும்.  இம்முறை ஊழலைத்தடுக்க பெரிதும் உதவுகிறது என்று நடைமுறையில் தெரிய வந்துள்ளது.  நேர்மையற்ற முறையில் டெண்டர் யாருக்காவது சென்று விடுமோ என்ற அச்சம் நீக்கப்படுகிறது.  சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட பொது நிறுவனங்களும், அமைச்சகங்களும் இம்முறையை பின்பற்றுகின்றன என்று மத்திய விழிப்புணர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.
     அன்றாட சிறு ஊழல்கள்தான் சாதாரண மனிதனைத் தாக்குகிறது.  இதற்கு கணினி மூலம் மக்கள் பெற வேண்டிய எல்லா பயனளிப்புகளும் பதிவு செய்தால் பொது மக்களுக்கும் கீழ்மட்ட அரசு ஊழியர்களுக்கும் நேரடி தொடர்பு தவிர்க்கப்பட்டு தகுதி அடிப்படையிலும் முதலில் பதிவு செய்தவர்க்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மனுக்கள் பரிசீலிக்க வழிவகை செய்ய முடியும்.
     வெளிப்படைத்தன்மை எவ்வளவு முக்கியமோ அந்த அளவு  விதிகளுக்கு உட்பட்ட முடிவுகளும் முக்கியம்.  விதிகள் சுலபமாக்கப்படவேண்டும். நடைமுறைகளும் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.  துறை அதிகாரிகள் சுலபமாக மக்களுக்கு அரசுப்பணிகள் சென்று அடைய எல்லாமுயற்சிகளும் எடுக்க வேண்டும்.  உதாரணமாக பட்டா மாற்றம் என்பது கடினமான  முறையாக இருந்ததால் அதில் முறைகேடுகளுக்கு வாய்ப்பாக அமைந்தது.  அதனை மாற்றி பட்டா மாற்றம் சமீபத்திய அரசாணை மூலம் சுலபமாக்கப்படுள்ளது.  மின் இணைப்பு, குடிநீர்,  கழிவு நீர் அகற்றும் வசதி, சாதிச்சான்றிதழ், அரசு மானியம் பெறுவதற்கான மனுக்கள், பல்வேறு நலத்திட்டங்கள் கீழ் பயனாளிகள் பெற வேண்டிய பயன்கள், கடன் உதவி பெறுதல், முதியோர் ஊதியம் போன்ற பல்வேறு சேவைகளை பெறுவதற்கு மக்கள் சம்பந்தப்பட்ட அரசுத்துறையை நாடுகின்றனர்.  இந்த சேவைகள் சுலபமாக கிடைத்திட வேண்டும்.  சாதிச்சான்றிதழ் பள்ளிக்கூடங்களே வழங்கலாம் என்ற அரசாணை எல்லோராலும் வரவேற்கப்பட்டுள்ளது.
     ஊழல் விவகாரங்களைப்பற்றி தகவல் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.  அதே சமயம் தகவல் கொடுப்பவர்களுக்கு பாதுகாப்பும் தகவல் அடிப்படையில் உடனடி நடவடிக்கையும்  அவசியம்.  2004 வருடம் தகவல் கொடுப்பவர் பாதுகாப்பு ஆணை அமலுக்கு வந்துள்ளது.  மத்திய விழிப்புணர்வு ஆணையம் இத்தகைய புகார்களை கவனிப்பதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
     ஊழல் குற்றச்சாட்டுகளின் மீது நடவடிக்கை ஒருபுறம் எடுத்தாலும் ஊழல் நடவாமல் தடுப்பது என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்படுகிறது.  தற்போதுள்ள தடுப்பு முறைகள், விதிகள் 1970-ல் வடிவமைக்கப்பட்டன.  காலப்போக்கில் பல மாற்றங்கள் வந்துள்ளன,  தொழில்நுட்பம் வளர்ந்ததுள்ளது அதற்கேற்றால் போல் நடைமுறையிலும் மாற்றம் வரவேண்டும்.  அப்போது தான் ஊழல் ஊடுருவலை நிறுத்த முடியும். 
தனியார் நிறுவனங்கள் இழப்பு நிகழக்கூடிய இடங்கள் என்ன என்பதை ஆராய்ந்து தெரிவு செய்து அங்கு அதிகம் கவனம் செலுத்தி இழப்பு தவிர்க்கும் முறைகளை கையாளுகின்றனர்.  இதே வகையில் பொது நிறுவனங்களில், பொது சேவைகளிலும் எந்த துறைகளில் எந்த நடைமுறையில் தவறுகள் அதிகம் நிகழக்கூடும் என்பதை ஆராய்ந்து தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இத்தகைய இழப்பச்சம் முறையில் கலந்தாய்வு செய்து ஊழல் நடவாமல் தவிர்க்கப்பட வேண்டும் என்று விழிப்பிணர்வு ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
     2005-ம் வருடம்  ஐக்கிய நாடுகளின் ஊழலுக்கு எதிரான உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டது.  அதற்கு முழு அங்கீகாரம் 2011-ம் ஆண்டு மே மாதம் தான் வழங்கியது.  ஆனால் இன்னும் சட்ட மாற்றங்கள் கொண்டுவரப்படவில்லை.  தனியார் நிறுவனங்களையும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான திருத்தங்கள் இன்னும் பரிசீலனை நிலையில் உள்ளன.
     அரசு அலுவலகங்களில் மூன்று வகையான ஊழியர்களை காணலாம்.  அப்பழுக்கற்று தம்மை முழுமையாக ஈடுபடுத்தி சுய உந்துதலோடு செயல்படுபவர்கள்.  அதிக கடமையுணர்வு உடையவர்கள்.  இத்தகைய பணியாளர்கள் முதல் ரகம்.  நிர்வாக சுமை தாங்கிகள்.  போற்றுதலுக்குரியவர்கள்.  இரண்டாவது வகை குறைந்தபட்சம் எவ்வளவு பணி செய்தால் தம்மீது குறைவராதோ அந்த அளவுக்கு மட்டும் தம்மை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.  இவர்கள் சுமை தவிர்ப்பவர்கள். சந்தர்ப்பவாதிகள். மூன்றவது ரகம் ‘எங்கள் வீட்டுக்காரரும் கச்சேரி செய்கிறார்’ என்ற அளவில் பணிக்கு வந்து செல்வார்கள்! நிர்வாகத்திற்கு இவர்கள் சுமைகள். எந்த துறையில் சுய உந்துதலோடு பணி செய்பவர்கள் அதிகமாக இருக்கிறார்ளோ அந்தத்துறை சிறந்து விளங்கும்.  முதல் வகை பணியாளர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் அவர்களது மெச்சத்தக்கப்பணி பாராட்டப்பட வேண்டும்.  இத்தகைய பணியாளர்கள் சாதாரணமாக ஊழலில் ஈடுபடமாட்டர்கள்.  செயல் திறன் உயர்வு, ஊக்கம் இவை குறிக்கோளாக வைத்து பணியில் ஈடுபடுத்த வேண்டிய பொறுப்பு மேற்பார்வையாளர்களைச் சார்ந்தது.
     சாதாரணப் பணியாளர்களை அசாதாரண மேன்மையான பணி செய்யும் திறமைசாலிகளாக மாற்றுவதே தலமை வகிப்பவரின் பொறுப்பு.  ஏதோ வம்பு தும்பு இல்லாமல் குறந்தபட்சம் பணி செய்கிறோம் என்பது துறைக்கும் பெருமையல்ல.  திறமையற்ற குறித்த நேரத்தில் முடிவுறாத, ஒப்புக்கு செய்யப்படும் பணிகளும் ஒரு வகையில் நேர்மைக்கு முரணான பணிகள் என்பது உண்மை.
சர்வதேச வெளிப்படை அமைப்பின் ஆய்வுப்படி ஒன்றிலிருந்து பத்து தர அளவில் இந்தியா மூன்றுக்கு கீழ்தான் உள்ளது.  ஐரோப்பிய நாடுகள் ஒன்பது என்ற அளவில் தலை நிமிர்ந்து நிற்கின்றன.  மேலும் அந்த ஆய்வில் இந்தியாவில் வருடத்திற்கு சுமார் ரூபாய்.30,000/- கோடி லஞ்சமாக சாதாரண ஊழலில் பரிமாரப்படுகிறது என்ற தகவலும் வெளிவந்துள்ளது.  64 சதவிகிதம் மக்கள் ஏதாவது ஒரு நிலையில் ஊழலுக்கு துணை போகிறார்கள் என்பதும் வேதனைக்குரியது.
     ஊழலை கட்டுப்படுத்த பல்முனை முயற்சிகள் தேவை.  அதில் மக்கள் ஒத்துழைப்பு இன்றியமையாதது.  உண்மையான உழைப்பிற்கு ஒத்துழைப்பு நல்க மக்கள் முன்வருவார்கள்.  அரசுத்துறை பொதுமக்கள் சேவைக்காக இயங்குகிறது.  இரும்புக்கவசம் நிர்வாகத்தின் வலிமையை  தெரிவிக்கிறது.  அதே சமயம் மக்கள் பணியில் மெழுகாக உருக வேண்டும் என்பதை மறக்கலாகாது. 
நேர்மை, நம்பகத்தன்மை, தரம், ஒருபுறச்சார்பின்மை இவையனைத்தும் நேர்மையான பணிக்கு இலக்கணம்.  நேர்மையான அணுகுமுறையை அன்றாட வாழ்க்கையில் கடைபிடித்தால்தான் விழிப்புணர்வு முழுமையடையும்.


இக்கட்டுரை தினமணி நாளிதழில் 01.11.2012 அன்று பிரசுரிக்கப்பட்டது

     

Monday, October 15, 2012

காந்திஜிக்கு உண்மையான அஞ்சலி



காந்தியடிகளை புத்தகத்திலும் ரூபாய் நோட்டிலும் பதித்துவிட்டு காந்திய கோட்பாடுகளைப் புதைத்துவிட்டோம்.  காந்தீய சிந்தனைகளில் மிக முக்கியமானது அஹிம்சை மற்ற உயிரினங்களை வதைக்காமல் இருத்தல்,  பாதுகாத்தல் அஹிம்சை என்று பரவலாக உணரப்படுகிறது.  ஆனால் அஹிம்சை என்பது இது மட்டுமல்ல.  தன்னடக்கத்தின் உச்சகட்டம் தான் அஹிம்சை என்கிறார் காந்தியாடிகள்.  அதாவது தன்னைப்பற்றி சிந்தனையை குறைத்து மற்றவர்கள் நலனில் அதிக கவனம் கொடுப்பது உண்மையான சுயநலமற்ற நிலை. தன்னடக்கம் என்பது தன்னைப்பற்றி குறைவாக மதிப்பிடுவது அல்ல.   தன்னைப் பற்றியல்லாமல் பிறரைப்பற்றி அதிகமாக நினைப்பதே தன்னடக்கம்.  பிற ஜீவரசிகளை பரிவோடும் பாசத்தோடும் பாதுகாக்க நினைப்பவன் உயர்ந்த அஹிம்சைவாதி, தன்னடக்கம் மிகுந்தவன்.  இது தான் அஹிம்சையின் இலக்கணம்.
தனது வாழ்க்கையே இந்தியாவிற்கு தான் அளிக்கும் செய்தி என்றார் காந்தியடிகள்.  தனது சிந்தனைகளையும், கருத்துக்களையும் நடைமுறைப்படுத்தி வாழ்ந்து காட்டினார்.  எண்ணங்களும், வாக்கும், செயல்களும்.  ஒருங்கிணைய வேண்டும்.  சொல்வது ஒன்று செயல்வேறு என்ற நிலையால்தான் பின்னடைவு ஏற்படுகிறது.  உண்மையான ஆளுமை என்பது முன் உதாரண செயல்களில்தான் வெளிப்படும்.  காந்தி மகான், அன்னை தெரேசா, விவேகானந்தர் போன்றவர்கள் நேர்மையின் அடிப்படையில் உழைத்தால் வெற்றி கண்டனர்.  சமுதாயம் பயன் பெற்றது.  ‘கொடுப்பதில் ஆனந்தம்’, “கனிவான மக்கள் ஆனந்தமான நகரம்” என்று காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டி பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது நிறைவு தருகிறது.
     வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு பிரச்சனைகளை நாம் எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.  அந்தப்பிரச்சனைகளைத் தீர்பதற்கான முடிவு நமது கையில்.  எந்த முடிவு எடுப்பது என்பது அன்றாட போராட்டம்.  சிறு விஷயங்களிலிருந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கட்டங்களில் நாம் எடுக்கக்ககூடிய முடிவு திருப்பு முனையாக அமையும். பல நேர்வுகளில் நாமும் எடுத்த முடிவைப்பற்றி வருத்தப்படும் நிலை ஏற்படும்.  அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள், யோசிக்காமல்  வருவது வரட்டும் என்று அகங்காரத்தோடு செல்லக்கூடிய பாதையை தெரிவு செய்யும் பொழுது இடர்பாடுகள் நிச்சயமாக வரும்.
     பேராசையால் பெரு நஷ்டம் என்பதை கண்கூடாக பல நிகழ்வுகளில் பார்க்கிறோம்.  ஆனாலும் விட்டில் பூச்சிகள் போல் மனிதர்கள் ஆசை என்ற மாயையில் சிக்கி மடிகிறார்கள்.  ஈமு கோழிப்பண்ணை என்று விளம்பரப்படுத்தி பல கோடி ரூபாய் ஒரு கும்பல் சுருட்டிவிட்டது.  ஏமாறுவதற்காகவே சிலர் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. பணம் பாதாளம் பாயும் என்பார்கள். பணத்தாசை நம்மை ஆட்டுவிக்கிறது.  பண்டம் பரிமாற்றங்களுக்கு பணம் தேவைதான்.  உபயோகமானதும் கூட.  ஆனால் பணம் நமக்கு கீழ்படிய வேண்டுமே தவிர நாம் பணத்திற்கு அடிமையாகக் கூடாது.  பணம் நமக்கு  உதவக்கூடிய வகையில் வழியைக் கண்டுபிடித்தால் அது மனித குலத்திற்கே சேவை செய்யும்.  ஆனால் பணம் பேராசைப் பிடியில் சிக்கியவர்களை கட்டி ஆள்கிறது.
     பணம் சேகரிப்பு என்பது ஒரு கொடிய நோய்.  அது பரவி நம்மை ஆட்கொண்டு விடுகிறது.  எவ்வளவு பணம் சேர்ப்பது.  ஒரு சேர எவ்வளவு அனுபவிக்க முடியும்.  இருப்பதோ ஒரு வயிறு,  இரு கால்கள், இரு கைகள், ஐம்புலன்கள்.  அதிக பணம் சேர்ந்தவுடன் ஒரு வித சோகம் படர்கிறது.  நெஞ்சு குருகுருக்கிறது.  ஏதோ ஒரு குற்ற உணர்வு வாட்டுகிறது.  பணம் குறுக்கு வழியில் சம்பாதித்திருக்கலாம்.  பலரை ஏமாற்றி சேர்த்திருக்கலாம்.  ஏழைகளுக்கு சேர வேண்டியதை மடக்கி வைத்திருக்கலாம். 
     இத்தகைய நிலையில் பணக்கார மனிதன் இரண்டு வகைப்படுகிறான்.  குற்ற உணர்வைப் போக்குவதற்காக  மற்றவர்களுக்கு பண உதவி செய்து தன்னை சமாதானப்படுத்திக் கொள்கிறான்.  குற்ற உணர்விலிருந்து விடுபட முயற்சிக்கிறான்.  மற்றொரு வகை பேராசைப் பிடியிலிருந்து தப்ப முடியாமல் மனம் நொந்து தன்னையே மாய்த்துக் கொள்ளும் முடிவை எடுக்கிறான். எவ்வளவு பணக்காரர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்! சந்தோஷம் என்பது பணத்தால் வருவதில்லை பணம் இருந்தும் வருவதில்லை.
     வாழ்க்கையில் சிலவற்றை விலைபேச முடியாது.  பணத்தால் வாங்க முடியாது.  அன்பு, பாசம், பரோபகாரம், தியானம், நன்றி மனப்பான்மை நம்முள் வளர வேண்டும்.  பணத்தால் வாங்க முடியாது.  ஆனால் இவற்றைப் பற்றி பலர் யோசிப்பதில்லை, யோசித்தார்கள் என்றால் இந்த அளவுக்கு நாட்டில் ஊழல் பெருகியிருக்குமா,  இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்றன, மலைகள் மடுவாகின்றன.  பெயர்த்தெடுத்த கிரானைட்டுகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்கிறார்கள்,  ஏற்றுமதி வளர்கிறது என்று இருமாப்படைய முடியுமா?  நமது வளங்கள்தான் அழிகின்றன.  ஆந்திர மாநிலத்தில் மலைகள் கொடையப்படுவது எல்லை மீறியது என்பதால், மலைகளைப் பாதுகாக்க பல தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் தோன்றியுள்ளன.  ஆயினும் கிரானைட் க்வாரிகளின் அழித்தொழிப்பு தொடர்கிறது.  ஆங்கிலேயர் ஆண்டபோது கூட இந்த அளவு கொள்ளைப் போகவில்லை என்று சில கணிப்புகள் கூறுகின்றன.  தேசத்தை நேசிப்பவர்களாக இருந்தால் இவ்வாறு செய்வார்களா?
            தாராளமயம், உலகளாவிய வர்த்தகம் என்ற புதிய பொருளதார கொள்கைகள் சில வரவேற்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தாலும் அதன் கூடவே ஊழலும் பெருகியுள்ளது என்பதை ஐக்கிய உலக நாடுகள் அமைப்பு கவனத்தில் கொண்டு, 2000-ம் ஆண்டு ஊழல் ஒழிப்பதற்கான கூட்டமைப்பு ஏற்படுத்துவதற்கான தீர்மானம் பொதுச்சபையில் கொண்டு வந்தது.  2005-ம் வருடம் டிசம்பர் 14-ம் தேதி சர்வதேச ஊழல் ஒழிப்பு ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.  ஊழல் நடவாமல் இருப்பதற்கான தடுப்பு வழிகள், கடுமையான சட்டம் அதன் அமலாக்கம், ஊழல் புரிந்தவர்களின் சொத்துக்கள் முடக்கம், சர்வதேச குற்றவாளிகள் இனம் கண்டு சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு ஒப்புதல் அளித்தல்,  பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமின்றி தனியார்துறை நிறுவனங்களையும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கொண்டு வருதல் போன்ற பல முக்கியமான பிரிவுகள் ஒப்பந்தத்தில் உள்ளன. 2005-ம் ஆண்டு ஒப்பந்தத்திற்கு இந்தியா 2011-ம் வருடம் மே 9-ம் தேதி தான் ஒப்புதல் அளித்தது.  ஆனால் இந்திய ஊழல் தடுப்பு சட்டத்தில் மாற்றம் இன்னும் கொண்டுவரப்படவில்லை.
சமீபத்தில் மத்திய புலனாய்வுப்பிரிவுகளின் தேசிய கூட்டத்தில் பேசிய பிரதமர் அவர்கள் சட்டம் மாற்றப்பட வேண்டியதின் அவசியத்தை வலுயுறுத்தியுள்ளார்.  லஞ்சம் பரிமாற்றங்களில் தனியார் நிறுவனங்களின் இணக்கமாக துணைபோகும் முறையற்ற நடவடிக்கைகளை சட்ட மாற்றங்கள் மூலம் குற்றங்களாக கருதப்பட்டு கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும்.  இங்கிலந்து நாட்டில் லஞ்ச ஒழிப்பு புதுச்சட்டம் “ப்ரைபரி ஆக்ட்” ஜீலை 1 2011-ம் வருடம் அமலுக்கு வந்தது.  இந்த சட்டத்தின்படி தனியார் நிறுவனங்களின் மோசடி நடவடிக்கை உள்நாடு மட்டுமின்றி வெளி நாடுகளில் நடைபெற்றிந்தாலும் சட்டம் பாயும். ஏழு வருடம் முதல் 10 வருடம் வரை தண்டனையும் அபராதமும் விதிக்கலாம்.
     சட்ட நடவடிக்கை ஒருபுறம் அதே சமயம் நேர்மையாக செயல்படுவர்களுக்கு ஊக்கம் அளிப்பதும் அவசியம்.
     அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவும் ஒரு ஏழையின் நிலையை மனதில் இறுத்தி எடுக்கப்படவேண்டும் என்றாரே காந்தியடிகள்,  எவ்வளவு  உண்மை! நாம் ஈட்டுவது நமது முயற்சியில், உழைப்பில் பெற வேண்டும்.  ஒரு பதவியில் இருப்பதாலோ அல்லது பதவியில் இருப்பவர்கள் உறவினர் என்ற முறையில் ஏதாவது பெற்றால் அது எந்த வகையிலும் நேர்மையான முறை ஆகாது.   இதைத்தான் காந்தியடிகள் அவர்கள் திரும்பத் திரும்ப நேர்மையின் உறை கல்லாக  ஒவ்வொரு செய்கையையும் நாம் சோதித்து முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.  சத்திய சோதனை செய்யும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது கடினம்.  நேர்மை பாதையிலிருந்து வழுவா நிலை எய்துவதற்கு கடுமையான பயிற்சியும் சத்தியத்தின் மீது அசையா நம்பிக்கையும் அவசியம்.
உலக நாடுகளில் இளம் வயதுள்ள ஜனத்தொகை அதிகமாக உள்ள நாடு நமது நாடு.  உலகிற்கு உழைப்பாளிகளை இந்தியா அளிக்கும்.  அதற்கு நாம் இளைஞர்களை நல்ல நிலையில்  தயார் செய்ய வேண்டும்.  செயலாக்கத்தையும் தனித்திறன் வளர்ப்பது ஒரு பக்கம்.  அதே சமயம் ஆத்ம பலத்தை வளர்க்க வேண்டும்.  வலிமையான பாரதம் உருவாக வேண்டும் என்றால் மனித வளம் உயர வேண்டும்.  அதற்கு கீழ்கண்ட ஏழு தகுதிகள் அவசியமாகிறது.
n  நாட்டுப்பற்று, இந்தியாவைப் பற்றி உயர்வான எண்ணம்,  நாடு மேன்மையுற தன்னை அர்ப்பணித்தல்.
n  ஆரோக்கியமான வாழ்க்கை, நன்நடத்தை, மது, மாது, போதை, முறையற்ற உறவு போன்ற கெட்ட பழக்கங்களை தவிர்த்தல்.
n  யோகா, தியானம் மூலம் மனவலிமையை வளர்த்தல், மனவலிமை வளர்ந்தால்தான் தீர்க்கமான முடிவுகள் எடுக்க முடியும்.
n  அறிவாற்றல் பெற வேண்டும் அறிவாற்றலை ஆக்கப்பூர்வமாக உயயோகிக்கும் திறன் வளர்க்க வேண்டும்.
n  இந்தியாவின் கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும். பேணிப்போற்ற வேண்டும்.
n  ஆத்ம பலம் பெற வேண்டும்
n  பரந்த விரிந்த பார்வை, உலகளாவிய சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்தியாவின் ஒருமைப்பாடு, வேற்றுமையில் ஒன்றுமை, இணைந்திருப்பதற்கு இறைவுணர்வும் ஆன்மீக பலமும் தான் முக்கிய அடிப்படை காரணம் என்பது நிதர்சன உண்மை.  சுவாமி விவேகானந்தார் கூறுவார் சகிப்புத்தன்மையே இந்தியாவின் பலம் நாம் சகித்துக்கெள்ள முடியாதது சகிப்புத்தன்மையின்மையே!
காந்தியடிகளின் பிறந்த நாள் உலக அஹிம்சை தினமாக அனுவரிக்கப்படுகிறது.  வன்முறையை ஒழித்து அமைதிகாக்க உறுதியெடுக்க வேண்டும்.   ஊழலின் பாதிப்புதான் கொடுமையான வன்முறை.  மனித உரிமை மீறலும் கூட. சத்தியத்தை நம்பவேண்டும்.  ஆத்ம சக்தியின்றி இலக்கை அடைய முடியாது.  அவை இருந்தால் தோல்வி நம்மை தழுவாது.
காந்தி மகானுக்கு நாம் செலுத்துக்கூடிய குறைந்தபட்ச அஞ்சலி ஊழல் ஓழிப்பு ஒன்றுதான்.
000
இக்கட்டுரை தினமணி நாளிதழில் சனிக்கிழமை நாள்.13.10.2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

மக்கள் துணையே மகேசன் துணை



     ஒரு புகைப்படம் ஆயிரம் செய்திகளைச் சொல்லும் ஒடிசா மாநிலத்தில் சமீபத்தில் நடந்த தர்ணா போராட்டத்தில் பெண் போலீஸ் பிரமீளா பதி போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தாக்கியதால் காயமுற்றார்.  செய்தியில் வந்த புகைப்படத்தில் பிரமீளாவை ஒருவர் மற்றவர்களிடமிருந்து காப்பாற்றி அழைத்துச் செல்கிறார்.  பின்னால் இருந்து ஒருவர் உருட்டுக் கட்டையை ஓங்கியவண்ணம் பின் தொடர்கிறார்.  இன்னொருவர் கண்ணில் அனல் பறக்கிறது,  வன்முறை வழிகிறது. மற்றொருவர் கதறும் அப்பெண்ணை வீடியோ காமிரா மூலம் முகபாவங்களை பதிவு செய்கிறார்.
     தெருவிற்கு கூட்டமாக வந்துவிட்டால் நல்லது கெட்டது என்ற உணர்வு மறந்து விடுகிறது.  சேர்த்திருக்கும் கும்பலின் ஒட்டு மொத்த குணம் வெளிப்படுகிறது.  தவறு செய்தாலும் நம்மை யாரும் இனம் கொள்ள முடியாது என்ற தைரியம் வந்து விடுகிறது இந்த உருட்டுக்கட்டை கலாச்சாரம் சென்னையில் கல்லூரித் தேர்தலில் இரு பிரிவினரிடையே நடந்த மோதலில் பிரதிபலித்தது.  கூச்சலிடும் மாணவர்களைப்பற்றி தமிழ் ஆசிரியரின் அங்கலாய்பு எவ்வளவு உண்மை “ஒண்ணு சேர்ந்தா குப்பை, தனியா மாணிக்கம்”!  எதற்கெடுத்தாலும் போராட்டம் என்று நிலை வந்தால் நாட்டின் முன்னேற்றம் தான் பாதிக்கப்படும். போராட்டங்கள் நடத்துபவர்கள் சிந்திக்க வேண்டும்.

     முன்னறிவிப்பில்லாத கூட்டங்கள், போராட்டங்கள், திசை திருப்பும் அறிக்கைகள், அப்பாவி மக்களை வன்முறையில் ஈடுபடுத்துவது, காவல்துறைக்கு பெரும் சவாலாக உள்ளது.  ஒடிசா மாநிலத்தில் காவலர் பிரமீளா தாக்கப்பட்ட சம்பவம் இத்தகைய முறையற்ற போராட்டங்களின் விளைவு.  ஜனநாயக அமைப்பில் எதிர்ப்புகளை தெரிவிக்க உரிமையுண்டு.  அமைதியாக துவங்கும் இத்தகைய கூட்டங்கள் தலைவர்களின் கட்டுப்பாட்டை மீறி சட்டம் ஒழுங்கிற்கு ஆபத்து விளைவிக்கும் பொழுது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை வரும்.  பொது இடங்களில் கூட்டங்கள் நடத்துவதற்கு காவல்துறையின் அனுமதி பெற வேண்டும்.  அனுமதி அளிக்கும் உத்தரவுவில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை, கடைபிடிக்க வேண்டிய விதிகள் தெளிவாக போடப்பட்டு கூட்டம் ஏற்பாடு செய்யும் அமைப்பின பெறுப்பாளருக்கு சார்வு செய்யபட்டு பெற்றுக் கொண்டதற்கான கையொப்பமும் பெறப்படும்.
     காவல்துறை அனுமதியோடு நடத்தப்படும் கூட்டங்களில் பல முறை விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மீறப்படும். உதாரணமாக பொதுப் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் கூட்டமோ ஊர்வலமோ நடத்தப்பட வேண்டும் என்பது விதி.  ஆனால் தடையிருந்தும் தடைகளை தடையின்றி மீறினால் தான் ஆர்ப்பாட்டத்திற்கு வெற்றி என்று கணக்கிடுகிறார்கள்!  பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவல் துறையினருக்கு எப்படியோ நிலமையை சமாளித்தால் போதும் என்று இத்தகைய தடைமீறல்களை கண்டும் காணாமல் இருக்க வேண்டிய நிர்பந்தம்.  எந்த விதியை கராராக அமல்படுத்துவது, எதை தளர்த்துவது என்பது பொறுப்பில் உள்ள காவல்துறை அதிகாரி முடிவு எடுக்க வேண்டும்.
     கூட்டம் ஏற்பாடு செய்பவர்களோடு நயமாக பேசி விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவது ஒரு விதம்.  ஆரம்ப முதலே கெடுபிடி செய்து விதிகளை முறையாக கடைபிடிக்க வைப்பது இனொரு வழி.  கடனே என்று முறை கழிக்கும் பாதுகாப்பு அலுவலர்கள், விதிகள் மீறப்பட்டாலும் கண்டு கொள்ளாமல் விட்டு விடும் நிலையும் உண்டு.  இந்த சொதப்பல் அணுகுமுறைதான் பல பிரச்சனைகளுக்கு வித்திடுகிறது.  அமைதியான கூட்டங்களில் கலகக்காரர்கள் கலந்துவிடுகிறார்கள். நிலமை கட்டுக்கடங்காமல் போக காவல்துறை கடைசி யுக்தியான கண்ணீர்புகை, தடியடி துப்பாக்கி சூடு என்ற நடவடிக்கை எடுக்கும் நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறார்கள். சில கூட்டங்கள் தடையை மீறி பிரச்சனை செய்ய வேண்டும் என்றே நடத்திப்படுகிறது.  இத்தகைய சமூக விரோத செயல்கள், அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமைகளின் துஷ்பிரயோகம். எந்த ஒரு அரசும் அராஜகத்தை சகித்துக் கெள்ள முடியாது. சகித்துக் கொள்ளவும் கூடாது.
     ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், பாதுகாப்பு முறைகள், சட்டவிரோத கூட்டங்களை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய சட்டத்திற்கு உட்பட்ட வழிமுறைகள் பற்றிய பயிற்சி காவலர்களுக்கு தொடர்ந்து அளிக்கப்படுகிறது. காவல் பணி அடிப்படைப் பயிற்சியிலும், புத்தாக்கப்பயிற்சியிலும் இவை விளக்கப்படுகின்றன. செயல் வழியிலும் பயிற்றுவிக்கப்படுகிறது.  பயிற்சியில் வியர்வை சிந்தினால் களத்தில் இரத்தம் சிந்த நேராது என்பது முது மொழி.  ஆனால் பயிற்சியில் கற்றவை எந்த அளவிற்கு நடைமுறைப் படுத்தப்படுகிறது என்பதுதான் பிரச்சனைக்குரியது.  சில நேர்வுகளில் நடைமுறைப்படுத்த முடியாத நிலையும் ஏற்படுகிறது.  இங்குதான் காவல்துறையின் உயர் அதிகாரிகளின் ஆளுமை சோதிக்கப்படுகிறது.
     பொது அமைதி என்பது அன்றாட சமுதாய நிகழ்வுகளின் அடிப்படையில் மாறுபடும்.  ஒரு சீராக இருக்காது.  உள்ளூர் சச்சரவுகள், வட்டார நிகழ்வுகள், மாநிலம், நாடு ஏன் உலக அளவில் நடக்கும் சம்பவங்களின் தாக்கம் இவற்றைப் பொறுத்தது.  செய்திகள் மின்னல் வேகத்தில் பறக்கும் இந்நாளில் உடையும் செய்திகளை ஆராயாவிட்டால் உறைய வைக்கும் காட்சிகளை எதிர் கெள்ள நேரிடும். 
     ஜாதிப் பிரச்சனைகள் அதிகமாக தலைதூக்கும் மாநிலம் பீஹார்.  அங்கு ஒவ்வொரு ஜாதித்தலைவரும் ஒரு பாதுகாப்புப்படை உருவாக்கி தொண்டர்கள் என்ற பெயரில் வலைய வருவார்கள்.  அரசியலில் ஜாதிகளின் ஆதிக்கம் பீஹார் மாநிலத்தில் அதிகம்.  ரணவீர் சேனா என்ற உயர் ஜாதி பாதுகாப்புப்டை தலைவர் பிரம்மேஷ்வர் சிங் இந்த வருடம் ஜீன் மாதம் கொல்லப்பட்டார்..  அதன் விளைவாக பெரும் கலவரம் ஏற்பட்டது.   வாகனங்கள் எரிக்கப்பட்டன.  சாலைகள் முடங்கயது. மதிப்பிடமுடியாத சொத்து சேதமாகியது.    
காவல்துறைக்கு தர்மசங்கடம். கடுமையான நடவடிக்கை எடுத்தால் உயிர் இழப்பு ஏற்பட வாய்ப்புண்டு.  அதன் விளைவுகள் மேலும வன்முறையைத் தூண்டக்கூடும்.. உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் மெத்தனப் போக்கு என்று குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடும்.  ஆனால் நிதானமான நடவடிக்கைதான் பீஉறார்  காவல்துறை எடுத்தது.  காலப்போக்கில்தான் நிலமையும் கட்டுக்குள் வந்தது.  காவல்துறை எடுத்த நடவடிக்கைப் பற்றி விவரிக்கும் பொழுது, பீஹார் டிஜிபி, தனது அதிகாரிகளுக்கு கடுமையான நடவடிக்கை தவிர்த்து, பார்த்து, கவனித்து நிதானமாக செயல்படவேண்டும் என்று அறிவுறுத்தியதாக கூறியுள்ளார். வன்முறை நிகழம் பொழுது கண்டவுடன் சுட உத்தரவு பிறப்பபிக்கப்பட்டுள்ளது என்று ஊடகங்களில் செய்தி வரும்.  ஆனால் அவ்வாறு ஒரு உத்தரவும் பிஹார்  போலீஸ் வன்முறையை கட்டுப்படுத்த எச்சரிக்ககை கொடுக்கவில்லை. இதன்விளைவாக கடுமையான நடவடிக்கை எடுக்க தவறியதாக குற்றம் சாட்டப்பட்டனர்.
     மும்பையில் ஆகஸ்ட் 10-ம் நாள் அஸ்ஸாம் மாநில மதவாத வன்முறை சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேரணி நடத்தப்பட்டது.  இந்த கண்டனக் கூட்டத்தில் வன்முறை வெடித்தது.  இரு இளைஞர்கள் உயிர்ழிந்தனர் மேலும் 50-க்கும் மேற்பட்டவர் பத்திரிக்கையாளர்கள் உள்பட காயமுற்றனர்.  அரசு  ஊடக வண்டிகள் சேதப்படுத்தப்பட்டன.  மும்பாய் போலீஸ் தீர்கமான உடனடி நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரிழப்பு மற்றும் பொருள் சேதங்கள் தடுத்திருக்கலாம் என்ற விமர்சனம் எழுந்தது.   இத்தகைய சுணக்க அணுகுமுறை கலகக்காரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமையும், வரும் காலங்களில் கோரமான கலவரங்கள் நிகழ்வதை தடுக்க முடியாது என்ற வாதங்கள் வைக்கப்பட்டன.  இதன் எதிரொலியாக நேர்மையான அதிகாரி என்று பாராட்டப்பட்ட காவல் ஆணையர் ஆரூப் பட்நாயக் மாற்றப்பட்டார். பதவி உயர்வு நிமித்தமாக  மாற்றப்பட்டார் என்று அரசு விளக்கம் கொடுத்தாலும், கடுமையான நடவடிக்கை எடுக்க தவறியதுதான் காரணம் என்பது ஊரறிந்த உண்மை.
     2011 ஆகஸ்ட் மாதம் லண்டன் மற்றும் அண்மை நகரங்களில் பெரும் கலவரம் வெடித்தது.  அப்போது லண்டன் போலீஸார் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கத்தவறினர் என்று அரசே குற்றம் கூறியது. ஆனால் லண்டன் போலீஸ் ஆணையர் எதிர் தாக்குதல் நடத்தக்கூடாது என்ற முடிவில் தெளிவாக இருந்தார்.  கடும் நடவடிக்கையால் உயிரிழப்பிற்கு வாய்ப்புண்டு, அதன் விளைவுகளை போலீஸார் சந்திக்க வேண்டும் பிரச்சனை பூதாகாரமாக உருவெடுக்கும் என்ற லண்டன் போலீஸார் வாதத்திற்கும் ஆதரவு இருந்தது.  பல கோடி டாலர் சொத்து பாழடைத்தது.  கலவரக்காரர்கள் வெளிப்படையாக கொள்ளையில் ஈடுபட்டனர்.  அதையும் புகைப்படம் எடுத்து சமுதாய இணையதளத்தில் வெளியிட்டனர்.  காலம் தாழ்ந்து லண்டன் போலீஸார் நடவடிக்கை எடுத்தப்பிறகு தான் கலவரம் ஒய்ந்தது.
     நுண்ணறிவு தகவல்கள்மூலம் பிரச்சனைகளை அறிந்து ஆராய்ந்து அசம்பாவிதங்களை தடுக்க வேண்டும். சம்பவங்கள் நிகழ்ந்தால் உடனடி நடவடிக்கை மூலம் வன்முறை பரவாமல் தடுத்தல், முக்கியமாக கலவரக்காரர்களை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்தல் என்பது தான் காவல்துறையின் சரியான அணுகுமுறையாக இருக்கவேண்டும்.  பல சமயங்களில் பிரச்சனைகளை பெரிதாக்க வெளியிலிருந்து தூண்டுவார்கள்.  மக்களை திசை திருப்ப அறிக்கைகள் விடப்படும்.  போராட்டம் நடத்துபவர்கள் பெண்களையும் குழந்தைகளையும் முன் நிறுத்தி காவல்துறையை செயலிழக்கக் செய்வார்கள்.  சமீபதில் கூடங்குளம் போராட்டத்தில் ஒரு சிறுமி காவல் படையினர் முன் நின்று கொண்டிருந்த படம் வெளியானது.  ஏதோ சடுகுடு விளையாடுவது போல் அந்த சிறுமி சிரித்துக் கொண்டிருக்கிறாள். காவலர்களும் விளையாட்டாக பார்க்கிறார்கள்.  சமயோஜிதமாக, மிக கட்டுப்பாடுடனும் அதே சமயம் திறமையுடன் தமிழக காவல் துறை கூடங்குளம் பிரச்சனையை கையாள்வதை பாராட்ட வேண்டும்.
     மேலை நாடுகளில் கலவரங்கள்  எதிர்கொள்ளும் அணுகுமறை வித்தியாசப்படும்.  போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் எதிரிகள் அல்ல நம் மக்கள்தான்.  ஆதலால் பொறுமையுடன் தற்காப்பு நடவடிக்கை மட்டும் எடுக்க வேண்டும்.  மனித உயிர் விலை மதிக்க முடியாதது.  எந்த விதத்திலும் உயிர் பலி தவிர்க்கப்பட வேண்டும்.  பொருள் சேதம் ஏற்பட்டாலும் அவை காப்பீடு செய்யபட்டிருக்கும். ஈடு கிடைத்துவிடும்  பொருள்களை காப்பாற்ற வன்முறையைதுண்டும் நடவடிக்கை எடுக்கக் கூடாது. அசம்பாவிதங்களை வீடியோ மூலம் பதிவு செய்து,  குற்றம் புரிந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் வருங்காலத்தில் கலவரங்களை தவிர்க்கலாம் என்பது மேலை நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளின் நிலைப்பாடு.
     உடனடி கடும் நடவடிக்கை எடுத்து நிலமையை சமாளிப்பதா, காலம் தாழ்ந்தாலும், சேதம் ஏற்பட்டாலும் நிதானமாக குற்ற வழக்குகள் பதிவு செய்து குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனைப் பெற்றுத்தருவதா,  அல்லது இரண்டு வழிகளையும் கலந்து செய்வதா?  இது காவல் துறைக்கு உயர் அதிகாரிகளுக்கு சவால்! எந்தவழி தெரிவு செய்தாலும் விமர்சனங்கலிருந்து தப்ப முடியாது.  ஏதற்கெடுத்தாலும் காவல்துறையை பழிப்பதற்கென்றே ஒரு சிலர் இருக்கிறார்கள்.  மக்கள் நலனைப்பற்றி அக்கறையில்லை.  ஊர் இரண்டுபட்டால்தான் அவர்களுக்கு ஆதாயம்.
ஆனால் காவல்துறை  எந்த முடிவு எடுத்தாலும் பொது அமைதி காப்பதே முதல் நோக்கம் என்ற அளவில் நேர்மையாக செயல்பட்டால் மக்கள் துணை இருப்பார்கள். மக்கள் துணையே மகேசன் துணை!
----
இக்கட்டுரை தினமணி நாளிதழில் 18.09.2012 அன்று பிரசுரிக்கப்பட்டது














அவசர உலகில்…



ஒவ்வொரு நாளும் எவ்வளவோ நிகழ்வுகளைப் பார்க்கிறோம், கேள்விப்படுகிறோம்.  ஆனால் சில செய்திகள்தான் நெஞ்சைத் தைக்கின்றன, மனம்பதபதைக்கிறது ‘என்ன கொடுமையப்பா’ என்று சீயோன் பள்ளியில் படித்த குழந்தை ஸ்ருதியின் கோர மரணம் எல்லோர் மனதையும் பாதித்தது.  இத்தகைய விபத்துகளுக்கு முடிவே இல்லையா என்ற கேள்வி எழுகின்றது. சில நாட்கள் சம்பவத்தைப்பற்றிய சர்ச்சை விவாதிக்கப்படும்.  அதற்குள் வேறு ஏதாவது சம்பவம் நிகழும்.  பழைய சம்பவம் மறக்கப்படும்.
கோயம்பத்தூரில் இரண்டு வருடங்களுக்கு முன்னால் தனியார் வேன் ஒட்டும் மோஹன்ராஜ், மிஸ்கின், ரித்திக் என்ற இரண்டு பச்சிளம் குழந்தைகளை பணத்திற்காக கடத்தி பின்பு கொன்ற சோக சம்பவம் மறந்திருக்க முடியாது.  கயவன் மோஹன்ராஜ் பின்பு போலீஸாரால் என்கௌண்டரில் சுடப்பட்டு மாய்ந்தான்.  மோஹன்ராஜ் வழக்கமாக இந்த இரண்டு குழந்தைகளையும் வேனில் பள்ளிக்கு அழைத்து செல்பவன்.  அவன் மனதில் இத்தகைய குரூர எண்ணம் எவ்வாறு வந்தது! தனிமனித ஒழுக்கச் சீரழிவு இந்த அளவுக்கு போய்விட்டதே!
“தினமும் நூற்றுக்கணக்கான பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பல ஆபத்திற்கு உள்ளாகிறார்கள்.  பள்ளி சென்று வருவதே பெரிய சவாலாக உள்ளது,” என்று சில வருடங்களுகளுக்கு முன்  சென்னையில் பள்ளிச் சிறுவன் ஹர்ஷன் விபத்தில் இறந்தபோது பலர் கூக்குரல் எழுப்பினர்.  அதுவும் அந்த சிறுவன் பள்ளியின் வேனில் வீட்டுக்கு திரும்பி வண்டியிலிருந்து இறங்கி தந்தையின் கண்முன்னாலேயே அதே பள்ளி வேன் சிறுவன் மீது ஏறி உயிரிழந்தான்.
சியோன் பள்ளி சுருதி விபத்திற்கு ஒரு வாரத்திற்குள் ஆவடியில் இன்னொரு விபத்து.  ஒன்றரை வயது சஞ்சய் தனது சகோதரர்கள் சந்தோஷ், சுதாகர் பள்ளிக்கு வேனில் செல்வதை பார்க்கையில் பள்ளி வேன் சக்கரத்தில் மாட்டிக் கொண்டு இறந்தான்.  இதுவும் பெற்றோர் கண்ணெதிரில்.
ஜீலை 27-ம் தேதி மூன்று வயது சுஜிதா ஆம்பூர் ஈச்சம்பட்டு அருகில் பள்ளி வேனில் சிக்கி உயிரிழந்தாள்.  ஆகஸ்ட் 3-ம் தேதி மதுரைக்கு அருகில் ஆறு வயது ஜெயலஷ்மி பள்ளியிலிருந்து அதிக குழந்தைகளை ஏற்றி வந்த ஷேர் ஆட்டோவிலிருந்து விழுந்து உயிரிழந்தாள்.
சுருதி, ஹர்ஷன் அவர்களது பள்ளி வேனே எமனாக வாய்த்ததுபோல காஞ்சீபுரம் படப்பை அருகில் நடந்த விபத்தில் ஐந்தரைவயது ஆகாஷ் பள்ளி வேனைவிட்டு இறங்கி சாலையைக்கடக்கும் பொழுது அதே வேன் அவன் மீது ஏறியது என்ன கொடுமை.
சில வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்த ஹர்ஷன் விபத்திற்குப் பின் எல்லா பள்ளி வாகனங்களிலும் ஒட்டுனரைத்தவிர நடத்துனரும் பணி அமர்த்தப்பட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  அப்படி இருந்தும் அகாஷ் அவனது பள்ளி ஊர்தியிலேயே சிக்கி உயிரிழந்தான்.
சில மாதங்களுக்கு முன்னால் பஞ்சாப் மாநிலம் அம்பாலா மாவட்டம் பேகதா என்ற இடத்தில் குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றிச் சென்ற மினி வேன் லாரியோடு மோதியதில் 11 குழந்தைகள் மாண்டன,  இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்தன.   இது தவிர பொது இடங்களில் அரசுத்துறையே மேற்கொள்ளும் பல்வேறு செப்பனிடும்  பணிகளில் பள்ளங்கள் நிரப்பபடாமல் விட்டுவிடுவதால் விளையாடும் குழந்தைகள் இத்தகைய குழிகளில் சிக்கி உயிரிழக்கும் விபத்துகள் அதிகமாக நிகழ்கின்றன.  இத்தகைய விபத்துகளில் உயிரைக் காப்பாற்றுவது மிக கடினம்.  அதற்குத் தேவையான உபகரணங்களும் உடனடியாக கிடைப்பதில்லை.
ஹரியானா மாநிலத்தில் மாஹி என்ற 4 வயது சிறுமி தண்ணீருக்காக ஆழமாக தோண்டப்பட்ட குழியில், கடந்த ஜுன் மாதம் தவறி விழந்து சிக்கிக் கொண்டாள்.  அதுவும் அன்று அவளது பிறந்த நாள்.  அந்த கொண்டாட்டத்தில் விளையாடும் பொழுது அதள பாதாளத்தில் விழுந்தாள்.  காவல்துறை, ராணுவவீரர்கள், தேசிய ராணுவவீரர்கள் 70 அடி குழியிலிருந்து குழந்தையை மீட்பதற்காக போராடினர். விழுந்த குழிக்குப் பக்கத்தில் இன்னொரு குழி தோண்டி அடியில் இரண்டு பள்ளங்களையும் இணைக்கும் சுரங்க பாதை அமைத்து குழந்தையை லாவகமாக மீட்கும் நுட்பமான பணி நிறைவேற்ற 48 மணி நேரம் பிடித்தது.  இறந்த குழந்தையைத்தான் எடுக்க முடிந்தது.  அதன் பிறகு அஜாக்கரதையாக குழி வெட்டியவர் மீது குற்ற நடிவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் விழிப்புணர்வு வந்ததா என்றால் அது கேள்விக்குறி.  அடுத்த விபத்து நிகழ காத்துக் கொண்டிருக்கும்.
உயர் நீதி மன்றம் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பு மேம்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அதற்கு உடனடியாக தக்க நடவடிக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்கக் வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.  குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பள்ளியின் வேன்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், பள்ளி நிர்வாகத்தின் கடமைகள்,  பெற்றோர்களின் பொறுப்பு, சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் உரிய நடவடிக்கை இவையெல்லாம் ஒருங்கிணைந்தால் தான் பள்ளிக் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு உறுதி செய்ய முடியும். 
உச்ச நீதிமன்றம் தில்லிக்கு அருகில் பல குழந்தைகள் உயிரிழந்த சாலை விபத்து சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கில் இத்ததகைய விபத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கக் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பட்டியலிட்டுள்ளது.  அதன்படி குழந்தைகள் பயணிக்கும் எல்லா பள்ளி வாகனங்களும் மஞ்சள் நிறம் பூசப்பட வேண்டும். பள்ளி வாகனம் என்ற அறிவிப்புப் பலகை வண்டியின் முன் மற்றும் பின் பகுதியில் வைக்கப்பட வேண்டும்.  அவசர சிகிச்சைப் பெட்டி இருக்க வேண்டும்.  வேகக்கட்டுப்பாடுக் கருவி பொருத்த வேண்டும்.  வண்டியின் ஜன்னலில்  பாதுகாப்பு வலை கம்பிகள் இருக்க வேண்டும்.  வண்டியில் கதவுகள் பூட்டப்பட வேண்டும். வண்டியில் குந்தைகளை கவனிக்க நடத்துனர் அமர்த்தப்படவேண்டும்.  வண்டி ஒட்டுனர் சுமார் ஐந்து வருடம் பேருந்து ஒட்டும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  போக்குவரத்து விதி மீறல்கள் குற்றங்களுக்கான தண்டனை பெற்றிருக்கக் கூடாது.  மதுபானம் அருந்தி வண்டி ஒட்டியதற்கான குற்றம் ஒருமுறை புரிந்திருந்தால் கூட அவரை நியமிக்கக் கூடாது.  பள்ளியின் ஆசிரியர் அல்லது குழந்தைகளின் பெற்றோர் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது வண்டியில் பயணம் செய்து பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டும்.
2011-ம் வருடம் 3,90,884 மக்கள் விபத்துக்களில் உயிர் இழந்தனர்.  2001-11, பத்து வருடங்களில் விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44.2 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்பது கவலைக்குரியது. ஜனத்தொகை கணக்குப்படி 14 வயதுக்குட்ப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மொத்த ஜனத்தொகையில் சுமார் 30 சதவிகிதம் விபத்தில் மடியும் குழந்தைகள் மொத்த உயிரிழப்பில் சுமார் 7 சதவிகிதம்.  மேலும் 61 சதவிகிதம் 15 வயதுலிருந்து 44 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் இம்மாதிரி விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கின்றனர் உழைக்கும் கரங்களை இழக்கிறோம், பாதிப்பு குடும்பத்திற்கு மட்டுமல்ல மொத்த சமுதாயத்திற்கும் ஏற்படுகிறது.

பள்ளி வண்டிகள் பிரத்யேகமாக நல்ல முறையில் பராமரிக்கப்பட வேண்டும்.  ஒட்டுனர்களுக்கு பள்ளி வாகனம் கவனமாக ஒட்டுவதற்கான சிறப்புப் பயிற்சி அளிக்க வேண்டும்.  குழந்தைகள் வண்டியில் ஏறி அமர்ந்த பிறகுதான் நகர வேண்டும்.  பயிற்சிக் பெற்ற நடத்துனர் ஒவ்வொரு வண்டியிலும் குழந்தைகளை மேற்பார்வையிட இருக்க வேண்டும். குழந்தைகள் பள்ளி வாகனங்களிலிருந்து இறங்கி சாலையை கடக்கும்பொழுது அதிகமான விபத்துக்கள் நிகழ்கின்றன. குழந்தைகள் வாகனத்தின் முன்னால் அல்லது பின்னால் சாலையைக்க கடக்கக் கூடாது.  எதிரும் புதிரும் வரும் வாகனங்களை பார்க்க முடியாது.  பள்ளியின் வாகனம் நகர்ந்த பிறகு முன்னும் பின்னும் பார்த்து சாலையைக் கடக்க வேண்டும்.  குழந்தைகள் பயணிக்கும் வாகனங்கள் தனியாருடையதோ அல்லது பள்ளியின் பராமரிப்பில் உள்ளதாக இருந்தாலும் விதிகள் கடைபிடிக்கப்பட்ருக்கின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் கடமை.  பள்ளியின் உயர்மட்டக் குழு மேற்பார்வையிட வேண்டும்.
மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் அரசாங்கம் வழங்குகிறது.  அவர்களுக்கென்று காலையும் மாலையும் சிறப்பு அரசு ஊர்திகள் ஏற்பாடு செய்தால் மக்களுக்கு நிம்மதியைத்தரும் குழந்தைகள் தான் நமது நாட்டின் எதிர்காலத்தை தாங்கப்போகிறார்கள்.  அவர்களைப் பேணுவது நமது கடமை.
தனது பத்திரிக்கைத்துறை அனுபவத்தில் இத்தகைய கோர சம்பவத்தை செய்தியாக அனுப்புவதில் தனக்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டது என்று அஸ்சாம் மாநிலம் குவாத்தியில் போன மாதம் அசிங்கமான முறையில் பொது இடத்தில் ஒரு இளம் பெண் மானபங்கம் செய்யப்பட்ட நிகழ்வை விவரிக்கையில் ஒரு செய்தியாளர் மனக் குமுறலுடன் தெரிவித்தார்.  இந்த தலைகுனிவு போதாது என்று ஜீலை மாதம் மங்களூரில் கடற்கரை ஓர கேளிக்கை விடுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், கலாச்சார பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொண்டு அங்கு கூடியிருந்த விருந்தினர்கள் மற்றும் பெண்களை தாக்கியதாக செய்தி வந்தது.  கேளிக்கையில் ஈடுபட்டவர்களை கண்முடித்தனமாக தாக்கியது மட்டுமின்றி தகாதவார்த்தைகளால் திட்டியுள்ளார்கள்.  காவல்துறையின் தலையிட்டு நடவடிக்கை எடுத்த பிறகு நிலமை சிரானது.
     இத்தகைய அத்துமீறல்கள் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும்.  தனி மனித சுதந்திரத்தில் தலையிடக்கூடாது.  சுதந்திரம் என்பது மற்றவர்களின் உரிமைகளை பாதிக்காத வகையில் அனுபவிக்க மட்டும் தான் சட்டத்தில் இடமுண்டு.   தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற நிலை வந்தால் குழப்பம் தான் விளையும்.
 அஸ்சாம் மாநிலத்தில் இனக்கலவரம் மலைவாழ் மக்களுக்கும் அண்டை நாடான பங்களாதேசத்திலிருந்து இடம் பெயர்ந்தவருக்கும் பிரச்சனை.  பலர் வீடுகள் உடமைகள் இழந்து தவிக்கின்றனர்.  அடி மேல் அடி ஏழைகளுக்குத்தான். இதன் எதிரொலி மும்பையில் கண்டன ஊர்வலம் ஆயிரக்கணக்கானவர் திரண்டனர்.  காவல்துறை சமயோஜிதமாக கூட்டத்தை சமாளித்து கலைத்துவிட்டனர்.  துப்பாக்கி சூடு தவிர்க்கப்பட்டது.  கர்நாடகா மாநிலத்தில் அசம்பாவிதம் நிகழ வாய்ப்பிருக்கிறது என்று விஷமிகள் வதந்தி கிளப்பி விட்டனர்.  அதன் விளைவு வேலை நிமித்தமாக பங்களூரில் தங்கி இருக்கும் பல அஸ்சாமியர்கள் தங்கள் மாநிலத்தை நோக்கி சொல்லத்துவங்கியுள்ளனர்.
நமது நாட்டின் வலிமையே வேற்றுமையில் ஒற்றுமை அவை குலையும் வகையில் இத்தகைய நெருடல்கள்.  இவை தற்காலிக இடரல்களாக மறைய வேண்டும்.  அதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம்.  நாட்டுப் பற்று, சகோதரத்துவம், பரஸ்பர ஒற்றுமை போன்ற நற்குணங்கள் நாட்டின் இறையாண்மையோடு ஒன்றியவை,  இதற்கு அரசை நாட வேண்டியதில்லை.  மக்களின் உள்ளக்கிடக்கையிலிருந்து வரவேண்டியவை.
விஷமிகளால் தூண்டப்படும் விபத்துகள் ஒரு புறம்.  அன்றாடம் கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகள் மறுபுறம்.  இரண்டு வகை நிகழ்வுகளாலும் பாதிக்கப்படுவது பொதுமக்கள், அதுவும் நடுத்தரம் மற்றும் ஏழை மக்கள்.  அவசர உலகில் இத்தகைய விபத்துகள் தவிர்க்க முடியாது என்று விட்டு விடக் கூடாது. விழிப்புணர்வும் விதிகளை மதிக்கும் கவனமும் இருந்தால் விபத்துகள் குறையும்.  தூண்டப்படும் விபத்துகளை ஒடுக்க வேண்டும்.  ஏனைய விபத்துகள் தவிர்க்க வேண்டும்.
---
தினமணி நாளிதழ்கட்டுரை 23 ஆகஸ்ட் 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது

Monday, July 16, 2012

கிராமமே கண்ணாக…



இந்தியாவின் ஜீவன் அதன் கிராமங்களில் உள்ளது என்றார் அண்ணல் காந்தியடிகள்.  அரசியல் ஆடுகளமாகவும் அரசு நிர்வாக மையமாகவும் உள்ளது தில்லி.  அதனாலேயே இந்தியா என்றால் தில்லி மற்றவை பாரதம் என்பது  எவ்வளவு உண்மையான கூற்று! அண்மையில் நடந்த மக்கள் கணக்கெடுப்புப்படி இந்தியாவின் 68.8% சதவிகிதம் மக்கள் கிராமங்களில் வசிக்கிறார்கள்.  சுதந்திரம் அடைந்த போது 80 சதவிகித்திற்கும் மேலாக கிராமத்தில் வசித்த மக்கள் படிப்படியாக நகரத்திற்கு குடிபெயர்ந்ததாலும் பல புதிய நகரங்கள் உருவாகுவதாலும் இந்த மாற்றம்.
     ஆங்கில கவிஞர் கோல்ட்ஸ்மித் கிராமங்கள் தேய்ந்து வருவதும் பண ஆதிக்கம் ஒங்குவதும் மனித நற்பண்புகள் மங்குவதும் அழிவுப் பாதையைதான் வகுக்கும் என்றும்,  புதுப் பணக்காரர்கள் தோன்றலம் ஆனால் நிலத்தை நேசிக்கும் விசுவாசியான விவசாயி நொடித்துப் போனால் அது சமுதாயத்திற்கு நிரந்தர இழப்பு என்று நயம்பட இயற்றிவுள்ளார்.
          முதல் அடி வைத்தல்தான் தொலைதூர பயணத்தின் முதல் துவக்கம்.  நாடளாவிய வளர்ச்சிக்கு கிராமங்களின் வளர்சித்தான் துவக்கமாக அமைய வேண்டும். 
     கிராம வளர்ச்சிப்பணியில் கிராம நிர்வாக அலுவலர் முக்கிய பங்கு வகிக்கிறார்.  கிராம நிர்வாக அலுவலர் என்ற பதவி பரம்பரைப் பொறுப்பாக கிராமத்தில் ஒரு குடும்பத்தின் சந்ததியரால் நிமிக்கப்பட்டு வந்தது.  தமிழ்நாட்டில் கர்ணம் என்றும் வடமாநிலங்களில் பட்வாரி, படேல், குல்கர்னி என்று பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தது. 1980-ல் தமிழ்நாட்டில் பரம்பரை பதவி முறை ஒழிக்கப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் அரசுப் பதவியாக மாற்றப்பட்டு மற்ற அரசுப்பணிகளுக்கு தேர்வு செய்வது போல் தேர்ந்த தெடுக்கும் முறை அமல்படுந்தப்பட்டது.  இது மிகப்பெரிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எனலாம். 
பரம்பரை நிர்வாக முறையில் நிறை குறை பல இருந்தன.  கர்ணத்திற்கு கிராமத்தில் உள்ள எல்லோரையும் தெரியும்.  அவர்களது குடும்ப நிலவரம் பூர்வீகம் அவர்களது தற்போதைய நடவடிக்கை எல்லாம் அத்துப்படி.  கிராமத்தில் எவ்வளவு நிலங்கள் இருக்கின்றன எது யாருக்கு சொந்தம், நிர்வாகம், பயிர் சாகுபடி, வேறு சமுதாய சாதிப்பிரச்சனை எல்லாவற்றையும் முழுமையாக அறிந்து வைத்திருப்பார்.  பிறப்பு, இறப்பு, சாதிவாரியான கணக்கு, மழையளவு, பொதுச்சொத்து,  உள்ளூர் கோவில் நிலங்கள், நில வரிக்கான  கணக்கு என்று கிராம சரிந்திரம், நடப்புகள் எல்லாம் பதிவு செய்து வைத்திருப்பார்.  மாவட்ட ஆட்சியர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேரில் ஆய்வு செய்கையில் கிராம கர்ணத்தின் அநுபவபூர்வமான தகவல்கள் பல முடிவுகளுக்கு ஆதாரமாக அமையும்.
     “என்ன கணக்கு நான் சொல்றது சரியா” என்று கிராமத்தில் பலம்படைத்தவன் தனது அராஜக செயலுக்கு ‘ஆமாம் சாமி’ போட வைக்கும் காட்சி சினிமாவில் வரும். பரம்பரை கர்ணம் முறையில் இதுதான் பிரச்சனை.  சுயநலம், பலம் படைத்தவர்களிடம் பணிந்து போவது, கிராம கணக்குகளை நிர்வாகம் செய்வதில் குறைபாடுகள் போன்றவற்றிற்கு நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்கள்.  வளர்ந்து வரும் ஜனநாயகத்தில் இத்தகைய பரம்பரை நியமனம் காலத்திற்கு ஒவ்வாது என்ற அடிப்படையில் அரசுப் பணியாளர்களாக கிராம நிர்வாகிகள்  தேர்ந்தெடுக்கப்பட்டனர்
     வருவாய்த்துறை, நிர்வாக அமைப்பில் மிகப்பழமையானதும் பெருமை வாய்ந்ததுமாகும்.  வருவாய்த்துறை, நில நிர்வாகம், நில சீர்திருத்தம், போக்குவரத்து, வர்த்தகம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை போன்ற பல துறைகளை உள்ளடக்கிய ‘வருவாய் வாரியம்’ (ரெவின்யூ போர்டு) நிர்வாக ஆளுமைக்கு உயர்ந்த உதாரணமாக திகழ்ந்தது.  இப்போது பல்வேறு தனித் துறைகளாக பிரிக்கப்பட்டு இயங்கி வருகிறது.   மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர், கோட்ட ஆட்சியர், தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் நிர்வாக அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.  முப்பத்திரண்டு மாவட்டங்களில், 76 கோட்டங்களும், 220 தாலுக்காக்களும், 1127 பிர்கா  மற்றும் 16,564 வருவாய்  கிராமங்களும் உள்ளன.  வளர்ச்சிப்பணியில் கிராம நிர்வாக அலுவலருக்கு மிக முக்கிய பொறுப்பு உண்டு.
குஜராத்தில் தன்னிறைவு மட்டுமல்ல நகரங்களை விஞ்சும் வகையில் வளர்ந்துள்ள கிராமத்தைப்பற்றி செய்தி வந்தது.  ஹிம்மத் நகர் என்ற பகுதியில் உள்ள ‘அன்சாரி’ என்ற கிராமத்தில் வறுமையில்லை, வெறுமையில்லை, எங்கும் பசுமையும் வியக்க வைக்கும் வகையில் வளமையும்!  குளிர்சானம் பொருத்தப்பட்ட பள்ளிக்கூட அறைகள், சுத்தமான தெருக்கள், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல மினிவேன், தெருக்களில் குப்பை சேராமல் இருப்பதை கண்காணிக்க கேமிராக்கள் என்று அடுக்கடுக்காக நவீன வசதிகள்.  அந்த கிராமத்தில் இருந்து வெளிநாடு சென்றவர் யாருமில்லை. வெளிநாட்டிலிருந்து பணம் பெறவில்லை.  பணக்காரர் பொருள் உதவி செய்யவில்லை.  எல்லாம் அந்த கிராம மக்களின் சுயமுயற்சி, சீரிய பஞ்சாயத்து நிர்வாகம்.  சுத்திகரிக்கப்பட்ட நீர் ஒவ்வொரு வீட்டிற்கும் 20 லிட்டர் குடி தண்ணீர் வழங்கப்படுகிறது.  அதற்கு ரூபாய் நான்கு மட்டுமே கட்டணம்.  கிராம பஞ்சாயத்திடம் ஐந்து வருடங்களுக்கு முன்னால் ரூபாய் 25,000 மட்டுமே வைப்பு நிதியாக இருந்தது. இப்போது ரூபாய்.75 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணம் மக்களின் கூட்டுறவு மூலம் துவங்கப்பட்ட வளர்ச்சிப் பணிகள், பஞ்சாயத்து அமைப்பின் ஒற்றுமை.  எல்லோருடைய ஒத்துழைப்பு இருந்தால் உயர்ந்த நிலையை அடையலாம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
இந்தியாவில் புதிய பொருளாதாரம் கொள்கை மூலம் தொழில் நுட்பம் தகவல் தொடர்பு வளர்ச்சி அடைந்துள்ளது.  ஆனால் வளர்ச்சியின் பங்களிப்பு 15 சதவிகிதம் மக்களையே சென்றடைந்திருக்கிறது.  பலகோடி மக்கள்  இன்னும் இருந்த இடம் பள்ளம் என்ற நிலை மாறவில்லை.  மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் நகரமயமாக்கல் அதிகரித்து வருகிறது.  அது ஒரு விதத்தில் பொருளாதார வளர்ச்சியை குறிக்கிறது.  தமிழகத்தில் சுமார் 51.5 சதவிகிதம் மக்கள் கிராமங்களில் வசிக்கின்றனர்.
     வருவாய் கிராமங்களுடன் ஒட்டி குக்கிராமங்கள் உண்டு.  வருவாய் கிராமங்கள் தாய் என்றால் குக்கிராமங்கள் அதன் குழந்தைகள்.  தாய் கிராமங்களை முன்வைத்தே நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.  ஆனால் சிறு கிராமங்களை மையமாக வைத்து ’தாய்’ என்ற அருமையான திட்டத்தை தமிழக அரசு வகுத்துள்ளது.  சிறு கிராமங்களுக்கு சாலை, குடி நீர், மின்சாரம், சுகாதாரம் குடும்ப நலம், கல்வி என்ற அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யும் வகையில் இத்திட்டம் அமையும். தமிழகத்தில் மொத்த கிராம பஞ்சாயத்துகள் 12,524.  இதில் குடியிருப்புகள் உள்ள குக்கிராமங்கள் 79,394. சராசரி ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் 7 குடியிருப்புகள் உள்ளன.  தாய் திட்டத்தில் இத்தகைய குக்கிராமங்களை கணக்கிட்டு கிராம பஞ்சாயத்திற்கு நிதி ஒதுக்கப்படுகிறது. குக்கிராமங்கள் எண்ணிக்கை வைத்து கிராம பஞ்சாயத்துகளில்  ஐந்துக்கு கிழ் குடியிருப்புகள், 5 லிருந்து 15, 16 லிருந்து 25, 25ற்கு மேல் என்று நான்கு வகையாக பிரிக்கப்பட்டு அதற்கேற்றால் போல் நிதி ஒதுக்கப்படுகிறது.  இதற்கான தேவை ரூபாய்.3,400/- கோடி. ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 680/- கோடி என்ற அளவில்  இத்திட்டத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றப்பட உள்ளது. எந்த மாநிலத்திலும் இத்தகைய மக்களுக்கு அநுகூலமான அணுகுமுறை நடைமுறையில் இல்லை.  இந்த திட்ட அமலாக்கத்தில் கிராம நிர்வாகத்தின் பங்கு முக்கியமானது.  வளர்ச்சியின் பயனளிப்பு எல்லோருக்கும் சென்றடைய இது உறுதி செய்யும்.  ‘தாய்’ திட்டம் நாட்டிற்கே முன்னோடியாக அமையும்.
     நிலப்பட்டா என்பது நில உரிமையாளர் முக்கியமாக கருதும் ஆவணம்.  நிலப்பட்டா மாற்றம் செய்வதில் தாமதத்தை தவிர்க்கவும் மக்களுக்கு உதவும் வகையில் அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது.  அதன்படி கிராம நிர்வாக அலுவலர் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கிராம மக்களிடமிருந்து பட்டா மாற்றுதலுக்கான மனுக்களை பெற வேண்டும்.  அதனை பரிசீலித்து வெள்ளிக்கிழமை வட்டாட்சியருக்கு அனுப்ப வேண்டும்.  குறித்த கால கட்டத்திற்குள் மாற்றம் செய்யப்பட்ட பட்டா துணை வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.  இதன் மூலம் கால தாமதம் தவிர்க்கப்படுவதோடு தவிர்க்கப்பட வேண்டிய ‘கைமாற்றம்’ தகர்க்கப்படுவதில் மக்களுக்கு நிச்சியமாக நிம்மதி தரும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நாட்டின் பொருளாதார வளர்ச்சியை குறிக்கிறது. சமீபத்தில் ஒட்டு மொத்த வளர்ச்சி குறைந்ததால் விலைவாசி உயர்ந்துள்ளது, நாட்டின் ஜிடிபி குறைந்த நிலையில் இருந்தாலும் தமிழகத்தில் ஜிடிபி உயர்ந்து வருகிறது  என்பது நிறைவைத்தருகிறது, ரிசர்வ் வங்கியின் துணைத்தலைவர் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பொழுது  தமிழகத்தில் 2011-12க்கான வளர்ச்சி 12.5 சதவிகிதம் என்றும் இந்தியாவின் சராசரி வளர்ச்சியான 6.5 சதவிகிதத்தில் இரண்டு மடங்கு என்பது பெருமைக்குரியது என்று கூறியுள்ளார். ஒவ்வொரு  மாவட்ட ஆட்சியரும்  தமது  மாவட்டம், கிராமங்களின் மொத்த   உற்பத்தி (ஜிடிபி) கணக்கிட்டு அது பெருக முனைப்பாக  செயல்பட்டால் தமிழ்நாடு மேலும் உன்னத நிலையை அடையும்.
     தொழில் உற்பத்தி, சேவை தொழில்கள் அபிவிருத்தியடைந்து வருவது இந்த வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது சுகாதாரமான மேல் வளர்ச்சிக்கு வித்திடும் என்பது உறுதி.  மேலும் தனியார் முதலீடு அதிகரித்துள்ளது.  அதில் 48 சதவிகித தொழில் ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.  42 சதவிகித திட்டங்கள் ஒப்பந்தம் அளவில் உள்ளன.  அதன் பயனளிப்பை துரிதப்படுத்துவதோடு, தொழில் முதலீடு செய்பவர்கள் ஊக்குவிக்க சம்மந்தப்பட்ட துறைகள் முனைப்பாக செயல்பட வேண்டும். 
சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் வாழும் மக்கள் வளம் பெற முயற்ச்சிக்கின்றனர்.  தமது நிலை உயர வேண்டும்.  தமது குழந்தைகள் வசதியோடு வாழ வேண்டும் என்ற அவர்களது எதிர்பார்ப்பு நியாயமானது.  பூமியைப் பிளந்து நெற் பயிர் மேல் நோக்கி வளர்வது போல் கிராமங்கள் மேன்மையுற ‘தாய்’ திட்டம் வழிவகுக்கும்.  இந்தியாவின் ஜீவன் பாதுகாக்கப்பட வேண்டும்.
………..


    This Article published in Dinamani News paper on 14.07.2012 

………..


     

Wednesday, May 16, 2012

காலம் பொன்னானது


காலம் பொன்னானது
காலத்தின் அருமைக் கருதி பேச்சை விரைவில் முடிக்கிறேன் என்று நீட்டி முழங்கி மணிக்கணக்கில் அரங்கில் பேசி சோதிப்பவர்கள் இருக்கிறார்கள்.  காலத்தின் அருமையை நாம் உணர்வதில்லை.  காலம் பொன்னானது. எந்த ஒரு செயலாக்கத்திற்கும் தடங்கல் ஏற்பட்டால் இழப்பை ஈடுகட்ட முடியாது.  உதாரணமாக சென்னை விமானதளம் விரிவாக்கத்திற்கு 2003ம் வருடம் தமிழக அரசால் சுமார் 1450 ஏக்கர் ஒதுக்கப்பட்டது.  ஆனால் சில அமைப்புகளின் எதிர்ப்பால் விரிவாக்கத்தில் தடங்கல் ஏற்பட்டது.  விளைவு சென்னையில் தேக்கநிலை, பங்களுரூ, ஐதராபாத் புதிய விமானதளம் அமைப்பதில் முந்திக்கொண்டது, 
ஒரு கட்டமைப்பிற்கும் தேவை தீர்கமான திட்டம்,  போதுமான நிதி, செயலாற்றுவதற்கான நிபுணர்கள், களப்பணியாளர்கள்.  இவைற்றைல்லாம் ஒருங்கிணைத்து குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும்.  கால அளவு நிர்ணயிப்பதுதான் மிக முக்கியம்.  எவ்வளவோ பயன் தரும் திட்டங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றப்படாததால்,  நிதி விரயமாகிறது.  திட்டத்தின் பயனளிப்பு பெறுவதில் தடங்கல்,  அதைச்சார்ந்த நிறுவனங்களுக்கு இழப்பு, இதனால் பாதிக்கப்படும் குடும்பங்கள் என்று ஒரு இடத்தில் ஏற்படக்கூடிய தாமதம், நேர விரயம் அடுக்கடுக்காக காற்றலையாக பாதிப்பு ஏற்படுத்துகிறது.
      ஒரு நாட்டின் வளமையை நிர்ணயிப்பதே அந்நாட்டு மக்கள் எவ்வாறு தமது நேரத்தை செலவிடுகிறார்கள் என்பதைப் பொருத்திருக்கிறது. முன்னேறிய நாடுகளில் வேலை செய்யும் பாங்கு, பணிக்கலாச்சாரம் மெச்சத்ததக்கதாக இருக்கும்.  அநாவசியமாக வம்பளப்பது, தொலைபேசியில் பேசி காலம் கழிப்பது போன்ற சோம்பேறித்தனமான நடவடிக்கையை பார்க்க முடியாது. இந்தியாவில் உள்ள பல பன்னாட்டு நிறுவனங்களிலும் இந்த ஒழுங்குமுறை கடைபிடிக்கப் படுகிறது.  காலத்தின் அருமையை உணர்ந்ததால் தான் வளமான நாடுகளில் செல்வச் செழிப்பு நிலைக்கிறது.
      நமது நாட்டில் சுதந்திரம் அடைந்த முதல் 30 ஆண்டுகள் சோஷலிச பொருளாதார கொள்கை கடைபிடிக்கப்பட்டது. பின்தங்கிய பகுதிகளுக்கும், ஏழை மக்களுக்கும் வளர்ச்சியின் பயன் சென்றடைய வேண்டும் என்ற உயரிய நோக்கம் இருந்தாலும்,  நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள். ‘பெர்மிட் ராஜ்’ என்ற வகையில் ஒவ்வொன்றுக்கு அரசு அனுமதி பெற வேண்டும் என்ற நிர்பந்தத்தில் தனி மனித வளர்ச்சியும் ஈடுபாடும் குன்றி தேக்க நிலைதான் தொடர்ந்தது.  அப்போது நடைமுறைப் படுத்தப்பட்ட  நடவடிக்கைகள் தவறு என்று  இப்போது ஒப்புக் கொள்கிறார்கள்.  ஆனால் விரயமான காலத்தை ஈடு செய்ய முடியுமா?  அந்த தேக்க நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் இழப்பை திரும்பப் பெற முடியுமா?  வறுமையில் இழந்த வாலிபம் தான் திரும்புமா!  அதைத்தான் ஜெயகாந்தன் அவர்கள் தைலியின் கிழிந்த ஒத்தப்புடைவையை குளித்துவிட்டு காய்ந்த பிறகு கட்டிக் கொள்ளும் நிலை 1947-ல் எவ்வாறு இருந்ததோ 25-ந்து ஆண்டுகளுக்குப் பிறகும் 1972-ல் மாறவில்லை என்று எழுதியிருந்தார்.  இன்னும் எவ்வளவோ தைலிகள் நாட்டில் இருக்கிறார்கள்.  கால விரயத்தின் கொடுமைகளை அனுபவித்துக் கெண்டிருக்கிறார்கள்.
ஆப்பிள் கணினியை உருவாக்கி படங்கள், வீடியோக்கள் மற்றும் டிஜிட்டல் கோப்புகளை பகிர்ந்து கொள்ளும் முறையில்  
ஐ–பாட் மூலம் புரட்சி ஏற்படுத்தியவர் ஸ்டீவ் ஜாப்ஸ். விதி அவருக்கு எவ்வளவோ துரோகம் செய்தது. விவாகம் முடிக்காத இளம்மாணவிக்கு கூடா உறவு மூலம் பிறந்து, வேறொரு தம்பதியினரால் தத்து எடுக்கப்பட்டு, அவர்களுக்கு பொருளாதார நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று தனது உயர் கல்வியை பாதியில் நிறுத்தி சுயமாக தொழில் செய்ய வேண்டும் என்ற  உந்துததில் கார் ஷெட்டில் கணினி வடிவமைக்கும் சிறு தொழிலைத் துவங்கி வாழ்கையில் வெற்றிக் கண்டார்.  பல போராட்டங்களுக்கு இடையில் தன்னம்பிக்கை மற்றும் தனது நேரம், முழு உழைப்பையும் மூலதனமாக வைத்து உருவாக்கப்பட்ட நிறுவனம் தான் ‘ஆப்பிள் மேக்’ கம்ப்யூட்டர்.  நாலாயிரம் பணியாளர்களைக் கொண்ட இரண்டு பில்லியன் டாலர் கம்பெனியாக இப்போது வளர்ந்துள்ளது.  ஐஃபோன், ஐ-பாட் இவையில்லாமல் வாழ்க்கையில்லை என்று உலகில் உள்ள இளைஞர்களை ஆட்கொண்ட சாதனையாளர் ஸ்டீவ் ஜாப்ஸ். நேரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்.  எங்கு சென்றாலும் இளைஞர்களுக்கு அதன் அருமையை விளக்குவார். பல தோல்விகள் அவரைத் துரத்தின. ஆனால் தோல்வியைக் கண்டு துவளாமல் நேரத்தை புதிய யுக்திகளில் செலுத்தி வெற்றிப்பாதையை அமைத்துக் கொண்டார்.  நேரம் ஒன்றுதான் வற்றாத செல்வம். எல்லோருக்கும் சமமாக கிடைக்கும் மூலதனம்.
 நேரம் எல்லாப் பணிகளுக்கும் முக்கியம் என்றாலும் காவல்துறையை பொறுத்தமட்டில் நேரம் தவறினால் விபரீத விளைவுகள் ஏற்படும். உயிர் உடமைகளைப் பாதிக்கும். குற்றங்கள் தடுப்பதில் கவனம் செலுத்தி வியர்வை சிந்தினால் குற்ற நடப்புகளால் ஏற்படும் ரத்த சிதறல்களைத் தவிர்க்கலாம்.  எந்த ஒரு குற்ற நிகழ்வை எடுத்துக் கொண்டாலும், உரிய சமயத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் குற்ற நிகழ்வை தவிர்த்திருக்கலாமே என்று அந்த சரக அதிகாரிக்கு உள்ளூர நெஞ்சு குறுகுறுக்கும் என்பதில் ஐயமில்லை. 
குற்றத்தடுப்பு செயலாக்கத்தில் அதிக கவனம் செலுத்திவதில்லை. நிகழ்ந்த குற்றங்கள் கண்டுபிடித்துவிட்டால் காவல் துறை அதிகாரிகள் மெச்சப்படுகின்றனர்.  ஆனால் தனது உழைப்பால் குறித்த நேரத்தை தவரவிடாது பணி செய்து குற்ற நிகழ்வை தவிர்த்தவர் பாராட்டப்படுவதில்லை. 
மாவோயிஸ்ட் பிரச்சனை இவ்வளவு தலைவிரித்தாடுகிறது.  மாவட்ட ஆட்சியர்கள் கடத்தப்படுகிறார்கள்.  இன்னும் அந்த பிரச்சனைகளுக்கு முனைப்பான தீர்வு எடுக்கப்படவில்லை.  மாநில அரசும் மத்திய அரசும் பல்முனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக பட்டியலிட்டாலும் பிரச்சனை வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.  ஒடிசா மாநிலத்தில் மால்காங்கிரி மாவட்டம் ஆட்சியர் வினீல் கிருஷ்ணா கடத்தப்பட்டார். பின்பு இரண்டு இத்தாலி நாட்டு சுற்றூலா பயணிகள், சட்ட சபை அங்கத்தினர் இப்போது சுக்மா ஆட்சியர் அலக்ஸ் பால் மேனன்.  மேனன் கடத்தலில் கொடுமை என்னவென்றால் அவரது இரண்டு பாதுகாவலர்களும் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டனர்.  மேனன் கடத்தல் நாட்டை உலுக்கியதே தவிர இரண்டு காவலர்களின் உயிரிழப்பிற்கு இரண்டு சொட்டுக் கண்ணீர் கூட எவரும்விடவில்லை.  காவலர்களின் உயிர் அவ்வளவு துச்சமாகிவிட்டது!
மாவோயிஸ்டுகள் ஆதிக்கத்தில் உள்ள இடங்களுக்கு அரசு அதிகாரிகள் செல்லும் பொழுது பாதுகாப்பு  விதிமுறைகள் பின்பற்ற வேண்டும்.  ஏதோ ஒரு ஆர்வத்தில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாதுகாப்பு முறைகளை மறந்து   களம் இறங்கிவிடுவதால் இத்தகைய விபரீதங்கள் நிகழ்சின்றன.  இரண்டு உயிர்களை இழந்த குடும்பங்களின் நிலை என்ன?  வானம் பொழிந்தாலும் பூமி விளைந்தாலும் அந்தக் குடும்பங்களின் வாழ்வு கண்ணீரில்தான் தளும்பும்.  சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகள் உரிய சமயத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறுவதால்தான் பெரிதாக பாதிப்பை ஏற்றபடுத்துகிறது.  கணம் தப்பினால் மரண அபாயம் தலை தூக்கும் என்பது காவல்துறைப்பணியில் அன்றாடம் உணரலாம்.
      வாழ்வின் சாரம் மின்சாரம் என்ற அளவுக்கு மின்சாரத்தினால் இயங்கும் பல உபகரணங்களுக்கு நாம் அடிமையாகி விட்டோம்.  மின்சாரப் பற்றாக் குறை ஏற்பட்டதற்க்குப் பல காரணங்கள் இருந்தாலும் உரிய நேரத்தில் திட்டமிட்டு உற்பத்தியைப் பெருக்காதது ஒரு முக்கியக் காரணம்.
அந்த உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காததால் விளைவுகளை இப்போது சந்திக்க நேரிடுகிறது.  இப்போது எடுக்கப்படும் முயற்சிகளால் அதுவும் பசுமை சக்தி எனப்படும் சூரிய சக்தியை அறுவடை செய்யும் பல்முனை முயற்சி மின்சாரம் பற்றாக்குறை என்ற நிலை மாற வழி வகுக்கும் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் வருடத்திற்கு 310 நாட்கள் சூரிய சக்தி பயனளிப்பிற்கு கொண்டு வரமுடியும் என்று நிபுணர்கள் ஆய்வில் தெரிய வருகிறது.  அரசும் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.  சம்மந்தப்பட்ட பொறியாளார்களும், அதிகாரிகளும், காலந்தாழ்த்தாது போர்க்கால அடிப்படையில் சக்தி ஈட்டும் கதிர் தளங்களை அமைக்க வேண்டும். குஜராத்தில் 16 மாதங்களில் இத்தகைய  சூரிய சக்தி ஈட்டக்கூடிய   சோலார் கருவிகள் அமைக்கப்பட்டு பயனளிப்பிற்கு வந்துள்ளது.  இது நிச்சயமாக நம்மாலும் முடியும்.
“காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிதுஎன்றார் வாள்ளுவர். அரசின் நலத்திட்டங்கள் உரிய சமயத்தில் ஏழை மக்களுக்கு அளித்தால் பெரிதும் உதவும்.  நமது முதலமைச்சர் அறிவித்தப் பல நலத்திட்டங்கள் துரிதமாக நடைமுறைப் படுத்தப்பட்டது நிறைவைத் தருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக் கணினி, இருபதுக் கிலோ இலவச அரிசி, மாணவர்களுக்கு காலணி, சீருடை, புத்தகங்கள், ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆடு வளர்க்கும் திட்டம் பேன்ற பல திட்டங்களில் ஏழை மக்களுக்கு தக்க சமயத்தில் உதவி அளிக்கப்பட்டுள்ளது.  இதுவரை 1.51 இலட்சம் மடிக் கணினிகளும், 1.85 கோடி குடும்பங்களுக்கு இலவச அரிசியும், 14.38 இலட்சம் மக்களுக்கு இலவச மின்விசிறி, மின் அரைவை இயந்திரம், 81.20 லட்சம் குழந்தைகளுக்கு காலணிகள், புத்தகங்கள் கடந்த ஒரு வருடத்தில் உரியவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது மகத்தான சாதனை.  இது காலத்தினால் செய்த உதவி.  ஏழைக் குடும்பங்கள் இதனை சரியாக பயன்படுத்தி ஏதோ இலவசமாக கிடைத்தது என்று சோம்பி இருக்காமல் மேலும் உத்வேகத்துடன் உழைத்தால் தான் குடும்பம் முன்னேறும், சமுதாயம் வளம் பெரும்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள “தொலை நோக்கும் பார்வை 2023” இசைத்தமிழ்போல் தமிழ்நாட்டிற்கு தொழில் சாதனையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் அரசு 1.50 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் முக்கியமாக கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் அடுத்து வரும் ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்..  ‘விஷன் 2023’ பொருளாதார, நிர்வாக நிபுணர்களின் பெருமளவு பாராட்டைப் பெற்றுள்ளது.
இவ்வாறு இலக்குகள் நிர்ணயிப்பது அவசியம். இத்திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றுவதற்கு நிதிமட்டுமின்றி சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் முனைப்பான செயலாக்கம் அவசியம்.  சுய ஆர்வத்தோடு செயல்படுபவர்களை தெரிவு செய்து அவர்கள் நிபுணத்துவம் பெற்ற துறைகளுக்கு நியமித்தால் திட்டங்கள் காலதாமதமின்றி நிறைவேறும்.
வாழ்க்கையை நேசிப்பவர்கள் நேரத்தை விரயமாக்கக் கூடாது. வாழ்க்கையில் சாதனைப்படைத்தவர்கள் எல்லோரும் நேரத்தை திறமையாக பயன்படுத்துவதை பழக்கமாகக் கொண்டவர்கள்.
என்னமாய்  நேரம் பறக்கிறது என்று அங்கலாய்க்கிறோம்.  கடந்த நேரம் திரும்பி வராது.  ஆனால் தற்கால நேரம் நமது கையில்.  நேரம் பறந்தாலும் விமான ஓட்டி நாம்  தான் என்பது எவ்வளவு உண்மை.  நேரத்தை வெறுமையில் ஓட்டாமல் சமுதாயத்திற்கு ஒட்டும் படி பயனளிக்கும் வகையில் செலவிடுவதே விவேகம்.

This article Published in Dinamani Newspaper on 16.05.2012

Monday, March 5, 2012


இந்த நந்நாளில் இதயமார்ந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் சமர்ப்பிப்பதில் பெருமை கொள்கிறேன். இந்த அளவுக்கு மக்களின் நன் மதிப்பைப் பெற்ற தலைவர் வேறு எவரும் இருக்க முடியாது. அறிவு ஆற்றல், நேர்மை, உழைப்பு, ஒருங்கிணைந்த மக்களின் நலம் பேணும் உத்தம தலைவர் நாம் பெற்றிருப்பது நமது பாக்கியம்.

நமது வேண்டுதல் எல்லாம் பல்லாண்டு காலம் ஆரோக்கியமாக வாழ்ந்து தமிழ் நாட்டை மேன்மையுறச் செய்ய வேண்டும்.

இதயமார்ந்த வாழ்த்துக்கள்.

Tuesday, February 7, 2012

குடி மக்களாகிய நாம்


புது வருஷம் கொண்டாட்டம், பொங்கல் திருவிழா என்று கோலாகலமான மாதம் தான் ஜனவரி. ஆனால் நாட்டின் இறையாண்மையை நிலை நிறுத்தும் முக்கியமான நாள் ஜனவரி 26 குடியரசு தினம். இந்தியாவை அகண்ட பாரதமாக ஆன்மீக சேவை வழியில் இணைத்த ஸ்வாமி விவேகானந்தர் பிறந்தது ஜனவரி 12. இந்தியாவின் சுதந்திரம் கனவில்லை அது மெய்ப்படும் என்று உற்சாகப்படுத்திய இளைஞர்களின் ஒளிவிளக்கு சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தது ஜனவரி 23. நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக தன்னை அர்ப்பணித்த அண்ணல் காந்தி உயிர்துறந்த நாள் ஜனவரி 30 தியாகிகள் தினம். குடிமக்களாகிய நாம் நாட்டைப்பற்றி சிந்திக்க வேண்டிய தருணம் இது.

உலக நாடுகளில் எழுதப்பட்ட அரசியல் சாசனங்களில் மிகப் பெரியது என்று கருதப்படுவது இந்திய அரசியல் சாசனம். இதில் 395 உறுப்புகளும், பன்னிரெண்டு அட்டவணைகளும் உள்ளன. சட்ட முகப்புரை (Preamble) என்ற பகுதியோடு நமது சாசனம் துவங்குகிறது. இறையாண்மை கொண்ட சமதர்ம சமயசார்பற்ற மக்களாட்சி குடியரசை அமைத்திட உறுதி பூண்ட இந்திய மக்களாகிய நாம் அனைத்து குடிமக்களும் முழுமையான நீதி, சுதந்திரம், சமநிலை, தனிநபர் கண்ணியம், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு கொண்ட சகோதரத்துவம் பெற்றிட உறுதி செய்து இந்த அரசமைப்பு சட்டத்தை ஏற்றி இயற்றி வழங்குகிறோம் என்று மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

‘இறையாண்மை கொண்ட மக்களாட்சி குடியரசு‘ என்ற சொற்றொடருக்கு பதிலாக ‘இறையாண்மை கொண்ட சமதர்ம, சமயசார்பற்ற மக்களட்சி குடியரசு‘ என்ற சொற்கள் 1976-ல் வருடம் 42-வது அரசமைப்புச் சட்டத் திருத்ததால் கொண்டு வரப்பட்டன. இறையாண்மை என்பது ஒரு நாட்டின் தனிப்பட்ட அதிகாரத்தைக் குறிப்பிடுகிறது. யாரையும் தன்னைவிட அதிகாரம் கொண்டவர் என்பதை ஏற்காமல் தன்னுள்ளே முழுமையான அதிகாரத்தை உறைய வைத்துள்ளதோ அதுவே இறையாண்மை கொண்ட நாடாகும் என்பது நிபுணர்களின் விவரிப்பு.

இந்திய அரசியலமைப்பில் மக்கள் தான் அதாரம் அல்லது மூலம். அவர்களிடமிருந்து தான் முழுஅதிகாரம் பொங்கிப் பரவுகிறது. இதுதான் மக்களாட்சியின் வலிமை. அரசியலமைப்பில் எந்த ஒரு சந்தேகமோ உறுப்புகளில் உபயோகிகப்பட்ட சொற்றொடரில் வேறுபாடு இருந்தால் முகப்புரையில் கூறப்பட்டுள்ள சிந்தாந்தங்களின் அடிப்டையில் அர்த்தம் காணவேண்டும். அது தான் முகப்புரையின் சிறப்பும் வலிமையுமாகும்.

இந்திய அரசியல் சாசனத்தின் சிறப்பியல்புகள் பல. மக்களின் தேவைக் கேற்ப சட்ட மாற்றங்களுக்கு இணங்கவல்லது கூட்டாட்சி மற்றும் ஒற்றாட்சி சிறப்புக் கூறுகளின் கலவை, நாடாளுமன்ற அமைப்புள்ள அரசு, அடிப்படை உரிமைகள், ஆட்சியை வழி நடத்திச் செல்லும் நெறிமுறைகள், நீதித்துறை சுதந்திரம், மதச்சார்பின்மை, ஒற்றைக் குடியுரிமை, வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை, சிறுபான்மையினருக்கும் தனிப்பட்டவருக்கும் சிறப்புச் சலுகைகள் போன்றவை இந்திய அரசியல் சாசனத்தின் சிறப்பியல்புகள்.

நமது அரசியல் அமைப்பின் தூண்கள் சுதந்திரம், சமத்துவம், தனிநபர் காண்ணியம், உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு. 1976-ம் வருடம் 42-வது சட்டத்திருத்தம் வாயிலாக அடிப்படைக் கடமைகள் கொண்ட தொகுப்பு சேர்கப்பட்டுள்ளது. பகுதி மூன்றில் குறிப்பிட்டுள்ள அடிப்படை உரிமைகள் அரசயில் சாசனத்தின் உட்கரு என்று உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் வலியுறுத்திள்ளது. எந்த சட்ட மாற்றம் கொண்டுவந்தாலும் இந்த அடிப்படை உரிமைகளின் வலிமையை குறைக்க முடியாது. இது மிக சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது. எவ்வாறு உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே போல் கடமையாற்றுவதற்கும் முன்வர வேண்டும். மக்களாட்சி உணர்வுடன் கூடிய சமூக, பொருளாதார, கலாச்சார பொறுப்புகள் அடங்கிய பத்து கடமைகள் மக்கள் மனமுவந்து செயலாக்க வேண்டும.

பகுதி மூன்றில் முக்கிய உறுப்புகள் 14-லிருந்து 22 வரை சட்டத்தின் முன் எல்லோருக்கும் சமத்துவம் சட்டத்தில் சமபாதுகாப்பு அளிக்கிறது. உறுப்பு 15 சமயம், இனம், பாலினம், பிறந்த இடம் ஆகிய காரணங்களால் வேற்றுமை பாராட்டுவதை தடை செய்கிறது. உறுப்பு 16 அரசுப்பணிகளில் சமவாய்ப்பிற்கு உத்திரவாதம் அளிக்கிறது. உறுப்பு 17 தீண்டாமையை ஒழிக்கிறது. உறுப்புகள் 19 –லிருந்து 22 வரை சுதந்திரத்திற்கான உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன. பேச்சு உரிமை, அமைதியாக ஆயுதமின்றி கூடும் உரிமை, சங்கங்கள் அமைக்கும் உரிமை, இந்தியாவில் சுதந்திரமாக நடமாடும் உரிமை, இந்தியாவின் எந்த நிலப்பகுதியிலும் வசிக்க குடியேறுவதற்கான உரிமை, தொழில், வேலை, வணிகம் செய்ய உரிமை. இந்த உரிமை சில ஒப்புக்கொள்ளக்கூடிய வரையரைகளும் உட்பட்டவை.

உறுப்பு 20, 21 குற்றம் சம்மந்தப்பட்டவை. ஒரு செயல் குற்றமெனக் கருதப்படுமாயின் அது அமலில் உள்ள சட்டத்திற்கு உட்பட்டதாக இருக்கவேண்டும். ஒரே குற்றத்திற்கு இரண்டுமுறை தண்டனை வழங்கலாகது. தன் செயலால் தானே குற்றச்சாட்டிற்கு உட்படுதலுக்கு தடை, சட்டத்தினால் நிலை நாட்டப்பட்ட நடைமுறையின்றி எவருடைய வாழ்க்கை மற்றும் தனி நபர் சுதந்திரத்தை பறிக்க முடியாது என்பது மிக முக்கிய உறுப்பு.

சுதந்திரமாக நீதிமன்றம் செயல்படுவதற்கு அரசியல் சாசனம் வழிவகை செய்துள்ளது. மேலும் தனி நபரோ அல்லது ஒரு அமைப்போ உரிமை மீறல்கள் குறித்து உயர் நீதிமன்றம் அல்லது உறுப்பு 32-ன் கீழ் உச்ச நீதிமன்றத்தை நாடலாம். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதி மன்றங்கள் நீதிப் பேராணைகள் பிறப்பிக்க அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஐந்து பேராணைகள், ஆட்கொணர்விற்கு (Habeas Corpus) செயலுறுத்துவதற்கு (Mandamus), தடை விதிக்கும் ஆணை (prohibition) நெறிமுறை உணர்த்துவது (Certiorari), தகுதி உள்ளதா என்று கேட்பது (Qua-warranto) என்ற ஐந்து வகை ஆணைகள் பிறப்பிக்கும் அதிகாரம் உள்ளது. உறுப்பு 32-ன் கீழ் ஒர் அடிப்படை உரிமை மீறுதலுக்காகவும் உச்ச நீதிமன்றத்தை நேரடியாக அணுகலாம் பொது நல வழக்குகள் இப்போது பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது நீதியரசர்கள் பகவதி, கிருஷ்ணயர் போன்றவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஒரு நீதிபதி சாதாரண குடிமகன் தன் உரிமை மீறல்கள் பற்றி போஸ்ட்கார்டில் அனுப்பியதையே விசாரணக்கு எடுத்துக்கொண்டு நீதிப் பேராணை பிறப்பித்தார் என நெஞ்சை நிமிர்த்தக்கூடிய செய்தி உண்டு.

தனிமனிதர் சுதந்திரம் பாதுகாப்பதில் தனித்துவம் வாய்ந்த ஆணைகள் உச்ச நீதிமன்றம் உறுப்பு 21 அடிப்படையில் கொடுத்திருக்கிறது. இந்த பாதுகாப்பு இந்திய குடிமகனுக்குமட்டுமின்றி எந்த ஒரு தனி நபருக்கும் இது பொருந்தும், இந்த சுதந்திரம், பாதுகாப்பு உண்டு என்பது மிகச் சிறப்பான அம்சம்.

வணிக வர்த்தகம் மற்றும் வர்த்தகத் தொடர்பு சுதந்திரம் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் உறுப்பு 301-ல் இது குறித்து பொது விதியும் வரையறைகளும் அளிக்கப்பட்டுள்ளன. இந்தியா முழுமைக்கும் வாணிகம், வர்த்தகம் மற்றும் வர்த்தகத் தொடர்பு சுதந்திரமாக இருத்தல் வேண்டும் என்பதாக உறுப்பு 301-ல் வலியுறுத்துகிறது. வரிவிதிப்புச் சட்டங்கள் இந்த உறுப்பின் எல்லைக்கு அப்பாற்பட்டது.

கடந்த 62 ஆண்டுகளில் நவம்பர் 2006-ம் ஆண்டு வரை 94 மாற்றங்கள் அரசியல் சாசனத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன. காலத்திற்கேற்ற மாற்றங்கள் தேவை.

1975-ம் வருடம் மன்னர்களுக்கு உண்டான மானியங்கள் சம்மந்தப்பட்ட திருத்தங்கள், வங்கிகள் தேசியமயமாக்கல், 51 A என்ற உறுப்பில் அடிப்படைக்கடமைகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ள திருத்தம், அடிப்படைக்கல்வி கட்டாயமாக்கப்பட்ட 21 A என்ற உறுப்பு இணைப்பில் திருத்தம் ஆகியவை மிக முக்கிமான சாசன மாற்றங்கள் ஆகும்.

இந்தியர்கள் வெளிநாடுகளில் சிறப்பாகப் பணிபுரிகிறார்கள் அமெரிக்காவில் எல்லா முக்கியத்துறைகள் விண்வெளித்துறை நாஸா போன்ற நுணுக்கமான பணிகளில் இன்றியமையாதவர்களாக விளங்குகிறார்கள் என்றாலும் இந்தியாவில் நாம் ஏன் அவ்வாறு முழு ஈடுபாடுடன் பணிபுரிவதில்லை?

சிங்கப்பூரில் ஒழுக்கமாக இருக்கும் இந்தியன் சென்னை வந்தவுடன் துப்பத் துவங்குகிறான் குப்பையை கண்ட இடத்தில் வீசுகிறான் உள்ளாட்சியும் என்ன செய்ய முடியும் பெருக்க பெருக்க குப்பை பெருகுகிறதே. ஒழுக்கமும் கட்டுப்பாடும் பொதுமக்கள் கடைபிடித்தால் எவ்வளவோ சமுதாய பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம். உறுப்பு 51 A வில் அடிப்படைக்கடமைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

i) அரசமைப்பை பின்பற்றுதல் ii) சுதந்திரப் போராட்டத்தின் உயரிய கருத்துக்களைப் பின்பற்றுதல் iii) இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை ஆதரித்தல் iv) தேசிய சேவைக்கு தன்னை முன் நிறுத்தல் v) மக்களிடையே இணக்கத்தையும் பொது சகோதரத்துவ உணர்வையும் மேம்படுத்தல் vi) இந்திய கலாச்சாரத்தின் பாரம்பரியத்தை மதித்தல், பெண்களின் கண்ணியத்தை காப்பாற்றுதல் vii) சுற்றுச்சூழலைக்காப்பாற்றுதல் viii) மனித நேயத்தை வளர்த்தல் xi) வன்முறையை கைவிட்டு பொதுச் சொத்தை பாதுகாத்தல் x) நாடு மேலோங்க தன்னாலான எல்லா முயற்சியும் நாட்டுக்கு அர்ப்பணித்தல்.

அரசியல் சாசனத்தில் மிக முக்கிய உறுப்பு அரசின் கொள்கைகளை வழி செலுத்தும் நெறிமுறைகள் பகுதி 4-ல் உறுப்பு 36 முதல் 59 வரை குறிப்பிடப்பட்டுள்ளது. பாரபட்சமற்ற வாழ்வாதாரத்திற்கான வழிகள் பொது நன்மையை கருத்தில் கொண்டு மூலவளங்களின் பகிர்வு, தொழில் நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கேற்பு, சம நீதி, வாழ்க்கை தரத்தை மேம்படுத்துதல், குழந்தைகளுக்கு இலவச கட்டாயக்கல்வி போன்ற சமுதாய முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகள் இதில் அடங்கும். ஆனால் இந்த நெறிமுறைகளை வழக்கிட்டு பெறமுடியாது.

குடியரசாக 62 ஆண்டுகள் பூர்த்தியான நிலையில் பல நெருடலான பிரச்சனைகளுக்கு இன்னும் தீர்வு இல்லை. ஐந்து வயதுட்குட்பட்ட 42 சதவிகித குழந்தைகளுக்கு ஊட்டசத்து கிடைப்பதில்லை. அதில் 7 சதவிகிதம் குழந்தைகள் இறந்து விடுகின்றன. 30 கோடி மக்கள் உண்ண உணவின்றி பசியால் வாடுகிறார்கள். அவர்களுக்கு போதிய மருத்துவ வசதியில்லை. சுமார் 70 லட்சம் மக்கள் இன்னும் மனித மலங்களை அகற்றும் பணியில் உள்ளனர். பாதி இந்தியர்களுக்கு படிப்பறிவில்லை. இன்னும் 66 சதவிகித மக்கள் திறந்த வெளியில் தான் மலம் கழிக்கும் நிலை. இவ்வாறு எவ்வளவோ பிரச்சனைகள்.

அரசியல் சாசனத்தில் பல உரிமைகள் கடமைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சட்டங்கள் இயற்றப்படுகின்றன. நிலையாணைகள் விதிகள் உள்ளன, திட்டங்கள் தீட்டப்படுகின்றன, நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் அவை நிறைவேற்றுவதில்தான் எல்லாப் பிரச்சனைகளும்.

என்று அழியும் இந்த அவலங்கள்?

என்று தணியும் இந்த ‘சுரண்டர‘ மோகம்

என்று வளரும் நம் உழைப்பில் உற்சாகம்என்ற ஏக்கம் தொடர்கிறது. அதற்கு விடை நேர்மையான உழைப்பு ஒன்று தான். உழைப்பால் உயர்வதே நாட்டுக்கு உயர்வு. ஒவ்வொரு இந்தியனும் கட்டுப்பாட்டுடன் ஒழுக்கமுடன் நாட்டின் முன்னேற்றத்திற்கு தன் பங்களிப்பை உணர்ந்து செயல்பட்டால் தான் உண்மையான சுதந்திரம் மக்கள் அடைய முடியும்.

இந்த கட்டுரை தினமணி 03.02.2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.