Thursday, October 21, 2010

இந்தியாவை இணைக்கும் காவல்



தேசிய பாதுகாப்பு இரண்டு வகைப்படும். வெளிநாட்டுப் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு. இராணுவமும் காவல்துறையும் தேசிய பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எது நமக்குப் பிரச்சனைக்குரியதாக இருக்கிறது உள்நாட்டுப் பாதுகாப்பா அல்லது எல்லை பாதுகாப்பா என்று ஆராய்ந்தால் உள்நாட்டுப் பாதுகாப்புதான் நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் இன்றியமையாததது என்பது தெளிவாகும்.

சுதந்திர இந்தியாவில் 1960-ல் இருந்து 1971 வரை மூன்று பெரிய யுத்தங்களை சந்திக்க நேர்ந்தது. அதில் உயிரிழப்புப் பொருள் சேதமும் ஈடுசெய்ய முடியாதவை. அதற்குப் பிறகு 1999ம் வருடம் பாகிஸ்தானோடு கார்க்கில் யுத்தம். பனிபொழியும் வடமேற்குப் பகுதியான சியாசன், வடகிழக்கு இந்திய சீனா எல்லையில் தொடர் கண்காணிப்பு என்று நமது எல்லைப் பாதுகாப்பினை பெரும் பகுதிகளாக பிரிக்கலாம்.

அண்டை நாடுகள் அச்சம் கொள்ளும் வ்கையில் நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தினால்தான் அமைதி காக்கமுடியும் என்பது பாதுகாப்பில் டிடெரன்ஸ் என்று சொல்லப்படும் முக்கிய சித்தாந்தம். முப்படையான இராணுவம், வான்படை, கடற்படை இவைகளை முறையாக காலத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்துதல் வேண்டும். சமீபத்தில் பாதுகாப்புப் பிரிவுகளை நவீனப் படுத்துவதற்காக மத்திய அரசு 1 லட்சத்து 25,000 கோடி ரூபாய் திட்டம் வகுத்துள்ளது என்ற செய்தி வெளியாகியுள்ளது.

நவீனமயமாக்குவதில் காவல்துறைக்கு அடுத்த பத்து ஆண்டுகளில் ரூபாய் 2500 கோடி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஓராண்டிற்கு சராசரி 250 கோடி. இது 30 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசத்திற்கு பிரித்து கொடுக்கப்பட வேண்டும். உள்நாட்டு பாதுகாப்பு பிரச்சனைகளை எதிர்கொள்ளும் விதத்தில் காவல்துறைக்கு வலிமை சேர்க்க வேண்டும். எல்லைப் பிரச்சனைகளைப் போல எப்போதும் வருவதல்ல உள்நாட்டுப் பிரச்சனை தொடர் விழிப்புணர்வோடு கவனித்தால் தான் சட்டம் ஒழுங்கினை சீராக சமாளிக்க முடியும்.

1992ம் வருடம் அயோத்தியா பிரச்சனை தலைதூக்கிய போது நாடெங்கிலும் கலவரம் வெடித்தது. 1993ம் வருடம் மும்பையில் தொடர் குண்டு வெடிப்பு சமுதாயத்தைப் பிளவு படுத்தியது. 2002ல் கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் அதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட கலவரம் உள்நாட்டு பாதுகாப்பிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய சவால்.

1990ல் துவங்கிய பாப்ரி மஸ்ஜித் ராமர் பிறந்த இடம் விவகாரம், மதவாத பிரச்சனைக்கு வித்துட்டுள்ளது. மிகைவதும் குறைவதுமாக இருந்தாலும் பிரச்சனை முடிந்தபாடில்லை.

புத்தாயிரத்தின் முதல் பத்து ஆண்டுகள் முந்தைய பத்து ஆண்டுகளை ஒப்பிடுகையில் மதவாத மோதல்கள் குறைவு என்றாலும் வன்முறை சம்பங்களின் கொடூரம் குறையவில்லை. அங்கொன்றும் இங்கொன்றும் நிகழும் சம்பவங்கள் என்று விட்டுவிட முடியாது. 2001 முதல் 2009 வரை 6541 வகுப்புவாத கலவரங்கள் பல்வேறு மாநிலங்களில் நிகழ்ந்துள்ளன. அதில் 2864 உயிர்கள் மடிந்தன. 21,640 மக்கள் காயமுற்றனர். இவை காவல்துறையினரால் பதியப்பட்ட வழக்குகளாகும். பதியப்படாத சிறுவழக்குகள் பன்மடங்கு இருக்கும் என்று அனுமானிக்கலாம். குஜராத் மாநிலத்தில் கோத்ரா பயங்கரம் 2002ம் ஆண்டு நிகழ்ந்தது. அந்த ஆண்டு மட்டும் ஆயிரக்கணக்கான மோதல்கள். ஒரு சிறிய பொறி போதும் பற்றி எரிய என்ற நிலையில் சில இடங்களில் மதவாத பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் புகைந்து கொண்டிருக்கின்றன. சராசரியாக ஒரு வருடத்திற்கு சுமார் 130 உயிர்கள் 600 வகுப்புவாத மோதல்களில் பலியாகின்றன.

இனக்கலவரங்களின் பயங்கரவாத தாக்குதல்கள் மூலம் தூண்டிவிடப்படுகின்றன என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். 1993ம் வருடம் நிகழ்ந்த மும்பை கலவரம் மற்றும் 2002ல் குஜராத்தில் நிகழ்ந்த தாக்குதலும் இதற்கு எடுத்துக் காட்டு. நமது நாட்டில் 2004-ல் இருந்து 28 பெரிய அளவிலான குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் உயிரிழப்பு 990 காயமுற்றவர்கள் 2791.

இனக்கலவரங்களால் ஏற்படும் பொருட்சேதம் மதிப்பிட முடியாது. 1992-93ல் நிகழ்ந்த மும்பை கலவரத்தில் மட்டும் ரூ.9000 கோடி பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஒவ்வொரு கலவரத்தின் போதும் இயல்பு வாழ்வு பாதிப்பு, எப்போதும் மக்கள் ஒரு பீதியில் வாழவேண்டிய நிலை, கல்விக் கூடங்கள் செயலிழத்தல் போன்று சமுதாயத்திற்கு ஒட்டு மொத்த பின்னடைவு ஏற்படுகிறது. அயோத்தியா பிரச்சனையில் அலகாபாத் உயர்நீதிமன்றம் செப்டம்பர் 30 தீர்ப்பு வழங்கியபோது என்ன நடக்குமோ என்ற பயம் இந்தியா முழுவதும் சூழ்ந்தது. உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம், மஉறாராஷ்டிரா, குஜராத், கர்நாடக மாநிலங்களில் அசம்பாவிதங்கள் நிகழக்கூடும் என்றும் மற்ற மாநிலங்கள் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடப்பட்டது. மூச்சைப் பிடித்துக் கொண்டு மக்கள் செய்தி ஒளிபரப்பினை கவனித்தனர்.

எதிர்பார்த்தது போல் அசம்பாவிதங்கள் ஒன்றும் நிகழவில்லை. நடுநிலை பிறழாது தீர்ப்பு அமைந்தது ஒரு காரணம் என்றாலும் விவேகத்துடன் பொதுமக்கள் தீவிரவாரத்தை அண்டவிடாமல் அமைதி காத்தது ஒரு புறம், எல்லா மாநிலங்களிலும் காவல்துறையினர் மிகச்சிறப்பாக கடமைஉணர்வோடு பணியாற்றியது நமது நாட்டின் இறையாண்மையை தலை நிமிரச் செய்தது.

உத்திரப்பிரதேசம் மத்திய பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் மதவாத பயங்கரம் தலைதூக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் அந்த மாநில காவல்துறை சிறப்பாக செயல்பட்டதால் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டன. உயர் அதிகாரிகள் எப்போதும் போல் சம்பரதயாத்திற்காக ஆலோசனைக்கூட்டம் நடத்தாமல் சரகத்தில் இருக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் எஸ்பிக்களுக்கும் தெளிவான ஆலோசனை வழங்கியதோடில்லாமல் உட்கோட்டம், தாலுக்கா அளவில் எல்லா அதிகாரிகளுக்கும் எவ்வாறு நிலைமையை சமாளிக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தப்பட்டது. சரகத்தில் உள்ள அதிகாரிகளின் நேர்மையான செயல்பாட்டிற்கு குறுக்கீடு ஒன்றும் இருக்காது என்று உறுதியளிக்கப்பட்டது. சமூக விரோதிகள் என்று தெரிவு செய்யப்பட்டவர்களை அந்தந்த சரகத்தில் கைது செய்து அவர்களது சட்ட விரோத செயல்கள் முடக்கப்பட்டன. யாரும் அவர்களது உதவிக்கு வரவில்லை. வந்ததையும் அதிகாரிகள் செவிமடுக்கவில்லை. சுதந்திரமாக செயல்படவிட்டால் காவல்துறை சிறப்பாக செயல்படும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

சட்டம் ஒழுங்கு பராமரிப்பதில் சமுதாயத்தோடு இணைந்து செயல்பட்டால் காவல்துறையின் செயல்திறன் மேலும் சிறப்படையும். சமுதாயக் காவல்பணியை முழுமையாக செயல்படுத்தும் மாவட்டங்களிலும் காவல் நிலைய சரகங்களிலும் எந்தப் பிரச்சனை வந்தாலும் கட்டுப்பாடாக சமாளிக்கப்படுவதை காணலாம். சாதாரண நாட்களில் நேர்மையாக பணிகள் செய்தால்தான் அவசர காலத்திலும் அசாதாரண நாட்களிலும் மக்களின் ஒத்துழைப்பைப் பெற முடியும். இத்தகைய ஒத்துழைப்பு சாதாரணமாக வராது. குற்றங்கள் நிகழாமல் தடுப்பது. சட்டம் ஒழங்கு பிரச்சனைகளை முளையிலேயே தலையிட்டு களைவது. நம்பகரமான தகவல்கள் சேகரித்து அமைதி காப்பது போன்று ஒழுக்கமாக தன்னார்வத்தோடு செயல்பட்டால் மக்கள் ஒத்துழைப்பு தாராளமாக வரும்.

மிகப்பெரிய நாடான இந்தியாவில் வேற்றுமைகள் ஏராளம். இனம், ஜாதி, மொழி, வசதி படைத்தவர், வசதி குறைந்தவர், படித்தவர் படிக்காதவர் என்று வேற்றுமைகளுக்கும், ஏற்றத்தாழ்வுகளுக்கும் குறைவில்லை. இத்தகைய வேற்றுமைகளில் ஒன்றுமை உண்டு, நாம் இந்தியர் என்ற உணர்வு உண்டு என்று பெருமைப்படுகிறோம். ஆனால் இந்த ஒற்றுமையை கட்டிக்காப்பது காவல் துறை என்பதை மறுக்க முடியாது. ஒற்றுமையை குலைக்கும் வகையில் நாசவேலையில் ஈடுபடும் நயவஞ்சகர்களையும் அமைதிக்கு உலைவைக்கும் சமூக விரோதிகள் மீது அந்தந்த மாநிலங்களில் உரிய சமயத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படுவதால்தான் நாட்டின் ஒற்றுமை பாதுகாக்கப்படுகிறது.

தில்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்கள் பெற்ற விளையாட்டு வீரர்களும், சிறப்பாக பாதுகாப்புப் பணி செய்த காவல்துறையும் வேறு சர்ச்சைகள் மறையும் வகையில் இந்தியாவின் புகழை நிலை நாட்டினர். காவல்துறை விளையாட்டு வீரர்கள் இந்தியா வென்ற 101 பதக்கங்களில் 17 பதக்கங்களை வென்றனர் என்பது பெருமைக்குரிய வெற்றி.

தேசிய விரோத சக்திகளை எதிர்கொள்வதில் காவல்துறையினர் பல சவால்களை சந்திக்க நேரிடுகிறது. உலகளவில் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் பரவியுள்ள நிலையில் காவல்துறையின் பொறுப்பு அசாதாரணமனது மட்டுமல்ல, அதை நிறைவேற்ற அமானுஷ்ய சக்தி உடலளவிலும் மன அளவிலும் ஓங்குதல் வேண்டும். தீயதை ஒடுக்க நடக்கும் தர்மயுத்தத்தில் உயிரிழந்த காவல் வீரர்கள் பலர். ஒவ்வொரு வருடமும் சராசரி 1000 காவல்துறை ஆளினர்கள் உயிர்தியாகம் செய்கின்றனர். காயமுற்றவர் எண்ணிக்கை கணக்கிலடங்காது. பணிச்சுமையினால் எல்லா விதமான உடல் உபாதைகளையும் சுமந்து கடமையாற்றுவோர் ஏராளம். 1999-ல் இருந்து 2009 வரை 9310 காவல்துறையினர் உயிரிழந்துள்ளனர் இந்த வருடம் மட்டும் சட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் உயிர் தியாகம் செய்துள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 21ம் நாள் உயிர் தியாகம் செய்த காவல் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் எல்லா மாநிலங்களிலும் காவல்துறையினரால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.

1959ம் வருடம் திரிசூல் என்ற நமது நாட்டின் வடமேற்கு லடாக் எல்லையில் காவலில் இருந்த 10 மத்திய ரிசர்வ் படையினர் சீனப்படையினரின் தாக்குதலில் போராடி உயிரிழந்தனர். அந்த சம்பவத்திற்குப் பிறகு தான் எல்லைப்பாதுகாப்பு பலப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்து பி.எஸ்.ஃப் என்ற எல்லைப் பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது. உயிரிழந்த காவலர்களின் நினைவாக அங்கு நினைவுச் சின்னம் வைக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 21ம் நாள் மறைந்த காவல்துறையினருக்கு அஞ்சலி செலுத்தும் நாளாக அனுசரிக்கப்படுகிறது.

தமிழக, கர்நாடக மாநிலங்களுக்கு சவாலாக இருந்த வீரப்பன் பிரச்சனை 18.10.2004ம் நாள் முடிவுக்கு வந்தது. வீரப்பன் வேட்டையில் உயிரிழந்த 44 வீரர்களுக்கு பர்கூர் வனப்பகுதியில் உள்ள தட்டக்கரை என்ற இடத்தில் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 18ம் நாள் அஞ்சலி செலுத்தப்படுகிறது. உயிர் தியாகம் செய்த எஸ்.பி உறரிகிருஷ்ணன், எஸ்.ஐ செந்தில் மற்றும் காவலர்கள் ரமேஷ், செல்வராஜ் போன்றவர்களை மறந்துவிடக்கூடாது.

சுயநலம் தலைவிரித்தாடும் இந்தக் காலத்தில் தான், தன் குடும்பம், ஜாதி, இனம் என்ற உணர்வுகள் தான் மேலோங்கி இருக்கின்றன. சமுதாயம் மற்றும் நாடு பற்றி சிந்திக்க நேரமில்லை. இத்தகைய சூழலில் சமுதாய நலனுக்காக நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக கடமை உணர்வோடு பணிகள் செய்யும் காவல்துறையினரை போற்றுவோம். இந்த வருடம் ஜனவரி மாதம் தவித்த வாய்க்கு தண்ணீர் இன்றி நடுரோட்டில் கயவர்களால் வெட்டப்பட்டு உயிர் துறந்த உதவி ஆய்வாளர் வெற்றிவேல், ஆய்வாளர் அந்தோணி ஆரோக்கியதாஸ், உதவி ஆய்வாளர் அப்துல் லத்திப், உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம், உதவி ஆய்வாளர் ரமேஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் பரமசிவம், தலைமை காவலர் ஜெகநாதன், முதல் நிலை காவலர் கணேசன், முதல் நிலை காவலர் நாகரத்தினம், முதல் நிலை காவலர் ஆசைக்கனி, பெண் காவலர் நாகஜோதி, காவலர் செங்காலி, போக்குவரத்துப் பணியின்போது உயிரிழந்த கூடுவாஞ்சேரி தலைமைக் காவலர் தேவன் மற்றும் நாடெங்கிலும் இந்த வருடம் அமரர்களான சுமார் 800 காவல்துறை தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.

இந்தியாவை இணைக்கும் இமயம் போல் நிமிர்ந்து நிற்கும் காவலரை வணங்குவோம்.


This Article published in Dinamani on 21.10.2010

Wednesday, October 13, 2010

ஜெயபிரகாஷ் நாராயணன் - 108-வது பிறந்த நாள்









இராமகிருஷ்ண பரமஹம்ஸர், வினோபாபாவே மஹாத்மா காந்தி இவர்கள் வாழ்க்கையில் போதித்த கொள்கையை மனதில் இருத்திய கோட்பாடுகளை வாழ்வியலில் கடைபிடித்தார்கள் ஜெயபிரகாஷ் நாராயணன் இவர்களை தனது மானசிக குருக்களாக ஏற்றுக்கெண்டு உயர்ந்த வாழ்கை வாழ்ந்தார். வினோபாவின் பூதான் என்ற நிலதானம் திட்டத்தில் நிலச்சுவான்தாரர்களிடம் இருந்து உபரி நிலத்தைப் பெற்று ஏழைகளுக்கு பிரித்து அளிக்கும் உயரிய திட்டத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கெண்டார்.

ஜெ.பி. அவர்கள் காந்திஜீயின் சபர்மதி ஆசிரமத்தில் தன்னை தொண்டனாக அர்ப்பணித்துக் கொண்டார். உயர்ந்த கொள்கை கோட்பாடுடைய பிரபாவதி என்ற பெண்னை மணமுடித்தார். பெற்றோர்களின் கட்டாயத்தினால் மணமுடித்த பிரபவதி காந்திஜீயின் பிரம்மச்சரியம் மற்றும் சமூக சேவை கெள்கையால் உந்தப்பட்டு மண வாழ்க்கையை துறந்து பொது வாழ்க்கையில் ஈடுபட தனது விருப்பத்தை தெரிவிக்க ஜெ.பி அவர்களும் சம்மதித்தார்.

ஜெ.பி. அவர்களும் பிரம்மச்சரிய விரதம் பூண்டு முழுமையாக சமூக சேவையில் ஈடுப்பட்டார்.

சுதந்திர போராட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட போது சிறைவாசிகளின் மனநிலையை உணர்ந்து அவர்களது மன அமைதிக்கு அறிவுறை வழங்கி அவர்களுக்கு நல்வழி புகட்டினார்.

ஓடும், செம்பொன்னும் ஒக்கவே நோக்கும் ஆன்றோர்கள் என்று பொருட்களின் விலை மதிப்பின் அடிப்படையில் அணுகாமல் அவற்றின் மெய் பொருளை கண்ட ஆன்றோர்கள் வாழந்த பூமி இது. பக்தி புரட்சிச் செம்மல் கபீர்தாஸிடம் ஒருபக்தர் இரண்டு தங்க நாணயங்கள் அன்பளிப்பாகக் கொடுக்க ஒன்று தவறி தண்ணிரில் விழுந்தது. பக்தர் பதறிக்போய் குளக்கரையில் தேடிப்பார்க்க கிடைக்கவில்லை கபீர்தாஸ்யிடம் எங்கு தவறி விழுந்தது என்று வினவ அதற்கு கபீர் இன்னொரு நாணயத்தையும் தண்ணிரில் போட்டு இங்கு தான் விழுந்தது என்றாராம்! நாம் தான் பொருளைக்கட்டி அழுகிறோம் கார் விபத்து என்றால் வண்டிக்கு என்ன சேதாரம் என்று வருந்துகிறோம் பிள்ளை பிழைத்துக்கொண்டனே என்று சந்தோஷ்ப்படாமல்!

காத்தியடிகள் அகிம்சை, ஒத்துழையாமை போராட்டம் வெள்ளையனே வெளி யேறு என்று ஆங்கிலேயே ஏகாதிபத்யத்தை எதிர்த்து போராடி இந்திய சுதந்திரம் அடைய வழி வகுத்தார்.

ஜெ.பி. அவர்கள் இந்திய சமூக அமைப்பில் உள்ள குறைகளை உணர்த்தி அவை சீராக இயங்குவதற்கும் மக்களின் அன்றாட இன்னல்களை களைவதற்கும் போராடியவர். சமூதாய சீர்திருத்தம் மற்றும் அரசு துறைகளும், மற்ற நடைமுறைகளும் செவ்வனே செயல்பட பாடுப்பட்டார். அவரது போராட்டம் உள்நாட்டுப் போராட்டம் நம்மிடம் உள்ள குறைகளை களைய போராட்டம் தொண்டு தான் முக்கியம் பதவி முக்கியம் அல்ல பதவிக்காக பரிதவிக்கவில்லை பதவிகள் நாடி வந்தன அவற்றை புறக்கணித்தார் மக்கள் தொண்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். காந்தியத்தை செயலாக்கிய செம்மல் ஜெ.பி அவர்கள்.

கருப்பர்களுக்காக போராடி 28 வருடங்கள் இருண்ட சிறையில் அடைக்கப்பட்டும் மனம்தளராது மக்கள் நலன் ஒன்றையே முழுமுச்சாக கொண்ட ஆப்பிரிக்க காந்தி என்று பாராட்டப்படுபவர் திரு நெல்சன் மண்டேலா அவர்கள். அவர் போரட்டத்தில் வெற்றி பெற்று தெற்கு ஆப்ரிக்கா சுதந்திரம் அடைத்த பின்னர். ஆட்சியில் பொறுபேற்ற போது காந்தியடிகள் பிறந்த மண் இந்தியாவை நோக்கி பதவிப் பிரமாணம் எடுத்துக் கெண்டார் என்பது சரித்திரம். அத்ததைகய பெருமை வாய்ந்த உலகையே வயப்படுத்திய காந்தியக் கெள்கையை தளராது பின்பற்றிய பெரும் பொது நலவாதி ஜெ.பி. அவர்கள். அரசியல் மற்றும் சமுதாயத்தை சுத்தப்படுத்த உழைத்தவர். அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்து போராடி வெற்றிக் கண்ட தியாகச் செம்மல் ஜெ.பி. அவர்களை நினைவில் கொண்டு போற்றுவோம். அவர் விட்டுச் சென்ற பாதையை மறவாமல் பின்பற்றுபோம்.

Friday, October 8, 2010

பற்றிப்படரும் ஆபத்து



ஆபத்து சொல்லி வருவதில்லை அவசர உலகில் வாழ்க்கை இயந்திரமாகிவிட்ட நிலையில் ஒவ்வொரு திருப்பத்திலும் அசம்பாவிதம் நிகழ காத்துக் கொண்டிருக்கிறது என்றால் மிகையில்லை. சில அசம்பாவிதங்கள் தவிர்க்கக்கூடியவை. நமது அஜாக்கிரதையால் நிகழும் அசம்பாவிதங்கள் பல. ஒரு புறம் மனிதனால் வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியால் தோற்றுவிக்கப்படும் வன்முறைகள். இயற்கை சீற்றங்களால் நேரிடும் இழப்புகள், விதிகளை பின்பற்றாததால் ஏற்படும் கட்டிட இடிபாடுகள், சாலைவிபத்து என்று எதிர்பாராத நிகழ்வுகளை வகைப்படுத்திச் சொல்லலாம்.

உலக நாடுகளில் அசம்பாவிதங்கள் அதிகமாக நிகழும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பேரிழப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க செயலாக்க திட்டம் வரைவது அத்தியாவசியம். சிவில் டிபென்ஸ் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைப்பு சீரமைத்து பேரிடர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அவர்களுக்கு உரிய பங்கினை அளிக்க வேண்டும். ஊர்க்காவல்படை மற்றும் இயல் பாதுகாப்புத் துறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையோடு இணைந்து ஒரு தலைமையில் செயல்படவேண்டும். இத்தகைய அமைப்பு ப்ல மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சேதாரங்களை தவிர்ப்பது மற்றும் சமாளிப்பது பற்றிய பயிற்சி அளித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைப்பினை திறம்பட அவசர காலங்களில் அரசு துறைகளுக்கு பக்கபலமாக ஈடுபடுத்தல் வேண்டும்.

2004 ம் ஆண்டு இந்திய துணைக்கண்டத்தை தாக்கிய சுனாமி பேரலை ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்டது. தமிழகத்தில் மட்டும் 7,995 நபர்கள் உயிரிழந்தனர். சென்னை நகரில் மாண்டவர் எண்ணிக்கை 206. குஜராத், மஉறாராஷ்டிரா மாநிலங்களை தாக்கிய பூகம்பங்கள் அதில் ஏற்பட்ட சேதாரங்கள், புயல் மழை வெள்ளம் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள், பல மாநிலங்களில் தீவிரவாத தாக்குதல்களால் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பங்கள் என்று பேரிடர்கள் பல மக்களை நிலைகுலைய செய்கின்றன. இம்மாதிரியான அசம்பாவிதங்கள் நிகழும் பொழுது எவ்வாறு அதை எதிர்கொள்ள வேண்டும், தனிப்பட்ட நபர் எடுக்க வேண்டிய பாதுகாப்பு முறைகள் என்ன, பணி இடங்களில் எவ்வாறு பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும், பல்வேறு அரசுத் துறைகள் இணைந்து தயாரிக்க வேண்டிய செயல்முறை திட்டங்கள் என இவையாவும் தெளிவான வகையில் எல்லோருக்கும் சென்றடைய வேண்டும். பயிற்சி முறைகள் வரையப்பட்டு அதில் எல்லோரும் பங்கு கொள்ள வேண்டும். பயிற்சியில் வியர்வை சிந்தினால் தான் களத்தில் ரத்தம் சிந்தலை தவிர்க்க முடியும்.

டைடானிக் ஆங்கிலப் படத்தில் அருமையான ஒரு காட்சி. கப்பல் பனிக்கட்டியில் இடிபட்டு முழுகப்போகிறது. கப்பலைக்கட்டியவர் டைட்டானிக் பாதுகாப்பான கப்பல் எந்த ஆபத்தையும் சமாளிக்க வல்லது என்ற தன்னம்பிக்கையில் அவசரகால தப்பிப்பதற்கான உபகரணங்கள் மற்றும் மீட்பதற்கான சிறிய படகுகள் அதிகம் வைக்கவில்லை. மீட்புப் படகுகள் குறைவான நிலையில் முதலில் பெண்களையும் குழந்தைகளையும் காப்பாற்ற முன்னுரிமை கொடுத்து சிறிய படகில் கடலில் இறக்க ஆயத்தம் செய்யப்படுகிறது. ஆனால் முண்டியடித்து காப்பாற்றிக் கொள்ள வசதிபடைத்தவர்கள் துடிப்பார்கள். அடித்தளத்தில் குறைந்த கட்டணம் கொடுத்து பிரயாணம் செய்த ஏழைகள் புறக்கணிக்கப்படுகின்றனர். கதவு அடைக்கப்படுகிறது. வசதி படைத்தவர்களும் முதலில் படகில் ஏறியவர்கள் மற்றவர்களை அனுமதிப்பதில்லை. அதிலும் வாட்டசாட்டமான ஆண்கள், வயோதிகர்களை தள்ளிவிட்டு தம்மை காப்பாற்றிக்கொள்ள முனைவார்கள். தான் பிழைத்தால் போதும் என்ற சுயநலம். ஆனால் சாதாரண மக்கள் தன்னலம் பாராது மற்றவர்களுக்கு உதவுவதும் சித்தரிக்கப்பட்டிருக்கும். பேரிடர் மற்றும் விபத்துக்கள் நிகழும் பொழுது இத்தகைய காட்சிகளைக் காணலாம். சமீபத்தில் தில்லியில் ஜம்மா மஸ்ஜித் அருகில் துப்பாக்கியால் சுட்டவரை தைரியமாக ஒரு சாதாரண ரிக்ஷாக்காரர் துரத்தியதால் பெரிய உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது, ஏழைகளின் தன்னலமற்ற செயலுக்கு உதாரணம்.

எந்த ஒரு விபத்து அல்லது பேரிடர் ஏற்பட்டால் முதல் காப்பாளராக சம்பவ இடத்திற்கு செல்வது தீயணைப்பு வீரர். ஆபத்து நேரத்தில் முந்திக் கொண்டு உதவும் மனோபாவம் படைத்த வீரர்களைக் கொண்டது தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை. மீட்புப் பணியில் முதலில் காப்பாற்றப்பட வேண்டியவர் வயோதிகர், பெண்கள், குழந்தைகள் மற்றும் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறன் படைத்தவர்கள். மக்கள் கூடும் பொது இடங்களில் அசம்பாவிதம் ஏற்படாமல் அந்த இடத்திலிருந்து மக்கள் வெளியேறுவதற்கு பாதுகாப்பான வெளியேற்ற பாதைகள் அமைப்பது கட்டிட உரிமையாளர் அல்லது பொது இடங்களை நிர்வகிக்கும் பொறுப்பாளரைச் சார்ந்தது.

ஒரு கட்டிடத்தில் ஆபத்தில் சிக்கியவர்களை ஒரு நிமிடத்தில் ஐம்பது நபர்களை வெளியேற்றுப்பாதை மூலமாக காப்பாற்றலாம் என்று சர்வதேச குறியீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரச்சனை என்று வரும்பொழுது விதிகளைக் கடைபிடித்து வெளியேற்றுவது கடினம். இப்போது உயர்மாடிக் கட்டிடங்கள் பல வந்துவிட்டன. உதாரணத்திற்கு 10 மாடிக்கட்டிடம் கொண்ட குடியிருப்பு பகுதியில் சுமார் 1000 மக்களை விரிவான படி இறக்கத்தில் வெளியேற்றுவதற்கு குறைந்தபட்சம் 45 நிமிடம் ஆகும். அதுவே வியாபாரத்தளத்தில் அதிக மக்கள் புழங்குவதால் அவர்களை வெளியேற்றுவதற்கு மேலும் அதிக நேரம் பிடிக்கும்.

ஸ்டீபன் கோர்ட் கொல்கத்தாவில் இந்த வருடம் மார்ச் 23-ல் நடந்த தீ விபத்தில் 43 அப்பாவிகள் மாண்டனர். ஏழு மாடிகள் மட்டும் கொண்ட இந்த கட்டிடத்தில் உயிரிழப்பு அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். முதலில் உதவி அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதற்கு அரசுத் துறைகளை குறை கூறினாலும் இம்மாதிரி அசம்பாவிதங்களுக்கு முக்கிய காரணம் கட்டிட விதிமுறைகள் சரியாக பின்பற்ற தவறியதால்தான் ஏற்படுகிறது என்பது உண்மை நிலை.

நமது நகரங்களில் விதிகள் மீறிக் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள் தவிர அபாயகரமான நிலையில் பல பழைய கட்டிடங்கள் உள்ளன. இம்மாதிரி இடங்களில் ஆபத்து நிகழலாம் எந்நேரமும். எல்லாக் கட்டிடங்களிலும் அவசரகாலத்தில் மக்களை வெளியேற்றுவதற்கான திட்டம் வகுக்கப்படவேண்டும். எல்லா உயர்மாடிக் கட்டிடங்களிலும் வருடத்திற்கு இருமுறையாவது அவசரகால நடைமுறை பயிற்சி நடத்தப்பட்டு குடியிருப்போரை பாதுகாப்பாக வெறியேற்றும் முறை எல்லோருக்கும் பயிற்றுவிக்க வேண்டும். இது தவிர பேரிடர் ஆளுமை திட்டம் அந்தந்த இடத்திற்கு ஏற்றாற்போல் தயாரித்து அவசர காலத்தில் எவ்வாறு உயிர்சேதம் மற்றும் பொருள் அழிவிலிருந்து பாதுகாத்துக் கொள்வது என்பது பற்றி தெளிவான நடைமுறைகளை நிர்ணயித்து தொடர் பயிற்சியும் கொடுக்கப்பட வேண்டும்.

மூன்றாம் நிலை மாற்றுவழி பிரத்யேக பாதுகாப்பு திட்டம் அவசரகாலத்தில் வெகுவாக உயிர்சேதத்தையும் குறைக்கும். ஸ்கைலிப்ட் போன்ற உயரத்தில் ஏற்றக்கூடிய ஏணிகளைக் கொண்ட வாகனங்கள் ஆபத்தில் சிக்கிய மக்களை மீட்பதில் வெகுவாக உதவும். ஒரு நபரை மீட்பதற்கு சராசரி 5 நிமிட்ம் என்ற நிலையிலிருந்து மேம்பட்ட வெளியேற்ற சாதனங்கள் மூலம் ஒரு நிமிடத்தில் ஐம்பது நபர்கள் என்ற இலக்கை அடைய முடியாவிட்டாலும் வெளியேற்றும் நேரத்தை கணிசமாக குறைக்கலாம்.

தீயணைப்புத் துறையை மேம்படுத்த அமைக்கப்பட்ட கமிஷன் தனது பரிந்துரையில் பல நவீன உபகரணங்கள் கொள்முதல் செய்து தீயணைப்பு வீரர்களுக்கு காலத்திற்கு ஏற்றவாறு சவால்களை சமாளிக்க பயிற்சி அளிக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. உடல்வலிமை மனவலிமை அதனோடு தொழில்நுட்ப அறிவாற்றலும் நொடிப்பொழுதில் முடிவுஎடுக்கும் திறனும் பொருந்திய வல்லவர் தீயணைப்பு வீரர்.

ஜெய்ப்பூர் எண்ணெய் கிடங்கில் அக்டோபர் 2009-ல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது நினைவிருக்கலாம். இரண்டு பெரிய எண்ணெய் சேமிப்பு தொட்டி வெடித்து சிதறியது. பக்கத்து கிராமங்களில் உள்ள சுமார் 50,000 மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர். 15 கிலோமீட்டர் தொலைவில் அந்த தீ ஜுவாலையின் தாக்கம் உணரப்பட்டது. இந்த விபத்தில் 12 ஊழியர்கள் உயிரிழந்தனர். எரிவாயு மற்றும் எரிபொருள் நமது அன்றாட வாழ்க்கைக்கு அவசியம். அதேசமயம் அவற்றை பாதுகாப்பாக கையாளவேண்டும். தமிழகத்தில் 24 இடங்களில் பெட்ரோல், டீசல், காஸ் சேமிப்பு கிடங்குகள் உள்ளன. சேமிப்பு இடங்களில் பாதுகாப்பு, எரிபொருளை டாங்கர் லாரிகளில் எடுத்துச் செல்லும்போது கவனிக்க வேண்டியவை, வழியில் விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அசம்பாவிதத்தை தவிர்ப்பது, எண்ணெய் கசிவு ஏற்பட்டால் பாதுகாப்பது என்று பல்முனை நடவடிக்கைகளை தீயணைப்பு வீரர்கள் மேற்கொள்ள வேண்டும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தீ அபாயம் அதிகமாக ஏற்படக்கூடிய 17 இடங்கள் உள்ளன. இதில் எண்ணெய் சேமிப்பு கிடங்குகள், சென்னை பெட்ரோலியம் மற்றும் பல இரசாயன தொழிற்சாலைகளும் அடங்கும். இத்தகைய தொழிற்சாலைகளிலிருந்து நச்சுப் பொருள்கள் கசிவு ஏற்பட்டால் அதை கையாளுவதற்கு பிரத்யேக உபகரணங்கள் அடங்கிய வாகனம் வாங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கதிர்வீச்சு, நச்சுப் பொருட்களால் ஏற்படக்கூடிய பாதிப்பு இவற்றை எதிர்கொள்ள பிரத்யேக பயிற்சியும் தீயணைப்பு வீரர்களுக்கு கொடுக்கப்படுகிறது..

பேரிடர்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொருவரும் அவரது நிலையில் முயற்சி மேற்கொள்ள வேண்டும். நமது வீட்டிலோ அலுவலகத்திலோ சாதாரண நிலை என்ன என்பதை நன்கு தெரிந்து வைத்திருந்தால்தான் அசாதாரண மாற்றங்களை கவனிக்க முடியும். சிறு தீ விபத்து ஏற்பட்டாலும் அதனை புறக்கணிக்காது காரணங்களை ஆராய்ந்து இடர்களை களையவேண்டும். மின்கசிவினால்தான் எழுபது சதவிகித தீ விபத்துக்கள் ஏற்படுகின்றன. மின் இணைப்பு சந்திக்கும் இடத்தில் தீப்பொறி பரவ விடாமல் பாதுகாக்கும் கவசங்கள் பொருத்தப்படவேண்டும்.

பலதரப்பட்ட இடர்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முழுமையான விழிப்புணர்வு அவசியம்.

விதிகள் அனுசரிக்கப்பட வேண்டும். விதிகள் மிதிக்கப்பட்டால் கோபம் பத்திக் கொண்டு வரவேண்டும். விதிகள் மதிக்கப்பட்டால் ஆபத்து பற்றிவராது. விதிகளை கடைபிடித்து ஆரவாரமில்லாது வாழ்க்கையை நடத்தினால் ஆபத்தினை தவிர்க்கலாம். பேரிடர் தாக்கத்தைத் தணிக்கலாம்.

Article published in Dinamani on 07.10.2010