Wednesday, March 17, 2010

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்



னித உரிமைகள் மனிதகுலம் தோன்றியதிலிருந்து உணரப்பட்டு வந்தது என்பது சரித்திர ஏடுகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். மாயன் குடியினர் தங்களது சமுதாயக் கட்டுப்பாட்டிற்காக பல சட்டங்கள் நடைமுறைப்படுத்தினர். அதில் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கிரேக்க ரோமாபுரி எகிப்து பெர்ஷியா போன்ற நாகரிகங்கள் தழைத்த காலகட்டங்களில் மனித உரிமைகள் பற்றி உணர்ந்திருந்தனர். அதனை நிலைநாட்ட போராடவும் செய்தனர். இங்கிலாந்தில் 1215ம் வருடம் மக்கள் சக்தியை சந்தித்த ஜான் என்ற மன்னன் ‘மாக்ன கார்ட்டா’ என்ற மனித உரிமைகள் அடங்கிய பிரேரணையை கையெழுத்திட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இது மக்கள் சக்திக்கு கிடைத்த வெற்றி. இன்றைய நவீன காலத்தில் மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்ச்சி பிரான்ஸ், அமெரிக்க நாடுகளில் நடந்த விடுதலைப் போராட்டத்தின் விளைவாக ஏற்பட்டது. வில்லியம் லாய்ட் கேரிஸ் என்ற அமெரிக்கர் 1831 ஆம் ஆண்டு ‘லிபரேட்டர்’ என்ற பத்திரிகையில் “Human Rights” என்ற சொற்றொடரை முதலில் பிரயோகம் செய்தார் என்றும் அதற்குப் பிறகு இது வழக்கில் வந்தது என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் மனித உரிமைகள் ஆணையம் முக்கியமான உரிமைகளை முன் நிறுத்தி அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. வறுமை ஒழிப்பு, மனித உரிமைகள், கல்வி, காவல் காப்பில் பாதுகாப்பு (கஸ்டோடியல் கேர்) போன்ற பல உரிமை பிரச்சனைகள் ஒவ்வொரு வருடமும் விவாதிக்கப்படுகின்றன. இந்த வருடம் பலதரப்பட்டவர்களை அரவணைப்போம் பாகுபாடுபடுத்தலை தடுத்து நிறுத்துவோம் என்ற அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10ம் நாளிலிருந்து ஒரு வருடம் இந்த பிரச்சனை சமுதாயத்தில் ஆராயப்பட்டு மக்களிடையே நல்லிணக்கம் ஏற்பட முயலவேண்டும் என்று மனிதஉரிமைகள் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பலதரப்பட்ட மக்களை அரவணைத்து வழிநடத்த எந்த ஒரு காரணத்தை காண்பித்தும் பாகுபாடு படுத்துதல் தவிர்க்கப்பட வேண்டும். ஒருவரது பிறப்பு, ஜாதி, அவர் பின்பற்றும் மதம், இனம் என்பதன் அடிப்படையில் வேறுபாடு கிடையாது என்பது தான் மனித உரிமைகளின் அடிப்படை நோக்கம். ஆனாலும் இப்பொழுதுள்ள நிலையில் குழந்தைகள், பெண்கள், வயது முதிர்ந்தவர்கள் அவர்களுக்குரிய உரிமைகள் மறுக்கப்படுவது மட்டுமல்லாது அவர்கள் இன்னல்களுக்குள்ளாவதையும் காண்கிறோம்.

பெண்களுக்கு எதிரான கொடுமைகள், அநீதிகள், வன்முறைகளை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்ற கருத்தரங்கம் ஒவ்வொரு வருடமும் ஏற்பாடு செய்யப்படுகிறது. பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளால் அவர்கள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை ஒப்புக் கொண்டு அதை எவ்வாறு தடுப்பது, தவிர்ப்பது என்பதை பற்றி நமது நாட்டில் மட்டுமல்ல உலக அளவில் இந்த பிரச்சனை ஆராயப்படுகிறது. அதனால் தான் 1979ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை இந்த பிரச்சினையை உணர்ந்து பெண்கள் தங்களுக்கு சேரவேண்டிய உரிமைகளை எவ்வாறு பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஒரு உடன்படிக்கை டிசம்பர் 18, 1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதில் இந்தியா உட்பட 187 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. நவம்பர் 26ம் நாள் ஒவ்வொரு வருடமும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை முன் நிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி அதனை களைவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென எல்லா நாடுகளிலும் இம்மாதியான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இந்தியாவில் உள்ள பல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் சொல்லுவதிலும் செயலிலும் காணப்படும் வேறுபாடு தான். நமது சிந்தனையும், போதனையும், செயலும் ஒத்து இருக்க வேண்டும். பெண்களுக்கு சமஉரிமை கொடுக்கப்படவேண்டும், அநீதிகள் இழைக்கக்கூடாது, டௌரி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்ற மேடைகளில் பேசப்படுகிறது. ஆனால் நடைமுறையில் பார்த்தால் இன்றும் பெண்கள் புகுந்த வீட்டில் கொடுமை படுத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு கல்யாணத்திலும் ஆடம்பரச் செலவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இத்தகைய அநீதிகள் கருவறையில் இருந்து கல்லறை வரை தொடர்ந்து இழைக்கப்படுகிறது என்பதை காண்கிறோம். சிசுக்கொலை, பெண்கல்வி மறுப்பு, பெண் குழந்தைகள் வித்தியாசமாக நடத்தப்படுதல், ஆண் குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிப்பது, மேல்படிப்புக்கு அனுப்பாமல் இருப்பது, விவாகத்தின்போது பணம், நகை மற்றும் உயர்ந்த விலை பொருட்களை டௌரியாக கேட்பது, கல்யாணம் முடிந்த பிறகும் ஒவ்வொரு கட்டத்திலும் மேலும் பணம் கொண்டு வரச் சொல்வது, கணவன் இறந்து விட்டால் விதவை பெண்ணை குடும்பத்தில் இருந்து ஒதுக்குவது என்று பெண்களுக்கு ஓயாமல் பிரச்சனைகள் இழைக்கப்பட்டு அவர்கள் இன்னல்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

“குறுகியமனப்பான்மை, மதம், ஜாதி, இனம் போன்ற பேதங்களுக்கு இடங்கொடாது இந்தியர்களாகிய நாம் தலைநிமிர்ந்து வான் நோக்கி உயர்வோம், திடகாத்ரமாக ஒன்றுபடுதலில் இணைந்திருப்போம்” என்று பண்டித ஜவஉறர்லால் நேரு அவர்கள் 1955ம் வருடம் கொடுத்த அறிவுரை இன்று இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. கிராமங்களில் தான் இந்த வேற்றுமைகள் மாறாமல் உரிமைப் பிரச்சனைகளுக்கு இடமளிக்கின்றன என்றால் நகரங்களிலும் இத்துகைய காழ்ப்புணர்ச்சிகள் தலைதூக்குகின்றன.

ஆஸ்திரேலிய நாட்டில் முக்கியமாக மெல்போர்ன் நகரில் இந்திய மாணவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது அங்குள்ள காவல்துறையின் மெத்தனமான நடவடிக்கை கவலை அளிப்பதாக உள்ளது. தாராளமயம், உலகமயம் என்ற பரிமாண வளர்ச்சியில் உலகம் சுருங்குகிறது என்றாலும் பலதரப்பட்ட மக்களை ஆதரிக்கும் பண்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. உள்ளூர்வாசிகளை விட வெளியூரிலிருந்து பிழைக்க வருபவர்கள் கடுமையாக உழைப்பதால் கொடுக்கப்பட்ட வேலையை தக்கவைத்துக் கொள்கின்றனர். இதனால்தான் மும்பையில் வடஇந்தியர்களுக்கு எதிராகவும் மேலும் சில மாநிலங்களில் இனவாரியாக பிரச்சனைகள் தலைதூக்குகின்றன. அயல்நாட்டவர்கள் தமது வாழ்வாதாரத்திற்கு உலை வைக்கிறார்கள் என்ற முறையற்ற உணர்வுதான் இந்தியர்கள் ஆஸ்திரேலியாவில் தாக்கப்படுவதற்கு காரணம் என்பது தெளிவு.

பொதுவாக கல்விக் கூடங்களில் பலதரப்பட்ட மாணவர்கள் சகஜமாக பழகவும் பயிலவும் சுமூகமான சூழல் நிலவும் என்றுதான் எதிர்பார்ப்போம். ஆனால் ‘ராகிங்’ என்ற “சிதைவுச் சீண்டல்கள்" குறைந்தபாடில்லை. சமீபத்தில் ஒரு கல்லூரி வளாகத்தில் மாணவன் சிதைவுச் சீண்டல் விளைவாக மாடியிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டான் என்ற செய்தி வந்தது.

சில மாதங்களுக்கு முன்பு தில்லியில் உள்ள பிரதான பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவி அவரது ஆசிரியரால் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். தொல்லை தாங்காமல் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தியாவில் மட்டுமல்ல மேலைநாடுகளில் பல பல்கலைக்கழகங்களில் இத்தகைய கொடுமைகள் நிகழ்கின்றன என்றும், அமெரிக்காவில் மூன்றிலிருந்து ஐந்து மாணவிகளில் ஒரு மாணவி இத்தகைய மேலோட்டமான பாலியல் கொடுமைக்கு ஆளாகிறார் என்று புள்ளியல் விவரம் தெரிவிக்கிறது. இத்தகைய நிகழ்வுகளில் கொடுமை படுத்துபவர் தெரிந்தவர் அதனால் வெளியில் சொல்வதற்கு கூச்சப்பட்டு விளைவுகள் பற்றிய பயத்தினால் வேறுவழியின்றி பொறுத்துக் கொள்கிறார்கள் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

சமீபத்தில் அரியானா மாநிலத்தின முன்னாள் டிஜிபி ரத்தோருக்கு, ருசிகா கிர்உறாத்ரா என்ற பெண்ணை பாலியல் கொடுமை படுத்தியற்காக சிறைதண்டனை விதிக்கப்பட்டது. இதன் மூலம் சமுதாயத்தில் நிலவும் குழந்தைகள் பாலியல் கொடுமை பிரச்சனை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அக்ஷரா என்ற மும்பை தன்னார்வ தொண்டு நிறுவனம் 2007ல் 44 கல்லூரிகளில் மேற்கொண்ட ஆய்வில் 533 பெண்களிடம் நடத்திய நேர்காணலில் சுமார் முந்நூறு பெண்கள் (61 சதவிகிதம்) பாலியல் கொடுமைக்கு உள்ளானவர்கள் என்ற விவரம் வெளிவந்துள்ளது. மற்ற நகரங்களில் கூடுதலாகவோ குறைவாகவோ அத்தகைய நிலவரம் இருக்கும் என்று யூகிக்கலாம். மல்லுக்கட்டிக்கொண்டு பிரச்சனைகளை எதிர்கொள்வதில் இந்தியர்கள் மேலைநாட்டவர்களுக்கு சளைத்தவர் இல்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் உறில்லாரி கிளிண்டன் கூறியதற்கு ஏற்ப இந்த கொடுமையை முனைப்பாக எதிர்க்கொள்ள வேண்டும்.

மனிதர்களை வைத்து இழிவாணிபம் செய்யும் முறை தழைத்து ஓங்கும் சர்வதேச வாணிபமாக வளர்ந்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. ஆசிய நாடுகளிலிருந்து இவ்வாறு வேலைக்காக கொத்தடிமைகளாக பணியில் அமர்த்தப்படுபவர்களின் எண்ணிக்கை பல லட்சங்களை கடந்துள்ளது. அதில் கணிசமாக இந்தியர்களும் உள்ளனர்.

குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தல், காப்பில் உள்ளவர்களை துன்புறுத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், விசாரணையின்றி கைதிகள் சிறையில் இருத்தல் போன்ற மனித உரிமைப் பிரச்சனைகள் நம்மை நெருடவேண்டும். பார்வையால், சிந்தனையால், செய்கையால் வஞ்சனை செய்தல், கொடுமைகளை பாராமல் இருத்தல் இவையும் ஒருவகை மனித உரிமைகள் மீறல்களே.
அரசியல் சாசனத்தில் 51A என்ற பிரிவில் மக்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றி பட்டியலிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாத்தல், பொதுசொத்துக்களை பாதுகாத்தல், பெண்களை கண்ணியமாக நடத்துதல், நாடு உயர ஒவ்வொருவரும் தமது பணிகளை திறம்பட செய்தல் போன்றவை இதில் அடங்கும். உரிமைகள் பெறவேண்டும் அதே சமயம் நமது கடமைகளை நிறைவு செய்ய வேண்டும். சட்டத்தை மதிப்பவர்க்கே உரிமைகள் துணை போகும், கடமைகளை புறக்கணிப்பவர்கள் மீது சட்டம் பாயவேண்டும்.

உயிர் உடமைகளுக்கு பாதுகாப்பு சுதந்திரம் சமத்துவம் கண்ணியம் ஆகிய அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். பாதுகாப்பாக பெட்டகத்திற்குள் வைப்பதற்காக அல்ல அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டியது நமது கடமை. பலதரப்பட்ட மக்களை அரவணைப்போம். பாகுபாடுகளையும் வேறுபடுத்துதலையும் வேரோடகற்றுவோம்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற உணர்வினைப் பரவச் செய்வோம்.

இக்கட்டுரை தினமணி நாளிதழில் 03.02.2010 அன்று பிரசுரிக்கப்பட்டது

1 comment:

sasikumar said...

மதிப்புக்குரிய அய்யா,
நான் மிகவும் மதிக்கும் திறமைமிக்க ஆற்றல் உடையவர் நீங்கள். எந்த இடத்தில் பணியில் உங்களை மாற்றினாலும் நீங்கள் அங்கு பெரிய நல்ல மாற்றங்களை செய்ய முயற்சி செய்கிறீர்கள். உங்களிடம் ஒரு கேள்வி கேட்க ஆசை.

ஒரு மனிதனின் உயிருக்கு மதிப்பு அளிக்க நாம் என்ன மாற்றங்கள் செய்யவேண்டும் இந்தியாவில் .......

நடக்கும் நிகழ்வுகள் மனதை மிகவும் மதிக்கிறது... . (உதாரணம் : அனைவரின் முன்னிலையில் காவல் கண்கணிப்பாளர் மரணம்)