Wednesday, March 17, 2010

வெந்து தணியுமா தீ

பெங்களூரு கார்ல்டன் வணிக வளாகத்தில் பிப்ரவரி திங்கள் 23 ஆம் நாள் நிகழ்ந்த கோர தீ விபத்தில் 9 பேர் பரிதாபமாக மாண்டனர் 59 நபர்கள் தீக்காயமுற்றனர். இரண்டாவது மாடியில் ஏற்பட்ட தீ விரைவாக மற்ற இடங்களுக்கும் பரவியதில் தகிக்கும் புகை மூட்டம் எல்லா தளத்திலும் மாடி படிக்கட்டுகளிலும் சூழ்ந்தது. வெளியேறுவதற்கு வழிதெரியாத பயத்தில் மாடிக்கட்டிடத்திலிருந்து குதித்ததில் காயமுற்று உயிரிழந்தனர். தீயினால் உண்டாகும் உஷ்ணம் ஒருவரை கதிகலங்கச் செய்துவிடும். சுயநிலையை இழந்து செய்வதறியாது தவித்து நிலை குலைந்து எடுக்கும் முடிவு விபரீதத்தில் முடியும். நியூயார்க் உலக வர்த்தக மைய இரட்டை கோபுர தீவிரவாதத் தாக்குதலினால் உண்டான தீ விபத்தில் பலர் இவ்வாறு நிலை தடுமாறி மாடியிலிருந்து குதித்து உயிரிழந்தனர்.

பெங்களூரு விபத்தின் பூர்வாங்க ஆய்வில் மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டது என்றும், வெளியேறுவதற்கான வாசல்கள் மூடப்பட்ட நிலையில் சிக்கிக்கொண்ட மக்கள் பாதிப்புக்குள்ளானார்கள். அடுக்கு மாடிக் கட்டிடங்களில் வைக்கவேண்டிய தீ பாதுகாப்பு உபகரணங்கள் வைக்கப்படவில்லை, தீ பரவாமல் தடுக்கக்கூடிய தானியங்கி தண்ணீர் உமிழும் சாதனங்கள் பொருத்தப்படவில்லை. போதுமான அவசரகால வெளியேற்ற நிலைகள் இல்லை, தீ அபாய ஒலிகள் பொருத்தப்படவில்லை என்று நிறைவேற்றப்படாத பாதுகாப்பு பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. மேல் மாடிக் கட்டிடம் பூட்டப்பட்டிருந்தது. அங்கு தீப்பற்றக்கூடிய ஜெனரேட்டர் ஆயில் வைக்கப்பட்டிருந்தது மிகவும் அபாயகரமானது. தெய்வாதீனமாக இது தீப்பற்றவில்லை. இதில் தீ பரவியிருந்தால் முழுக்கட்டிடமும் சரிந்திருக்கும் பல உயிர்களை பலி கொண்டிருக்கும்.

பொதுமக்களின் பாதுகாப்பு பற்றி சிறிதேனும் அக்கறையிருந்தால் இத்தகைய அசம்பாவிதம் நிகழ்ந்திருக்காது. இது பணம் சம்பாதிக்கும் பேராசையின் உச்சக்கட்டம் என்றால் மிகையில்லை.

அடுக்குமாடிக் கட்டிடங்கள் பின்பற்ற வேண்டிய தீப்பாதுகாப்பு முறைகள் தேசிய கட்டிட விதிகள் 2005 என்ற தொகுப்பில் வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி குறைந்தது 15 மீட்டர் அதாவது சுமார் 50 அடி உயரமுள்ள கட்டிடம் இந்த விதிகளுக்குள் வரும். சென்னையில் இப்போது சுமார் 60 மீட்டர் உயரம் வரை கட்டிடங்கள் அமைந்துள்ளன. உயர்மாடி கட்டிடங்கள் தீயணைப்புத் துறையின் தடையின்மைச் சான்றிதழ் பெற்ற பின்னரே சென்னை பெருநகர வளர்ச்சி கழகத்தில் கட்டிடம் கட்ட அனுமதி பெற பரிசீலிக்கப்படும். அடுக்குமாடி கட்டிடத்தின் உயரத்தைப் பொறுத்து குறைந்தபட்சம் ஏழு மீட்டர் இடைவெளி கட்டிடத்தைச் சுற்றிலும் இருக்க வேண்டும். தீ விபத்து ஏற்படும் தருணத்தில் தீயணைப்பு வாகனங்கள் கட்டிடத்தைச் சுற்றிலும் நிறுத்தி தீயணைப்புப் பணிகளை திறம்பட செய்திட இத்தகைய இடைவெளி தேவை.

அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலக, வணிக வளாகங்கள் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்கள் சிறியதானாலும் பெரியதானாலும் பொதுவாக கடைபிடிக்க வேண்டிய சில பாதுகாப்பு விதிகள் தேசிய கட்டிட விதிகள் தொகுப்பில் கூறப்படுகின்றன. ஒவ்வொரு மாடி தாழ்வாரத்தில் குறைந்தபட்சம் இரண்டு தீயணைப்பான்கள் பொருத்த வேண்டும். அவசரகாலத்தில் வெளியேறுவதற்கு வழிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அதற்கான சமிக்ஞைகள் தெளிவாக போடப்பட்டிருக்கவேண்டும். அபாயஒலி கருவிகள் பொருத்த வேண்டும். விடுதிகளில் தீ ஏற்பட்டால் தானாக நீர் உமிழும் கருவிகள் பொருத்தப்பட வேண்டும். அவசரகாலத்தில் எவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கான ஒத்திகை நடத்தப்பட்டு கட்டிடத்தை உபயோகிப்பவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பெங்களூரு இந்தியாவின் கணினி விஞ்ஞான தலைநகரம் என்று கருதப்படுகிறது. அதுவும் அசம்பாவிதம் நடந்த இடம் எலக்ட்ரானிக் சிட்டி என்று புதிதாக உருவாக்கப்பட்ட நவீன நகரத்தில் அமைந்துள்ளது. இத்தகைய இடத்திலேயே விதிகள் கடைபிடிக்கவில்லை என்றால் மற்ற இடங்களில் உள்ள கட்டிடங்களின் நிலை எவ்வாறு இருக்கும்.

சட்டங்களும் நிலையாணைகளும் நன்கு இயற்றப்படுகின்றன. ஆனால் அமல் படுத்துவதில்தான் சுணக்கமும் சிக்கலும் வருகின்றன. குறிப்பிட்ட சதுர அடி பரப்பளவு கட்டிடம் உள்ளது என்றால் குறிப்பிட்ட அளவு தாங்கக்கூடிய நீர்கிடங்கு நிறுவப்படவேண்டும். தீ விபத்து ஏற்பட்டால் இந்த நீர் தீயணைப்பதற்கு உபயோகப்படுத்த வேண்டும். ஆனால் இதை அமைப்பதில் சிக்கனம் பிடிப்பார்கள். தாழ்வாரங்களும், நிலைப்படிகளும் தடுப்புகள் இல்லாது தடையில்லாமல் அவசர நேரத்திலும் மக்கள் வெளியேற உதவவேண்டும். ஆனால் பெங்களூரு கார்ல்டன் கட்டிடத்தில் தாழ்வாரங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் இயங்குகின்றன. நிலைப்படிகள் இரும்பு கம்பிகளால் தடுக்கப்பட்டு சப்புச்சரவு பொருட்கள் வைக்கும் இடங்களாக மாற்றப்பட்டுள்ளன. மொட்டை மாடிக்கு செல்லும் வழி பூட்டப்பட்டு இருந்தது. அது திறந்திருந்தால் மக்கள் அங்கு சென்று அனல் கக்கும் புகையிலிருந்து தப்பித்திருக்கலாம்.

கட்டிடங்களில் திறந்த வெளிப்பகுதி கட்டாயமாக பராமரிக்கவேண்டும் என்ற விதி கடைபிடிப்பதில்லை. பல அலுவலகங்களில் இடப்பற்றாக்குறைக் காரணமாக தாழ்வாரங்களில் எழுத்தர்கள் பணிபுரிவதைக் காணலாம். அரசாங்க அலுவலகங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

தீயணைப்புத் துறைக்கு சராசரி ஒரு நாளுக்கு சுமார் நூறு தீயணைப்பு அழைப்புகள் வருகின்றன. கோடைகாலத்தில் வெப்பம் காரணமாக அழைப்புகள் அதிகமாக வரும். 2009 ஆம் ஆண்டு 21,441 தீவிபத்துகள் ஏற்பட்டன. சென்னையில் 2354 தீ விபத்துகள் ஏற்பட்டன. விபத்துக்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109. இந்தியாவில் 2008-ம் ஆண்டு வரை தீ விபத்துகள் பற்றிய புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் படி 2008-ம் ஆண்டில் 32,620 தீ விபத்துகள் சம்மந்தமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் உயிர் இழந்தோர் எண்ணிக்கை 22,454, காயமுற்றவர்கள் 2987.

தீக்காயங்கள் போன்று கொடியது வேறொன்றும் இருக்க முடியாது. அதனால் தான் “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது” என்று ஒரு கொடியச் செயலுக்கு மேற்கோள் காட்டப்படுகிறது. 1979-ம் ஆண்டு தூத்துக்குடி நகரில் ஒரு திரையரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 168 நபர்கள் உயிரிழந்தனர். காயமுற்று உயிருக்கு போராடியவர்களை வாழையிலையில் படுக்க வைத்து சிகிச்சை கொடுக்கப்பட்டது மறக்க முடியாதது. 2004-ம் வருடம் கும்பகோணத்தில் 93 சிறு குழந்தைகள் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் மாண்டனர். இந்த நிகழ்வு தொடர்பாக 483/2004 அவினாஷ் மெஉறரோத்ரா எதிர் யூனியன் ஆப் இந்தியா என்ற பொது நல வழக்கில் உச்ச நீதிமன்றம், பள்ளிகளில் தீத்தடுப்பு சாதனங்கள் சரிவர பொருத்தப்பட்டுள்ளதா, விபத்துகளை தடுக்க எல்லாவித முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளதை அரசுத் துறைகள் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. அதன்படி எல்லாப் பள்ளிகளையும் ஆய்வு செய்யும் பொறுப்பினை தீயணைப்புத் துறை மேற்கொண்டுள்ளது.

பாதுகாப்புத் தணிக்கை மற்றும் தீ விபத்து ஏற்பட்டால் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது பற்றிய காலாந்திர ஒத்திகை மிகவும் இன்றியமையாதது. தீயணைப்புத் துறை இத்தகைய பாதுகாப்புத் தணிக்கையை சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர், வேலூர், திருநெல்வேலி போன்ற முக்கிய நகரங்களில் கடந்த ஒருவருடமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் இருப்பில் இருக்கும் கணக்குப்படி 964 உயர்மாடிக் கட்டிடங்கள் உள்ளன. அதிகபட்சமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 661 உயர்மாடிக் கட்டிடங்கள் உள்ளன. பாதுகாப்பு தணிக்கையில் கண்டறியப்பட்ட பல குறைபாடுகளை அந்தந்த உரிமையாளர்களுக்கும், பயன்படுத்துவோருக்கும் பாதுகாப்பை மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிக மக்கள் கூடும் வணிக வளாகங்களில் பாதுகாப்பு மேம்படுத்த வேண்டும். மின்சார கம்பிகள் தீப்பாதுகாப்பு கவசங்களோடு பொருத்தப்பட வேண்டும். மின்சார இணைப்புகள் சந்திப்பில் தீ எதிர்ப்பு கவசங்கள் பெட்டிகளில் மூடப்பட்டிருந்தால் மின்கசிவினால் தீப்பொறி உண்டானாலும் அது பெட்டிக்குள்ளேயே அடங்கி விடும், பரவாது. 70 சதவிகித தீ விபத்துக்கள் மின்கசிவினாலும், மின்சார இணைப்புகளின் சக்திக்கு மீறி குளிர்சாதன பெட்டிகள், இயந்திரங்கள் உபயோகிப்பதால் ஏற்படுகிறது.

கடைகளில் அவசரகால வெளியில் செல்லும் பாதையே இருக்காது. இருந்தாலும் அது பூட்டப்பட்டிருக்கும். எல்லாக் கடைகளிலும் எளிதில் பற்றி எரியக்கூடிய அட்டைகள், காகிதங்கள் குவியலாக ஓரத்தில் வைத்திருப்பார்கள். இவையெல்லாம் அபாயத்தின் அறிகுறிகள். பல பிரபலமான சிற்றுண்டி விடுதிகளின் சமயல் கூடத்திற்கு சென்றால் சாப்பிடவே தோன்றாது. புகை வெளியேற்ற விசிறி பொருத்தப்பட்டிருக்காது. அடுப்புகள் இடைவெளியில்லாது வரிசையாக இருக்கும். நெரிசலில் சமைத்துக் கொண்டிருப்பார்கள். வெளியேற தனிவழி இருக்காது. இத்தகைய தவறுகளை சுட்டிக்காட்டி நிவர்த்தி செய்ய தீயணைப்புத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

நமது இல்லங்களிலும் சாதாரண தீத்தடுப்பு பாதுகாப்பு முறைகள் கடைபிடிப்பதில்லை. அடுப்புக்கு காஸ் சிலிண்டரிலிருந்து இணைக்கும் ட்யூப் காலந்தவறாமல் மாற்றப்படவேண்டும். அது நைந்து போய் காஸ் கசிவு ஏற்பட்டாலும் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை. இரவு படுக்கு முன் காஸ் வெளிவரும் துவாரத்தை மூடவேண்டும். காலையில் சமையலறையில் காஸ் கசிவு ஏற்பட்ட வாசம் இருந்தால் மின்விளக்கு போடக்கூடாது. உடனடியாக கதவை திறந்து கசிந்த காஸ் வெளியேற்றப்பட வேண்டும். சமையலறையில் சிலிண்டர் வெடிக்கும் சம்பவங்கள் இத்தகைய அசிரத்தையினால் ஏற்படுகிறது. தழைய தழைய உடைகள் அணிந்து சமையல் செய்யக்கூடாது. புடவைத் தலைப்பை வைத்து சூடான பாத்திரங்களை அடுப்பில் இருந்து இறக்குவதால் புடவையில் தீப்பற்றி பல விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

பல அடுக்குமாடி குடியிருப்புகளில் தீயணைப்பான்கள் வைத்திருப்பார்கள். ஆனால் அவை வேலை செய்கிறதா என்று சரிபார்க்க மாட்டார்கள். தீயணைப்பு ஆய்வும் காலமுறையாக செய்யப்பட வேண்டும். கேபிள் டிவி இணைப்பு சரியில்லை என்றால் கூக்குரலிடுகிறோம். ஆனால் நமது பாதுகாப்பில் கோட்டை விடுகிறோம்.

“நில், படு, உருண்டோடு” (Stop, Drop and Roll) என்பது தீப்புகையிலிருந்து நம்மை பாதுகாப்ப உதவும் தாரக மந்திரம். சமையலுக்கு உதவும் நெருப்பு கொழுந்து விட்டு எரிந்து தீயாக பரவினால் ஆபத்து. தீ சாதாரணமாக தணியாது. உரிய சமயத்தில் அணைக்காவிட்டால் எரியக்கூடிய பொருட்கள் வெந்தபின் தான் தணியும். பாதுகாப்பு விதிகளை சரிவர கடைபிடித்தால் தீ விபத்துக்களை தவிர்க்கலாம். விபத்தினையே முழுமையான பாதுகாப்பு. அது நமது கையில்.
இக்கட்டுரை தினமணி நாளிதழில் 02.03.2010 அன்று பிரசுரிக்கப்பட்டது

1 comment:

Simulation said...

நான் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 15 வருடங்கள் பணி புரிந்துள்ளேன். இந்த அனுபவத்தில் பல்வேறு தீ விபத்துக்களைப் பார்த்திருக்கின்றேன். தீயணைப்புப் பணிகளில் பங்கும் கொண்டுள்ளேன். எங்களைப் போன்ற பொதுவான எஞ்சினியர்கள் தவிர, தீயணைப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவில் பணி புரிபவர்கள் முழுமையான பயிற்சி (வெளிநாடுகளில் சிறப்புப் பயிற்சி போன்றவை) எடுத்து இருப்பதனால், பல்வேறு தீ விபத்துக்களையும் திறம்படச் சமாளித்துள்ளோம். இந்த அனுபவங்களுக்குப் பிறகு, பொது இடங்களில் இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், தீயணைக்கும் முறைகளையும் பார்க்கும்போது, இவர்கள் இன்னமும் ப்ரொஃபெஷனல்லாக இருக்கலாமே என்று ஒரு வித கவலை ஏற்படுகின்றது. அப்புறம், அரசாஙத்தில் இது போன்ற விஷயங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி போன்ற விஷயஙள் குறைவாகத்தானே இருக்கும் என்று எண்ணிக் கொள்வேன்.

உங்கள் ஊழியர்களுக்கு குறைந்த செலவில், நல்ல பயிற்சி பெற, சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை போன்ற பெரிய நிறுவனங்களை அணுகி, அவர்களிடம் நல்ல பயிற்சி பெறலாமே. அந்த மாதிரி எதேனும் ஒரு திட்டம் இருக்கிறதா கைவசம்?

- சுந்தரராமன் (சிமுலேஷன்)