Monday, January 26, 2009

குடியரசுதின நல்வாழ்த்துக்கள்




நாள்.26.01.2009

தேசிய கொடி பட்டொளி வீசிப் பறக்கும் பொழுது பெருமிதத்தோடும், நன்றியறிதலோடும், இந்திய அன்னையை தலை வணங்குவோம்.

குடியரசு நன்னாளில், இந்திய இறையாண்மையைக் கடைபிடித்தல், பொதுச் சொத்தைப் பாதுகாத்தல், வன்முறையைத் தவிர்த்தல், பெண்களின் கண்ணியத்தைக் காப்பாற்றுதல் போன்ற உன்னதமான கடமைகளைப் பின்பற்றி, நாட்டிற்கு பெருமை சேர்ப்போம் என்று உறுதிகொள்வோம்.

மதம், இனம், பொழி போன்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, ஒற்றுமையுடன் நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் வளர்க்க பாடுபட வேண்டும், நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை நன்கு உணர்ந்து, அதனைக் காப்பாற்ற வேண்டும்.

இந்தக் குடியரசு நன்னாளில் “நூற்றுக்கு நூறு” என்ற கல்வித் திட்டம் இல்லவாசிகளின் பயனுக்காகச் செயல்படுத்தப்படுகிறது. இது அடுத்த மூன்று மாதங்கள் முனைந்து எல்லா சிறைத்துறை இல்லங்களிலும் நடைபெறும். நூறு சதவிகிதம் எழுத்தறிவு பெற்றுவிட்டோம் என்ற நிலையை அடைய வேண்டும். அதற்கு எல்லோரும் ஒத்துழைப்பு நல்க வேண்டுகிறேன்.

அனைத்து சிறைத்துறைக் களப்பணியாளர்களுக்கும், இல்லவாசிகளுக்கும் எனது இதயமார்ந்த குடியரசு தின நல்வாழ்த்துக்ள்.

திரும்ப வழியுண்டா?


கடந்த 2008-ம் ஆண்டு பயங்கரவாதத்தின் பல கோரமான வடிவங்கள் இந்தியாவின் பல இடங்களில் உயிர் சேதத்தையும், பொருள் சேதத்தையும் விளைவித்தன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஆனால் மக்களை பிளவு படுத்தி ஆதாயம் தேட நினைத்த பிரிவினை சக்திகளின் சதித்திட்டம் பலிக்கவில்லை. மாறாக மக்கள் தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்று ஒன்றுப்பட்டுள்ளனர். இது இந்திய இறையாண்மைக்கும், சுதந்திரத்திற்கும் கிடைத்த வெற்றி. நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் பொறுப்பில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக சிந்தித்து செயல்பட வேண்டிய நேரமிது. பாதுகாப்பு திட்டங்கள், செயல்பாடுகளை வகுக்கும் நிலையில் உள்ளவர்களையும், முக்கியமாக காவல்துறையின் பணிகளை நிர்வாகிப்பவர்களையும், சமுதாய நலம் விரும்பிகள் மற்றுமின்றி சாதாரண மக்களும் உன்னிப்பாக கவனிக்கின்றனர்.

பலர் உள்நாட்டு பாதுகாப்பு எவ்வாறு பலப்படுத்தப்பட வேண்டும் என்று தமது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். காவல் துறையை நவீனப்படுத்த வேண்டும் என்று பொது நல வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. சிலர் காவல்துறைக்கு நவீன ஆயுதங்கள் வாங்குங்கள் என்று அதற்கு நிதி உதவி செய்ய முன்வந்துள்ளனர். இத்தகைய பலதரப்பட்ட மக்களின் ஆதங்கங்கள் காவல்துறை மேலாண்மையை சிந்திக்க வைக்க வேண்டும்.

‘பழைய குருடி கதவை திறடி’ என்று மீண்டும் சலசலப்பு அடங்கிவிட்டது என்று காவல்துறை பழைய மெத்தன நிலைக்கு சென்று விடக்கூடாது. அதற்காக காவல்துறையில் உள்ள அனைத்து ஆளினர்களும் துப்பாக்கி எடுத்து கெண்டு துப்பாக்கி சுடும் பயிற்சியில் கடுமையாக இறங்குவதா? இல்லை பல விசேஷ ஆயுதப் படைகளை உருவாக்கி நமது தெருக்களை போர்க்களமாக மாற்றி மக்களை பயமுறுத்துவதா? பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் தேவையற்ற வேதனைகளுக்கு மக்களை உள்ளக்குவதா? சீரிய அணுகுமுறை இல்லை என்றால் ‘தொடை நடுங்கி’ நடவடிக்கையிலும் மருண்டவனுக்கு எல்லாம் இருட்டு என்ற நிலையில் எடுக்கப்படும் முடிவுகள் மேலும் குழப்பங்களைத்தான் விளைவிக்கும்.

காவல்துறை பணியில் இரண்டு விதமான சூழ்நிலை ஏற்படும். ஒன்று சாதாரண நாட்களில் அன்றாட பணி மற்றொன்று அவசரக் காலப்பணி. காவல்துறையின் எல்லாப் பணிகளும் அவசரக்காலப்பணி என்றாலும் ஆயுதம் ஏந்தி தாக்குதலில் ஈடுபடும் கிரிமினல்களை எதிர்கொள்ளும் காவல்துறையின் தயார்நிலை மிக உயர்ந்ததாக இருக்கவேண்டும். இந்த தயார் நிலையை எவ்வாறு ஏற்படுத்துவது அதைவிட முக்கியம் செயல்படுத்துவது பற்றி செயல்திட்டம் அமைப்பது அவசியமாகிறது.

பெரிய அளவில் சட்டம் ஓழுங்கு பிரச்சனைகள் ஏற்படும் தருணத்தில் அதிகமான காவலர்களை சம்பவ இடத்தில் ஈடுபடுத்தி நிலைமையை சமாளிப்பது எல்லா நேர்வுகளிலும் நாம் பார்க்ககூடிய நடவடிக்கை இதைத் தொடர்ந்து நிரந்தரமாக மேலும் காவலர்கள் வேண்டும் என்ற கோரிக்கை வைத்து காவல்துறையை விரிவுப்படுத்தும் அடுத்தக்கட்ட நடவடிக்கை நடைமுறையில் உள்ளது. இவ்வாறு திட்டமிடாது அசம்பாவிதங்கள் ஏற்படும் ஒவ்வொரு சமயத்திலும் காவல்துறையை விரிவுப்படுத்துவதால் பிரச்சனைகள் தீர்ந்துவிடுமா? சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் 16,000 காவல்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர் என்ற செய்தி வந்துள்ளது. இவர்களுக்கு எவ்வாறு பயிற்சியளிப்பது பயிற்சி கொடுப்பதற்கான கட்டமைப்புகளும், பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளர்களும் இருக்கின்றனவா என்பது தெரிவு செய்யாது பயிற்சி அளிப்பதா? இவற்றை செய்யாமல், ஆராயாமல் காவல்துறையின் எண்ணிக்கையைக் கூட்டிக் கொண்டு போனால் அத்தகைய ஆளினர்கள் விகிதக் கணக்கில் இருப்பார்களே தவிர அவர்களால் பயனுள்ள வகையில் வலிமை சேர்க்க முடியாது.

இராணுவத்தில் பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பதவி உயர்விற்கு பயிற்சித்துறையில் பணி செய்தது முக்கிய தகுதியாக கருதப்படுகிறது. அந்த அளவிற்கு காவல்துறையில் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பது உண்மை. இதற்கு முக்கிய காரணம் தேர்வு செய்யப்பட்ட பணியாளர்களை உடனடியாக களப்பணியில் அமர்த்த வேண்டும் என்ற அவசரம். பணியுடன் கூடிய பயிற்சி நடத்தப்படும் போது ஏதாவது ஒரு அவசரப் பணி சாக்கிட்டு காவலர்களை பயிற்சிக்கு அனுப்பாமல் இருப்பது காவலர்களின் செயல்திறன் குறைவதற்கு மற்றொரு காரணம்.

காவல்துறையில் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சில வருடங்களுக்கு முன்னால் ஆறு மாதங்களே இருந்த காவலர் பயிற்சி காலம் ஒன்பது மாத காலமாக உயர்த்தப்பட்டு மேலும் ஆளினர்களுக்கு களப்பணியிலும் பயிற்சி கொடுக்கப்படுகிறது. நீண்ட காலமாக விரப்பன் வேட்டையில் தமிழக காவல்துறை ஈடுபட்டிருந்ததால் வனப்பகுதியில் எவ்வாறு பாதுகாப்பு பணிசெய்யவேண்டும், கடினமான சூழ்நிலையில் கிடைத்ததை வைத்து தனது தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்ட இலக்கை அடைவதற்குரிய பயிற்சியும் முக்கிய அங்கமாக சேர்க்கப்பட்டுள்ளது. எந்த ஒரு நிலையிலும் அடிப்படைப் பயிற்சியின் தரத்தை தாழ்வடைய செய்யக் கூடாது.

சமீபத்தில் பெங்களூரில் முகமுது முகரம் என்ற இருபது வயது மாணவர் காவல்துறை சோதனையைக் கணடு பயந்து தவறாக இராணுவ குடியிருப்பு பகுதியில் நுழைந்து அங்கு பணியில் இருந்த இராணுவக் காவலரின் குண்டுக்கு பலியான பரிதாப சம்பவம் எல்லோரையும் உலுக்கியிருக்கும். இத்தகைய பாதுகாப்பு பிரிவுகளின் தேவைக்கு மீறிய செயல்கள் அபாயகரமானது. வாகனத் தணிக்கையை சரியாக செய்திருந்தால் இந்த நிகழ்வை தவிர்த்திருந்திருக்கலாம். துப்பாக்கி பிரயோகம் செய்ய வேண்டிய சூழ்நிலையிலும் குறைந்தபட்ச காயம் ஏற்படுத்தி தப்பிக்க முயன்றவரை செயலிழக்க வைப்பதுதான் முறை. கடைநிலை பணியாளர்களை குறை சொல்லி பயனில்லை. அவர்களை மேற்பார்வையிடும் அதிகாரிகள் சரியாக அறிவுறுத்த தவறியதாலும் செம்மையான பயிற்சி கொடுக்காததாலும் ஏற்பட்ட தவிர்த்திருக்க வேண்டிய சம்பவம் என்பது மறுக்க முடியாது. முக்கியமான பாதுகாப்பு பணியில் இருப்பவர்கள் தொடர் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். துப்பாக்கி சுடும் பயிற்சிக் கூடத்தையே பார்க்காதவர்கள் கூட எப்போதோ செய்த பயிற்சியின் அனுபவத்தில் துப்பாக்கி வைத்திருப்பது ஆபத்தானது. இதை கவனிக்கவேண்டிய பொறுப்பு மேற்பார்வையிடும் அதிகாரிகளையே சாரும்.

மேலும் நகரங்களில் ஆயுதம் ஏந்திய எதிரிகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பதே விசேஷ பணியில் ஒரு வகை. இத்தகைய நகர்புற எதிரெழுச்சியை எவ்வாறு கையாள வேண்டும் என்பது பற்றி ஈராக்கில் பணிபுரியும் அமெரிக்க தளபதி டேவிட் பெட்ரியாஸ் என்பவர் வகுத்த திட்டங்கள் இதற்கு முன்னோடியாக அமைந்துள்ளது. அத்திட்டங்கள் அறிவு சார் சமூகத்தின் பாராட்டுதல்களை பெற்றுள்ளது. நகர்புற எதிரெழுச்சியை முறியடிக்க தற்போதுள்ள அணுகுமுறையை மாற்றி அமைத்து அமெரிக்க ஜெனரல் தயாரித்த பயிற்சிக் கையேடு 2008-ம் வருடத்தின் தலைசிறந்த செயல்திட்டமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய செயல்திட்டங்களின் அடிப்படையில் சிறப்பு அணிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட வேண்டும்.
காவல்துறை மேம்படுத்த தகவல் சேகரிக்கும் முறை சீரமைக்க வேண்டும் என்ற கருத்தும் சொல்லப்பட்டுள்ளது. செயலாக்கக்கூடிய தகவல்கள்தான் பயனுள்ளவையாக அமையும். பொத்தம் பொதுவாக கூறப்படும் தகவல்களால் உரிய தடுப்பு நடவடிக்கை சாத்தியமாகாது. எந்தவொரு பெரிய சதித்திட்டமானாலும் செயல்படுத்தும் பொழுது உள்ளூர்வாசிகளின் உதவி நாட வேண்டி வரும். அவர்களும் பணத்துக்கு ஆசைப்பட்டு சதி வலையில் விழக்கூடும். இத்தகைய தகவல்கள் சேகரிப்பதற்கு அந்த சரக காவல் நிலையங்கள் முயற்சி எடுக்க வேண்டும். வெற்றிகரமாக மேலைநாடுகளில் செயல்படுத்தப்படும் ‘க்ரைம் ஸ்டாப்பர்ஸ்’ முறை மூலம் பயனுள்ள தகவல் சேகரிக்கலாம். இத்தகைய காவல்துறை பொதுமக்கள் கூட்டு முயற்சி இந்தியாவிலும் துவக்கப்படவேண்டும்.

மக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் காவல்துறையின் அமலாக்கம் வெற்றிகரமாக அமையும். சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் அதிகமாக உள்ள காவல் நிலையங்கள் உண்டு. அத்தகைய காவல்நிலையங்களில் சிறப்பாக செயல்படும் காவல்நிலைய அதிகாரிகளால்தான் நாட்டின் ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு நிலை கணிக்கப்படுகிறது. பணியில் கடினமான மதுரை சமயநல்லூர் போன்ற காவல்நிலைய அதிகாரி மேலதிகாரிகள் வரவின்றி நிலைமையை சமாளித்தால் அவர்தான் சிறந்த போலீஸ் அதிகாரி. இத்தகைய உதவி ஆய்வாளர் எல்லா பொதுமக்களின் நன்மதிப்பை நிச்சயம் பெற்றிருப்பார். அவரது அனுசரணையான அணுகுமுறையால் அப்பகுதி மக்கள் தாமே முன்வந்து தகவல் அளிப்பார்கள். ‘காவல்நிலையம் சென்று பழக்கமில்லை அங்கு சென்று முறையிட உதவுங்கள்’ என்று பலர் கூறக்கேட்டிருக்கிறோம். காவல்நிலையமும் ஒரு அரசு அலுவலகம். அதுவும் 24 மணிநேரம் மக்கள் பாதுகாப்பிற்காக இயங்கிக் கொண்டிருக்கும் சிறப்பு பிரிவு. அங்கு தயக்கமின்றி மக்கள் செல்லும் நிலையை ஏற்படுத்துவது அந்த நிலைய உதவி ஆய்வாளரின் முக்கிய பொறுப்பு. காவல்துறையினர் தமது பணிகளை நேர்மையாகவும் பாரபட்சமின்றி நிறைவு செய்தால்தான் மக்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாகலாம். இதற்கு லஞ்சம் என்ற கொடிய நோயை அறவே ஒழித்தால்தான் காவல் பணிகள் மெச்சப்படும். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று அன்றைய பணிகள் முடிந்தால் போதும் என்றளவில் மேலோட்டமான மேற்பார்வை நாளடைவில் காவல் துறைக்கும் சமுதாயத்திற்கும் பாதகமாக முடியும்.

திரும்ப வழியுண்டா என்றால் நிச்சம் உண்டு – திறம்பட பாதுகாப்பு உணர்வோடு சமுதாயத்தில் உள்ள எல்லா நிலைகளில் உள்ளவர்களும் செயல்பட்டால் நம்மிடையே பாதுகாப்பு உணர்வினை நிலைக்க செய்யவேண்டிய முக்கிய பொறுப்பு காவல்துறையினுடையது.
இந்த கட்டுரை தின மலர் நாளிதழில் 25.01.2009அன்று பிரசுரிக்கப்பட்டது

Wednesday, January 21, 2009

அமரிக்க ஜனாதிபதி பதவியேற்பு



நாள்:21.01.2009

திரு பாரக் ஓபாமா பதவியேற்பு விழாவை பார்த்த கோடிக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். மிக அற்புதமான எளிமையான விழா. Obama spoke extempore and what clarity of thought replete with punch lines! எல்லா நாட்டவரையும் கவரும் வகையில் எல்லா மத நல்லிணக்கத்திற்க்கு அடித்தளம் வகுக்கும் வகையில் அவரது பேச்சு அமைந்தது. The last speaker in his benediction said that black or blue or white all are equal! He also hoped that under the new President Black will be bright Yellow should mellow, Brown should stick around and white should respect Rights—this was indeed a loaded Message !

இந்த பேச்சு எல்லோரையும் பாதித்திருக்கும்.டாஸ்மாக் கடையே கதி என்று இருக்கும் நம்ம ஊர் பீட்டரின் புதுக்கவிதை எவ்வாறு இருக்கும்? ஒரு கற்பனை......

“ வாம்மா ஓபாமா வாம்மா ஓபாமா!
உலகம் இப்போ மப்புலமா
பேசாம உசுப்புமா
பேசினா உலுக்குமா
நாங்க எல்லாம் ப்ரொவ்னும்மா
உன் பின்னால ஒட்டிகினு வருவோம்மா
வாம்மா ஓபாமா வாம்மா ஓபாமா!”

Tuesday, January 20, 2009

பார்த்தேன் படித்தேன் ரசித்தேன்



சென்னையில் மார்கழி மாதம் என்றாலே கர்நாடக இசையும், திருப்பாவை, திருவெம்பாவை, தமிழிசைதான் ஞாபகம் வரும். மார்கழி கடைசியில் வருடா வருடம் நடத்தப்ப்டும் புத்தகக் கண்காட்சியையும் இப்போது சேர்த்து கெள்ள வேண்டும். ஸ்பென்சர்ஸ் எதிரில் உள்ள கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும். தற்போது சில வருடங்களாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. வண்டிகளை பார்க் செய்ய வசதியான இடம்.


யார் சொன்னது படிப்பவர்கள் குறைந்து விட்டார்கள் என்று? சிறுவர், சிறுமியர், பெரியோர்கள், பெண்கள், இளைஞர்கள் என்று பலதரப்பட்ட கூட்டம். ஆன்மீகம், பக்தி இலக்கியம், சங்க இலக்கியம், புதிய வார்ப்புகள், பாடப் புத்தகங்கள் என்று எல்லாவிதமான புத்தகங்களும் கொட்டிக் குவிந்துள்ளன. பதிப்புதுறையில் தொழில் நுட்பத்தின் வரவேற்கத்தக்க ஆதிக்கத்தை காணமுடிந்தது. அவ்வளவு நேர்த்தியான கண்ணுக்கு இதமான பதிப்புகள், புதிய புத்தகங்களை தொட்டு புரட்டி ‘random’ ஆக ஏதோ ஒரு பக்கத்தைப் படிப்பதில் அலாதி இன்பம். ஆனால் அந்த இன்பத்தை இங்கு சுவைக்க முடியாது. அவ்வளவு நெரிசல். சிறையில் உள்ள இல்லவாசிகளுக்கு உபயோகமாக தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய புத்தகங்கள் நிறைய வாங்கினேன். Light from different lamp அப்துல் கலாம் அவர்கள் முன்மொழியும் புத்தகத்தை தேடி அலைந்தேன். கடைசியில் அது புக்பாய்ண்ட் பதிப்பகத்தில் எஞ்சிய இரண்டு பிரதிகளை வாங்கினேன். மூர் மார்கெட்டில் பழைய புத்தகக் கடையில் பல வருடங்களுக்கு முன்னால் அவர்கள் வாங்கியதாகவும் அப்புத்தகம் இப்போதும் தன்னை ‘Inspire’ செய்வதாகவும் அவர் கூறியது என்னை இப்புத்தகம் வாங்கத் தூண்டியது. “புல்லுக்கும் அங்கே புசியுமாம்” என்று சுவைக்கிறேன். புத்தகங்களை சுவைக்க நேரம் ஒதுக்கவேண்டும். One of my most important new year resolution!.
_________


Tuesday, January 6, 2009

SAFEGUARDING LIFE, LIBERTY,EQUALITY AND DIGNITY

Quality of mercy is twice blessed, it blesses the giver and the one who takes is the Shakespearian dictum. Ironically corruption also benefits the bribe giver and the one who takes, which explains the efficiency of this well oiled machine. Next only to the oldest profession malaise of corruption has held its tentacles from time immemorial. Corruption in administration is fatal to economic growth and its spread in enforcement agencies particularly Police promotes crime and erodes rule of law. Kautilya in his famous treaty Arthasastra has very succinctly stated that “just as it is difficult to say when the fish moving in water is drinking it in the same way it is impossible to find out when the government servant entrusted with responsibility is misusing it and misappropriating government money”.

The Central Vigilance Commission is the apex vigilance institution established by the government in February 1964 on the recommendation of the Santhanam Committee on Prevention of Corruption. The Central Vigilance Commission Act was passed by the Parliament in 2003 giving CVC a legal status. Every year Central Vigilance Commission gives direction for observance of Vigilance Week and since 2000 this is observed from 31st October to coincide with the birthday of Iron Man of India Sardar Vallbabhai Patel.

Police plays an important role in maintaining order in society. Impartiality and strict adherence to law, established laid down procedures should guide its action. Corruption in Police service can well be considered a violation of Human rights as it definitely impinges on the four pillars of Human rights namely Life, Liberty, Equality and Dignity.

Mutually harmful

In any corrupt dealing there is the bribe giver and the bribe taker. The bribe giver who wants to get round the system with his money power is equally responsible for the corrupt conduct of the public servant.
There are three categories of public servants. The first consists of the honest officers, the second those who are inclined to corruption but restrain themselves for fear of consequences and the third rashly corrupt. Unfortunately the second and third categories are getting amalgamated into one category.

When there is transgression from accepted and expected norms of conduct on the part of public servant the system gets irreversibly damaged. Policing has become complex given the present socio economic scenario where every powerful group in society is vying with each other to get a foothold. In view of this it is all the more necessary that policemen perform their duties with impeccable honesty. Government has given direction that prominent board should be displayed in government offices encouraging public to give information about corruption. It is important that such ‘whistle blowers’, persons who furnish information are duly protected and their identity is not divulged. This is exactly what is envisaged in Government of India ‘Resolution on public interest disclosure and protection of informer’ issued in April 2004.

Anti-corruption models

People who lament about corruption are only too happy to jump the system for their own personal gain. Civil Society should play an important role in weeding out corruption. The Hong Kong model of fighting corruption where a partnership approach was adopted to mobilise all sectors in society namely Government departments, Business community, Professional bodies, Educational institutions, Mass media, and community organization, is worthy of adoption for a unified fight against corruption.

In the fight against Corruption it is important that senior officials conduct themselves beyond reproach as otherwise they will have no moral courage to deal with deviant subordinates. There is unhealthy nexus between corrupt subordinates and unscrupulous seniors and this has to be broken. This can be achieved only if officers of unimpeachable integrity are posted in sensitive positions. There are innumerable instances where one honest officer has made all the difference and the message goes right across.

“For evil to triumph it is enough if good people do nothing”. The magnitude of the problem should not lead to helplessness. We cannot resign ourselves that the phenomenon is inevitable. The inevitable becomes intolerable the moment it is perceived as no longer inevitable. Ethics in the conduct of day to day dealings should be given high priority.

- Published in The Hindu (Open page) on 04.01.2009

Friday, January 2, 2009

வி.ஒ.பி பாதுகாப்பு


பாதுகாப்பு நடவடிக்கையை சுருக்கமாக இரண்டு வார்த்தைகளில் அடக்கிவிடலாம் “கைகளை கண்காணிப்பது” – “ஹாண்ட் வாட்சிங்”. எந்த ஊரில், யாரால் சதி திட்டம் வகுக்கப்பட்டாலும் அதை செயல்படுத்த குறிப்பிடப்பட்ட இடத்தில் தீவிரவாதிகளோ, அவர்களது உள்ளூர் கூட்டாளிகளோ களத்தில் இறங்க வேண்டும். தமது கைகளை உபயோகித்துத்தான் சேதங்கள் விளைவிக்க முடியும். ஆதலால் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீஸார் சந்தேகிக்கும் வகையில் நடமாடும் நபர்களை தெரிவு செய்யுங்கள், அவர்களது கைகளை கவனியுங்கள் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

எந்த ஒரு இடத்தில் பாதுகாப்பு எற்பாடு செய்ய வேண்டும் என்றாலும் அதை மையமாக வைத்து அந்த இடத்தை சுற்றி பாதுகாப்பு வடிகால்கள் அமைக்கப்படுகின்றன. இதன் முக்கிய நோக்கம் சம்பந்தம் இல்லாத நபர்களோ, பொருட்களோ சந்தேகிக்கக் கூடிய மனிதர்களோ பாதுகாப்பு மையத்திற்குள் வந்துவிடக் கூடாது என்பதுதான். முக்கிய நபர் பாதுகாப்பிற்க்காக கையாளப்பட்ட இம்முறை சென்னை மாநகரில் 2004-ல் இருந்து பொது இடங்களிலும் மக்கள் பாதுகாப்பிற்காக செயல்படுத்தப்பட்டது. அந்தந்த இடங்களின் முக்கியத்துவத்தை வைத்து பாதுகாப்பு வளையங்கள் அமைக்கப்படுகின்றன. ஒரு இடத்தின் சுற்றளவு பாதுகாப்பு, வாகன தணிக்கை, தனி நபர் சோதனை என்று குறைந்தபட்சம் மூன்று அடுக்கிலிருந்து முக்கியத்துவத்திற்க்கு ஏற்றாற்போல் பல அடுக்கு பாதுகாப்பு வளையங்கள் அமைத்தல் என்ற முறை அமல்படுத்தப்பட்டது. போலீஸார் பாதுகாப்பு வளையங்கள் அமைப்பது என்பது இப்போது வழக்கில் வந்துவிட்டது.

நவம்பர் 26 மும்பாய் நிகழ்வுகள் பலவிதத்தில் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சில துப்பாக்கி ஏந்திய தற்கொலை படையினர் எந்த அளவிற்கு சமுதாயத்தை நிலைகுலைய செய்யமுடியும் என்பதை உணர்த்தியுள்ளனர். இந்த வருடம் 59 தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது. அதில் எதிலும் சம்மந்தப்படாத 441 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். மத்திய உள்துறையின் இணைய தளத்தில் கொடுக்கப்பட்ட கணக்குபடி 2004-ல் இருந்து சுமார் 7000 உயிரிழப்புகள் இம்மாதிரி தீவிரவாத தாக்குதலால் நிதழ்ந்துள்ளன. இம்மாதிரியான தாக்குதல்களை சமாளிக்க முடியாத ‘கையாலாகாத நாடாக’ மாறி வருகிறதா என்று பல சிந்தனையாளர்களும், நாட்டு நலம் விரும்புவர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த வருடம் தொடர் குண்டு வெடிப்பு பெங்களூரு, உத்திரபிரதேசம், ஜெய்பூர், தில்லி, அஸ்ஸாம், மும்பாய் என்று அடுத்தடுத்து நடந்துள்ளது. பாதுகாப்பு பிரிவினர் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்க தவறியதால் ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லாமல் இல்லை. உத்திரபிரேதச மாநிலத்தில் கோவில் வளாகங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் பிடிப்பட்ட குற்றவாளிகளிடமிருந்து மும்பையில் தீவிரவாதிகளின் தாக்குதல் திட்டம் பற்றிய தகவல் கொடுக்கப்பட்டது என்று உத்திரபிரதேச போலீஸார் கூறியுள்ளனர். பிடிபட்ட தீவிரவாதிகளிடமிருந்து மும்பையின் முக்கியமான வியாபார தளங்களின் வரைபடங்களும் கைபற்றப்பட்டன. மேலும் கடல் வழியாக தீவிரவாதிகள் மும்பையை ஊடுருவக் கூடும் ஆதலால் கடலோரப் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் என்ற தகவலும் கொடுக்கப்பட்டது. ஆனால் சரியான தடுப்பு நடவடிக்கை எடுக்க மாநில அரசு தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

‘எட்வர்ட் லுட்வார்க்’ என்ற பத்திரிக்கையாளர் மும்பாய் பயங்கரம் பற்றிய குறிப்பில் எவ்வாறு காவல்துறை செயலிழந்தது என்பதை கடுமையாக விமர்சித்திருக்கிறார். இதே மாதிரி நிகழ்வு லண்டனிலோ, இஸ்ரேல் நாட்டிலோ நிகழ்ந்தால் உள்ளூர் காவல்துறையினரும், மீட்பு பணியினரும் உடனடியாக களத்தில் இறங்கி பயங்கரவாதிகளை முறியடித்திருப்பார்கள். ஆனால் மும்பாய் போலீஸாருக்கு இத்தகைய தாக்குதலை சமாளிக்க ஆயுதமும், பயிற்சியும் இல்லை. ஏதோ கடனே என்று ரோந்து சுற்றிக் கொண்டு ஊழலில் உழலும் காவல்துறை பயங்கரவாத தாக்குதல் என்ன சாதாரண தாக்குதலைக்கூட சமாளிக்க பயனற்றவர்கள் என்று சாடியிருக்கின்றார். முக்கியமாக சம்பவ இடத்தை பாதுகாக்காமல் எல்லோரையும் அனுமதித்து அந்த இடம் ஏதோ திருவிழா போல காட்சி அளித்தது, காவல்துறையின் மெத்தனப் போக்கையும், செயல் திறனற்ற நிலையையும் உணர்த்தியது மறுப்பதற்கில்லை. களத்தில் இறங்கிய தீவிரவாதிகள் சுமார் 5000 மக்களை பலி கொள்ள வேண்டும் என்ற திட்டத்தோடு வந்தனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 5000-த்துக்கும் மேற்பட்டவர்கள் சம்பவம் நடந்த தெருக்களிலேயே குழுமியிருந்தனர். தீவிரவாதிகள் கவனம் வேடிக்கை பார்த்த பொதுமக்கள் மீது திரும்பியிருந்தால் விளைவுகள் எவ்வளவு பயங்கரமாக இருந்திருக்கும். தீவிரவாதிகள் தங்கள் இலக்கை அடைவது மட்டுமின்றி எளிதாக தப்பியும் இருக்கலாம் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

இந்தியாவின் முக்கியமான வணிக நகரமான மும்பையிலேயே இந்த நிலை என்றால் மற்ற மாநகரங்களிலும் காவல் துறையினர் எந்த அளவில் தயார் நிலையில் இருப்பார்கள் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அயோத்தியா பாபர் மஸ்ஜித் நிகழ்வுக்குப் பிறகு தொடர்ந்து அசம்பாவிதங்கள் இந்தியாவில் பல இடங்களில் நிகழ்ந்தும் அதை எதிர் கொள்வதற்கான முயற்சிகள் பயனளிக்கவில்லை என்பது நிதர்சன உண்மை. 1992-93-ல் மும்பாயில் நடந்த கலவரங்களுக்கு பின்பும் முதல் தாக்குதலை எதிர்கொள்ளக் கூடிய கமாண்டோ படை மும்பையில் உருவாக்கப்படவில்லை. பலதரப்பட்ட அரசுத்துறைகளை கொண்ட அவசர நிலை குழு செயல்படவில்லை.

தமிழகத்திலும் இம்மாதிரி தாக்குதல்கள் நிகழாமலில்லை. 1984-ல் சென்னை விமான நிலையத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 33 பயணிகள் உயிரிழந்தனர். ஸ்ரீபெரும்புதூர் குண்டு வெடிப்பில் தேசியத் தலைவர் உள்பட பல திறமையான காவல்துறை அதிகாரிகளும் பலியாயினர். ஆனால் இந்த தொடர் சம்பவங்களுக்குப் பிறகு கடலோரப் பாதுகாப்புப்படை அமைக்கப்பட்டது. தமிழகம் 1086 கிலோ மீட்டர் கடற்பகுதி கொண்டது. இந்தியாவின் மொத்த கடற்பகுதியின் நீளம் 7516.6 கிலோ மீட்டர். தமிழக கடற்பகுதியில் 105 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் உள்ளன. 50-க்கும் மேற்பட்ட காவல் தணிக்கை மையங்கள் எண்ணூரிலிருந்து கன்னியாகுமரி வரை கடலோர சாலைகளில் அமைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் கடலோரப் பாதுகாப்பிற்காக 12 கடலோரக் காவல் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கடலோர பாதுகாப்புப் பிரிவினருக்கு ஆழமில்லா கடற்பகுதியில் எவ்வாறு கண்காணிக்க வேண்டும் என்பதற்காக பிரத்யேக பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்திய கடற்படை, மத்திய கடலோர பாதுகாப்பு பிரிவு, டி.ஜி.பி அந்தஸ்த்தில் உள்ள அதிகாரியின் தலைமையில் தமிழக கடலோர பாதுகாப்புப் படை என்று மூன்று அடுக்கு பாதுகாப்பு தமிழகத்தில் செயல்படுகிறது. ஆழமில்லா பகுதிகளில் ரோந்து செல்வதற்கு ஏதுவாக மிதவை படகுகளும் வர உள்ளன. முழுமையான கடலோர பாதுகாப்புப் படை கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடு ஒன்றுதான். மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது.

இதே போன்று அசாதாரண தாக்குதல்களை எதிர்கொள்வதற்கு சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோ பிரிவு 1996-ம் வருடம் துவக்கப்பட்டது. வெடி மருந்துகளை கண்டுபிடித்து செயலிழக்கச் செய்யும் முன்னாள் இராணுவ வீரர்களைக் கொண்ட சிறப்புப் பிரிவும், பயிற்சி அளிக்க கமாண்டோ பள்ளியும் தமிழகக் காவல்துறையில் துவக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சிறப்பு படையினருக்கு நவீன துப்பாக்கிகளும், குண்டு துளைக்காத கவசங்களும் எல்லாவற்றிற்கும் மேலாக வீரத்தோடும், துணிவோடும் எதிர்கொள்ளும் சிறப்புப் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தொலை நோக்குப் பார்வையோடு செயல்பட்டு தமிழகக் காவல் துறை தயார் நிலையில் உள்ளது. தமிழக காவலர் போர்க்கால அடிப்படையில் பணி செய்யக்கூடிய செயல் திறமையும் நுண்ணிய அறிவும் பெற்றவர் என்பதில் பெருமை கொள்ளலாம்.

மும்பாய், தில்லி, ஜெய்ப்பூர், அகமதாபாத் நகரங்களில் நடந்த அசம்பாவிதங்களுக்குப் பிறகு பாதகமான மதம் சார்புடைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கப்பட்டன என்பதிலும், நடைபெறவில்லை என்பதிலும் ஒரளவு திருப்தி அடையலாம். இது சாதாரண மக்களின் முதிர்ச்சியான மனநிலையை காண்பிக்கின்றது. மக்கள் அமைதியையே விரும்புகிறார்கள். மக்களை பிளவுபடுத்த நினைத்த கலகக்காரர்களின் குறிக்கோள் வெற்றியடையவில்லை மாறாக தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்ற ஒருமித்த எண்ணம் பரவியுள்ளது வரவேற்புக்குரியது. பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் ஒருமித்த கருத்து நிலவ வேண்டும். பயங்கரவாதத்திற்கு காவி, பச்சை, சிவப்பு என்று சாயம் பூசுவது அபாயமான அணுகுமுறை. வெளிஉலக புலனாய்வு பிரிவாகிய “ரா” என்ற அமைப்பை உருவாக்கிய திரு.ராம்நாத்காவ் அவர்கள் பயங்கரவாதியும், பயங்கரவாதமும் தனிமைப்படுத்தி களையப்பட வேண்டியவை என்பதை தெளிவாகக் கூறியுள்ளார்.

சமுதாயத்தில் உள்ள பல பிரச்சனைகள் முக்கியமாக சாதி, மதபூசல்கள், சிறுபான்மையினரின் குறைகள், பெருவாரியான மக்களின் அடிப்படை வசதிகள், குழந்தைகளை தொழிலில் ஈடுபடுத்துதல், மலைவாழ் மக்களின் பிரச்சனைகள், கொத்தடிமை முறை, இடைத்தரகர்களின் கடன் தொல்லையில் தவிக்கும் ஏழை விவசாயிகள் போன்றவை பின்னால் பயங்கர விளைவுகளுக்கு வித்திடும் பிரச்சனைகள். எல்லா நிலையில் உள்ளவர்களும் ஒருங்கிணைந்து இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
சர்வநேர கண்காணிப்பே சுதந்திரத்திற்க்கு நாம் கொடுக்கக் கூடிய விலை. பாதுகாப்பு சோதனையால் ஏற்படும் தாமதத்தை மக்கள் பொருட்படுத்தவில்லை மாறாக ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். நமது மக்கள் எளிமையானவர்கள் மற்ற நாட்டினரைவிட நமக்கு சகிப்புத்தன்மையும் கடினங்களை தாங்கும் மனப்பக்குவமும் அதிகம். இத்தகைய நல்லுள்ளம் படைத்த மக்களின் பாதுகாப்பிற்கு முதலிடம் கொடுக்க வேண்டும். பொதுஜன பாதுகாப்பு காவல்துறையின் தலையாய கடமை என்ற அளவில் செயல்படவேண்டும்.

முக்கிய நபர் பாதுகாப்பு தவிர்க்க முடியாதது. தவிர்க்கவும் கூடாது. ஆனால் தனி நபர் பாதுகாப்பு முகாந்திரம் இன்றி கொடுப்பதும், அத்தகைய பாதுகாப்பு தனி நபரின் அந்தஸ்தின் குறியீடு என்று கருதும் நிலை மாற வேண்டும். வி.ஐ.பி. மட்டுமல்ல வி.ஓ.பி-க்களுக்கும் (வெரி ஆர்டினரி பர்ஸன்ஸ்) பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்போம்.

இந்த கட்டுரை தினமணி நாளிதழில் 02.01.2009 அன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது