Thursday, April 2, 2009

நெட்டை மரங்களாய்.....




பாரதியாரின் காவியக் கவிதை பாஞ்சாலி சபதத்தில் ஒரு காட்சி – துச்சாதனன் திரௌபதியின் நீண்ட கூந்தலைப் பிடித்து அரசவைக்கு இழுத்துக் கொண்டு வருகிறான். வழி நெடுக மக்கள் கூக்குரலிடுகிறார்கள். ஆனால் கொடூரர்கள் முன்பு செய்வதறியாது திகைக்கின்றனர். பாரதியார் இதை அழகாக


“நெட்டை மரங்களாய் நின்று புலம்பினர்
பெட்டை புலம்பல் பிறர்க்கு துணையாமோ”


என்று மக்களின் கையாலாகாத மனநிலையை நிந்திக்கிறார். சமீபத்தில் இமாசலப் பிரதேச மாநிலத்தில் ராஜேந்திர பிரசாத் மருத்துவக் கல்லூரியில் அமன் கச்ரூ என்கிற மாணவன் ராகிங் என்ற கொடூர நிகழ்வில் கொல்லப்பட்டது எல்லோருடைய நெஞ்சை உலுக்கியது. பல வருடங்களுக்கு முன்பு சென்னை மாநகரில் சரிகா ஷா என்ற இளம் மாணவி நவீன துச்சாதனன்களின் இழிசெயலால் உயிரிழந்தது மறந்திருக்க முடியாது. தொடர்ந்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் ‘ராகிங்' என்று புதுமுக மாணவர்களை விளையாட்டாக கேலி செய்து வரவேற்கும் முறை விபரீத கொடுமையாக மாறிவருவதும், நாமும் ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்த்து புலம்புவதும் வாடிக்கையாகிவிட்டது.

1996-ம் வருடம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரியில் நாவரசன் என்ற பச்சிளம் மாணவன் ராகிங் கொடுமைக்கு உள்ளாகி பயங்கரமாக சில மூத்த மாணவர்களால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்த பிரச்சனை சமுதாயத்தின் மையத்தில் விசுவரூபம் எடுத்தது. புதுமுக மாணவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் சிதைவு சீண்டலை களைவதற்காக தமிழ்நாட்டில்தான் முதலில் 1997-ம் வருடம் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி மாணவர் வதையில் ஈடுபடுபவர்களுக்கு இரண்டு வருட சிறைத் தண்டனை, பத்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவும், குற்றம் புரிந்த மாணவரை நிரந்தரமாக நீக்கவும் இடம் உள்ளது. தமிழகத்தை சேர்த்து ஆறு மாநிலங்கள்தான் பிரத்யேக சட்டத்தை இயற்றியுள்ளன. இளைஞர் அமன் கச்ரூ இறந்த சம்பவம் நிகழ்ந்த இமாசல பிரதேசத்தில் இத்தகைய சட்டம் நிறைவேற்றப்படவில்லை என்பது வருந்தத்தக்கது. இப்போது ராகிங் குற்றவாளிக்கு மூன்று வருடம் தண்டனையும், ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் அவசரச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.


உச்சநீதி மன்றம் விஷ்வ ஜாகிரிதி மிஷன் தொடுத்த வழக்கில் மே 2001-ல் ஒரு முக்கிய தீர்ப்பு ராகிங் கொடுமைக்கு எதிராக வழங்கியது. இந்த தீர்ப்பில் கல்வி நிர்வாகம், அரசு அமைப்புகள் எவ்வாறு இணைந்து இந்த பிரச்சனைக்கு முடிவு காண வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆயினும் இதே பிரச்சனை 2006-ம் ஆண்டு கேரளா பல்கலைக் கழகம் (எதிர்) கல்லூரிகள் கூட்டமைப்பு வழக்கின் மேல் முறையீட்டிலும் உச்ச நீதிமன்ற கவனத்திற்கு வந்தது. இந்த வழக்கில் 2001-ம் வருடம் வழங்கிய தீர்ப்புகள் சரியாக நடைமுறைபடுத்தாததற்கு கண்டனம் தெரிவித்து ராகிங் என்ற சிதைவுச் சீண்டல் முறையை ஒழிப்பதற்கு கூராய்வு மேற்கொள்ள முன்னாள் சி.பி.ஐ இயக்குனர் திரு.ராகவன் தலைமையில் கமிட்டி அமைக்க உத்தரவிட்டது.

மத்திய அரசு உச்ச நீதி மன்றத்தின் ஆணைக்கு இணங்க திரு.ராகவன் தலைமையில் ஏழு அங்கத்தினர்கள் கொண்ட குழுவினை அமைத்து ஆணையிட்டது. கல்வி மையங்களில் புதுமுக மாணவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைப் பற்றி ஆராய்ந்து அதைக் களைவதற்கான நெறிமுறைகளை வகுக்கவும் இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு நடைமுறைப்படுத்தவும் இந்தக் குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இந்தக் கமிட்டி இந்தியாவில் முக்கிய நகரங்களான மும்பை, தில்லி, ஹைதராபாத், சென்னை, பங்களூரு, லக்னோ, கொல்கத்தா, கொச்சி போன்ற இடங்களுக்கு சென்று வெளிப்படையான விசாரணை மேற்கொண்டது.


விசாரணையின் ஒரு அங்கமாக கேள்விப் பட்டியல் தில்லி பல்கலைக் கழக மனோதத்துவ பேராசிரியர் அருண் ப்ரூட்டா உதவியோடு தயாரித்து, யூ.ஜி.சி அங்கீகாரம் பெற்ற எல்லா கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டது. பெரிய அளவில் சுமார் 12,500 பதில்களும் பெறப்பட்டன. இதைத் தவிர பல தனியார் தொண்டு அமைப்புகளுடனும் கலந்து அவர்களது ஆலோசனையும் பெற்று கமிட்டி தனது முடிவான பரிந்துரையை மே மாதம் 2007-ம் வருடம் சமர்ப்பித்தது.


கமிட்டி நடத்திய கலந்தாய்வில் பல யோசனைகள் சொல்லப்பட்டன. சிலர் புதுமுக மாணவர்களை முதலில் கல்லூரிகளில் சேர்த்து அவர்கள் புதிய சூழ்நிலைக்கு பரிச்சியமான பிறகு மூத்த மாணவர்களுக்கு வகுப்புகள் துவக்கினால், இளநிலை மாணவர் மூத்த மாணவர்களை எதிர்கொள்ளும் பக்குவம் பெறுவர் என்ற யோசனை கூறப்பட்டது. பலர் தங்களது கசப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். ‘ராகிங்’ ஆரோக்கியமான முறையில் செய்தால் இந்நாள், முந்நாள் மாணவர்களிடையே நல்லிணக்கம் எற்படும் என்றும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. இந்த கமிட்டி முக்கிய பரிந்துரையாக ராகிங்கை ஒழிப்பதற்கு சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் முதன்மை பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் ராகிங் பற்றியும் அதை வைத்து இழைக்கப்படும் இன்னல்கள், அதனால் ஏற்படும் மனித உரிமை மீறல்கள், இவைகளை பாடரீதியாக மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பது மற்றொரு பரிந்துரை.


மாணவர்களிடம் ராகிங் முறைக்கு எதிரான விதிகள் பட்டியலைக் கொடுத்து அதில் உள்ளவற்றை புரிந்து கொண்டு நடப்பதாக உறுதிமொழி ஒவ்வொரு ஆண்டும் கல்வி நிறுவனம் வாங்க வேண்டும். உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி மையங்களில் ராகிங் கொடுமை அதிகமாக இருப்பதுமட்டுமல்லாது கல்வியின் தரத்தை ராகிங் கலாச்சாரம் வெகுவாக பாதிக்கிறது என்று கமிட்டியின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆதலால் விதிமுறைகளை சரியாக அமல்படுத்தாத கல்வி நிறுவனம் மீது அங்கீகார மறுப்பு அல்லது பறிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
மாணவர் சிதைவுச் சீண்டலைத் தடுக்க ஊடகங்கள் மூலம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தவும்; ராகிங் தடுக்கும் கமிட்டிகள் கல்வி நிறுவனங்களில் அமைக்கப்பட வேண்டும். இக்கமிட்டிகளில் ‘தாதாக்களாக’ திரியும் மாணவர்களையும் அமர்த்தி அவர்களுக்கு பொறுப்புணர்ச்சி உண்டாக்க முடியும். எல்லாவற்றிலும் முக்கியமாக ஒரு நிகழ்வு நடந்தால் கல்வி நிறுவனம் உடனடி விசாரணை நடத்தி அதில் உண்மை இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய தண்டனை சட்டத்தில் ராகிங் கொடுமைக்கு பிரத்யேக தண்டனை விதிக்கக்கூடிய பிரிவுகள் சேர்க்கப்பட வேண்டும் என்றும் கமிட்டி பரிந்துரையில் கூறியுள்ளது. உச்ச நீதிமன்றமும் கமிட்டியின் பரிந்துரையை ஏற்று அவை நடைமுறைப்படுத்த கண்காணிப்புக் குழுக்கள் வெவ்வேறு நிலையில் அமைக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இத்தகைய தீர்க்கமான தீர்ப்பிற்கு பின்பும் ‘ராகிங் எமன்’ அமன் கச்ரூவை பலி கொண்டான்.


சட்டங்களும், விதிமுறைகளும் நன்றாக அமைக்கப்பட்டு ஏட்டளவில் உள்ளன, நடைமுறையில் உள்ளனவா என்பது கேள்விக்குறி என்பது நமது நாட்டில் பல கட்டங்களில் மெய்ப்பிக்கப்படுகிறது. இதற்கு முன் உதாரணம் ராகிங்கிற்கு எதிராக உள்ள விதிகள் சரியாக நடைமுறைப்படுத்தாதது ஒன்றே போதும். அமன்கச்ரூவின் பெற்றோர்கள் இந்தக் கொடுமைக்கு எதிராக சமுதாயத்தில் ஆக்கப்பூர்வமான வகையில் செயல்பட வேண்டும் என்று உறுதி கொண்டுள்ளதாகவும், தனது மகனுக்கு நடந்த கொடுமை வேறு எந்த இளைஞருக்கும் நிகழக்கூடாது, இந்தக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க அவனது மரணம் உதவட்டும் என்று நெஞ்சுருக அறிவித்துள்ளனர்.


ஏன் இவ்வாறு மனிதன் நோக மனிதன் பார்த்து கொடுமையில் இறங்க வேண்டும்? கொடுமைக்கு உள்ளான புதுமுக மாணவன் ஏன் அடுத்த வருடம் அதே கொடுமையை மற்ற புதிய மாணவர்களிடம் நடத்த வேண்டும்? ஒருவர் மீது மற்றொருவர் ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மையை நமது சமுதாய சூழல் வளர்க்கிறது என்பது ஒரு காரணமாக இருக்கலாம். இல்லங்களில் பெற்றோர்களின் ஆதிக்கம், பள்ளியில் ஆசிரியர்களின் ஆதிக்கம் பொது இடங்களில் அரசு ஊழியர்களின் ஆதிக்கம் என்று இந்த ஆதிக்கத்தின் பாதிப்புதான் மூத்த மாணவர் இளைய மாணவரிடம் தனது ஆதிக்கத்தை செலுத்த தூண்டுகிறது என்பது ஒரு கணிப்பு.


இந்திய தொழில் நுட்பக் கல்லூரிகளில் கடினமான தேர்விற்குப் பிறகுதான் சேரமுடியும். அத்தகைய உயர்கல்விக் கூடங்களில் புதுமுக மாணவர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்ற உண்மை நிகழ்வுகள் பல உண்டு. பொதுவாகவே கல்லூரிகளில் போதைப் பொருள் நடமாட்டம் உள்ளது என்பது உண்மை. அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரி முதல்வர் தனது கல்லூரி மாணவர்கள் நல்லவர்கள், நல்லொழுக்கம் கொண்டவர்கள் என்று முதலில் நினைத்ததாகவும், முதல்வராக கல்லூரியை நிர்வகிக்கும் போதுதான் எண்ணற்ற மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி அதனால் மற்ற மாணவர்களை வதைக்கும் கலாச்சாரம் ஊடுருவியுள்ளதைப் பற்றியும் விவரிக்கின்றார்.


நமது கல்லூரிகளிலும் போதைப் பொருள், டாஸ்மாக் ஆதிக்கம் இல்லாமல் இல்லை. இவைதான் மாணவர்களை வன்முறையில் இறங்கத் தூண்டுகின்றன என்பது கொடுமைப்படுத்தும் மாணவர்கள் போதையில் தங்களை சித்ரவதை செய்ததாக புதுமுக மாணவர்களின் அனுபவங்கள் பறைசாற்றுகின்றன.
கடந்த பத்து ஆண்டுகளில் மாநிலங்கள் எல்லாவற்றையும் சேர்த்து சுமார் 200 சிதைவுச் சீண்டல் வழக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் ஒன்பது வழக்குகள் அதிகபட்சமாக உத்திரப்பிரதேசம், ஆந்திர மாநிலங்களில் தலா 22 வழக்குகள் போடப்பட்டுள்ளன. வழக்குகள் ஒரு பக்கம் போடப்பட்டாலும் கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.


அமெரிக்க பல்கலைக் கழகங்களில் உள்ள கல்லூரிகளில் புதுமுக மாணவர்களை வதைக்கும் பழக்கம் இல்லை என்று கூறப்படுகிறது. அதற்குக் காரணம் அங்குள்ள இளைஞர்கள் மனநிலையில் முதிர்ச்சி பெற்றவர்களாக கல்லூரிக்கு வருகிறார்கள். பழைய மாணவர்களும் புதியவர்களுக்கு தேநீர் விருந்து கொடுத்து வரவேற்று கருத்து பரிமாற்றம் செய்து ஒருவருக்கொருவர் பக்கபலமாக இருக்கிறார்கள். அதிகம் செலவழித்து படிக்க வேண்டியிருக்கிறது. அந்த செலவிற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டு வேலை பார்க்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. ஆனால் நமது நாட்டில் அந்த நிலை இல்லை. கல்விக்கான பெரும் செலவு எந்த அளவிலும் குறைந்தது இல்லை. பெற்றோர்கள் முதலீடு செய்ய வேண்டிய நிலை. இருக்கிற நிலபுலன்களை விற்றாவது தமது செல்வங்களை படிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வம் போற்றத்தக்கது. அதற்கேற்றவாறு மாணவர்களிடமும் பொறுப்பு வளர வேண்டும். வளர்க்க வேண்டியது நமது கடமை. நெட்டை மரங்களாக பெட்டைப் புலம்பலைத் தவிர்த்து ஆக்கப் பூர்வமாக இளைய சமுதாயத்தினரிடம் நல்லியல்புகளை வளர்ப்போம். பெயரளவில் இல்லாமல் செயல் அளவில் ‘அடிபிடி’ அடாவடித்தனக் கலாச்சாரத்தைத் தவிர்த்து நாம் முன்மாதிரியாக நடப்போம்.


இந்த கட்டுரை தினமணி நாளிதழில் 02.04.2009 அன்று பிரசுரிக்கப்பட்டது

No comments: