அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா அவர்களின் பதவியேற்பு உரை உலகத் தலைவர்களின் சிறந்த சொற்பொழிவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அறுபது ஆண்டுகளுக்கு முன் சிற்றுண்டி விடுதியில் கருப்பர் என்பதால் உணவு மறுக்கப்பட்டவரின் மகன் நாட்டை ஆளும் வாய்பையும் அளிக்கக் கூடிய அரசியலமைப்பு தான் அமெரிக்க ஜனாநாயகத்தின் மகத்துவம் என்று கூறியுள்ளார்.
மகாகவி பாரதியார் “என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்” என்று ஏங்கினார். அடிமை மோகத்தில் மடிந்த கிடந்த மக்களுக்கு “ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று சுதந்திரப் பாதையை வகுத்தார். இத்தகைய புனிதமான தனிமனிதனின் சுதந்திரம் ஜனநாயக அரசியலமைப்பு ஒன்றில் தான் பாதுகாக்கப்படுகிறது. குறைகள் எவ்வளவு இருந்தாலும் மற்ற அரசியலமைப்புகளை ஒப்பிடுகையில் ஜனநாயக அமைப்பு தான் சிறந்தது என்றார் இரண்டாவது உலக போரின் வெற்றி நாயகன் வின்ஸ்டன் சர்ச்சில். உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகம் என்ற பெருமை கொண்டது நம்நாடு. 15-வது மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 71.4 கோடி வாக்காளர்கள் 543 பிரதி நிதிகளை தேர்தெடுக்க உள்ளார்கள். தேர்தல் இயந்திரத்தின் நீண்ட பயணம் துவங்கப்பட்டுள்ளது.
அமைதியான முறையில் தேர்தல் நடத்துவது அரசு நிர்வாகத்திற்கு ஒரு சவாலாக உள்ளது. அரசு பணிகள் இயல்பாக நடைபெற வேண்டும், சட்டம், ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும்; தற்போதுள்ள தேர்தல் விதிகள்படி அரசு அதிகாரிகள் நடுவுநிலை பிறழாமல் நடக்க வேண்டும் என்பவை நிர்வாகத்தின் இலக்குகளாக இருக்க வேண்டும்.
தேர்தல் பிரசாரத்தின் போது எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், தேர்தல் அன்று அத்தியாவசியமான பணிகள், தேர்தலுக்குப் பிறகு அமைதி காக்க வேண்டிய பொறுப்பு என்று தேர்தல் பணிகளை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம். இந்த மூன்று கட்ட நடவடிக்கைகளிலும் பொது அமைதியை காப்பது நிர்வாகத்தின் தலையாய கடமை. வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் அசம்பாவிதங்கள் நேராமல் தடுப்பது தான் திறமையான நிர்வாகத்தின் அடையாளம்.
பொது அமைதியை வருவாய்துறையும், காவல்துறையும் நடுநாயகர்களாக நின்று செயலாற்றினால்தான் பாதுகாக்க முடியும். பொதுத் தேர்தலில் இந்த இருதுறையினரின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள்தான் நிர்வாகத்தின் வெற்றியை உறுதி செய்யும்.
தேர்தலுக்குமுன் முதல் கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் காவல்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும்.
கடந்த கால நிகழ்வுகளை மறந்தால் “பட்டகாலிலே படும்” என்பது போல மீண்டும் பூதாகரமான விளைவுகள் உண்டாகும் என்பதை நினைவில் கொண்டு, எங்கெங்கு முன்பு பிரச்சனைகள் எழுந்ததோ அந்த இடங்களில் முன்னெச்சரிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
பிடி ஆணைகள் நிலுவையில் உள்ள பழைய குற்றவாளிகளை கண்டறிந்து நீதிமன்ற காவலில் ஒப்படைக்க வேண்டும். ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போக்கிரிகள், கெட்ட நடத்தைக் காரர்கள் இவர்களது குறிப்புகளை எடுத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். தேர்தல் சம்பந்தமான வழக்குகள், முக்கியமாக வன்முறை சம்பவங்கள், ஆள்மாறாட்டம் செய்தது, போலி அடையாள அட்டை தயாரித்தல் போன்ற ஏற்கெனவே பதிவு செய்த வழக்குகளில் புலன் விசாரணை முறையாக செயல்பட்டிருக்கிறதா என்று கவனித்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடந்த வழக்குகளில் துரித விசாரணையே பிற்கால நிகழ்வுகளை தவிர்க்கவல்லது.
இப்போதிருக்கக்கூடிய பயங்கரவாத விளைவுகளை உணர்ந்து அதனை முறியடித்தல் காவல்துறையின் முக்கிய பொறுப்பு. காவல்நிலைய சரகத்தில் உள்ள வெடிமருந்து மற்றும் படைகலன் உரிமங்கள் பார்வையிட்டு சரி செய்தல், மீறல்கள் உண்டாயின் தக்க நடவடிக்கை எடுத்தல் ஆகியவை காவல்நிலைய அதிகாரியின் முக்கிய கடமைகள் ஆகும்.
காவல்துறைக்கு வேறு பணிகள் வந்துவிட்டாலே சமூகவிரோதிகளுக்கும் கள்ளச் சாராய முதலைகளுக்கும் கொண்டாட்டம் தான். கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்துவதை முக்கிய நடவடிக்கையாக கொள்ள வேண்டும். கள்ளச்சாராயத்தில் ஈடுபடுவர்களை கைது செய்வது ஒருபுறம், அவர்கள் உபயோகப்படுத்தும் கச்சா பொருட்கள், உபகரணங்களை கைப்பற்றி இந்த சட்ட விரோத தொழிலின் மூலதனத்தை முடக்க வேண்டும்.
தேர்தல் பிரசாரத்தின் போது முக்கிய நபர் பாதுகாப்பு கொடுக்க வேண்டியது மற்றொரு முக்கியப் பணி. தேர்தலில் போட்டியிடும் எல்லா கட்சிகளும் பிரசாரம் செய்வதற்கு சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், இதில் பாகுபாடு இருக்கக் கூடாது என்பதை தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. அந்தந்த சரக அதிகாரி உள்ளூர் அரசியல் கட்சி பிரதிநிதிகளை வைத்து பேசி சுமுகமாக பிரச்சனைகளை தீர்வு செய்யலாம். இத்தகைய நல்லிணக்கக் கூட்டம் முக்கிய தலைவர்கள் வரும்பொழுது மற்ற கட்சியை சேர்ந்தவர்கள் விட்டுக் கொடுத்து காவல்துறையோடு ஒத்துழைப்பு கொடுக்க உதவும்.
தேர்தல் ஆணையம் சமீபகாலத்தில் தேர்தல் சுமுகமாக நடைபெறுவதற்கு அறிவுரைகள் வழங்கியுள்ளது. அந்த ஆணைகளை நடைமுறைப்படுத்துவது காவல்துறையின் முக்கியப் பொறுப்பாகும். இந்த தெளிவான ஆணைகளினால் சட்ட ஒழுங்கு நிர்வாகம் எளிதாகியுள்ளது என்பது உண்மை. பொது இடங்களில் விளம்பர பலகைகள் வைப்பது, ஆதரவு வாசகங்கள் எழுதுவது, தனியார் இடங்களில் அனுமதியின்றி பிரச்சாரத்திற்காக பயன்படுத்துதல் போன்றவை காவல்துறைக்கு பிரச்சனை விளைவிக்கக்கூடியவை. இதில் அதிக கவனம் செலுத்தி முன்னெச்சரிக்கை எடுத்து தவிர்க்காவிட்டால் பின்பு பெரிதாகி விளைவுகள் விபரீதமாகும். எல்லா கட்சிகளுக்கும் பாரபட்சமின்றி பிரசாரத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறதா அல்லது விசேஷ சலுகைகள் சிலருக்கு அளிக்கப்படுகிறதா என்பதைத்தான் தேர்தல் ஆணைய பார்வையாளர்கள் உன்னிப்பாக கவனிக்கின்றார்கள். ஆதலால் விதிமீறல்கள் இன்றி பார்த்துக் கொள்வது காவல்துறைக்கு நல்லது.
தேர்தலுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பே பிரச்சாரம் முடிவடைந்து எல்லோருடைய கவனமும் ஓட்டுச்சாவடி பக்கம் திரும்பும். ஒவ்வொரு ஓட்டுச்சாவடியும் சராசரி 1200 வாக்காளர்கள் கிராமப்புறங்களிலும், நகர்புறங்களில் 1350 வாக்காளர்கள் வரை கொண்டதாக இருக்கும். வாக்காளர்கள் வீட்டிலிருந்து அதிகபட்சம் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்குள் வாக்குச்சாவடி அமைய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது. தமிழ்நாட்டில் 51,602 ஓட்டுச்சாவடிகள் 32 மாவட்டங்களில் அமைந்துள்ளன. தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்கள் சுமார் நான்கு கோடி பதிமூன்று லட்சம். ஓட்டுச்சாவடியின் 100 மீட்டர் எல்லைக்குள் எந்த கட்சியின் விளம்பரம் மற்றும் கடைசி நிமிட ஆதரவு வேண்டுதலோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அந்தந்த ஓட்டுச்சாவடியின் காவல் அதிகாரிகளை சார்ந்தது. பிரச்சாரம் ஓய்ந்த பிறகு திரை மறைவு நடவடிக்கைகள் நடவாமல் தடுக்க, தகவல் சேகரிப்பு தீவிரப்படுத்தி சட்டவிரோத சக்திகளை ஒடுக்க வேண்டும்.
தேர்தல் தினம் புனிதமான நாள். தமிழ்நாட்டில் பல கிராமங்களில் மக்கள் தேர்தல் நாளை ஒரு திருவிழா போல கொண்டாடும் பழக்கம் உள்ளது. அதிகாலை எழுந்து குளித்துவிட்டு, பளிச்சென்று உடை உடுத்தி, சாமி கும்பிட்டு மேளதாளத்துடன் வாக்குச் சாவடிக்கு செல்வதை பார்க்க முடியும்.
இத்தகைய பாமர மக்களின் வெகுளித்தனமான ஈடுபாடும், கடமையுணர்வும் தான் நமது ஜனநாயகத்தின் வலிமை. நகர்புறங்களை எடுத்துக் கொண்டால் தேர்தல் விடுமுறை நாளில் சொந்த வேலைகளை கவனிப்பது அல்லது விடுமுறையை பயன்படுத்தி கேளிக்கையில் விரயமாக்குவது என்பது சர்வசாதாரணமாக நடக்கும். ஓட்டுப் போடாமல் இருப்பதும் ஒரு ஜனநாயக உரிமை என்று நியாயப்படுத்தும் வாதமும் கேட்க முடியும். ஆனால் ஓட்டுரிமையை சட்டப்படி பிரயோகப்படுத்துவது ஒவ்வொருவரது கடமை.
இந்தியாவிலேயே மொடக்குறிச்சி சட்டசபை தொகுதியில்தான் அதிகமாக 1033 வேட்பாளர்கள் 1996-ம் வருடம் போட்டியிட்டனர். இரண்டு வருடம் அல்லது அதற்கு அதிகமாக தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. வழக்கு மேல் முறையீட்டில் இருந்தாலும் விதிவிலக்கு கிடையாது. தண்டனை பெற்றவர், நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளவர் வாக்களிக்க முடியாது. ஒரு மக்களவை தொகுதியில் பதிவாகிய வாக்குகளில் ஆறில் ஒரு பங்கிற்கு குறைவாக எடுத்த வேட்பாளர் தனது டெபாசிட் தொகையான ரூபாய்.10,000/-த்தை இழக்கிறார். ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடியாது.
வாக்காளர் அடையாள அட்டை, மின் அணு இயந்திரம் இவை இரண்டும் வெகுவாக ஓட்டுச்சாவடியில் எழக்கூடிய பிரச்சனைகளை தீர்த்துவிட்டது. ஓட்டுச்சாவடி தேர்தல் அதிகாரி வாக்காளர் அடையாள அட்டை உண்மையானதா என்பதை தணிக்கை செய்து ஓட்டுப்போட அனுமதி அளிக்கிறார். தமிழ் சினிமாவில், நகைச்சுவைக் காட்சியில் ஓட்டுச்சாவடிக்குச் சென்று வருபவரைப் பார்த்து “என்னண்ணே ஓட்டுப் போட்டாச்சா” என்று கேட்பார்கள். அதற்கு அவர் “என்ன ஒத்தாசயப்பா நம்ம ஊர்ல! நமக்கு ஏன் கஷ்டம்ன்னு யாரோ ஓட்டு குத்திட்டான்” என்று அங்கலாய்ப்பார்! இம்மாதிரி கள்ள ஓட்டுப் போட்டால் இந்திய தண்டனைச் சட்டம் 171 பிரிவு 4-ன்படி ஒரு வருடம் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தவறு நடந்திருந்தாலும், உண்மையான வாக்காளர் ஓட்டுப்போட அனுமதிக்கப்படுவார். அந்த ஓட்டு ‘அளிக்கப்பட்ட வாக்கு’ என்று தேர்தல் விதி 42-ன்படி தனியாக வைக்கப்படும்.
வாக்காளர்களை வாகனங்களில் ஓட்டுச்சாவடிக்கு அழைத்துச் செல்வது மக்கள் பிரதிநிதிகள் சட்டப்படி முறையற்ற நடவடிக்கை. பிரிவு 133-ல் இதற்கு மூன்று மாதம் வரை தண்டனை என்றுள்ளது. வாக்குச்சாவடியை கைப்பற்றுதல், வாக்குச்சாவடி அருகில் வன்முறையில் ஈடுபடுதல், வாக்காளர் செல்ல முடியாமல் இடர்விளைவித்தல் வாக்காளரை ஈர்க்கும் வகையில் பணம், பொருள் கொடுப்பது போன்ற குற்றங்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க தேர்தல் அதிகாரிக்கும், காவல்துறைக்கும் அதிகாரம் உள்ளது.
வாக்களிக்கும் நாளன்று மதியம் ஓட்டுச்சாவடிகளில் சலசலப்பு அதிகமாக இருக்கும். ஊழியர்களும் தொடர்ந்து பணியில் உள்ளதால் சிறிது அசரும் நேரம். அப்போதுதான் பிரச்சனைகள் எழக்கூடும். இத்தருணத்தில் மேற்பார்வையிடும் அதிகாரிகள் முனைப்பாக செயல்பட்டு சுமுகமாக வாக்கெடுப்பை நிறைவு செய்ய வேண்டும். தேர்தல் நேரம் முடியும் வரை யார் வாக்குச்சவாடியில் வரிசையில் உள்ளார்களோ அவர்கள் எல்லோரும் வாக்களிக்க வசதி செய்ய வேண்டும். வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்ணணு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்திற்கு பாதுகாப்பாக எடுத்துச் சென்று வாக்கு எண்ணும் நாளன்று அசம்பாவிதம் நேராமல் கண்காணிக்க வேண்டும். தேர்தல் முடிவு அறிவித்த பிறகு வெற்றி ஊர்வலத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். தேர்தல் முடிவுகளின் பிரதிபலிப்பாக வேறு சட்டம் ஒழுங்கு நிகழ்வுகள் ஏற்படாமல் கண்காணிப்பு தொடர வேண்டும்.
வன்முறை எங்கு நடந்தாலும் அங்கு சென்று அதனை தடுத்துக் கட்டுக்குள் கொண்டுவருவது காவல்துறையின் கடமை. இதற்கு யாருடைய உத்திரவோ அனுமதியோ தேவையில்லை.
தேர்தல் நேரப் பாதுகாப்புப் பணி மகத்தானது. ஒவ்வொரு காவலரது பணியும் முக்கியமானது. அவருக்குப் பின்னால் காவல்துறை என்ற உன்னத கூட்டமைப்பின் சக்தி இருக்கிறது, மக்களின் நன்மதிப்பு என்ற சக்தி நம்மைச் சுற்றி அரணாக இருக்கிறது.
தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதால் தேர்தல் பணிகள் தெய்வீகப் பணிகள் என்பதை உணர்ந்து முழு ஈடுபாடுடன் பாரபட்சமின்றி காவல்துறை கடமையாற்ற வேண்டும்.
இந்த கட்டுரை தினமணி நாளிதழில் 17.03.2009 பிரசுரிக்கப்பட்டது.
No comments:
Post a Comment