காவல்துறையை பெருமை படுத்திய சில படங்களில் “தங்கப்பதக்கமும்” ஒன்று அதில் வரும் ‘நல்லதொரு குடும்பம், பல்கலைக் கழகம்’ என்ற பாடல் காட்சிகளை ரசித்திருக்காதவர்கள் இருக்க முடியாது. கருத்துள்ள பாடல், ரம்யமான இசை சந்தோஷம் ததும்பும் காட்சிகள் சிவாஜியின் கம்பிரமும் குறும்பும் கலந்த அசைவுகள் குதூகலமூட்டுவதாக அமைந்தன. ஆனால் பாடல் முடிவில் போலீஸ் ஆய்வாளர் வருவார் ஒரு பிடி ஆணையோடு! காவல் அதிகாரியான சிவாஜி சீருடை அணிந்து தனது மகனையே கைது செய்வதாக அறிவிப்பார். பாசத்திற்கு அப்பாற்ப்பட்ட கடமையை சித்தரிக்கும் அற்புதமான காட்சி அமைப்பு.
தமிழ் திரையில் கல்யாணக் காட்சிகளில் திடீரென்று போலீஸ் வரும். மணமகனை கைது செய்து அழைத்து செல்வார்கள். எல்லோரது சந்தோஷம் பாழடையும். இரவு திடுதிப்பென்று நுழைந்து தூங்கியவரை கைது செய்வதாக சினிமாவில் பரபரப்பாக காண்பிக்கப்படும். அதுமட்டுமன்றி காவலில் கொடுமை, “முட்டிக்கு முட்டி தட்டுவேன்” என்ற வசனம் வரும் காட்சிகள் சர்வ சாதாரணம். மொத்ததில் கைது என்பது பிரச்சனைக்குரிய விஷயம் என்பது தெளிவு. ஏனெனில் அது தனி மனிதனின் சுதந்திரத்தை பாதிக்கும் நடவடிக்கை.
காவல்துறைக்கு அதிக அவப் பெயர் கொடுக்கக்கூடிய பணி கைது சம்பந்தப்பட்டதுதான். ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டால் புலன் விசாரணை மேற்கொண்டு குற்றம் புரிந்தவர் என்று கூறப்படுபவர் எந்த அளவுக்கு சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதை ஆதாரங்கள் அடிப்படையில் ஆராய்ந்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்டவரை கைது செய்ய முற்படும்பொழுதுதான் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. முறையற்ற கைது, போலீஸ் காவலில் துன்புறுத்தல், மருத்துவ வசதி அளிக்கத் தவறுதல் என்று பல குற்றச்சாட்டுகள் எழுகின்றன. குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, காவல்துறைக்கு அவப் பெயர் ஏற்படுகிறது.
காவல்துறை நடவடிக்கை என்றாலே குற்றம் செய்தவரை கைது செய்வதில் தான் என்றும், இதுவே போலீஸின் முக்கிய கட்ட நடவடிக்கை என்ற கருத்து மக்களிடையே இருக்கிறது. கைது செய்யவில்லை என்றால் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அல்லது கையூட்டுப் பெற்று வேறுவிதமான தலையீட்டால் கைது செய்ய தயக்கம் என்று போலீஸ் மீது குறைகள் சொல்லப்படுகின்றன.
குற்றவியல் நடைமுறையில் பிடிக்கக்கூடிய குற்றம் (பிடியாணையின்றி), பிடிக்கமுடியாத குற்றம் (பிடியாணை வேண்டும் குற்றம்) என்று இரண்டு வகையாக குற்றங்கள் பிரிக்கப்படுகின்றன. வழக்கு விசாரணையில் இருக்கும் பொழுது வழக்கில் சம்பந்தப்பட்டவர் விசாரணையில் குறுக்கிடக்கூடாது என்பதற்காகவும், வெளியில் இருந்தால் வேறுவிதமான எதிர்மறைப் பிரச்சனைகள் ஏற்படும் என்பதாலும் சில சமயம் பாதிக்கப்பட்டவர்கள் பழிவாங்கும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அடிப்படையிலும் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கைது செய்துதான் விசாரணை நடத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. விசாரணை முடிந்து இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நீதிமன்ற விசாரணையில் எதிராளியை ஆஜர் ஆக பணிக்கலாம். ஆதலால் உடனடியாக எல்லா வழக்குகளிலும் கைது செய்ய முற்படுவதும், கைது செய்துவிட்டாலே வழக்கு விசாரணை முடிந்தது என்று கருதுவதும் தவறான அணுகுமுறை.
இந்திய ஆவணக் காப்பகத்தின் குறிப்புகளின்படி இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் செய்யப்படும் கைது கடந்த முப்பத்தைந்து வருடங்களில் 100 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. 1973-ம் வருடம் 13.80 லட்சம் நபர்கள் கைதானார்கள். இதுவே 2007-ம் வருடம் 27.8 லட்சமாக உயர்ந்துள்ளது. இதர சமூக சட்டங்களில் கைதானவர்கள் எண்ணிக்கை 1973-ம் வருடம் 26.87 லட்சமாக இருந்தது. 2007-ம் வருடம் 40.87 லட்சமாக அதிகரித்துள்ளது. குற்ற வழக்குகளில் அதிகமாக கைது செய்யும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. தமிழகத்தில் இந்திய தண்டனை சட்டம் மற்றும் இதர சட்ட வழக்குளில் 2007-ம் வருடம் 7.33 லட்சம் நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 65,091 பெண்களும் அடங்குவர்.
‘அரஸ்ட்’ என்றாலே எல்லோருக்கும் பகீரென்று நினைவுக்கு வருவது காவலில் கொடுமை, சுதந்திரம் பாதிக்கப்படும் நிலை. ஆனால் கைது என்பது சமுதாயத்தில் அமைதியை காப்பதற்கு சில சமயங்களில் தேவையான நடவடிக்கை. நீதி என்ற தராசில் தனிமனிதன் சுதந்திரம், அவர் சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகளுக்கு உட்பட்ட செயல்கள் சமமாக உள்ளதா என்று சீர்தூக்கி சட்டம் முடிவு செய்கிறது. குற்றம் புரியும் தனி மனிதனின் சுதந்திரம் முக்கியமா அல்லது சட்டத்திற்கு உட்பட்டு நடக்கும் பெருவாரியான மக்களின் சுதந்திரம் பிரதானமானதா என்ற ஒரு கேள்வி எழும்பொழுது சமுதாய அமைதிக்காக தனிநபர் சுதந்திரம் சட்டப்படி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டிய நிலை உருவாகிறது. சட்டத்தை மீறுபவரா, சட்டத்தை மதிப்பவரா என்ற வினாவிற்கு கைது நடவடிக்கை மூலம் சட்டம் விடை அளிக்கிறது. இதிலிருந்து ‘அரஸ்ட்’ என்பது மிக கவனமாக வேறு வழியில்லை என்ற நிலையில் செய்யப்பட வேண்டியது என்பது புலனாகிறது. ஆனால் நடைமுறையில் எதற்கெடுத்தாலும் கைது என்பதும், கைதானவர்கள் அதையே சுயலாபத்திற்கும், விளம்பரம் தேடலிலும் உபயோகப்படுத்துவது விசித்திரமான வளர்ச்சி.
உச்ச நீதிமன்றம் பிடியாணையின்றி புலன் கொள் குற்றம் என்பதை வைத்துக் கொண்டு மட்டும் ஒருவரை கைது செய்து விட முடியாது, கைது செய்யக்கூடிய அதிகாரம் இருந்தாலும் அதை பிரயோகிக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளதா என்பது ஆராயப்பட வேண்டும் என்று ஒரு தீர்ப்பில் கூறிவுள்ளது. ஏனெனில் ஒருவரை கைது செய்து காவல் நிலைய காப்பில் வைப்பது ஒருவருக்கு பெருத்த அவமானத்தையும், அவரது சுயமரியாதைக்கு களங்கமும் விளைவிக்கிறது.. அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது. தனிமனிதன் சுதந்திரத்தை பறிப்பது என்பது சாதாரணமாக எடுக்கக் கூடிய முடிவு அல்ல என்பதை காவல்துறை நினைவில் கொள்ளவேண்டும். பொதுவாக அவசியம் ஏற்பட்டலொழிய ஒருவரது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியதை மனதில் கொண்டும், கைது செய்வதால் பிரச்சனை வரக்கூடிய நேர்வுகளில் போலீஸார் தமது தற்காப்பிற்காகவும் கைது நடவடிக்கையை கூடுமானவரை தவிர்க்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் தெளிவாக கூறியுள்ளது. பல வருடங்களுக்கு முன்னால் மதுரை திடீர் நகர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக கொண்டு வரப்பட்ட ஒரு ஆசிரியர் அவமானம் தாங்காமல் காவல்நிலையத்தில் தூக்கு போட்டுக் கொண்ட சம்பவம் ஒன்றே தராதரமின்றி கைது செய்வது தவறு என்பதை உணர்த்துகிறது.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் 41-ல் உள்ள பிரிவுகளில் கைது செய்யக்கூடிய அதிகாரம் வரையறுக்கப்பட்டுள்ளது. பிரிவு 43-ன்படி பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டவரை கைது செய்ய பொதுமக்களுக்கும் அதிகாரம் உண்டு என்றும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. குற்றங்கள் நடவாமல் தடுப்பதற்கு சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை கைது செய்ய போலீஸுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் இத்தகைய அதிகாரம் முறையாக செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுகளை மறுக்க முடியாது. இதன் அடிப்படையில்தான் சமீபத்தில் சட்ட சீர்திருத்த மசோதா மக்களவையில் கொண்டு வரப்பட்டது. விவாதத்திற்குப் பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்டது. விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. திருத்தப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் 41 பிரிவில் காவல்துறைக்கு கைது செய்யும் அதிகார வரம்பு வகுக்கப்பட்டுள்ளது. சாதாரண வழக்குகளில் குற்றச்சாட்டப்பட்டவருக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் ஏழாண்டுகள் தண்டனை பெறக்கூடிய வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை மட்டும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு கைது செய்யலாம் என்பதும் முக்கியமான அம்சங்களாகும். இதன் மூலம் எல்லா வழக்குகளிலும் கைது செய்ய வேண்டும் என்று காவல்துறையை நிர்பந்திக்கும் நிலை மாறும். இதை காவல்துறை தமக்கு அனுகூலமாக கொள்ளலாம்.
குற்றத்தடுப்பு நடவடிக்கையிலும், சட்டம் ஒழுங்கு நிலைநாட்டுவதிலும் கைது செய்யக்கூடிய அதிகாரம் காவல்துறைக்கு உதவுகிறது என்றாலும் முறையற்ற செயல்களால் இந்த அதிகாரத்தின் பயனளிப்பு, பாதிப்புகளை ஒப்பிடுகையில் பாதிப்புதான் அதிகம் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். கைது செய்யும் நேர்வில் கடைபிடிக்க வேண்டிய முறைகளை 11 கட்டளைகளாக டி.கே.பாசு வழக்கில் உச்ச நீதிமன்றம் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. பெண்களை கைது செய்யும்பொழுது கவனமாக இருக்க வேண்டும். பெண் போலீஸார் போதுமான அளவில் இருக்க வேண்டும். அரஸ்ட் செய்யும்பொழுது மேலை நாடுகளில் சர்வசாதாரணமாக விலங்கிடுகிறார்கள். எல்லா ரோந்து வாகனங்களிலும் கைவிலங்கு வைக்கப்பட்டிருக்கும். ஆனால் நமது நாட்டில் பயங்கரமான குற்றவாளிகள் தப்பிக்கக்கூடும் என்ற நிலையில் அதுவும் கைவிலங்கிடுவதை உரிய பதிவேடுகளில் பதிவு செய்துதான் கைவிலங்கிட முடியும். விலங்கிடுதல் பற்றி உச்சநீதிமன்றம் பிரேம் சங்கர் சுக்லா (எ) தில்லி நிர்வாகம், சிட்டிசன் ஃபார் டெமாக்ரசி (எ) அஸ்ஸாம் ரிட் வழக்குகளில் காவல்துறையினரோ, சிறைப்பணியாளர்களோ, தன்னிச்சையாக ஒரு கைதியை கைவிலங்கிடக்கூடாது என்று தெளிவுபடுத்தியுள்ளது. நீதிபதியின் அனுமதியின்றி கைவிலங்கிடுபவர் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்கு ஆளாவார்கள் என்றும் எச்சரித்துள்ளது.
கைது செய்து குற்றம் சாட்டப்பட்டவரை போலீஸ் கைகோர்த்து நீதிமன்றத்திற்கு அழைத்து வருவதை பத்திரிக்கையிலும், தொலைக்காட்சிகளிலும் பார்க்கிறோம். ஆனால் “கைது கையளவோடு” நின்றுவிடுவதில்லை. மேலே கூறிய பல நடைமுறை விதிகள் இருக்கின்றன. அவற்றைப் பாதுகாப்பது காவல்துறையினரின் கடமை. இந்தப் பொறுப்பை சுமையாகக் கருதி அசட்டையாக இருக்க முடியாது. அவ்வாறு கைது செய்ய வேண்டிய வழக்குகளிலும், காவல்துறையினரே அவரை ஜாமீனில் விடுதலை செய்ய அதிகாரம் உள்ளது. நீதிமன்றக்காவலில் அனுப்புவதைக் குறைக்க வேண்டும் என்று துறை சார்ந்த அறிவுரைகள் உள்ளன. ஜாமீனில் விடும் அதிகாரத்தை சரியாகப் பயன்படுத்தினால் வழிக்காவலுக்கு பணியாளர்களை விரயமாக்க வேண்டியதில்லை. சிறைச்சாலைகளிலும் நெரிசல் குறையும். எப்படியும் வசதிபடைத்தவர்கள் கோர்ட்டில் உடனடியாக ஜாமீன் பெற்று விடுகின்றனர். ஜாமீன் கொடுக்க முடியாமல் சிறையில் ஏழை மக்கள்தான் அவதியுறுகின்றனார். குற்றவியல் சட்டம் 167 பிரிவின் கீழ் வழக்கின் தன்மையைப் பொறுத்து 30 நாட்களிலோ அல்லது 60 நாட்களிலோ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை என்றால் கைதானவர்களை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்றுள்ளது. ஆனால் ஜாமீன் கொடுக்க முடியாமல் மூன்று மாதங்களுக்கு மேல் சிறையில் வாடும் ஏழைகள் ஏராளம். வக்கீல்கள் போராட்டத்தில் நீதிமன்றம் நடை பெறாத நிலையில் நிலைமை மேலும் மோசமாகும் சமுதாயத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு எந்த தீர்வும் சம்பந்தப்பட்ட அமைப்புகளிலிருந்தும் சமுதாய நல்லுள்ளம் படைத்தவர்கள் மூலம் வந்தால்தான் நிலைக்கும். பிரச்சனைகள் விசுவரூபம் எடுக்கவிடாமல் தக்கத் தருணத்தில் அதனை முடிவுக்கு கொண்டுவருவதுதான் விவேகம். அதுவே தெருவிற்கு வந்து விட்டால் விபரீதம்தான், அதன் பிறகு காவல்துறை மூலம் சமாளிக்க முற்படுவதும், காவல்துறையும் தனது முனைப்பான நடவடிக்கையால் சீரமையும் என்று நம்புவதும் பிரச்சனைக்கு தீர்வாகுமா என்பது கேள்விக்குறியே.
No comments:
Post a Comment