Thursday, April 16, 2009

உள்ளத்தனையது உயர்வு



“ஒன்றுபடுதலில் ஒன்றி இருப்போம்” இதுதான் ஆசிய பெசிபிக் நாடுகளின் சிறை சீர்திருத்த நிர்வாகங்களின் கூட்டமைப்பின் உயரிய கோட்பாடு. ஒவ்வொரு வருடமும் இக்கூட்டமைப்பின் கருத்தரங்கு நடைபெறும். 2008-ம் ஆண்டு கருத்தரங்கு மலேசியா நாட்டில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்திய பிரதிநிதிக் குழுவில் இடம் பெற்று மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு நாடும் சிறை சீர்திருத்த நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கவும் நல்ல செய்முறைகளை மற்ற நாடுகளும் நடைமுறைக்கு ஏற்ப பின்பற்றுவதற்கும் இக்கருத்தருங்கு வழி வகுக்கிறது.

சட்டத்தின் பிடியில் சிக்கியவர்களை நியதிகளுக்கு உட்பட்டு சிறை இல்லங்களில் பாதுகாப்பது சிறை நிர்வாகத்தின் முக்கிய பொறுப்பாகும். சிறை இல்லவாசிகளுக்கு நல்லியல்புகளை பயிற்றுவித்து சமுதாயத்தோடு மீண்டும் இணைவதற்கான சூழ்நிலை உருவாக்குவது நிர்வாகத்தின் மற்றொரு முக்கிய பணி.


எல்லா நாடுகளிலும் சிறைகளில் நெரிசல் அதிகமாகவே உள்ளது என்பது உண்மை நிலை. சிறைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை அந்தந்த நாட்டின் ஜனத் தொகையோடு ஒப்பிட்டு கணக்கிடப்படுகிறது. ஒரு லட்சம் ஜனத் தொகைக்கு அமெரிக்க, ஐரோப்பா போன்ற மேலை நாடுகளில் 100-க்கு மேற்பட்ட இல்லவாசிகள் உள்ளனர். மற்ற ஆசிய நாடுகள் சைனா உட்பட இந்த கணக்கு சுமார் 60 –லிருந்து 80 வரை. ஆனால் இந்தியாவில் 1 லட்சம் ஜனத்தொகைக்கு 30 இல்லவாசிகளே உள்ளனர். 111 மத்திய சிறைகள் உட்பட இந்தியாவில் உள்ள மொத்த சிறைகளின் எண்ணிக்கை 1336. சராசரி இல்லவாசிகளின் எண்ணிக்கை சுமார் மூன்று லட்சம். இதில் 20,000 பெண்களும் அடங்குவர்.


சிறையில் நெரிசலை குறைப்பதற்கு ஒரே வழி சிறை இல்லங்களை விரிவுபடுத்துவது, மற்றும் தேக்கத்தில் உள்ள வழக்குகளை துரிதமாக முடித்தல். உலகளவில் பொருளாதார நெருக்கடி சூழ்ந்திருக்கும் நிலையில் எல்லா நாடுகளிலும் குற்றங்கள் அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது. இதை மனதில் கெண்டு பல நாடுகளில் சிறை விரிவாக்கப்பணிகள் துவங்கப்படடுள்ளான. ஒரு குற்றத்திற்கு தண்டனை சிறைவாசம் என்று சட்டப்படி தீர்ப்பு வழங்கினால் சிறைக்கு அனுப்புவதுதான் தண்டனையே அன்று சிறையில் மேலும் தண்டனை வழங்குவது முறையற்றது.


சிறைச்சாலைகள் குற்றவாளிகளை துன்புறுத்தும் மையம் என்று மக்களிடையே தவறான கருத்து நிலவுகிறது. இல்லவாசிகளை சீர்திருத்துவது தான் சிறைத் துறையின் தலையாய பொறுப்பு என்பதை எல்லா நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.


சிறை என்றாலே வானுயர சுவர்கள், ராட்சத கதவுகள், தப்பிக்க முடியாதபடி தானியங்கி தடுப்புகள் என்று உள்ளே வருபவருக்கு அச்சத்தையும், அசாதாரண பிரமிப்பையும் ஏற்படுத்தும். ஆதலால் சிறை வளாகங்களின் உள்ளமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஏதுவாக அமைய வேண்டும் என்பது வல்லுனர்களின் கருத்து.


மலேசிய நாட்டில் சிறை இல்லவாசிகளை சீர்திருத்தும் முறையில் பரிமாண மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இல்லவாசிகளின் மனித வளத்தை மேம்படுத்தும் விதத்தில் புதிய யுக்த்திகள் கையாளப்படுகின்றன. சிறைக்கு வருபவர்களை மருத்துவ பரிசோதனை செய்த பிறகு மனோதத்துவ நிபுணர் உட்பட அமைக்கப்பட்ட விசேஷ குழு மூலம் விரிவான நேர்காணல் நடத்தப்பட்டு, அவர்களது மனநிலைக்கு ஏற்ப எந்தவிதமான பயிற்சி கொடுக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்படுகிறது. இல்லவாசிகளை சிறு குழுக்களாகப் பிரித்து, தங்களது தற்போதைய நிலைகள் பற்றி மனந்திறந்து விவாதிக்கவும், தங்களது கடந்தகால அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.


உடற்பயிற்சி, மன அமைதி ஏற்படுத்துவதற்கான பயிற்சி கொடுக்கப்பட்டு, தொழிற்கல்வியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மலேசிய சிறைகளில் நன்கு அமைக்கப்பட்ட சிறைத் தொழிற்சாலைகள் உள்ளன. மரச்சாமான்கள், ரெடிமேட் துணிகள், கைவினைப் பொருட்கள், நாட்டு மருந்து வகைகள் என்று பலத்தரப்பட்ட பெருட்கள் தயாரிக்கப்படுகின்றன.


மலேசிய சிறை நிர்வாக முறையில் தண்டனை பெற்றவர் சிறைக்கு வரும்பொழுதே மூன்றில் ஒரு பங்கு சிறை குறைப்பு அவரது எதிர்கால நன்னடத்தையின் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. சிறைக் குற்றங்களில் ஈடுபட்டாலோ, விதிகளை மீறினாலோ அது அவரது சிறை குறைப்பைப் பாதிக்கும். ஒழுக்கமாக சிறையில் இருப்பவர்கள் எல்லோருக்கும் ஒரே அளவில் சிறை குறைப்போடு இணைந்த நன்னடத்தை விதிகள் சிறை நிர்வாகத்திற்கு உதவுகிறது.


ஒருவர் சிறையிலிருந்து வெளிவருவதற்கு ஒரு வருடம் முன்னர் விதிகள் தளர்த்தப்பட்டு, அவர் குடும்பத்தோடும், சார்ந்திருக்கும் மக்களோடும் இணைவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றது. நேர்காணல் முறைகள் எளிதாக்கி அவருக்கு அறிவுரையும் கொடுக்கப்பட்டு, தயார் நிலையில் அவர் விடுதலையாக ஏற்பாடு செய்யப்படுகிறது. ஆஸ்திரேலிய நாட்டு சிறை நிர்வாகத்திலும் விடுதலையாகும் இல்லவாசிகளைத் தயார் செய்யும் முறை சிறப்பாக அமல்படுத்தப்படுகிறது. தாய்லாந்து நாட்டில் கர்ப்பமடைந்த தண்டனை பெற்ற பெண்கள் பேறு காலத்தில் குடும்பத்தோடு இருக்க மூன்று வருடம் வரை தண்டனையை ஒத்தி வைக்க சட்டத்திருத்தம் 2007ல் அமல்படுத்தப்பட்டது. இந்தத் தண்டனை தள்ளிவைப்பு சில கொடூர குற்றங்களுக்குப் பொருந்தாது. சிறையில் பிறப்பு என்ற அவப்பெயரைத் தவிர்த்து, குழந்தைகளுக்கு தாயின் அரவணைப்பு உறுதி செய்யும் இத்திட்டம் நமது நாட்டிலும் கொண்டு வரப்பட வேண்டும்.


சிங்கப்பூரில் வருடத்தில் ஒரு நாள் மஞ்சள் கொடி தினம் என்று சிறை இல்லவாசிகள் நாளாக அனுசரிக்கப்படுகிறது. அன்று சிறைத்துறை நடவடிக்கைகள் பிரதானப்படுத்தப் படுகின்றன. சிறைவாசிகள் நிலைமை அவர்களை எவ்வாறு நல்வழிப்படுத்துவது, சீர்திருத்தும் நடவடிக்கையில் சமுதாயத்தின் பங்கு, சிறைச்சாலைகளில் உள்ள தொழிற்சாலைகளை மேம்படுத்தும் பணிகள் போன்றவை பொதுமக்களிடையே பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் அரசு கலையுலக, தொழில் மற்றும் சமூகநல பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கும் விழா சிறப்பாக நடைபெறுகிறது.


பல நாடுகளில் எல்லாக் குற்றங்களுக்கும் சிறை தண்டனை என்றில்லை. சமூக நல சட்டத்தில் உள்ள குற்றங்களுக்கு சமுதாய நற்பணி தண்டனையாக வரையறுக்கப்பட்டு, சிறை தண்டனை தவிர்க்கப்படுகிறது. இதன்மூலம் குற்றம் புரிந்தவர்களின் பணி சமுதாயத்திற்குக் கிடைக்கிறது. இத்தகைய மாற்று தண்டனை முறை நமது நாட்டிலும் வரவேண்டும்.


சமுதாயத்தில் நலிந்தவர்களும், வறுமையில் உழல்பவர்களும் தான் சிறைத் தண்டனைக்கு உள்ளாகும் நிலை நமது நாட்டில் உள்ளது. மருத்துவ வசதி இல்லாத சூழலில் இருந்து இவ்வாறு சிறைக்கு வருபவர்களின் உடல்நிலை மோசமாக இருப்பதால் சிறையில் மருத்துவ வசதியை மேம்படுத்துவது அவசியம். உடல்நிலையோடு அவர்களது மனநிலையும் பாதிப்பிற்கு உள்ளாகிறது. பலர் மதுவிற்கும், போதை பொருளுக்கும் அடிமையாகி அவை கிடைக்காதபோது உள்ளம் ஏங்கும் நிலையில் பித்தம் முதிர்ந்த எல்லைக்குத் தள்ளப்படுகின்றனர். எப்படியேனும் போதைப் பொருட்களை மறைமுகமாக கொண்டுவர எத்தனிக்கின்றனர். ஆசன வாயிலும், பார்க்கவருபவர்கள் கொண்டு வரும் பொருட்களில் மறைத்துக் கடத்த முயற்சிக்கின்றனர். இத்தகைய நூதன கடத்தல் முறைகள் பற்றியும், இதனை தவிர்க்க சிறை நிர்வாகம் எடுக்கும் முறைகள் பற்றியும் கலந்தாயப்பட்டது. மலேசிய நாட்டில் உடல் பாகங்களில் இவ்வாறு மறைக்கப்படும் போதைப் பொருட்களை கண்டுபிடிக்க நுணுக்கமான புகைப்படம் எடுக்கும் முறை செயலாக்கத்தில் உள்ளது.


மலேசிய நாடு பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்தபோது கட்டப்பட்ட அலோர் செடார் சிறை சுமார் நூறு வருடங்களுக்கு மேல் இயங்கி வருகிறது. பீனாங் மாகாணத்தில் உள்ள போகாக் சேனா சிறை சுமார் 15 மில்லியன் டாலர் மதிப்பில் கட்டப்பட்ட அதி நவீன சிறை வளாகம். நூறு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. மதில் சுவர்களில் மின்னணு கருவிகள், தானியங்கி கதவுகள், தானியங்கி சமிக்ஞைகள் இவை யாவும் மத்தியக் கட்டுப்பாட்டு அறை மூலம் இயங்குகிறது.


எல்லா வசதிகள் கூடிய சிறை என்றாலும் அங்கு உள்ள விசாரணை இல்லவாசிகளின் நிலை மனதை நெருடாமல் இல்லை. ஒரே அறையில் பலர் என்று சிறை நெரிசலைக் காண முடிந்தது. அறைகளில் மின் விசிறியில்லை புழுக்கத்தில் குமைவதை உணரமுடிந்தது. இந்தியாவில் எல்லா சிறை இல்லங்களிலும் மின் விசிறி வசதி உள்ளது. அதுவும் நமது தமிழக சிறைகளில் மின் ஊக்கி (ஜெனரேட்டர்) உள்ளதால் மின்சார வெட்டுக்கு இடமில்லை.


மலேசியாவிற்கு இந்தோனேசியாவில் இருந்து முகாந்தரமின்றி கடல் வழியாக கள்ள தோணியில் வருபவர் எண்ணிக்கை அதிகம். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து சிறையில் வைக்கப்படுகின்றனர். இவ்வாறு அனுமதிப் பத்திரம் (விசா) இன்றி பிடிபடுவர்களில் தமிழர்களும் அடங்குவர் என்பது வேதனை தந்தது. ‘ஐயா ரொம்ப கஷ்டப்படுகிறோம்’ என்று பல தமிழ் இல்லவாசிகளின் வேதனைக்குரல் கேட்க முடிந்தது. மலேசிய சிறைகளில் உள்ள இல்லவாசிகளின் எண்ணிக்கை சுமார் 1 லட்சத்து நாற்பதாயிரம். அதில் சுமார் 90,000 நபர்கள் இந்தோனேசியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். மலேசிய சிறைப் பணியாளர்களில் சிலர் தமிழர்கள். அவர்கள் நம்மிடம் தமிழில் பேசுவதற்கு தயங்கியது மலேய நாட்டில் அவர்களது இரண்டாந்தர நிலையை விளக்கியது. தாங்கள் மலேயர்கள் என்பதைக் காட்டிக் கொள்ள தமழில் பேசுவதை தவிர்த்தனர். ஆனால் மலேசிய குடியுரிமைப் பெற்ற வடஇந்தியர்கள் இந்தியர்களைப் பார்த்து சந்தோஷமாக இந்தியில் உரையாடினர். தமிழருக்கு மட்டும் ஏன் இந்த தன்னம்பிக்கை வரவில்லை – வருத்தமளித்தது.


சிங்கப்பூரில் குற்றவியல் ஆளுமையின் கீழ் தண்டனை கடுமயானது. அதுவும் போதைப் பொருள் கடத்தலுக்கு தடுப்புத் தண்டனை வழங்கப்படுகிறது. சிங்கப்பூர் தண்டனை முறையில் கசையடியும், பிரம்பபடியும் குறிப்பிட்ட குற்றங்களுக்கு தண்டனையாக கொடுக்கப்படுகின்றன. உலகளவில் மனித உரிமைகள் பற்றியும், தனிமனிதன் துன்புறுத்தலுக்கு எதிரான விழிப்புணர்ச்சி பரவியுள்ள நிலையில் சித்திரவதைக்குள்ளாக்கும் தண்டனை இன்றும் நடைமுறைப்படுத்துவது கொடுமையானது. ஆனால் சிறிய நாடு என்பதால் சில பிரச்சனைகளுக்கு இம்மாதிரியான தண்டனை முக்கிய தடுப்பு நடவடிக்கையாக பார்க்கிறார்கள். சிறைகளில் கசையடி கொடுக்கும்பொழுது மருத்துவர் கண்காணிப்பில் தண்டனை நிறைவேற்றப்படுகிறது. ஏதோ மருத்துவர் இருந்தால் வலி குறையும் என்பது போல விளக்கம் கொடுக்கப்படுகிறது. இத்தகைய இடைநிலைக் காலத்திய கொடுங்கோலர்களின் தண்டனை முறைகள் முன்னேற்றம் அடைந்த நாடு என்று பெருமிதம் கொள்ளும் சிங்கப்பூருக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை.


உள்ளத்தனைய உயர்வு என்ற வள்ளுவர் வாக்கிற்கு ஏற்ப இல்லவாசிகளை உயர்த்த கல்வி, தொழிற்கல்வி இவை இரண்டையும் அடிப்படையாக வைத்து சீர்திருத்த நடவடிக்கைகள் தமிழக சிறையில் மேற்கொள்ளப்படுகின்றன. மனித உரிமைகளை பேணுதல் இல்லவாசிகளுக்கு நல்வழி புகட்டுதலில் மற்ற ஆசிய நாடுகளை ஒப்பிடுகையில் தமிழக சிறைகளில் சீராக பணிகள் நிறைவேற்றப்படுகின்றன என்பதை உறுதியாக கூறலாம்.

இக்கட்டுரை தினமணி நாளிதழில் 16,04,2009 அன்று பிரசுரிக்கப்பட்டது

No comments: