Monday, October 24, 2011

திக்குத் தெரியாத வயோதிகம்


நகரங்கள் பெருகி வருகின்றன. வளர்ந்த நகரங்கள் எல்லைத்தாண்டி பெருத்துவிட்டன. புதிய நகரங்கள் உருவாகுகின்றன. முதலில் வேலைத் தேடல் பிறகு துணைத் தேடல். கல்யாணம் ஆன கையோடு குழந்தைகள். அவர்களை வளர்ப்பதில் போராட்டம். அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி வெளிநாட்டிற்கோ, பன்னாட்டு நிறுவனத்திலோ வேலைக்குச் சென்ற பிறகுதான் ஆடிய ஆட்டமெல்லாம் ஒய்ந்து இளைப்பாறும் நேரத்தில் முதுமை வந்து வாட்டுகிறது. நாம் நமது பெற்றோர்களை எவ்வளவு சிரத்தையோடு கவனித்தோம் அவ்வாறு இந்த காலத்து இளைஞர்கள் ஏன் கவனிப்பதில்லை என்ற ஆதங்கம்.


ஜனத்தொகை கணக்கெடுப்பில் வயோதிகர்களின் எண்ணிக்கைகூடியுள்ளது. சுதந்திரம் அடைந்ததிலிருந்து சாதாரண மனிதனின் வாழ்வின் எதிர்பார்ப்பு வயது 58-ல் இருந்து 74-ஆக உயர்ந்துள்ளது, ஒரு வகையில் திருப்தியளித்தாலும் வயது மூதிர்ந்த காலத்தில் பராமரிப்பு ஒரு பிரச்சனையாக வளர்ந்துள்ளது. குடும்பங்கள் பிரிந்து விடுகின்றன. கல்யாணம் ஆன பெண்கள் உடனே தனிக் குடித்தனம் போக விரும்புகிறார்கள். கலியுகத்தின் நியதி மனைவியை சார்ந்த உறவினர்களுக்கு மதிப்பு. கணவர் சார்ந்தவருக்கு அவமதிப்பு.


ஒரு வயோதிக தம்பதியினரின் மனு கவனத்திற்கு வந்தது. நடுத்தர வகுப்புக் குடும்பம். குழந்தைகள் பெரியவர்களாகி வெளிநாட்டில் அவர்களது குடும்பத்தோடு வசிக்கின்றனர். அவ்வப்போது பெற்றோர்ருக்குப் பணம், வருடாந்திர வருகை ஒரு முறை வெளி நாட்டுப்பயணம் மற்றப்படி தனிமை. தனிமையில் இனிமை காண முடியாதபடி தள்ளாமை. தனிக்குடிததனம் நடத்துவது ஆரம்ப காலத்தில் சுவாரசியமாகவும், புது அனுபவமாகவும் இருக்கலாம். ஆனால் வயது காலத்தில் தினசரி பொருட்களை வாங்குவது சமைப்பது மற்ற வீட்டு வேலைகள் செய்வது பெரும்பாடாகி விடுகிறது. அதனால் வரக்கூடிய மனக்கசப்பு, கருத்துவேறுபாடு தர்க்கம், விதண்டாவாதம் என்று வயது காலத்திலும் தாம்பத்திய வாழ்க்கையில் விரிசல். பிள்ளைகளும் அவரவர் பணிகளில் மூழ்கிவிடுகின்றனர் பெற்றோர்களை கவனிப்பதற்கு ஏது நேரம்? முதியோர் இல்லங்கள் பல உள்ளன. ஆனால் அதிக பணம் செலவு செய்வதற்கு மனமில்லை. அங்கு போவதற்கும் தயக்கம். நாலு பேர் என்ன செல்வார்களோ என்ற பயம். அவர்களை குறை சொல்ல முடியாது. காலத்தின் கட்டாயம் அவ்வாறு அறிந்து விடுகிறது. சென்னை கோடம்பாக்கத்தில் கூட்டுக் குடும்பமாக மகன், பேரக்குழந்தைகள், கொள்ளுத் தாத்தா, சகிதம் சதோஷமாக வாழ்கின்றனர் என்ற செய்தி படிக்கிறோம். எவ்வளவு குடும்பங்களுக்கு அந்த பாக்கியம் கிட்டுகிறது. பல குடும்பங்களில் பெற்றோர்களின் கொஞ்சநஞ்ச சொத்தையும் பிரித்துப் பெற்றுக் கொள்ள விழையும் காலம் இது.


முதியவர்களின் பிரச்சனை வளர்ந்துக்கொண்டே இருப்பதால்தான் Dignity foundation போன்ற பல தனியார் தொண்டு நிறுவனங்கள் பல நற்பணிகள் செய்து வருகின்றன. மத்திய அரசும் The Maintenance and Welfare of Parents and Senior Citizens Act 2007’ என்ற சட்டம் நிறை வேற்றியுள்ளது. தமிழகத்தில் 2009-ம் ஆண்டிலிருந்த நடைமுறையில் உள்ளது. இதன்படி பெற்றோர்களை கவனிக்காத பிள்ளைகளுக்கு மூன்று மாதம் வரை தண்டனையும் வரையறுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் கட்டாணமில்லா தொலைபேசி எண்.1256 உள்ளது. அதில் தொடர்பு கொண்டு பாதுகாப்பு கோரலாம் சங்கடங்களுக்கு தீர்வு காணலாம்.


அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்பதை செயல் வடிவில் காட்டுவோம். பெரியவர்களைப் போற்றுபோம்.

----

தேவை தரமான உயர் கல்வி


Infosys என்ற மிகப் பெரிய IT company-யை உருவாக்கிய
திரு. நாராயணமூர்த்தி அவர்கள் சமீபத்தில் ஒரு பொது நிகழச்சியில் பேசும்பொழது IIT-யில் சேரும் மாணவர்களின் தரம் குறைந்து வருவதைப்பற்றி கவலை தெரிவித்துள்ளார்கள். மிக அதிகமான செலவில் உயர்ந்த தொழில் நுட்பக்கல்வியை வழங்கும் Indian Institute of Technology சென்னை, மும்பாய், தில்லி, கான்பூர், கடக்பூர் என்ற இடங்களில் முதலில் துவங்கப்பட்டது. கடினமான நுழைவுத் தேர்வுக்குப்பின் தான் உயர்நிலை பள்ளி முடித்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். IIT -யின் நுழைவுத்தேர்வின் சிறப்பு நுணுக்கமான கேள்வி கேட்கும் முறை. விஞ்ஞானத்திற்கு அடிப்படையான விதிகளை சரியாக புரிந்து கொள்வது மட்டுமில்லாமல் தொழில் நுட்பத்தில் எவ்வாறு உயயோகிக்கலாம் என்பதையும், கடுவினாக்களுக்கு விஞ்ஞானரீதியாக விடையளிப்பது ஆகியவற்றில் சிறப்பாக பதில் கொடுப்பவர்கள்தான் தேர்வில் வெற்றிப் பெற முடியும். காலப்போக்கில் எல்லா நிலைகளிலும் தரம் தேய்வது போல IIT தேர்வு முறையிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது பற்றி திரு. நாராயணமூர்த்தி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த சறுக்கல்ளுக்குக் காரணம் நுழைவுத் தேர்வுக்கு தயார் செய்யும் தனியார் விசேஷப்பள்ளிகள் என்று கூறியுள்ளது நம்மை சிந்திக்கவைக்க வேண்டும்.

நமது கல்விமுறையில் பெரியகுறை பாடங்களை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் ‘rot’ system என்ற முறை. ஆழ்ந்து புரிந்து கொண்டு தொளிவடைவதுதான் உண்மையான பயனுள்ள அறிவை வளர்க்கும். சிலகுறுக்கு வழிமுறைகள் மூலம் மாணவர்கள் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிடுகிறார்கள். ஆனால் அவர்களால் IIT-யில் பயிற்றுவிக்கப்படும் பாடங்களை பயில முடிவதில்லை. IIT யில் பயிலும் 80 சதவிகித மாணவர்களின் நிலை இது தான் என்ற உண்மையை கூறியிருக்கிறார்
திரு. நாராயணமூர்த்தி அவர்கள். IIT -யிலேயே இந்த நிலை என்றால் மற்ற பொறியியல் கல்லூரிகளின் நிலை என்ன என்பதை பற்றி யோசிக்க வேண்டும். ஏதோ கல்லூரிக்குச் சென்றோம் படித்தோம் பட்டம் பெற்றோம் என்றில்லாமல் எதிர்கால சவால்களை சந்திக்க தயார் செய்து கொள்ள வேண்டிய புனித இடம் கல்விக் கூடங்கள். Life time employment வாழ் நாள் முழுவதும் குறைவில்லாமல் வேலை வேண்டும் என்று பேராசை இருக்கிறது.

ஆனால் Life time employability வாழ் நாள் முழுவதும் பணி செய்யக்கூடிய திறன் நம்மிடம் இருக்கிறதா, அதை வளர்த்துக்கொண்டுள்ளோமா என்று பார்க்க வேண்டும்.

பல விதமான கலைகளை பயிற்றுவிப்பதாலும், பயிலுவதற்கு ஊக்கம் அளிப்பாதாலும், பல்கலைக்கழகம் University எனப்படுகிறது. வருடத்திற்கு சுமார் 5 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் கல்லூரிகளிலிருந்து வெளிவருகின்றார்கள். அவர்களில் 20 சதவிகிதம் தான் உரிய வேலைப் பெறுகின்றனர். மற்றவர்கள் பட்டம் இருந்தும் பயனின்றி கிடைத்த வேலையில் காலம் தள்ளுகின்றனர். இந்நிலை மாற வேண்டும் பள்ளிக்கூடங்கள்தான் எதிர்கால இளைஞர்களை உருவாக்குத் தளம். எல்லோருக்கும் ஒரே வழிக்கல்வித் திட்டம் சமச்சீர் கல்வி என்ற சமத்துவ நிலையில் பெருமை கொள்ளாலாம். ஆனால் அது தரமான வலிமையான கல்வித்திட்டமாக மாற வேண்டும்.

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பியதோடு பொறுப்பு முடிவதில்லை. பெற்றோர்களும் ஒரு நிலையில் ஆசிரியர்கள். ஆசிரியர்களும் மாணவர்களுக்கு பெற்றோர்கள் என்பது உண்மையான வாக்கு கல்விப்புரட்சி என்பது கூட்டு முயற்சி. இது பற்றி தேவை சமுதாய விழிப்புணர்வு. கல்வித்தரம் எல்லா நிலையிலும் மேன்மையடைய வேண்டும்.

--------