1947-ம் வருடத்திற்குப் பிறகு சுதந்திர இந்தியாவில் பிறந்தவர்களுக்கு ஒரு புறம் சுதந்திர நாட்டில் பிறந்தோம் என்ற நிம்மதி இருந்தாலும், மறுபுறம் ஆரம்ப காலகட்டத்தில் நாடு சந்திக்க நேர்ந்த சமுதாய, பொருளாதார, பாதுகாப்பு பிரச்சனைகளால் மகிழ்ச்சிகரமான இளமைக்காலமாக இருந்திருக்க முடியாது, 1960-ல் இருந்து 1971 வரை மூன்று போர்களை இந்தியா எதிர்கொண்டது. அதனால் நாட்டின் பொருளாதாரம் பின்னடைந்தது. வேலையில்லா திண்டாட்டம் பெருகியது. பொறியியல் முடித்த இளைஞர்களுக்கு வேலையில்லை. அரசாங்க உத்தியோகம் ஒன்றையே நம்பியிருக்க வேண்டிய நிலைமை. அப்போது வங்கிகள் தேசியமயமாக்கியதைத் தொடர்ந்து வங்கி வேலைகளுக்கு போட்டா போட்டி இருந்தது.
1973ம் வருடம் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் அரபு நாடுகள் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தியதால் உலக பொருளாதாரத்தில் ஒரு மாறுதல் மட்டுமல்லாமல் புரட்சியே ஏற்பட்டது. எல்லா நாடுகளிலும் எரிசக்தி பற்றாக்குறையால் பல துறைகளில் நெருக்கடி ஏற்பட்டன. இதில் ஒரு பிரகாசமான விளைவு கச்சா எண்ணெய் தயாரிக்கும் அரபு நாடுகள் திடீரென்று செல்வத்தில் கொழித்தன. அங்கு வேலைவாய்ப்புகள் பெருகின. வாய்ப்பில்லாமல் திணறிய இந்திய இளைஞர்களுக்கு அது வரப்பிரசாதமாக அமைந்தது. ஆயிரக்கணக்கான பட்டதாரிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கணக்கர்கள், கட்டுமானப்பணியில் தேர்ச்சி பெற்றவர்கள் வளமையை தேடி பயணித்து பயன்பெற்றனர்.
மேல்நோக்கி செல்லும் எந்த ஒரு நிகழ்வும் சமன் நிலையை அடையும். இந்த தெவிட்டு நிலை அடைந்தபோது தான் பஞ்சாப் தீவிரவாதிகள் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு உலைவைக்கும் வகையில் உருவாக்கிய உள்நாட்டு பிரச்சனையை சந்திக்க நேர்ந்தது. நக்சலைட் பிரச்சனையும் மீண்டும் தலைதூக்கியது. வடகிழக்கு மாநிலங்களில் உல்பா தீவிரவாதிகளின் போராட்டம், இலங்கை தமிழர்கள் பிரச்சனையின் தாக்கம் என்று பல்முனை காளான்கள் நாட்டில் முளைத்தன.
சரியான தருணம் தேவையான மனிதரை தோற்றுவிக்கும் என்பதற்கேற்ப ராஜுவ்காந்தி இந்தியப் பிரதமரானார். இளமை பொங்கும் வசீகரமான தோற்றம், எவரையும் கவரக்கூடிய சிரிப்பு, சிரத்தை, ஈடுபாடு, துணிவு, எளிமை என்று ஆளுமையின் குணாதிசியங்கள் பொருந்திய தலைமை நாட்டிற்கு புத்துணர்ச்சி ஊட்டியது. குறுகிய காலத்தில் எல்லாவற்றையும் சாதிக்க வேண்டும் என்ற உந்துதல் தேவையானதுதான் ஆனால் அதை சகிக்க முடியாத தீவிரவாதிகளின் சூழ்ச்சி ஒரு உன்னத மனிதரை அழித்தது.
ஸ்ரீபெரும்புதூர் குண்டு வெடிப்பில் இறந்தவர்களின் நினைவாக ஒவ்வொரு வருடமும் மே 21ம் நாள் தீவிரவாத ஒழிப்பு நாளாக அனுசரிக்கப்படுகிறது. தீவிரவாதத்தை ஒழிப்போம், ஜனநாயக முறையில் அரசியல் அமைப்பிற்கு உட்பட்டு நமது கடமையாற்றுவோம் என்ற உறுதிமொழி எடுக்கப்படுகிறது. ஆனால் அந்த உறுதிமொழி செயலாக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
1991ல் இருந்து எவ்வளவு வன்முறைகள், பாப்ரிமஸ்ஜித் இடிப்பு, 1993ல் மும்பை தொடர் குண்டு வெடிப்புகள், 1998ல் கோயம்புத்தூர் தொடர் குண்டுவெடிப்பு, இனக்கலவரங்கள், ஜாதிச்சண்டைகள், பலநகரங்களில் தீவிரவாத குண்டுவெடிப்புகள், மும்பையில் உலகையே அதிரவைத்த 26/11 தாக்குதல் இப்போது மீண்டும் மாவோயிஸ்டு தீவிரவாதம் என்று நிகழ்வுகள் அடுக்கடுக்காக வந்து கொண்டிருக்கின்றன.
ஏன் நாம் தீவிரவாதத்தை ஒழிக்க முடியாமல் தவிக்கிறோம்? சட்டங்கள், நிலையாணைகள் இருக்கின்றன. பயிற்சி பெற்ற பாதுகாப்பு படையினர் உள்ளனர். உலகிலேயே அதிக பட்டாலியன்களைக் கொண்ட துணை ராணுவப்படை மத்திய ரிசர்வ் படை. க்ரௌன் ரிசர்வ் படை என்று 1939ல் உருவாக்கப்பட்ட மத்திய ரிசர்வ் படை இந்தியாவின் அமைதியை நிலைநாட்டுவதற்கு மூலை முடுக்கில் எல்லாம் பணிசெய்திருக்கிறது. ‘உள்நாட்டு அமைதியின் பாதுகாவலன்’ என்ற புகழ்மொழிக்கேற்ப பணியாற்றும் திறன் படைத்த காவலர்களைக் கொண்டது. ஒரு உண்மையான போர் வீரனுக்கு இலட்சணம் சாதுர்யமாக போராடி எதிரியை வீழ்த்த வேண்டும். வீழ்ந்தாலும் போர்க்களத்தில் பேராண்மையோடு சண்டையிட்டு வீரமரணம் அடையவேண்டும். அந்த விதத்தில் மத்திய படைவீரர்கள் மாவோயிஸ்ட் தாக்குதலில் வீறுகொண்டு எதிர் தாக்குதல் நடத்திய பின்னரே வீர மரணம் எய்தினர். போர்க்களத்தின் உண்மை நிலை அறியாது வாய்க்கூசாமல் குறைகூறும் வாய்ச்சவடால் சுயவிளம்பர வல்லுநர்களை என்னவென்று சொல்வது. துளியேனும் தேசப்பற்று இருந்தால் மனைவி மக்களைத் துறந்து நாட்டின் நலன் ஒன்றையே மனதில் தாங்கி போராடும் வீரர்களை குறைகூறத் தோன்றுமா?
சமீபத்தில் அண்டை மாநிலம் ஆந்திராவில் ஒரு அரசியல் தலைவர் கைது செய்யப்பட்டதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். ரெயில் பெட்டிகளை தீயிட்டு கொளுத்தினர். அரசு சொத்து நாசமாக்கப்பட்டது. வன்முறையில் ஈடுபட்டவர்களில் இளைஞர்கள், படித்தவர்கள் இருந்தும் ஏன் இந்த ஒழுக்கமற்ற அநாகரிக நடத்தை?
கல்விக்கூடங்கள் தொழிற்சாலைகள் நவீன இந்தியாவின் கோவில்கள் என்று போற்றுகிறோம். ஆனால் அங்கு சிறு பிரச்சனை வந்தாலும் நாசவேலை காணமுடிகிறது. சென்னைக்கு அருகில் ஒரு பொறியியல் கல்லூரியின் மாணவிகள் தங்கும் விடுதியில் ஒரு மாணவியின் இறப்பு தற்கொலையா, அதற்கு காரணம் என்ன என்ற விசாரணையை துவங்குவதற்கு முன்னர் சகமாணவர்கள் வன்முறையில் இறங்குகின்றனர். அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் கணினிகளும், மேஜை நாற்காலிகளும் அடித்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. கணநேரத்தில் வன்முறை தலைதூக்குகிறது.
வன்முறை கலாச்சாரம் வளர்வதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. பல நிலைகளில் கசப்பான ஆனால் சரியான முடிவுகள் உரிய தருணத்தில் எடுக்காமல் பின்வாங்குதல் ஒரு முக்கியமான காரணம். பள்ளிகளில் தவறுசெய்யும் மாணவனைக் கண்டித்தால் ஆசிரியர் மீது வீண்பழி சுமத்தப்படுகிறது. அலுவலகங்களிலும், தொழிற்சாலைகளிலும் தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம்.
எந்த ஒரு நிகழ்வு என்றாலும் ஊடகங்கள் அதை படம்பிடித்து காட்டுகின்றன. காவல் துறையினர் தாக்கப்படுவதையும் காண்பிக்கின்றனர். தமக்கு காயம் ஏற்பட்டாலும் நிலைமையை சுமுகமாக சமாளிக்க வேண்டும் என்று அவர்கள் போராடுவது பாராட்டப்படுவதில்லை. இதுவே மற்ற வன்முறையாளர்களுக்கு தூண்டுகோலாக அமைந்து விடுகிறது.
வன்முறை சம்பங்களை தொடர்ந்து பார்க்கும் பொழுது உணர்வுகள் மறத்துவிடுகின்றன. மனோதத்துவ நிபுணர்களின் கருத்துப்படி இக்காட்சிகளைப் பார்க்கும் இளைஞர்களுக்கு வன்முறையில் இறங்கினால் தான் சாதிக்கமுடியும் என்ற எண்ணமும் மற்றவர்கள் தம்மை கண்டு பயப்பட வேண்டும் என்ற அடிப்படை ஆதிக்க குணமும் மேலோங்கும். மேலைநாட்டு வன்முறை விரசகாட்சிகள் தோய்ந்த தொலைக்காட்சி கலாச்சாரம் நமது நாட்டிலும் உலகமயமாக்க தாக்கத்தில் வந்துவிட்டது. குழந்தைகள் பார்க்கக்கூடாத பாலியல் காட்சிகள், குடும்பங்களில் கைகலப்பு, பெண்கள் அடிக்கப்படுவது, சீருடை அணிந்த காவலர்களை இழிவு படுத்துதல் போலிஸார் அடிக்கப்படும் காட்சிகள், நடனம் என்ற போர்வையில் விரசமான அசைவுகள், குழந்தைகளை வயதுக்கு மீறிய நடனமாடச்செய்வது சகிக்கமுடியாத பாடலுக்கு ஆடவைப்பது என்று பலவகையான காட்சிகள் தொலைக்காட்சி மூலமாக வீட்டின் வரவேற்பறைக்கு வந்துவிட்டன. பணம் பண்ணுவது தான் குறி சமுதாயம் சீரழிந்தால் கவலையில்லை என்றநிலை வருந்தத்தக்கது.
பல திசைகளிலிருந்து நல்லது கெட்டதுமான தகவல் கதிர்களின் தாக்கத்தின் இடையே நாட்டின் எதிர்கால ஒளிவிளக்கான இளைஞர்களுக்கு முன்னேற்றப்பாதையை அமைப்பது சமுதாயத்தின் பொறுப்பு. அப்துல்கலாம் அவர்கள் 2020ல் இந்தியா வல்லரசாக வாய்ப்பு உள்ளது என்று நம்பிக்கை தெரிவித்ததற்கு முக்கிய காரணம் இந்தியாவின் இளமையான ஜனத்தொகை. இப்போது மக்கள்தொகை கணக்கெடுப்பு துவங்கியிருக்கிறது. 20 வயதிலிருந்து 40 வயதுக்கு உட்பட்ட இளைய வயதினர் ஜனத்தொகையில் 36 சதவிகிதம். சைனாவுக்கு அடுத்து உழைக்கக்கூடிய இளம்வயதினர் அதிகமாக உள்ள நாடு நமது நாடு என்று பெருமை கொள்ளலாம். இது தான் நமது வலிமை. இந்த உழைக்கும் வர்க்கம் நன்றாக உழைத்தால் தான் நாடு முன்னேறும். நேர்மையான உழைப்புதான் முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்ற சூழலை உருவாக்க வேண்டும். அதுதான் உழைப்பதற்கு தூண்டுகோலாக அமையும் எதையும் சுலபமாக அடைந்து விடலாம் என்ற நிலை ஆபத்தானது. ஏனெனில் நினைத்தது கிடைக்காவில் அது ஒருவரது பொறுமையையும் நிதானத்தையும் இழக்கச்செய்து வன்முறைக்கு வழிவகுக்கிறது.
உழைப்பு அவரவர் மனநிலையை பொறுத்து மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஒன்று வெறும் கூலிக்காக கடனே என்று ‘கழப்பணி’ செய்வது, இரண்டாவது உடல் வருந்த உண்மையாக உழைப்பது, மூன்றாவது வகை தன்னலமற்று சமுதாய நன்மைக்காக உழைப்பது, தன்னலமற்ற இந்த தெய்வ மனிதர்கள் ஒரு சிலரே உள்ளனர் என்கிறார் சுவாமி விவேகானந்தர். பலர் தமக்கு நன்மை செய்து கொண்டு தமக்கு தீங்கு வராத வகையில் மற்றவர்க்கு சில நன்மை செய்வார்கள். ஆனால் மற்றொரு வகையான மனிதர்கள் பிறருக்கு தீங்கு இழைக்கவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தீங்கிழைப்பார்கள். இதையும் மீறி நல்லவர்களின் ஆதிக்கம் வளர வேண்டும் என்றால் அதற்கு அசுர உழைப்பு தேவை.
நல்லவர்களாக இருப்பதே வளமையான கலாச்சாரத்தின் அடையாளம். மற்றவர்களுக்கு தீங்கு இழைப்பதை சிந்தனையாலும் கூடாது என்று ‘மனத்துக்கண் மாசிலன் ஆதலே’ உயர்ந்த அறம் என்கிறார் வள்ளுவர் பெருமான்.
சுதந்திர இந்தியாவில் பிறந்தவர்கள் இன்று பெரியவர்கள். இளைஞர்களுக்கு முன்மாதிரியாக அவர்கள் நடத்தையும் இருக்க வேண்டும். நிறைவான வழிகாட்டுதலையும் தரவேண்டும். தாய் தாயாகவும், தந்தை தந்தையாகவும், ஆசிரியர் ஆசிரியராகவும் இருந்தால் தான் மகன் மகனாக இருப்பார். நாடு நாடாக வளம் பெறும். ஒவ்வொருவரும் தமது நிலையில் உண்மையாக கடைமையாற்ற வேண்டும். சிறுமையைக் கண்டு பொங்க வேண்டும். வன்முறையைக் களைய வேண்டும். அத்தகைய முனைப்பான மெய்வருத்தம்தான் கூலிதரும்.