Monday, August 24, 2009

கண்ணி வெடி

கண்ணி வெடி
1993 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் பர்கூர் மலைப்பகுதியில் கொடூரன் விரப்பனின் அட்டகாசம் உச்சகட்டத்தில் இருந்த நேரம். மேட்டூரிலிருந்து மலை மாதேஸ்வரன் மலைக்குச் செல்லும் பாதை கொளத்தூரைத் தாண்டி பரந்து விரியும் கவின்மிகு காவிரி மற்றும் பசுமையான மலைப்பகுதியைப் படம் பிடித்து காட்டும் பாலாறு செக்போஸ்ட், கர்நாடக மாநிலம் எல்லை துவக்கத்தில் அமைந்துள்ளது. அதைத்தாண்டி வனப்பகுதிக்குச் செல்லும் பாதையில் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள், வனத்துறை அலுவலர்களை தாங்கிய வண்டி பாலாறு படுகையில் சொரக்காய்மடுவு என்ற இடத்தில் கண்ணி வெடித் தாக்குதலில் சிக்கி 22 உயிர்களை பலிகொண்டது. வீரப்பன் அந்த காட்டுப்பாதையில் 14 இடங்களில் வரிசையாக கண்ணிவெடி வைத்திருந்தான். அவ்வளவும் வெடித்தன. திட்டமிட்டு பட்டப்பகலில் தனது வெறிச்செயலை நிறைவேற்றினான்.
இதே போன்று சட்டீஸ்கர் மாநிலத்தில் இந்த வருடம் ஜுன் 26ம் தேதி நெஞ்சை உலுக்கும் கொடூரம் நிகழ்ந்தது. காங்கர் மாவட்டம் ராஜநத்த கிராமப் பகுதிகளில் திட்டமிட்ட மாவோயிஸ்ட் தாக்குதலில் காவல் கண்காணிப்பாளர் வினோத்குமார் சௌபே உட்பட 30 கமாண்டோ படையினர் கண்ணி வெடிக்கு பலியாயினர். கண்ணிவெடிக்கு பாதுகாப்பு படையினர் உயிர் பலியாவது புதிதல்ல. அதுவும் மாவோயிஸ்டுகள் தொடர்ந்து பலமாநிலங்களில் காவல் துறையினரையும், பாதுகாப்பு படையினரையும் எதிர்கொண்டு நடத்திவரும் தாக்குதல் இந்திய இறையாண்மைக்கே ஒரு சவாலாகவும் பெரும் பிரச்சனையாகவும் உருவெடுத்துள்ளது.

ராய்பூரை தலைநகராகக் கொண்ட சட்டீஸ்கர் மாநிலம் மத்தியபிரதேச மாநிலத்திலிருந்து நவம்பர் மாதம் 2000 வருடம் பிரிக்கப்பட்டு தனி மாநிலமாக இயங்கி வருகிறது. பஸ்டார் போன்ற மலைவாழ் மக்கள், பழங்குடியினர் அதிகமாக உள்ள பகுதிகளைக் கொண்டது. இத்தகைய பின்தங்கிய பகுதிகளில் முன்னேற்றத்தின் பலன் விரைவில் கிடைக்கவேண்டும் என்ற ஒரு நோக்கத்தில் தான் சட்டீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது. மக்களோடு தொடர்பு கொண்டு பணியாற்ற வேண்டிய அரசு ஊழியர்களின் மெத்தனப்போக்கும் ஊழலும் தான் சிலப் பகுதிகளின் பின்தங்கிய நிலைக்குக் காரணம் என்பதை மறுக்க முடியாது. இத்தகைய சூழ்நிலையில் அவர்களது ஏழ்மையை பயன்படுத்தி நியாயமான தேவைகள் பூர்த்தி அடையாது என்றும் அபகரித்தல் தான் ஒரே வழி என்று நிர்வாகத்திற்கு எதிராக தூண்டுவது பயங்கரவாதிகளுக்கு எளிதாகிவிடுகிறது. சில்லரை ஆதாயத்துக்காக உள்ளூர் அரசியல்வாதிகள் இவர்களை ஆதரிப்பது பிரச்சனையை மேலும் வளர்க்கிறது.

1971 ம் வருடம் நக்சல்பாரி என்ற மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரி அருகில் அமைந்துள்ள கிராமத்தில் இருந்து சிவப்பு பயங்கரவாத பி.டபிள்யூ,ஜி இயக்கம் நமது நாட்டின் பல மாநிலங்களில் ஊடுருவியது. கிராமப்புறங்களில் விவசாயத்தை நம்பி இருக்கும் மக்களுக்கு உரிய நேரத்தில் பணஉதவி என்பது பெரிய பிரச்சனை. இந்த நிலையை வைத்து மக்களை சுரண்டி பிழைப்பு நடத்தும் ஈட்டி வட்டிக்காரர்கள், மந்தமான நிர்வாகம், ஊழலில் தழைக்கும் அரசு ஊழியர்கள் இவை பயங்கரவாத காளான்களை வளர்க்கும் உரங்கள். இத்தகைய சூழலில் இளைஞர்களை தம்வசப்படுத்துவது பயங்கரவாதிகளுக்கு எளிதாகிறது. 1970, 80ல் தலைதூக்கி பரவிய இந்த சிவப்பு ஆதிக்கம் பல மாநிலங்களில் முக்கியமாக மேற்குவங்காளம், பிஉறார், ஜார்க்கன்ட், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ஒரிசா, ஆந்திரா, மஉறாராஷ்டிராவின் சில இடங்களில் வேறூன்றியது. வேறூன்றிய இடங்கள் வன்முறையே நடைமுறை என்ற அளவில் வன்முறை களங்களாக மாறின. பல மாநிலங்களை ஊடுருவிய இந்த வன்கள இடவெளி முன்னேற்றப் பாதையை தடுத்து நிறுத்தும் சிவப்பு விளக்குகளாக அமைந்துள்ளது. இந்த வருடம் முதல் ஐந்து மாதங்களில் பீஉறார், ஒரிசா, ஜார்க்கண்ட், சட்டீஸ்கள் மாநிலங்களைச் சேர்ந்த 162 பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் வட ஆற்காடு, தர்மபுரி மாவட்டங்களில் பயங்கரவாதம் தலைதுக்கியபோது எடுத்த கடுமையான பல்முனை நடவடிக்கையால் நக்சலைட்டுகள் முறியடிக்கப்பட்டனர். தமிழகத்திலும் ஆந்திரமாநிலத்திலும் எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கை மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக வைக்கப்படுகிறது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் கொடைக்கானலில் நவீன் என்ற பிரஷாந்த் மற்றும் இந்த வருடம் வெகுநாட்களாக தலைமறைவாக இருந்த சுந்தரமூர்த்தி, தமிழ்வாணன், நொண்டி பழநி போன்றவர்கள் தமிழக போலிஸின் க்யூ பிராஞ்ச் பிரிவினரது தீர்க்கமான நடவடிக்கையால் பிடிபட்டனர்.

மக்களுடைய பிரச்சனைகளை முன்வைத்து அவர்களுக்கு நியாயம் கிடைக்க போராட்டம் என்ற போர்வையில் தாக்குதலில் ஈடுபடும் இத்தகைய கொடுமைக்காரர்களை எதிர்கொள்வதில் பல பிரச்சனைகள் உள்ளன. பெண்களையும், குழந்தைகளையும் பலிக்கடாக்களாக முன்வைத்து ஒளிந்து தாக்குதல் நடத்தும் கயவர்களை ஒடுக்க பாதுகாப்புப் படையினர் நடத்தும் எதிர்தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியாக வாய்ப்புள்ளது. அதையே தமக்கு சாதகமாக வைத்து மேலும் நிர்வாகத்தின் மீது பிரச்சாரம் செய்வதற்கு கணைத்துளிகள் கிடைத்து விடுகிறது. மனித உரிமைகள் பாதுகாப்பு என்று பறைசாற்றிக் கொண்டு அமைக்கப்பட்ட தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக களத்தில் இறங்கி போராடுவது முடிவில் மறைமுகமாக பயங்கரவாதிகளுக்கு சாதகமாக அமைவது கண்கூடு. இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு கவனமாக மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பாதுகாப்புப் பணியினரின் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

கண்ணிவெடி வைத்து மறைமுகமாக தாக்குதல் நடத்துவது கொரில்லா போர் முறையின் முக்கிய அம்சமாகும். போர் தொடுப்பதில் சில விதிமுறைகள் இருக்கின்றன. சம்பரதயாத்திற்கும் போர்விதிகளுக்கும் கட்டுப்படாத முறையற்ற யுத்தம் கொரில்லா முறைப்போர் எனலாம். இத்தகைய தாக்குதலை முறியடிப்பதற்கு கொரில்லாவினர் தொடுக்கும் அதே முறையை பின்பற்றினால்தான் வெற்றியடைய முடியும். பயங்கரவாதிகள் தங்களது பல முயற்சிகளில் ஒருமுறை வெற்றிபெற்றாலும் காவல்துறைக்கு பெரிய பின்னடைவு. காவல்துறை ஒவ்வொரு முறையும் தாக்குதலைத் தவிர்ப்பதில் வெற்றியடைய வேண்டும். இது சராசரி கணக்கை விஞ்சி சாதிக்கவேண்டிய குறியீடு.
எங்கு சம்பவம் நிகழ்ந்தாலும் உடனடியாக சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர் என்று தான் செய்திவரும். அதுதான் மக்களின் எதிர்பார்ப்பும் கூட. ஆனால் கொரில்லா முறையில் போர்த்தொடுக்கும் பயங்கரவாதிகளை எதிர்கொள்ள சாதாரண நடைமுறைகள் பயன்படாது. அதிலும் வனப்பகுதியிலும், மலைப்பகுதியிலும் ஒளிந்து தாக்குபவர்களை திட்டமிட்டு சமயோஜிதத்தோடு எதிர்தாக்குதல் நடத்தவேண்டும்.

வனப்பகுதியில் வீரப்பன் நடத்திய தாக்குதலுக்கும், சட்டீஸ்கர் காங்கர் மாவட்ட தாக்குதலுக்கும் நிறைய ஒற்றுமை காணமுடிகிறது. முதலில் பாதுகாப்புப் படையினரை உசுப்பும் விதத்தில் ஒரு சிறிய தாக்குதல் நடத்தி அவர்களை ஈர்ப்பதற்கு பயங்கரவாதிகள் தமது நடமாட்டத்தை ஒரு பகுதியில் வெளிப்படையாக காட்டிக் கொள்வார்கள். இவர்களது நடமாட்டம் பற்றிய தகவல் காவல்துறைக்கு வரும். அவர்களும் அரிய சந்தர்ப்பம் கிடைத்தது என்று எதிர்தாக்குதலுக்கு விரைந்து செல்வார்கள். காவல்துறையின் இந்த அணுகுமுறைக்கு இரண்டு காரணங்கள் உண்டு. கிடைத்த தகவலை செயலாக்க வேண்டும் என்ற ஆர்வம், உரிய நேரத்தில் செல்லவில்லை என்றால் ஏன் உடனடியாக செயல்படவில்லை என்ற கேள்வி எழும்.

வீரப்பன் பர்கூர் காட்டுப்பகுதியில் அதிடிப்படை நுழையமுடியாத வகையிலும் பன்முனைத் தாக்குதலுக்கு உட்படுத்தவும் பல இடங்களில் வெடிப் பொருட்களை புதைத்து பேட்டரி மூலம் இயக்குவதற்கு தயார் நிலையில் வைத்திருந்தான். 1993ம் ஆண்டு ஏப்ரல் மாத சம்பவத்தில் வீரப்பன் அதிரடிப்படையினரை கிளரும் வகையில் அவர்களைப்பற்றி தரக்குறைவாக செய்தியை பரப்பினான். அவனுக்குத் தெரியும் அதிரடிப்படைக்கு உளவு சொல்பவர்கள் மூலம் இச்செய்தி அவர்களுக்கு சென்றடையும் என்று. அவன் எதிர்பார்த்தது போல் அதிரடிப்படை கண்காணிப்பாளர் தலைமையில் தேடுதல் வேட்டையில் இறங்கினர். வீரப்பன் விரித்த வலையில் சிக்கினர்.

ஜுன் 26ஆம் தேதி சட்டீஸ்கரில் நடந்த மாவோயிஸ்ட் தாக்குதலும் இவ்வாறே நிகழ்ந்தது. அவர்களது கை ஓங்கி உள்ள இடம் தாண்டேவாடே என்ற பகுதி. சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் மதன்வாடா என்ற கிராமத்தில் பாதுகாப்புப் படையினர் புதிய கண்காணிப்பு செக்போஸ்ட் அமைத்திருந்தனர். அந்த செக்போஸ்டிலிருந்து காலைக் கடனுக்குச் சென்ற இரு காவலர்களை கடத்திச் சென்றனர். இது தொடர்பாக பாதுகாப்புப் படையினர் பெரிய அளவில் எதிர் தாக்குதல் நடத்துவார்கள் என்று மாவோயிட்டுகள் காத்திருந்தனர். அவர்களது எதிர்பார்ப்பு வீணாகவில்லை. எஸ்.பி தலைமையில் பாதுகாப்புப் படையினர் வனப்பகுதிக்கு விரைந்து சென்றனர். கண்ணி வெடித் தாக்குதலில் மாண்டனர்.

பயங்கரவாத எதிர்முனை தாக்குதல் மற்றும் வனப்பகுதியில் கொரில்லா தாக்குதல் ஆகியவற்றிற்கு பயிற்சி அளிக்கும் ராணுவப்பள்ளியில் போதகராக இருக்கும் ஓய்வு பெற்ற ராணுவ தளவாய் போன்வார் என்பவர் இந்த தாக்குதல் நிகழாமல் தடுத்திருக்கலாம் என்றும் காட்டுப்பகுதியில் எதிர் தாக்குதல் நடத்தும்பொழுது வாகனங்களை உபயோகப்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளார். மேலும் ‘ வி‘ வடிவில் பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கையாக முன்னேற வேண்டும் என்ற அடிப்படை விதிகள் கடைப்பிடிக்கர்ததை குறை கூறுகிறார். எவ்வாறு போக்குவரத்து விதிகள் அனுசரிக்கப்படாவிட்டால் விபத்து நிகழுமோ அவ்வாறு கொரில்லா போர்முறைகள் கடைபிடிக்காவிட்டால் இம்மாதிரி உயிரிழப்பு ஏற்படும் என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் வன்கள இடவெளியில் இயங்கும் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள், எல்லைக்கடந்த பயங்கரவாத இயக்கமான லக்ஷர்-இ-தோய்பாவோடு தொடர்பு ஏற்படுத்தியுள்ளனர் என்பது கவலைக்குரிய விஷயம். பயங்கரவாதம் முளையிலேயே கிள்ளி எரியப்படவேண்டும். ஆனால் பல சந்தர்ப்பங்களில் பிரச்னைகள் வளர்ந்துவிடுகிறது. முதலில் நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில் சுணக்கம் காட்டுகிறது. பல உயிர்கள் பலியான பிறகுதான் விழித்துக்கொண்டு செயல்படுகிறது. மேற்கு வங்காளம், மிதினிபூர் மாவட்டம் லால்காரில் பாதுகாப்புப் படையினர் எடுத்த வலிமையான நடவடிக்கை இதற்கு எடுத்துக்காட்டு. நிர்வாகத்தை உள்ளே நுழையவிடாமல் அப்பாவிப் பொதுமக்களை முந்நிறுத்தி முதலில் போராடிய மாவேயிஸ்டுகள் முழுமையான அதிரடிப்படையினரின் பதிலடியில் சுருண்டுவிட்டனர்.
பொதுமக்களும் எங்கு பலம் இருக்கிறதோ அங்குதான் சாய்வார்கள். பயங்கரவாதிகள் ஆதிக்கம் அதிகமாக இருந்தால் பயத்தில் காவல்துறையோடு ஒத்துழைக்க அஞ்சுவார்கள். வலிமையான நிர்வாகம் பாதுகாப்புப் படையின் மூலம் பயங்கரவாதிகளை எதிர்த்தால் பொதுமக்கள் நிர்வாகத்தோடு இணைந்து அமைதி ஏற்பட ஒத்துழைப்பார்கள். பஞ்சாப், அஸ்ஸாம், மேற்கு வங்காளம் போன்ற பல மாநிலங்களில் இந்நிலையை காணமுடியும்.
பலநூதன முறைகளில் வெடிமருந்து பயங்கரவாதிகளால் கையாளப்பட்டு பெருத்த சேதம் விளைவிக்கப்படுகிறது. கடிகாரமுள் மூலம் மின்இணைப்பை குறித்த நேரத்தில் ஏற்படுத்தி அதனால் உண்டாகும் பொறிமூலம் வெடிக்கவைப்பது, அழுத்தம் மூலமாகவும் தொலைவில் இருந்து கதிர் அலைகள் மூலமாகவும், செல்போன் மூலமாகவும் கண்ணிவெடிகளை இயக்க முடியும். 1867ஆம் வருடம் வெடிமருந்தைக் கண்டுபிடித்த ஸ்வீடன் நாட்டைச் சார்ந்த ஆல்பிரட் நோபல் இந்த அளவிற்கு உலகிற்கும் மனித சமுதாயத்திற்கும் அவரது கண்டுபிடிப்பு கேடுவிளைவிக்கும் என்று எண்ணியிருக்கமாட்டார். அதனால் தானோ என்னவோ அவரது பெயரில் பலதுறைகளில் கண்டுபிடிப்புகளுக்கு கொடுக்கப்படும் நோபல் பரிசு உலக அமைதிக்காகவும் அளிக்கப்படுகிறது.

சுதந்திரத்திற்கும் ஒற்றுமைக்கும் ஊறுவிளைவிக்கும் பயங்கரவாதத்தை முறியடிக்க ஒருங்கிணைந்த முயற்சி எடுக்க வேண்டும். நிரந்தர விழிப்புணர்வே நமது சுதந்திரம் நிலைப்பதற்கும் நாட்டின் பாதுகாப்பிற்கும் நாம் அளிக்கக்கூடிய அர்ப்பணிப்பு.

This Article is published in Dinamani Newspaper on 22.08.2009

Tuesday, August 4, 2009

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் . . . . .


குற்றம் புரிபவர்களை சமுதாயம் ஒரு சுமையாகவே பார்க்கிறது. குற்ற நிகழ்வுக்கு சமுதயாத்தில் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவிதத்தில் காரணமாகிறோம் என்பதை மறந்து விடுகிறோம். குற்றவாளிகளை சிறை என்ற கூண்டில் அடைப்பதோடு நாம் திருப்தி அடைந்து விடமுடியுமா? குற்றம் புரிபவர்களை நல்வழிப்படுத்தி மாற்றுப்பாதை வகுப்பது சிறை நிர்வாகத்திற்கு மட்டுமின்றி சமுதாயத்திற்கும் முக்கிய பங்கு இருக்கிறது.

சிறைவாசம் அது ஒரு அலாதியான வாசம். அங்கு அடிக்கக்கூடிய காற்று, க்ரோதம், துவேஷம், விரோதம் இவற்றின் கலவை. அங்கு பணியில் இருக்கும் காவலர்களுக்கும், அவர்கள் பாதுகாக்கும் இல்லவாசிகளுக்கும் வித்தியாசம் பெரிதாக ஒன்றுமில்லை. நிர்வாகத்தால் ஒருசாரார் பராமரிக்கப்படுகின்றனர் மற்றொருவர் சம்பளம் பெறுகின்றனர். உண்மை, நேர்மை என்பதற்கு இடமில்லை. சிறைக்கு வருபவர்களை கொடுமைப்படுத்துவதில் அலாதி இன்பம், தவறு செய்தவரை பிரம்பால் அடித்து கை வலிக்கிறது என்று சலிப்போடு தற்பெருமை அடித்துக் கொள்ளும் வீரர்கள் இத்தகைய நிர்வாகத்தை சீர்செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு 1832 முதல் பல சிறை சீர்திருத்த கமிஷன்கள் ஏற்படுத்தப்பட்டு சிறை நிர்வாகம் குற்றவாளிகளை திருத்த வேண்டும் ‘தவறு செய்தவன் வருந்தியாகணும், தப்பு செய்தவன் திருந்தியாகணும்’ என்ற அடிப்படையில் அவர்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டுள்ளது.

ஒரு நிர்வாகத்தை மேம்படுத்த முயற்சிகள் எடுப்பது பொறுப்புள்ளவர்களின் கடமை. எந்த ஒரு மாறுதலுக்கும் தட்ங்கல் இருக்கத்தான் செய்யும். பொதுவாக மாறுதலை விரும்பாது இருந்த இடம் பள்ளம் என்று பழகிப்போனதில் சுகமும், பாதுகாப்பும் நாடுவது மனித இயல்பு. மாற்றுப்பாதையில் என்னென்ன சவால்களை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சம், புதிய நுட்பங்களை அறிவதில் எடுக்கவேண்டிய முயற்சிகளை எண்ணி சோம்பிக்கொண்டு தவிர்க்கும் மனப்பான்மை, என்று மேம்படுத்துதலுக்கு தடைக்கற்கள் பட்டியல் கண்க்கில் அடங்காதது. பல சிறை சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருத்தலுக்கும், எடுக்க எத்தனித்தாலும் முடிக்காமல் போவதற்கும் காரணமாக அமைந்துவிடுகின்றன.

குற்றம்புரிபவர்களை திருத்தமுடியாது, நாய் வாலை நிமிர்த்த முடியாது என்று அசையாத நம்பிக்கை கொண்டவர்கள் பலர், குற்றம் புரிந்தவர்கள் வருத்தத்தை அனுபவிக்க வேண்டும் என விரும்புபவர்கள் சிலர். குற்றவாளிகள் கொடுமைக்கு உட்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்போர் சிலர். குற்றவாளிகளுக்கு ஏன் சலுகைகளும் அடிப்படை வசதிகளும் கொடுக்க வேண்டும் என கேள்வி எழுப்புபவர்கள் ஒரு சாரர். தாம் முயற்சி எடுத்து குற்றம் புரிந்தவர்களுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனைப் பெற்றவர் முழுமையாக அனுபவிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் காவல்துறை. அவர்களும் மனிதர்கள், அவர்களது மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்கு மாற்றுப் பாதை அமைத்து சமுதாயத்தோடு இணைவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நல்லுணர்வோடு உள்ளவர்கள் வெகு சிலரே.

குற்றங்கள் நிகழ்வதற்கான காரணம், குற்றங்களில் ஏன் சிலர் ஈடுபடுகிறார்கள் என்பதற்கு உளவியல் பொருளாதார ரீதியாக பல அனுமானங்களை முன்வைக்கலாம். மேலை நாடுகளில் வசதி இருந்தும் குற்றங்களில் ஈடுபடுவதையே தொழிலாகக் கொண்டுள்ளவர்கள் பலர். ஆனால் நமது நாட்டில் போதாமையினால் தான் பலர் குற்றங்களில் உழல்கின்றனர். படிப்பறிவில்லாததினால் நல்லது கெட்டது தெரிய வாய்ப்பின்றி சுலபமாக குற்றப்பாதையில் ஈர்க்கப்படுகின்றனர். ஏழை மக்கள், சமுதாயத்தில் நலிந்த பிரிவினர் குற்றவலையில் சிக்கி சிறையிலடப்படுகின்றனர். சட்டம் தனது கடமையை இத்தகைய மக்கள் மீது மட்டும் எவ்வாறு குறைவில்லாமல் செய்கிறது?

இந்திய சிறைச்சாலைகளில் உள்ள சீர்குலைந்த நிலையைப் பார்த்து முன்னாள் தலைமை நீதிபதி திரு வெங்கடாசலய்யா அவர்கள் சிறைச்சாலைகள் குற்றவாளிகளை சீர்திருத்தும் மையம் என்ற உயர்ந்த நிலைப்பாடு சிதைந்து விட்டது, சிறைச்சாலைக்கு வரும் புதுமுக குற்றவாளி தேர்ந்த முதுகலை பட்டதாரியாக வெளிவருகிறார் என்று மனம் வெதும்பி கூறியிருக்கிறார். எவ்வளவோ சீர்திருத்த நடவடிக்கைகள் தனிப்பட்டமுறையில் அதிகாரிகளால் சில மாநிலங்களில் எடுக்கப்பட்டிருந்தாலும் இது முழுமையாக நடைமுறையில் வரவில்லை. “ஜாண் ஏறுதல் முழம் சறுக்கல்” என்ற நிலையில் உள்ளது. அரசு நிர்வாகம், குற்றவியல் நிர்வாகம், சிறைத்துறை, காவல்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமுதாய நலம் விரும்புவோர் என்று பலதரப்பட்டவரின் ஒத்துழைப்பின்றி சிறை தீர்திருத்த நடவடிக்கைகள் முழுமையடையாது.

சுதந்திர போராட்ட வீரர் திரு குமரப்பா பலமுறை ஆங்கிலேயர் ஆட்சியில் சிறையிடப்பட்டிருக்கிறார். அவர் தனது சிறை அனுபவங்களைப் பற்றி கூறுகையில் சிறை அமைப்பு, சிறைப்பணியாளர்களின் அணுகுமுறை, நிர்ணயிக்கப்பட்ட பணிகள், நடைமுறைகள், இவையாவும் ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்கப்பட்டால்தான் சிறைச்சாலை என்ற அமைப்பு முழுமையடையும் சமுதாயத்திற்கு வலிமை சேர்க்கும் என்று விவரித்துள்ளார்.

சுதந்திர இந்தியாவில் ஜெயில் நிர்வாக நிபுணர் டாக்டர் ரெக்லஸ் 1951ஆம் வருடம் அமெரிக்காவிலிருந்து வ்ந்து சிறை நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும், குற்றவாளிகளை திருத்துவதற்குமான வழிமுறைகள் பற்றியும் கொடுத்த பரிந்துரைகளின் அடிப்படையில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. 1956 ஆம் வருடம் அகில இந்திய ஜெயில் விதிகள் குழுமம் அமைக்கப்பட்டு இந்தக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் பல நிலையாணைகள் மாற்றப்பட்டு சிறை நிர்வாகம் சீரமைக்க வழிவகுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தான் சிறைகள் விரிவாக்கம், சுகாதார சூழல், காற்று, தண்ணீர் வசதி, நிலையான உணவு, மருத்துவவசதி மேம்படுத்தப்பட்டது.

1978 ஆம் வருடம் தமிழகத்தில் முன்னாள் ஐசிஎஸ் அதிகாரியும், ஓய்வுபெற்ற பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு நரசிம்மன், அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன் தீர்க்கமான பரிந்தரைகளை வழங்கியது. இந்த கமிஷனில் உறுப்பினராக முக்கிய பங்கு வகித்தார் காவல்துறை ஐஜி திரு டயஸ், குற்றவியல் மற்றும் சமூகவியல் நாட்டம் கொண்டவரும் பின்னர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியாகப் பணியாற்றிய திரு டயஸ் அவர்கள் பல முற்போக்கு சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். அதில் முக்கியமானது இல்லவாசிகளை சீர்திருத்தவது, மாற்று வாழ்க்கை அமைத்தல், தொழில் கல்வி கற்பித்தல் போன்றவை அடங்கும். சிறைகளில் பஞ்சாயத்து முறை கொண்டுவர வேண்டும், இல்லவாசிகளுக்கு ஜனநாயக உணர்வு புகட்ட வேண்டும் என்ற பரிந்துரையும் முக்கியமானது.

தமிழகத்தில் மத்திய சிறைகள் உட்பட 134 சிறை இல்லங்களில் 20,000 இல்லவாசிகளை வைப்பதற்கு இடம் இருக்கிறது. குற்றவாளிகள் நல்வழிப்படுத்துவதற்கும், புனர்வாழ்வு அளிப்பதற்கும் கல்வி, அவர்களுக்கு உகந்த வேலைக்கான பயிற்சி ஆகிய இரண்டு ஏற்பாடுகள் தான் முக்கியமானது. கல்வி ஒன்று தான் அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் உண்மையான சுயமரியாதையையும் அளிக்கவல்லது. இதைக் கருத்தில் கொண்டு கடந்த ஒரு வருடம் தமிழக சிறைகளில் கல்வியை பிரதானமாகக் கொண்டு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

காவல்துறையினரே சமூக சீர்திருத்தவாதிகளாக பணிபுரியவேண்டும் என்று விரும்பிய காந்தியடிகள் சிறைச்சாலைகள் நலம் பேணும் மருத்துவமனைகளாக உள்ளிருக்கும் இல்லவாசிகளை அன்போடும் பரிவோடும் பராமரிக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளார். இல்லவாசிகளது மனநோய்க்கு கல்வியைத் தவிர வேறென்ன சிறந்த மருந்து இருக்க முடியும்? தமிழகத்தில் உள்ள ஒன்பது மத்திய சிறைகளிலும், மூன்று விசேஷ பெண்கள் சிறைகளிலும் ஆரம்பப் பள்ளியும், இடைநிலைப் பள்ளியும் இயங்குகின்றன. இந்திராகாந்தி திறந்த வெளிப் பல்கலைக்கழகத்தின் முலம் பல பாடங்களில் டிப்ளமோ பயிற்சியும், பட்டப்படிப்பு, முதுகலைப்பட்டம் வரை பயில்வதற்கு வசதி செய்யப்பட்டள்ளது. திருநெல்வேலி மனோன்மணி சுந்தரனார் பல்கலைக் கழகம் பட்டப்படிப்புகளுக்கும், முதுகலைப்பட்டம் பெறுவதற்கும் பாளையங்கோட்டை சிறையில் பயிற்சி அளிக்கிறது. நூதன முறையில் 2008-ம் வருடம் ஜுலை மாதம் பாளையங்கோட்டை சிறையிலுள்ள 17 இல்லவாசிகளுக்கு சிறப்பு பட்டமளிப்பு விழா பல்கலைக் கழக துணைவேந்தர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு பட்டம் வழங்கப்பட்டது. இந்த முதன்மை நிகழ்ச்சி மற்ற இல்லவாசிகளுக்கு உந்துதலாக அமைந்து சுமார் 600-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு பட்டப்படிப்பு, பட்டய பயிற்சிக்கு பதிவு செய்தனர். அவர்களது மேல்படிப்பு பயிற்சிக்காக சுமார் ரூ.7 லட்சம் சிறைத்துறை மூலம் செலவிடப்பட்டது.

கல்வி பயிற்றுவிக்கும் திட்டம் மேலும் விரிவாக்கப்பட்டு அனைத்து இல்லவாசிகளும் பயில்வதற்கு ஏதுவாக நூற்றுக்கு நூறு கல்வித்திட்டம் இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று கிளைச்சிறைகள் உட்பட 134 சிறை இல்லங்களிலும், கிளைச்சிறைகளில் 1500 இல்லாவாசிகள், மத்திய சிறைகளில் 4500 என மொத்தம் சுமார் 6000 இல்லவாசிகள் இந்தக் கல்வி இயக்கத்தில் பயனடைகின்றனர்.

எண்ணும் எழுத்தும் இரு கண்கள் போன்றவை என்றார் திருவள்ளுவர். கைநாட்டு ஒன்றே போட்ட பலர் எண்ணையும் எழுத்தையும் படிக்க முடிகிறது என்று ஆனந்தம் கொண்டனர். விடுமுறையில் செல்லும் போது மற்றவர் உதவியை நாடாமல் பஸ் ஏறி செல்லமுடிகிறது என்பதே தனது வாழ்வில் ஒரு பெரிய திருப்புமுனை என்றார் ஒரு இல்லவாசி. சிறை அலுவலர்கள் அரட்டல் மிரட்டலை விட்டு ஆசிரியர்களாக இல்ல வாசிகளுக்கு கல்வி புகட்டுகின்றனர். கல்வித் துறையினரோடு தொடர்பு கொண்டு மத்திய சிறை தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டு எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வும் நட்த்தப்பட்டது. எட்டாம் வகுப்பு தேர்வில் 76 இல்லவாசிகளும், பத்தாம் வகுப்பு தேர்வில் 100 இல்லவாசிகளும் பங்குகொண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 84 சதவிகிதம் தேர்வு பெற்று சாதனை படைத்தனர். தினகரன் என்ற பாளையங்கோட்டை சிறை ஆயுள் தண்டனை இல்லவாசி 66 சதவிகிதம் மதிப்பெண் பெற்றது, எடுத்த முயற்சிகளுக்கு முத்தாய்ப்பாக அமைந்தது. கோவில்பட்டி கிளை சிறை உதவி ஜெயிலர் திரு சித்திரைவேல் தனிப்பட்ட முறையில் கல்வி பயிற்றுவிக்க சிறப்புபடிவங்கள் அமைத்து எல்லோருடைய பாராட்டையும் பெற்றார். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையைச் சேர்ந்த தமிழக மைய அதிகாரி முனைவர் ராஜன் தலைமையில் மிக சிறப்பாக சர்வசிக்ஷா அபய்யன் மூலம் உதவி அளிக்கின்றனர். இதுதான் முழுமையான உண்மையான சிறை சீர்திருத்தம் என்று பலரது பாராட்டையும் சிறைத்துறை பெற்றது.

சிறைச்சாலை ஒரு சிந்தனைக் கூடம் என்றார் அறிஞர் அண்ணா. அவர்கள் தனது சிறை அனுபவங்கள் அடங்கிய புத்தக்த்தில் சிறையிலிருந்து வெளியே செல்பவர்களை ‘நல்லவர்களாக‘ மாற்றவேண்டும் என்பது எவ்வளவோ முக்கியமானதோ, அவ்வளவு முக்கியம் வெளியே உள்ளவர்கள் சிறைக்கு வரத்தேவையில்லாத நிலையை ஏற்படுத்துவது. குற்றம் செய்யவேண்டிய நிலையையும் மனப்போக்கையும் மாற்றி அமைக்க சமூகத்தில் பெரியதோர் முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் தனக்கே உரிய நயத்துடன் சிறைப்பணியாளர்களின் மனப்போக்கையும், அவர்கள் பணிகள் செய்யும் விதத்தில் உள்ள முரண்பாடுகளையும் விவரிக்கின்றார். இந்த முரண்பாடுகள் களையப்படவும், அவர்கள் தலைநிமிர்ந்து பணிபுரிய தொடர்ந்து அவர்களை செம்மையான சிறை சீர்திருத்த நடவடிக்கையில் ஈடுபடுத்த வேண்டும்.

குற்றவாளியை திருத்துதல் அவர்களுக்கு சமுதாய நற்பண்புகள் பயிற்றுவித்தல், புனர்வாழ்வு அமைத்தல், சமுதாயத்தோடு இணைத்தல் இவையே குற்றங்களை களையவல்ல நான்குமுனை கணைகள். அவையே தான் சிறை சீர்திருத்த கட்டமைப்பை தாங்கவல்ல தூண்கள்.


This Article Published in Dinamani Newspaper on 03.08.2009