Monday, July 16, 2012

கிராமமே கண்ணாக…



இந்தியாவின் ஜீவன் அதன் கிராமங்களில் உள்ளது என்றார் அண்ணல் காந்தியடிகள்.  அரசியல் ஆடுகளமாகவும் அரசு நிர்வாக மையமாகவும் உள்ளது தில்லி.  அதனாலேயே இந்தியா என்றால் தில்லி மற்றவை பாரதம் என்பது  எவ்வளவு உண்மையான கூற்று! அண்மையில் நடந்த மக்கள் கணக்கெடுப்புப்படி இந்தியாவின் 68.8% சதவிகிதம் மக்கள் கிராமங்களில் வசிக்கிறார்கள்.  சுதந்திரம் அடைந்த போது 80 சதவிகித்திற்கும் மேலாக கிராமத்தில் வசித்த மக்கள் படிப்படியாக நகரத்திற்கு குடிபெயர்ந்ததாலும் பல புதிய நகரங்கள் உருவாகுவதாலும் இந்த மாற்றம்.
     ஆங்கில கவிஞர் கோல்ட்ஸ்மித் கிராமங்கள் தேய்ந்து வருவதும் பண ஆதிக்கம் ஒங்குவதும் மனித நற்பண்புகள் மங்குவதும் அழிவுப் பாதையைதான் வகுக்கும் என்றும்,  புதுப் பணக்காரர்கள் தோன்றலம் ஆனால் நிலத்தை நேசிக்கும் விசுவாசியான விவசாயி நொடித்துப் போனால் அது சமுதாயத்திற்கு நிரந்தர இழப்பு என்று நயம்பட இயற்றிவுள்ளார்.
          முதல் அடி வைத்தல்தான் தொலைதூர பயணத்தின் முதல் துவக்கம்.  நாடளாவிய வளர்ச்சிக்கு கிராமங்களின் வளர்சித்தான் துவக்கமாக அமைய வேண்டும். 
     கிராம வளர்ச்சிப்பணியில் கிராம நிர்வாக அலுவலர் முக்கிய பங்கு வகிக்கிறார்.  கிராம நிர்வாக அலுவலர் என்ற பதவி பரம்பரைப் பொறுப்பாக கிராமத்தில் ஒரு குடும்பத்தின் சந்ததியரால் நிமிக்கப்பட்டு வந்தது.  தமிழ்நாட்டில் கர்ணம் என்றும் வடமாநிலங்களில் பட்வாரி, படேல், குல்கர்னி என்று பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தது. 1980-ல் தமிழ்நாட்டில் பரம்பரை பதவி முறை ஒழிக்கப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் அரசுப் பதவியாக மாற்றப்பட்டு மற்ற அரசுப்பணிகளுக்கு தேர்வு செய்வது போல் தேர்ந்த தெடுக்கும் முறை அமல்படுந்தப்பட்டது.  இது மிகப்பெரிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எனலாம். 
பரம்பரை நிர்வாக முறையில் நிறை குறை பல இருந்தன.  கர்ணத்திற்கு கிராமத்தில் உள்ள எல்லோரையும் தெரியும்.  அவர்களது குடும்ப நிலவரம் பூர்வீகம் அவர்களது தற்போதைய நடவடிக்கை எல்லாம் அத்துப்படி.  கிராமத்தில் எவ்வளவு நிலங்கள் இருக்கின்றன எது யாருக்கு சொந்தம், நிர்வாகம், பயிர் சாகுபடி, வேறு சமுதாய சாதிப்பிரச்சனை எல்லாவற்றையும் முழுமையாக அறிந்து வைத்திருப்பார்.  பிறப்பு, இறப்பு, சாதிவாரியான கணக்கு, மழையளவு, பொதுச்சொத்து,  உள்ளூர் கோவில் நிலங்கள், நில வரிக்கான  கணக்கு என்று கிராம சரிந்திரம், நடப்புகள் எல்லாம் பதிவு செய்து வைத்திருப்பார்.  மாவட்ட ஆட்சியர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேரில் ஆய்வு செய்கையில் கிராம கர்ணத்தின் அநுபவபூர்வமான தகவல்கள் பல முடிவுகளுக்கு ஆதாரமாக அமையும்.
     “என்ன கணக்கு நான் சொல்றது சரியா” என்று கிராமத்தில் பலம்படைத்தவன் தனது அராஜக செயலுக்கு ‘ஆமாம் சாமி’ போட வைக்கும் காட்சி சினிமாவில் வரும். பரம்பரை கர்ணம் முறையில் இதுதான் பிரச்சனை.  சுயநலம், பலம் படைத்தவர்களிடம் பணிந்து போவது, கிராம கணக்குகளை நிர்வாகம் செய்வதில் குறைபாடுகள் போன்றவற்றிற்கு நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுப்பதில் சிக்கல்கள்.  வளர்ந்து வரும் ஜனநாயகத்தில் இத்தகைய பரம்பரை நியமனம் காலத்திற்கு ஒவ்வாது என்ற அடிப்படையில் அரசுப் பணியாளர்களாக கிராம நிர்வாகிகள்  தேர்ந்தெடுக்கப்பட்டனர்
     வருவாய்த்துறை, நிர்வாக அமைப்பில் மிகப்பழமையானதும் பெருமை வாய்ந்ததுமாகும்.  வருவாய்த்துறை, நில நிர்வாகம், நில சீர்திருத்தம், போக்குவரத்து, வர்த்தகம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை போன்ற பல துறைகளை உள்ளடக்கிய ‘வருவாய் வாரியம்’ (ரெவின்யூ போர்டு) நிர்வாக ஆளுமைக்கு உயர்ந்த உதாரணமாக திகழ்ந்தது.  இப்போது பல்வேறு தனித் துறைகளாக பிரிக்கப்பட்டு இயங்கி வருகிறது.   மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர், கோட்ட ஆட்சியர், தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் நிர்வாக அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.  முப்பத்திரண்டு மாவட்டங்களில், 76 கோட்டங்களும், 220 தாலுக்காக்களும், 1127 பிர்கா  மற்றும் 16,564 வருவாய்  கிராமங்களும் உள்ளன.  வளர்ச்சிப்பணியில் கிராம நிர்வாக அலுவலருக்கு மிக முக்கிய பொறுப்பு உண்டு.
குஜராத்தில் தன்னிறைவு மட்டுமல்ல நகரங்களை விஞ்சும் வகையில் வளர்ந்துள்ள கிராமத்தைப்பற்றி செய்தி வந்தது.  ஹிம்மத் நகர் என்ற பகுதியில் உள்ள ‘அன்சாரி’ என்ற கிராமத்தில் வறுமையில்லை, வெறுமையில்லை, எங்கும் பசுமையும் வியக்க வைக்கும் வகையில் வளமையும்!  குளிர்சானம் பொருத்தப்பட்ட பள்ளிக்கூட அறைகள், சுத்தமான தெருக்கள், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல மினிவேன், தெருக்களில் குப்பை சேராமல் இருப்பதை கண்காணிக்க கேமிராக்கள் என்று அடுக்கடுக்காக நவீன வசதிகள்.  அந்த கிராமத்தில் இருந்து வெளிநாடு சென்றவர் யாருமில்லை. வெளிநாட்டிலிருந்து பணம் பெறவில்லை.  பணக்காரர் பொருள் உதவி செய்யவில்லை.  எல்லாம் அந்த கிராம மக்களின் சுயமுயற்சி, சீரிய பஞ்சாயத்து நிர்வாகம்.  சுத்திகரிக்கப்பட்ட நீர் ஒவ்வொரு வீட்டிற்கும் 20 லிட்டர் குடி தண்ணீர் வழங்கப்படுகிறது.  அதற்கு ரூபாய் நான்கு மட்டுமே கட்டணம்.  கிராம பஞ்சாயத்திடம் ஐந்து வருடங்களுக்கு முன்னால் ரூபாய் 25,000 மட்டுமே வைப்பு நிதியாக இருந்தது. இப்போது ரூபாய்.75 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணம் மக்களின் கூட்டுறவு மூலம் துவங்கப்பட்ட வளர்ச்சிப் பணிகள், பஞ்சாயத்து அமைப்பின் ஒற்றுமை.  எல்லோருடைய ஒத்துழைப்பு இருந்தால் உயர்ந்த நிலையை அடையலாம் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
இந்தியாவில் புதிய பொருளாதாரம் கொள்கை மூலம் தொழில் நுட்பம் தகவல் தொடர்பு வளர்ச்சி அடைந்துள்ளது.  ஆனால் வளர்ச்சியின் பங்களிப்பு 15 சதவிகிதம் மக்களையே சென்றடைந்திருக்கிறது.  பலகோடி மக்கள்  இன்னும் இருந்த இடம் பள்ளம் என்ற நிலை மாறவில்லை.  மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் நகரமயமாக்கல் அதிகரித்து வருகிறது.  அது ஒரு விதத்தில் பொருளாதார வளர்ச்சியை குறிக்கிறது.  தமிழகத்தில் சுமார் 51.5 சதவிகிதம் மக்கள் கிராமங்களில் வசிக்கின்றனர்.
     வருவாய் கிராமங்களுடன் ஒட்டி குக்கிராமங்கள் உண்டு.  வருவாய் கிராமங்கள் தாய் என்றால் குக்கிராமங்கள் அதன் குழந்தைகள்.  தாய் கிராமங்களை முன்வைத்தே நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.  ஆனால் சிறு கிராமங்களை மையமாக வைத்து ’தாய்’ என்ற அருமையான திட்டத்தை தமிழக அரசு வகுத்துள்ளது.  சிறு கிராமங்களுக்கு சாலை, குடி நீர், மின்சாரம், சுகாதாரம் குடும்ப நலம், கல்வி என்ற அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யும் வகையில் இத்திட்டம் அமையும். தமிழகத்தில் மொத்த கிராம பஞ்சாயத்துகள் 12,524.  இதில் குடியிருப்புகள் உள்ள குக்கிராமங்கள் 79,394. சராசரி ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் 7 குடியிருப்புகள் உள்ளன.  தாய் திட்டத்தில் இத்தகைய குக்கிராமங்களை கணக்கிட்டு கிராம பஞ்சாயத்திற்கு நிதி ஒதுக்கப்படுகிறது. குக்கிராமங்கள் எண்ணிக்கை வைத்து கிராம பஞ்சாயத்துகளில்  ஐந்துக்கு கிழ் குடியிருப்புகள், 5 லிருந்து 15, 16 லிருந்து 25, 25ற்கு மேல் என்று நான்கு வகையாக பிரிக்கப்பட்டு அதற்கேற்றால் போல் நிதி ஒதுக்கப்படுகிறது.  இதற்கான தேவை ரூபாய்.3,400/- கோடி. ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 680/- கோடி என்ற அளவில்  இத்திட்டத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றப்பட உள்ளது. எந்த மாநிலத்திலும் இத்தகைய மக்களுக்கு அநுகூலமான அணுகுமுறை நடைமுறையில் இல்லை.  இந்த திட்ட அமலாக்கத்தில் கிராம நிர்வாகத்தின் பங்கு முக்கியமானது.  வளர்ச்சியின் பயனளிப்பு எல்லோருக்கும் சென்றடைய இது உறுதி செய்யும்.  ‘தாய்’ திட்டம் நாட்டிற்கே முன்னோடியாக அமையும்.
     நிலப்பட்டா என்பது நில உரிமையாளர் முக்கியமாக கருதும் ஆவணம்.  நிலப்பட்டா மாற்றம் செய்வதில் தாமதத்தை தவிர்க்கவும் மக்களுக்கு உதவும் வகையில் அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது.  அதன்படி கிராம நிர்வாக அலுவலர் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கிராம மக்களிடமிருந்து பட்டா மாற்றுதலுக்கான மனுக்களை பெற வேண்டும்.  அதனை பரிசீலித்து வெள்ளிக்கிழமை வட்டாட்சியருக்கு அனுப்ப வேண்டும்.  குறித்த கால கட்டத்திற்குள் மாற்றம் செய்யப்பட்ட பட்டா துணை வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.  இதன் மூலம் கால தாமதம் தவிர்க்கப்படுவதோடு தவிர்க்கப்பட வேண்டிய ‘கைமாற்றம்’ தகர்க்கப்படுவதில் மக்களுக்கு நிச்சியமாக நிம்மதி தரும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நாட்டின் பொருளாதார வளர்ச்சியை குறிக்கிறது. சமீபத்தில் ஒட்டு மொத்த வளர்ச்சி குறைந்ததால் விலைவாசி உயர்ந்துள்ளது, நாட்டின் ஜிடிபி குறைந்த நிலையில் இருந்தாலும் தமிழகத்தில் ஜிடிபி உயர்ந்து வருகிறது  என்பது நிறைவைத்தருகிறது, ரிசர்வ் வங்கியின் துணைத்தலைவர் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பொழுது  தமிழகத்தில் 2011-12க்கான வளர்ச்சி 12.5 சதவிகிதம் என்றும் இந்தியாவின் சராசரி வளர்ச்சியான 6.5 சதவிகிதத்தில் இரண்டு மடங்கு என்பது பெருமைக்குரியது என்று கூறியுள்ளார். ஒவ்வொரு  மாவட்ட ஆட்சியரும்  தமது  மாவட்டம், கிராமங்களின் மொத்த   உற்பத்தி (ஜிடிபி) கணக்கிட்டு அது பெருக முனைப்பாக  செயல்பட்டால் தமிழ்நாடு மேலும் உன்னத நிலையை அடையும்.
     தொழில் உற்பத்தி, சேவை தொழில்கள் அபிவிருத்தியடைந்து வருவது இந்த வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது சுகாதாரமான மேல் வளர்ச்சிக்கு வித்திடும் என்பது உறுதி.  மேலும் தனியார் முதலீடு அதிகரித்துள்ளது.  அதில் 48 சதவிகித தொழில் ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.  42 சதவிகித திட்டங்கள் ஒப்பந்தம் அளவில் உள்ளன.  அதன் பயனளிப்பை துரிதப்படுத்துவதோடு, தொழில் முதலீடு செய்பவர்கள் ஊக்குவிக்க சம்மந்தப்பட்ட துறைகள் முனைப்பாக செயல்பட வேண்டும். 
சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் வாழும் மக்கள் வளம் பெற முயற்ச்சிக்கின்றனர்.  தமது நிலை உயர வேண்டும்.  தமது குழந்தைகள் வசதியோடு வாழ வேண்டும் என்ற அவர்களது எதிர்பார்ப்பு நியாயமானது.  பூமியைப் பிளந்து நெற் பயிர் மேல் நோக்கி வளர்வது போல் கிராமங்கள் மேன்மையுற ‘தாய்’ திட்டம் வழிவகுக்கும்.  இந்தியாவின் ஜீவன் பாதுகாக்கப்பட வேண்டும்.
………..


    This Article published in Dinamani News paper on 14.07.2012 

………..


     

3 comments:

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

அன்புள்ள திரு.நட்ராஜ் அவர்களுக்கு,
தங்கது அகம் புறம் என்ற வலைப்பக்கத்தைப் பார்த்தேன்.
முதலில் இன்றைய இந்திய சூழலில் ஒரு இந்திய காவல் பணி அதிகாரி, நல்ல தமிழில் வலைப் பதிவுகளில் எழுதி வந்திருக்கிறார் என்பதும், அதுவும் அவர் பணிக்காலங்களில் இருந்த சமயங்களிலும் எழுதி இருக்கிறார் என்றதும் மகிழ்ச்சி கலந்த வியப்பூட்டும் செய்தியாக இருந்தது.பொது வெளியில் மக்களுடன், நேரடித் தொடர்பு இருக்க வேண்டும் என்ற உங்கள் நோக்கத்தை அறிவதானாலும் பெரு மகிழ்ச்சி.

உங்களுடைய கிராமமே கண்ணாக என்ற ஜூலை 16 ம் தேதியிட்ட கட்டுரையைப் படித்தேன். அதில் கண்ட சிலவற்றுடன் எனக்கு ஏற்பட்ட சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளவே இந்த மின்மடல்.

இன்றைய தமிழக சூழலில் நீங்கள் தேர்வாணையத் தலைவராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கறீர்கள்.நீங்கள் பதிவி ஏற்றதிலிருந்து உங்கள் நோக்கம் உன்னத நிலையை விரும்பியும், சமீபத்தில் நடந்த தேர்வில் நடந்த குளறுபடிகள் உங்களை வருத்தமுறச் செய்திருக்கும்.

இது தொடர்பில் தினமணி சில நாட்களுக்கு முன் எழுதிய தலையங்கத்தையும் நீங்கள் படித்திருக்கலாம். கேள்வித் தாள தயாரிப்பு தொடர்பாக, இன்றைய தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் எப்படி பல சிக்கல்களைத் தீர்க்க முடியும் என்றும், எப்படி பல உளுத்துப் போன அரசுப் பணியாளர்களைச் சமாளிக்க முடியும் என்றும் குறிப்பிட்டிருந்தார்கள்.

உங்களது கட்டுரையில் குஜராத் கிராமத்தைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தீர்கள்.

மேற்கண்ட இரு தொடர்பற்ற நிகழ்வுகளுக்கும் ஒரு தொடர்பிருக்கிறது; பொதுவாக இன்றைய அரசு நிர்வாகத்தில் தொழில் நுட்பம் எந்த அளவிற்குத் திறம் படப் பயன்படுத்தப் படுகிறதோ, அங்கு திறன் மேம்படுவதோடு ஊழல் கணிசமாகக் குறைகிறது.அதைத் தான் பணியாளர் தேர்வாணையத் தேர்வு பற்றிய தலையங்கத்தில் தினமணி குறிப்பிட்டிருந்தது.

பணியாளர் தேர்வாணையம் மட்டுமல்லாது, இன்றைய அரசு நிர்வாகத்தில், அமைச்சு,துறைச் செயலர், மாவட்ட அதிகாரி(கலெக்டர்), வட்டம், டவும் பஞ்சாயத்து, கிராம நிர்வாக அளவில் கூட பொதுத் தகவல் தொடர்பும், பணிப் பொறுப்பும்(ரெஸ்பான்ஸிபிளிட்டி) சரியாக வரையறுக்கப் பட்டு, தொழில் நுட்பம் அதிக அளவில் பயன் படுத்தப் பட்டாலே, நிர்வாகம் சீர்ப்படுவதோடு, பெரும் அளவில் முன்னேற்றம் காணும்.

நீங்கள் தேர்வாணையத் தலைவராக இருப்பதோடு, முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் எளிதில் அணுகும் இடத்தில் இருப்பதாலும் இந்தக் கருத்தையும், சிந்தனையையும்-பிக் பிக்சர் ஐடியா-, கொண்டு செல்ல வேண்டுகிறேன். பெரும் ஆரவாரத்துடன் தொடங்கப் பெற்ற முதல்வர் தனிப் பிரிவு குறைகளையும் பிரிவவை இன்று சோதித்துப் பார்த்தேன். ஒரு புதிய பயனரை உருவாக்குவது கூட இயலாததாக இருந்தது.

இந்த முறை முதல்வரிடம் செயல்பாடுகளில், நோக்கத்தில் மாற்றம் தெரிகிறது. ஆனால் தொழில் நுட்பத்தையும், அதிகாரிகள் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதிலும், பொறுப்பெடுத்துக் கொள்வதிலும் உறுதியைக் காட்டாத வரை, அவரது நோக்கமும், முயற்சிகளும் விழலுக்கிரைத்த நீராகி விடும்.

பி.கு: நான் பல உலக நாடுகளில் வசித்திருக்கிறேன்;வேலை செய்திருக்கிறேன்; தொழிலக நிர்வாகிகளைச் சந்தித்து அளவளாவியிருக்கிறேன். தனிமனிதனான எனக்கே, நிர்வாகம், அரசாண்மை போன்ற விதயங்களில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் நாடுகளுக்கும் இந்தியாவிற்கும்(அல்லது தமிழ் நாட்டிற்கும்) இருக்கும் பெருத்த வேறுபாடு, மிகுந்த நிராசையை அளிக்கும். தனி மனிதர்களை விட, பல நாடுகளுக்குப் பயணப் படவம் அந்தந்த நாடுகளின் நிர்வாகக் கேந்திரங்களை அணுகி விதயங்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் பெற்ற, நமது முதல்வர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோரால் ஏன் குறிப்பிடத் தக்க மாற்றங்களைக் கொண்டு வர இயலவில்லை என்ற கேள்வி என்னை பல ஆண்டுகளாக அரித்துக் கொண்டிருக்கும் ஒன்று.

அதற்கான தீர்வுகளாக நான் கருதுவனவற்றை, குஜராத்தில் மோடியின் அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது;உங்களைப் போன்ற அரசு இயந்திரத்தின் பாகமாக இருப்பவர்களின் அவதானமும் இது போன்ற விதயங்களில் இருப்பது கண்டு ஏற்பட்ட மகிழ்ச்சியின் விளைவே இக் கடிதம்.
:)

Unknown said...

Thank U Sir

Anonymous said...

Nice Sir.