‘கடும் தவத்தினால் பெற்றப் பிள்ளை”, “என்ன தேஜஸ் என்ன அறிவு‘, ‘ஒளிக்கீற்று பாய்வதைப் பார்த்தேன் என்னோடு சமுதாயப் பணிக்கு சீடன் பிறந்தான் என்றுணர்ந்தேன்‘, ‘பாட்டனார் மாதிரி சைவத்தை விருப்புகிறானே அவர் போல் பந்தங்களைத் துறப்பானோ‘, ‘சாஷாத் சிவ ரூபம் சிவ அவதாரம்‘! இந்த விமர்சனங்களுக்கு பாத்திரமானவர் வேறு யாருமில்லை, ‘வீரேஷ்வர்‘ என்று பெற்றோர்களால் பெயர் சூட்டப்பட்டு இந்திய மக்களுக்கு ஒளிவிளக்காக வளர்ந்த சுவாமி விவேகானந்தர் அவர்கள்தான். பெற்றோரின் பத்து குழந்தைகளில் ஆறாவது குழந்தை விவேகானந்தர். 40 வயது எய்துவதற்கு முன்பே அவரை இறைவன் அழைந்துக் கொண்டான். அதற்குள்தான் எத்தகைய இமாலய சாதனை!
ஆதி சங்கர்ருக்குப் பிறகு இந்தியாவை அகண்ட பாரதமாக பார்த்த மகா புருஷர் சுவாமி விவேகானந்தர். அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதிய பிரசித்தி பெற்ற ரோமேன் ரோலாண்ட், ‘தீ அவரது பூத உடலை அழித்தாலும் அந்த புனித அஸ்தியிலிருந்து இந்தியாவின் புதிய ஆன்மா புத்துயிர் பெற்றிருக்கிறது. இந்தியாவின் தொன்று தொட்டு வரும் கலாச்சாரம், ஒருமைப்பாட்டின் பற்றுதல் பரிமாண வளர்ச்சிப் பெற்று மனித சமுதாயத்திற்கு வழிகாட்ட பிறந்திருக்கிறது‘ என்று உள்ளம் நெகிழ கூறியுள்ளார்.
விவேகானந்தர் அமெரிக்கா சென்று சிகாகோவில் நடந்த அனைத்து சமய மாநாட்டில் கலந்து கொண்டு அபாரமான சொற்பொழிவாற்றினார் என்பது நாம் அறிவோம். அந்த சொற்பொழிவில் எல்லோரையும் கவர்ந்தது அவர் அன்போடு எல்லோரையும் திரும்பத் திரும்ப சகோதர சகோதரிகளே என்று அன்போடு குறிப்பிட்டு தெளிவாகவும் நேர்மையாகவும் கருத்துக்களை வைத்ததுதான் காரணம். உலகத்தில் உள்ள எல்லா ஜீவராசிகளும் ஒன்று அவையாவும் பரம்பொருளின் அம்சம் என்ற வகையில் எல்லோரையும் ஒன்றாக பாவித்து நேசிக்கும் கொள்கையைப் பின்பற்றியதால் அவரது பேச்சில் உண்மை இருந்தது. எல்லோரும் தன்னிச்சையாக கவரப்பட்டனர். அவர் எழுதிய ஒரு கடிதத்தை சிறப்பாக மொழிபெயர்த்த பாரதியார் அவர்கள், 1920-ல் சுதேசமித்திரன் பத்திரிகையில் குறிபிட்டுவுள்ளார் ‘முக்தி அல்லது விடுதலையே என் மதம். இதைக் கட்டுப்படுத்த முயல்வது யாதாயினும் நான் அதை எதிர்ப்பேன்‘.
‘பண்பாடுதான் நாட்டின் வலிமை, பொருளாதார செழிப்பு, நாட்டின் பரப்பளவு வலிமையை நிர்ணயிக்காது‘ என்கிறார் சுவாமி விவேகானந்தர். இந்தியாவின் வலிமையை உணர்ந்தவர். அந்த வலிமையின் பெருமையை உணராதவர்களால் தான் நாடு வலுவிழந்து வருகிறது என்பதை தனது பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் தொடர்ந்து வலியுறுத்தினார். பண்பாடு என்பது மனித நேயமும் நல்லியில்புகளும் வெளிப்படுத்தும் மனிதப்பண்பாடு மட்டுமே. இனம், மொழி, மதம், தேசம் எல்லாம் வெறும் பயன்பாடுகள். அவை மாற்றத்திற்குரியவை. உலகம் தோன்றியது முதல் பல நாடுகள், சமுதாயங்கள் தோன்றி மறைந்துள்ளன. மனிதப் பண்பாடு என்றும் நிலைத்து நிற்கும்.
கல்வி ஒன்றுதான் பண்பாடு வளர்வதற்கு அடித்தளமாக அமைகிறது. வகுப்பறையில் கற்பது மட்டும் கல்வி அல்ல பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நாம் கற்பவை அல்லது மாணவர்களுக்கு அளிக்கப்படுவது வெறும் தகவல்கள். புரியாத தகவல்களை புரிய வைக்கிறார்கள். சமுதாயத்திலிருந்த பெறக்கூடிய அரிய விஷயங்கள், இயற்கை கற்றுக் கொடுப்பவை, நற்பண்பாளர்கள் மூலம் கற்பவை, முடிவாக அனுபவம் கொடுக்கும் பாடம் இவை எல்லாம் நற்பண்புகளை வளர்க்கும் கல்விக்கு சமானம்.
ஒரு விதை மரமாவது போல பண்பாடு வளருகிறது. விதை ஒன்றுதான். அந்த நல்ல விதை பல விதைகள் அடங்கிய நற்கனிகளைக் கொடுக்கிறது. தேக்கு மரம் போல் உரம் மேவிய மனிதன் என்று நற்பண்புகள் உடைய மனிதருக்கு உவமை காட்டப்படுகிறது. தேய்க்கத் தேய்க்க வாசனைத்தருகிறது சந்தனக் கட்டை. வாசனைப் பூவை மிதித்தாலும் மணம் வீசும். பண்பாளர்களின் குணம் தான் சமுதாயத்தின் வலிமை.
ரவீந்திரநாத் தாகூர் கூறுவார் ‘உலகில் தீர்கமான அறிவாளிகள் இருக்கிறார்கள் ஆனால் தீர்கமான மனிதர்கள் இல்லை!‘ எவ்வளவு உண்மை.
அச்சம் தவிர், ஆண்மை தவறேல், எண்ணுவது உயர்வு, கற்றது ஒழுகு என்ற பாரதியாரின் ஒழுக்க நெறிகளே பண்பாடு. உண்மையான சுதந்திரம் தைரியமான வாழ்க்கை. தைரியத்தை கற்பிப்பதுதான் நேர்மையான கல்வி. நமக்கு எது அச்சம் தரும் என்று நினைக்கிறோமோ அதை முதலில் செய்வதே விவேகம். இந்த பயம் அச்சத்தினால் தான் எவ்வளவோ இன்னல்களையும், அநீதிகளையும் சகித்துக் கொண்டிருக்கிறோம்! உலகம் போற்றும் சிந்தனையாளர் ஜித்து கிருஷ்ணமூர்த்தி, வாழ்க்கை பயம் சூழ்ந்ததாக கருதும் மக்கள் நிலையை மாற்ற வேண்டும் என்று கூறுகிறார். குழந்தைப் பருவத்திலிருந்து பயத்தை நாமே தெரிந்தோ தெரியாமலோ வளர்க்கிறோம். வழிபாட்டிலும் ‘பயபக்கியோடு‘ வணங்குவதை பெருமையாக கொள்கிறோம். பள்ளிக்கூட வகுப்புகளில் பயம், ஆசிரியரைக் கண்டால் பயம், தேர்வு எதிர்கொள்வதற்கு பயம், முழுமையாக படிக்கவில்லையே என்று பயம், போலீசைப் பார்த்தால் பயம் என்று அச்ச உணர்வு மேலோங்குகிறது. நற்கல்வியின் முதல் குறிக்கோள் இந்த அச்சத்தை போக்குவதுதான். குழந்தைகளிடம் அச்சத்தை வளர்த்தால் நாளைக் கோழைகளாக கேள்வி கேட்கும் திறனற்றவர்களாக உருவாகுவது சமுதாயத்திற்கு நல்லதல்ல. அது பண்பாடு சீர்குலைவிற்கு வழி வகுக்கும்.
‘அபாயமற்ற வாழ்க்கை வாழ்வதே அபாயம்‘ என்கிறார் சிந்தனையாளர் எமர்சன். தைரியம் வளர்ந்தால் தான் பண்பாடு சீரடையும் என்பதை முழுமையாக உணர்ந்து இளைஞர்களுக்கு உத்வேகத்தை பரவச் செய்து எழுச்சி நாயகர்களாக வளர வேண்டும் என்று பாடுபட்டார் சுவாமி விவேகானந்தர். அச்சமே நரகம், அச்சம் சினம் இல்லா வாழ்க்கையால் ஆயுள் நீடிக்கும்.
சுதந்திர போராட்டத்தில் லத்தி சார்ஜில் அடிப்பட்ட காயத்தோடு சிறையில் அடைக்கப்பட்டார் பண்டிட் நேரு. சிறையில் காண வந்தார் தாய் சொரூபராணி. இது காயமல்ல எனக்கு அளிக்கப்பட்ட விருது என்றார் நேரு. 1970-ம் வருடம் நயினி சிறையில் இருந்த நேரு தனது மகளுக்கு எழுதிய கடிதத்தில், தைரியமாக இரு எதற்கும் பயப்படாதே. எதை செய்தாலும் வெளிப்படையாக அஞ்சாமல் செய் என்று குறிப்பிடுகிறார். ரகசியமாகவோ பயந்து கொண்டே செய்யும் செய்கைகள் நியாயமற்றவை, நேர்மையற்றவை என்பது எவ்வளவு உண்மை. கூடா நட்பைப் பற்றி சிலாகிக்கும் சிலர் இதை பின்பற்றியிருந்தால் 2ஜீ காற்றலை ஊழல் விசுவரூபம் எடுத்திருக்காதே!
நமது பண்பாட்டில் பெருமைக் கொள்ள வேண்டியவை பல இருக்கின்றன. விஞ்ஞானத்திற்கு நாம் உலகத்திற்கே முன்னோடியாக இருந்தோம். கணிதத்தில் பூஜ்யம் என்பதை கணித்ததே இந்தியர்கள் தான். அராபிய மொழி வலமிருந்து இடம் எழுதப்படும். ஆனால் அரேபியர்கள் கணக்குகளை இடத்திலிருந்து வலமாக குறிக்கின்றனர். இடத்திலிருந்து வலம் எழுதும் முறையுடைய இந்தியர்களிடமிருந்துதான் எண்கள் கணிதம் அராபியாவிற்குச் சென்றது என்பது தெளிவு. விண்வெளியைப்பற்றியும், பிரபஞ்சத்தையும் முற்றும் அறிந்து தெளிவு படுத்தியவர் ஆரியபட்டர். இன்றும் படிக்கப்படாத 10 ஆயிரத்திற்குப் மேற்ப்பட்ட சமஸ்கிருத ஓலைச்சுவடிகள் விண்வெளி ஆராய்ச்சிப்பற்றியும், விஞ்ஞானத்தை பற்றியும் இருக்கின்றன என்பது நம்மில் எவ்வளவு பேருக்குத் தெரியும்?
பாருக்குள்ளே நல்ல நாடாக இருந்த பாரத நாடு வறுமை, போராட்டம், சமூக அநீதிகள் என்ற பிரச்சனைகளை சந்திக்கிறது என்றால் அதற்குக் காரணம் நாம் தான். பண்பாட்டை மறந்து பயனற்ற பயன்பாடுகளில் மனதை செலுத்துகிறோம். வேலை செய்யாமல் இருப்பதை இலவசங்கள் மூலம் ஊக்கவிக்கப்படுகிறது. சில நுற்றாண்டுகளுக்கு முன் உலக பொருளாதார உற்பத்திப் பெருக்கத்தில் சைனாவோடு நமது நாட்டின் பங்களிப்பு 60 சதவிகிதமாக இருந்தது, மூன்று சதவிகிதமாக தேங்கி இப்போது 8 சதவிகிதம் எட்டுவதைப் பெருமையாக பேசுகிறோம். அதிலும் உற்பத்தியின் பயனளிப்பு எல்லா சமூகத்தினருக்கும் சென்று அடையவில்லை. பணக்கார்ரர்கள் மட்டும் கொழுத்திருக்கிறார்கள். 79 சதவிகிதம் மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். வேலையில்லத் திண்டாட்டம், சுகாதாரம், மருத்தவ வசதி, தரமான கல்வி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லை.
குழந்தைகள் மேம்பாட்டு சேவை மையம் அளித்த ‘ஹங்காமா‘ என்ற ஆய்வு அறிக்கையில் ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் எண்ணிகை 16 கோடி (மொத்த ஜனத் தொகையில் 15 சதவிகிதம்), இவர்களில் 42 சதவிகிதம் குழந்தைகளில் உடல் எடை குறைவு அவர்களுக்கு போதிய போஷாக்கு கிடைப்பதில்லை என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் தான் நாளைய விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், பொறியியல் வல்லுனர்கள், போர்வீரர்கள்! இந்தப்பிரச்சனைகளுக்கு ஒருமித்த தீர்வு காண விழையாமல் விதண்டாவாதத்தில் நேரம் விரயமாகிறது. அரசுத்துறையில் இருப்பவர் ஒவ்வொருவரும் பொறுப்போடு செயல் பட்டால் தான் திட்டங்கள் நிறைவேறும்.
ஆட்சிப் பொறுப்பு என்பது மிகப்பெரிய வரப்பிரசாதம். மக்களாட்சி என்பது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு மட்டுமல்ல எல்லாதரப்பட்ட மக்களின் பங்களிப்பு இருந்தால் தான் முழுமையடையும். பல தொழில்களிலும் அமைப்புகளிலும் உள்ளவர் சிறப்பாக செயல்பட்டால் தான் முன்னேற்றம் ஏற்படும். நல்ல திட்டங்களுக்கும் ஆலோசனைகளுக்கும் உரிய வரவேற்பு இருக்க வேண்டும். அதற்கு உடனடியாக செயல் வடிவம் கொடுக்க வேண்டும். அதை விட்டு சில அரசு அதிகாரிகள் யோசனை கூறுபவருக்கு என்ன உள்நோக்கம் என்ற சந்தேகத்தோடு பார்ப்பது வருத்தத்திற்குரியது. சில அதிகாரிகள் இதனால் தனக்கு என்ன லாபம் என்று கணக்கிடுவதும் கண்டிக்கத்தக்கது.
விவேகானந்தர், ரவீந்திரநாத், தாகூர் போன்றவர்களின் 150 வது ஜெயந்தியை அனுசரிக்கும் இவ்வேளையில் அவர்களது கோட்பாடுகளை பின்பற்றுவதை தலையாயப் பொறுப்பாக கொள்ளவேண்டும். வழிகாட்டி தலைவர்களின் அடையாள நாட்கள் காலண்டரிலேயே தங்கி விடுகின்றன. அவர்கள் விட்டுச் சென்ற பாதையை மறந்து விடுகிறோம். தாகூர் இயற்கையை நேசித்தவர். ஆனால் நாம் இயற்கையோடு சண்டையிடுகிறோம் மரங்களை வெட்டுவதின் மூலம்!
கல்வி நம்மில் உள்ள முழுமையின் பிரதிபலிப்பு. மதம் நம்மில் உள்ள புனிதத்துவத்தின் பிரதிபலிப்பு. ஜாதி மத பேதமற்று தனிமனிதனின் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் உழைப்பதே நமது கடமையாக கொள்ள வேண்டும் என்றார் விவேகானந்தர். எல்லா இனங்களிலும் உள்ள ஏழைகளே தன் இஷ்ட தெய்வம் அவர்களுக்கு சேவை செய்து உய்விப்பதற்கான பேறு பெறுவேனாக என்றும் மக்கள் சேவையே மகேசன் சேவை என்று வாழ்ந்து காட்டியவர் விவேகானந்தர். அத்தகைய உன்னத நோக்கங்களை செயலாக்குவதுதான் இந்த உயர்ந்த ஆத்மாக்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி.
This Article published in Dinamani on 17.01.2012
2 comments:
mika nalla,payanulla seithi.nantri IYAA,nantri...
mikka nantri IYAA
Post a Comment