Wednesday, January 18, 2012

சமயம் இதுவே


இந்திய அரசியல் சாசனத்தில் துவக்கத்தில் கூறப்படும் குறிக்கோள்கள் சாசனத்தின் அடிப்படை நோக்கங்களை விளக்குகின்றன. இந்திய மக்களுக்கு சமுதாய, பொருளாதார சமத்துவ கோட்பாடுகளைப் பகிர்ந்து கொடுப்பது தான் அரசியல் சாசனம் மூலம் தோற்றுவிக்கப்படும் அமைப்புகளான, பாராளுமன்றம், அரசாங்கம், அமைச்சரவை நீதிமன்றங்கள் அரசு நிர்வாகம் போன்றவற்றின் தலையாய கடமை.

எது சிறந்த நாடு என்று பார்த்தால் எங்கு நல்லாட்சி நடக்கிறதோ, எங்கு மக்கள் சுபிட்சமாக அமைதியாக சந்தோஷத்தோடு வாழ்கிறார்களோ. அதுவே சிறந்த நாடு. ‘வண்மை இல்லை வறுமை இன்மையால், உண்மையில்லை பொய்யுரை இலாமையால்‘ என்ற கோசல நாட்டின் பெருமையை நயமுடன் விளக்குகிறார் கம்பன். அவ்வாறு இருந்த நாடுதான் நமது நாடு. சுய நலம் ஆட்கொண்டதாலும் எல்லோரையும் அணைத்துச் செல்லும் ஒப்புரவு குறைவதாலும் பிரச்சனைகள் தீராமல் நின்ற இடத்திலேயே ஒடிக்கொண்டிருக்கிறோம்.

கிரேக்க நாடு சட்ட வல்லுனர் ஐஸ்டின் கூறும் சட்ட கோட்பாடுகள் மூன்று. அவை நேர்மையாக வாழ்தல், ஒருவருக்கும் கெடுதல் செய்யாதிருத்தல், கடன் பட்டதை திருப்பி அளித்தல்.

எந்த சமுதாயத்தில் பாதிப்பிற்கு உள்ளாகாதவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து பாதிப்பு ஏற்படுத்தியவரை, தவறு இழைத்தவரை தண்டிக்க ஒருங்கிணைந்து முற்படுகின்றனரோ அதுவே வாழ சிறந்த நகரம் என்கிறது பண்டைகால கிரேக்க அடைமொழி. இவை இன்றும் மக்களாட்சிக்குப் பொருந்தும்.

வெளிப்படையான நிர்வாகம், அமைதியான சூழல், திறமையாக இயங்கும் நிர்வாக அமைப்புகள், பயமில்லாத வாழ்க்கை இவற்றை உறுதி செய்தாலே மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்,

ஆப்பிள் கணினியைக் கண்டுபிடித்த ‘ஸ்டீவ் ஜாப்ஸ்‘ ஹார்வர்ட் பல்கலைக்கழக உரையில் பொருளாதார மதிப்பீட்டில் ஈடுகட்டமுடியாத மூலதனம் நேரம் ஒன்று தான் என்பதை வலியுறுத்தியுள்ளார். காலம் பொன்னானது என்று பெயரளவில் கூறுகிறோமே தவிர நேரத்தை மதிப்பதில்லை. காலம் ஒடிக்கொண்டுதான் இருக்கும். கழிந்த நேரத்தைப்பற்றி அங்கலாய்க்கிறோம், ஒட்டுனர் நாம் தாம் என்பதை மறந்து விட்டு! இல்லாவிட்டால் சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் ஆகியும் வறுமை ஒழிந்தபாடில்லை, தரமான கல்வி எல்லோருக்கும் சென்றடையவில்லை. நாற்பது ஆண்டுகளாக ஊழல் ஒழிப்பு மசோதாவைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம். ஊழலும் ஒழியவில்லை. சட்டமும் நிறைவேற்றப் படவில்லை.

சர்வதேச அளவில் சென்னை விமான தளம் விரிவடைய வேண்டும். அதற்கு நிலம் 2002 ல் ஒதுக்கப்பட்டும் சில சுயநலவாதிகளின் போராட்டங்களால் ஸ்தம்பித்தது. ஆனால் ஹைதராபாத், பங்களூரில் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்பட்டு விட்டன. சென்னை நகரில் உள்ள நெரிசலுக்குத் தீர்வு சாட்டிலைட் நகரங்கள் சென்னையைச் சுற்றி உருவாக்க வேண்டும். அதற்கு திட்டம் 2001-06 ஆட்சியின் போது வகுக்கப்பட்டது. மீண்டும் சில சுய நலவாதிகள் அரசியல் நோக்கத்தோடு தலையிட்டு முன்னேற்றத்தை முடக்குவதிலேயே குறியாக இருந்தனர். இத்தகைய முட்டுக்கட்டைகளினால் விலை மதிக்க முடியாத நேரம் விரயமானது. மற்ற மாநிலங்கள் முந்திக் கொண்டன.

வெளிநாடு சென்று வருபவர்கள் அங்கு இருக்கும் துய்மையையும், வெளிப்படையான நிர்வாகத்தையும், நேர்த்தியான கட்டமைப்புகளையும் புகழ்கின்றனர். நம்மிடம் திறமை இருக்கிறது. பொருளாதாரமும் பெருகியிருக்கிறது. இருந்தும் ஏன் சாதாரண பிரச்சனைகளுக்கும் தீர்வு இல்லை?

சாலைகள் செப்பனிடப்படுகின்றன. சில மாதங்களில் மீண்டும் பழுதடைகின்றன. மெரீனா fகடற்கரை உலகப்பிரசித்திப்பெற்றது. கடல் ஆர்ப்பரிப்பிற்கு முன் வேறு ஏதாவது செயற்கை அழகு எடுபடுமா? பீச் முகப்பை செப்பனிடும் பணியில் கோடிக்கணக்கான பணம் விரயமாகப்பட்டது. புறநகர் பகுதிகளில் சாலைகள் எவ்வளவு மோசமாக உள்ளன. அதை செப்பனிடாமல் வேண்டியவர்கள் வீடுகள் இருக்கும் சாலைகளை அகலப்படுத்துவது, நன்றாக உள்ள நடைபாதைகளில் டைல்ஸ ஒட்டுவது போன்ற பணிகள்தான் திரும்ப திரும்ப நடந்தன. இந்நிலை மாறவேண்டும்.

முன்னேறிய நாடுகளுக்கும் வளர்ந்து வரும் நாடுகளுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் அந்தந்த நாட்டு மக்களின் உழைக்கும் திறன். முன்னேறிய நாடுகளில் உழைக்கும் போது முழு கவனம் செலுத்தி உழைப்பார்கள். நேரத்தை வீணாக்க மாட்டார்கள். ஆனால் வளர்ந்து வரும் நாடுகளில் அதற்கு நேர்மாறான அணுகுமுறை. ஈடுபாடின்மை, தாமஸமான செய்கைகள், கவனமின்மை, வம்பளப்பது மொத்ததில் பணி நேரத்தை விரயமாக்குவது போன்ற தரமற்ற குணங்கள் காணப்படும். உழைப்பே உயர்வு என்று போற்றுவதால்தான் ஐப்பான் போன்ற நாடுகள் உற்பத்தியை பெருக்கியுள்ளன.

கடந்த சில வருடங்களில் இலவசங்கள் என்ற மாயையில் மக்களின் உழைக்கும் சக்தியை மங்கடித்து தொலைக்காட்சி மூலம் கேளிக்கைகள், விரசங்கள், அர்த்தமற்ற கொண்டாட்டங்கள் தான் பிரதானம் என்ற நிலை உருவாக்கி விட்டனர். மதுவிலக்கு அறுபதுகளில் தளர்த்தப்பட்டு இளைய சமுதாயம் சீரழிக்கப்பட்டதோ அதே நிலை உருவாகாமால் தெய்வாதீனமாக இப்போது தடுக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டிற்கு இப்போது தேவை தரமான கல்வி மற்றும் பொருள் உற்பத்தியில் வேலை வாய்ப்பு. குஜராத் மாநில அரசைப் பற்றி பல விதமான விமர்சனங்கள் வந்தாலும் அம்மாநிலம் பல துறைகளில் மற்ற மாநிலங்களை விட முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை மத்திய திட்ட கமிஷன் அங்கீகரித்துள்ளது. முக்கியமாக விவசாயத்தில் உற்பத்தி பெருக்கம், விவசாயிகளுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஈடு, விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளது. பல கிராமங்களில் மழைநீர் சேகரிப்பு மிக சிறப்பாக திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

‘ஸ்பீட், ஸ்கில், ஸ்கேல்‘ வேகம், திறமை, வளமை என்பதை நிர்வாகத்தின் குறிக்கோளாகக் கொண்டு குஜராத் அரசு செயல்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஊழலும் சோம்பலும் தான் நிர்வாக சக்கரத்தை பழுதடையச் செய்கின்றன, சரி செய்ததால் நிர்வாகம் நிறைவாக செயல்படுகின்றது என்று கூறப்படுகிறது.

நமது முதல்வர் அவர்கள் முன்பு மழைநீர் சேகரிப்பு திட்டத்தை நகர் புறங்களில் முழுமையாக நிறைவேற்றி, வீராணம் குடி நீர் திட்டத்தையும் பூர்த்தி செய்து சென்னைக் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு அளித்தார்கள். அதுபோல் தமிழ் நாட்டில் உள்ள 17,250 ரெவின்யூ கிராமங்கள், 60 அறுபதாயிரத்திற்குப் மேற்பட்ட குக்கிராமங்களில் போர்க்கால அடிப்படையில் மழைநீர் சேகரிப்பு திட்டம் அமலாக்கப்பட்டால் வேளாண்மை பெரும் கிராமங்கள் செழிப்படையும்.

ஒரு மாணவி அரசு அளித்த கணினியை வைத்து படித்துக் கொண்டிருக்கும் படம் மனதைக் கவர்ந்தது. ஆனால் அவள் இருக்கும் வீடோ குடிசை வீடு. இந்த வீடு பசுமை வீடாக மாற்றும் அரசு அறிவித்து இருக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டால் சிறப்பாக மக்கள் வாழ்கைத் தரத்தை உயர்த்தும். பசுமை வீடுகளுக்கு லட்சக்கணக்கில் செங்கல் தேவைப்படும். செங்கல் உற்பத்தி கிராம குடிசைத்தொழில். தரிசு நிலத்தில் செங்கல் செய்வது மக்களுக்கு உழைப்புக்கு ஏற்ற தொகையும் கிராம முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

சூரிய ஒளியில்ருந்து மின்சார உற்பத்தி மிக சிறப்பான திட்டம். வீடுகளில் சோலார் தகடுகள் மூலம் வீட்டிற்கு தேவையான மின் சக்தி கிடைக்கும். மின் வெட்டு வருமோ என்ற கவலை இருக்காது. பல ஐரோப்பிய நகரங்களில் வீடுகளின் மாடியில் சோலார் பேனல் வைப்பதற்காக வாடகை விடப்படுகிறது. அந்த வகையில் சூரிய சக்தி ஈர்க்கும் திட்டம் நகரங்களில் விரிவாக்கப்பட்டால் சோலார் தகடுகளின் விலை குறையும், சூரிய ஒளியின் மூலம் மின்சாரம் அதிக செலவு என்ற நிலை மாறும்.

ஐக்கிய நாடுகள் சபை நாட்டின் நிர்வாகத்தின் ஆளுமையைப்பற்றி விவரிக்கும் பொழுது வெளிப்படையான ஊழலற்ற நிர்வாகம் தான் சிறப்பான அமைப்பிற்கு அடித்தளம் என்று உறுதிபட கூறியிருக்கிறது. நாடெங்கிலும் ஊழல் பிரச்சனை விசுவரூபம் எடுத்துள்ளது. எல்லோரும் ஊழலை எதிர்க்கிறார்கள். ஆனால் அதற்கான சட்டம் நிறைவேற்றுவதில்தான் எவ்வளவு சிக்கல்கள்! ஒவ்வொருவரும் ‘நான் பிடித்த முயலுக்கு மூன்றேகால்‘ என்று விதண்டாவாதம் செய்து கொண்டிருப்பது வியப்பாக இருக்கிறது. ஆனால் சட்டம் நிறைவேற்றுவதில் மட்டும் ஊழல் அடங்குமா என்பது பெரிய கேள்விக்குறி. எந்த செயலை செய்தால் நமக்கு தூக்கம் தொலையுமோ அதுதான் நேர்மையற்ற செயல் என்று முதலமைச்சர் அவர்கள் நேர்மைக்கு தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.

2011-ம் வருடம் போராட்டம் நிறைந்த வருடம் என்று கூறலாம். உலகில் பல நாடுகளில் பல இடங்களில் ஆட்சியாளர்க்கு எதிராக போராட்டம் ஏற்பட்டது. எகிப்து, துருக்கி,லிபியா போன்ற மத்திய கிழக்காசிய நாடுகளில் ஒரு விதமான போராட்டம். பொருளாதார வீழ்ச்சிக்கு எதிராக கிரீஸ், போர்ச்சுகல், ஸ்பெயின் போன்ற நாடுகளில் மக்கள் தெருக்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஏன் பொருளாதார தலைநகரமாகிய நியூயார்க் நகரத்திலும் தொடர் போராட்டம் ஏற்பட்டது. ஊடகங்கள் விரிவடைந்து விட்டதால் கருத்து பரிமாற்றம் துரிதமாக நடைபெறுவதும் ஒரு காரணம்.

எல்லா மக்களும் விரும்புவது அமைதியான அபிவிருத்திக்கு வித்திடும் சூழல். நிர்வாகத்திறன் பற்றாக்குறையால் பல மாநிலங்களில் பிரச்சனை ஏற்பட்டுள்ளன. இந்த பற்றாக்குறையை சரிசெய்வது ஒன்றும் கடினமல்ல. துறைக்கு உகந்த அமைப்பை உருவாக்க வேண்டும். செயல்பாடுகளையும் முன்னேற்றத்தையும் தெளிவாக மேற்பார்வையிட வேண்டும். குறுக்கீடுகள் இல்லாது நேர்மையான பணிகளை உறுதி செய்ய வேண்டும்.

முன்னேற்றப்பாதையில் தடைக் கற்கள் இல்லாமல் இருக்காது. ஆனால் அவற்றை தகர்த்து வெற்றிப் படிக்கட்டுகளாக மாற்றுவது தான் நிர்வாகத்தின் திறமை. நிர்வாகத் திறமை முக்கியம், ஆனால் அதே நேரத்தில் திண்மையான ஈடுபாடும் மக்கள் மேல் அக்கறையும் இருக்க வேண்டும். நல்லியல்புகளும் நேர்மையும் இல்லாவிட்டால் எவ்வளவுதான் திறமையும் திண்மையும் இருந்தாலும் விழலுக்கு இறைத்த நீர் போல மறைந்து விடும். நேர்மை தான் நிர்வாகத்தை நிமிர்த்தும் முது கெலும்பு.

திறமை, திண்மை, நேர்மை தாரக மந்திரமாக அமைந்தால் மேலை நாடுகளைப்பார்த்து நாம் ஏங்க வேண்டாம். மற்றவர்கள் நம்மைப் பார்த்து வியப்பார்கள், போற்றுவார்கள், கூட்டுச் சேர விழைவார்கள்.

‘தேவி ப்ரோவ சமயமிதே‘ காப்பாற்றும் சமயமிதுதான் என்று தேவியை துதிக்கும் அழகான கர்நாடக சங்கீதப் பாடல். திறமை, திண்மை, நேர்மை இவற்றை அணிகலன்களாக கொண்டு துணிவுடன் நிர்வாகத்தை முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்லும் ‘சமயம் இதுவே‘.

Dinamani article

No comments: