Thursday, May 19, 2011

தருமம் வெல்லும்; வெல்ல வேண்டும்!


மதுரை என்றாலே மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலும், வைகையின் வளமும் சங்க இலக்கியமும்தான் ஞாபகம் வரும் வர வேண்டும். ஆனால் இப்போது சட்டம் ஒழுங்கு பிரச்சனையினால் மதுரை என்றாலே ஒரு பயம் மக்களைக்கவ்வுகிறது. அந்த நிலை வருந்ததக்கது. இதற்கு காரணம் பல பயங்கர நிகழ்வுகள், கொள்ளை, தீவைப்பு, ரௌடிகளின் அட்டகாசம் என்று சமூக அமைதியை விரும்பும் நடுநிலையாளர்கள் மனம் வெதும்புகின்றனர். ஒரு உயர் காவல்துறை அதிகாரியும் ரௌடிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று முயற்ச்சிக்கவில்லை, ஏன் எச்சரிக்கை கூட விடவில்லை என்று அங்கலாய்க்கின்றனர்.

காவல் துறையின் அடிப்படை பொறுப்பு சட்டம் ஒழுங்கு பராமரித்தல், குற்றங்கள் நடவாமல் தவிர்த்தல், நடந்த குற்றங்களை துரிதமாக கண்டுபிடித்தல் என்று வரையறுக்கப்பட்டுள்ளன. காவல் பணி சமுதாயத்தை கட்டுக்கோப்பாக காக்கும் பணி. சுதாரிப்பும், கவனமும் தொடர்ந்து இருப்பது அத்தியாவசியம். இது ஏதோ மற்ற அரசு அலுவலகங்கள் போல் கோப்புக்கள் மூலம் அன்றாடம் வரையறுக்கப்பட்டுள்ள நேரப்பணி அல்ல. மக்கள் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய முக்கிய பணி. அதை சரிவர களப்பணியாளர்களுக்கு உணர்த்தி அவர்களை உற்சாகப்படுத்தி பணித்திறனை மேப்படுத்த வேண்டிய பொறுப்பு மேற்பார்வையிடும் உயர் அதிகாரிகளுடையது.

ஒரு ஏட்டின் தொப்பியும், லத்தியும் மாட்டு வண்டியில் வந்தாலே கிராமத்தில் தானாக அமைதி வந்துவிடும் என்று அந்த காலத்து போலீசைப்பற்றி தெற்கு மாவட்டங்களில் பெருமையாக சொல்வார்கள். அன்றைய போலீஸின் கஞ்சி போட்ட அரை நிஜாரும், பூட் பட்டியும் அதில் சொருகிய பென்ஸிலும், கையில் சிறு நோட் புக்கும், உயர்ந்த சிவப்புத் தொப்பியும் பார்த்தால், மக்களுக்கு ஒரு வித பயம் கலந்த மரியாதையை தானாக வரவழைத்தது. ஆனால் இப்போதோ எந்த ஒரு சிறு பிரச்சனை என்றாலும் உயர் அதிகாரிகள் புடை சூழ நிலமையை சமாளிக்க வேண்டிய நிலை. அப்படி வந்தாலும் பிரச்சனைகள் முழுமையாக தீர்வதில்லை. ஏதோ அப்போது எரியும் தீயை அனணத்து விட்டு செல்கின்றனர். பிரச்சனை உருவாக்கதின் காரணம் ஆராயப்படுவதில்லை களைய முயற்சிப்பதில்லை.

இன்றைய உலகம் தகவல் வேட்கையில் திளையும் உலகம். வெகு விரைவாக ஊடகங்கள், இனணயதளம் மூலம் தகவல்களும் கருத்துக்களும் பரவுகின்றன. இந்த நவயுகத்தில் காவல்துறையின் செயல்பாடு ஹைதரலி காலத்தில் இருந்தால் மக்களின் கதி அதோ கதிதான். ஏதோ சில நவீன கருவிகள் வாங்கிக் கொடுத்தால் மட்டும் போதாது காவல்தறையின் அணுகுமுறையும், சிந்தனையும் மாறவேண்டும். காவல் உதவி மையங்கள் ‘சமுக சேவை மையம்‘ என்றிருந்த பெயரை மாற்றி காவல் நேய சேவை மையம் என்று வைக்கப்பட்டது. மனித நேயமே இல்லா காவல் நேயத்தால் யாருக்கு பயன்?மனிதன் நோக மனிதன் பார்க்கும் பார்வை‘ என்ற பாரதியாரின் வரிகளை எண்ணிப்பார்க்க வேண்டும். மக்கள் நோகும் படியான பார்வைதானே காவல்துறைக்கு என்று காவல் நிலையதிற்கே வர அஞ்சுகின்றனர். ஏதாவது புகார் கொடுக்க வேண்டுமென்றாலும் காவல் நிலையித்திற்குப் போய் பழக்கமில்லை என்று சிபாரிசைத் தேடி அலையும் நிலை.

வெளிப்படையான நிர்வாகத்தை சர்வதேச அளவில் அளவிடும் ‘ட்ரான்பரன்ஸி இன்டர்நேஷனல்‘ என்ற அமைப்பு ஊழலில் திளைக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்ற கணிப்பு, இப்போது பேசப்படும் ஊழல் செய்திகளைப்பார்க்கையில், ஆச்சரியம் ஒன்றுமில்லை.

அரசு துறைகளில் மக்களோடு நேரடியாக அதிகம் தொடர்புடைய துறைகள் சுகாதாரத்துறை, மக்கள் நலத்துறை, கல்வித்துறை, வேளாண்மைத்துறை மற்றும் காவல்துறை. இருபது சதவிகிதம் மக்கள் அரசு மருத்துவமனைகளில் தொடர்பு கொள்கின்றனர். இருபத்தைந்து சதவிகிதம் கல்வித்துறை, காவல்துறையோடு நான்கு சதவிகிதம் தான் மக்கள் தொடர்பு இருக்கிறது. ஆனால் அரசுத் துறைகளில் ஊழல் மலிந்த துறை காவல்துறை என்பது மக்களின் கருத்து என்று வெளிப்படையான நிர்வாகத்தின் ஆய்வில் வெளிவந்துள்ளது. ஊழல் மற்றத்துறைகளில் அதிகமாக இருந்தாலும் காவல்துறை ஊழல்தான் மக்களால் அதிகமாக உணரப்படுகிறது. இது காவல்துறை ஆளுமையை சிந்திக்க வைக்க வேண்டும்.

பல வருடங்களுக்கு முன் உத்திர பிரதேசத்தில் அப்போதிருந்த காவல்துறை தலைவர் திரு.சாக்ஸனா அவர்களால் வழக்குகளை உடனே தவறாமல் பதிவு செய்யும் முறை கொண்டு வரப்பட்டது. முந்தைய வருடங்களை விட பதிவு செய்யப்பட்ட வழக்குகள் பன்மடங்காக பெருகின. மக்கள் வரவேற்பைப் பெற்றது, ஆனால் நாளடைவில் ‘பழைய குருடி கதவதிறடி‘ என்று அந்த முயற்சி கைவிடப்பட்டது. மேற்கு வங்காளத்தில் ஜல்பாய் குடி என்ற மாவட்டத்தில் இளம் துடிப்புடைய காவல் கண்காணிப்பாளர் மக்கள் புகார்களை உடனே பதிவு செய்து விசாரணை மேற் கொள்ளும் முறையை துறை எதிர்ப்புகளுக்கிடையில் நடைமுறைப் படுத்தி வெற்றியும் கண்டுள்ளார். ஏனைய காவல்துறையினர் பின்பற்ற வேண்டிய நல் நடைமுறை என்ற பாராட்டையும் பெற்றுள்ளது.

மக்கள் விரும்புவது அவர்களது குறைகளை கேட்டு உரிய விசாரணை மேற் கொள்வது, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பது. இதை செய்ய தவறும் பொழுதுதான் அதிருப்தி ஏற்படுகிறது. பொது மக்கள் காவல் நிலையம் வருவதற்கு ஏன் அஞ்சுகிறார்கள்? சில காவல் நிலைய அலுவளர்களின் அலட்சியப் போக்கு, மனுக்களை பதிவு செய்ய மறுப்பது, பாதிக்கப்பட்டோர் கூறுவதை சந்தேகிக்கும் வகையில் வேண்டாத குறுக்குக் கேள்விகள் கேட்பது, உடனடியாக விசாரிக்காமல் காலம் தாழ்த்துவது போன்ற காரணங்களால் பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு வர அஞ்சுகின்றனர். சாதாரணமாகவே அரசு அலுவலகங்களில் எந்த ஒரு வேலையை நாடிச் சென்றாலும் காத்துக்கிடக்க வேண்டிய நிலை. ஒரு பிறப்பு, இறப்பு சான்றிதழ் வாங்குவதே பிரம்ம பிரயத்தனமாக இருக்கிறது. இத்தகைய சூழலில் காவல் நிலையத்தில் மேலும் கடுமையான அணுகுமுறை இருக்கும் என்று மக்களே தீர்மானித்து விடுவது வருத்தம் தரும் உண்மை. ஆதலால் காவல்துறை உங்கள் நண்பன் என்று பெயரளவில் மட்டுமில்லாது முழுஈடுபாடுடன் செயலில் காண்பிக்க வேண்டும்.

காவல் நிலைய அதிகாரிக்கு இரண்டு முகம் இருக்கிறது. பாதிக்கப்பட்டவரை மனிதாபிமானத்தோடு நடத்தி துரிதமான நேர்மையான நடவடிக்கை வேண்டும். இது கனிவான முகம். குற்றம் புரிந்தவர் சட்டத்தை மீறுபவர்கள் போன்ற சமுதாய விரோதிகளுக்கு கடுமையான முகம் காண்பிக்க வேண்டும்.

மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு உடனடியாக குற்றத்தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். குற்றத்தடுப்பு என்பது ஏதோ காவலர்களை ரோந்து அனுப்புவதோடு நின்று விடுவதில்லை சரகத்தில் உள்ள கெட்ட நடத்தைக்காரர்களை கண்காணிப்பது, சந்தேக நபர்களை விசாரிப்பது, குற்றங்கள் சம்பந்தமான தகவல்களை சேகரிப்பது, வேறு நகரங்களின் நிகழும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளின் தாக்கத்தை கணித்து தடுப்பு நடவடிக்கை எடுப்பது என்ற பல ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அடங்கிய மிகக் கடினமான பொறுப்பை காவல்நிலைய அதிகாரி நிர்வகிக்க வேண்டும். இதில் பொது மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்.

அந்தரத்தில் சட்டம் அமலாக்கப்படுவதில்லை. மக்கள் நலம் தான் பிரதானம். உதாரணமாக வாகன சோதனை என்று வாகன ஒட்டிகளையும், சாமானிய சிறு வியாபாரிகளையும் வேதனைப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வாகன விபத்துக்களை தடுப்பதற்குதான் வாகன தணிக்கை மேற்கொள்ள வேண்டும். நம்பர் ப்ளேட் இல்லாமல் வளைய வரும் வாகனங்கள், காதைப்பிளக்கும் விரச பாடல் ஒலிக்க அதிவேகமாக கார் ஒட்டும் புதுப் பணக்காரர்கள், ஷோலவரம் பந்தயத்திற்கு ஒட்டுவது போல் மோட்டார் சைக்கிளை ஒட்டும் ரோமியோக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டம் ஒழுங்கு பராமரிப்பின் அடிப்படை திட்டமிட்ட செயலாக்கம், மேலோட்டமாக நுனிப்புல் மேயும் மேலதிகாரிகள் ஏட்டளவில் திட்டமிடுதலிலும், வீண் கூட்டங்களிலும் நேரத்தை விரயமாக்குவர். செயலாக்க வீரர்கள் திட்டங்களை நிறைறேற்றுவதற்கு எவ்வாறு களப்பணியாளர்களை ஊக்குவித்து அவர்களது தேவைகளை பூர்த்தி செய்து முழுமையான பயன் பாட்டை பெறுவதில் கவனம் செலுத்துவார்கள். எவருக்கும் வளைந்து கொடுக்கமாட்டார்கள். அவர்களது குறுக்கீடுகளுக்கும், தலையீடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

உற்பத்தி செய்ய முடியாதது நிலம் ஒன்றுதான். காணி நிலமானாலும் ப்ளாட் போட்டு விற்கும் இடைத்தரகர்கள் எங்குபார்த்தாலும் முளைத்துள்ளனர், சொத்துரிமை என்பது அடிப்படை உரிமை. அது பறிக்கப்படும் நிலை இந்த நிலதாதாக்களால் உருவாக்கப்பட்டுள்ளது. போலி ஆவணங்களை தயாரிப்பது, வயதானவர்கள் மட்டும் இருக்கும் இருப்பிடங்களை பயமுறுத்தி வாங்குவது, வெளி நாடுகளில் தற்காலிகமாக வசிப்பவரின் சொத்துக்களை பறிப்பது. இப்போது அதிகமாகியுள்ளது. இது மக்களிடத்தில் பயத்தை விளைவித்துள்ளது என்றால் மிகையில்லை. வாடகைக்கு இடம் பிடித்து அதையே அபகரிக்கும் கயவர்கள் அதிகமாகியுள்ளனர். நில தாதாக்களால் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் சர்வ சாதாரணமாக நிகழ்கின்றன என்பதை மறுக்க முடியாது. இதை முறியடிக்க வேண்டிய உடனடி பொறுப்பு காவல் துறைக்கு இருக்கிறது. நிலம் சம்பந்தப்பட்டது ஏதோ சிவில் வழக்கு என்று விட்டு விட முடியாது.

‘சாமானியர்கள் சகாப்தம் இது‘ என்றார் அறிஞர் அண்ணா. ஆனால் சாமானியர்கள் பெயரைச்சொல்லி கோடிகள் அள்ளும் நிலை வந்துவிட்டது. இந்த சூழலில் சமுதாய மதிப்பீடுகளும் மங்கிக் கொண்டிருக்கின்றன. இதன் தாக்கம் காவல்துறையிலும் பிரதிபலிக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. சட்டதிட்டங்களை நடைமுறைபடுத்தும் காவல்துறை கடைபிடிக்க வேண்டிய கட்டுபாடுகள் அப்பழுக்கற்றவையாக இருக்க வேண்டும். அதற்கு முன்நோடியாக உயர் அதிகாரிகளின் நடவடிக்கை இருக்க வேண்டும். நேர்மை, சிந்தனை வாக்கு செயலில் பிரதிபலிக்க வேண்டும்.

தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் தாம் முன்நின்று களப்பணியாளர்களை வழி நடத்தி செல்ல வேண்டும். பாரம்பரியம் மிக்க தழிழக காவல்துறை பல சவால்களை வெற்றிகரமாக சந்தித்துள்ளது. துறையின் வலிமை வல்லவர்கள் விட்டுச்சென்ற நல் செயல் முறைகள். எதையும் சாதிக்கவல்ல அறிவும், ஒழுக்கமும் படைத்த ஆய்வாளர்களும், உதவி ஆய்வாளர்களும், காவலர்களும் உள்ளனர். நேர்மையான திறமையான வழிகாட்டுதல் மீண்டும் காவல் துறையை மிளிரச் செய்யும்.

This article is published in Dinamani on 17.05.2011

No comments: