Wednesday, May 11, 2011

சமய சஞ்சீவிகளை மறக்கலமா?


தன்னலமின்றி மற்றவர்களுக்காக தனது சேவையை அர்பணிக்கின்றவன் தான் சமுதாயத்தில் உண்மையாக உயர்ந்தவன் என்பது சுவாமி விவேகானந்தர் பொன்மொழி. பொதுமக்களை ஆபத்திலிருந்து காப்பற்றும் பணியில் தம்மை முழுமையாக அர்ப்பணிக்கும் தீயணைப்பு விரர் உள்ளபடி உயர்ந்த மனிதர் என்பதில் ஐயமில்லை.

எரங்காட்டூர் என்ற கிராமம் ஈரோடு சத்தியமங்கலத்திலிந்து பவானிசாகர் செல்லும் பாதையில் உள்ளது. அங்கு ஒரு நெசவுத் தொழிற்சாலையில் பஞ்சு கட்டுக்கட்டாக சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய கிடங்குகளை பராமரிக்க சில வழிமுறைகள் உண்டு. முழுமையாக அடைத்தாற் போல் வைக்கக்கூடாது. காற்று வளைய வர இடைவெளி விடவேண்டும். அப்போது வெப்பத்தில் குமைய வாய்ப்பில்லை வெப்பம் அதிகமாகும் கோடை காலத்தில் இத்தகைய கிடங்குகள் தீப்பற்றிக்கொள்ளும் ஆபத்து அதிகம். எரங்காட்டூர் நெசவுத் தொற்சாலை பஞ்சு சேமிக்கப்பட்டிருக்கும் கிடங்கில் ஏப்ரல் 1 ம் தேதி மாலை தீடீரென்று தீப்பற்றிக் கொண்டது.

பஞ்சு தீப்பற்றிக் கொண்டால் அது வெகு விரைவில் பரவும்,. பணியில் இருந்த தொழிலாளர்கள் தீயை அணைக்க போராடினர். பிறகு சத்தியமங்கலம் தீயைணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு தீயணைப்பு நிலையங்களிருந்து வாகனங்கள் விரைந்தன. சேமிப்புக் கிடங்கில் பின்புறம் உயர் பாதுகாப்புச் சுவர் உள்ளது. அதன் வழியாகவும் பெருந்தீயின் தாக்கத்தைக் குறைக்க தீயணைப்பு வீரர்கள் முன் வழி பின் வழி இருபுறமும் தீயணைப்பு தாக்குதலை நடத்தினர். 46 வயதான சத்தியமங்கல தீயணைப்பு நிலைய வீரர் திரு.பிரபாகரன் திறமையான பணிப்பற்றுதலுடைய பணியாளர் பலப் பெருந் தீவிபத்துகளில் பணி செய்து முத்திரைப்படைத்தவர். கிடங்கின் உயர் சுவர் பின் புறம் தைரியமாக தீயணைப்பு பணியில் ஈடுபட்டார் பழமையான சுவர் நிலை கொள்ளாமல் விழுந்தது. அதில் பரிதாபமாக திரு.பிரபாகரன் சிக்கிக்கொண்டார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். ஆனால் விலா எலும்பு முறிந்து ரத்தக்குழாய் சிதைந்து அதிக ரத்தக்கசிவு ஏற்ப்பட்டதால் உயிர் பிரிந்தது.

பணியில் உயிர்துறந்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர ஆஞ்சலி செலுத்தும் நாள் ஏப்ரல் 14, இந்த நினைவு நாள் நாடெங்கிலும் அனுசரிக்கப்படுகிறது. 1944-ஆம் வருடம் மும்பாய் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வெடிமருந்துகள் தாங்கிய கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் துறைமுகத்திற்கு பெரும் சேதாரம் ஏற்பட்டது. பல கப்பல்கள் பாழடைத்தன, தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்களும் துறைமுக பணியாளர்களும் போராடினர். விபத்தில் 249 பணியாளர்கள் உயிரிழ்ந்தனர். தீ விபத்து நேர்ந்தால் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அளவிடமுடியாதது. தீயால் அழியாதது எதுவுமில்லை. மும்பாய் விபத்து நிகழ்ந்தது ஏப்ரல் 14 அந்த நாள்தான் தீயணைப்பு வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் நாள்.

1908-ம் வருடம் நியூயார்க் தீயணைப்புபடை தலைமை வகித்த தளபதி எட்வர்ட் க்ராகர் கூறுவார். ஒரு தியணைப்பு வீரர் பணியில் சேரும் பொழுதே உயிர் தியாகத்திற்கு தயாராகி விடுகிறார். எந்த ஒரு தீயணைப்பு அழைப்பும் அபாயத்தை குறிக்கும் அபாயத்தில் சிக்கிய அபயக் குரல் கொடுக்கும் ஜீவனை காப்பாற்ற நேரம்தப்பாமல் விரைந்து செயல்பட வேண்டிய பொறுப்பு தீயணைப்பு வீரருடையது. உயிருடன் திரும்புவாரா என்பது கேள்விக்குறி ஆதனால் தான் தீயணைப்பு பணியில் அமர்வதே ஒரு சிறந்த தியாகம்.

வளர்ந்து வரும் சமுதாயத்தில் பல பிரச்சனைகள் பின்னிப் படர்கின்றன. பொருளாதார வளர்ச்சியோடு நகரங்கள் விரிவடைகிறது. புதிய நகரங்கள் தொழிற் கூடங்கள் உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலமும் போட்டிப்போட்டுக் கொண்டு தொழில் வர்த்தக முதலீட்டார்களை வரவேற்கின்றனர், வளர்ச்சிக்கு அடிப்படை ஆதாரம் நிரந்தர கட்டமைப்புகள். அத்தகைய வளர்ச்சிப்பணிகளை திட்டமிடும் பொழுதும் சரி நிறைவேற்றப்படும் பொழுதும் போதிய பாதுகாப்பு முறைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. உயர்மாடிக்கட்டிடங்கள் மற்றும் பல்வேறு கட்டுமானப்பணிளை ஒழுங்குப் படுத்தும் விதமாக தேசிய கட்டிட விதிகள் 2005-ம் வருடம் வெளியிடப்பட்டது. இதில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கடை பிடித்து தான் 15 மீட்டருக்கு அதிகமாக உயரம் கொண்ட கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.

முக்கியமாக உயர்மாடிக்கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டாலோ மீட்புப்பணி வீரர்கள் சம்பவ இடத்தில் பணிபுரிவதற்கு உதவும் வகையில் கட்டிடத்தை சுற்றி போதிய இடைவெளி, அகலமான நுழைவுவாயில், விஸ்தாரமான தாழ்வாரங்கள், தடைகள் இல்லாத மாடிப்படிகள், பிரத்யோக அவசரகால லிஃப்ட், தீயணைப்பு தெளிப்பான்கள், கட்டிடப் பரப்பளவுக் கேற்றவாறு நீர் சேமிப்பு கிடங்கு போன்ற பல விதிமுறைகள் வரையறுக்கப்பட்ள்ளன. இவை சரியாக நிறுவப்பட்டுள்ளதின் அடிப்படையில் தீயணைப்புத்துறை உரிமம் வழங்குகிறது.

2004 ம் வருடம் நடந்த கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 93 குழந்தைகள் உயிரிழந்ததையடுத்து பள்ளிகளில் குறைந்தபட்சம் தீப்பாதுகாப்பு மேற்கொள்ப்பட்டிருக்கிறதா என்பதை பார்வையிட்டு சான்றிதழ் தீயணைப்புத்துறை வழங்க வேண்டும். தமிழகத்தில் சுமார் 55,000 பள்ளிகள் உள்ளன, இவ்வாறு தீயணைப்புத்துறைக்கு பொறுப்புகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஆண்டொன்றுக்கு சுமார் 20,000 தீயணைப்பு அழைப்புகளும், உயிர் மீட்புப்பணிக்கான அழைப்புகள் சுமார் 10,000 வருகின்றன. தமிழ்நாட்டில் நிறுவப்பட்ட தீயணைப்பு நிலையங்கள் 300, மீட்புப்பணி நிலையம் இரண்டு. ஒப்பளிக்கப்பட்ட தீயணைப்பு வீரர்கள் எண்ணிக்கை 6741.

தீயணைப்புத்துறையை மேம்படுத்த நீதியரசர் பக்தவத்சலம் தலைமையிலான கமிஷன் அமைக்கப்பட்டு அது நல்ல பல பரிந்துரைகளை 2005-ம் ஆண்டு வழங்கியது. நவீன உபகரணங்கள் வாங்குவதற்கும், பேரிடர் ஏற்பட்டால் அதனை சமாளிக்கும் வகையில் கருவிகள் வாங்கவும் அரசு ஆணையிட்டது. அதன் பலனால் தீயணைப்புத்துறை நவீனமயமாக்கும் திட்டம் கடந்த மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டது.

பொதுமக்கள் நலனுக்காக நிறைவேற்றப்படும் எந்த ஒரு திட்டமும் அவர்களது ஒத்துழைப்பின்றி முழுமையடையாது. அதுவும் பொதுமக்களுக்கு சேவை என்பதையே பிரதானமாக கொண்ட காவல்துறைக்கும், தீயணைப்புத்துறைக்கும் இத்தகையை ஒத்துழைப்பு மிகவும் அவசியம். இதை கருத்தில் கொண்டு தீயணைப்புத்துறையில் தீப்பாதுகாப்பு தொண்டர்களாக அந்தந்த சரகத்தில் தெரிவு செய்து பாதுகாவலர்களாக இணைத்துக்கொள்ள அரசு 2006 ம் ஆண்டு ஆணையிட்டது. இதுவும் பக்தவத்சல கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் வெளியிடப்பட்ட ஆணை. பாதுகாப்பு தொண்டர்களை பள்ளிமாணவ மாணவியர், கல்லூரி இளைஞர்கள், சமுதாய தொண்டர்கள் என்று மூன்று நிலையாக பிரித்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஃபயர் மார்ஷல் என்ற ஒருங்கிணைப்பாளரை நியமிக்கும் திட்டம் வகுக்கபப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கல்விக் கூடங்களில் தீயணைப்பு பாதுகாப்பு சான்றிதழ் வழங்கும் அதே வேளையில் தீப்பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த தீயணைப்பு சாரணர் அமைப்பு உருவாக்கப்பட்டது மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. அரசுப்பள்ளிகளுக்கு அது சம்மந்தமாக அறிவுரை வழங்கி அதை மேலும் திறம்பட செயல்ப்படுத்த வேண்டும் என்ற கருத்தை அரசுக்கு அனுப்பப்பட்டு சுமார் ஒரு வருடத்திற்கு மேல் ஏனோ ஆணையிடப்படாமல் தவக்கத்தில் உள்ளது.

மாநிலங்களில் உள்ள தீணைப்புத்துறைகளை ஒருங்கிணைக்கவும், பேரிடர் நிகழ்வுகளில் மக்களைப் பாதுகாக்கவும் மத்தியில் பேரிடர் மேலாண்மைக் குழுமம் அமைக்கப்பட்டுள்ளது. தலைமை இயக்குனர் தீப்பாதுகாப்பு என்ற உயர் அதிகாரி டிஜிபி அந்தஸ்தில் பணிபுரிகிறார். தீப்பாதுகாப்பும், ஊர் காவல் படையும் இவரது கட்டுப்பாட்டில் உள்ளது. பல மாநிலங்களில் தீயணைப்புத்துறையும் ஊர்காவல்படையும் ஒரே அதிகாரியின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. ஆனால் தமிழகத்தில் மட்டும் நிலைவேறு. தீயணைப்புத்துறையை டிஜிபி நிலை அதிகாரி தலைமை வகிப்பதால் அவரது கட்டுப்பாட்டில் ஊர்காவல் படை மற்றும் குடிமை பாதுகாப்பு துறையை கொண்டு வர வேண்டும் என்ற கருத்தருவும் இரண்டு வருடங்களாக அரசுப் பரிசீலனையில் உள்ளது. இது மக்கள் பாதுகாப்பு சம்மந்தப்பட்டது. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய் பொருள் காண்பது அறிவு என்ற வள்ளுவர் வாக்ககில் அறிவு அரிதானது வேதனையளிக்கிறது.

மாநிலங்களில் உள்ள தீயணைப்புத்துறைகளின் செயலாக்கத்தை மேம்படத்தவும் குறைகளை ஆய்வு செய்யவும் மத்தியில் குழு அமைக்கப்பட்டது. அந்த ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்தன. பேரிடர்களை எதிர் கொள்வதில் குறைபாடுகள் 97 சதவிகிம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது மாநிலங்களின் சராசரி ஆயத்த நிலை முன்று சதவிகிதம்தான். இதை சீர் செய்வதற்கு முதல் கட்டமாக ருபாய் 7000 கோடி முக்கிய நகரங்கள் மற்றும் மாவட்ட தலைமையிடங்களில் பேரிடர் மற்றும் தீப்பாதுகாப்பு மேம்படுத்த அந்தந்த நகராட்சிகள் முலம் மத்திய அரசு நடப்பு நிதி அறிக்கையில் ஒதுக்கியுள்ளது. இதன் அடிப்படையில் சென்னை, மதுரை, கோயம்பத்தூர் நகரங்களில் பேரிடர் பாதுகாப்பு மேம்படுத்த திட்டம் வகுக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதை ஒரு காலவரையில் நிறைவேற்றப்பட வேண்டும்.

மேலை நாடுகளில் பொது இடங்களிலும் வர்த்தக மையங்களிலும் மக்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பாதுகாப்பு குறைபாடு இருந்தால் அந்த கட்டிடம் செயல்பட முடியாது அது மூடப்படும். அத்தகைய நிலை நமது நாட்டிலும் வர வேண்டும். பல அரங்குகளையும் பல மாடிக்கட்டிடங்களையும் நிறுவுபவர்கள் அவை பாதுகாப்பானவை என்று பெருமை கொள்ள வேண்டும். பொதுமக்களும் பாதுகாப்பு இல்லாத வர்த்தக மையங்களை புறக்கணிக்க வேண்டும்.

தீயணைப்புத்துறைக்கு தொழில்நுட்பமும் நவீன சாதனங்களும் இன்றியமையாதது. வெறும் கையில் ழுழம் போடமுடியாது. தீயணைப்பு வீரருக்கு உரிய மீட்புப்பணிக்கான சாதனங்கள் கொடுக்கப்பட வேண்டும். தீயென்று அலறும் போதும் ஆபத்து நெருங்கும் போதும் கடவுளே காப்பாற்று தீயணைப்பு வீரரை உடனே அனுப்பு என்று வேண்டுவோம் ஆனால் தீயணைந்த பிறகு ஆபத்து விலகிய மாத்திரத்தில் கடவுளை மறந்தோம் பாதுகாப்பு வீரரை இகழ்ந்தோம் என்றில்லாமல் சமய சஞ்சீவியான தீயணைப்பு விரரின் கைகளை பலப்படுத்துவோம் துறையை மேம்படுத்துவோம்.

This article published in Dianamani on 10.05.2011

00000

No comments: