நீரின்றி அமையாது உலகம் என்பது சத்திய வாக்கு. மின்சாரம் இன்றி உழலாது வாழ்க்கை என்ற அளவில் நவயுகத்தில் மின்சக்தி எங்கும் வியாபித்திருக்கிறது. உணவு, உடை, வீடு எவ்வாறு அத்தியாவசியமோ அதேபோன்று மின்சாரம், குடி நீர், சாலை முக்கியமாக கருதப்படுகிறது. ‘ரோட்டி, கப்டா, மக்கான்‘ என்பதோடு ‘பிஜ்லி, சடக், பானி‘ (மின்சாரம், பாதை, தண்ணீர்) என்று வட இந்தியாவில் அரசு இதை உறுதிசெய்ய வேண்டுமாறு மக்கள் கோஷமிடுகின்றனர்.
தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறை பல சர்ச்சைகளையும், பிரச்சனைகளையும் உருவாக்கியுள்ளது. மின்சாரமின்மையால் விவசாயம், தொழில், ஏன் அன்றாட வாழ்க்கையே பாதிக்கப்படுகிறது. தேர்வு நேரத்தில் மின் விளக்கு எரியவில்லை என்றால் மாணவர்கள் எங்கு சென்று படிப்பார்கள்? இளைய தலைமுறைதான் நாட்டின் எதிர்காலம் அவர்கள் அவதிப்பட்டால் பாதிப்பு சமுதாயத்திற்குத்தான்.
தீர்கதரிசியான பிரதம மந்திரி பண்டிட் நேரு சுதந்திர இந்தியாவில் மின் சக்தியை பெருகுவதற்காக பெரிய அணைகள் கட்டி அதன்மூலம் மின் உற்பத்தி செய்து பல்வகை பயனளிப்பு அளிக்ககூடிய திட்டங்களை வகுத்து செயல்படுத்தினார். கனரக தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. இந்த அடிப்படை கட்டமைப்புகள்தான் நாட்டின் அஸ்திவாரம். மின்சார உற்பத்தி பல வகைப்பட்டது. நீர் நிலைகள், காற்றலை, சூரியவெப்பம், அனல் மின், அணுமின் என்ற ஆதாரங்களிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மின்சார உற்பத்தியில் அரசுதான் பிரதான பங்கு வகிக்கிறது. பல தனியார் நிறுவனங்கள் மின்சாரம் தயாரிப்பதற்க்கு ஊக்குவிக்கப்படுகிறன. இதற்காக அரசுடன் ஒப்பந்த பத்திரங்கள் பல மாநிலங்களில் பதிவாகியுள்ளன. ஆயினும் மின் பற்றாக்குறை தொடர் கதையாகவே உள்ளது. காரணங்கள் பல உள்ளன. தேவைகளை சரியாக கணக்கிடாதல், பயன்பாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் முறையாக பராமரிக்கப்படாதல், தடம்மாறி மின்வாரத்தை எடுத்துச் செல்லும்பொழுது ஏற்படக்கூடிய மின் நஷ்டத்தை தடுக்க/குறைக்க, நடவடிக்கை எடுக்க தவறுதல், போன்ற முக்கிய காரணங்கள் மேலும் மின்சாரம் விரயமாக்குவதை தவிர்த்தல், இதற்கு மேலாக மின் உற்பத்தி பெருக்கத்தை திட்டமிடுதல், திட்டமிடப்பட்ட மின்சார உற்பத்தி மையங்களின் கட்டுமானப்பணிகளைத் துரிதப்படுத்துதல் போன்ற பல்முனை சீரான நடவடிக்கைகள் முனைப்பாக எடுக்க வேண்டும்.
தமிழகத்தைப் பொருத்தவரை மதிப்பிடப்பட்ட வருடாந்திர மின்சாரத் தேவை 59,916 மில்லியன் யூனிட்டுகள். நமது உற்பத்தி 29,370 மில்லியன் யூனிட்டுகள்தான், 30,546 மில்லியன் யூனிட்டுகள் அண்டை மாநிலங்களிலிருந்தும் மற்றவகையிலும் வாங்கப்படுகிறது. மின்சார வாரியத்தின் 2010-11 பட்ஜெட் ரூபாய் 38,665 கோடி அதில் செலவு ரூபாய் 30,833 கோடி, வருவாய் ரூபாய் 21,307 கோடி மின்சார வாரியத்தின் பட்ஜெட் எப்போதும் பற்றாக்குறையாகத்தான் வைக்கப்படும் பட்ஜெட். 2010-11 ல் பட்ஜெட் பற்று ரூபாய் 3,701 கோடி.
மின்சாரத் தேவைக்கும் உள்நாட்டு உற்பத்திக்கும் உள்ள இடைவெளி அதிரித்தும் கொண்டே இருப்பது தெளிவு. அதிகமாக விலை கொடுத்து வெளியிலிருந்து மின்சாரம் வாங்குவதால் நிதி நிலையிலும் இந்த பற்றாக்குறை பிரதிபலிக்கிறது.
தமிழகத்தில் நிர்மாணிக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களின் உற்பத்தித்திறன் 10,214 மெகா வாட். இதில் 2,970 மொகவாட் அனல் மின் (தெர்மல்), 2,187 மெகாவாட் நீர்நிலைகளிலிருந்தும் (Hydro), காற்றலை 17 மெகாவாட்(Wind), இதரவகை வாயுகள் மூலம் 515 மெகாவாட்(Gas), தனியார் உற்பத்தி 1,180 மெகாவாட். இதில் சராசரி பயனளிப்பிற்கு எடுக்கப்படுவது சுமார் 8,500 மெகாவாட். மின் உற்பத்தி செய்யும் மையங்கள் தனது தேவைக்கு எடுத்துக்கொண்டு மீதம் உள்ளதை பயனளிப்பிற்கு கொண்டுவரப்படுகிறது (Captive power) .
மின்சாரம் உற்பத்தி மையத்திலிருந்து பல இடங்களுக்கு விநியோகிக்கும் பொழுது மின் இழப்பு ஏற்படுகிறது. இந்த ’ட்ரான்ஸ்மிஷன் லாஸ்’ ஒரு வரம்புக்குள் கட்டுப்படுத்த வேண்டும். சராசரி பதினெட்டு சதவிகிதம் தான் ஏற்படுகிறது என்று பதிவு செய்தாலும் மின் இழப்பு இதைவிட அதிகமாக இருக்கும் என்பது கணிப்பு. பல பொது நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்களுக்கு அனுமதியின்றி மின் இணைப்பு தற்காலிகமாக இழுப்பதும் இதில் அடங்கும். பலகோடி ரூபாய் பெறுமானமுள்ள ட்ரான்ஸ்ப்பார்மர்கள், மற்றும் நூதன இணைப்பு, விநியோக உபகரணங்கள் மிக உன்னிப்பாக பராமரிப்பு செய்து உரிய நேரத்தில் பழுடைத்த பொருட்களை மாற்றப்படுவதை உறுதி செய்தால் மின் இழப்பை கணிசமாக குறைக்கலாம். இதை மேற்பார்வையிடுவதில் சுணக்கம் இருப்பது பொதுவான குற்றச்சாட்டு. இதை மேலிடம் உரிய நேரத்தில் தலையிட்டு சீர் செய்ய வேண்டும்.
பொதுமக்களுக்கு வீட்டு உபயோகத்திற்காக கொடுக்கப்படும் குறைந்த அழுத்த மின்சாரம் 12,575 மில்லியன் யூனிட். இது மொத்த தேவையில் 23.8 சதவிகிதம். தொழிற்சாலைகளுக்கு கொடுக்கப்படும் உயர் அழுத்த மின்சாரம் 15,434 மில்லியன் யூனிட். மொத்த தேவையில் இதன் நிலை 29.21 சதவிகிதம். இவை இரண்டும் சீராக வழங்கப்பட எல்லா முயற்சிகளும் எடுக்கவேண்டும்.
விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கும் மாநிலங்களில் தழிகமும் ஒன்று. 12,420 மில்லியன் யூனிட் மின்சாரம், அதாவதுமொத்த தேவையில் 21.5 சதவிகிதம் விவசாயம் சார்ந்த பணிகளுக்காக உபயோகிக்கப்படுகிறது. இலவச மின்சாரம் வரையறுக்கப்பட்ட நேரத்தில் வழங்கப்படுவதில்லை என்ற குறை இருக்கிறது. எப்போது பாசனத்திற்கு தண்ணீர் இரைக்க வேண்டுமோ அந்த நேரத்தில் ‘லோட் ஷெட்டிங்‘ என்று மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிடும். இதனால் பல இடங்களில் டீசல் மோட்டார் மூலம்தான் தண்ணீர் எடுக்க முடியும். ஏழை விவசாயகளுக்கு இதுவும் முடியாது. வானம் பார்த்த பூமி என்று நிலத்தை விடவேண்டிய நிலை. குறைந்த அளவில் கட்டணம் வசூலித்தாவது உறுதியாக மின்சாரம் வழங்குவது சாலச்சிறந்தது.
சிறு குற்றம் செய்தவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்குகிறார்கள் ஆனால் பெரிய வழக்குகளில் உள்ள குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடுகிறார்கள். கீழ்நிலை அரசு ஊழியர் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டு உடனடியாக விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறது. ஆனால் கோடி கோடியாக அள்ளுபவர்கள் சுதந்திரமாக பவனி வருகின்றனர். இந்த நிலை மின்சாரக் கட்டணம் வசூலிப்பதிலும் நிரூபணமாகிறது. சிறு உபயோகிப்பாளர்கள் உரிய நேரத்தில் மின்சாரக் கட்டணம் செலுத்தவில்லை என்றால் உடனே இணைப்பு துண்டிக்கப்படுகிறது. ஆனால் பல தொழிற்சாலைகள் மற்றும் அதிக உபயோகிப்பாளர்களிடமிருந்து பெறப்படவேண்டிய கட்டணம் நிலுவைத் தொகை சுமார் ஆயிரம் கோடிக்கு குறையாமல் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதுவும் மின்சாரம் விரையமாகுவதற்க்கு காரணம். புதிய சட்டங்கள், நிலையாணைகள், விதிகள் வரையப்படுகின்றன. ஆனால் அவை செயல்படுத்துதில்தான் பிரச்சனை. வசதிக்கு ஏற்றவாறு அமல்படுத்துதல், வேண்டப்பட்டவர் என்றால் நடவடிக்கை தவிர்த்தல் என்ற அணுகுமுறை எந்த நிர்வாகத்தையும் பாதிக்கும் என்பதை நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்கள் உணரவேண்டும். அவர்களது தலையாய கடமை சட்டதிட்டங்களை பாரபட்சமின்றி ஒரு சீராக அமல் படுத்துவதுதான்.
மின்சாரக் கட்டணம் கட்டாமல் இருப்பதும் ஒருவகை மின்சாரத்திருட்டு என்று கொள்ள வேண்டும். இது தவிர வாரியத்திற்கு விண்ணப்பிக்காமல் சுயமாக இணைப்பு எடுத்து மின்சாரத்தை திருடுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது, இதுவும் நிர்வாகத்தின் சீர்கேட்டின் அறிகுறி. 2006-07 ம் அண்டில் 2,910 வழக்குகள் பதிவாயின, 2008 ம் வருடம் 3,746 வழக்குகள், 2009 ஆம் அண்டு 4,425 வழக்குகள், 2010-ல் 6,236 வழக்குகள் என்று ஒரு புறம் அமலாக்கம் முடுக்கப்பட்டாலும், மின்சாரத் திருட்டு தொடர் கதையாகவே உள்ளது. கடந்த வருடம் மட்டும் மின்சாரத்திருட்டினால் ஏற்பட்ட இழப்பு சுமார் ரூபாய். 5,000 கோடி இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
எல்லா கிராமப்புறங்களுக்கும் எளிதில் செல்ல முடியாத இடங்களுக்கும் மின் வசதி அளிக்க வோண்டும் என்று திட்டமிடப்படுகிறது. இவ்வாறு பல கோடி ரூபாய் செலவில் கொடுக்கப்படும் மின் இணைப்பினை எவ்வளவு பொறுப்புடன் உபயோகிக்க வேண்டும் என்பதை உணர வேண்டும். பல இடங்களில் சர்வசாதாரணமாக கொக்கிப் போட்டு மின் திருட்டு நடைபெறுகிறது. களத்தில் உள்ள பணியாளார்கள் அதனை கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்பார்வையிடும் அதிகாரிகள் ‘கண்டதே காட்சி கொண்டதே கோலம்‘ என்றில்லாமல் களத்தில் நேரடியாக பார்வையிட்டால் அத்தகைய முறைகேடுகள் நடவாமல் கடும் நடவடிக்கை எடுக்க முடியும், எடுக்கவும் வேண்டும்.
மின் உற்பத்தி பெருக்குவதற்க்கு திட்டமிட்டு நடவடிக்கை எடுத்தல் அத்தியாவசியம். நீர் முலம் மின்சாரம் உற்பத்தி தான் குறைவான முதலீட்டில் குறைந்த விலையில் மின்சாரம் அளிக்க முடியும். நான்கு அனல் மின் நிலையங்கள், எண்ணூர், அத்திப்பட்டு, மேட்டூர், தூத்துக்குடி அகிய இடங்களில் உள்ளன. மேலும் மூன்று அனல் மின்நிலையங்கள் மேட்டூர் மற்றும் சென்னைக்கு அருகிலும் வர இருக்கின்றன இதன் மூலம் 1,800 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க முடியும். அனல் மின்நிலையம் அமைப்பதற்கு குறைந்தபட்சம் நான்கு வருடங்களாகும். அண்டை மாநிலம் ஆந்திராவில் அதிக அளவில் அனல் மின் நிலையங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு நிறை வேற்றப்பட்டுள்ளது. இத்தகைய போர்கால நடவடிக்கை நமது மாநிலத்திலும் தேவை. விசைமூலம் பாய்ச்சப்படும் நிரின் முலமே மேலும் சிறிய அளவில் மின்சாரம் தயாரிக்க முடியும். இதனை மாதிரியாக திரு.நீதிச்சாமி என்ற இளைஞர் தயாரித்துள்ளார். இது பரீட்சார்த்த நிலையில் உள்ளது. இத்தகைய யுக்திகள் மற்றும் சூரிய சக்தி முலம் மின்சாரம் தயாரிப்பு, கழிவு பொருட்கள் முலம், சர்க்கரை ஆலைகளில் பெறப்படும் தாதுக்கள் வைத்து மின்சாரம் தயாரித்தல், காற்று, பல்வகை வாயுகளின் ஆதாரம் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் முயற்சிகள் முடுக்கிவிடப்படவேண்டும்.
உடனடியாக மின்வெட்டினை சமாளிக்க மின்சார உற்பத்தி மையங்களின் மேலாண்மையை மேம்படுத்தி முழுமையான பயன்பாட்டினைப் பெற வழிவகை செய்ய வேண்டும். சர்க்கரை ஆலைகளில் பெறப்படும் கரும்புச்சக்கை, மற்றும் சர்க்கரை உற்பத்தியின் போது கிடைக்கும் உபரிப் பொருட்களை வைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டங்கள் வரையப்பட்டன, ஆனால் செயல்படுத்தவில்லை, இதன் முலம் குறைந்த காலத்தில் மின் உற்பத்தி செய்யலாம்.
மேட்டூர் மற்றும் சென்னைக்கு அருகிலும் வளர்ந்து கொண்டிருக்கும் மூன்று அனல் மின் நிலையங்களின் கட்டுமானப்பணிகளை துரிதப்படுத்தி இந்த வருட இறுதி அல்லது 2012 ஆரம்பத்தில் பயனளிப்பிற்கு கொண்டு வரவேண்டும். மின்சார வாரியத்தின் நிர்வாகத்தை சீர்செய்து பொருளாதார நஷ்டத்தை குறைக்க வேண்டும். ஊழலுக்கு இடம் கொடாமல் குறைந்த விலையில் வெளிமாநிலங்கலிருந்து மின்சாரம் வாங்கும் வெளிப்படையான நிர்வாகமுறை கொண்டு வரவேண்டும். நமது மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை நேரடியாக மின் வாரியம் இடைத்தரகர்களைத் தவிர்த்து கொள்முதல் செய்ய வேண்டும்.
கடந்த காலத்தில் நிர்வாகத்தில் திறமைசாலிகளான திரு. விஜயராகவன் போன்றவர்கள் மின் வாரியத்தின் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் திறம்பட சுயமாக, அரசு மற்றும் மக்கள் நலனுக்காக செயல்பட்டனர். ஆனால் இன்றைய நிலை வேறு “ஆமாம் சாமி” போடும் நிர்வாகிகள் மற்ற ‘விதத்தில் சௌகரியமாக‘ இருக்கலாம். ஆனால் சீர்மையான நிர்வாகத்திற்கு உகந்தது அல்ல. மிகச்சிறந்த திறமையான பொறியாளார்களையும், அனுபவமிக்க களப்பணியாளர்களையும் கொண்ட சிறப்புவாய்ந்த நிறவனம் தமிழக மின்வாரியம். அவர்களை ஊக்கப்படுத்தி, மின் வெட்டு வாரியம் என்ற அவப் பெயரை போக்கி மக்கள் நல மின் வாரியம் என்ற உந்நத நிலை அடைய வேண்டும். அரசின் நேர்மையான வழிகாட்டுதல் இருந்தால் நிச்சயமாக முடியும்.
This article is publised in Kumudham Reporter (22.05.2011)