ஜனவரி மாதம் 30ம் நாள் ‘ஹே ராம்’ என்று தனது மெல்லியக் குரலால் மனம் துவண்டு, மதிகெட்டவனின் துப்பாக்கி குண்டிற்கு இரையான தருணத்தில் காந்தி மகான் மனம் வெதும்பி கூறிய வார்த்தைகள். இது வெறும் உடம்பு வலியால் எழுந்த வார்த்தைகள் அல்ல. இந்தியாவின் ஒற்றுமை, மதச்சார்பின்மை அழிகின்றதே என்ற வருத்தம். மதவெறி இனவெறி வன்முறை தலைதூக்குகிறதே என்ற ஆதங்கத்தின் எதிரொலி, ஆழ்ந்த உணர்ச்சிகளின் சாரமாக ஹே ராம் என்ற சொல் அந்த மகானின் உள்ளத்திலிருந்து ஒலிப்பிழம்பாக வெளிவந்தது.
புத்தாயிரத்தின் முதல் பத்து ஆண்டுகள் கழிந்து பதினோராம் ஆண்டின் முதல் மாதம் கடந்துவிட்டது. ஜனவரி மாதம் முக்கியமான நிகழ்வுகளைக் கொண்ட புனிதமான மாதம் . புதிது என்றாலே எல்லோருக்கும் மகிழ்ச்சி. புதிய வருடம் புதிய நெற்கதிர், இனிக்கும் கரும்பு, சந்தோஷம் பொங்கிவரும் பொங்கல் பண்டிகை, அலங்கார கால்நடைகளின் ஊர்வலம், குதூகல நகர்வலம் என்று அடுக்கடுக்கான தித்திக்கும் திகட்டுகளின் மத்தியில் தேசியத் தலைவர்களான விவேகானந்தர், நேதாஜி அவர்களின் பிறந்த ஜெயந்தியும், தேசத்திற்காக
தன்னை அர்ப்பணித்த காந்தியடிகளையும் நினைவு கூர்ந்தவர்கள் சிலராவது இருப்பார்கள்.
தனித்துச் செல், தனித்துவத்தோடு செல், “ஏக்த சலோ ரே” என்ற ரவீந்திரநாத் தாகூரின் கவிதையை பிரபலமாக்கி அடிமையென்று துவண்டிருந்த இந்திய சமுதாயத்தை கிளர்ந்தெழ செய்த மாவீரன் நேதாஜி, சுதந்திர இந்தியா கொடி ஏற்றி மக்களுக்கு சுத்ந்திரம் அடைந்தே தீர்வோம் என்ற நம்பிக்கை என்ற விதை விதைத்தார்.
விவேகானந்தர் நேதாஜி இருவரும் வங்காளம் பெற்ற மாமனிதர்கள். முரண்பாடானா தோற்றம்தான். ஒருவர் துறவி மற்றவர் சீருடை அணிந்த வீரதளபதி. ஒருவர் ஆன்மீகவாதி மற்றொருவர் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்து போரிட ஐ.என்.ஏ என்ற இளைஞர்கள் படையை உருவாக்கியவர்.
சுவாமி விவேகானந்தரால் வெகுவாக ஈர்க்கப்பட்டவர் நேதாஜி. சுவாமி விவேகானந்தர் பேசியவற்றையும், எழுதியவற்றையும் ஆழ்ந்து படித்ததால் தனது தேசபக்தி ஆயிரம் மடங்கு வளர்ந்துவிட்டது என்று மனமார பாராட்டியவர் தேசபிதா காந்தி அவர்கள். காலங்காலமாக அடிமைப்பட்டதன் காரணமாக வலுவிழந்து தூங்கிக்கிடந்த இந்தியரை தமது உபதேசங்களால் விழித்துக்கொள், விழிப்புணர்வுகொள் என்று தட்டி எழுப்பியவர் விவேகானந்தர். எல்லையில்லா தைரியத்தைக் கொண்டவர் விவேகானந்தர் என்கிறார் மகாகவி பாரதி.
நேதாஜி சிறப்பாக பட்டப்படிப்பை முடித்து உயரிய அரசுப்பணியான ஐ.சி.எஸ்-ல் தேர்ச்சி பெற்றார். அரசாங்கத்தில் மிகப் பெரிய பதவியை அடைந்திருக்கலாம். ஆயினும் காந்தி, விவேகானந்தர் ஆகியோரது உபதேசங்களால் உந்தப்பட்டு பதவியைத் துறந்தார். சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தனது இளமையை நாட்டிற்காக அர்ப்பணித்தார். இது தான் உண்மையான தியாகம்.
எவனொருவன் சமுதாயத்திற்காகவும், மக்கள் நலனுக்காகவும் உழைக்கின்றானோ அவன் தான் உண்மையாக உயர்ந்தவர் என்றார் சுவாமி விவேகானந்தர். அந்த வகையில் பண்பின் சிகரம் நேதாஜி அவர்கள். இந்திய தேசியப் படையை மோகன் சிங் என்பவரோடு இணைந்து பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிராக ஒடுக்குமுறையை எதிர்த்து போராட முடியும் என்பதை நிரூபித்தார்.
சுதந்திர இந்தியாவை கனவு கண்ட நேதாஜி சுதந்திரமாகி இந்தியாவை காண்பதற்கு முன் மறைந்தார். அவரது மறைவும் ஒளி பிறந்து மின்னலாக மறைந்தது போல் பிரமையாக நிற்கிறது. நல்லுள்ளங்களின் நெஞ்சில் இன்றும் நிறைந்திருக்கிறார். அவரது வீர வாழ்க்கை இளைஞர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று இலவசங்களை நம்பி சோம்பி இல்லாமல் உழைத்து வீறுநடைபோட்டு சமுதாயத்தில் உள்ள சீர்கேடுகளை சரிசெய்யவேண்டும்.
உண்மை, வாய்மை, நேர்மை எல்லாவற்றின் உறைவிடமாகிய காந்தியடிகளின் நெறிகள் தான் நமது தேசத்தின் பலமான அடித்தளம். அதற்கு ஒரு உதாரணம் நமது நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நவம்பர் மாதம் 1947ம் வருடம் காந்தியடிகள் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். அதுவும் ஒரு சத்தியத்திற்கான போராட்டம். இந்தியா பாகிஸ்தான் பாகப்பிரிவினை உடன்பாட்டின்படி இந்தியா பாகிஸ்தானுக்கு ரூபாய் 52 கோடி மதிப்பிட முடியாத சொத்துக்களுக்கான ‘ஓவல்டி’ எனப்படும் ஈட்டுத்தொகை சொத்துரிமை சட்டப்படி கொடுக்க வேண்டியதை இந்தியா உடனடியாக கொடுக்கவேண்டும். தாமதிக்கக்கூடாது என்பதற்காக அண்ணல் விரதம் மேற்கொண்டார். இந்தியா தாமதித்ததற்குக் காரணம் பாகிஸ்தான் இந்தியா மீது காஷ்மீர் எல்லைப் பகுதியில் போர் தொடுத்தது. அத்தகைய சூழ்நிலையில் இந்திய அரசு ‘ஓவல்டி’ தொகையைக் கொடுக்கக்கூடாது என்ற கருத்து வலுவடைந்தது. அரசுக்கு தர்மசங்கடமான தருணம். உடல்நலம் குறைந்த நிலையிலும் அண்ணல் தனது முடிவில் உறுதியாக இருந்தார். உண்ணாவிரதம் தொடர்ந்தார். வேறுவழியின்றி அரசு கஜானாவிலிருந்து ரூ.52 கோடி எடுக்கப்பட்டு தனிவிமானத்தில் பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு அனுப்பப்பட்ட பிறகே காந்திஜி அவர்கள் தனது விரதத்தை முடித்துக் கொண்டார்.
இத்தகைய உயரிய கொள்கைகளின் அடிப்படையில் நமது தேசம் உருவானது என்பதில் நாம் பெருமை கொள்ளலாம். ஆனால் இன்று சர்வதேச வெளிப்படையான நிர்வாகத்தைக் கணிக்கும் இயக்கத்தின் ஆண்டு அறிக்கைப்படி அதிக ஊழல் நிறைந்த முதல் பத்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
அணிசேரா நாடுகள் அமைப்பில் இந்தியா யூகோஸ்லோவியாவோடு தலைமை வகித்த நாடு எகிப்து. பண்டிட் நேருவோடு தோள்கொடுத்த தலைவர் ‘ஆப்டல் நாஸர்’ உருவாக்கிய நாடு இன்று கலவரத்தின் எல்லையில் கொதி நிலையில் தத்தளிக்கிறது. கெய்ரோ நகரின் பிரபலமான தாஉறிர் வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர் அரசுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளதை தொலைக்காட்சி மூலம் காணமுடிகிறது. சமுதாய சீர்குலைவு, பொருளாதார ஏற்றத்தாழ்வு, நிர்வாக சீர்கேடு, ஊழல், வேலையில்லா திண்டாட்டம் என்று பல காரணங்கள். அதில் பிரதான காரணம் இளைய ஜனத்தொகையின் வீக்கம் என்று கூறப்படுகிறது. நிபுணர்களின் கருத்துப்படி ஏழ்மை, கல்லாமையால் பாதிக்கப்படும் இளைஞர்களால் ஆபத்து வராது. கல்வி அறிவுடைய வலிமையான திடகாத்ரமான இளைஞர்களது எதிர்பார்ப்புகள் நிராசையானால் விளைவுகள் விபரீதமாகும். இதைத்தான் எகிப்து துனிசியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு காட்டுகிறது.
இப்போது நாடு முழுவதும் மக்கள் கணக்கெடுப்பு நடந்து கொண்டிருக்கிறது. மிக மகத்தான பணி அதற்கு நம் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பு அவசியம். இனம், மொழி, மதம், ஜாதி அடைப்படையில் ஜனத்தொகை எவ்வாறு பெருக்கெடுக்கும் அதன் ஆதாயம் என்ன என்று கணக்கிடாமல் ஒட்டுமொத்த இளைய ஜனத்தொகையினரை எவ்வாறு வழிநடத்த வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். வேலை செய்யக்கூடிய வயது 15 லிருந்து 60 வரை என்று கணக்கு வைத்தால் இந்திய ஜனத்தொகையில் இது 55.6 சதவிகிதம். வேலை செய்யக்கூடிய இந்த ஜனத்தொகையினர்தான் நாட்டின் சொத்து. அவர்களது உண்மையான உழைப்பு நாட்டின் வளர்ச்சியைப் பெருக்கும். அவர்களது உழைப்பில் தொய்வு ஏற்படக்கூடாது. நாட்டின் வளர்ச்சியின் பயன்பாடு அவர்களுக்கு திருப்தியான வகையில் சென்றடைய வேண்டும். இந்தியாவை நோக்கி பல நாடுகளின் கவனம் திரும்பியிருப்பதன் காரணம் நமது இளமையான சமுதாயம். நமது நாட்டின் இளைஞர்களின் எண்ணிக்கை வருங்காலத்தில் சைனாவைவிட அதிகமாக இருக்கும். வயதடைந்து கொண்டிருக்கும் உலகில் வயது குறைந்தவர்கள் கொண்ட வளமான நாடு என்ற வகையில் 15 வயதிலிருந்து 24 வயதுக்குட்பட்டவர்களின் பங்களிப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கு அடைப்படை தரமான கல்வி, சாலை வசதி, மின்சாரம் போன்ற கட்டமைப்புகள். தரமான கல்வி இளைஞர்களுக்கு சென்று அடைவதில்லை, வர்த்தக மொழியான ஆங்கில மொழி புறக்கணிப்பு போன்ற குறைகள் இருக்கிறது. ஜனத்தொகையில் 20 சதவிகிதம் கொண்ட இந்த இளைஞர்களை தயார் செய்ய வாய்ப்புகள் ஏற்படுத்த அவகாசம் அதிகம் இல்லை. நிபுணர்களின் கணிப்புப்படி இந்த வாய்ப்புக்களின் இடைவெளி ஐந்திலிருந்து பத்து ஆண்டுகள் தான் உள்ளது. இதை தவறவிட்டால் சரிவின் விளைவுகள் நம்மை எதிர்நோக்கும். இது தவிர்க்கப்படவேண்டும்.
ஜனாதிபதி ஒபாமா நாட்டின் பொறுப்புள்ள பெற்றோர் தமது குழந்தைகளை கைபிடித்து பள்ளிக்கு அழைத்துச் சென்று அவர்களது எதிர்காலத்தை உறுதி செய்யும் கடமை உணர்வு நாட்டின் எதிர்காலத்தை வளமாக்கும் என்று தனது நாட்டிற்கு அளித்த உரையில் புகழ்ந்துள்ளார். கடமைஉணர்வுள்ள பெற்றோர்கள் இங்கும் இருக்கிறார்கள். ஆனால் பல சமயங்களில் பொறுப்புள்ள குழந்தைகள் குடித்துவிட்டு தள்ளாடும் தந்தையை கைத்தாங்கலாக வீட்டிற்கு கூட்டிவரும் காட்சியை தினமும் பார்க்கலாம். பரிதாபத்திற்குரிய அந்த குழந்தைகளின் எதிர்காலம் என்னாவது?. சிந்திக்க வேண்டும். மகாத்மாகாந்தி அழகாக சொன்னார் ஏழைகளின் பெயரில் ஏழைகளுக்காக பேசுபவர்களுக்கு ஏழைகளைப் பற்றியும் தெரியாது அவர்களது வேதனையும் புரியாது. ஏழைகளும் அவர்களை அறியாது ஏழ்மையின் துணையோடு அதில் உழன்றிருப்பர். எவ்வளவு நிதர்சன உண்மை!
நாட்டிற்காக உயிரையும் வாழ்நாளையும் அர்ப்பணித்தவர்களை நினைவு கூறும் நாள் ஜனவரி 30 தியாதிகள் தினம். காலை பதினோரு மணி அளவில் சைரன் அடித்து எல்லோரும் அமைதி காத்து அஞ்சலி செலுத்த வேண்டும். ஆனால் இந்த வருடம் பல நகரங்களில் இந்த 11 மணி ஒலி எழுப்பப்படவில்லை என்று கூறப்படுகிறது. அன்று மட்டும் இல்லாது என்றும் தியாகிகளுக்கு மனதார வீர அஞ்சலி செலுத்துவதற்கு ஒரே வழி ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்க உண்மையான உழைப்பு நேர்மையான பணி.
No comments:
Post a Comment