Wednesday, May 12, 2010

முதல் காப்பாளர்

1907-ம் வருடம் - அப்போதைய மதராஸ் நகரில், வருவாய் துறை வாரியத்தில் பெரும் தீவிபத்து ஏற்பட்டு பல முக்கிய ஆவணங்கள் சேதமடைத்தன, இந்த விபத்தை விசாரணை செய்த குழு தனது அறிக்கையில் தீ விபத்து ஏற்படும் பொழுது தீயணைப்பு ஊர்திகளையும் கையிருப்பில் உள்ள உபகரணங்களையும் முறையாக பயனபடுத்த ஒரு சீரான நெறிமுறைகள் கொண்ட அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையின் பேரில் 1908 ம் வருடம் மெட்ராஸ் ஃபயர் ப்ரிகேட் என்ற சிறு தீயணைப்புப் படை உதயமானது.

சென்னை நகர காவலர்களுக்கு தீயணைப்பு பயிற்சி கொடுக்கப்பட்டு தீயணைப்பு நிர்வாகம் போலிஸ் கமிஷனரின் கீழ் இயங்கியது. முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர் மூண்ட போது விமானத்தாக்குதல் ஏற்பட்டால் விளைவுகளை சமாளிக்க தீயணைப்பு படை தயார் நிலையில் வைக்கப்பட்டது. 1942ம் வருடம் தீயணைப்பு வல்லுனர் திரு டோஸர் என்பவர் தலைமையில் தீயணைப்புத் துறை சீரமைக்கப்பட்டது. இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட திறமைவாய்ந்த 58 தீயணைப்பு அதிகாரிகள் மதராஸ் தீயணைப்புத் துறைக்கு பலம் கொடுத்தனர். 1945ம் வருடம் எல்லா முக்கிய நகரங்களிலும் தீயணைப்பு நிலையம் ஏற்படுத்தவும், சென்னை துறைமுகத்தில் தீப்பாதுகாப்பு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

காவல் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த இந்த துறை 1967ம் வருடம் தனித்துறையாக பரிட்சார்த்தமாக துவக்கப்பட்டு 1969ம் வருடம் நிரந்தரமான தீயணைப்புத் துறையாக நிறுவப்பட்டது.

எந்த ஒரு ஆபத்திலும் முதல் காப்பாளனாக செயல்படுவதால் 2001 வருடம் மீட்புப்பணியை சேர்த்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையாக அறிவிக்கப்பட்டு, 2008 ஆம் வருடம் நூறு ஆண்டுகள் நிறைவுற்று பெருமிதத்தோடு மக்கள் பணியில் புதுப்பொலிவுடன் திகழ்கிறது.

“காற்றே மெலிந்த மெழுகுவர்தீயை வலிய அணைத்து விடுகிறாய்
உதவாத பெருந் தீயை பெரிதாக்கி பரவ விடுகிறாய்”
என்பது பாரதியாரின் வசனவரிகள்.

பிராணவாயு, உஷ்ணம், ஏரிபொருள் தீ முக்கோணம் என்று கூறப்படுகிறது. தீப்பிடித்த இடத்தில் புகை வெளியேற செய்யவேண்டும். அதே சமயம் காற்றோட்டம் தீயை பரவச் செய்யும். ஆதலால் தீப்பற்றக்கூடிய பொருட்களை தனியே பிரித்து பாதுகாக்க வேண்டும். தீயின் மையக் கண் பகுதியை தனிமைப்படுத்தி அணைப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக முதலில் தீயில் சிக்குண்டவரை வெறியேற்ற வேண்டும். அதிலும் வயோதிகர்கள், குழந்தைகள், மாற்றுதிறன் படைத்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பாதுகாப்பது முக்கியம். இவ்வாறு அறிவுபூர்வமாக விஞ்ஞான முறையில் தீயுடன் போராடுவது ஒரு புறம். மனிதாபிமான முறையில் மக்களை காப்பாற்றுவது மறுபுறம் என்ற கடினமான பணியை செய்பவர் தீயணைப்பு வீரர்.

கல்மிஷம் இல்லாத தூய்மையான பணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி.

ஏப்ரல் 14ஆம் நாள் வீரமரணமடைந்த தீயணைப்பு வீரர்களின் நினைவு நாளாகவும், அதிலிருந்து ஒருவாரம் தீப்பாதுகாப்பு விழிப்புணர்வு வாரமாகவும் அனுசரிக்கப்படுகிறது. அதே ஏப்ரல் 14ஆம் நாள் 1944 ம் வருடம் மும்பை துறைமுகம் விக்டோரியா டாக் என்ற இடத்திற்கு வந்தடைந்த SS Port Stikins என்ற கப்பலில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்து கொண்டிருந்த காலம் அது. அக்கப்பலில் 1200 டன் அளவிற்கு வெடிபொருட்கள் மற்றும் எண்ணெய் ட்ரம்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. வெடிவிபத்தில் அருகில் இருந்த கட்டிடங்கள் மற்றும் பல கப்பல்கள் தீக்கிரையாகின. மும்பை தீயணைப்பு துறையைச்சார்ந்த 66 தீயணைப்பு வீரர்களுடன் 231 நபர்கள் பலியானார்கள். இந்த நிகழ்வின் நினைவாக ஏப்ரல் 14ம் நாள் தீயணைப்பு வீரர்களுக்கு வீரஅஞ்சலி செலுத்தும் நாள்.

தீ விபத்தில்லா சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற உயரிய குறிக்கோளை மையக்கருத்தாகக் கொண்டு பாதுகாப்பு பணிகள் நிறைவு செய்யவேண்டும் என்ற இலக்கு தீயணைப்பு வீரர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தவிர இயற்கை சீற்றங்களின் போதும், மனிதனால் ஏற்படுத்தப்படும் சேதங்களில் இருந்து மக்களை காப்பாற்றும் உன்னத மீட்புப் பணியை தீயணைப்பு வீரர்கள் செய்கின்றனர்.

தீயை கட்டுக்குள் உபயோகித்தால் நமக்கு ஆதாயம், கட்டுக்கடங்காமல் போனால் விபரீதம். சரித்திர ஏடுகளைப் புரட்டினால் ரோம் நகரில் முதல் நுற்றாண்டில் ஏற்பட்ட கோரமான தீ 7 நாட்கள் கொழுந்துவிட்டு எரிந்து நகரையே அழித்தது. 1666ம் வருடம் செப்டம்பர் 2ம் நாள் மிகப் பெரிய தீ விபத்து லண்டனில் ஏற்பட்டது. நான்கு நாட்கள் தொடர்ந்து கொழுந்துவிட்ட தீ பழைய லண்டனில் 70,000 வீடுகள், 87 வழிபாட்டு தலங்கள், நகர அலுவலகங்கள் அழிந்தது. எவ்வளவு மக்கள் மாண்டனர் என்பது கணக்கிட முடியவில்லை.
அமெரிக்காவில் மிகப்பெரிய தீ விபத்து 1871ம் வருடம் அக்டோபர் 10ம் நாள் சிக்காகோ நகரில் ஏற்பட்டது. மாட்டுத் தொட்டியில் எண்ணெய் திரியினால் ஆன விளக்கினை ஒரு மாடு தட்டிவிட்டதில் அருகில் இருந்த வைக்கோல் தீப்பற்றி தீ பரவ காரணமானது என்று கூறப்படுகிறது. எப்போதும் காற்று வேகமாக வீசக்கூடிய நகரம் சிக்காகோ. அதனால் தீ விரைவாக பரவி நகரின் முக்கியமான பகுதிகளை அழித்தது. இந்தப் பெருந்தீயின் நினைவாக ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் அக்டோபர் மாதத்தில் தீப்பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது.

சென்னை நகரில் 1975ம் வருடம் ஜுலை மாதம் 11ம் நாள் எல்.ஐ.சி 14 மாடி கட்டிட தீ விபத்து, 1981ம் வருடம் பிப்ரவரி மாதம் 13ம் நாள் ஸ்பென்சர் வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்து, 1985ம் வருடம் மே மாதம் 30ம் நாள் மூர் மார்க்கெட் தீக்கிரையானது மறக்க முடியாத நிகழ்வுகள்.

2004 ம் வருடம் ஏற்பட்ட ஆழிப்பேரலை பேரிடர், குஜராத், மஉறாராஷ்டிர மாநிலங்களில் உண்டான பூகம்பம், அவ்வப்போது புயல் வெள்ளங்களால் ஏற்படும் சேதாரம் இவற்றை கருத்தில் கொண்டு தேசிய அளவில் தேசிய பேரிடர் ஆளுமை ஆணையம் 2005ம் வருடம் உருவாக்கப்பட்டது. பிரதம மந்திரியின் தலைமையில் ஒரு செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய பேரிடர் பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டு எட்டு பட்டாலியன்கள் நாட்டின் வெவ்வேறு இடங்களில் தயார் நிலையில் நிறுவப்பட்டுள்ளது. தென்இந்தியாவை பொறுத்தவரை 1180 வீரர்களைக் கொண்ட படை அரக்கோணத்தில் உள்ளது. 2009ம் ஆண்டு டிசம்பரில் நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவின் போது இந்த படையைச் சேர்ந்த வீரர்கள் சிறப்பாக பணிபுரிந்தனர். அணுமின்நிலையத்தினால் பாதிப்பு, விஷவாயு தாக்குதல், கதிர்வீச்சினால் பாதிப்பு, போபால் விஷவாயு கசிவு போன்ற நிகழ்வுகள், கொடிய உயிர் உண்ணிகள் தாக்குதல் போன்ற பேரிடர்களை எதிர்கொள்ள இந்த சிறப்புப் படை முதல் காப்பாளனாக செயல்படும்.

ஒவ்வொரு மாநிலமும் பேரிடர்களை சமாளிக்க தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும் என்று தேசிய பேரிடர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் 10 லட்சம் ஜனத்தொகை கொண்ட ஒவ்வொரு நகரமும் பேரிடர் பாதுகாப்பு திட்டத்தை வகுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதோடு மத்திய அரசு, இந்த ஆண்டு நிதி அறிக்கையில் ரூ. 7000 கோடி நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு அந்தந்த இடங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களை மேம்படுத்த நிதி ஒதுக்கியுள்ளது.

செயல்திறன் படைத்த பணியாளர்களைக் கொண்ட கட்டமைப்பு எந்த ஒரு அவசர காலத்திலும் பக்க பலமாக இருக்கக் கூடியது. ராணுவம், காவல்துறை, தீயணைப்புத் துறை இத்தகைய அவசர கால நேர்வுகளில் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். ஆயினும் இத்தகைய நிகழ்வுகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற திட்டம் வகுக்கப்படவேண்டும். மேலை நாடுகளில் இத்தகைய பேரிடர் மேலாண்மை திட்டம் வகுத்து செயல்படுகின்றனர். இதன் மூலம் நம்மிடம் உள்ள குறை நிறை என்ன, எத்தகைய சாதனங்கள் இருக்கின்றன, எவ்வாறு அவைகளை ஒருங்கிணைக்க வேண்டும், நவீனமயமாக்க எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை போன்றவை முறையாக ஆராயப்பட்டு எந்த ஒரு பிரச்சனையையும் எதிர்கொள்ள தயாராகலாம். இடைவிடாத பயிற்சி மிக அவசியம் ஒருங்கிணைந்த நடவடிக்கையால் பேரிடர் சேதங்களை வெகுவாக குறைக்கலாம்.

2001ல் நியூயார்க் இரட்டை கோபுர தாக்குதலில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அவர்கள் தனது உரையில் புகை மண்டலம் சூழ்ந்த உயர்மாடி கட்டிட படிகளில் துணிந்து சென்று சேவை புரியும் தீயணைப்பு வீரர் போன்ற வீரர்கள் தான் நாட்டின் எதிர்காலத்தின் விடிவிளக்கு என்று நெஞ்சார பாராட்டியுள்ளார்.

சேவையே மையமான பணி தீயணைப்புப் பணி. ஒவ்வொரு அழைப்பும் ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்கான அழைப்பு. ஏதோ ஒரு தெய்வீக சக்தி இந்த வீரர்களை மக்கள் சேவையில் ஈடுபடுத்துகிறது. அலுவலகம் போவதற்கு சம்பளம் வேலை செய்ய கிம்பளம் என்ற இந்நாளில் தன்னலமற்ற சேவைபுரியும் தீயணைப்பு வீரர்கள் போற்றுதலுக்குரியவர்கள். தீ விபத்தற்ற சமுதாயத்தை உருவாக்க எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும்.

“கவனக் குறைவான ஒரு கணம் தீ விபத்து
கவனமிக்க ஒவ்வொரு கணமும் தீப்பாதுகாப்பு“
என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


Published in Dinamani 07.05.2010

1 comment:

Unknown said...

அய்யா ,தங்களது பதிவு மிகவும் அருமை. நான் தீயணைப்பு துறையில் இருந்து ஓய்வு பெற்று சென்னையில் வசித்து வருகிறேன் . இது தான் என் முதல் பதிவு . இது வரையிலும் இல்லாதவாறு துறையை வெளி உலகிற்கு வெளிச்சம் காட்டி பெருமைபடுத்தி வரும் நீங்கள் மேலும் சிறப்புறவும் பணியாளர்களுக்கு நீங்கள் செய்து கொண்டு இருக்கும் நற்பயன்கள் மேலும் வளர எனது மனமார வாழ்த்துக்கள் .

இப்படிக்கு
செ. தங்கவேல்
முன்னால் ய-க.ஒ 3689